(“திருப்பாவை என்பதை எப்படி வேதங்களுக்கெல்லாம் வித்து (விதை) என்று சொல்கிறார்கள் என்பதைத்தான் இன்று பார்க்கப்போகிறோம்” என்றார் ஸ்ரீ கே.பி.தேவராஜன் ஸ்வாமி தமது சொற்பொழிவில்.)
"வேதம் எதற்காக வந்தது? தனக்கு ஒருவன் தீங்கு செய்து விட்டால், அவனை எப்படி கையாள வேண்டும் என்பதை வேதம் சொல்கிறது. வாழ்க்கையில் சுகமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் வேதம் சொல்லிக் கொடுக்கிறது. மனிதர்களுக்கு என்னென்ன வேண்டுமோ, அத்தனையையுமே சொல்லிக் கொடுக்கிறது வேதம். ஆயிரம் தாயார் - தகப்பனார்கள் தம் குழந்தைகளிடம் காட்டும் அன்பைவிட, அதிக மடங்கு அன்பை, ஆசையை வேதம் நம் ஒவ்வொருவரிடமும் காட்டுகிறது.
ஐஸ்வர்யம் வேண்டுமா? இந்த யாகம் செய்யுங்கள். மோட்சம் வேண்டுமா? பக்தி பண்ணுங்கள் என்று சொல்லிக் கொடுக்கிறது. ஒரு பள்ளியில் படிக்கும் குழந்தையிடம் அதன் பெற்றோர்கள், 'கண்ணா இந்தா வீடியோ கேம்ஸ், நல்லா - விளையாடு' என சதா சர்வ காலமும் அந்தக் குழந்தையை வீடியோ கேம்ஸ் ஆடவும், டி.வி. பார்க்கவுமே சொல்லிக் கொடுத்து விட்டு, பாடப் புத்தகங்களை அதனிடம் நீட்டினால், அது எப்படி படிக்காதோ, அதைப்போலத்தான், உலகியல் இன்பங்களில் மட்டுமே மனத்தை நாம் செலுத்தி வந்தால் 'மோட்சம்' என்பது நமக்கு கிடைக்காது, என்பதைத்தான் வேதமும் சொல்கிறது; 'திருப்பாவை'யும் சொல்கிறது.
பொதுவாகவே, எந்த தாயாருக்குமே தன் குழந்தையின் மீது அளவுக்கதிகமான பாசம் என்பது இருக்கும். அந்தக் குழந்தை மண்ணை தின்றால்கூட, அது சிறிது நேரம் சந்தோஷமாக மண்ணை சாப்பிடட்டும் என விட்டு விடுவாள். அதன் பிறகு, அதற்கு கசப்பான கஷாயத்தை கொடுப்பாள். ஆக, நம்மையும் இப்படித்தான் மாற்றுகிறார் இறைவன். இந்தக் கோயிலுக்கு போனால் இந்த பலன் கிடைக்கும் என்பதால், ஒருவன் விடாமல் தினமும் கோயிலுக்கு போகிறான். அவன் நினைத்த பொருளும் அவனுக்கு கிடைத்து விடுகிறது. ஆனால், தினம் கோயிலுக்கு வந்து கொண்டிருந்ததால், அவனுக்கு கிடைத்த பொருளின் மீது பற்று போய், கடவுளின் மீது பற்று ஏற்பட்டுவிடுகிறது. எது உண்மையாக வேண்டும்? உலகியல் இன்பமா அல்லது மோட்சமா என தீர்மானிக்கக்கூடிய மனநிலை அவனுக்கு தானாகவே வந்துவிடுகிறது.
எல்.கே.ஜி. படிக்கும் ஒரு குழந்தையிடம் அக்குழந்தையின் அப்பா, நீ இந்த வாட்டி ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கினா, நான் உனக்கு சைக்கிள் வாங்கி தரேன்னு சொல்லுவார். சைக்கிளுக்கு ஆசைப்பட்டு அந்த குழந்தையும் நன்றாக படித்து ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கிவிடும். இதே Motivation என்பதை அந்த தந்தை, அந்த குழந்தை காலேஜ் போகும் வரை கொடுப்பார். அதன்பிறகு அந்த குழந்தைக்கே, தான் நல்ல வேலையில் சென்று அமர வேண்டும் என்ற குறிக்கோள் ஏற்பட்டு, நல்ல வேலைக்கும் போய் விடும். ஆக, பகவான் நமக்கும் இப்படித்தான் Motivation கொடுக்கிறார். பகவானை அடைய பகவானே நமக்கு கொடுக்கும் Motivation தான் சாஸ்திரம். அடுத்தவனை அழிக்கக்கூடாது என்ற எண்ணம் முதலில் வரும். சொர்க்கத்தில் இடம் கிடைத்தால்கூட, நமக்கு வேண்டாம். ஏனென்றால், நாம் செய்திருக்கும் புண்ணியத்துக்கு ஏற்ப சில மணி நேரங்கள்தான், அங்கே இருக்க முடியும். அதன்பிறகு இறைவன் நம்மை கீழே பிடித்து தள்ளிவிடுவார் என்ற பயம் வரும். நிலையான இன்பம் என்பது பகவானின் திருவடி ஒன்றுதான். அது பக்தி பண்ணால் கிடைத்திடும் என்பதைத்தான் திருப்பாவையில் தம் 30 பாசுரங்களாலும் ஆண்டாள் சொல்லி இருக்கிறாள். அதையே தான் வேதங்களும் சொல்கின்றன.
எந்த ஒரு விசேஷம் நடந்தாலும், கடைசியில் ஆரத்தி எடுத்து மங்களம் பாடி வாழ்த்துவது போல, ஒவ்வொரு பாசுரத்தின் கடைசி அடியிலும், நம்மை எல்லாம் வாழ்த்துகிறாள் ஆண்டாள் 'பாரோர் புகழ படிந்து.' 'நீங்காத செல்வம் நிறைந்தேலோ' என. இப்படி நம் நல்வாழ்வுக்கு வாழ்த்துப் பாடும் திருப்பாவையை, நாமும் தினமும் சொல்லி இறைவனின் மீது நீங்காத பக்தி செய்வோமாக.''
(சொற்பொழிவைத் தொகுத்தவர் நளினி சம்பத்குமார்)
நன்றி - தீபம் ஜனவரி 2013