நான்காவது ஸ்கந்தம் - பதினேழாவது அத்தியாயம்
ப்ருது பூமியைக் கறத்தல்
மைத்ரேயர் சொல்லுகிறார்:- பூமிதேவி இங்கனம் துதிசெய்தும் கோபம் தணியாமல் உதடு துடிக்கப்பெற்றிருக்கிற அம்மன்னவனைப் பார்த்துப் பயந்து தானே ஒருவாறு மனத்தை அடக்கிக்கொண்டு “ப்ருது சக்ரவர்த்தியே! கோபத்தை முழுவதும் அடக்கிக்கொண்டு நான் சொல்லுவதைக் கேட்பாயாக. வண்டு புஷ்பங்களினின்று தேனை ஆராய்ந்தெடுப்பதுபோல், பண்டிதனாயிருப்பவன் ஸமஸ்த வஸ்துக்களிலும் ஸாரத்தை க்ரஹிக்கவேண்டும். நன்மைகளை விரும்பும் புருஷர்களுக்கு அவை ஸித்திக்கும்பொருட்டு, உண்மையை உணர்ந்த முனிவர்கள் இவ்வுலகத்திற்குரிய க்ருஷி (விவசாயம்) முதலிய உபாயங்களையும் பரலோகத்திற்குரிய அக்னிஹோத்ரம் முதலிய உபாயங்களையும் கண்டுபிடித்து, அவற்றில் பரலோகத்திற்குரிய உபாயங்களைத் தாங்கள் அனுஷ்டித்தும் காட்டியிருக்கிறார்கள். முன்புள்ளோர் காட்டின அந்த உபாயங்களை ஒருவன் ச்ரத்தையுடன் அனுஷ்டிப்பானாயின், தான் விரும்பும் நன்மைகளை அனாயாஸமாகப் (கஷ்டமின்றி, எளிதாகப்) பெறுவான். அவற்றை அனாதரித்துத் (ஆதரிக்காமல்) தன் புத்தியால் சிலவற்றைக் கைப்பற்றிக் கார்யம் செய்வானாயின், அந்த உபாயாபாஸங்கள் (முறையற்ற வழிமுறைகள்) அடிக்கடி தொடங்கி நடத்தப்பெறினும் தடைபட்டு அவனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுக்கமாட்டாது.
மன்னவனே! முன்பு ப்ரஹ்மதேவன் இவ்வுலகத்தில் ப்ரஜைகளின் ஜீவனத்திற்காகவும் யாகாதி கர்மங்களின் மூலமாய் அடையக்கூடிய பரலோக ஸுகத்திற்காகவும் ஓஷதிகளைப் படைத்தான். அவற்றையெல்லாம் நன்னடத்தையில்லாத துஷ்டர்கள் (கொடியவர்கள்) அனுபவிப்பதைக் கண்டேன். உன்னைப் போன்ற லோகபாலர்கள் எவரும் அந்தத் துஷ்டர்களைத் தண்டித்து என்னை ஆதரித்துப் பாதுகாக்க நேராதிருந்தேன். உலகமெல்லாம் திருடர்கள் நிறைந்திருந்தார்கள். ஆகையால் “இவை யஜ்ஞாதி கர்மங்களுக்கு வேண்டும்” என்று நான் ஓஷதிகளை வெளியிடாமல் உள்ளடக்கிக் கொண்டேன். நெடுநாளானபடியால் அவை என்னிடத்தில் ஜீர்ணமாயின. நீ உபாயத்தினால் அவற்றை வெளிப்படுத்திக் கொள்வாயாக.
நீண்ட புஜதண்டங்களையுடைய வீரனே! பூதங்களைக் காப்பவனே! நீ உன் ப்ராணிகளுக்குப் பலம் கொடுக்கவல்ல அன்னத்தை விரும்புவாயாயின், பசுவின் உருவம் தரித்த எனக்குக் கன்றையும் கறக்கிறதற்குரிய பாத்ரத்தையும் கறக்கும் புருஷனையும் ஏற்படுத்துவாயாக. அப்பொழுது நான் கன்றின்மேல் ப்ரீதியால் உன் விருப்பங்களை நிறைவேற்றவல்ல பாலைக் கறப்பேன். வீரனே! மேகங்கள் பெய்கின்ற ஜலம் வர்ஷருது போன பின்பும் என்னிடத்தில் தங்கும்படி என்னை ஸமமாக்குவாயாக. ராஜனே! இவற்றால் உனக்கு க்ஷேமம் உண்டாகும்” என்று மொழிந்தாள்.
மன்னவன் ப்ரியமும் ஹிதமுமான பூமியின் வார்த்தையைக் கேட்டு ஸ்வாயம்புவ மனுவைக் கன்றாகவும் தன்கையைப் பாத்ரமாகவும் ஏற்படுத்திக்கொண்டு தானே கறக்கும் புருஷனாயிருந்து அந்தப் பூமியினிடத்தினின்று ஸமஸ்த ஓஷதிகளுக்கும் காரணமான பாலைக் கறந்தான். மற்றுமுள்ள அறிஞர்களும் அங்கனமே அந்தப் பூமியினிடத்தினின்று பாலைக்கறந்து ஸமஸ்த வஸ்துக்களுக்கும் ஸாரம் உண்டாகும்படி அவற்றில் இறைத்தார்கள். மற்றவர்களும் தங்கள் விருப்பத்தின்படி, ப்ருதுவினால் ஸ்வாதீனம் செய்யப்பட்ட அந்தப் பூமியைக் கறந்துகொண்டார்கள். ஸத்துக்களில் சிறந்தவனே! அவற்றின் விவரத்தைக் கேள்.
ரிஷிகள் ப்ருஹஸ்பதியைக் கன்றாகவும் இந்திரியங்களைப் பாத்ரமாகவும் ஏற்படுத்திக்கொண்டு வேதஸ்வரூபமான பாலைக் கறந்தார்கள். தேவதைகள் இந்த்ரனைக் கன்றாகக் கொண்டு ஸ்வர்ண பாத்ரத்தில் (தங்க பாத்ரத்தில்), வீர்யமென்கிற மனவலிவையும் ஓஜஸ்ஸென்கிற இந்த்ரியவலிவையும் பலமென்கிற தேஹவலிவையும் கொடுக்கவல்ல அம்ருதம் போன்ற பாலைக் கறந்தார்கள். அஸுரர்கள் ப்ரஹ்லாதனைக் கன்றாகக்கொண்டு இரும்பு பாத்ரத்தில் ஸுரையென்றும் ஆஸவமென்றும் சொல்லப்பட்ட இருவகையான பாலைக் கறந்தார்கள். கங்தர்வர்களும் அப்ஸரஸ்த்ரீகளும் விச்வாவஸு என்னும் கந்தர்வராஜனைக் கன்றாகக்கொண்டு குரலின் இனிமையையும் தேஹ ஸௌந்தர்யத்தையும் விளக்கவல்ல பாலைக் கறந்தார்கள். ச்ராத்தங்களில் ஆராதிக்கப்படும் தேவதைகளான பித்ருக்கள் அர்யமனைக் கன்றாகக்கொண்டு பச்சை மண்பாத்ரத்தில் தமது ஆஹாரத்தை விளைவிக்கவல்ல பாலைக் கறந்தார்கள். ஸித்தர்கள் கபிலரைக் கன்றாகக்கொண்டு ஆகாசமாகிற பாத்ரத்தில் நினைத்தவற்றை எல்லாம் கொடுக்கவல்ல அணிமாதிஸித்தி ரூபமான பாலைக் கறந்தார்கள். வித்யாதரர் முதலியவர் அந்தக் கபிலரையே கன்றாகவும் ஆகாயத்தையே பாத்ரமாகவும் கொண்டு ஆகாச கமனம் (ஆகாயத்தில் செல்வது) முதலிய வித்யைக்குக் காரணமான பாலைக் கறந்தார்கள். ஆச்சர்யமான உருவங்களைக் கொள்ளவல்ல கிம்புருஷர் முதலிய மற்றவர் அந்தர்த்தான சக்தி (மறையும் சக்தி), அற்புத உருவங்களைக் கொள்ளும் சக்தி இவைகளை விளைவிப்பதும் தாரணையென்னும் யோகத்தினால் விளையக் கூடியதுமான மாயைக்கிடமாகிய பாலைக் கறந்தார்கள். மாமிஸம் திண்பவர்களான யக்ஷர்களும் ராக்ஷஸர்களும் பூதங்களும் பிசாசங்களும் ருத்ரனைக் கன்றாகவும் கபாலத்தைப் பாத்ரமாகவும் கொண்டு ரக்தமாகிற பாலைக் கறந்தார்கள். படமுள்ளவைகளும் படமில்லாதவைகளுமான ஸர்ப்பங்களெல்லாம் தக்ஷகனைக் கன்றாகக்கொண்டு தங்களது வாயாகிற குஹையை பாத்ரங்களாக்கி விஷத்திற்குக் காரணமான பாலைக் கறந்தன. பசுக்கள் ருத்ரவாஹனமான வ்ருஷபத்தைக் கன்றாகக்கொண்டு அரண்யமாகிற பாத்ரத்தில் புல்லுக்குக் காரணமான பாலைக் கறந்தன. மாமிஸம் திண்பவைகளும் கோரைப் பல்லுடையவைகளுமான புலி முதலிய துஷ்டஜந்துக்கள் ஸிம்ஹத்தைக் கன்றாகக்கொண்டு தமது சரீரமாகிற பாத்ரத்தில் மாம்ஸத்திற்குக் காரணமான பாலைக் கறந்தன. பக்ஷிகள் கருடனைக் கன்றாகக் கொண்டு ஜங்கமமான (அசைபவைகளான) புழு முதலிய ஆஹாரங்களுக்கும் ஸ்தாவ்ரமான (அசையாதவைகளான) காய் பழம் முதலிய ஆஹாரங்களுக்கும் காரணமான பாலைக் கறந்தன. வ்ருக்ஷங்கள் ஆலமரத்தைக் கன்றாகக்கொண்டு தமது சரீரமாகிற பாத்ரத்தில் சாறாகிற பாலைக் கறந்தன. மலைகள் இமயமலையைக் கன்றாகக்கொண்டு தமது தாழ்வரைகளாகிற பாத்ரங்களில் கைரிகம் முதலிய தாதுக்களுக்குக் காரணமான பாலைக் கறந்தன.
ஸமஸ்த வஸ்துக்களும் ப்ருதுவினால் உதவிசெய்யப் பெற்றுத் தமது ஜாதியில் முக்யமானவற்றைக் கன்றாகக்கொண்டு தத்தமக்கு ஏற்பட்ட பாத்ரங்களில், விருப்பங்களையெல்லாம் கறக்கவல்ல பூமியிடத்தினின்று வெவ்வேறாகப் பாலைக் கறந்து கொண்டன. விதுரனே! இங்கனம் அன்னத்தை விரும்புகிற ப்ருது முதலிய அனைவரும் பாத்ரங்களையும் கன்றுகளையும் கறக்கிறவர்களையும் வெவ்வேறு ஏற்படுத்திக்கொண்டு தங்கள் தங்களுக்கு இஷ்டமான பாலைக் கறந்து கொண்டார்கள். பெண்ணிடத்தில் ப்ரீதியுடைய அம்மன்னவர் தலைவன் மனக்களிப்புற்று எல்லா விருப்பங்களையும் கறக்கின்ற அந்தப் பூமியைத் தன் பெண்ணாகப் பாவித்தான். பின்பு அந்த ராஜாதிராஜன் வல்லவனாகையால் தன் தனுஸ்ஸின் நுனியால் மலைச் சிகரங்களைச் சூர்ணம் (பொடி) செய்து பூமண்டலத்தைப் பெரும்பாலும் ஸமமாக்கினான். ப்ரஜைகளுக்கு ஜீவனம் கற்பித்துத் தந்தைபோல் பாதுகாப்பவனும் மஹானுபாவனுமாகிய ப்ருது பிறகு பூமியில் ஆங்காங்கு அவரவர்க்குரியபடி க்ராமங்கள், புரங்கள், பட்டணங்கள், பலவகைத் துர்க்கங்கள் (கோட்டைகள்), இடைச்சேரிகள், பசுக்கள் இருக்குமிடம், ஸேனைகள் இருக்கும் இடம், பொன் வெள்ளி முதலியன விளையும் இடம், பயிர் செய்பவர் வஸிக்கும் சேரிகள், மலையடிவாரங்களில் இருக்கும் க்ராமங்கள் ஆகிய பற்பல வாஸஸ்தானங்களை ஏற்படுத்தினான். இவ்வுலகத்தில் ப்ருதுவுக்கு முன்பு பட்டணம், க்ராமம் முதலிய ஏற்பாடு இல்லாமலேயிருந்தது. அந்த ப்ருது ஏற்படுத்தின க்ராமம், பட்டணம் முதலிய இடங்களில் ஆங்காங்கு ப்ரஜைகள் எவ்விதத்திலும் பயமின்றி ஸுகமாக வாஸம் செய்து வந்தார்கள்.
பதினோழாவது அத்தியாயம் முற்றிற்று.