வியாழன், 14 நவம்பர், 2019

மயக்கும் தமிழ் - 6 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

ஆனந்த மோகன வேணுகானம்

நினைக்க நினைக்க தேன் ஊறும் நினைவு அலைகளைத் தரும் தீந்தமிழ்ப் பாசுரங்கள் நாலாயிரத் திவ்யபிரபந்தம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றது. தமிழ் இலக்கியங்களை பேரிலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள். சிற்றிலக்கியங்களை 96 வகைகளாகப் பிரித்திருக்கிறார்கள் பண்டையத் தமிழ் அறிஞர்கள். சிற்றிலக்கியத்தின் முக்கிய நூலாக கருதப்படுவது நாலாயிரத் திவ்யப் பிரபந்தம். இதில் அள்ளஅள்ளக் குறையாத அற்புதங்கள் அமுதத் துளிகள் பரவியிருக்கின்றன. இறைவனோடு நெருக்கமாக இருக்க வேண்டும். அவன்மீது மாளாக் காதல் கொள்ள வேண்டும் என்பதை தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தங்கள் போன்றவை எடுத்து இயம்பின. எத்தகையோரும் இறைவழிபாட்டால் சிறப்பு பெறலாம் என்பதை பக்தி இயக்கம் முன்னிறுத்தியது.  அவரவர் செய்த வினைப் பயன்களை நுகர்ந்தே கழிக்க வேண்டும் என்பது சமணர்களின் கொள்கை. 

இத்தகைய வினைப் பொறியினின்றும் சைவ வைணவ சமயங்கள் மனிதனுக்கு விடுதலை அளித்தன. வினை, வினைப் பயன்கள் முதலிய எல்லாவற்றிக்கும் மேலாக உள்ளவன் இறைவன் என்றும், அவனைச் சார்ந்து வாழ்ந்தால் வினைகள் பொசுங்கிப் போகும் என்றும் சுருக்கமாகக் கூறி வெகுஜன மக்களை ஈர்த்தன. பக்தி இயக்கம் மக்கள் இயக்கமாக மாறியதற்கு இதுவே முதற்காரணமாக கருதப்படுகிறது. சமண, பெளத்த சமயங்கள் உலக நிலையாமையும் துறவையும் வலியுறுத்திக் கூறச் சைவமும் வைணவமும் இதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தன. இன்னும் சொல்லப்போனால் ஆழ்வார்களும், நாயன்மார்களும் கூட நிலையாமை பற்றிப் பாடியுள்ளனர். எனினும் அவர்கள் உலக இன்பத்தை விடுத்து நிலையாமைக்கே முதலிடம் கொடுக்கவில்லை.

இந்த உலகம் கடவுளின் படைப்பு என்றும், அது மகிழ்ச்சிக்காகவே படைக்கப்பட்டது என்றும் அவர்கள் பாடி ஆடி பரவசப்பட்டு இருக்கிறார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ‘வாழும் வகையறிந்தேன்’ என்று பெருமிதம் கொண்டார் தமிழ் இனத் தலைவராக கருதப்பட்ட பேயாழ்வார்.‘செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறலாம்’ என்றாள் ஆண்டாள் நாச்சியார். நல்ல பதத்தால் மனை வாழ்வர் என்று உறுதிபட பேசியவர் ஆழ்வார்களின் தலைமகனான நம்மாழ்வார் ‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’ என்கிறார் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வரப்பிரசாதமாக வந்துதித்த திருஞானசம்பந்தர். ‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை’ என்று இந்த மண்ணுக்கேத்த மார்க்கத்தை சொன்னார் உழவாரப் பணிக்கும், உள்ளத்து உறுதிக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்த அப்பர் பெருமான்.

இறைவனை அப்பரைப்போல் யாராவது நேசித்திருக்க முடியுமா? அதனால் அவர் upper நாம் எல்லாம் lowyer என்று சாதாரணமாகச் சொல்வது உண்டு.

‘இறைகளோடு இசைந்த இன்பம் இன்பத்தோடு இசைந்த வாழ்வு’ என்று கூறி மகிழ்ந்தார் சுந்தரமூர்த்தி நாயனார். அதனால் அவர் ஈசனுக்கே நண்பராகத் திகழ்ந்தார். நம்மைப் போன்றவர்களால் நம் எதிர் வீட்டுக்காரர்களுடன் கூட நட்பாக இருக்க முடிவதில்லை. பக்திநெறிக் கவிஞர்களின், பெருமான்களின் இந்த உறுதிமிக்க குரல்கள் அக்காலத்து மக்களின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை துளிர்விடச் செய்தன. உலக இன்பங்களை நுகர்ந்தவாறே இறைவனிடத்தில் பக்தி செலுத்தலாம் என்ற கருத்துக்களை தோற்றுவித்தன. எளிய இனிய இசையோடு கூடிய உயிர்த்துடிப்புள்ள பாசுரங்களை படைத்தவர்கள் ஆழ்வார் பெருமக்கள்.

ஆழ்வார்கள் படைத்த பாசுரங்களை தூய தமிழில் ‘செய்ய தமிழ் மாலைகள்’ என்று சிறப்பித்துப் பேசுவார்கள் பெரியோர்கள். இதில் பெரியாழ்வாரின் பணி மிகவும் மகத்தானதாகும். கண்ணன் மீது இவருக்கு இருக்கும் காதலை சொல்லி மாளாது. ஒரு தாயின் ஆனந்தம், பரிதவிப்பு, ஏக்கம், தந்தையின் அரவணைப்பு இப்படி எல்லாவற்றையும் அவருடைய படைப்புகளில் நம்மால் பார்க்க முடியும். அதனால்தான் பெரியாழ்வாருக்கு ‘பகவானை வளர்த்த பக்தர்’என்ற தனிப்பெருமையை வைணவ பக்தி உலகம் சூட்டி மகிழ்ந்திருக்கிறது. கண்ணன் என்பதற்கே ‘சர்வ சுலபன்’என்கிற பொருள் கூறுவதுண்டு. திவ்யப் பிரபந்தம் என்பது அன்பின் பிழிவாக காணப்படுகிறது. பக்தி ஒன்றுதான் முக்திக்கு வழி என்பதை இந்த மானுட சமூகத்திற்கு எடுத்துச் சொன்னதில் பெரியாழ்வாரின் பங்கு மகத்தானது. நாமெல்லாம் சாதாரணமாக ஒரு சினிமா பாட்டு கேட்டாலே மெய்மறந்து போகிறோம். ஆனால், பெரியாழ்வாரோ கண்ணனின் வேணுகானத்தை எப்படி அனுபவத்திருக்கிறார் தெரியுமா? அவர் மட்டுமா அந்தப் பேரானந்த அனுபவத்தை நம்மையும் தானே கைப்பிடித்து கூட அழைத்து கேட்கச் சொல்கிறார்.

அந்த அற்புதப் பாசுரம்,

சிறு விரல்கள் தடவிப் பரிமாறச்
செங்கண் கோடச் செய்யவாய்
கொப்பளிப்ப
குறுவெயர்ப் புருவம் கூடலிப்பக்
கோவிந்தன் குழல்கொடு ஊதினபோது
பறவையின் கணங்கள் கூடு துறந்து
வந்து ஆழ்ந்து படு காடு கிடப்ப
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்
கவிழ்ந்து இரங்கி செவியாட்ட
இல்லாவே!

