'நாராயணா' நாம மகிமை! - இடைமருதூர் கி. மஞ்சுளா


சதாசர்வ காலமும் "நாராயணா நாராயணா' என்று கூறிக் கொண்டிருக்கும் நாரதர், ஒருநாள் ஸ்ரீமன் நாராயணனை சந்தித்து வணங்கி, ""பிரபு! தங்கள் திருநாமமான "நாராயணா' என்பதை எப்போதும் கூறி வருகிறேன். அந்தத் திருநாமத்தின் பெருமையை இப்போது நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். தாங்கள்  அதை எனக்குக் கூறியருள வேண்டும்'' என்றார்.

நாரதர் கூறியதைக் கேட்ட பகவான் நாராயணன், ""நாரதா! நாராயண மந்திரத்தின் பெருமையையும், மகிமையையும் அறிவதற்கு முன், அதோ நெளிந்து வளைந்து மண்ணில் தவழ்ந்து கொண்டிருக்கிறதே ஒரு புழு. அதனிடம் சென்று "நாராயணா'  என்று மூன்று முறை சொல்'' என்றார். நாரதரும் உடனே அந்த மண்புழுவிடம் சென்று "நாராயணா' என்று மூன்று முறை கூறினார். சில நொடிகளில் அந்தப் புழு துடிதுடித்து இறந்துபோனது. இதைக் கண்ட நாரதர் பதறிப்போய் நாராயணனிடம் ஓடி வந்தார். ""பகவானே! அபச்சாரம் நடந்துவிட்டது'' என்று நடந்ததைக் கூறி வருத்தப்பட்டார்.

""வருத்தப்படாதே நாரதா! அதோ அங்கே பறந்துகொண்டிருக்கும் சின்னஞ்சிறு பட்டாம்பூச்சியிடம் சென்று நாராயண மந்திரத்தை மூன்று முறை கூறு'' என்றார் பகவான்.

நாராயணன் கூறியபடியே அந்தப் பட்டாம்பூச்சியிடம் சென்று நாராயண மந்திரத்தை மூன்று முறை கூறினார் நாரதர். அவ்வளவுதான்! அதைக் கேட்ட மாத்திரத்தில் அந்தப் பட்டாம்பூச்சியும் தரையில் வீழ்ந்து இறந்துபோனது. இதைக்கண்ட நாரதர் மேலும் பதறிப்போனார். ""பிரபு! இது என்ன விபரீதம்? இந்த மரணங்களுக்குக் காரணம் என்ன? எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது'' என்று மிகுந்த வேதனையுடன் கூறினார்.

""நாரதா! அதற்குள் கலங்கிவிடாதே! அதோ ஓடி வருகிறதே ஒரு மான்குட்டி, அதனிடம் சென்று "நாராயணா' என்ற மந்திரத்தை மூன்று முறை கூறு'' என்றார் நாராயணன். இதைக்கேட்ட நாரதர், தயங்கித் தயங்கி, அந்த மான் குட்டியிடம் சென்று, "நாராயணா' என்று மூன்று முறை கூறியதுதான் தாமதம். உடனே அந்த மான்குட்டியும் துடிதுடித்து இறந்துபோனது. நாரதர் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நின்றார். அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

நாரதரை சுய நினைவுக்குக் கொண்டு வந்த பகவான், ""நாரதா! சோர்ந்துவிடாதே! அதோ துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும் அந்தப் பசுங்கன்றுக்குட்டி இருக்கிறதே... அதனிடம் போய் இந்த நாமத்தை மூன்று முறை சொல்'' என்று பணித்தார். ஸ்ரீமன் நாராயணனின் வார்த்தையை மறுக்க இயலாத நாரதர், அந்தப் பசுங்கன்றிடம் சென்று மூன்று முறை "நாராயணா' என்ற மந்திரத்தைக் கூறியவுடன் அதுவும் உடனே இறந்து போனது.

நாரதர் மனம் நொந்து போய், ""பிரபு! இது என்ன லீலை?'' என்று துக்கத்துடன் கேட்டார்.

""நாரதா! இந்த ஒரு முறை மட்டும் காசிராஜன் அரண்மனைக்கு செல். அவனுக்கு நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லாமல் இருந்தது. இப்போதுதான் ஒரு குழந்தை பிறந்துள்ளது. யாருக்கும் தெரியாமல் அரண்மனைக்கு சென்று அந்தக் குழந்தையின் காதில் "நாராயணா' மந்திரத்தை மூன்று முறை சொல்லிவிட்டு வந்துவிடு!'' என்றார் பகவான்.

