திங்கள், 11 நவம்பர், 2019

ஶ்ரீமத் பாகவதம் - 69

மூன்றாவது ஸ்கந்தம் – இருபத்து நான்காவது அத்தியாயம்


(கயிலாவதாரமும், கர்த்தமர் துறவறம் பெறுதலும்)

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- இங்ஙனம் மனவெறுப்பை உரைக்கின்றவளும் மனுவின் புதல்வியுமாகிய தன் மனைவியைப் பார்த்து தயாளுவாகிய அந்த கர்த்தம முனிவர் பகவானுடைய வசனத்தை (உன் பத்னியாகிய தேவஹூதியிடத்தில் நான் எனது அம்சத்தினால் அவதரிக்கப் போகிறேனென்று பகவான் மொழிந்த வசனத்தை) ஸ்மரித்துக்கொண்டு (நினைத்துக் கொண்டு) இங்ஙனம் மறுமொழி கூறினார்.

கர்த்தமரிஷி சொல்லுகிறார்:- வாராய் மனுசக்ரவர்த்தியின் புதல்வீ! நிந்தைக் கிடமல்லாத நன்னடத்தை உடையவளே ! நீ உன்னைப் பற்றி இங்ஙனம் வருத்தப்பட வேண்டாம். ப்ராக்ருத குணங்கள் அற்றவனும் எல்லையில்லாத கல்யாண குணகணங்கள் உடையவனுமாகிய பகவான் சீக்ரத்தில் உன் கர்ப்பத்தில் பிறக்கப்போகிறான். மடந்தையர்மணீ! உனக்கு மங்களம் உண்டாகுக. நீ பகவதாராதன ரூபமான வ்ரதத்தில் நிலைநின்றவளாகி, செவி, வாய், கண், மூக்கு, உடல் என்கிற வெளியிந்தரியல்களைந்தையும் மனதாகிற உள்ளிந்திரியத்தையும் அடக்கிக்கொண்டு பதிவ்ரத்யத்திற்குரிய தவத்தினாலும் ஸ்வர்ணம் முதலிய தனங்களைக் கொடுப்பதனாலும் ச்ரத்தையினாலும் ஜகதீச்வரனான பகவானைப் பணிந்து வருவாயாக, சுத்த ஸ்வரூபனாகிய பகவான் அங்கனம் உன்னால் ஆசாதிக்கப்பட்டவனாகி எனது புகழைப் பரவச்செய்து கொண்டு உன் வயிற்றில் பிறந்து உனக்கு ப்ரஹ்ம ஜ்ஞானத்தை உபதேசித்து உன்னுடைய அஜ்ஞானத்தைப் போக்குவான்.

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- தேவஹூதியும் இங்ஙனம் மொழிந்த கர்த்தம ப்ரஜாபதியின் கட்டளையைக் கேட்டு அதைக் கௌரவத்துடன் நன்றாக விச்வஸித்து நிர்விகாரனும் அஜ்ஞானங்களைப் போக்கும் தன்மையனுமாகிய பரமபுருஷனை ஆராதித்தாள். இங்ஙனம் வெகுகாலம் சென்ற பின்பு ஜ்ஞானாதி குணங்கள் நிறைந்த மதுஸூதனன் கர்த்தமருடைய வீர்யத்தில் புகுந்து கட்டையில் அக்னிபோல் தேவஹூதியிடத்தில் பிறந்தான். (கர்த்தமருடைய வீர்யத்தில் ஸம்பந்தித்த ஜீவனிடத்தில் ஆவேசித்து பகவான் தேவஹூதியிடத்தில் அவதரித்தான்). அங்ஙனம் பகவான் அவதரிக்கும் பொழுது ஆகாயத்தில் தேவதைகள் சங்கு, துந்துபி, ம்ருதங்கம் முதலிய வாத்யங்களை முழக்கினார்கள். மேகங்கள் மழை பெய்தன. கந்தர்வர்களும் கின்னராதிகளும் பாடினார்கள். அப்ஸரஸ்த்ரீகள் ஸந்தோஷத்துடன் நர்த்தனம் செய்தார்கள். ஆகாயத்தில் திரியும் தேவதைகள் பெய்த புஷ்பவர்ஷங்கள் விழுந்தன. ஸமஸ்த திக்குகளும் ஜலங்களும் ஸமஸ்த ப்ராணிகளின் மனமும் தெளிந்தன. அப்பொழுது ப்ரஹ்மதேவன் மரீசி முதலிய ரிஷிகளுடன் ஸரஸ்வதீ நதியால் சூழப்பட்ட கர்த்தமருடைய ஆச்ரமத்திற்கு வந்தான். வாராய் சத்ருக்களை அழிக்கும் தன்மையுள்ள விதுரனே! ஜ்ஞானாதி குணங்களாறும் நிறைந்த பரப்ரஹ்மமே ப்ரக்ருதி புருஷன் ஈச்வரன் என்கிற தத்வங்களின் உண்மையை அறிவிக்கும் பொருட்டு ஸ்வாபாவிகமாயிருப்பதும் என்றும் மாறாததுமான ஜ்ஞானகுணத்துடன் கபிலராக அவதரித்தமையை அறிந்த ப்ரஹ்மதேவன், அங்ஙனம் அவதரித்த பகவானுடைய அபிப்ராயத்தைப் பரிசுத்தமான தன்மனத்தினால் கௌரவித்துக்கொண்டு இந்த்ரியங்களெல்லாம் களிக்கப்பெற்று (ஆநந்தநீர் மயிர்க் கூச்சல் தழதழத்தகுரல் முதலியவற்றோடு கூடின கண் உடல் வாய் முதலிய இந்த்ரியங்களுடையவனாகிக்) கர்த்தமரையும் தேவஹூதியையும் பார்த்து இங்ஙனம் மொழிந்தான்.

ப்ரஹ்மதேவன் சொல்லுகிறான்:- வாராய் அப்பனே! குழந்தாய்! நீ கபடமின்றி ப்ரேமாதிசயத்துடன் எனக்குப் பூஜை செய்தாய். பிறர்க்கு வெகுமதி கொடுக்கும் தன்மையனே! நீ என் வார்த்தையை வெகுமதியுடன் அங்கீகரித்தாயல்லவா. அதுவே நீ எனக்குச் செய்த பூஜையாம். தகப்பனுக்குப் புதல்வர் செய்யவேண்டிய சுச்ரூஷை இவ்வளவே. அது வென்னென்னில் தகப்பனுடைய வார்த்தையை வெகுமதியுடன் அப்படியே ஆகட்டுமென்று அங்கீகரித்தலே. ப்ரஜைகளைப் படைப்பாயென்று என்னால் மொழியப்பெற்ற நீ அங்ஙனமே செய்தாய். ஆகையால் நீ என்னை நன்றாகப் பூஜித்தனை, குழந்தாய்! இடை முதலிய அங்கங்களெல்லாம் அழகாயிருக்கப் பெற்றவரும் நல்லியற்கை உடைவருமாகிய இந்த உன் புதல்விகள் தமது அம்சங்களால் (பிள்ளை பேரன் முதலிய பரம்பரைகளால்) ஸ்ருஷ்டியைப் பற்பலவாறு வ்ருத்தி செய்யப் போகின்றார்கள். ஆகையால் ரிஷிச்ரேஷ்டர்களான மரீசி முதலியவர்க்கு உன் புதல்விகளைத் தகுந்தபடி கொடுத்து விவாஹஞ் செய்விப்பாயாக. இப்பொழுது பூமியில் உன் புகழை வளர்த்துவாயாக. வாராய் முனிவனே! இப்பொழுது உனக்குப் பிறந்த பிள்ளையின் உண்மையைச் சொல்லுகிறேன் கேள். ஸாக்ஷாத் பரமபுருஷனே இங்கனம் அவதரித்தான். ப்ராணிகளுக்கு நன்மை செய்யும் பொருட்டு நிதி போன்ற இந்த தேஹத்தை அங்கீகரித்தான். இக்கபிலன் ஜகத்காரணனான பரமபுருஷனே. இது எனக்குத் தெரியும். வாராய் மனுவின் புதல்வியே! கைடப சத்ருவாகிய பகவான் ஜீவாத்ம பரமாத்மாக்களின் ஜ்ஞானத்தை உபதேசித்து ப்ராணிகளுடைய புண்ய பாபரூபமான கர்மங்களின் வேர்களை அறுக்கும் பொருட்டு உன் கர்ப்பத்தில் அவதரித்தான். இவன் ஸ்வர்ணம் போன்ற தலை மயிர்களுடையவன். செந்தாமரைமலர் போன்ற கண்களும் பத்மரேகை அமைந்த பாதாரவிந்தங்களும் உடையவன். இவன் அவித்யை (தேஹாத்மாபிமானம்) ஸம்சயம் (பரப்ரஹ்மத்திற்குட்படாத ஸ்வதந்த்ராத்மப்ரமம்) என்று இருவகைப்பட்ட உனது அஜ்ஞானமாகிற முடிச்சை அறுத்துப் போட்டு பூமியில் ஸஞ்சரிக்கப் போகின்றான். இந்த உன் புதல்வன் ஸித்திபெற்ற மஹாயோகி ஸமூஹங்களுக்குத் தலைவனாகி ஸாங்க்ய சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட ஜீவாத்ம பரமாத்மாக்களின் உண்மையை அறிந்து அனுஷ்ட்டித்துப் பிறர்க்கும் உபதேசிக்கும் திறமையுடைய பெரியோர்களால் வெகுமதிக்கப்பெற்று உலகத்தில் கபிலனென்னும் பேர்பெற்று உனக்குக் கீர்த்தியை வளர்க்கப்போகின்றான்.

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- ஜகத்ஸ்ருஷ்டி கர்த்தாவான ப்ரஹ்மதேவன் அந்தக் கர்த்தமருக்கும் தேவஹூதிக்கும் இங்ஙனம் நல்வார்த்தைகளை மொழிந்து ஸனக ஸனந்தனாதி குமாரர்களோடும் நாரதரோடும் ஹம்ஸவாஹனத்தின் மேல் ஏறிக்கொண்டு ஸ்வர்க்கலோகத்திற்கு மேற்பட்டதாகிய ஸத்யலோகம் போய்ச் சேர்ந்தான். வாராய் விதுரனே! ப்ரஹ்மதேவன் புறப்பட்டுப் போனபின்பு, அவனால் தூண்டப்பெற்ற கர்த்தமர் உடனே தன் புதல்விகளை அவரவர் சீலத்தையும் விருப்பத்தையும் அனுஸரித்து ஜகத்ஸ்ருஷ்டி கர்த்தாக்களான மரீசி முதலியவர்க்குக் கொடுத்தான். அவர்களில் மரீசிக்குக் கலை என்பவளையும், அத்ரிக்கு அனஸூயையையும், அங்கிரஸ்ஸுக்கு ச்ரத்தை என்பவளையும், புலஸ்த்யருக்கு ஹவிர்ப்பூ என்பவளையும், புலஹருக்குக் கதி என்பவளையும், க்ரதுவுக்கு க்ரியை என்பவளையும், ப்ருதுவுக்கு க்யாதி என்பவளையும், வஸிஷ்டருக்கு அருந்ததியையும், அதர்வருக்குச் சாந்தி என்பவளையும் கொடுத்தார். இந்தச் சாந்தி என்பவள் யாகங்களை ஓயாமல் நடப்பிக்கும் தன்மையள். இவளை மணம்புரிந்த அதர்வர் இவளது மஹிமையினால் ஓயாமல் யாகங்களை நடத்திக்கொண்டிருந்தார். இவர்கள் எல்லோரும் விவாஹத்திற்குரிய வயதுடையவர்கள். எல்லோரும் பதிவ்ரத்யமுடையவர். கர்த்தம மஹர்ஷி, விவாஹம் செய்யப்பெற்றுப் பத்னிகளுடன் கூடின அந்தணர் தலைவரான மரீசி முதலியவர்க்கு விவாஹத்தில் கொடுக்கவேண்டிய வஸ்த்ரம் ஆபரணம் முதலியவற்றைக் கொடுத்து அவர்கள் எல்லோரையும் மனங்களிக்கச் செய்தார். வாராய் விதுரனே! அப்பால் மரீசி முதலிய மஹர்ஷிகள் தமது பார்யைகளை அழைத்துக்கொண்டு கபிலரிடம் விடைபெற்று ஸந்தோஷமுற்றவராகித் தத்தமது ஆச்ரமங்களுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். வாராய் பரதச்ரேஷ்டனான விதுரனே!  பிறகு அந்த கர்த்தமர் ஜ்ஞான பலங்கள் ஐஸ்வர்ய வீர்யங்கள் சக்தி தேஜஸுக்கள் என்கிற மூன்று இரட்டைகளையுடைய பரமபுருஷனே கபிலராக அவதரித்தான் என்பதை அறிந்து ஏகாந்தத்தில் ஸமீபத்தில் சென்று ப்ரணாமம் செய்து நன்றாக மொழிந்தார்.

கர்த்தமர் சொல்லுகிறார்:- தமது பாபங்களால் ஸம்ஸாரமாகிய நரகத்தில் மிகவும் பரிதபிக்கப்படுகின்ற பூதங்களிடத்தில் நெடுநாள் சென்றபின்பு தேவதைகள் அருள்புரிகின்றன. இது நிச்சயம். ஆ! இது என்ன ஆச்சர்யம்! பல ஜன்மங்களால் பரிபாக தசை அடைந்ததும் நல்ல பக்தியோகம் அமைத்ததுமாகிய ஸமாதியினால் யோகிகள் ராகம் த்வேஷம் முதலிய தோஷங்களொன்றும் இன்றிப் பரிசுத்தமான தமது ஹ்ருதயங்களாகிற கோயில்களில் உன் ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிக்க யத்னம் செய்கின்றார்கள். அனேக மாயிரம் ஜன்மங்களில் கர்மயோகம் ஜ்ஞானயோகம் இவைகளை அனுஷ்டித்து அவற்றால் பகவானிடத்தில் மனவூக்கம் உண்டாகி அவ்வழியில் பக்தியோகம் தலையெடுக்கப்பெற்று ராக த்வேஷா தியான தோஷங்கள் எல்லாம் தொலைந்து பரிசுத்தமான மனமுடையவரான யோகிகள் உன் ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிக்க விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட மஹானுபாவனாகிய நீ “ஸர்வஸ்மாத்பரனான நான் அற்பர்களான மானிடவர்களின் க்ருஹங்களில் எங்ஙனம் பிறப்பேன்?” என்று அவமதியை எண்ணாமல் க்ராம்யர்களான எமது க்ருஹத்தில் வந்து அவதரித்தாய் ஆனால் நீ பக்தர்களுக்கு ஸுலபனாகையால் உனக்கு இது யுத்தமே. நீ உன் பக்தர்களின் பக்ஷத்தை நிறைவேற்றும் தன்மையனல்லவா. ஆகையால் இங்ஙனம் வந்து அவதரித்தமை யுக்தமே. பரமபுருஷனே! “நானும் எனது அம்சத்தினால் அவதரிக்கப் போகின்றேன்” என்று மொழிந்த உன் வார்த்தையை ஸத்யம் செய்வதற்காக என் க்ருஹத்தில் அவதரித்தாய். இப்படி நீ ஸங்கல்பித்தபடியே நிறைவேற்றினமை எமது பாக்யமே. பக்தர்களுக்கு வெகுமதியை வளர்ப்பவனாகிய நீலோகோஜ் ஜீவனத்தின் பொருட்டு ஜீவாத்ம பரமாத்மாக்களின் உண்மையை அறிவிப்பதாகிய ஸாங்க்ய சாஸ்த்ரத்தை இயற்றி உலகத்தில் பரவச்செய்யும் பொருட்டு அவதரித்தாய். நீ கர்மத்தினால் விளையக்கூடிய தேவ மனுஷ்யாதி உருவங்களற்றவன். இப்படியிருக்க, உன் பக்தர்கள் (நான்கு புஜங்களோடு காட்சி கொடுக்க வேண்டுமென்று விரும்புவார்களாயின், அங்ஙனமே நான்கு புஜங்களுடன் அவதரித்துக் காட்சி கொடுக்கின்றாய். இங்ஙனம் அவரவர் விருப்பத்தின்படி உருவங்களைக் கொள்கின்றாயென்று கருத்து). சதுர்புஜா தியான எந்தெந்த உருவங்களை உன்னிடத்தில் காண விரும்புகிறார்களோ, அந்தந்த உருவங்களே உனக்கும் அபிமதமாயிருக்கும். நீ கர்மத்தினால் விளையும் தேவாதி உருவங்களற்றவன் ஆயினும் உன் பக்தர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றும் பொருட்டு அவரவர் விருப்பங்களுக்குப் பொருந்தும்படி தேவ மனுஷ்யாதி உருவங்கள் போன்ற திவ்ய ரூபங்களைத் தரிக்கின்றனை. பண்டிதர்கள் ப்ரக்ருதி புருஷ ஈஸ்வரர்களென்கிற தத்வங்களின் உண்மையை அறியவிரும்பி உன் பாத பீடத்தை வணங்குகிறார்கள். உன் பாதாரவிந்தங்களின் பெருமைக்கு இவர்கள் வணங்குவதும் தகும். நீ ஐச்வர்யம் வைராக்யம் யசஸ்ஸு ஜ்ஞானம் தேஜஸ்ஸு இவைகளால் பரிபூர்ணனாய் இருப்பவன். இத்தகையனான உன்னை நான் சரணம் அடைகின்றேன். நீ ப்ரக்ருதி புருஷர்களைக் காட்டிலும் விலக்ஷணனாயிருப்பவன். ப்ரக்ருதி புருஷன் (ஜீவன்) மஹத்து காலம் இவைகளைச் சரீரமாகவுடையவன். கார்யாவஸ்தையை அடைத்து ஸத்வ ரஜஸ் தமோகுணங்களுக்கிடமான ஜீவனைச் சரீரமாகவுடையவன். கார்யமாயும் காரணமாயும் உள்ள சேதனாசேதனங்களுக்கு அந்தராத்மாவாய் இருப்பவன்; எல்லாமறிந்தவன்; ஸர்வசக்திகளும் ஸ்வாதீனமாயிருக்கப் பெற்றவன்; சேதனாசேதன ரூபமான ஜகத்தையெல்லாம் பாதுகாப்பவன்; ஸம்ஹார காலத்தில் தன்னுடைய ஜ்ஞானசக்தியால் ப்ரபஞ்சமெல்லாம் தன்னிடத்தில் மறையப்பெற்றவன்; கபிலனென்னும் பேருடையவன். அப்படிப்பட்ட உன்னைச் சரணம் அடைகின்றேன். ப்ரஜைகளுக்கு நாதனாகிய உன்னை நான் ஒன்று வினவுகின்றேன். நீ இங்ஙனம் எனக்குப் பிள்ளையாகப் பிறந்தனையாகையால் மூன்று குணங்களையும் கடந்தேன். ஸாம்ஸாரிக போகங்களையெல்லாம் அனுபவித்தேன். அப்படிப்பட்ட நான் இப்பொழுது உன்னையே மனத்தில் தியானித்துக்கொண்டு ஸம்ஸார தாபங்களால் விளையும் சோகங்களெல்லாம் தொலையப்பெற்று துறவிகளின் பதவியாகிய ஸந்யாஸ தர்மத்தைக் கைப்பற்றி வஞ்சரிக்கலாமென்று நினைக்கின்றேன். இது உனக்கு ஸம்மதந்தானா? எனக்கு அனுமதி கொடுக்கின்றனையா?

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- உலகத்திலுள்ளவர் அனைவர்க்கும் வைதிகத்திலும் லௌகிகத்திலும் நான் சொன்னதே ப்ரமாணம். நான் சொல்லுவதெல்லாம் ஸத்யமாகவே இருக்கும். எப்படியென்னில் சொல்லுகிறேன், கேட்பாயாக. வாராய் முனிவனே! நான் உனக்குப் பிள்ளையாகப் பிறக்கப் போகிறேனென்று மொழிந்தேனே, அதை ஸத்யம் செய்வதற்காக நான் அவதரித்தேன். துஷ்டமான அந்தக்கரணமுடையதும் ஆத்மாவென்று நினைக்கப்படுவதுமாகிய தேஹத்தினின்று விடுபடவேண்டுமென்று விரும்புகிறவர்களுக்கு ப்ரக்ருதியைக் காட்டிலும் “வேறுபட்ட ஜீவாத்ம பரமாத்மாக்களின் உண்மையை அறிவதற்கு உபயோகப்படுவதான ப்ரக்ருதி புருஷன் ஈச்வரன் என்கிற தத்வங்களின் உண்மையை உலகத்திலுள்ளார் எல்லோரும் அறியும்படி விவேகித்துச் சொல்லும்பொருட்டே நான் அவதரித்தேன். இதுவே என்னுடைய ஜன்மத்திற்கு ப்ரயோஜனம். இந்த ஜீவாத்ம பரமாத்மாக்களின் உண்மை எளிதில் அறியமுடியாதது; வெகு ஸூக்ஷ்மமானது. இதை நான் முன்னமே உபதேசித்திருக்கின்றேன். ஆயினும் வெகுகாலம் ஆனமையால் அவ்வாத்ம ஜ்ஞானமார்க்கம் பாழடைந்து போயிற்று. அதையே மீளவும் நிலைநிறுத்தும் பொருட்டு நான் இந்த தேஹத்தைக் கொண்டேனென்று நீ அறிவாயாக. கர்த்தம முனிவரே! நான் உனக்கு அனுமதி கொடுத்தேன். உன் விருப்பத்தின்படி நீ துறவியாய்ச் செல்வாயாக. நீ கர்மங்களைச் செய்து அவற்றின் பலன்களில் பற்றற்று அவற்றை என்னிடத்தில் ஸமர்ப்பணம் செய்து மற்ற உபாயங்களால் வெல்லமுடியாத ம்ருத்யுவை ஜயித்து மோக்ஷத்தின் பொருட்டு என்னைப் பணிந்து வருவாயாக. அங்ஙனம் பணிவதனால் என்னைத் தன்னிடத்தில் மனத்தினால் ஸாக்ஷாத்கரித்து என்னைப் பெறுவதற்குத் தடையான ப்ராசீன கர்மங்களெல்லாம் தொலையப்பெற்று ஜீவாத்மாக்களுக்கு அந்தராத்மாவாயிருப்பவனும் ஸ்வயம் ப்ரகாசனும் ஸமஸ்த பூதங்களுடைய ஹ்ருதயங்களில் சயனித்திருப்பவனும் எவ்விதத்திலும் எத்தகைய பயங்களுக்கும் இடமல்லாதவனுமாகிய என்னைப் பெறுவாய். நான் என் தாயான தேவஹூதிக்கு ப்ரஹ்மவித்யையை உபதேசிக்கப் போகிறேன். ப்ரஹ்மவித்யை ஸமஸ்த கர்மங்களையும் போக்கும் திறமையுடையது. இவளும் அந்த ப்ரஹ்மவித்யோபதேசம் பெற்று ம்ருத்யுவைக் கடப்பாள்.

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- இங்ஙனம் அந்தக் கபிலரால் சொல்லப்பட்ட கர்த்தம ப்ரஜாபதி புதல்வராகிய அவரை ப்ரதக்ஷிணம் செய்து வனத்திற்கே போனார்; ஆ! என்ன ஆச்சர்யம்! ஸர்வஸம்பத்துக்களும் நிறைந்த க்ருஹத்தைத் துறந்து பொருள் செய்யாமல் வனத்திற்குப் போனார். அந்தக் கர்த்தமர் மௌனவ்ரதத்தில் நிலைநின்று பரமாத்மாவை ஒருவனையே சரணமாகக் கொண்டு சுபாஸ்ரயமான அவனுடைய திவ்யமங்கள விக்ரஹங்களை த்யானஞ் செய்பவராகிச் சப்தாதி விஷயங்களில் விருப்பமின்றி ஸம்ஸாரி ஜனங்களின் ஸங்கமற்று, க்ருஹஸ்தாஸ்ரமத்தைத் துறந்தவராகையால் ஆஹவனீயம் முதலிய அக்னிகளும் நியதமான இருப்பிடமும் இன்றிப் பூமியில் ஸஞ்சரித்துக் கொண்டிருந்தார். சேதனா சேதனங்களைக் காட்டிலும் விலக்ஷணமாயிருப்பதும் மங்களகுணங்களால் விளங்குவதும் ஹேய குணங்களற்றதுமான பரப்ரஹ்மத்தினிடத்தில் மனத்தை நிலைநிறுத்தி தேஹாத்மாபிமானமற்றவரும் தேஹம் பிள்ளை பெண்டிர் முதலியவற்றில் தன்னுடையதென்னும் அபிமானமற்றவரும் சீதம் உஷ்ணம் முதலிய தேஹதர்மங்களால் மனம் கலங்கப்பெறாதவரும் ஸமஸ்த வஸ்துக்களிலும் ஆத்மாக்கள் ஒருபடிப்பட்டிருப்பவர் ஆகையால் எல்லாவற்றையும் ஸமமாகப் பார்ப்பவரும் ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்டவனும் பரப்ரஹ்ம ஸ்வரூபனுமான ஆத்மாவை அறிந்தவரும் ப்ரஹ்மஸ்வரூபனான ஜீவாத்மாவினிடத்தில் மனம் செல்லப்பெற்று அத்தகைய ஆத்மானுபவத்தினால் பசி தாஹம் சோகம் மோஹம் மூப்பு மரணம் முதலிய விகாரங்கள் எவையுமின்றி அலையில்லாமல் ஓய்ந்திருக்கிற ஸமுத்ரம் போன்றவருமாகி ஸர்வஜ்ஞனும் ஜீவனுக்குள் ப்ரவேசித்து நியமிப்பவனும் ஜ்ஞானசக்த்யாதி ஷாட்குண்ய பரிபூர்ணனும் ஸமஸ்த பூதங்களுக்கும் தாரகனுமாகிய பரமபுருஷனிடத்தில் மேலான பக்தியோகத்தினால் நிலை நின்ற மதியுடையவருமாகி ஸமஸ்தபூதங்களிலும் பரமபுருஷன் இருக்கக் கண்டார். அங்ஙனம் ஜகத்திற்கெல்லாம் தாரகனான அந்தப் பரமாத்மாவினிடத்தில் ஸமஸ்த பூதங்களையும் கண்டார். அவர் ப்ராக்ருத குணங்களான ராகம் த்வேஷம் முதலியவை அற்று, தேவ மனுஷ்யாதி தேஹங்களெல்லாம் அவரவர் கர்மங்களுக்கு இணங்கப் பலவாறாயிருப்பினும் ப்ரக்ருதியின் பரிணாமங்கள் ஆகையால் ஒருபடிப்பட்டவை என்றும், சரீரங்கள் தோறும் ஜீவாத்மாக்கள் வெவ்வேறாயினும் எல்லோரும் ஜ்ஞானமே வடிவமாகப் பெற்றவராகையால் ஒருபடிப்பட்டவரென்றும், அந்தர்யாமியான ஸர்வேஸ்வரன் எல்லாவிடங்களிலும் ஒருபடிப்பட்டவனென்றும் நன்றாக அறிந்து ஸமஸ்த பூதங்களையும் ஸமமாகப் பார்க்கின்ற மனமுடையவராகி பகவானிடத்தில் பக்தியோகம் நிரம்பப்பெற்று பாகவதர்கள் பெறும்கதியாகிய மோக்ஷத்தைப் பெற்றார். 

இருபத்து நான்காவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக