செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

மா கேலரா விசாரமு? - துஷ்யந்த் ஸ்ரீதர்

“தான் வைகுண்டம் போகும் பொழுது, ராமர் தன்னோடு இருந்த அத்தனை ஜீவராசிகளையும் சேர்த்தே வைகுண்டம் அழைத்துக் கொண்டு போனார்” என தியாகராஜ ராமாயண சங்கீத உபன்யாசத்தைத் துவக்கினார் துஷ்யந்த் ஸ்ரீதர்.


“ராமருக்காகவே பிறந்தவர்னு சொல்லணும்னா குலசேகர ஆழ்வாரைத்தான் சொல்லணும். அவர் அப்படி ராமரை ஆராதிச்சிருக்கிறார், பாசுரங்களால்! குலசேகர ஆழ்வாரும் புனர்பூசம், ராமரும் புனர்பூசம்! என்ன பொருத்தம்!! 'எங்கள் குலத்து இன்னமுதே'ன்னு பிரபந்தத்துல குலசேகர ஆழ்வார் தாலாட்டிப் பாடற மாதிரியேதான், தியாகராஜரும் தாலாட்டி இருக்கார்.


“ஒய்யார லோக வையா”னு ராமரைத் தாலாட்டற அழகு இருக்கே! தியாகராஜர் தன்னோட ஒவ்வொரு பாட்டு வழியாகவும் ராமரோடவே பேசியிருக்கார்.


சீதையை, ராவணன் அபகரிச்சுண்டு போனப்பறம் ராமர் அழறார். அங்க இருக்குற ஒவ்வொரு புல்லுக்கிட்டேயும், பூக்கிட்டேயும், “என் சீதை எங்கே, எங்கே?”ன்னு கேட்டுக் கதறுகிறார். இதில் ஒரு பூ தெற்கு பக்கமா தன் தலையைத் திருப்பிக்கறது. கோதாவரியைப் பார்த்து, “சீதை எங்கே?”ன்னு கேட்கறார். அதுக்கு நன்றாகத் தெரியும். ராவணன்தான் சீதையைத் தூக்கிக்கொண்டு போனான்னு. ஆனாலும், ராவணனுக்குப் பயந்து அது வாயே திறக்கல.


அதனால அந்தக் காலப் பெரியவர்கள், “ராமர் கேட்ட பொழுது சீதை எங்கேன்னு கோதாவரி சொல்லல! அது எப்படி புண்ணிய நதியாகும்”னு கேட்பார்கள். ஆனால், ஸ்வாமி தேசிகன் சொல்றார்: “அதோட பேர்ல கோதா, அதாவது ஆண்டாள்னு இருக்கே! அதனால, கோதாவரியை மன்னித்து விடலாம்”னு!


ராமாயணத்துலேயே ரொம்ப டென்ஷனான பேர்வழி யார்னு பார்த்தா, அது சுக்ரீவன்தான். தன்னோட மனைவியை வாலி தூக்கிண்டு போய்ட்டானே! அவ எப்போ கிடைப்பான்னு புலம்பித் தள்றார். அதைக் கேட்டுவிட்டு ஹனுமார் வாக்கா தியாகராஜர் சொல்றார்: “ஹே அப்பா! க்ஷர சாகரத்துல இருப்பவரை நினை. அவர் உனக்கு ஓடோடி வந்து உதவி புரிவார்”னு கூறி, “க்ஷர ஸாகர சயனா” பாடறார்.


உடனே சுக்ரீவன் ஹனுமாரிடம், “அவர் மனிதர்களுக்குதான் உதவி பண்ணுவார். என்னைப் போன்ற மிருகங்களுக்கு எப்படி உதவி செய்வார்”னு கேட்கிறான். “அதெல்லாம் இல்லை. அவர் எல்லா உயிர்களுக்குமே உதவி பண்ணுவார்” என்கிறார். அப்போ ராமரும் லக்ஷ்மணரும் சேர்ந்து வருகிறார்கள். ராமர் ஹனுமாரைப் பார்த்து, “நீ யாருப்பா?”ன்னு கேட்க, “நான் சுக்ரீவனின் மந்திரி. ஹனுமார்னு பேர்.” அவரது பேச்சில் மனம் லயித்த ராமர் லக்ஷ்மணரிடம், “நான்கு வேதங்கள் கற்றவன் கூட இப்படிப் பேச முடியாது. என்னமா பேசறான் இவன். அவன் பேசற வார்த்தையிலேயே என்னைக் கவர்ந்துட்டான்” என்கிறார். தியாகராஜரோ, “ராமா! ஹனுமார் மாதிரி நான் படிக்கலேன்னு என்னைப் பற்றி நீ ஒண்ணுமே சொல்லாம இருக்கியா? நான் வந்தா என்கூட நீ பேசவே மாட்டியா ராமா?” எனக் கேட்கிறார்.  “ஆட மோடி கலதே ராமய்யா, மாடலாடி ஆட மோடி கலதே”ங்கறார். என்னோட பேச வான்னு அவர் பாடற அந்த வரில எப்படி ஒரு பக்திப் பரவசம்!


சுக்ரீவன் ஓடிவந்து ராம லஷ்மணரை வரவேற்று, “உன் பத்னியை மீட்பதில் நான் உதவி புரிகிறேன். என் பத்னியை மீட்க நீங்கள் உதவி புரிய வேண்டும்” என்கிறார். இதுதான் ராமாயணத்தோட இன்டர்வெல்லே. இங்கே ஒரு சஸ்பென்ஸ் இருக்கு, சுக்ரீவனோட இருந்த 70,000 குரங்குகளும், 'நாம் நிச்சயம் போர்ல ஜெயிச்சுடுவோமா?'ன்னு சந்தேகம் பொங்கக் கேட்டதாம். சுக்ரீவன் டக்குனு, 'எனக்கு எதுக்கு கவலை?' என்கிறார் தைரியமாக. அதையே தான் தியாகராஜரும், “மா கேலரா விசாரமு?” நான் எதுக்கு விசாரப்படணும் அப்படீன்னு கேட்கறார்.


பகவான் மேலே நம்பிக்கை உறுதியாயிட்டா, விசனம் எதுக்கு! கவலைங்கறதே இல்லைதானே!


தொகுப்பு - நளினி சம்பத்குமார்


நன்றி - தீபம் மார்ச் 2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக