புதன், 18 டிசம்பர், 2019

உயர் பாவை - 3 - சதாரா மாலதி

வையத்து வாழ்வீர்காள்

திருப்பாவை கட்டமைப்பில் முதல் 5 பாடல்கள் இறை பற்றியவை. பரமபதம், பாற்கடல், அவதாரம், அந்தர்யாமி, அர்ச்சை என்று 5 நிலைகளில் இறை தத்துவம் தன் இருப்பை நிறுவியிருக்கிறது. முதல் பாட்டு பரமபத நாயகன் நாராயணனைக் குறிப்பிட்டது போல இது பாற்கடல் நிலையான வியூகத்தைச் சுட்டுகிறது. 


பாற்கடல் ஒரு Single Window போல Customer Service வழங்கப்படும் இடம். பரமபதம் Ivory Tower. யாரும் அண்ட முடியாது. அவதாரம் Direct Demonstration. அந்தர்யாமி Omnipotent Omnipresent இருப்பு. அர்ச்சை என்பது தான் கோயிலில் நாம் வைத்திருக்கும் வடிவம். அதற்கு நாம் கொடுத்தது உருவம், நாம் கொடுத்தது குணம், நம் கற்பிதம் தான் அதன் தெய்வீகம். அர்ச்சையை 5வது பாடலில் வைக்காமல் கொஞ்சம் நகர்த்தி 6 ல் ‘புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்’ என்று நிறுத்தியிருக்கிறாள் ஆண்டாள். 6 முதல் 15 வரை உயிர் [ஜீவன்] பற்றிய பாடல்கள் என்பது நினைவில் கொள்ளத்தக்கது. எனவே தான் ஜீவனுக்கும் பரமனுக்கும் இடையில் வரும்படி அர்ச்சையை வைக்க விரும்பியது உத்தேசமாயிருக்கலாம்.


வையத்து வாழ்வீர்காள், நாமும் நம் பாவைக்கு 
செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள் 
பையத் துயின்ற பரமனடி பாடி, 
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி 
மையிட்டு எழுதோம், மலரிட்டு நாமுடியோம் 
செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம் 
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி 
உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


இப்போது நாடகத்தில் ஒன்றிப் போய் விட்டாள் நம் கதாநாயகி. முழுக்க முழுக்க சங்கேதப் பேச்சை விட்டாயிற்று. அசல் வசனம் பேசுகிறாள். நாராயணனுக்கு அடுத்த நிலையைச் சொல்கிறாள். 

தொட்டில் குழந்தைக்குப் பக்கத்தில் படுத்திருக்கும் தாய் போல பாடுபட்டு வளர்த்த பயிருக்குப் பக்கத்தில் பரண்குடில் அமைத்துப் படுத்திருக்கும் விவசாயி போல பிரபஞ்சத்து அணுக்கமாய் அன்பர்களின் கூக்குரல் கேட்குமிடமாகப் பார்த்து பாற்கடலில் படுத்திருக்கிறான் பரமன்.


தகட்டிலழுத்திய மாணிக்கம்போல அனந்தாழ்வான்[ஆதிசேஷன்] மீது அழுந்திப் படுத்து அறிதுயில் செய்கிறான். அவனை அல்ல அவன் திருவடியைப் பாடுவோம். ஏனெனில் பசிக்கழும் குழந்தை தாயின் முந்தானையையே குறி வைப்பது போல நாம் அவனுடைய திருவடியில் வாசம் செய்யும் தயா தேவியின் அருளை வேண்டி அவன் காலையே பார்த்திருப்போம். அதிகாலையிலேயே குளித்து விடுவோம். 


தானமும் தருமமும் முடிந்தவரை செய்வோம். பரமனடி பாடி, நாட்காலே நீராடி, ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி இது செய்ய வேண்டியவற்றின் பட்டியல்.


செய்ய வேண்டாததும் சில உள்ளன. அவை நெய்யுண்ணாமை, பாலுண்ணாமை, மை மலர் விட்டுவிடல், ஆன்றோர் செய்யாதன என்று விட்டுவிட்டதை செய்யாமல் விடல், மற்றும் குறளை பேசாமல் இருத்தல்.


