திங்கள், 16 டிசம்பர், 2019

தமிழ் கீத கோவிந்தம்! - கே.ஆர்.கிருஷ்ணமாச்சாரி


இறைவனிடம் பக்தி செலுத்தும் முறைகளில் நாயக - நாயகி பாவத்தில் பரமாத்மாவை நாயகனாகவும், ஜீவாத்மாவாகிய தன்னை நாயகியாகவும் கருதி பக்தி செலுத்துவது ‘மாதுர்ய பக்தி’ என்று கூறப்படும். இந்த பக்தி முறையைக் கடைப்பிடித்தவர் தனது பெயரிலேயே ‘நாயகி’ எனும் சொல்லைக் கொண்டவர்தான் ஸ்ரீநடனகோபால நாயகி சுவாமி.

ஆழ்வார்களில் நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இந்த பாவனையில் பாசுரங்களைப் பாடியுள்ளனர். அதுபோன்று ‘செளராஷ்டிர ஆழ்வார்’ என்று போற்றப்படும் நடனகோபால நாயகி சுவாமி, 265 கண்ணிகளாக (ஈரடிச் செய்யுள்) 530 அடிகளில் நாயகி பாவத்தில் பாசுரங்களைப் பாடியுள்ளார். ஒவ்வொரு பத்து செய்யுளும் புன்னாகவராளி முதல், மோகனம் வரை 26 ராகங்களில் பாடுமாறு அமைந்துள்ளன. இதனால், இத்தொகுப்பு ஓர் இசை நூலாகவே விளங்குகிறது.

இராதையின் பால் கண்ணன் கொண்ட காதலை வெளிப்படுத்தும் இசை நூல்தான் ஜெயதேவர் என்பவர் 12-ஆம் நூற்றாண்டில் வடமொழியில் பாடி அருளிய ‘அஷ்டபதி’ எனும் ‘கீத கோவிந்தம்’. கண்ணன் மீது கொண்ட காதலைப் பற்றிய பாடல்கள்தாம் கீதகோவிந்தம்.
பிரிவு எனும் விரகதாப நிலையில் துடிக்கும் ஜீவாத்மாவாகிய ராதை, பரமாத்மாவாகிய கண்ணனுடன் இணையத்துடிக்கும் - இரண்டறக்கலக்கும் முறையில் அமைந்த பாடல்கள்தான் ஜெயதேவர் அருளிய கீதகோவிந்தம். தமிழ் அகத்துறை பாடல்களுடன் இது ஒப்பு நோக்கத்தக்கது.

வடமொழியில் கண்ணன் மயங்கிய - கண்ணனை மயக்கிய காதல் கீதமான ‘கீதகோவிந்தம்’ போன்று தமிழில் பல்வேறு ராகங்களில் இசையோடு பாடக்கூடியதாக, இனிய தமிழில் அமைந்ததுதான் நடனகோபால நாயகிசுவாமி 19-ஆம் நூற்றாண்டில் பாடியுள்ள இக்கண்ணி வகை செய்யுள் தொகுப்பு.

இதை, ‘தமிழ் கீத கோவிந்தம்’ எனக் குறிப்பிடுவது முற்றிலும் பொருந்தும்.

ஜெயதேவரின் கீதகோவிந்த காவியத்தில் கண்ணன், ராதை, தோழி எனும் மூன்று பாத்திரங்கள் அமைந்திருப்பதுடன் மூன்று பாத்திரங்களும் பேசுவதாக அமைந்துள்ளன. அதேபோல் நாயகி சுவாமிகளின் தமிழ் கீத கோவிந்தத்தில் நாயகி, தோழி, கண்ணன் எனும் மூன்று பாத்திரங்கள் இருப்பினும், பேசுவது நாயகி பாத்திரம் மட்டுமே.

ஆழ்வார்கள் பெண்மை நிலையில் இருந்து கொண்டு பகவானை அனுபவிக்கும்பொழுது அவர்கள் பாசுரங்கள் தாய் சொல்வதுபோல் இருப்பின், ‘தாய் பாசுரம்’ எனவும், தோழி சொல்வதுபோல் இருப்பின் ‘தோழி பாசுரம்’ எனவும், தலைவி பேசுவதுபோல் அமையின் அது ‘மகள் பாசுரம்’ எனவும் பெயர்பெறும். நாயகி சுவாமிகள் பாடியுள்ள இத் தமிழ் கீதகோவிந்தம் தலைவி (நாயகி சுவாமி), தலைவனான கண்ணனைப் பிரிந்த விரகதாப நிலையில் பாடுவதாக அமைந்துள்ளதால் இப்பாடல்களை ‘மகள் பாசுரம்’ என்றே சொல்லலாம். மேலும், ஆழ்வார்கள் ஞானத்தில் தம் பேச்சு, பிரேமத்தில் பெண் பேச்சு பேசுவர் என்ற ‘ஆசார்ய ஹிருதயம்’ எனும் வைணவ கிரந்தக் கூற்றின்படி இவை விளங்குகின்றன.

ஜெயதேவரின் கீதகோவிந்தம், ராதை - கண்ணனை இணைவதுடன் முடிவுறுகிறது. தமிழ் கீதகோவிந்தத்தில், கண்ணன் இறுதியில் நாயகிக்கு தரிசனம் தருகிறார். கண்ணன் வரவில் மகிழ்ந்து நாயகி, நாயகனாம் கண்ணனை உபசரிப்பதுடன் இக்காவியம் நிறைவடைகிறது.

"பரிகொடுத்தவர்போலப் பரிதவிக்குதே என்நெஞ்சம்
கரிய திருமேனியின் கமலப்பதம் தஞ்சம்'' (கண்ணி-82)

"நாயகனைப் பிரிந்த நங்கைமார் இருக்கலாமோ
காயமதை விட்டுவிட்டால் காணக் கிடைக்குமோ'' (கண்ணி-101)

இவ்வாறு பாடியுள்ள நாயகி சுவாமிகள், ஸ்ரீகிருஷ்ணரின் கல்யாண குணங்களை,

"அண்டமெல்லாம் உண்டுபண்ணும் ஆதிமூலனேடி
அண்டர் நின்று தண்டமிடும் அடியைப் பணிபோடி!
பத்தியெனும் வலையிலகப்படும் பரமனேடி
அத்தியின்பால் வந்திடரை அகற்றினவன் போடி!''

எனப் பாடியுள்ளார். படிக்கப் படிக்கச் சுவைக்கும் நாயகி சுவாமியின் இப்பாடல்களைப் படித்து கண்ணனின் காதலின்பம் பெறுவோமாக!

நன்றி - தினமணி டிசம்பர் 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக