தமர் உகந்தது எவ்வுருவம், அவ்வுருவம் தானே*
தமர் உகந்தது எப்பேர், மற்று அப்பேர்* தமர் உகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே*
அவ்வண்ணம் ஆழியான் ஆம்.
பொய்கை ஆழ்வார் அருளிய இந்த முதல் திருவந்தாதி பாசுரம், வைணவத்தின் மிக முக்கியமான 'அர்ச்சாவதார சௌலப்யம்' (எம்பெருமான் எளிமையாகக் காட்சி தரும் குணம்) மற்றும் 'ஆஸ்ரித பாரதந்த்ரியம்' (பக்தர்களுக்குக் கட்டுப்படுதல்) ஆகிய தத்துவங்களை மிக அழகாக விளக்குகிறது.
பெரியவாச்சான் பிள்ளை போன்ற ஆச்சாரியர்களின் வியாக்யானங்களை அடியொற்றி, இப்பாசுரத்தின் சாரத்தை இங்கே எளிமையாகக் காணலாம்:
"தமர் உகந்தது எவ்வுருவம், அவ்வுருவம் தானே…"
பக்தர்கள் (தமர்) எந்தப் பொருளைக் கொண்டு (மண், கல், உலோகம்) எம்பெருமானின் திருமேனியை அமைக்கிறார்களோ, அதையே தனக்குரிய வடிவாக ஏற்றுக்கொள்கிறார்.
பெரியவாச்சான் பிள்ளை கூறுகிறார், இவர்கள் கல்லையோ, மண்ணையோ, ஓவியமாக கீறிய உருவத்தையோ — பக்தர்கள் (தமர்) எதனை விக்கிரஹமாக்கினாலும் அதுவே அவருக்கு விக்கிரஹம்.
இதற்கு ஐதிஹ்யம் (பெரியோர் வாழ்வில் நடந்த நிகழ்வு) ஒன்று உண்டு.
எம்பெருமானார் (இராமானுஜர்) ஒருமுறை பிக்ஷைக்காக (உணவுக்காக) திருவீதியில் எழுந்தருளிக் கொண்டிருந்தார். அப்போது தெருப்புழுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், மணலைக் குவித்து வைத்து, அதை ஒரு பெரிய கோயிலாகவும், அதில் பெருமாள் எழுந்தருளியிருப்பதாகவும் பாவனை செய்தனர்.
ஒரு சிறுவன் ஒரு கொட்டங்குச்சியில் (தேங்காய் ஓடு) கொஞ்சம் மணலை அள்ளி எடுத்து, அதை 'பிரசாதம்' என்று நினைத்து, "எம்பெருமானாரே! இதோ பெருமாள் அமுது செய்த பிரசாதம், பெற்றுக் கொள்ளுங்கள்!" என்று விளையாட்டாகக் கூறினான்.
சாதாரணமாகப் பார்த்தால் அது வெறும் மணல். ஆனால், உடையவர் “தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே" என்ற பாசுரத்தை நினைத்தார். அந்தச் சிறுவன் அதை பெருமாளாக நினைத்த கணமே, அவன் அந்த மணலில் ஆவேசித்துவிட்டான் என்று நம்பிய உடையவர், தன் கையில் இருந்த பிக்ஷா பாத்திரத்தில் அந்த மணலை அதாவது அந்த பிரசாதத்தை பயபக்தியுடன் ஏற்றுக் கொண்டார். குழந்தைகளின் தூய அன்பிற்கு எம்பெருமான் கட்டுப்பட்டதை இது காட்டுகிறது.
"தமர் உகந்தது எப்பேர், மற்று அப்பேர்”
நாராயணன், விஷ்ணு என்று சாஸ்திரம் நிர்ணயித்த நித்ய நாமங்களுக்கு இணையாக, அடியார் அன்போடு சூட்டும் எந்த ஒரு சிறிய திருநாமத்தையும் அவர் சர்வஸ்வமாக ஏற்பார். "தனக்கு சத்தா பிரயுக்தமான நாராயணாதி நாமங்களை ஒழிய, இவன் உகந்திட்ட இதுவே தனக்குத் திருநாமம்" என்று வியாக்கியானம் கூறுகிறது.
இப்பாசுரத்தின் இந்த வரிகளுக்கு உண்மைப் பொருளுக்கு இலக்கணமாக அமைந்தது ஸ்வாமி நஞ்சீயரின் வாழ்வில் நடந்த இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு:
ஸ்வாமி நஞ்சீயர் தம் திருவாராதனத்தில் ஒரு சிறிய கண்ணன் விக்கிரகத்தை வைத்து பூஜித்து வந்தார். ஒருமுறை அடியவர் ஒருவர் சமர்ப்பித்த தங்கத்தைக் கொண்டு, தம் கண்ணனுக்கு மிக அழகான சதங்கைகளைச் செய்து அணிவித்தார். அந்தச் சதங்கைகளை அணிந்த கண்ணனின் திருவடி அழகில் மயங்கிய நஞ்சீயர், யாருமில்லாத தனிமையில், "கண்ணா! உனக்கு 'சதங்கை அழகியார்' என்ற திருநாமத்தைச் சூட்டுகிறேன்" என்று ஆசையோடு கூறி மகிழ்ந்தார்.
அடுத்த நாள் அதிகாலை, ஒரு நபர் நாவல் பழங்களுடன் நஞ்சீயரின் வீட்டுக் கதவைத் தட்டினார். அவர் சொன்ன செய்தி நஞ்சீயரை நிலைகுலையச் செய்தது: "ஸ்வாமி! நேற்று இரவு ஒரு சிறுவன் என் வீட்டிற்கு வந்து நாவல்பழம் கேட்டு அடம் பிடித்தான். அவன் யார் என்று கேட்டதற்கு, தான் உங்கள் வீட்டில் இருப்பதாகவும், அவன் பெயர் 'சதங்கை அழகியார்' என்றும் கூறினான். இதற்காகத்தான் வந்தேன்.”
இதைக் கேட்ட நஞ்சீயர் மூர்ச்சித்து விழுந்தார். தான் தனிமையில் சூட்டிய பெயரை, ஒரு விக்கிரகமாக இருக்கும் கண்ணன் அப்படியே ஏற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல், அந்தப் பெயரையே சொல்லித் தெருவில் இறங்கி வந்து நாவல்பழம் கேட்ட அவனது எளிமையை (சௌலப்யம்) எண்ணி வியந்தார்.
“எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே அவ்வண்ணம் ஆழியான் ஆம்.”
பக்தர்கள் இடைவிடாமல் (இமையாது) எந்தக் குணத்தோடு இறைவனைத் தியானிக்கிறார்களோ, அதே குணத்தோடு அவன் வந்து அருள்கிறான். "சென்றால் குடையாம்" என்று அடியவர்கள் அவனுக்குத் தொண்டு செய்வது போல, அவனும் அடியவர்களுக்குத் தொண்டு செய்யக் காத்திருக்கிறான்.
இறுதியாக இப்பாசுரம் சொல்லும் செய்தி மிக எளிமையானது: "எம்பெருமான் நமக்காகத் தன்னை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளத் தயார்; நாம் அவன்பால் பக்தி செலுத்தத் தயாரா?" என்பதே.
கண்ணன் கீதையில் சொன்னது போல: "யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ் ததைவ பஜாம்யஹம்" ("யார் எந்த வழியில் என்னிடம் சரணடைகிறார்களோ, அவர்களை அதே வழியில் நான் ஏற்றுக் கொள்கிறேன்").
புழுதியில் விளையாடும் பிள்ளைகள் கொடுத்த மண்ணையும் 'பிரசாதமாக' ஏற்றுக் கொண்ட பகவத் இராமானுஜரின் வாழ்வியல் நிகழ்வு, இந்த ஆழ்வார் பாசுரத்திற்கு ஒரு வாழும் சாட்சியாகும்.
எம்பெருமான் நமக்காகத் தன்னை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளத் தயார் என்பதற்கு இப்பாசுரமும், நஞ்சீயரின் வாழ்வும் சான்று. நாம் அவனை வெறும் கல்லாகப் பார்த்தால் அவன் கல்லாகவே இருப்பான்; ஆனால், நம் வீட்டு அங்கத்தினராகப் பார்த்தால், அவன் நம்முடன் உரையாடுவான், விளையாடுவான், நம் பெயரையும் ஏற்றுக்கொள்வான்.
"அடியார் உள்ளப்படி இறைவன் ஆவான்" என்பதே இப்பாசுரம் நமக்கு உணர்த்தும் பேரொளி.
09-04-2026

கருத்துரையிடுக