கார்த்திகை மாதம், முருகப்பெருமானை மையப்படுத்துவது, தீபத் திருவிழாவையும் சபரிமலைக்கு பக்தர்கள் மாலையணிதலையும் தனித்துவமாகக் கொண்டதால் இது சிறப்பு பெறுகிறது! கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் 'கார்த்திகேயன்' என்று அழைக்கப்படும் முருகப் பெருமானுக்கு உகந்தது கார்த்திகை நட்சத்திரம். எனவே, கார்த்திகைத் திருநாளில் முருகனை வழிபட வேண்டும் நலன்கள் கை கூடும்.
இம்மாதத்தில், வைணவர்களும் சிறப்பாகக் கொண்டாட அமைந்தது திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர மஹோத்ஸவம். ஆழ்வார்களில் கடைக்குட்டி என்றும், கலியன், சீர்க்கலியன், பரகாலன் என்றும் அழைக்கப்படும் திருமங்கை ஆழ்வாருக்கு, எந்த ஆழ்வாருக்கும் இல்லாத பெருமையும் உண்டு. குறிப்பாக,
முருகப்பெருமானுக்கும் இவருக்கும் ஓர் ஒற்றுமைகூட உண்டு எனச் சொல்லலாம்.
முருகப்பெருமானுக்கும் இவருக்கும் ஓர் ஒற்றுமைகூட உண்டு எனச் சொல்லலாம்.
அது, இருவரும் திருக்கரங்களில் பிடித்திருப்பது வேல் என்பதும், கார்த்திகை நட்சத்திரத்
தொடர்புடையவர்கள் என்பதும்தான்!
தமிழ் மாதங்களுக்குப் பெயர்கள் அமைந்தவிதமே சிறப்பானதுதான். முழு நிலவு நாளான பௌர்ணமியில் எந்த நட்சத்திரம் அமைகிறதோ அதன் பெயரைக் கொண்டே அம்மாதத்தின் பெயரும் அமையும். சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி அமைந்தால் அம்மாதம் சித்திரை மாதம். விசாக நட்சத்திரத்தில் பௌர்ணமி அமைந்தால் அது வைகாசி. இவ்வாறு கார்த்திகை நட்சத்திரத்தில் அமையும் மாதமே கார்த்திகை.
திருக்கார்த்திகை தீபத் திருநாள் என்று கொண்டாடப்படும் இந்நாள் குறித்து பண்டைய தமிழ் இலக்கியங்களில் 'விளக்கீடு' என்று குறிக்கப்படுகிறது. திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட அனைத்து முருகப்பெருமான் திருத்தலங்களிலும், சிவத்தலங்களிலும் கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில்தான், நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் ஓர் ஆயிரத்தைப் பாடிய நம்மாழ்வாரும், இன்னோர் ஆயிரத்தைப் பாடிய திருமங்கையாழ்வாரும் திருமுருகனுக்கு உகந்த நாட்களில் பிறந்திருக்கிறார்கள். வைகாசி விசாகத்தில் பிறந்தவர் நம்மாழ்வார் என்றால், கார்த்திகையில் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர் திருமங்கையாழ்வார்.
இதுகுறித்து, சுவாமி மணவாள மாமுனிகள் தமது 'உபதேச ரத்ன மாலையில்',
பேதை நெஞ்சே! இன்றைப் பெருமை
அறிந்திலையோ ஏது பெருமை இன்றைக்கு என்ன என்னில் -
ஓதுகின்றேன் வாய்த்த புகழ் மங்கையர்கோன் மாநிலத்தில்
வந்துதித்த கார்த்திகையில் கார்த்திகை நாள் காண்.
என்று திருமங்கையாழ்வாரின் அவதார நட்சத்திர மகிமை குறித்துக் கூறுகிறார்.
இந்த நாளுக்கு அப்படி என்ன பெருமை? என்று கேட்டால், என் நெஞ்சே... சொல்கிறேன் கேள்.
புகழ்பெற்ற திருமங்கை மன்னன் இந்த பூமியில் வந்துதித்த கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திர நாள் இது' என்கிறார்.
இன்னொரு பாடலில்,
மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன்
ஆறங்கம் கூற அவதரித்த - வீறுடைய
கார்த்திகையில் கார்த்திகை நாள் என்றென்று
காதலிப்பார் வாய்த்த மலர்த்தாள்கள் நெஞ்சே வாழ்த்து.
தமிழ் மாறனாகிய நம்மாழ்வார், நான்கு வேதங்களுக்கு ஒப்பான வகையில் ‘திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி, திருவந்தாதி’ என நான்கு தமிழ்ப் பனுவல்களைச் செய்தார். வேதங்களுக்கு ஆறு அங்கம் உண்டு.
அதுபோல் நம்மாழ்வார் செய்த தமிழ்மறைக்கு ஆறு அங்கம் கூற அவதரித்தவர் திருமங்கையாழ்வார். அவர் ‘பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்’ என்கிற ஆறு பிரபந்தங்களையும் அருளிச் செய்தார்.
ஆழ்வார்களிலேயே அதிகத் திருத்தலங்களுக்குச் சென்றவர் திருமங்கையாழ்வார். இவரின் பாசுரங்கள் நம் ஆலயங்களின் பழைமையை நிரூபிக்கும் சரித்திரச் சான்றுகள். திருமங்கையாழ்வாரின் வாள் வீச்சும், கவிதை வீச்சும் வேறு எவரிடமும் காண முடியாதவை. இலக்கண வகைகள் பலவற்றையும் முயன்று அருமையான கவிதைகள் படைத்தார்.
பல கோயில்களைச் செப்பனிடத் திருப்பணிகள் செய்வித்தார். எல்லாவற்றையும்விட, கம்பீரமான பக்தியை, முரட்டு பக்தியை இந்த மண்ணில் விதைத்தவர் திருமங்கையாழ்வார். அவருடைய அவதார தினமான திருக்கார்த்திகையில் நம் இல்லங்களில் அவருக்குக் கண்ணலமுதாகிய பாயஸம் நிவேதித்து, ஆழ்வாரின் கருணையைப் பெறுவோம்.
நன்றி - தீபம் டிசம்பர் 2015