பாட்டை இப்படி பிரித்துக்கொள்ள வேண்டும்.


வையத்து வாழ்வீர்காள்! உய்யும் ஆறு எண்ணி, பாற்கடலுள் பையத்துயின்ற பரமனடிபாடி, ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி, உகந்து, நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீர், நாம் நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி, மையிட்டெழுதோம், மலரிட்டு முடியோம், செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்றோதோம்.


வையத்து வாழ்வீர்காள்! என்றால் உலக மாந்தரே! என்பது போல ஒரு விளி என்று சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஆண்டாளுக்கு உள்ளர்த்தமில்லாமல் ஒரு வார்த்தை போட வராது. 


வாழ்ச்சிக்கு இடமில்லாத வையகத்தில் வாழ வந்தவர்களே! நெருப்புச்சட்டிக்குள் தாமரை பூத்தாலும் பூக்கலாம். பூமியில் பிறந்து வாழ்ந்து விட முடியாது. அதாவது சரீரத்தோடு பரம்பொருள் சகவாசத்தைக் கிஞ்சித்தும் அனுபவிக்க முடியாது என்று சொல்ல வருகிறாளா?


பகவதனுபவம் பெற்று வாழ்வது தான் வாழ்ச்சி. இந்த கர்மபூமியிலே கிருஷ்ணானுபவம் பெற்ற பாக்கியவதிகளே! [கோபிகைகளே] உடலோடு பூலோகத்தில் சொர்க்கத்தையல்லவா பார்த்திருக்கிறீர்கள்! என்று சொல்ல வருகிறாளா?


அடுத்து நாம் பிழைக்கும் வழிக்கு சில க்ருத்ய அக்ருத்ய விவேகங்களைக் கைக்கொள்வோம் என்கிறாள். அதாவது சில Resolutions.


அதென்ன நெய் சாப்பிடமாட்டோம், பால் தின்ன மாட்டோம் என்றது? ஆம் அப்படித்தான், 'பையத்துயின்ற பரமனடி பாடி'ய வாயால் யாராவது நெய்யுண்பார்களா? பாலுண்பார்களா? அமிர்தம் உண்டபின் வெறும் சோறு பிடிக்குமா?


'உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம்கண்ணன்' என்றிருக்கிற எங்களுக்கு நெய்யும் பாலும் எதற்கு?


நெய்யை உண்பார்களா யாராவது? தின்னும் வஸ்து அது. பால் திரவம். அதைக் குடிக்கவல்லவா செய்வார்கள்? யார் கண்டது? ஆய்ப்பாடியில் ஆகாரம் நெய்யும் பாலும் என்று பேர் கேட்டிருக்கிறோம். அதைப் பார்த்தது தான் யார்? சாப்பிட்டதோ குடித்ததோ யார்?


அதெல்லாம் சாப்பிடும் பண்டமா குடிக்கும் பண்டமா என்றெல்லாம் தெரியாது. கண்ணன் பிறந்தபின் எங்களுக்கு நெய் பாலை அவன் விட்டு வைக்கவில்லை. இதுவரை சாப்பிட்டிராத பொருளை இனிமேல் சாப்பிடமாட்டோம் என்ற சங்கல்பம் [விரதம்] எதற்கு? அதாவது அப்படி அந்த நெய்யும் பாலும் ஒரு சமயம் கிடைத்தாலும் நாங்கள் சப்பிடப் போவதில்லை.


இதுவரை கிடைக்காததால் சாப்பிடவில்லை. இனி விரதத்துக்காக சாப்பிடப் போவதில்லை.


விரதத்தின் போது நம் தினசரி உணவைத்தான் விட வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். தென் நாட்டில் அரிசி உணவை விரத நாளில் சாப்பிடமாட்டார்கள் வடநாட்டில் கோதுமை உணவை விட்டு விடுவார்கள். நாங்கள் ஆயர்கள். நெய் பாலை விட்டோம். போகட்டும். மையும் மலரும் ஏன் விட்டார்கள்?


கண் இருக்கிறதே, அது விழிப்புக்கு வழி செய்யும் புலம். விழிப்புணர்ச்சி என்பதே ஞானம் தான். கண்ணுக்குப் பிரகாசம் சேர்ப்பது என்றால் அது மை.


மையிட்டெழுதுவது ஞான யோகத்துக்குக் குறியீடு. மலர் முடிப்பது அலங்காரம், அதிலான லயிப்பு பக்தியோகத்தின் குறியீடு. எங்களுக்கு இரண்டும் வேண்டாம்.


'மேலையார் செய்வன' தவிர்த்து செய்யாதன செய்ய மாட்டோம். பரதாழ்வான் போல நாங்கள். அண்ணனை விட்டுத் தம்பி இதுவரை ராஜ்யம் ஆண்டதில்லை என்றான். 'செய்யாதன செய்ய மாட்டேன்' என்றான். நாங்களும் அப்படித்தான். கோள் சொல்லித் திரிய மாட்டோம். எங்களுக்குள் வசை சொல்லிப் போராடிப் போந்தாலும் கண்ணன் முன் 'இவள் அப்படி, அவள் இப்படி' என்று உயர்வு தாழ்வு சொல்லித் தரம் தாழ்ந்து போக மாட்டோம். இவ்வளவுதான் சங்கல்பம்.


அருகதையுள்ளவர்களுக்கு வெகுமதியாய்த் தந்து கெளரவிப்பது தானம். கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு அபரிமிதமாய்க் கொடை தருவது தருமம். இரண்டையும் முடிந்தவரை செய்து மகிழ்வோம்.


நாராயணனே நமக்கே பறை தருவான் என்றார்களே! அப்புறம் என்ன இவர்களுக்கென்றும் ஒரு விரதம்? செய்ய, செய்ய வேண்டாத பட்டியல்? 

நாமாக ஏதாவது செய்து நம் நல்லதை நாமே தேடிக் கொண்டால், பிரம்மாஸ்திரத்தின் மீது சணல் கயிறு பட்டால் அஸ்திரம் அறுபட்டுப் போவது போல பரம்பொருள் தன் ரட்சணையை விலக்கிக் கொள்வான் என்றார்களே! இப்போது இது என்ன அனுஷ்டானம்? 


ஆபரணம் அணிபவனைத் தேடிப் போகுமா? அணிபவன் தான் ஆபரணத்தைத் தேடி வருந்த வேண்டும் என்றார்களே! இப்போது இந்த மாற்றம் ஏன்?


அதற்குத் தான் வையத்து வாழ்வீர்காள்! என்ற விளி. பூமியில் பிறந்து விட்டோமே! சும்மாயிருக்க முடியுமா? ஏதாவது ஒன்றைச் செய்து தானாக வேண்டும். கர்ம யோகம் பலன் கருதினால் பயனில்லாமல் போகும். செய்வதைச் சாதனமாக நினைத்துச் செய்யாமல் ஏதோ செய்கிறோம் என்ற எண்ணத்துடன் செய்தபடியிருந்தால் துன்பமிராது.


நாராயணனே நமக்கே பறை தருவான். ப்ராப்ய ப்ராபகம் [பலனும், பலன் தரும் வழியும்] அவனே, எனினும் க்ருத்ய அக்ருத்ய விவேகம் இன்றி நாம் இருந்துவிடக் கூடாது. Discrimination என்பது நம் செயல்களில் இருந்தே தீர வேண்டும்.


இது தான் ஆண்டாள். முதல் நாள் என்ன சொன்னாள்? இச்சை ஒன்று போதும். உனக்கு ஆசை இருந்தால் போதும். வேறு எதுவும் தேவையில்லை. நாராயணனே தருவான் நமக்கே தருவான் என்றவள் இன்று அடுத்த கட்டம் சொல்கிறாள். இதைச் செய் இதைச் செய்யாதே என்று. கல் சாம்பார் செய்த யாத்திரிகன் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? [கல்லும் தண்ணிரும் இருந்தால் சாம்பார் செய்வேன் என்றவன்] அவனைப் போலத் தான் ஆண்டாளும்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக