திங்கள், 11 நவம்பர், 2019

மயக்கும் தமிழ் - 5 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

மயிலை தந்த மகாமுனி

முதலாழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்ற பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் இவர்கள் இருவரோடு பேயாழ்வாரும் சேர்ந்து முதலாழ்வார்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். முதலாழ்வார்களின் மூன்று திருவந்தாதிகளும், நாலாயிர பிரபந்தத்தில் ரத்தினங்களாகப் போற்றப்படுகின்றன. மாட மாமயிலைத் திருவல்லிக்கேணி கண்டேனே என்பார் திருமங்கையாழ்வார். ஆழ்வார் காலத்தில் மயிலையும், திருவல்லிக்கேணியும் ஒன்றாக இருந்திருக்கலாம். தமிழினத் தலைவர் என்று போற்றப்படுகின்ற பேயாழ்வார் மாடமாமயிலையில் அதாவது இன்றைய மயிலாப்பூரில் அவதரித்தவர். திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்று முதன் முதலில் எம்பெருமாட்டியோடு எம்பெரு மானை ஒரு சேர அனுபவித்தவர் பேயாழ்வார். 

திருமகளையும் திருமாலையும் சேர்த்து இணைந்த சக்தியாய் உலகத்திற்கு காண்பித்தவர்கள், முதலாழ்வார்கள். மூவருமே தலா நூறு பாசுரங்களை அழகிய வெண்பாக்களால் இயற்றியவர்கள். அவர்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் கொடுத்த கொடை காலத்தால் மாற்ற முடியாதது. மறக்க முடியாததும் கூட. ஆழ்வார் பெருமக்களுக்குத்தான் எத்தனை எத்தனை பெயர்கள். திவ்ய சூரிகள், பிரபந்தர், மால் உகந்த ஆசிரியர் என்று பக்தி உலகத்தாரால் சிறப்பிக்கப்படுகிறார்கள். 

இறைவனுடைய கல்யாண குணத்தில் ஆழ்ந்து ஈடுபடுவோரையே ஆழ்வார்கள் என்று கூறுவது உண்டு. அவர்கள் மட்டுமா ஈடுபட்டார்கள். அவர்களின் எளிய, இனிய தமிழ்ப் பாசுரங்களால் நம்மையும்தானே தங்கள் வயப்படுத்தி அருள் வெள்ளத்தில் நீந்த வைத்திருக்கிறார்கள். ஆழ்வார் பெருமக்கள் அதாவது பன்னிரு ஆழ்வார்களும் பாலாற்றங்கரை காவிரிக்கரை தொடங்கி தாமிரபரணிக் கரை வரை தோன்றி வாழ்ந்தவர்கள். பேயாழ்வார் படைத்திட்ட மூன்றாம் திருவந்தாதியில் ஓர் நல் முத்தான பாசுரத்தைப் பார்ப்போம்.

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண்துழாய் மார்வன்  பொது நின்ற
பொன்னங் கழலே தொழுமின், முழு வினைகள்

முன்னங் கழலும் முடிந்து. பாசுரத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தைப் பார்க்கும்போது யதார்த்தங்கள் எவ்வளவு உள்ளே ஊடுருவிப் போயிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். மனத்தில் எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல் அவனே சரண் என்று முடிவு செய்து கொண்டு எம்பெருமானுடைய திருவடிகளைப் பற்றித் தொழுதோமானால் பன்நெடுங்காலமாய் பிறவிகள் தோறும் நாம் சேர்த்து வைத்திருக்கும் பாவமூட்டைகள் எல்லாம் அக்கணத்திலேயே அழிந்து போகும் என்று மிகவும் ஆணித்தரமாக சொல்கிறார் பேயாழ்வார். பாசுரத்தில் உள் அர்த்தமாக என்ன சொல்ல வருகிறார் தெரியுமா? அது நல்லதோ? இது கெட்டதோ? என்று சந்தேகத்துடனேயே இறைவனை வணங்குதல், அதாவது பற்றுதல் கூடாது, உன்னை விட்டால் எனக்கு கதி இல்லை, நான் நாதியற்றவனாகி விடுவேன். துயரக் கடலில் இருந்து மீள்வதற்கு நீதான் மாமருந்து என்கிற பரிபூரண சரணாகதி மனப்பான்மை வர வேண்டும். அதை விட்டுவிட்டு ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்று இரட்டைக் குதிரை சவாரி செய்தால், ஒரு குதிரையில் கூட ஒழுங்காக பயணம் செய்ய முடியாது.

நம்மில் பலபேர் என்ன செய்கிறோம் தெரியுமா? போகிற போக்கில் அப்படியே ஒரு வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டுப் போவோமே அது மாதிரி செய்யக்கூடாது. உடலும் உள்ளமும் அவனில் கரைய வேண்டும். அழுதும் தொழுதும் அவன் திருவடிகளைப் பற்ற வேண்டும். இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டே வந்த பேயாழ்வார், இந்த பாசுரத்தில் இடம் பெற்றுள்ள ‘பொது நின்ற பொன்னங்கழல்’ என்பது உயிர் நிலையான தொடராகும். இன்னார் இனியார் என்கிற எந்த வேறுபாடும் இல்லாமல் அவனுடைய திருவடிகள் பொதுவானவை, பொன் போல அனைவராலும் ஆசைப்படத்தக்க அழகிய திருவடிகள் அவை. ராவணன், சிசுபாலன் முதலானோர் வந்து பணிந்தாலும் ஏற்கச் சித்தமாக இருப்பவன்தான் இறைவன். அவனுக்கு எந்த பேதமும் யாரிடமும் கிடையாது. இதற்கு கட்டியம் கூறுவது போல் திருமங்கையாழ்வார் பாசுரம் ஒன்று இதோ...

ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது
இரங்கி மற்று அவற்கு இன்னருள் சுரந்து,
‘மாழை மான் மடநோக்கி உன் தோழி;
உம்பி எம்பி’  என்று ஒழிந்திலை உகந்து,
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி,  என்ற
சொற்கள் வந்து அடியேன் மனத்து  இருந்திட,
ஆழி வண்ண! நின் அடியினை அடைந்தேன்
அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே!

இன்றைக்குப் பெரிதாகப் பேசப்படுகிற சமய ஒற்றுமைக்கும், சமூக ஒற்றுமைக்கும் அடித்தளம் ஏற்படுத்தித் தந்த பாசுரம் இந்தப் பாசுரம். ராமாயணத்தில் ஓர் அற்புதக் காட்சி... படகு ஓட்டுகிற குகனைப் பார்த்து பரந்தாமனான ராமபிரான் சொல்லும் அன்புமொழிகள் இவை... திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருப்பவனே! நீதானே எந்த வேறுபாடும் இல்லாதவனாக இருக்கிறாய். குகனிடத்தில் எந்த ஏற்றத்தாழ்வுகளையும் பார்க்காமல் அவனை உற்ற நண்பனாகச் சேர்த்துக் கொண்டாய்! அது மட்டுமா? சீதாப்பிராட்டி உனக்கு தோழி போன்றவள் என்றாய்! இளையவன் இலக்குவன் எனக்கு மட்டுமல்ல உனக்கும் தம்பிதான். 

நீ இனி எங்கும் போக வேண்டாம் எங்களுடனேயே இரு என்று சொன்னாய்! ராமபிரானே உன்னுடைய பெருங்கருணைக்கு யார்தான் ஒப்பாக முடியும்? உன் நிழலில் இளைப்பாறுவதற்கு யாருக்கு என்ன தடை இருக்க முடியும் என்கிற திருமங்கையாழ்வாரின் கருத்தை அப்படியே பிரதிபலிக்கிறது இந்தப் பொது நின்ற பொன்னங்கழல். அவனை ஆத்மார்த்தமாக அணுக வேண்டும். சரணாகதி. பரிபூரண சரணாகதி. இதுதான் வைணவத்தின் ஜீவ நாடி. நேற்று, இன்று, நாளை மட்டுமல்ல என்றைக்கும் உன்னோடுதான், உன் பேரருள்தான் எங்களை வழி நடத்த முடியும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை நம்மிடம் வர வேண்டும். இதைத்தான் ஆண்டாள் நாச்சியார்,

எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

என்கிறார். பிறவிகள் தொடர்ச்சியாக இருந்தாலும் நினைவுகளின் தொடர்ச்சியாக இருப்பவனும் நீதான் என்கிறார். பரம்பொருள் மீது மாறாத பற்று கொள்ள வேண்டும். எந்த சலனமும் இல்லாமல் மாசு மருவற்று உள்ளம் உருக அவனைப் பற்றினால் எல்லாமும் நமக்கு தானாக வந்து சேரும். அதுவும் இந்த கலியுகத்திற்கானது மிகவும் பயன்தரக்கூடியது. பக்தியோகம் தான் பக்தி நெறி எளியது. ஆழ்ந்த மன ஏக்கத்துடன் இறைவனுடைய திருநாமத்தையும் மகிமையையும் பாட வேண்டும். பிரார்த்தனை செய்ய வேண்டும். ஏனோ தானோ என்ற பக்தியினால் இறைவனை அடைய முடியாது. பிரேம பக்தி ஏற்படாவிட்டால் இறையனுபதி கிடைப்பது கஷ்டம். பகவானே நான் உன் சேவகன். நீ தான் என்னுடைய எஜமான். 

என் தாய் தந்தையும் நீ தான் என்ற உணர்வு மேலோங்க வேண்டும். இதைத்தான் ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வார் பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ என்கிறார் உருக்கமாக! பொது நின்ற பொன்னங்கழல் என்கிற நிலையில்தான் திருப்பாணாழ்வாரை அரங்கன் தன்னிடத்தில் சேர்த்துக் கொண்டான்.‘நம் கலியனோ’ என்று இறைவன் திருமணக் கோலத்தில் பிராட்டியோடு தரிசனம் தந்து திருமங்கை ஆழ்வாரை ஆட்கொண்டான். வைணவத்தில் ஜாதிபேதம் இல்லை. எந்த வேறுபாடும் இல்லை. ஏற்றத்தாழ்வுகள் இல்லை. உயர்வு தாழ்வு கிடையாது. இனத்தைப் பார்க்காமல் இதயத்தைப் பார்த்தது வைணவம்! 

ஆழ்வார்கள் வழிகாட்டியாக, திசைகாட்டியாக, கலங்கரை விளக்கமாக இருந்து வழிகாட்டியதனால் தான் நமக்கு ஒரு ராமானுஜர் கிடைத்தார். ஆழ்வார்களின் அடியொற்றித்தான் இறையனுபவம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. இதுதான் மோட்சத்தின் திறவுகோல் என்று திருக்கோஷ்டியூர் கோபுரம் ஏறி உரக்க குரல் கொடுக்க உடையவரால் முடிந்தது. அவரின் அந்த எண்ணத்திற்கு உந்து சக்தியாக இருந்தது பேயாழ்வாரின் பொது நின்ற பொன்னங்கழல் என்கிற ஆழ்வாரின் அமுத வரிகள்தான் என்பது தானே சத்தியமான உண்மை. நாம் இதயத்தால் ஒன்றுபடுவோம். பேயாழ்வார் காட்டுகிற வெளிச்சப்பாதையில் பயணத்தை தொடருவோம்.

நன்றி - தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக