உயர் பாவை - 4 - சதாரா மாலதி

ஓங்கி உலகளந்த...

விடுமவற்றை விட்டுப் பற்றுமவற்றைப் பற்றினால் பரமன் கிடைப்பான் என்கிற நியதியை உடைத்து விடுவித்துப் பற்றுவிக்கிறவனிருக்க Dos and Donts குறித்து கவலையில்லை என்று முதல் பாட்டில் வைத்து இரண்டாவது பாட்டில் அதற்காக நாம் சும்மா இருந்து விட முடியாது, நாளைக் கழிக்க ஒரு Agenda வேண்டாமா என்று அட்டவணை தருகிறாள் ஆண்டாள். பத்தியமும் சங்கல்பமும் சிறு
பிள்ளைத்தனமாக இருந்தாலும் [கண்ணன் போன்ற சுணை கேடனுக்காக] மடலேறுவதைக்
காட்டிலும் நோன்பு செய்வது புத்திசாலித்தனம் என்று ஆண்டாளுக்குத் தோன்றியிருக்கிறது.


பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 
பற்றுக பற்று விடற்கு


என்ற குறள் ஞாபகம் வருகிறது 'பரமனடி பாடி' என்ற 'வையத்து' பாசுர வரிகளில்.


திருப்பாவையில் மட்டும் ஒரு பாடலை ஆரம்பிக்கும்போது முந்தைய பாடலின் Hangover தவிர்க்க முடியாதபடி ஒட்டிக் கொண்டிருக்கும். வரிகளிடை விவரங்களும் நெருடும். திரைமறைவு வாத விவாதங்கள் பிந்திவரும் பாசுரத்தில் சொல்லாடல்களாகும்.


மூன்றாவது பாடலில் அவதாரப் பெருமையைச் சொல்கிறாள் ஆண்டாள். ஓங்கினான் என்னும்போதே குறுகியிருந்தான் என்ற இறந்த காலம் தொக்கி நிற்க வாமனாவதாரமும் த்ரிவிக்ரமாவதாரமும் இணைந்த அற்புதமான அவதாரத்தின் சாதனையைச் சொல்லி அவனுக்கல்ல அவன் பேருக்கே புகழ் பாடுவோம் என்கிறாள்.



ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி 
நாங்கள்  நம் பாவைக்கு சாற்றி  நீராடினால் 
தீங்கின்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து 
ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயல் உகள 
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத் 
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி 
வாங்கக் குட(ம்) நிறைக்கும் வள்ளல் பெறும் பசுக்கள் 
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பேருடையானை விடப் பேருக்குப் பலம் அதிகம். பெரிய பதவிகளில் உள்ள ஆடவரின் மனைவிமார் கணவருடன் அனுபவிக்கும் வசதிகளைவிட அவர் உடன் இல்லாதபோது அவர் பேரை வைத்து அடையும்வசதிகள் ஏராளமாக இருக்கும். அவர் ஊரிலிருந்தால் கூசுவார். அவர் பேர் அவரையும் விட அதிகம் ஈட்டும். அதனால் தான் பூர்வாசிரியர்கள் சொன்னார்கள் 'அவன் கட்டிப் பொன் போல அவன் பேர் பணிப்பொன் [ஆபரணப் பொன்] போல. திரெளபதிக்கு தூரஸ்தனாகிலும் கிட்டி உதவியது அவன் பேரிறே' என்றார்கள்.


உத்தமனைப்பாடி என்னாமல் உத்தமன் பேர் பாடி என்றாள். நமக்கும் அவனுக்கும் உள்ள தூரம் அவனுக்கும் அவன் பேருக்கும் உள்ளது. எப்படியென்றால் அவன் பேரை வைத்தே அவன் விரோதிகளும் பிழைப்பது. [மாதுகாதகனுக்குக் கை நொந்தால் 'அம்மே' என்று ஆஸ்வாசப் பட்டாற்போல்'] அதாவது ஒருவன் அம்மாவை அடிக்கக் கை ஓங்கினான். கையில் நரம்புப் பிடிப்பு ஏற்பட்டு வலித்தது. அம்மா என்று அலறி விடுவித்துக்கொண்டு அடுத்துக் கை ஓங்கினான்.


வாமனனுக்கு உத்தமன் என்ற அடைமொழி ஏன்?


தானும் அழிந்து பிறரையும் சேர்த்துக் கெடுப்பவன் அதமாதமன்.
பிறரை அழித்துத் தான் வாழ்பவன் அதமன்.
பிறரும் வாழத்தானும் வாழ்பவன் மத்யமன்.
தன்னை அழித்து மாறிப் பிறரை வாழ்விப்பவன் உத்தமன்
தனக்கென்று வாழாமல் பிறர்க்கேயாக இருப்பவன் உத்தமன்.


வாமனன் தன்னைக் குறுக்கிகொண்டான். தான் பிச்சைக்காரனாகிச் சிறுமை ஏற்று அமரர்களின் நஷ்டங்கள் ஈடு கட்டப்படவும் மஹாபலியின் பெருமை குறைபடாமல் அவனை களத்தினின்று அகற்றி பாதாளம் சேர்க்கவும் ஒற்றைத் திட்டம் வகுத்தான். இரு தரப்புக்கும் வேதனையில்லாமல் இருக்கவென்று தான் புழுதிபட்டான். எடுத்தது பிரும்மாண்டமான விஸ்வரூபமெனினும் ஆரம்பித்தது யாசகத்தில் தானே!


ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளி வந்ததில்


என்ற குறள் அறியாதவர் யார்? பிச்சை எடுக்கும்போது ஒருவனுடைய கல்வி, கேள்வி, புகழ், சாதுரியம், மற்றும் வெற்றி என்ற ஐந்து தேவதைகளும் அவனை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து மீண்டு வர இயலாத தூரத்துக்கு விலகுகிறார்கள் என்பது தெரியாதா? அதையும் செய்தான் பெருமாள். அது வாமனாவதாரம். அவன் உத்தமன்.


குறிப்பாக த்ரிவிக்ரமனின் முதலடி ஆண்டாளைக் கவர்ந்தது. அந்த அடி இருந்த இடத்திலேயே மலர்ந்து ஒரு அழுத்தமில்லாத சுக ஸ்பர்ஸ நெருக்கத்தில் பூவுலகு முழுவதையும் ஒரு தாய் தூங்குகிற குழந்தையை முகர்வது போல தொட்டு அளந்து கொண்டது. ஆண்டாள் பூமாதேவியின் அம்சம் என்பதால் அவன் தன்னிச்சையாய் ஸ்பர்ஸித்த அனுபவத்தை நினைத்துச் சிலிர்க்கிறாள் என்பது பூர்வாசிரியர்கள் கூற்று. 


அதையே ஓங்கினான் உலகளந்தான் என்றாள். இரண்டாவது அடி தாவி மேலேறி வானத்தை அளந்து சத்தியலோகம் சேர்ந்து பிரம்மாவின் கமண்ட நீரால் கழுவப்பட்டு ஆகாச கங்கையாயிற்று என்பதும் மூன்றாவது அடி மஹாபலியை பாதாளம் செலுத்தியது என்பதும் புராணிகம். 


மஹாபலி பக்தனாயிருந்தும் அவன் செயல்பாடுகளில் அத்து மீறிய அதிகார துர் உபயோகமும் அட்டூழியமும் இருந்ததால் இப்படி அவனை அப்புறப் படுத்த வேண்டி வந்தது. அதிகாரக்குவிப்பு எதை வேண்டுமானாலும் செய்யச் சொல்லும் அதற்குத் தடை அவசியம் என்பது எல்லா காலங்களிலும் பொருந்துகிறதே!


மஹாபலி உச்சகட்ட வெற்றிகளுக்குப்பின் வேற்று முகாம் ஆசாரியரான பிருஹஸ்பதியைக் கூப்பிட்டனுப்பினான். பிருஹஸ்பதி Cabinetக்கு மட்டுமே தான் நியமானவனென்றும் முறையின்றி அச்சுறுத்தலால் அதிகாரம் பெற்ற கூட்டத்துக்குத் தான் பண்டிதராக இயலாதென்றும் சொல்லி வெளியேறி அதிதி காச்யபரிடம் வந்து விவரங்களைச் சொன்னார். அதிதியின் மகன் தேவேந்திரன், அதாவது பாதிக்கப்பட்டவர்களின் தலைவன் என்பதால் சுயநலம் காரணமாகப் பிரார்த்தித்து அதிதி தேவி வரம் பெற்று காச்யரிடத்தில் வாமனனைப் பெற்றாள். இப்படி புராணம்.


ஓங்கி உலகளந்தபோது அவரவர்க்கு அவரவர்களின் பங்கு கிடைத்து திருப்தியுடன் போய்ச் சேர்ந்தார்கள். உலகளந்தவனைப் போற்ற யாருக்கும் நேரமில்லை. மஹாபலி மகன் நமுசி 'சின்னக்காலைக் காட்டிப் பிச்சை வாங்கிப் பெரிய காலால் அளந்து மோசம் செய்தாய்' என்று தூற்றிப் பொருமினான். 


சுக்ராச்சாரியார் [அசுரகுரு] பூச்சியாகக் கமண்டலத்தை அடைத்து தானத்தை நிறுத்த முயன்று வாமனன் தர்ப்பைப்புல்லால் விளையாட்டுப்போல் குத்தி அடைப்பு நீக்கியதில் கண்ணிழந்து போனார். இவ்வளவில் அன்று யாரும் பாடாத வயிற்றெரிச்சல் தீர இன்று பாடுகிறோம். ஏனெனில் 'சதா ஏக ரூபாய' என்றபடி மாற்றமேயில்லாத பரமன் தன் அன்பன் கொடையைக் கண்ட கணத்தில் தாரை ஜலம் கையில் படப் பட மகிழ்ச்சியில் பூரித்து பனிப்பட்டுச்சிறுத்த மூங்கில் வெய்யிலுக்கு விரிவது போல வளர்ந்தான். திருவெட்டெழுத்து ஒருமுறை சொன்னவன் இருந்தாலே ஊரில் மழையுண்டு என்றது போக ஐந்து லட்சம் கோடி கோபிகைகள் உத்தமன் பேர் [நாம சங்கீர்த்தனம்] சொன்னால் அதையும் பாவை நோன்பை மேவிச் சொன்னால் மழை நிச்சயம் உண்டு என்கிறாள் ஆண்டாள்.

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்யும் என்றாள். காய்ந்து கெடுத்ததை விடப் பெய்ந்து கெடுப்பது கொடுமை. அதனால் வருகிற மழை தீங்கு தரக்கூடாது. கட்டைப் பாறையில் கொட்டிக் கவிழ்த்தாற் போலன்றி 'ஊறெண்ணை வார்த்தாற்போல' ஊற ஊற தலைக்கு விட்டு விட்டு எண்ணை வார்ப்பார்களே அதே போல ஒரு நாள் பெய்து ஒன்பது நாள் காய்ந்து பின் ஒரு நாள் பெய்து இப்படி ஊரைக் காப்பாற்ற வேண்டும் என்றாள்.


காதல் வயப்பட்டுக் கண்ணனைச் சந்திக்கப் போகிறவள் அதற்கு சாக்காக வாய்த்த காத்யாயனி விரதத்தையும் ஊரின் குறையையும் மனசில் வைத்து மனமார மழையைப் பிரார்த்திக்கிறாள். அப்படியே இறையின் மூன்றாவது நிலையாகிய அவதாரத்தையும் நூல் பிடித்துக் காட்டி விடுகிறாள்.
நீரோடி, வரப்புயர நெல்லுயரும். அப்படி ஓங்கியசெந்நெல் பயிரிடையில் கொழுங்கயல்கள் துள்ளி விளையாடும். வயலிலுள்ள குவளைப் பூவில் ஆணும் பெண்ணுமாக வண்டுகள் தேனையுண்டு உண்ட இடத்திலேயே மயங்கிப் படுத்துறங்கும். நீர்வளத்தால் புல் மிகுந்து கால்நடை செழிக்கும். கோபாலர்கள் கறவைக்கு மலைக்கும்படி பசுக்கள் குடம்குடமாகப் பாலைக்கறக்கும். பால்வளம் அமோகமாகவும் அழியாததாகவும் விளங்கும் என்றாள் ஆண்டாள்.


அன்பர்கள் நல்ல தினங்களில் எல்லாம் மும்மூன்று முறை உரத்துச்சொல்லிக் கொண்டாடுகிற இந்தப் பாசுரம் பாராயணங்களில் இரு முறை சொல்லப்படும் சிறப்பு பெற்றது.

ஆண்டாள் திருவடிகளே சரணம்

நன்றி - திண்ணை டிசம்பர் 2004

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை