துவாரகையில் ஒரு நாள் கண்ணபிரான் நகர்வலம் வந்தபோது, ”என்னை விட்டால் இந்த ஊரில் உயர்ந்த பக்தன் யாரு? தூக்கத்திலேயே கண்ணனின் நாமம் தான் என் வாயிலிருந்து வரும்!" என்று அர்ஜூனன் நெஞ்சு நிமிர்த்தி நடந்தான்.
அந்த வார்த்தைகள் கண்ணனின் காதில் விழுந்தன. அவன் புன்சிரிப்புடன் மனதிற்குள் சொன்னான், "அவனுக்கு கீதாபோதேசம் செய்தும் பிரயோஜனமில்லை போலிருக்கிறது. அவனுக்கு புத்தியை புகட்ட வேண்டியது தான். இன்று அந்த பாடம் தரும் நேரம் வந்தது.”
அர்ஜுனனை அழைத்தான் கண்ணன். "பார்த்தா! வா, காட்டுவழியே சிறிது பயணிப்போம்.”
அர்ஜுனன் மகிழ்ச்சியோடு தேரில் ஏறினான். "கண்ணா! நீயே பாரதப் போரில் என் சாரதி, இப்போதும் நீயே சாரதி! என்னே எனது பாக்கியம்!”
கண்ணன் புன்னகை மட்டும் செய்தான். உள்ளே என்ன நினைக்கிறான் என்று யாருக்கும் தெரியாது - அதுதான் அந்த மாயவனின் அழகு!
தேர் காட்டுவழியில் பறந்தது. ஒரு மரத்தடியில் ஒரு முனிவர் இருந்தார். வெள்ளை தாடி, ஒளிரும் நெற்றி, சாந்தம் தவழும் முகம். ஆனால்... கையில் கமண்டலமோ, வேதமோ இல்லை. ஒரு கூரிய கத்தியை சொரசொரவென்று இருக்கும் கல்லில் வைத்து சர்ர் சர்ர் என்று தீட்டிக் கொண்டிருந்தார்!
அர்ஜுனனுக்கு ஆச்சரியம் தாளவில்லை.
"கண்ணா! இதென்ன விந்தை! கமண்டலம் ஏந்த வேண்டிய முனிவர் கத்தியை தீட்டுகிறார். என்ன காரணம்? உனக்கு தெரியுமா?”
கண்ணன் முகத்தில் ஒரே ஒரு அலட்சிய புன்னகை. "எனக்கென்ன தெரியும் பார்த்தா! நானும் உன்னோடு தானே வருகிறேன். இப்போது அது தெரிந்து நமக்கென்ன ஆகப் போகிறது? நாம் போவோம், நம் வேலையை பார்த்துக் கொள்ளலாம்!”
ஆனால் அவன் கண்களில் ஒரு குறும்பு மினுங்கியது. ஏதோ செய்யத் தயாராகிவிட்டான். ஆனால் அர்ஜுனனுக்கு மட்டும் தெரியவில்லை!
அர்ஜுனன் அடம் பிடித்தான். "இல்லை கண்ணா! இந்த முனிவரிடம் கேட்காமல் என்னால் போக முடியாது.”
கண்ணன் தேரை நிறுத்தினான். இருவரும் கீழே இறங்கி, முனிவரை வணங்கினார்கள்.
"முனிவரே! தாங்கள் அமைதியாக இருக்க வேண்டியவர். ஆனால் கத்தி தீட்டுகிறீர்கள். என்ன காரணம்?" என்று பணிவோடு கேட்டான் அர்ஜுனன்.
முனிவர் கத்தியை நிறுத்தி, கண்களை திறந்தார். கோபத்தில் சிவந்த கண்கள்!
"அதுவா விஷயம்!" என்று முனிவர் ஆரம்பித்தார்.
"நாரதன் என்று ஒருவன் இருக்கிறான். வீணையை தோளில் போட்டுக்கொண்டு, ஈரேழு பதினான்கு லோகங்களிலும் 'நாராயணா நாராயணா' என்று திரிவான். சரி, அது அவன் இஷ்டம். ஆனால் என் பெருமான் நாராயணன் ஓய்வெடுக்கும் நேரம் என்றும் பார்க்காமல், வைகுண்டத்திற்கு நேரே போய், நாராயணா! நாராயணா! என்று கத்திக் கத்தி என் ஸ்வாமியின் தூக்கத்தை கெடுக்கிறான்!”
அர்ஜுனன் சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
"என் பெருமானிற்கு ஒரு நிமிடம் கூட ஓய்வு இல்லாமல் செய்தவனை விட மாட்டேன்! இந்தக் கத்தி அவனுக்காகவே தீட்டுகிறேன்!”
கண்ணன் தலையாட்டினான். "ஓஹோ! சரிதான். கிளம்புவோமா?”
முனிவர் கையை நீட்டி நிறுத்தினார். "இன்னும் கேளுங்கள்!”
"பிரகலாதன் என்று ஒரு சிறுவன். என் ஹரி எங்கும் இருக்கிறார், ‘தூணிலும் உள்ளான் துரும்பிலும் உள்ளான்’ என்று தன் தந்தைக்கு சொல்லி, எல்லா இடங்களிலும் என் ஸ்வாமியை வரவழைத்தான். ஒரு கணம் கூட சும்மா விடவில்லை!”
முனிவரின் குரல் நடுங்கியது.
"இங்கே இருக்கிறானா? அங்கே இருக்கிறானா? என்று கேட்டுக் கேட்டு, அவன் தந்தை காட்டும் இடம் எல்லாம் என் திருமால் இருக்க வேண்டியதாயிற்று. கடைசியில் 'தூணுக்குள் நீ வணங்கும் நாராயணன் இருக்கிறானா?' என்று அவன் தந்தை கேட்க, என் சுவாமி நரசிம்மராக அவதாரமெடுத்து அந்த தூணை உடைத்து வெளிவர வேண்டியதாயிற்று! அதுவரை ஒவ்வொரு தூணிலும் துரும்பிலும் என் பெருமானை மூச்சு விட முடியாமல் செய்தவனை, இந்தக் கத்தி தேடுகிறது!”
கண்ணன் மெல்ல தலையாட்டினான். "ஆமா, ஆமா. கிளம்பலாமா?”
"இன்னும் கேளுங்கள்!" மீண்டும் நிறுத்தினார் முனிவர்.
"திரௌபதி என்று ஒரு பெண். துச்சாதனன் எல்லோர் முன்னிலையிலும் சபையில் அவளின் சேலையை இழுத்தான். அந்த நேரத்தில் அவளுக்கு ஐந்து வீரர்கள் கணவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் மிக பலசாலிகளாம், அவர்களை கூப்பிட வேண்டியது தானே?”
முனிவர் பற்களை கடித்தார்.
"ஆனால் அவளோ நேரே கண்ணனை ‘கோவிந்தா காப்பாற்று’ என்று கூப்பிட்டாள்! அவனோ தன் கையில் ரத்தம் வழிய வழிய புடவை தந்தான். என் சுவாமி அவ்வளவு கஷ்டப்பட வேண்டியதாயிற்று! அவளும் என் கையில் சிக்கினால்…”
முனிவர் கத்தியை மேலும் தீட்டினார். சர்ர் சர்ர் சர்ர்!
கண்ணன் அவரை சாந்தப்படுத்த முயன்றான். "சரி சரி, அது புரிந்தது. இப்போது கிளம்பலாமா?”
"இன்னும் ஒருத்தன் இருக்கிறான்!" என்றார் முனிவர்.
கண்ணன் சற்று நகர்ந்தான். "முனிவரே, நீங்கள் நாலு பேர் சொன்னீர்கள். இனி…”
"அர்ஜுனன் என்று ஒரு பயல் இருக்கிறான்!”
அர்ஜுனன் திடுக்கிட்டான்.
"அவனை இதுவரை நான் பார்த்ததில்லை. ஆனால் கேள்விப்பட்டேன். உலகை படைத்து காக்கின்ற என் பரமாத்மாவையே, அந்தச் சிறுவன் தன் தேர் ஓட்டுபவனாக வைத்திருக்கிறானாம்!”
முனிவரின் குரல் கம்பீரமாக ஒலித்தது.
"மூன்று உலகங்களுக்கும் எஜமான் என் தெய்வம். அவரை ஒரு சிறுவனுக்கு தேரோட்டியாக்கிச் சேவகனாக்கியவன், என் கத்திக்கு காத்திருக்கிறான்! அந்த அர்ஜுனன் யோக்கியனா? அவன் செய்தது அன்பா? பக்தியா? அல்லது ஆணவமா?”
முனிவர் கத்தியை உயர்த்தினார்.
அர்ஜுனனின் முகம் வெளுத்தது. கண்ணனை திரும்பிப் பார்த்தான். கண்ணன் அமைதியாக நின்றிருந்தான். முகத்தில் ஒரு நுட்பமான புன்னகை மட்டுமே.
கண்ணன் மெல்ல அர்ஜுனனை நோக்கினான். கண்ணன் புன்சிரிப்புடன்,
"பார்த்தாயா அர்ஜுனா? நாரதர் என்னை நினைக்காமல் என் நாமம் சொல்லாமல் தூக்கமே வராது அவருக்கு! இரவும் பகலும் என் நாமம் மட்டுமே அவர் சுவாசம். அதுதான் என் தூக்கத்தை கெடுக்கிறது என்று இந்த ரிஷி நினைக்கிறார். ஆனால் உண்மை என்னவென்றால், நாரதரின் ஒவ்வொரு நாராயண நாமத்திலும் நான் விழித்திருக்கிறேன். ஏன்? ஏனென்றால் அந்த அன்பை அந்த பக்தியை தூங்கிக்கொண்டு கேட்பதற்கு எனக்கு மனமே இல்லை!”
அர்ஜுனனின் கண்கள் கலங்கின.
"பிரகலாதனோ ஒவ்வொரு அணுவிலும் என்னை நம்பினான். அவன் தந்தை நீ வணங்கும் உன் தெய்வம் இந்தத் தூணில் இருக்கிறானா என்று கேட்டான். அவன் என்னை அங்கே நம்பினான். நான் வர மறுக்கவா முடியும்? அவன் அழைப்பு என்னை வெளிக்கொண்டு வந்தது! அதற்கு பெயர் புண்ணியம் - பிரகலாதனுக்கும், என்னையும் நரசிம்மராக தரிசித்த உலகத்திற்கும்!”
கண்ணன் ஒரு நிமிடம் நின்றான். அவன் கண்களில் ஈரம்.
"திரெளபதி என்னைக் கூப்பிட்டாள். பலசாலியான ஐந்து கணவர்கள் இருக்கும்போதும் என்னையே நம்பினாள். அது அவமானமா? இல்லை. அது என்னை மட்டுமே தனது உண்மையான புகலிடம் என்று அவள் உணர்ந்தாள் என்பதன் அடையாளம். அவள் கை விரல்களின் ஒவ்வொரு ரேகையிலும் என் அன்பு பின்னி இருக்கிறது!”
முனிவர் தலை குனிந்தார். கண்களில் கண்ணீர்.
"உன்னைப் பற்றி சொல்கிறாயே அர்ஜுனா... என்னை தேர் ஓட்டுபவனாக வைத்தாய் என்று நீ நினைக்கிறாய். ஆனால் உண்மை என்னவெனில், உன் நம்பிக்கை என்னை அழைத்தது. உன் பக்தி என்னை கட்டிப்போட்டது. நான் தேர் ஓட்டியது என் தாழ்மையால் அல்ல... உன் அன்பின் கயிற்றால்!"
கண்ணன் அர்ஜுனனை நேரில் பார்த்தான்.
"அர்ஜுனா, நீ மட்டுமே என்னை நேசிக்கிறாய் என்று எண்ணாதே. இவரைப் போன்ற ஆயிரம் பக்திமான்கள் இந்த உலகில் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் என்னை ஒவ்வொரு விதமாக நேசிக்கிறார்கள். ஒருவர் வேத வேதாந்தங்களில் என்னை பார்க்கிறார், ஒருவர் நாம சங்கீர்த்தனத்தில் என்னை தேடுகிறார். ஒருவர் கண்ணீரில் என்னை கண்டுபிடிக்கிறார். ஒருவர் கோபத்திலேயே என்னை நேசிக்கிறார். ஒருவர் அமைதியில் என்னை அனுபவிக்கிறார். இந்த முனிவரைப் பார்! என் பக்தர்கள் என்னை கஷ்டப்படுத்துவதை பொறுக்கவே முடியவில்லை என்று கத்தி தீட்டுகிறார். இதுவும் என் மேல் கொண்ட அன்பு தானே?”
முனிவர் கத்தியை கீழே வைத்தார். கண்ணன் யாரென்று அறிந்தார். கைகளை கூப்பினார்.
"நான் அந்த கத்தியை யாரையும் குத்த தீட்டவில்லை. என் சுவாமி மேல் கொண்ட காதல் அவர்கள் என் சுவாமியை தொந்தரவு செய்யும் கோபத்தினால் தீட்டினேன். அவர் கஷ்டப்படுகிறார் என்ற ஆதங்கம் அது. கண்ணா! நீயே அந்த ஆதங்கத்தை புரிந்துகொண்டாய்!”
அர்ஜுனன் தலைகுனிந்தான்.
"கண்ணா! நான் அறிவீனன். ஏற்கனவே நீ உபதேசித்தும் என் சிற்றறிவு என்னை படுத்துகிறது. என் பக்தியே சிறந்தது என்று நினைத்தேன். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக உன்னை நேசிக்கிறார்கள். நாரதர் நாம சங்கீர்த்தனையில், பிரகலாதன் நம்பிக்கையில், திரெளபதி சரணாகதியில், இந்த முனிவர் கோபத்தில்... இவர்கள் எல்லோரின் அன்பும் உண்மையானது!”
கண்ணன் புன்னகைத்தான். அந்த புன்னகையில் காலங்களின் ஆழம் இருந்தது.
"பக்தி என்பது ஒரே வடிவமில்லை அர்ஜுனா. அது கண்ணீராக வரலாம், கோபமாக வரலாம், பாடலாக வரலாம், அமைதியாக வரலாம். ஆனால் அனைத்திலும் ஒரே ஒரு விஷயம் இருக்க வேண்டும். என்னிடம் உண்மையான பக்தி. அந்த பக்தி இருக்கும் இடத்தில் நான் இருக்கிறேன். எந்த வடிவத்தில் அழைத்தாலும் நான் வருவேன்!”
தேர் மீண்டும் கிளம்பியது.
அர்ஜுனன் இப்போது வேறொரு மனிதனாக உட்கார்ந்திருந்தான்.
முனிவர், கத்தியை மண்ணில் புதைத்துவிட்டு, கைகளை கூப்பிக்கொண்டு, "கோவிந்தா! கோவிந்தா!" என்று கண்ணீரோடு பாட ஆரம்பித்தார்.
காட்டில் கோவிந்த நாமம் எதிரொலித்தது.

கருத்துரையிடுக