வியாழன், 14 நவம்பர், 2019

ஶ்ரீமத் பாகவதம் - 70

மூன்றாவது ஸ்கந்தம் – இருபத்து ஐந்தாவது அத்தியாயம்


(கபிலர்க்கும் தேவஹூதிக்கும் ஸம்வாதம்)

ஸ்ரீசௌனகர் சொல்லுகிறார்:- கர்மத்தினால் விளையும் ஜன்மமில்லாதவனும் ஜ்ஞானாதி குணங்கள் நிறைந்தவனுமாகிய ஸர்வேச்வரன் மனிதர்களுக்கு ஜீவாத்ம பரமாத்மாக்களின் உண்மையை விசதமாக எடுத்துரைக்கும் பொருட்டு கபிலராக அவதாரம் செய்தான். புருஷச்ரேஷ்டரும் யோகிகளில் சிறந்தவருமாகிய இந்தக் கபிலருடைய புகழைக் கேட்பதில் என்னுடைய இந்த்ரியங்கள் நிரம்பவும் த்ருப்தி அடையாதிருக்கின்றன. இந்தக் கபிலருடைய வ்ருத்தாந்தத்தை நீர் சொல்லக் கேட்டேன். ஆயினும் எனக்கு அவ்வளவாக த்ருப்தி உண்டாகவில்லை. தான் நினைத்தபடி வடிவங்கொள்ளும் தன்மையுடைய பகவான் கபிலராக அவதாரம் செய்து எந்தெந்த நடத்தைகளைச் செய்தானோ, அவையெல்லாம் பரிசுத்தங்களாகையால் சீர்த்தனம் செய்யத் தகுந்தனை. எனக்கு அவற்றையெல்லாம் கேட்கவேண்டுமென்னும் வரத்தை உண்டாயிருக்கின்றது. ஆகையால் அவற்றை எனக்கு மொழிவீராக.

ஸ்ரீஸுதர் சொல்லுகிறார்:- அப்பொழுது வ்யாஸருக்கு நண்பராகிய மைத்ரேய மஹர்ஷியைக் குறித்து தத்வ நிர்ணயத்தைப்பற்றி இங்ஙனமே விதுரன் வினவினான். அங்ஙனம் வினவப்பெற்ற மைத்ரேயரும் ப்ரீதியுடன் இவ்வாறுவிதுரனுக்கு மொழிந்தார்.

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- தந்தையாகிய கர்த்தமர் அரண்யம் போனபின்பு கபிலபகவான் தாயான தேவஹூதிக்கு ப்ரியம் செய்ய விரும்பி அந்த பிந்துஸரஸ்ஸின் கரையிலேயே வஸித்திருந்தார். தத்வமார்க்கத்தின்கரையறிந்தவரும் கர்மபந்தமற்றவரும் (பெற வேண்டியது ஒன்றுமில்லாதவர் ஆகையால் செயலற்றவரும்) ஆகிய கபிலர் உட்கார்ந்திருக்கையில், தேவஹுதி ப்ரஹ்மாவின் வசனத்தை (இவன் ஸாக்ஷாத் பரமபுருஷனே, இவன் உனக்குத் தத்வோபதேசஞ் செய்து உனது அஜ்ஞானத்தைப் போக்குவானென்ற ப்ரஹமாவின் வசனத்தை) நினைத்துத் தன் புதல்வராகிய அந்தக் கபிலரிடம் வந்து இங்கனம் மொழிந்தாள்.

தேவஹூதி சொல்லுகிறாள்:- வாராய் பெருமையுடைய ஜகதீசனே! நான் இத்தனை காலமாய் அசேதனமான ப்ரக்ருதியின் பரிணாமங்களாகிய இந்த்ரியங்களுக்கு த்ருப்தியை விளைத்துக் கொண்டிருந்தமையால் மிகவும் வெறுப்புற்றிருக்கின்றேன். “இந்திரியங்களின் திருப்தியால் ஸந்தோஷமன்றோ உண்டாகவேண்டும். ஏன் வருத்தம் உண்டாயிற்று?” என்கிறாயோ; சொல்லுகிறேன், கேள். ப்ரபூ! நான் இந்திரியங்களின் திருப்தியைத் தேடிக்கொண்டிருந்தமையால் காடாந்தகாரம் போன்ற பெரிய அஜ்ஞானத்தில் ஆழ்ந்தேன். அங்கு கரையில்லாத அஜ்ஞானமாகிற அந்த அந்தகாசத்தினின்று இப்பொழுது என்னைக் கரையேற்றுவிப்பவன் நீயே, பல ஜன்மங்கள் கழிந்தபின்பு கடைசியில் உனது அனுக்ரஹத்தினால் எனக்குச் சிறந்த கண் கிடைத்தது. நான் இந்த்ரியங்களின் திருப்தியே புருஷார்த்தமென்றிருந்தேன். அந்நினைவு மாறி “இது அஜ்ஞானம் இதைப் போக்கிக்கொள்ளவேண்டும்” என்னும் புத்தி உண்டாயிற்று. இதுவே எனக்கு உனது அனுக்ரஹத்தினால் கிடைத்த கண். எவன் ஜீவாத்மாக்களுக்கு நியாமகன்; ஜகத்காரணன்; ஜ்ஞானாதி குணங்கள் நிறைந்தவன்; அவனே நீ. அஜ்ஞானமாகிற அந்தக் காரணத்தினால் கண் தெரியாமல் தடுமாறுகின்ற லோகத்தின் க்ஷேமத்திற்காகவே, சக்ஷுரிந்த்ரியத்திற்கு அதிஷ்டான தேவதையாகிய ஸூர்யன்போல், நீ இங்ஙனம் அவதரித்தனை. ஜகதீசா! இந்த தேஹத்தில் நானென்கிற அபிமானத்தையும் என்னுடையதென்கிற அபிமானத்தையும் ஏற்படுத்தினாய். தேவனே! அந்த அஜ்ஞானத்தை நீயே போக்கவேண்டியவன். உன் ஸங்கல்பத்தினால் உண்டான மோஹம் உன்னால் போக்கத் தகுந்ததேயன்றி மற்றை எதனாலும் போக்கத் தக்கதன்று. அத்தகையனும் தன்னிடத்தில் பக்தி செய்பவருடைய ஸம்ஸாரமாகிற வ்ருக்ஷத்திற்குக் கோடாலி போன்றவனும், ரக்ஷிப்பதில் ஸமர்த்தனும் தர்மங்களில் சிறந்ததாகிய நிவ்ருத்தி தர்மத்தை அறிந்தவர்களில் மேன்மையுற்றவனுமாகிய உன்னை நான் ப்ரக்ருதி புருஷ ஈச்வர தத்வங்களின் உண்மையை அறியவிரும்பிச் சரணம் அடைந்தேன் என்றாள்.

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- ப்ராணிகளுக்கு மோக்ஷ ருசியை விளைவிப்பதும் நிர்த்தோஷமுமான மாதாவின் அபிப்ராயத்தை இங்ஙனம் கேட்டு அதைத் தன் மனத்தினால் புகழ்ந்து மனத்தை அடக்கின ஜிதேந்த்ரியர்களான ஸத்புருஷர்களுக்கு மோக்ஷத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் உபாயமாகிய கபிலர் புன்னகையினால் திகழ்கின்ற முகமுடையவராகி அந்த தேவஹூதியைப் பார்த்து இங்ஙனம் மொழிந்தார்.

கபிலபகவான் சொல்லுகிறார்:- ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்ட ஆத்மாவின் உண்மையை அறிகையாகிற ஜ்ஞானயோகமே முமுக்ஷுக்களான (மோக்ஷத்தில் விருப்பமுடையவரான) புருஷர்களுக்கு மோக்ஷத்தை விளைப்பதாமென்பதே எனது அபிப்ராயம். இந்த ஆத்மஜ்ஞானயோகம் கைகூடுமாயின், சப்தாதி விஷயங்களால் விளையும் ஸுக துக்கங்கள் இரண்டும் அடியோடு தொலைந்து போகும். ஆத்ம யோகத்தைக் கேட்க வேண்டுமென்று விரும்பின ரிஷிகளுக்கு நான் அதை முன்புமொழிந்தேன். இந்த ஆத்மயோகத்திற்குச் சமம், தமம் முதலிய பலவகை அங்கங்கள் உண்டு. அவற்றையெல்லாம் குறைவற அனுஷ்டித்தால்தான் இவ்வாத்மயோகத்தில் வல்லமை உண்டாகும். அத்தகையதான இந்த ஆத்மயோகத்தை நான் உனக்குச் சொல்லுகிறேன். இந்த ஜீவாத்மாவினுடைய ஸம்ஸார பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் மனதே காரணமென்பது யாவர்க்கும் ஸம்மதமே. சப்தாதி விஷயங்களில் பற்றுடைய மனம் ஸம்ஸார பந்தத்தை விளைவிப்பதாம். பரமபுருஷனிடத்தில் பற்றுடைய மனம் மோக்ஷத்தை விளைவிப்பதாம். ஆத்மாவல்லாத தேஹத்தில் ஆத்மாவென்னும் அபிமானம் அஹங்காரமெனப்படும். தன்னுடையதல்லாத வஸ்துவில் தன்னுடையதென்னும் அபிமானம் மமகாரமெனப்படும். இந்த அஹங்காரம் அஹமபிமானமென்றும், மமகாரம் மமாபிமானமென்றும் கூறப்படும். இவ்வஹங்கார மமகாரங்களால் காம க்ரோத லோப மத மோஹாதிகள் உண்டாகின்றன. அவற்றால் புண்ய பாபரூபமான மலங்கள் (அழுக்குகள்) உண்டாகும். அம்மலங்களெல்லாம் தீர்ந்து சுத்தமாகிச் சப்தாதி விஷயங்களால் விளையும் ஸுக துக்கங்களால் கலக்க முறுகையின்றி மனம் எக்காலத்திலும் ஸமமாயிருக்குமாயின், இத்தகைய மனமுடைய புருஷன், ஆத்மஜ்ஞானம் சப்தாதி விஷயங்களில் ஆஸக்தி இல்லாமையாகிற வைராக்யம் பக்தி இவைகளோடு கூடின மனத்தினால், ப்ரக்ருதியின் பரிணாமங்களாகிய சரீரம் இந்திரியம் மனது ப்ராணன் இவை முதலியவற்றைக் காட்டிலும் ஸ்வரூப ஸ்வபாவங்களால் விலக்ஷணனாய் இருப்பவனும் ஸத்வம் முதலிய குணங்கள் தீண்டப்பெறாதவனும் ப்ரக்ருதியின் பரிணாமங்களிலுள்ள தேவத்வம் மனுஷ்யத்வம் முதலிய ஆகாரங்களற்றவனும் சரீரங்கள் தோறும் வேறுபட்டிருப்பினும் ஜ்ஞானமாகிற ஆகாரம் ஒத்திருக்கையால் வைஷம்யமில்லாதவனும் அணுவாயிருப்பவனும் கண்டிக்க முடியாதவனும் ஸ்வயம் ப்ரகாசனும் வ்யாபாரமற்று உதாசீனமாயிருப்பவனுமாகிய ஆத்மாவையும், ஸம்ஸார ஸம்பந்தத்தை விளைவிக்கையாகிற வீர்யம் தலை சாயப்பெற்று ஓய்ந்திருக்கின்ற ப்ரக்ருதியையும் காண்பான். ஸமஸ்த ப்ராணிகளுக்கும் அந்தராத்மாவான பகவானிடத்தில் விளையும் பக்தியே மோக்ஷம் பெறுதற்கு உபாயமன்றி அதைப்போல் அழகான மற்றொரு உபாயம் இல்லையென்று யோகிகள் கூறுகிறார்கள். ஜீவாத்மாவுக்குச் சப்தாதி விஷயங்களில் மனப்பற்றும் அந்த சப்தாதி விஷயங்களில் கால் தாழ்ந்தவரோடு ஸஹவாஸமும் அறுக்க முடியாமல் உறுதியான பாசமென்று பண்டிதர்கள் நிர்ணயித்திருக்கின்றார்கள். அந்த மனப்பற்றே ஸாதுக்களிடத்தில் நேருமாயின், அது இடையூறின்றித் திறக்கப்பெற்ற மோக்ஷத்வாரமாம். அத்தகைய ஸாதுக்கள் எவரென்னில் சொல்லுகிறேன் கேள். மூர்க்கரிடத்லும் கோபங்கொள்ளாமல் பூமியைப்போல் பொறுத்திருக்குந்தன்மையர்; பிறருடைய துக்கத்தைக் காணில் பொறுக்க முடியாமல் அவரோடொக்க வருந்தித் தம் ப்ரயோஜனத்தை எதிர்பாராமல் அவர் துக்கத்தைப் போக்கவிரும்புமவர். ஆனது பற்றியே ஸமஸ்த ப்ராணிகளுக்கும் நண்பராயிருப்பவர்; ஆதலால் தமக்குச் சத்ருக்கள் எவரும் நேரப்பெறாதவர்; செவி வாய் கண் மூக்கு உடல் என்கிற வெளி இந்த்ரியங்களையும் உள் இந்த்ரியமான மனத்தையும் வென்றிருப்பவர்; நன்னடத்தையே பூஷணமாகவுடையவர். இத்தகையரே ஸாதுக்களாவார். மற்றும், ஈச்வரனான என்னிடத்தில் மாறாத மனத்துடன் எவர் திடமான பக்தியைச் செய்பவராகி, அந்த பக்திக்கு விரோதியான மற்ற ப்ரவ்ருத்தி தர்மங்களையெல்லாம் கைவிட்டு ஜ்ஞானாதிகளையும் பந்துக்களையும் துறந்து, என்னையே ஸகலவித பந்துவாகவும் உபாயோபேயமாகவும் பற்றி என்னுடைய கதைகளை நினைத்து ஸந்தோஷமுற்று மீளவும் அந்தக் கதைகளையே கேட்பதும் சொல்லுவதுமாய் இருக்கின்றார்களோ இவர்களே ஸாதுக்களாவார். என்னிடத்தில் நிலைநின்ற மனமுடைய இவர்களைப் பல வகையான ஸம்ஸார தாபங்கள் எவையும் வருந்தச் செய்கிறதில்லை. (மழையாலடியுண்ட மலைகள்போல், எப்படிப்பட்ட ஸம்ஸார தாபங்கள் நேரிலும் மனம் கலங்கப்பெறாமல் தீரமாயிருப்பார்கள்). வாராய் நல்லியற்கையுடையவளே! அத்தகையரான இந்த ஸாதுக்கள் ஸகலவிதமான ஸங்கங்களையும், (மனப்பற்றுகளையும்) துறந்தவர். நீ முதலில் இப்படிப்பட்ட ஸாதுக்களின் ஸஹவாஸத்தைப் ப்ரார்த்தித்துப் பெறவேண்டும். இவர்கள் சப்தாதி விஷயங்களில் மனப்பற்று உண்டாவதற்குக் காரணமான அனாதி புண்ய பாப ரூப தோஷங்களையெல்லாம் போக்கும் தன்மையர். இவர்களோடு ஸஹவாஸம் செய்யின், புண்ய பாப ரூபமான தோஷங்களெல்லாம் தாமே தொலையும். அவை தொலையின் வேரறுந்தமையால் சப்தாதி விஷயங்களில் மாப்பற்றுண்டாவதற்கு இடமே இல்லை. ஸாதுக்களோடு ஸஹவாஸம் செய்யின், என்னுடைய வீரச்செயல்களை அறிவிப்பவைகளும் ஹ்ருதயத்திற்கும் காதுகளுக்கும் அம்ருதம்போல் இனியவைகளுமான கதைகளைக் கேட்க