‘ஆலிலையில் துயிலும் ஆரா அமுதே’… - கோமான் ஶ்ரீ பாலாஜி


நீரார் கடலும் நிலனும் முழுது உண்டு*
ஏர் ஆலம் இளந்தளிர் மேல் துயில் எந்தாய்!*
சீரார் திரு வேங்கட மா மலை மேய*
ஆரா அமுதே! அடியேற்கு அருளாயே.
திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி 1-10-3
கடல் சூழ்ந்த இந்த பூமி முழுவதையும், பிரளய காலத்தில் உன் வயிற்றில் வைத்துக் காத்து, அழகிய ஆல மரத்தின் இளந்தளிரில் குழந்தையாகத் துயின்ற என் தந்தையே! சிறப்பு மிக்க திருவேங்கட மலையில் எழுந்தருளியிருக்கும், என்றும் தெவிட்டாத அமுதமே!, அடியேனுக்கு அருள் புரிவாயாக.
"நீரார் கடலும் நிலனும் முழுது உண்டு”
பிரளய காலத்தில் இந்த உலகம் முழுவதும் நீரில் மூழ்கும். அந்நேரத்தில் கடலும், நிலமும், உயிர்களும் எல்லாமே அழிந்துவிடும் நிலை வரும். ஆனால் எம்பெருமான், எல்லாவற்றையும் தன் திருவயிற்றில் ஏற்று, காத்து, பாதுகாத்தான். இங்கு "உண்டு" என்பது சாப்பிட்டான் என்றல்ல - காத்தான், தன்னுள் வைத்தான் என்று பொருள். அவன் பரந்த சக்தியின் வெளிப்பாடே இது.
"ஏர் ஆலம் இளந்தளிர் மேல் துயில் எந்தாய்!”
உலகை வயிற்றில் வைத்துக் காத்தவன், ஒரு சிறு ஆலமரத்தின் இலையில் குழந்தையாகப் படுத்திருக்கிறான். உலகின் பாரத்தை சுமக்கும் பரம்பொருள், அதே நேரத்தில் ஓர் இளந்தளிரில் அப்பாவி குழந்தையாய் கண்வளர்கிறான். அவனது பரத்துவமும் (மேன்மை), சௌலப்யமும் (எளிமை) என இரண்டும் ஒன்றாகத் தோன்றும் இடம். "எந்தாய்" என்று ஆழ்வார் இங்கே ‘தந்தையே’ என்று அழைக்கிறார்.
“சீரார் திரு வேங்கட மா மலை மேய”
அந்த பரம்பொருள் இப்போது திருவேங்கட மலையில் சேவை சாதிக்கிறான். "சீரார்" என்றால் சிறப்புகள் நிறைந்த என்று பொருள். திருமலை வெறும் மலையல்ல. அது அவன் தேர்ந்துகொண்ட இடம். பிரளயத்தில் சர்வ சக்தியாய் இருந்தவன், இப்போது மலைமேல் நின்று அடியார்களுக்கு அருள் புரியவே எளிதில் காட்சி தருகிறான்.
"ஆரா அமுதே! அடியேற்கு அருளாயே.”
"ஆரா அமுதம்" — சாப்பிட சாப்பிட, அனுபவிக்க அனுபவிக்கத் தெவிட்டாத அமுதம். தேவர்கள் குடிக்கும் அமுதம் அவர்களுக்கு அமரத்துவம் கொடுக்கும். ஆனால் எம்பெருமான் ஆத்மாவையே நிறைக்கும் இந்த அமுதம் ‘ஆரா அமுதம்’. பக்தி அதிகரிக்க அதிகரிக்க, ஆசை மேலும் மேலும் பெருகும்.
"அடியேற்கு அருளாயே" முன்னர் பாசுரங்களில் "நான் பாவிகளில் தலைவன்" என்று தன்னை மிக மோசமானவன் என்று சொல்லி, அவன் அருளையே வேண்டுகிறார் ஆழ்வார். பிரளயம் போன்ற சிக்கலான நேரத்தில் உலகையே காத்து அருள் புரிந்த உனக்கு, என்னை ஆட்கொள்வதில் என்ன கஷ்டம்? என்ற உள்ளர்த்தமும் இதில் ஒளிந்திருக்கிறது.
சில சுவாரஸ்யமான அர்த்தங்கள் (வியாக்யானங்களிலிருந்து…)
அகடித கடனா சாமர்த்தியம்: இவ்வளவு பெரிய உலகங்களை ஒரு சிறு குழந்தை தன் வயிற்றுக்குள் வைத்துக்கொள்வது என்பது நினைத்துப் பார்க்கக் கூட முடியாத காரியம். ஆனால், அதை மிக எளிதாகச் செய்தவன் நம் எம்பெருமான். "உனக்கு முடியாதது ஒன்றுமில்லை, எனவே என் பாவங்களைப் போக்கி என்னை ரட்சிப்பதும் உனக்கு எளிதான காரியமே" என ஆழ்வார் இங்கே நயமாக வேண்டுகிறார். அதனால் தான் ஆலிலைப் பாலகனை இங்கு போற்றுகிறார்.
ஆராவமுது: உலகப் பொருட்கள் அனுபவிக்க அனுபவிக்கச் சலிப்பைத் தரும். ஆனால், திருவேங்கடமுடையான் 'ஆரா அமுது' — எவ்வளவு பார்த்தாலும், எவ்வளவு துதித்தாலும் சலிப்பு தட்டாத தித்திக்கும் அமுதம் போன்றவன். ஆழ்வாருக்ககு மட்டுமல்ல இப்பொழுதும் கூட நமக்கு அவன் தரிசனம் அடிக்கடி கிடைக்காதா என்ற ஏக்கம் வருமே. அந்த அளவிற்கு ஆரா அமுது அவன்.
திருமங்கையாழ்வாரின் உருக்கம்: பிரளயத்தில் உலகைக் காத்த உன்னால், சம்சாரக் கடலில் தவிக்கும் என்னை ரட்சிக்க முடியாதா? என்று உரிமையோடு இறைவனிடம் அருள் வேண்டுகிறார் ஆழ்வார்.
இந்தப் பாசுரத்தின் ஆழமான செய்தி இதுதான்: "மிகப் பெரியவன் — மிகவும் எளியவன்". உலகை விழுங்கிய பரம்பொருள், ஒரு சிறு ஆல மரத்தின் தளிரில் படுக்க எளிமை கொள்கிறான். அதே எம்பெருமான், திருமலையில் நின்று, தன்னை அடைய வரும் அடியவர்க்கு அருள் பொழிகிறான். ஆழ்வாரோ, அவனது சக்தியை போற்றி, அவனது எளிமையை நினைவுகூர்ந்து, "நீ என்னையும் ஆட்கொள்ள மட்டும் என்ன அரிது?" என்று அன்போடு வேண்டுகிறார்.
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.

11-04-2026

Post a Comment

புதியது பழையவை