பாவை நோன்பு மேற்கொண்டு, பகவானுக்கு பூமாலையோடு பாமாலையும் சூட்டியவர் ஆண்டாள் நாச்சியார். அவர் திருப்பாவையில் 'வையத்து வாழ் வீர்காள்' என்று தொடங்கும் இரண்டாம் பாசுரத்தில், 'நெய்யுண்ணோம், பாலுண்ணோம்' என்று பாடுகிறார். அடுத்த சில பாசுரங்களிலேயே, 'ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ' என்கிறார். விரதம் இருப்போர் தயிர் கடைவது ஏன்? இது முரண்பாடு அல்லவா?
இப்படி ஒரு கேள்வி நம் மனத்தில் தோன்றக்கூடும். ஆனால், அதற்கு நான்கு காரணங்களைச் சொல்லியிருக்கிறார்கள் ஆசார்யார்கள்.
முதற்காரணம்: விரதம் இல்லாத குழந்தைகள், மூத்தோர்... உள்ளிட்ட பிறருக்கு நெய், பால், தயிர், வெண்ணெய் வேண்டாமா? அதனால் தயிர் கடைகிறார்கள்.
இரண்டாம் காரணம்: கண்ணன் வந்து தேடும்போது வெண்ணெய் போன்றவை இல்லையென்றால், பகவத் அபசாரமும், அவனது தோழர்களுக்கு அவை கிடைக்காவிடில், பாகவத அபசாரமும் ஏற்பட்டு விடுமே. தெய்வக் குற்றமும், அடியார் குற்றமும் ஏற்பட்டுவிடக்கூடாதே என்று கடைகிறார்களாம்.
மூன்றாவது காரணம்: எவரும் எக்காரணம் கொண்டும், எந்தக் காலத்திலும், தன் கடமையிலிருந்து தவறக்கூடாதாம். யசோதை தினமும் தயிர் கடைவதில் தவறவேமாட்டாளாம்.
நான்காவது காரணம்: ஓர் உட்பொருள். பகவத் சிந்தனை என்னும் மத்தினால் வேதம், மந்திரம், பாசுரம் (என்னும் தயிர்) என்னும் சாரங்களை கடையக் கடைய, நல்ல ஞானம், மோட்சம் பற்றிய ஞானம், நற்கதி ஆகியவை கிடைக்குமாம்.
வெறும் பாசுரமாக, பொருளறியாமல் மனப்பாடம் செய்வதை விட்டுவிட்டு, இப்படி ஆழ்ந்து பார்க்கும் போது, திருப்பாவை தித்திக்கும் அமுதமாகிறது.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
நன்றி - தீபம் ஜனவரி 2013