ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயல் உகள
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குட(ம்) நிறைக்கும் வள்ளல் பெறும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.
நோன்பிருக்கும் கோபியர்களின் ஒன்றே குறிக்கோள் கண்ணனிடம் பறை பெறுவது. பறை என்றால் என்ன?
சுகமான வீடு, வாசல், உணவு, சுகங்கள் மட்டுமே குடியிருக்கும் ஒரு தேவ நிலையா?. இல்லவே இல்லை. கண்ணனோடு நிரந்தர சம்பந்தம், ஐக்கியம், நினைவு தான் பறை. அங்கு மன, உடல், எண்ணங்கள் எதற்குமே தேவையோ, குறையோ கிடையாது.
பறையை, பிரதானமாகக் கோரிடும் கோபியர்க்கு, தங்களின் ஊரின் செல்வ நிலையை / வளமையைப் பற்றிய எதிர்பார்ப்போ பிரார்த்தனையோ இல்லை.
தங்களுக்குக் கண்ணனோடு சேர்ந்து நோன்பு இருக்க அனுமதி கொடுத்தவர்கள், இவர்களுடைய நோன்பின் பலனாய் சுபிக்ஷமாய் இருக்கப் போவதை விளக்கிடும் பதிகம்.
'ஓங்கி உலகளந்த' - 'நாராயணனே நமக்கே பறை தருவான்' என்ற பர ப்ரஹ்மத்திலே தொடங்கி (முதல் பாடல்), 'பையத் துயின்ற பரமனடி' என்று க்ஷீராப்தி நாதனைப் பாடி (இரண்டாம் பாடல்), த்ரிவிக்ரமனைப் பாடும் மூன்றாவது பாடல்.
பனியில் உறைந்து தணிந்து கிடக்கும் மூங்கில், சூரிய ஒளி வந்தால் நிமிர்ந்து வளர்தல் போலே, வாமன ஸ்வரூபத்திலிருந்து கடுமையாய் த்ரிவிக்ரமனாய் வளர்ந்து, மாபலியை வதம் செய்தான். வாமனன் கையில் ஏந்திய நீரும், த்ரிவிக்ரமனை இந்திரன் திருவடி விளக்கிய நீரும் ஒன்றாக விழுந்தன என்பார்கள்.
மாலன் ஜன ரக்ஷகன். படி அளப்பது போன்ற உலகை கட்டிக் காத்து வழி நடத்துவதே 'உலகளந்த' செயலானது.
கண்ணனை எண்ணி நோன்பிருப்பவர்கள், த்ரிவிக்ரமனை ப்ரஸ்துதிக்கக் காரணமென்ன. கண்ணன் எப்படி கோகுலம் என்ற ஒரு ஊரின் பாலனாய் / ரக்ஷகனாய் இருந்தானோ வாமனன் ஒரு நாட்டைக் காக்க, வளர்ந்தவன் ஆனதால் த்ரிவிக்ரமனைக் கோபியர்கள் துதித்தார்கள்.
உத்தமன் - மற்றோரை இம்சித்து வயிறு வளர்ப்பவன் அதமன், பிறர் வாழ்வதை கெடுக்காமல் இருப்பவன் - மத்யமன், உத்தமன் - தனக்கு அழிவு வந்தாலும் மற்றவரை வாழ்விப்பவன்.
நம்முள் புருஷர்கள் உண்டு. புருஷ உத்தமன் (புருஷ உத்தமன்) அவன் ஒருவன் மட்டுமே.
பேர் பாடி - பேரிட்டு யாரும் அழைத்தால் மகிழ்பவன். நாமதாரணத்தில் லயிப்பவன். பேர்சொல்லல் என்னும் நாம சங்கீர்த்தனம் செய்வதற்கு எந்த யோக்கியதையும் அவசியம் இல்லை.
நாம ஸ்மரணமே யோக்கியதையைக் கொடுக்கும். கோணக் கோணச் சொல்லி கோவிந்தா என்று சொன்னாலும், அமர பிரபுவை 'மர பிரபு' என்று விளித்தாலும் வாத்சல்யம் பெருக்குபவன்.
'கிருஷ்ணானுஸ்மரணம் பரம்' என்னும் படியாய், கிருஷ்ண நாமமே பரமம் உய்க்கும்.
அவனை எதிர்க்கும் நாஸ்தீகனும் அவன் நாமத்தைச் சொல்லியே எதிர்க்கிறான். பெற்ற அன்னையை துன்புறுத்தும் ஒரு 'மாத்ரு காதகனுக்குக்' தாயைத் தாக்கிய கை வலிக்கப் போக 'அம்மே' என்று அலறினானாம்.
பொய்கை ஆழ்வார் அருளிச் செயலில் விளித்தது போல், யார் என்ன பேர் சொல்லிக் கூட்டாலும், அப்பேரை அன்புடன் ஏற்றுக் கொள்பவன். பக்தன் உகந்து கொடுக்கும் உருவம், பேர், சிந்தனை எப்படியோ அப்படியே ஏற்றுக் கொண்டு உகப்பவன்.
"தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமர் உகந்தது எப்பேர், மற்று அப்பேர் - தமர் உகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையாதிருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம்!"
நாங்கள் நம் பாவைக்குச் - அவன் திருநாமங்கள் சொல்லாமல் வாழத் தெரியாத 'நாங்கள்' எம் பாவை நோன்பில்.
'சாற்றி நீராடினால்' - நோன்பை ஊராருக்கு ஒரு காரணமாக்கி, கண்ணன் மேல் கொண்ட விரகம் தணிப்பதற்காக நீராடுதல்.
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து - ஒன்பது நாளுக்கு ஒரு முறை பெய்யும் மழையாம். மழையும் நீரும் தான் சுபிக்ஷத்தின் திறவுகோல்.
சண்டையும் சச்சரவும் 'குழாயடி'யிலிருந்து தான் ஆரம்பிக்கின்றன. பிராட்டி வரிப்பது தீங்கு செய்யாத மழை. 'வெள்ளக் கேடும் வரட் கேடும் இன்றிக்கே ஊறு எண்ணெய் விட்டாப் (தலையில் ஊற விட்ட எண்ணெயைப் போலே) போல இருக்கை' என்பது ஈட்டின் வாசகங்கள். 'நிகாமே நிகாமேன பர்ஜன்யோ வர்ஷதி'. வேண்டித் தேவைப்படும் போதில் பெய்யும் மழையாம்.
ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயலுகள - கீழே குனிந்து மேலே நோக்கினால் வானம் தெரியாத வண்ணம் மறைத்துக் கிடக்கும் வளமையான செந்நெல் கதிர்கள். மேலே சொன்ன ஓங்கி உலகளந்த உத்தமனின் சீர்மை போலே.
செருக்கோடு யானைக் கன்றுகள் போல வளர்ந்த கயல்கள், செந்நெல் கதிர்களைத் தாண்டிப் போக முடியாமல் துள்ளிக் கிடக்கும். ஓங்கி வளர்ந்த சர்வேஸ்வரனைக் கண்டு மாபலி ஓடி ஒளிய முடியாமல் துள்ளிக் கிடந்ததைப் போலே.
'பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப' - பூங்குவளைப் பூவில் மது பானம் உண்ட வண்டினங்கள், அகன்ற பூவின் இதழ்களில், மெத்தையில் ராஜகுமாரர்கள் போல் படுத்துக் கிடக்குமாம். ஒன்றுக்கு ஓன்று பேசிக் கொள்ளுமாம். 'என்னை நீ எழுப்பிடாதே' என்று மயக்கத்தில் அரற்றுமாம்.
'தேங்காதே புக்கு' - பசுக்களின் கொட்டில்களில் சென்று பால் கறக்கப் புகும் கோபர்கள், உள்ளே புகுவதற்கு தயங்கியவராய் இருப்பார். கனத்த மடிகளிலிருந்து பீச்சி அடிக்கும் பால் தரையைச் சேறாக்கும் (நனைத்தில்லம் சேறாக்கும்), இதனால் தரையில் நின்று கொண்டு பால் கறப்பது கூடக் கடினமாம். ஆனாலும் முத்துக்காக, மூழ்குபவர் கடலுக்கு அஞ்சாததைப் போலே, துணிந்து சென்று பால் கறப்பார்களாம்.
'இருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குட(ம்) நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்' - கனத்த மடியினால் தொட்டவுடனேயே இடை விடாது பாலைச் சொரிந்து குடங்களை நிரப்பிடும் பெரு வள்ளல்களான ஆவினங்கள்.
மனத்தால் ஒரே முறை ஸ்பர்சித்தாலும், போதும் போதும் என்ற வண்ணம் அருளை மனமென்னும் குடத்தில் நிரம்பி வழியச் செய்யும் கண்ணனைப் போன்றவைகள்.
தாம்பினால் கட்டி, முதுகில் அடித்தாலும், வெறும் புல்லை உண்டு, நீரைப் பருகி குடம் குடமாய் பால் கொடுக்கும் பசுக்களைப் போல, யசோதை தாம்பினால் கட்டி, முதுகில் கோல் கொண்டு அடித்தாலும், அவளுடைய நீர்மையான அன்பென்னும் புல்லை உட்கொண்டு, மனத்தில் அசைபோட்டு, அவளுக்கு குடல் விளக்கம் (பெற்ற வயிற்றின் புகழ் பரப்பிடச்) செய்தவன் கண்ணன்.
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய் - நாம் சேர்க்கும் செல்வங்கள் தற்காலிகமானது. எப்போது வேண்டுமானாலும் அழியக் கூடியது. கண்ணன் அருளினால் குசேலன் பெற்ற செல்வமோ நிரந்தரமானது.
கண்ணனுடைய சம்பந்தத்தை மட்டுமே வேண்டி நின்றாலே அவன் தரும் செல்வங்கள் தலை முறைக்கும் அழியாதது.