புதன், 4 டிசம்பர், 2019

மயக்கும் தமிழ் - 27 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

செங்கமலம் மலரும் திருக்கோட்டியூரானே!

‘‘எங்கள் எம் இறை எம்பிரான், இமையோர்க்கு 
நாயகன், ஏத்து அடியவர்
தங்கள் தம் மனத்து பிரியாது அருள்புரிவான்
பொங்கு தண் அருவி புதம் செய்யப்
பொன்களே சிதற இலங்கொளி
செங்கமலம் மலரும் திருக்கோட்டியூரானே!’’

 திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி.

மிக அற்புதமான பாசுரம் படைத்திருக்கிறார் கலியன், பரகாலன், அருள்மாரி என்று சிறப்பு பெயர்கள் பெற்ற நம் திருமங்கையாழ்வார். பரம்பொருளான பரந்தாமன் மீது எத்துணைப் பற்று இருந்தால் இப்படி வார்த்தைகள் வந்து விழும். ஆழ்வார்களின் அருளிச்செயலான ஈரத்தமிழ் சொட்டச் சொட்ட அதிகாலைத் தென்றலாய் தெய்வீக மணம் கமழும் தேன் தமிழ் திவ்ய பிரபந்த பாசுரம். அதனால்தான் காலம் கடந்தும் நமக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது, இந்தத் திராவிட வேதம். இந்தப் பாசுரத்தில் எடுத்த எடுப்பிலேயே எங்கள் எம் இறை எம்பிரான் தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள்புரிவான் என்கிறார் திருமங்கையாழ்வார். இப்படிப்பட்ட இறைவன் எங்கிருக்கிறானாம்?


பொங்குதண் அருவி புதம் செய்யப்
பொன்களே சிதற இலங்கொளி
செங்கமலம் மலரும்  திருக்கோட்டியூரானே!

என்கிறார் ஆழ்வார். குளிர்ந்த அருவிகள் ஒருபுறம் பொன்களைச் சிந்துகிற மேகங்கள் அழகிய தாமரை மலரும் தாமரைத் தடாகங்கள் இப்படிப்பட்ட எழிலும் பொழிலும் உடைய திருக்கோட்டியூராம் இவ்வளவு சிறப்புக்களை ஆழ்வார்கள் காலத்திலேயே பெற்றதனாலோ என்னவோதான் பின்னாளில் வைணவ உலகம் கண்டெடுத்த மகாபுருஷர் ஸ்ரீமத் ராமானுஜரை இந்த திவ்யதேசம் ஆட்கொண்டு விட்டது போலும். திருக்கோட்டியூர் என்ன சாதாரண ஸ்தலமா என்ன?
ஆழ்வார்களும் அதன் பின்னர் திருக்கோட்டியூர் நம்பியும் ராமானுஜருடைய ஆன்மாவும் சுற்றிச் சுழலுகிற புண்ணிய பூமி. திருக்கோட்டியூர் (திருக்கு + ஓட்டியூர்) திருக்கு என்றால் பாவம், பாவங்களை ஓட்டக்கூடிய ஊர்.

பல்வேறு விதமான சிறப்புக்களை இந்தத் திருக்கோட்டியூர் தலம் பெற்றிருக்கிறது. பிரமாண்ட புராணத்தில் இந்த திவ்யதேசம் பற்றி மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்லப்பட்டு இருக்கிறது. பகவத் ராமானுஜரையும் திருக்கோட்டியூரையும் தவிர்த்து விட்டு, ‘ஓம் நமோ நாராயணா’ என்னும் எட்டெழுத்து மந்திரத்தை அந்த எம்பெருமானின் திருமந்திரச் சொல்லை எப்படி நினைவு கூற முடியும்? கண்ணை மூடிக் கொண்டு உள்ளம் உருகி நாராயணா... நாராயணா... என்றால் அங்கே உடனே எம்பெருமானின் திருமுக மண்டலம் கண்ணுக்குள் வந்து விடுமே அப்படிப்பட்ட திவ்ய மங்கள க்ஷேத்ரம் திருக்கோட்டியூர்! இங்கே எழுந்தருளியுள்ள பெருமாள் பக்தர்களுக்கு மட்டும் கண்குளிர தரிசனம் தரவில்லை. கதம்ப முனிக்கும், பிரம்மாவுக்கும், தேவர்களுக்கும் அற்புதமாக காட்சி தந்து அருளியிருக்கிறார்.

எம்பெருமானான மூலவர் பெருமானின் பெயர் என்ன தெரியுமா?

உரகமெல்லணையான் திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட கோலம். புஜங்க சயனத்தில் பெருமாள் கண்கொள்ளாக் காட்சியாக எழுந்தருளியிருக்கிறார்.

மூன்று தளங்களுடன் கூடிய அஷ்டாங்க விமானம் இத்திருத்தலத்தின் தனிச்சிறப்பாகும். அஷ்டாங்க விமானத்தின் வடபகுதியை மயனும் தென்பகுதியை விஸ்வகர்மாவும் அமைத்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மயக்கும் தமிழ், தூய்மையான தமிழ், பச்சைத் தமிழ் என்றெல்லாம் திவ்யபிரபந்தத்தைச் சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இங்குள்ள திருத்தாயாரின் பெயர்கள் என்ன தெரியுமா?

திருமாமகள், நிலமாமகள், குலமாமகள் என்று பெயர்கள். சிவகங்கை சமஸ்தானத்து வம்சாவளியினர்  இத்திருக்கோயிலுக்கு அன்றிலிருந்து இன்று வரை பெருந் தொண்டு புரிந்து வருகின்றனர். ராமானுஜருக்கு திருமந்திர ரகசியத்தைச் சொன்ன மகான் திருக்கோட்டியூர் நம்பிக்கு இக்கோயிலில் சிலை உள்ளது.

திருக்கோட்டியூருக்கு தெற்கில் சுமார் பதினெட்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஓக்கூர் மாசாத்தியார் என்கிற சங்ககால பெண்பாற் புலவர் இத்தலத்துப் பெருமானைப் பற்றி பாடியபாட்டு புறநானூற்றில் இருக்கிறது, அந்தளவு பழமையானது இந்த திவ்யதேசம். பேயாழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகிய ஐந்து ஆழ்வார்களாலும் மங்களா சாசனம் செய்யப்பட்டது இத்தலம். இந்தப் பெருமாள் மீது அதீத காதல் கொண்டவர் பெரியாழ்வார். அவர் படைத்த மிக தத்ரூபமான அற்புதமான பாசுரம் ஒன்றைப் பார்க்கலாம்.

உரகமெல்அணையான் கையில் உறைசங்கம்
போல்மட அன்னங்கள் 
நிரைகணம் பரந்துஏறும் செங்கமலவயற் திருக்
கோட்டியூர்
நரகநாசனைநாவிற் கொண்டு அழையாத 
மானிட சாதியர் 
பருகுநீரும் உடுக்குங்கூறையும் பாவம் செய்தன
தாம் கொலோ!    

பெரியாழ்வார்

பாம்பினை மெல்லிய படுக்கையாகக் கொண்ட எம்பெருமானே! உன் கையில் இருக்கிற வெண் சங்கைப்போல் காணப்படுகிற வெண்மை, நிறத்திலான அன்னப் பறவைகள் வாழ்கிற அற்புதமான ஊர் இந்தத் திருக்கோட்டியூர். செந்தாமரை மலர்கின்ற அற்புதமான வளங்களையுடைய எழிலும் பொழிலும் நிறைந்திருக்கிற ஊர் இந்தத் திருக்கோட்டியூர், இப்படி வளமாகத் திகழ்கிற இங்கு வரும் அடியார்களை வளமாக வாழ வைக்கக்கூடிய எம்பெருமானை தத்தம் நாவினால் அவனுடைய திருப்பெயர்களை அழைக்காதவர்களுக்கு அவர்கள் பருகும் நீரும் உடுக்கும் உடைகளும் எதற்கு? இன்னும் சொல்லப் போனால் எம்பெருமானுடைய திருநாமத்தைச் சொல்லாத நாக்கு இருந்தும் என்ன பயன்? மேலும் சொல்கிறார்... அப்படிப்பட்டவனுக்கு துணியாய் இருந்து பருகும் நீராய் இருந்து பாவப்பட்டு விட்டோமோ என்ற நிலைமேலடுகிறதாம்.

‘‘பருகு நீரும் உடுக்குங் கூறையும் பாவம் செய்
தன தாம் கொலோ!’’

எந்தளவு அந்த காண்யமூர்த்தி மீது மாளாக் காதல். இப்படி ஒரு பாசுரத்தை படைத்திருக்க முடியும்? பெரியாழ்வார் இறைவனுக்கே மாமனார் ஆனவர். அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது போலும் தனக்குப் பின்னால் பல நூற்றாண்டுகள் கழித்து ராமானுஜர் என்கிற ஆசார்ய புருஷர் தோன்றி ஊரெங்கும் உலகெங்கும் வைணவத்தை வளர்ப்பார், அதுவும் இந்த திருக்கோட்டியூர் கோபுரத்தின் மீது ஏறி நின்று ‘ஓம் நமோ நாராயணா’ என்று உரக்க குரல் கொடுத்தார். பெரியாழ்வார் வாழ்ந்த காலம் வேறு, ராமானுஜர் அவதரித்த காலம் வேறு, ஆனால், பெரியாழ்வாரோ எம்பெருமான் மீது வைத்த நம்பிக்கை அசாத்தியமானது. பெரியாழ்வார், ராமானுஜர் காட்டிய திசையில் பயணம் செய்வோம். ஒரு முறை திருக்கோட்டியூர் சென்று உரகமெல்லணையானையும், திருமாமகளையும் தரிசித்துவிட்டு வருவோம்!

நன்றி - தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக