ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 12


முதல் ஸ்கந்தம் – மூன்றாம் அத்தியாயம்

திருமாலின் அவதாரங்கள்

பரித்ராணாய ஸாதூனாம்
விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி
யுகே யுகே!

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில், நான்காவது அத்தியாயத்தில் தன் அவதாரத்தின் ரகசியத்தை வெளியிடுகிறார். பெருமான் பூவுலகத்தில் பிறப்பது ஸாதுக்களை ரக்ஷிக்கவும், தீயவர்களை அழிக்கவும், தர்மத்தை நிலை நிறுத்தவும் ஆகிய முக்கியமான மூன்று பயன்களுக்காக! ஒவ்வொரு யுகத்திலும் எத்தனையோ அவதாரங்களை பகவான் செய்கிறார். பெருமான் அவதாரம் செய்ய வேண்டிய தேவை என்ன?

பிரளயத்தின் போது, ஜீவர்கள் அனைவரும் பரமாத்மாவோடு ஒன்றிக் கிடக்கிறார்கள். மேற்கொண்டு அவர்களைப் படைக்காவிடில், கர்ம யோகத்தையோ, ஞான யோகத்தையோ, பக்தி யோகத்தையோ அல்லது சரணாகதியையோ அனுஷ்டித்து ஜீவர்களால் பெருமானை அடைய முடியாமல் போகும். உடல் இருந்தால்தான், அறிவு இருந்தால்தான், பக்தியோ, சரணாகதியோ செய்ய முடியும். நம்மீது கருணை கொண்ட எம்பெருமான் பிரளயத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, படைக்கத் தொடங்குகிறான். நம் அனைவருக்கும், அவரவர்களின் கர்மத்திற்குத் தகுந்தாற் போல் பிறவி கொடுக்கிறான். நாம் உடலையும், புலன்களையும், மனத்தையும் பகவானிடத்திலிருந்து பெறுகிறோம். வெறும் கருவிகளாக உடல் இருந்தால் போதுமா? உயர்ந்த அறிவை வளர்த்துக் கொள்வதற்கு, வழிகாட்டிகளான சாஸ்திரங்கள் தேவை. ஆகவே பகவான், முதலில் உடலையும், கூடவே ஞானத்தையும் கொடுத்து, விளக்கு போன்ற வேதங்களையும் அருளினான். நாம் வேதங்களைப் படித்து, அதன் வழி நடந்து, பக்தி யோகத்தைச் செய்து பெருமானை அடைவோம் என்பது பெருமானின் எதிர்பார்ப்பு!

ஆனால், நாமோ, மனம் போன வழிக்கு உடலைச் செலுத்தி, தீய வழிகளில் நடந்தோம். மேலும் மேலும் பாவங்களைச் சேர்த்தோம். நடுநடுவே ஏதோ சில புண்ணியங்களையும் அவ்வப்போது செய்தோம். இதன் பயனாக, மாறி மாறி இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவித்து, வெவ்வேறு பிறவிகளில் உழன்று கொண்டு வந்தோம். ஸம்ஸாரம் என்னும் பெருங்கடலிலே நாம் விழுந்திருக்கிறோம். ‘இதிலிருந்து இவனை வெளியிலே கொண்டு வருவது எப்படி? என்று யோசித்த எம்பெருமான், ‘நாம் வைகுண்டத்திலே இருந்து கொண்டு, இவர்களை எப்படி தூக்குவது? ஒருவன் ஆழமான கிணற்றுக்குள் விழுந்து விட்டால், தீயணைப்புப் படையினர், முதலில், மேலிருந்து தூக்கப் பார்ப்பார்கள். அது முடியாமல் போனால், உள்ளே குதிக்க வேண்டும் அல்லது பக்கத்தில் ஆழமான கிணறு தோண்டி, கீழே சென்று, விழுந்தவனைக் காப்பாற்ற வேண்டும். பகவான், எங்கோ வைகுண்டத்தில் இருந்து கொண்டு, அதல பாதாளத்தில் விழுந்திருக்கும் நம்மைத் தூக்க இயலாது. அதற்காக, தாமே இப்பூவுலகத்தில் பிறப்போம் என்று முடிவு செய்கிறான். அதனால்தான் எத்தனையோ அவதாரங்களைச் செய்கிறான்.

அவதாரம் என்றால், இறங்குதல் என்று பொருள். வைகுண்டத்திலிருந்து பகவான் நம்மைக் கடைத்தேற்றுவதற்காக இறங்குகிறான். இங்கே ஒரு ஐயம் எழலாம். ஏன் பகவான்தான் இறங்கி வந்து நம்மைக் காக்க வேண்டுமா? அவனுடைய சுதர்சன சக்கரத்தையோ, கருடனையோ, ஆதிசேஷனையோ அனுப்பி வைத்து, நம்மை காக்கச் சொன்னால், அவர்கள் கடமை ஆற்ற மாட்டார்களா? கண்டிப்பாகச் செய்வார்கள். ஆனால், கருணையே வடிவான பெருமான், அப்படிச் செய்ய மாட்டான். ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்:

ஒரு அரசன் தன் சிறு குழந்தையை கைகளில் வைத்துக் கொண்டு, கப்பலிலே சென்று, வேடிக்கை காட்டிக் கொண்டு வந்தான். சட்டென்று கப்பல் அசைந்தது. குழந்தை கை தவறி கடலில் விழுந்தது. அரசன் பதறிப் போய் உடனே கடலில் குதித்து, நீந்தி, குழந்தையைக் காப்பாற்றினான். அரசனுக்கு அருகில் சேனாதிபதியும், மந்திரியும், வீரர்கள் பலரும் இருந்தார்கள். அவர்களை ஏவி, அரசன் குழந்தையைக் காப்பாற்றச் சொல்லி இருக்கலாமே! ஏன், தானே குதிக்க வேண்டும்? ஒரே பதில்தான்! அரசன் மற்றவர்களை ஏவி இருந்தால், அவன் அரசனாக இருந்திருப்பான். தகப்பனாக இருந்திருக்க மாட்டான். தானே குதிக்கவேதான், தந்தைக்குரிய பாசத்தோடே நடந்து கொண்டான்.

இந்தத் தந்தைக்கும், சிறு குழந்தைக்கும் இரண்டு ஆண்டுகள் தொடர்பு இருக்கலாம். வயதான நமக்கும், நம் தந்தைக்கும் நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகள் தொடர்பு இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு ஜீவாத்மாவுக்கும், பகவானுக்கும் இன்று, நேற்றா தொடர்பு? நித்தியமான முடிவில்லாததான தொடர்பு. அவ்வளவு தூரம் நம்மோடு தொடர்புடைய, பாசமுடைய பெருமான் யாரையாவது அனுப்பியா நம்மை காப்பாற்றச் சொல்வார்? தானே குதித்தால்தானே தந்தை, தாய்க்குரிய பாசம் அவனிடத்தில் தங்கும்! பாசமுடைய ஒரு தாயைப் போல, நம்மைக் காப்பதற்காக எம்பெருமான் பூலோகத்தில் இறங்குகிறார். அவருடைய அவதாரங்கள் பொய் கிடையாது. கானல் நீரைப் போலப் பொய்யானவை அல்ல; நிஜமானவை. பெருமானுடைய அவதாரங்கள் எண்ணிறந்தவை. அவதரிக்கிறான் என்று சொல்லுகிறபடியால், கண்டிப்பாக பிறப்பு உளது என்று தெரிகிறது. ஆனால், சாத்திரங்களோ,

அஜாயமான: பஹுதா விஜாயதே

– என்று கூறுகின்றன. பிறப்பே இல்லாத பெருமான் பல வகையான பிறப்புக்களை ஏறிட்டுக் கொள்கிறான். ஆழ்வார் அப்படியே தமிழ்ப் படுத்தி,

பிறப்பில் பல்பிறவிப் பெருமான்

– என்று சாதித்தார். ‘பிறப்பில் என்பதால், பிறப்பில்லாதவன் என்று விளங்குகின்றது. ‘பல்பிறவிப் பெருமான் என்றதால் பல பிறவிகள் எடுத்துக் கொள்கிறான் என்று விளங்குகின்றது. பிறவியற்றவனுக்கு பிறப்பு உண்டு என்று சொன்னால் முரண்படாதா? இதில் எந்த முரண்பாடும் இல்லை. அவன் பிறக்கிறான் என்பது உண்மை. பிறக்கவில்லை என்பதும் உண்மை. இதில் குழப்பமே இல்லை. அவன் பிறப்பதில்லை; அதாவது நம்மைப் போல் பிறப்பதில்லை. நாம் அனைவரும் கர்மத்தாலே தூண்டப்பட்டு, கர்மங்களைக் கழித்துக் கொள்வதற்காகப் பிறக்கிறோம். ஆனால், பகவானுடைய பிறவிக்குக் கர்மங்கள் காரணமாகாது. பெருமானுடைய விருப்பம், இச்சை - நம்மைக் காக்க வேண்டும் என்கிற துடிப்பு. அதுவே அவர் பிறவிக்குக் காரணமாகிறது. ஆக, கர்மங்களால் பிறக்கவில்லை என்பதால், ‘பிறப்பிலி என்று கொண்டாடப்படுகிறான். நம் போன்றோரைக் காக்க வேண்டும் என்ற விருப்பத்தால் பிறக்கிறான் என்பதால், ‘பிறக்கிறான் என்று போற்றப்படுகிறான். இப்படி இரண்டுமே உடைய பெருமான் எத்தனையோ அவதாரங்களைச் செய்கிறான்.



நாம், பத்து அவதாரங்கள் என்று பொதுவாகப் பேசுவோம். தசாவதாரம் என்று கொண்டாடுவோம். ஆனால், அவதாரங்கள் பத்து மட்டும் அல்ல. அவதார எண்ணிக்கையை எளிமைப்படுத்தி, நாம் சுலபமாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்ட எண்ணிக்கை அது! ‘நான் பாகவத புராணத்தை உபன்யாசம் செய்கிறேன். ஒரு பத்து ஆண்டுகள் செய்யலாம் என்று இருக்கிறேன். அவசியம் அனைவரும் வாருங்கள் என்று சொன்னால், பத்துப் பதினைந்து பேர் வருவார்கள். ‘பாகவதத்தை ஏழு நாட்களில் சொல்லப் போகிறேன். குறைவான பொழுதில் நீங்கள் நிரம்பத் தெரிந்து கொள்ளலாம். அனைவரும் வாருங்கள் என்று அழைப்பு விடுத்தால், ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து கூடுவார்கள். எப்போதுமே ஓர் எண்ணிக்கைக் கணக்கில், இத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்று கூறினால்தான், அனைவருமே ஆவலோடு கேட்க வருவார்கள். ஆகையால்தான் பெருமானுடைய அவதாரங்கள் எண்ணிறைந்தவையாக இருந்தாலும், தசாவதாரம் என்று ஓர் எளிமையான எண்ணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டாடப்படுகின்றன. பெருமான் ஆதியிலே தன்னுடைய நாபிக் கமலத்திலே பிரஹ்மாவைப் படைத்து, அவருக்கு நான்கு வேதங்களையும் போதித்தான் என்று பார்த்தோம். மேற்கொண்டு பகவான் சிருஷ்டிக்க ஆரம்பித்தான். படைக்கப்பட்ட மனிதர்களை எல்லாம் காப்பதற்காக, காக்கும் இயல்பினனான பகவான் விஷ்ணு எத்தனையோ அவதாரங்களைச் செய்கிறார். அந்த அவதாரங்களை சுகாசாரியர் மிகவும் சுருக்கமாகக் கூறுகிறார். தற்போது ஸூத பௌராணிகர், சௌனகர் முதலான ரிஷிகளுக்கு அவற்றை எடுத்துரைக்கிறார். ஒவ்வொரு அவதாரத்தின் பெயரையும், அந்த அவதாரம் எதற்காக நிகழ்ந்தது என்பதையும் சுருக்கமாகப் பார்ப்போம் :

(தொடரும்)

நன்றி - துக்ளக்

1 கருத்துகள்

கருத்துரையிடுக
புதியது பழையவை