கண்ணனுடைய சிறிய விரல்கள் அவனது புல்லாங்குழலின் துளைகளை, இசையின் ஏற்ற இறக்கத்திற்கு தக்கபடி ஒலி எழுப்பின. அவனது சிவந்த கண்கள் சாய்ந்திருந்தன. சிவந்த வாய் காற்றினை அடக்கி ஒலி எழுப்புவதால் கொப்பளித்திருந்தது. வியர்வைத் துளிகளால் புருவங்கள் படாதபாடுபட்டன. கோவிந்தனான கண்ண பரமாத்மா தனது புல்லாங்குழலைக் கொண்டு ஊதியபோது பறவைக் கூட்டங்கள் கண்ணணின் கீத கானத்தில் மயங்கி தங்கள் கூடுகளை விட்டு வெளியே வந்து காட்டிலே படுத்துக் கிடந்தன. பறவைகளின் நிலைமை இப்படி என்றால் ஆநிரை அதாவது பசுக் கூட்டங்கள் தங்கள் கால்களைப் பரப்பி தலையைக் கவிழ்ந்த நிலையில் தங்களின் காதுகளைக்கூட அசைக்காமல் கண்ணனின் அந்த தேமதுரக் புல்லாங்குழல் ஓசையை ரசித்துக் கேட்டன. 

இப்படிப்பட்ட பாசுரத்தை படைத்ததற்கு பெரியாழ்வாருக்கு எந்த மாதிரியான ரசனை இருந்திருக்க வேண்டும். அதனால் பகவான் கண்ணனை அவர் ஆயர் புத்திரனாகவும் பார்க்கிறார். அருந்தெய்வமாகவும் பார்க்கிறார். பெரியாழ்வாரையும், கண்ண பரமாத்மாவின் இன்னிசையையும் அதனால் ஏற்படும் மயக்கத்தையும் ‘விஷுவலாக’ கற்பனை செய்து பார்த்தாலே அடேயப்பா என்ன ஒரு பரவசம் ஏற்படுகிறது. மானிடர், தேவர் முதலான உயர்திணைப் பிரிவினரும் மாடு, பறவை, மரம் முதலான அஃறினை உயிர்களும் தமக்கு இடையே உள்ள பேதம் கடந்து கிருஷ்ணன் என்னும் ஆனந்த வெள்ளத்தில் முழ்கித் திளைப்பதையே பெரியாழ்வாரின் வேணு கான வர்ணணை நமக்கு சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. 

அது மட்டுமா? ‘‘அண்டகோடிகளை எல்லாம் கண்ணனுடைய அருட்கீதம் அள்ளி ஆனந்தக் கூத்தாடச் செய்தது. ஆத்மாக்கள் பகவானைத் தேடுகின்றன. அவனும் அவர்களைத் தேடினாள். கோகுலத்து இளவரசன் கிருஷ்ணன் குழலூதி அழைக்க, விண்ணும் மண்ணும் குவிந்து மனமுருகி எங்கும் காதுகளாய்க் கண்களாய் இசையின்பத்தைப் பருகின்றன’’ என்று பேரறிஞர் ம. ராதாகிருஷ்ணப் பிள்ளை தரும் விளக்கம் இங்கு எண்ணிப் பார்க்கத்தக்கதாக இருக்கிறது. 

கண்ணன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து அவனது வேணுகானத்தைக் கேட்டவர்கள் எத்தகைய மேலான ஆனந்தத்தை அடைந்தார்களோ நாம் அறியோம். இந்தக் காலத்திலும் அந்த அற்புத இசையை கேட்கப் பெறாத குறையைத் தீர்த்து வைக்கிறது பெரியாழ்வாரின் இந்தத் திருமொழிப் பாசுரம். கண்ணணின் வளர்ப்புத் தாயான யசோதையாகத் தன்னைக் கற்பனை பண்ணிக் கொண்டு அவனது பிள்ளைக் குறும்புகள் அனைத்தையும் கண்டுகளிக்க நம்மை அழைத்துச் செல்கிறார். பெரியாழ்வார் பெற்ற பேரானந்தத்தில் ஒரு சிறுதுளியாவது பெற நாமும் முயல்வோமே!

நன்றி - தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக