அதிகப் பார்வை

ஒரு குறளாய் - கோமான் ஶ்ரீ பாலாஜி


திருமங்கையாழ்வார் அருளிய இந்தப் பாசுரம், காழிச்சீராம விண்ணகர் (சீர்காழி) எம்பெருமானைப் போற்றும் அற்புதப் படைப்பாகும். இதில் ஒன்று முதல் ஏழு வரையிலான எண்களை வரிசைப்படுத்தி, வேத நெறிகளையும் இசையையும் ஆழ்வார் இணைத்துள்ள விதம் மிக அழகு.

வாமன அவதாரத்தில் எம்பெருமான் சிறு குறள் (சின்னஞ்சிறுவனாக) வடிவினனாக வந்து, மகாபலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார். பின் பேருருவம் (திருவிக்கிரமன்) எடுத்து, இரண்டு அடியால் உலகளந்து, மூன்றாவது அடியால் மகாபலியை ஆட்கொண்டார். அப்படிப்பட்ட 'தாடாளன்' (பெரிய முயற்சி உடையவன்) எழுந்தருளியுள்ள ஊர் காழிச் சீராம விண்ணகர், என்று ஊரில் எழுந்தருளியுள்ள பெருமானைப் பற்றி அருளி அதோடு மட்டுமல்லாமல் 1 முதல் 7 வரை எண்களை எவ்வாறு அடுக்கியுள்ளார் என பார்ப்போம்.
ஒன்று: ஒரு குறளாய் - ஒப்பற்ற வாமன வடிவம் எடுத்த பெருமான்.
இரண்டு: ஈரடியால் உலகு ஒடுக்கி - இரண்டு அடிகளால் உலகை அளந்தது.
மூன்று: மூவடி மண் வேண்டி - மூன்று அடி நிலம் கேட்டது. மூன்றாவது அடியாய் மகாபலிச் சக்கரவர்த்தியை ஆட்கொண்டார்.
நான்கு: அருமறையின் திரள் நான்கும் - ரிக், யஜுர், சாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்களின் தொகுப்பு
ஐந்து: வேள்வி ஐந்தும் - ஐந்து யாகங்கள் : பிரம்ம, தேவ, பூத, பித்ரு, மனுஷ்ய யக்ஞம். அதாவது யாகம்.
ஆறு: அங்கங்கள் அவை ஆறும் - வேதத்தின் 6 அங்கங்கள்.
அவை முறையே
* சீட்சை: உச்சரிப்பு முறை.
* வியாகரணம்: இலக்கணம்.
* சந்தஸ்: செய்யுள் அமைப்பு.
* நிருத்தம்: சொல்லின் பொருள் விளக்கம்.
* ஜ்யோதிஷம்: காலம் அறிதல்.
* கல்பம்: சடங்குகளைச் செய்யும் முறை.
ஏழு: இசைகள் ஏழும் - ஏழு ஸ்வரங்கள்.
வேதங்களின் ஒலியும், யாகங்களின் புகையும், இயற்கையோடு கலந்த வேத இசை ஒலிகளும் நிறைந்த சீர்காழித் திருத்தலத்தில் வீற்றிருக்கும் தாடாளன் திருவடிகளைச் சென்று வணங்குங்கள் என்பதே இப்பாசுரத்தின் அழைப்பு. இப்பொழுது மறுபடியும் பாசுரத்தைப் படியுங்கள் மங்கை மன்னனின் தமிழ் ஆளுமையை போற்றுங்கள்.

26-03-2026

Post a Comment

புதியது பழையவை