“நான் உயிருடன் இருக்கத் தாங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?” என்றான் இந்திரஜித்து.
இப்படித் தகப்பனுக்குத் தைரியம் சொல்லிவிட்டு, சேனையைத் திரட்டிக்கொண்டு யுத்த களம் சென்றான்.
வானர சேனையைத் தாக்கி முறியடித்து லக்ஷக் கணக்கான உயிர்ச் சேதமும் படுகாயங்களும் உண்டாக்கினான். வானர சேனை தோல்வியுற்று ஒன்றும் செய்ய முடியாமல் தத்தளித்தது.
ராம லக்ஷ்மணர்களும் இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்டு பிரக்ஞையற்றுக் கிடந்தார்கள். அரக்க வீரன் கவலை கொண்டிருந்த தந்தையிடம் இந்தப் பெரிய வெற்றியைச் சொல்லிச் சந்தோஷப் படுத்தலாம் என்று சென்றான்.
விபீஷணன் வானரத் தலைவர்களைத் தேடித் தேடிக் கண்டுபிடித்துத் தேற்றிக் கொண்டு வந்தான். ஜாம்புவான், அரை ஜீவனாகக் கிடந்தவன் மெதுவாகச் சென்று வானரர்களை விசாரித்தான். 'மாருதி உயிரோடிருக்கிறானா?' என்று கேட்டான். மாருதி 'இதோ இருக்கிறேன்' என்று வந்து ஜாம்புவானின் பாதத்தில் பணிந்து நமஸ்கரித்தான்.
“அப்பனே! உடனே வடக்கே செல்வாய். கடலைத் தாண்டி இமயமலைத் தொடருக்குப் போய் ரிஷப பர்வதத்துக்கும் கைலாய பர்வதத்துக்குமிடையில் இருக்கும் ஓஷதி பர்வதத்தின் உச்சியில் நான்கு மருந்துச் செடிகள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு வந்தாயானால் ராம லக்ஷ்மணர்களும் வானர சேனையும் நினைவு அடைந்து, ரணங்கள் தீர்ந்து, ஆரோக்கியம் அடைவார்கள். இதைக் கால தாமதமின்றி உடனே செய்வாய். இதைச் செய்யக் கூடியவன் நீ ஒருவன்தான்” என்றான்.
அவ்வாறே ஹனுமான் குதித்துக் கிளம்பினான். ஆகாய மார்க்கமாகச் சென்று குறிப்பிட்ட பர்வதத்தை அடைந்தான். ஆனால் ஓஷதிகளைக் கண்டெடுக்க அவனால் முடியவில்லை. அப்படியே பர்வதத்தையே தூக்கியெடுத்துக்கொண்டு லங்கைக்குத் திரும்பினான்.
ஹனுமான் தூக்கி வந்த சஞ்சீவி மலை ஆகாயத்தில் லங்கையை நெருங்கிய உடனே ராம லக்ஷ்மணர்களும் வானர சேனையும் உடலில் ஏறிய சரங்கள் நழுவி, காயங்கள் ஆறி, பூரண சுக நிலையில் எழுந்து நின்றார்கள்.
சுக்ரீவன் ராமனிடம் கலந்து யோசித்துச் சில வானரர்களைப் பொறுக்கியெடுத்து, லங்கைக்குள் பிரவேசித்து நகரத்துக்கு நெருப்பு வைக்கும்படி உத்தரவிட்டான்.
அப்படியே வீரர்கள் ராத்திரி முன் ஜாமத்தில் தீவட்டிகளுடன் பிரவேசித்தார்கள். காவலாளிகளை அடித்துத் தள்ளி லங்கையிலுள்ள கோபுரங்கள், மாளிகைகள் இவற்றுக்கு நெருப்பு வைத்தார்கள். ஆயிரக் கணக்கில் வீடுகள் எரிந்து சாம்பலாயின. செல்வமும் நாகரிகமும் நிறைந்த லங்கா நகரம் கோரமான நாசம் அடைந்தது.
இந்தச் சம்பவத்தை வால்மீகி முனிவர் மிக விவரமாகச் சித்திரித்திருக்கிறார். அதைப் படித்தால் இந்த யுகத்தில் நடத்தப்படும் யுத்தங்களில் நடைபெறும் நகர நாசக் கதையாகவே காணப்படுகிறது.
வானரர்களால் லங்கா நகரம் எரிக்கப்படுவதைக் கண்ட ராவணன் பெருங்கோபம் கொண்டு கும்ப கர்ணனுடைய புத்திரர்களான புத்திரர்களான கும்பன், நிகும்பன் இவர்களை யூபாக்ஷன் முதலிய அரக்க வீரர்களுடன் யுத்தகளத்துக்கு அனுப்பினான். ராக்ஷசர்களுக்கும் வானரர்களுக்கும் கோர யுத்தம் நடந்தது.
கும்பன் சுக்ரீவனாலும் நிகும்பன் மாருதியாலும் வதம் செய்யப்பட்டார்கள்.
கரனுடைய மகன் மகராக்ஷன் என்ற அரக்கன் ராமனையே எதிர்த்து ராமனுடைய ஆக்னேய அஸ்திரத்துக்கு இரையானான்.
இன்னும் பல பெரிய அரக்கர்கள் மாண்டார்கள். அதன்பேரில் இராவணன் சொல்லின்படி இந்திரஜித்து மறுபடியும் புறப்பட்டான். இந்திரஜித்து அசுர வேள்வி ஒன்று செய்து, அதன் பயனாக ஆகாயம் ஏறிப் பார்வைக்கு மறைந்து, யுத்தம் செய்தான்.
*
இந்திரஜித்து தன்னுடைய மாய வித்தையினால் ஒரு பொய்ச் சீதையை உண்டாக்கி அவளைத் தேரில் ஏற்றிக் கொண்டு வானர சேனைக்கு எதிரில் சீதையை நிறுத்தி அவளை அவர்கள் முன்னிலையில் கொன்றான். இதைக் கண்டு வானர வீரர்களும் மற்றவர்களும் ஏமாந்து போய் இனி யுத்தம் செய்து என்ன பயன் என்று யுத்தத்தை நிறுத்தி விட்டு ராமனிடம் போய் யோசிக்கச் சென்றார்கள். இவ்வாறு ஜாலம் நடத்திவிட்டு இந்திரஜித்து வேறொரு பெரிய அசுர யாகம் செய்யச் சமயம் செய்து கொண்டான். இது வானர வீரர்களுக்காவது ராமலக்ஷ்மணர்களுக்காவது தெரியாது. அவர்கள் சீதை உயிரிழந்ததைப் பற்றி ஆறாத துக்கம் அடைந்து இன்னது செய்வது என்று தோன்றாமல் அறிவு இழந்து கிடந்தார்கள். அப்போது விபீஷணன் வந்து என்ன விஷயம் என்று விசாரித்தான். நடந்ததையெல்லாம் அவனுக்குத் தெரிவித்தார்கள். “ஐயோ! இப்படி நீங்கள் மோசம் போனீர்களே, ஒருநாளும் ராவணன் சீதையைக் கொல்ல விட மாட்டான், இது ஒரு யுக்தி. பொய்யும் மாயையும் செய்து இந்திரஜித்து தன்னுடைய சூழ்ச்சியை நிறைவேற்றப் பார்க்கிறான். மற்ற எவ்விதத்திலும் காரியம் நிறைவேறாது என்று அவன் இப்போது அசுரயாகம் செய்யப் போயிருக்கிறான். அது முடிந்து விட்டால் பிறகு நம்மால் அவனை ஜெயிக்க முடியாது. ஆனபடியால் உடனே அந்த யாகத்தை நாம் தடுத்து விட வேண்டும். சீதை இறந்தாள் என்று எண்ணி ஏமாந்து போகாதீர்கள். லக்ஷ்மணன் உடனே சென்று இந்திரஜித்தினுடைய வேள்வியைக் கலைத்துவிட வேண்டும்” என்று யோசனை சொன்னான்.
இந்த யோசனையே சரி என்று ஒப்புக்கொண்டு ராமசந்திரன் தம்பியை அனுப்பினான். அவனுடன் ஆஞ்சநேயனும் பல வானரர்களும் விபீஷணனும் சென்றார்கள்.
இந்திரஜித்து பூத கணங்களுக்குச் செய்ய விருந்த யாக பூமிக்குச் சென்றார்கள். வேள்வி தடைப்பட்டு அவ்விடம் வெகு நேரம் பெரும் யுத்தம் நடந்தது. தேரின்மேல் நின்று ராவணகுமாரன் பாணங்கள் செலுத்தினான். லக்ஷ்மணன் ஆஞ்சநேயன்மேல் நின்று பாணங்கள் செலுத்தினான். இருவரும் விற்போரில் நிபுணர்கள். ஒருவருக்கு ஒருவர் குறைந்தவர்களில்லை. நிகரற்ற திறமையுடன் வெகுநேரம் யுத்தம் நடத்தினார்கள். விபீஷணன் லக்ஷ்மணனுக்கு உற்சாகம் ஊட்டிக் கொண்டு நின்றான். இந்திரஜித்தின் தேர் அழிந்தது. பிறகு தரையில் நின்று இருவரும் போர் செய்தார்கள். முடிவில் லக்ஷ்மணன் இந்திராஸ்திர மந்திரம் சொல்லி ராமன்மேல் ஆணையிட்டுப் பாணத்தைச் செலுத்தினான். இந்திரஜித்தின் தலை அறுபட்டு ஜொலித்துக்கொண்டு தரையில் விழுந்தது. தேவதானவ கந்தர்வர்கள் ஆகாயத்திலிருந்து புஷ்ப மாரி பெய்தார்கள்.
இந்திரஜித்தை வீழ்த்தி விட்டு லக்ஷ்மணன் ராமன் இருந்த இடம் சென்றான். உடம்பெல்லாம் காயம் பட்டு ரத்தம் பெருகிய நிலையில் லக்ஷ்மணன் மெள்ள ஜாம்புவான் ஹனுமான் இவர்கள் பேரில் சாய்ந்து நடந்தான். இந்திரஜித்தின் வதத்தையறிந்த ராமன், தம்பியை ஆலிங்கனம் செய்து, “லக்ஷ்மணா! இராக்ஷஸ குலம் மடிந்தது” என்று சொல்லி மகிழ்ச்சி பரவசப்பட்டான். அடக்கத்துடன் ஒதுங்கி நின்ற லக்ஷ்மணனை ராமசந்திரன் தன் மடியின் மேல் உட்கார வைத்து, உச்சி மோந்து தன் ஆனந்தத்துக்குப் போக்கு விட்டுப் பேசலானான்: “ஒருவராலும் செய்ய முடியாத வீரச்செயலைச் செய்து தீர்த்தாய். ராவணனுடைய வலது கை உன்னால் இன்று வெட்டப்பட்டது. விபீஷணனுக்கும் ஹனுமானுக்கும் உனக்கும் சமானம் யார்? இனி எனக்கு ஒரு கவலையுமில்லை. இந்திரனை ஜெயித்த வீரனை நீ ஜெயித்து வதம் செய்துவிட்டாய். சீதையை அடைந்து விட்டேன் என்றே எண்ணுகிறேன்” என்றான்.
இந்திரஜித்து லக்ஷ்மணனால் வதம் செய்யப்பட்டான் என்கிற செய்தி ராவணனுக்கு எட்டியது. “உன் மகனை விபீஷணனுடைய சகாயத்தைக் கொண்டு லக்ஷ்மணன் கொன்றான்” என்று சொல்லக் கேட்டதும் அவன் துக்கமும் கோபமும் சமுத்திரம் போல் பொங்கி, எரியும் சுடர் எண்ணெய்த் துளிகள் போல் கண்ணீர் விட்டான். அரக்க அரசனுடைய வாயினின்று புகையும் நெருப்புமாக மூச்சு வெளி வந்தது.
“ஐயோ! என் அருமைக் குழந்தாய்! ஒப்பற்ற வீரனே! மகேந்திரனை வென்ற சூரனே! யமன் வெற்றியடைந்து விட்டானா! நீ வீரசுவர்க்கம் அடைந்து விட்டாய். நான் துக்கப்படலாகாது!” என்றான்.
“இந்திரஜித்து மாண்டானா? உலகம் எனக்குச் சூன்யமாகிப் போய் விட்டது” என்றான் மறுபடியும்.
“மந்தோதரியையும் உன் பிரிய மனைவியையும் என்னையும் விட்டுப் போய் விட்டாயே! உன் பிரதிக்ஞையை நிறைவேற்றாமலும், பழி தீர்க்காமலும் எங்களை விட்டுப் போய் விட்டாயே!” என்று கதறினான்.
“இந்த விபத்துக்களுக்கெல்லாம் காரணமான ஜானகியைக் கொன்று விடுவதே நலம். என் குமாரன் மாயை செய்து சீதையைக் கொன்றதாகக் காட்டினான். இன்று உண்மைச் சீதையையே நான் வெட்டிக் கொல்லப் போகிறேன்” என்று கத்தி எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
சில மூர்க்க அரக்கர்கள் ராவணன் கோபமாகப் புறப்பட்டதைக் கண்டு சந்தோஷ ஆரவாரம் செய்தார்கள். ஆனால் சுபார்சவன் என்ற மந்திரி ராவணனைத் தடுத்தான்.
“மகாராஜனே! என்ன செய்யத் துணிந்தீர்! என்ன காரியம் செய்யப் போகிறீர்! தசக்ரீவா! குபேரனுடைய தம்பியாகிய நீர் ஒரு பெண்ணைக் கொன்று, அந்த அவமானத்தையும் தோஷத்தையுமா சம்பாதிக்கப் போகிறீர்? கோபத்தை இவ்விதத்திலா போக்கு விடுவது? வேதங்களை ஓதிச் சகல வித்தையும் கற்று விரதம் அனுசரித்த நீர் இப்படிச் செய்யலாகாது. உமக்கு நிகர் யார் ? யுத்தத்தில் உம்மை எதிர்ப்பவர்கள் யார்? யுத்தத்தில் வென்று சீதையைக் கிரமமாக அடைவீர். சந்தேகமில்லை. ராமன் பேரில் கோபத்தைச் செலுத்துவோம். இன்று சதுர்த்தசி. இரவு கழிந்தால் நாளை அமாவாசை. எல்லா பலத்தையும் கொண்டு லங்கையிலிருந்து புறப்பட்டு ராம லக்ஷ்மணர்களை வதம் செய்து வெற்றி பெறுவீர். பிறகு சீதையை அடைவீர். பிரம்மாவிடமிருந்து பெற்றிருக்கும் கவசத்தைத் தரித்து ரதம் ஏறிக் கிளம்புவீராக!” என்றான்.
சுபார்சவன் சொன்னதே ஹிதமென்று ராவணனும் ஒப்புக் கொண்டான்.
சிம்மாசனத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு கொஞ்ச நேரம் பேசாமல் யோசனையில் ஆழ்ந்த வண்ணமாக இருந்தான். பிறகு சேனைத் தலைவர்களுக்குக் கை கூப்பி, “நீங்கள் சகல பலத்துடனும் உடனே சென்று இந்த ராமனை வதம் செய்யுங்கள். உங்களால் முடியாவிட்டால் நானே சென்று அவனை ஹதம் செய்வேன்” என்றான்.
மலைகளைப் போன்ற ரதங்களிலும் யானைகள் குதிரைகள் ஏறியும் ராக்ஷச சேனை முழு பலத்துடன் யுத்தத்திற்குப் புறப்பட்டது.
வானரர்கள் கற் பாறைகளையும் மரங்களையும் பிடுங்கி எடுத்து ராக்ஷசர்களைப் பலமாகத் தாக்கினார்கள். ராக்ஷசர்களும் வானரப் படையைப் பலமாகத் தாக்கினார்கள். ரத்த வெள்ளம் ஆறாகப் பெருகிற்று. வானரர்கள் தாவித் தாவி அரக்கர்களையும் அவர்கள் ரதங்களையும் வாகனங்களையும் ஆயுதங்களையும் ஒடித்தும் அறுத்தும் கிழித்தும் துவம்சம் செய்தார்கள். ஒவ்வொரு ராக்ஷசனையும் அநேக வானரர்கள் சூழ்ந்து கொண்டு கொன்றார்கள்.
ராக்ஷசர்களும் வானரர்களைச் சும்மா விடவில்லை. பலமாகத் தாக்கிப் பதினாயிரக் கணக்கில் கொன்றார்கள்.
ராமன் தன் வில்லை வளைத்து அரக்கர்கள் பேரில் சரமாரி பொழிந்தான். நெருப்பைப் போல் ராக்ஷச சேனையை அவன் பாணங்கள் எரித்தன. தங்களுடைய சகாக்கள் விழுந்து மடிவதைத்தான் கண்டார்கள்; அம்பு மழையில் ராமனை அவர்கள் காணவில்லை. அநேக ராமன்களைக் கண்டார்கள். எங்கும் அவனைக் கண்டார்கள், எண்ணற்ற ராக்ஷசர்கள் மாண்டார்கள். எண்ணற்ற யானைகளும் குதிரைகளும் மடிந்தன. ரதங்கள் ஒடிந்தன. அரக்கர் சேனை அழிந்தது. எஞ்சினவர்கள் சிதறி ஓடினார்கள். தேவர்களும் கந்தர்வர்களும் சித்தர்களும் ராமனைக் கொண்டாடினார்கள். லங்கையில் ராக்ஷஸ ஸ்திரீகள் ஒரு வரையொருவர் கட்டிக்கொண்டு பெரும்கூக்குரலிட்டுப் பிரலாபித்தார்கள். ராவணனுடைய அறிவீனத்தால் இப்படி ஆயிற்றே என்று அழுதார்கள்.

கருத்துரையிடுக