நேரும். அங்ஙனம் என் கதைகளைக் கேட்டுக்கொண்டுவரின், விரைவிலேயே மோக்ஷமார்க்கத்தில் ச்ரத்தையும் என்னிடத்தில் ப்ரீதியும் பக்தியும் க்ரம க்ரமமாக உண்டாகும். நான் நடத்துகிற ஸ்ருஷ்டி முதலிய வியாபாரங்களின் சிந்தனை நடக்கப்பெற்ற அந்த பக்தியால் இஹலோகத்திலும் பரலோகத்திலுமுள்ள சப்தாதி விஷயங்களில் மனப்பற்றின்றிப் பலனை விரும்பாமல் செய்யப்படும் கர்மயோக ஞான யோகங்களோடு கூடி மனத்தை ஒருவாறாயிருக்கச் செய்பவையாகையால் ருஜுவாயிருப்பவைகளான விவேகம் முதலிய பக்தியோக மார்க்கங்களால் மனத்தை அடக்குவதில் ஊக்கம் தவிர்தலின்றி யத்னம்செய்வான், ஜாதி ஆச்ரயம் நிமித்தம் இவைகளால் துஷ்டமான அன்னம் முதலியவை ஸத்வாதி குணங்களின் பரிணாமங்கள். இவற்றில் ஜாதிதுஷ்டங்கள் கஞ்சா வெங்காயம் முதலியவை. சண்டாள பதிதாதிகளின் அன்னம் ஆம்ரய துஷ்டமாம். எச்சில் முதலியவற்றால் கெடுதி அடைந்த அன்னம் நிமித்த துஷ்டமாம். இங்ஙனம் துஷ்டமான அன்னாதிகளை உபயோகப்படுத்தாமையாலும் வைராக்யத்தினால் வளர்க்கப்பெற்ற ஜ்ஞானத்தினாலும் பலனை விரும்பாமல் செய்கிற கர்மயோகத்தினாலும் வேறு ப்ரயோஜனங்களை விரும்பாமல் என்னிடத்தில் நிஷ்காரணமாகச் செய்யும் பக்தியினாலும் ஜீவாத்மாவுக்கு அந்தராத்மாவான என்னை இந்த தேஹத்தின் முடிவில் பெறுகின்றான்.

தேவஹூதி சொல்லுகிறாள்:- மோக்ஷத்தை ஸாதித்துக் கொடுப்பதற்குரிய பக்தியோகம் எத்தகையது. அந்த பக்தியின் ஸ்வரூபம் யாது? எனக்குச் சொல்லும் பக்தி எப்படிப்பட்டது? ஸம்ஸார தாபங்களால் வருந்தியிருக்கின்ற நான் எந்த பக்தியால் நித்யாநந்த, ஸ்வரூபனான உனது பாதாரவிந்தங்களை அனாயாஸமாகப் பெறுவேனோ, அப்படிப்பட்ட பக்தியின் ஸ்வரூபத்தை எனக்கு விசதமாகச் சொல்லவேண்டும். எல்லையில்லாத மஹநந்த ஸ்வரூபனே! பகவானிடத்தில் பாணம்போல் ப்ரயோகிக்கப்பட்டு அவனைக் குறிப்பிடுவதாகிய யாதொரு யோகத்தை நீ மொழிந்தனையோ, அந்த யோகத்தின் ப்ரகாரம் யாது? அதனுடைய அங்கங்கள் யாவை? எந்த அங்கங்களால் பரமாத்மாவினுடைய உண்மையை அறிவித்து அவனுடைய ஸாக்ஷாத்காரத்தை விளைவிப்பதாகிய உபாஸனம் நிறைவேறுமோ, அப்படிப்பட்ட யோகத்தை விரித்துச்சொல்வாயாக, தேவா! நீ சொன்ன பக்தியோகத்தின் ஸ்வரூபம் அறிஞர்க்கும் வருந்தி அறியக்கூடியதாய் இருக்கின்றது. தன்னைப் பற்றினாருடைய பாபங்களைப் போக்கும் தன்மையுள்ள ஸ்ரீஹரியே! நான் பெண்பிள்ளை; ஆனது பற்றியே மந்த புத்தியள், இப்படிப்பட்ட நான் அந்த பக்தியோகத்தின் ஸ்வரூபத்தை உனது அனுக்ரஹத்தினால் எப்படி அனாயாஸமாக அறிவேனோ, அங்ஙனம் அதை எனக்கு அறிவிப்பாயாக.

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- கபிலர் மாதாவான தேவஹூதி பக்திஸ்வரூபத்தைக் கேட்க விரும்புவதை அறிந்து, தான் இந்த தேஹத்துடன் பிறந்ததற்குக் காரணமான அந்த தேவஹூதியிடத்தில் ஸ்னேஹம் உண்டாகப் பெற்றவராகி, தத்வங்களை அறிவிக்கிற எந்த சாஸ்த்ரத்தை ஸாங்க்யமென்று சொல்லுகிறார்களோ, எது பக்தியை வளர்க்கும்படியான ஜ்ஞான யோகத்தை விஸ்தரித்துச் சொல்லுமோ, அப்படிப்பட்ட சாஸ்த்ரத்தை அவளுக்கு மொழிந்தாள்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- சப்தாதி விஷயங்களை அறிவிக்கின்றவைகளும் தத்தமக்கு ஏற்பட்ட தேவதைகளால் அதிஷ்ட்டாளஞ் செய்யப்பெற்றவைகளுமாகிய ஜ்ஞானேந்திரியங்கள், சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களை அனுஷ்டிப்பதில் நிலைநின்ற கர்மேந்திரியங்கள் ஊக்கமுடைய மனது ஆகிய இவற்றைச் சுத்தஸத்வமயனான பகவானிடத்தில் எத்தகைய ப்ரயோஜனங்களையும் விரும்பாமல் நிஷ்காரணமாக உபயோகப்படுத்துகையே பகவானிடத்தில் செய்யும் பக்தியாம். இந்த பக்தி ஐஸ்வர்ய கைவல்யாதி ஸித்தியைக் காட்டிலும் மிகவும் சிறந்தது. புசிக்கப்பட்ட அன்ன பானாதிகளை ஜாடராக்னி ஜீர்ணஞ் செய்வது போல், இந்த பக்தி அனாதி கர்மவாஸனையை நாசம் செய்யும். என்னுடைய பாதார விந்தங்களைப் பணிவதில் மிக்க விருப்பமுடையவரும் தமது ஸர்வேந்த்ரிய சேஷ்டைகளும் என்னிடத்தில் நிலைநிற்கப் பெற்றவருமாகிய சில பாகவதர் ஒருவருக்கொருவர் என்னுடைய கல்யாண குணங்களை வெளியிடுகிற எனது வீரச் செயல்களை ப்ரஸங்கம் செய்து நன்கு மனக்களிப்புற்றவராகி என்னோடு ஒத்திருக்கையாகிற மோக்ஷத்தையும் விரும்புகிறதில்லை. தாயே! ஸத்புருஷர்கள் தெளிந்த முகமும் சிவந்த கண்களும் அமைந்து அழகாயிருப்பவைகளும் விரும்பினவற்றையெல்லாம் கொடுப்பவைகளுமாகிய என்னுடைய திவ்யமங்கள விக்ரஹங்களைக் கண்குளிரக்கண்டு மனத்தினால் த்யானிப்பவருமாகி அத்தகைய எனது திவ்யமங்கள விக்ரஹங்களை முன்னிட்டுச் செவிக்கும் மனத்திற்கும் இனிதான என் வாக்கை மொழிந்துகொண்டு பொழுது போக்குகிறார்கள். ப்ரேமத்துடன் காணத்தகுந்த ஒவ்வொரு அவயவமுடையவைகளும் கம்பீரமான விளையாடல்களும் புன்னகையும் கண்ணோக்கமும் மதுரமான மொழியும் அமைந்து மிகவும் திகழ்கின்றவைகளுமாகிய அந்த என் திவ்யரூபங்களால் மனதும் ஜ்ஞானேந்திரிய கர்மேந்த்ரியங்களும் பறிக்கப்பெற்று அவர்கள் “நமக்கு இவ்வனுபவமே போதும்” என்று மோக்ஷத்தை விரும்பாதிருப்பினும், என்னிடத்தில் அவர்கள் செய்யும் பக்தியானது பிறர்க்கு இத்தகையதென்று அறியவும் முடியாத அர்ச்சிராதி மார்க்கத்தால் சென்று பெறக்கூடிய மோக்ஷத்தை அந்த தேஹத்தின் முடிவில்தானே விளைக்கின்றது. அப்பால் அவர்கள் அந்த சரீரத்தின் முடிவில் அர்ச்சிராதி மார்க்கத்தால் போகத்தொடங்கி என்னுடைய மாயையால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட ப்ரஹ்மலோகம் வரையிலுள்ள புண்யலோகங்களையும் பக்தியின் மஹிமையால் அணிமாதி அஷ்டைச்வர்யங்களையும் விரும்பாது செல்வார்கள். பாகவதர்கள் அர்ச்சிராதி மார்க்கத்தால் பரமபதத்திற்குப் போகும்பொழுது ப்ரஹ்மாதி தேவதைகள் தத்தமது லோகங்களை அவர்க்கு வழங்கி “நீங்கள் இவற்றை அங்கீகரித்து ஆள வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிலும், அவற்றை விரும்பாமல் போதும் போதுமென்று அந்த ப்ரஹ்மாதிகளுக்கு நல்வார்த்தைகளால் ஸமாதானம் சொல்லி விடுவித்துக்கொண்டு செல்வார்கள். அவர்கள் மோக்ஷத்தையே விரும்பாதிருப்பின், ப்ரஹ்மாதி லோகங்களையும் அணிமாதி ஐஸ்வர்யங்களையும் விரும்பமாட்டார்கள் என்பதில் ஸந்தேஹம் உண்டோ?அங்ஙனம் அவர்கள் மற்ற எதிலும் கண் வைக்காமல் ஸர்வஸ்மாத்பரனான என்னுடைய லோகமாகிய நித்ய விபூதியைச் சேருகிறார்கள். சாந்த ஸ்வரூபமுடையவளே! சுத்த ஸத்வமயமான அந்த என்னுடைய லோகத்தில் என்னை அனுபவிப்பதில் மன ஊக்கமுற்றவராகி ஒருக்காலும் அவ்வனுபவத்தினின்று நழுவுகிறதில்லை. மற்றை லோகங்களைப்போல் என்னுடைய லோகத்திற்கு அழிவில்லை. ஆகையால் அங்கு விளைகிற ஆனந்தானுபவத்திற்கு எக்காலத்திலும் அழிவே இல்லை. என்னுடைய ஸங்கல்ப ரூபமான காலசக்ரமும் அவர்களைத் தீண்டுகிறதில்லை. என்னுடைய லோகமான பரமபதத்தில் காலத்தின் சக்தி ஓங்காது. இந்த மஹானுபாவர்களுக்கு மிகவும் ப்ரீதிக்கிடமான ஆத்மாவும் ஸ்னேஹத்திற்கிடமான புதல்வனும் விச்வாஸபாத்ரமான ஸகாவும் ஹிதோபதேசம் செய்கிற குருவும் ஹிதஞ்செய்கிற ஸ்னேஹிதனும் பூஜிக்கத் தகுந்த இஷ்ட தேவதையும் நானே. இங்ஙனம் எல்லாவிதத்திலும் என்னையே உபாஸிக்கின்ற இவர்களுடைய பக்திக்கு நான் ஸந்தோஷம் அடைந்து எனது உண்மையை அனுபவிக்கையாகிற மஹாநந்தத்தை இவர்களுக்குக் கொடுத்து அதினின்று இவர்களை எக்காலத்திலும் கழுவவிடமாட்டேன். இந்த லோக ஸுகங்களையும் பரலோக ஸுகங்களையும் நம் வரங்களென்று நிச்சயித்து அவற்றைத் துறந்து, அந்த ஐஹிக ஸுகங்களையும் ஆமுஷ்மிக ஸுகங்களையும் ஸாதித்துக் கொடுக்கவல்ல தேஹத்தையும் அந்த தேஹத்தைப் பற்றின பந்துக்களான புத்ரகளத்ராதிகளையும் தனம் பசு க்ருஹம் இவைகளையும் மற்றுமுள்ளவைகளையும் ஸவாஸனமாகத் துறந்து, ஸர்வஜ்ஞனாகிய என்னை எல்லாவிதத்தாலும் மாறாத பக்தியுடன் எவர்கள் பஜிக்கின்றார்களோ, அவர்களை நான் ஸம்ஸாரத்தினின்று நன்கு கடக்கச் செய்கின்றேன். மீளவும் அவர்களுக்கு ஸம்ஸார ஸம்பந்தமில்லாதபடி மோக்ஷம் கொடுக்கின்றேன். ஸமஸ்த ஜீவாத்மாக்களுக்கும் அந்தராத்மாவாய் நின்று தரிக்கின்றவனும் ப்ரக்ருதிக்கும் புருஷனுக்கும் உள்ளே புகுந்து நியமிப்பவனும் ஷாட்குண்ய பரிபூர்ணனுமாகிய என்னைக் காட்டிலும் வேறான ப்ரஹ்ம ருத்ராதிகளைப் பணியில் ஸஹிக்கமுடியாத ஸம்ஸார பயம் நீங்காது. என்னையொழிந்த மற்றவர் எல்லோரும் ஜீவாத்மாக்களே ஆகையாலும் கர்மத்திற்கு உட்பட்டவர் ஆகையாலும் எனது ஆஜ்ஞையின்படி நடப்பவராகையாலும் அவர்களைப் பணிவதனால் மோக்ஷம் உண்டாகாது. கர்ப்பஜன்ம ஜராமாணாதி ரூபமான ஸாம்ஸாரிக பயத்தைப் போக்குமவன் நானொருவனே. இக்காற்று, “நாம் நமது அதிகாரத்தை க்ரமப்படி நடத்தாது போவோமாயின் நம்மை ஈஸ்வரன்தண்டிப்பான்” என்னும் பயத்தினால் ஓயாமல் வீசுகையாகிற தன் அதிகாரத்தை கடத்திக் கொண்டிருக்கின்றான். இந்த ஸுர்யனும் அவ்வன்னமே என்னிடத்தில் பயந்து வெயில் காய்கையாகிற தன்னதிகாரத்தைத் தவறாமல் நடத்துகின்றான். இந்த்ரனும் என்னிடத்தில் பயந்து மழை பெய்கையாகிற தன் அதிகாரத்தை ஊக்கத்துடன் நடத்துகின்றான். அக்னியும் என்னிடத்தில் பயந்தே கொளுத்துகையாகிற தன் அதிகாரத்தைச் சிறிதும் சோராமல் கடத்துகின்றான். இப்படி இந்த்ராதியான ஸமஸ்த தேவதைகளும் என்னுடைய கட்டளைக்கு உட்பட்டு நடப்பவர்களே. ஆகையால் ஜ்ஞான யோகமும் வைராக்யமும் அமைந்த பக்தியோகத்தினால் மஹாநந்தரூபமான என்னை அனுபவிக்கையாகிற க்ஷேமத்தின் பொருட்டு எவ்விதத்திலும் பயமில்லாத என் பாதமூலத்தைப் பணிகின்றார்கள். இடையூறுகளால் தடைபடாதபடி தீவ்ரமான பக்தியோகத்தினால் மனத்தை என்னிடத்தில் ஸமர்ப்பித்து அதை என்னிடத்திலேயே நிலைநிறுத்துகையாகிய இவ்வளவே இந்த ப்ரக்ருதி மண்டலத்திலுள்ள பத்தஜீவர்கள் மோக்ஷம் உண்டாவதற்குச் செய்யும் செயலாம். 

இருபத்தைந்தாவது அத்யாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக