அதிகப் பார்வை

மனதைக் கவர்ந்த “அதரங்கள்” - கோமான் ஶ்ரீ பாலாஜி


கையினார் சுரி சங்கு அனலாழியர்* நீள் வரை போல்
மெய்யனார்* துளப விரையார் கமழ் நீள் முடி எம்
ஐயனார் அணி அரங்கனார் அரவின் அணைமிசை மேய மாயனார்*
செய்ய வாய், ஐயோ! என்னைச் சிந்தை கவர்ந்ததுவே!
திருப்பாணாழ்வார் - அமலனாதிபிரான் - 7
அமலனாதிபிரான் என்னும் பிரபந்தத்தில், திருப்பாணாழ்வார் அரங்கனின் திருவடியிலிருந்து தொடங்கி மேலே மேலே பார்வையை நகர்த்துகிறார். திருவடி, திருத்தொடை, திருநாபி, திருமார்பு, திருக்கழுத்து, திருவாய் என்று படிப்படியாக அனுபவிக்கிறார். ஏழாம் பாசுரம் வரும்போது, அவரின் பார்வை அரங்கனின் திருவாயில் நிற்கிறது. அந்த அனுபவமே இந்தப் பாசுரம்.
“கையினார் சுரி சங்கு அனலாழியர்”
எம்பெருமான் தன் திருக்கைகளில் வலம்புரிச் சங்கையும், நெருப்புப் பிழம்பு வீசும் சுதர்சனச் சக்கரத்தையும் ஏந்தியிருக்கிறார். இவை அடியார்களைக் காக்கும் ஆயுதங்களாகவும், அதே சமயம் அவனது திருமேனிக்கு மெருகூட்டும் ஆபரணங்களாகவும் திகழ்கின்றன. அந்தச் சங்கு சக்கரங்களைத் தாங்கிய கைகள், தன்னைச் சரணடைந்தவர்களைக் காக்கக் காத்திருக்கும் கருணையை உணர்த்துகின்றன.
“நீள் வரை போல் மெய்யனார்”
அரங்கனின் சயனத் திருக்கோலத்தைக் குறிப்பிடும்போது, ஆழ்வார் "நீள் வரை போல் மெய்யனார்" என்கிறார். அதாவது, ஒரு பெரிய நீண்ட பச்சை மலை போல அரங்கனின் திருமேனி காட்சியளிக்கிறது. மலை எப்படி கம்பீரமாகவும், குளிர்ச்சியாகவும், உயர்ந்து நிற்கிறதோ, அதுபோலவே அரங்கனின் திருமேனி காண்பவர் கண்களுக்குப் பிரம்மாண்டமாகவும், மனதிற்கு அமைதி தருவதாகவும் இருக்கிறது.
“துளப விரையார் கமழ் நீள் முடி எம் ஐயனார்”
நறுமணம் வீசும் துளசி மாலை அணிந்த அரங்கனின் திருமுடியில் (தலையில்) அணிந்துள்ள கிரீடம் மிக உயர்ந்தது. அந்த நீண்ட முடியில் சூடியிருக்கும் திருத்துழாய் (துளசி) மாலைகளின் நறுமணம் சந்நதி முழுதும் மணம் வீசிக் கொண்டிருக்கிறது.
“அரவின் அணைமிசை மேய மாயனார்”
அழகிய திருவரங்கத்தில், ஆதிசேஷன் என்னும் பாம்பணையின் மீது பள்ளி கொண்டிருக்கும் அந்தப் பெருமான் மகா மாயன். அவன் செய்யும் லீலைகளும், அடியார்களுக்குத் தரும் அருளும் ஆச்சரியப்படத்தக்கவை. அத்தகைய தலைவன், நம் பாரத்தை, நம் துண்பங்களை எல்லாம் தான் தாங்கிக் கொண்டு நித்திரையில் ஆழ்ந்திருக்கிறான்.
“செய்ய வாய்”
ஆழ்வாரின் பார்வை, அரங்கனின் திருவதரத்தின் (உதடுகள்) மீது விழுகிறது. அந்தச் சிவந்த வாய், கொவ்வைக்கனி போலத் துடிக்கிறது. அதைக் கண்ட அடுத்த நொடி, ஆழ்வார் தன் சுயநினைவை இழக்கிறார்.
"ஐயோ! என் சிந்தை கவர்ந்ததுவே!”
இந்த "ஐயோ" என்னும் வார்த்தையில் மூன்று உணர்வுகள் ஒரே நேரத்தில் வெளிப்படுகின்றன:
ஆச்சரியம் — "இவ்வளவு அழகு எங்கிருந்து வந்தது!”
ஆனந்தம் — "இந்த அழகை அனுபவிப்பதற்கு வார்த்தைகளே இல்லையே!”
ஏக்கம் — "முழுவதும் அனுபவிக்கும் முன்னரே, திருவாய் என் நெஞ்சை இழுத்துவிட்டதே — இனி என் செய்வேன்!"
"பண்டே நெஞ்சு பறிகொடுத்தவென்னை, அநியாயம் செய்வதே!" என்று கூப்பிடுகிறார் ஆழ்வார் என்பர் பெரியவாச்சான்பிள்ளை.
இதன் உள்ளர்த்தம் என்னவென்றால் — ஆழ்வார் ஏற்கனவே அரங்கனிடம் முழுமையாக சரணடைந்தவர். நெஞ்சை அரங்கனுக்கே அர்ப்பணித்தவர். அப்படியிருக்கையில், திருவாய் மீண்டும் வந்து நெஞ்சை கொள்ளை கொள்கிறது. ஒரு காதலன் தன் காதலியிடம், "என்னையே உனக்கு தந்துவிட்டேன். இனிமேல் எடுக்க என்னிடம் என்ன இருக்கிறது?" என்று இன்பமான முறையீடு செய்வது போல் — ஆழ்வாரின் "ஐயோ" என்பதும் ஒரு இன்ப வேதனையின் வெளிப்பாடு.
சங்கு, சக்கரம், மேனி, முடி என்று ஒவ்வொரு அழகையும் பார்த்துக் கொண்டே வந்த ஆழ்வார், திருவாயில் தன்னை முற்றிலும் இழந்துவிடுகிறார். அது வெறும் இழப்பல்ல — அது பேரின்ப நிறைவு. "ஐயோ" என்பது துன்பத்தின் குரலல்ல; அளவிலா ஆனந்தம் வார்த்தைகளில் கொள்ளாமல் வெளிப்படும்போது வரும் ஓசை.
திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்.

10-04-2026

Post a Comment

புதியது பழையவை