பகவான் கூறியதைக் கேட்ட நாரதர் திகைத்துப்போனார். ""பகவானே! இது என்ன விளையாட்டு? நடந்தது அனைத்தையும் தாங்கள் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறீர்கள்? நீண்ட காலமாக குழந்தைப் பேறு இல்லாத காசிராஜனுக்கு இப்போதுதான் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையிடம் போய் நான் எப்படி இந்த மந்திரத்தைக் கூறுவேன்?'' என்று தயங்கியபடி கேட்டார்.

""இந்த ஒருமுறை மட்டும் சென்று அந்தக் குழந்தையின் காதில் கூறிவிட்டு வா நாரதா! போ! போ! பயப்படாதே! நன்றே விளையும்!'' என்று பகவான் வற்புறுத்தினார்.

பகவான் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்துத் தயங்கியபடியே மனமில்லாமல் காசிராஜன் அரண்மனைக்கு சென்றார் நாரதர். அந்தப்புரத்தில் தொட்டிலில் படுத்துக்கிடந்த அந்தப் பச்சிளம் குழந்தையைக் கண்டார். அதன் பாதத்தைத் தொட்டு வணங்கிவிட்டு, அக்குழந்தையின் காதில் மூன்று முறை "நாராயணா' என்ற மந்திரத்தைக் கூறினார்.

என்ன அதிசயம்? பிறந்து சில மணி நேரமேயான அக்குழந்தை, "நாராயணா' என்ற மந்திரத்தைக் கேட்டதும் எழுந்து உட்கார்ந்தது. நாரதரைப் பார்த்து சிரித்தபடி, ""என்ன நாரதா! இன்னுமா உங்களுக்கு நாராயண மந்திரத்தின் மகிமை புரியவில்லை?'' என்று கேட்டது.

நாரதருக்கு ஒன்றுமே புரியவில்லை. "பிறந்த குழந்தை பேசுகிறதே...!' - வியப்புக்கு மேல் வியப்பாக இருந்தது நாரதருக்கு. அந்தக் குழந்தை பேசியதைப் பார்த்து திகைத்துப்போய் நின்றார் நாரதர்.

""என்ன நாரத முனிவரே திகைக்கிறீர்கள்? புழுவாக இருந்த நான், அதைவிட உயர்ந்த பிறவியான பட்டாம்பூச்சியாகப் பிறந்தேன். பட்டாம்பூச்சியாகப் பிறந்த நான், அதைவிட உயர்ந்த பிறவியான மான் குட்டியாகப் பிறந்தேன். மான் குட்டியாகப் பிறந்த நான் அதைவிட உயர்ந்த பிறவியான பசுங்கன்றாகப் பிறந்தேன். பசுங்கன்றாகப் பிறந்த நான், இப்போது கிடைத்தற்கரிய மனிதப் பிறவி எடுத்து, காசிராஜனுக்கு மகனாக, யுவராஜனாகப் பிறந்துள்ளேன். எல்லாம், தாங்கள் என் காதில் சொன்ன நாராயண மந்திரத்தின் மகிமைதான். நாராயண மந்திரத்தைச் சொல்கின்றவர்களுக்கு உயர்ந்த பிறவியும் முக்தியும் கிடைக்கும். இப்போதாவது புரிகிறதா?'' என்று கூறிவிட்டு முன்புபோலவே தொட்டிலில் படுத்துக்கொண்டது அந்த ராஜ குழந்தை.

நாரதர் உடனே பகவான் ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதக் கமலங்களில் வீழ்ந்து வணங்கினார். அவரது கண்கள் ஆனந்த நீரைப் பொழிந்தன. ""மகாபிரபு! தங்களது லீலைகளை என்னவென்று கூறுவேன்? அடியேன் அடிக்கடிக் கூறும் நாராயண மந்திரத்திற்கு இத்தனை வலிமையும் மகிமையும் உண்டா...! அந்த மந்திரத்தைச் சொல்ல அடியேன் என்ன புண்ணியம் செய்திருக்கிறேன்...! எல்லாம் தங்களது பெருங்கருணையல்லவா?'' என்று உள்ளம் உருகி வணங்கிப் பிரார்த்தித்தார்.

ஸ்ரீமன் நாராயணன் புன்னகை புரிந்தபடி நாரதரை வாழ்த்தியருளினார்.

நன்றி - தினமணி
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை