நான்காவது ஸ்கந்தம் – பதினாறாவது அத்தியாயம்
(ப்ருது பூமியை வதிக்கத் தொடங்குகையில் பூமி அவனை ஸ்தோத்ரம் செய்தல்)
மைத்ரேயர் சொல்லுகிறார்:- மஹானுபாவனாகிய அந்த ப்ருது மன்னவன் இவ்வாறு தன் குணங்களையும் செயல்களையும் ஸ்துதி பாடகர்களால் புகழப்பெற்றவனாகி அவர்களை ஆடை ஆபரணம் முதலியவைகளால் ஸம்மானித்து அவர்கள் செய்த ஸ்தோத்ரத்தையும் அபிநந்தித்து (பாராட்டி) ஸந்தோஷப்படுத்தினான். அவன் ப்ராஹ்மணர் முதலிய நான்கு வர்ணத்தவர்களையும் ப்ருத்யர்களையும் (சேவகர்களையும்) மந்திரிகளையும் புரோஹிதர்களையும் ஜனங்களையும் நன்கு வெகுமதித்தான்.
இங்கனம் மொழிந்த மைத்ரேயரைப் பார்த்து, “பூமி பலவகை உருவங்களைத் தரிக்கும் திறமையுடையதே. ஆயினும் எதற்காகப் பசுவின் உருவம் தரித்தது. அம்மன்னன் அந்தப் பூமியைக் கறக்கும்பொழுது எது கன்றாயிருந்தது? எதைப் பாத்ரமாகக் கொண்டான்? பூமி இயற்கையில் மேடும் பள்ளமுமாயிருப்பது. அதை அவன் எப்படி ஸமமாக்கினான்? இந்த்ரன் அவனது யாக குதிரையை ஏன் பறித்துக்கொண்டு போனான்? மஹானுபாவரே! அந்த ராஜர்ஷி, ப்ரஹ்மவித்துக்களில் சிறந்த ஸனத்குமாரரிடத்தில் தத்வஜ்ஞானத்தைப் பெற்று எந்த கதியை அடைந்தான்? இவன் அழகிய புகழுடையவனும் ஸமர்த்தனுமாகிய ஸ்ரீக்ருஷ்ண பகவானுடைய முதன்மையான அவதாரமல்லவா? ஆகையால் இவனுடைய புகழ் பரிசுத்தமாயிருக்குமே. இவனுடைய புகழ் மற்றும் ஏதேனும் உளதாயின், அதையும் எனக்கு மொழிவீராக; நான் பகவானிடத்திலும் அவனை உள்ளபடி அறிந்த உம்மிடத்திலும் பக்தியும் ப்ரீதியும் உடையவன். எனக்கு பகவான் ப்ருதுவாய் அவதரித்துப் பூமியைக் கறந்த வ்ருத்தாந்தத்தை உரைப்பீராக” என்று விதுரர் வினவினார்.
மைத்ரேயரும் அதைக்கேட்டு மனக்களிப்புடன் மறுமொழி கூறத் தொடங்கி விதுரனே! ப்ராஹ்மணர்கள் ப்ருதுவுக்குப் பட்டாபிஷேகம் செய்து ஜனங்களையெல்லாம் பாதுகாக்கும்படி நியமிக்கையில், பூமியிலுள்ள ப்ரஜைகளெல்லாம் ஆஹாரமின்றிப் பசியினால் தேஹம் (உடல்) இளைத்து ப்ரபுவாகிய அம்மன்னவனிடம் வந்து “ராஜனே! வ்ருக்ஷங்கள் பொந்தில் நெருப்புப் பற்றி எரிவதுபோல், நாங்கள் ஜாடராக்னியால் (நாம் உண்ணும் பதார்த்தங்களை ஜீரணிக்கக்கூடிய வயிற்றில் இருக்கும் நெருப்பினால்) தஹிக்கப்பெற்று ரக்ஷகனாகிய உன்னைச் சரணம் அடைந்தோம். எங்களுக்கு ஜீவனம் கற்பித்து எங்களைக் காக்கும் பொருட்டல்லவோ நீ ஏற்படுத்தப்பட்டாய். மன்னவர் தலைவனே! ஆகையால், பசியினால் பீடிக்கப்பட்டிருக்கிற எங்களுக்கு அன்னத்தை ஏற்படுத்திக் கொடுக்க நீ முயற்சி செய்வாயாக” என்று முறையிட்டுக் கொண்டார்கள். கௌரவச்ரேஷ்டனே! ப்ருது மன இரக்கத்திற்கிடமான ப்ரஜைகளின் புலம்பலைக் கேட்டு ஜனங்கள் ஆஹாரமின்றி வருந்துவதற்குக் காரணம் என்னவென்று நெடுநேரம் ஆலோசித்து அதைக் கண்டுபிடித்தான். அவன் உடனே கையில் தனுஸ்ஸை (வில்லை) ஏந்திப் பூமியின்மேல் கோபித்துப் பாணத்தைத் (அம்பைத்) தொடுத்தான். கையும் வில்லுமாய் நிற்கிற அம்மன்னவனைக் கண்டு பூமிதேவி பயந்து நடுங்கிப் பசுவின் உருவம் தரித்து வேடனால் தொடரப்பெற்ற பெண்மான் போல் ஓடினாள். ப்ருது மன்னவன் கோபித்துக் கண்கள் மிகவும் சிவக்கப் பெற்றுத் தனுஸ்ஸில் பாணத்தைத் (வில்லில் அம்பைத்) தொடுத்து அது ஓடுமிடமெல்லாம் தொடர்ந்தோடினான். பூமிதேவி திசைகளையும் அவற்றின் மூலைகளையும் ஆகாசம் பூமி அவற்றின் இடையிலுள்ள அந்தரிக்ஷம் ஆகிய இவற்றையும் பற்றி ஓடும்பொழுது அம்மன்னவனும் வில்லும் கையுமாய்த் தன்னை விடாமல் தொடர்ந்து வருவதைக் கண்டாள். ப்ரஜைகள் ம்ருத்யுவிடத்தில் பயப்படுவதுபோல் அந்தப் பூமி அவனிடத்தில் பயந்து உலகமெங்கும் திரிந்தும் கதியற்று மனவருத்தத்துடன் திரும்பி அம்மன்னவனை நோக்கி :- “மிகுந்த மதியுடையவனே! தர்மம் தெரிந்தவனே! வருந்தினவர்களிடத்தில் மன இரக்கமுடையவனே! நீ ப்ராணிகளைப் பாதுகாக்கையில் நிலை நின்றிருப்பவன். அத்தகைய நீ நிரபராதியும் மன இரக்கத்திற்கிடமுள்ளவளுமாகிய என்னை ஏன் வதிக்க விரும்புகின்றாய்? தர்மங்களை உணர்ந்தவனென்று பேர் பெற்ற நீ பெண்ணாகிய என்னை எங்கனம் வதிக்கலாகும்? ராஜனே! ஸாதாரண ஜனங்கள் கூட பெண்கள் அபராதம் செய்யினும் வதிக்கமாட்டார்கள். தீனவத்ஸலனான (ஏழை எளியவர்களிடம் பரிவு உடையவனான) உன்னைப் போன்றவரைப் பற்றிச் சொல்லவேண்டுமோ? என்னிடத்தில் ஜகத்தெல்லாம் நிலை நின்றிருக்கின்றது. நான் திடமான ஓடம்போல் மஹா ஜலத்தின்மேல் மிதக்கின்றேன். அப்படிப்பட்ட என்னைப் பிளந்து உன்னையும் இந்த ப்ரஜைகளையும் நீ எங்கனம் தரிக்கப்போகின்றாய்? ஆகையால் நீ என்னை வதிப்பது யுக்தமன்று (ஸரியன்று)” என்று மொழிந்தாள். அதைக்கேட்டு அம்மன்னவன் :- “பூமி! நீ எனது கட்டளையைக் கடக்கின்றாய். நீ யாகங்களில் ஹவிர்ப்பாகங்களை வாங்கிக்கொண்டு தான்யம் முதலியவற்றை கொடாதிருக்கின்றாய். ஆகையால் உன்னை வதிக்கப் போகிறேன். ஸாதுவான பசுவைத் தண்டிப்பது யுக்தமல்லவாயினும், தினந்தோறும் புல்லைத்தின்று மடியிலிருக்கிற பாலைக் கொடாமல் இறுக்கிக்கொண்டிருக்கும் துஷ்ட (கொடிய) பசுவைத் தண்டிப்பது யுக்தமே (ஸரியே). ஸ்ருஷ்டியின் ஆரம்பத்தில் ப்ரஹ்மதேவன் ப்ராணிகளின் ஜீவனத்திற்காக ஓஷதிகளையும் விதைகளையும் படைத்தான். நீ புத்திக்குறைவினால் என்னை அவமதித்து அவற்றை வெளியிடாமல் உள்ளடக்கிக் கொண்டிருக்கின்றாய். என் ப்ரஜைகள் ஆஹாரமில்லாமல் பசியினால் வருந்திப் புலம்புகிறார்கள். ஆகையால் உன்னை என் பாணங்களால் வதித்து உன் மாம்ஸத்தினால் இந்த ப்ரஜைகளின் துக்கத்தைப் போக்குகிறேன். புருஷனாவது ஸ்த்ரீயாவது நபும்ஸகனாவது (அலி) தம்மைத்தாமே வெகுமதித்து மதிகெட்டு ப்ராணிகளிடத்தில் மன இரக்கம் அற்றிருப்பார்களாயின், அவர்களை ஸ்த்ரீயென்றும் புருஷனென்றும் பேதம் பாராமல் ராஜாக்கள் வதிப்பது யுக்தம். அது அவர்களுக்குத் தோஷமாகாது. நீ மாயையினால் பசுவின் உருவம் தரித்திருக்கின்றாய்; அதிக கர்வம் கொண்டிருக்கின்றாய். இப்படிப்பட்ட உன்னை என் பாணங்களால் துண்டம் துண்டமாகத் துண்டித்து என்னுடைய யோகஸாமர்த்யத்தினாலேயே (யோகத்தின் ஆற்றலால்) ப்ரஜைகளையும் என்னையும் தரிக்கப் போகிறேன்” என்றான். இங்கனம் கோபங்கொண்டு யமனைப்போலப் பயங்கரனாயிருந்த அந்த ப்ருதுவுக்குப் பூமிதேவி நமஸ்காரம் செய்து நடுக்கமுற்றுக் கைகளைக் குவித்துக்கொண்டு “மாயையினால் தேவமனுஷ்யாதி பலவகைச் சரீரங்களைப் படைத்த பரமபுருஷன் நீயே. நீ ப்ரக்ருதியின் மூலமாய் ஸத்வாதி குண ஸ்வபாவமுடையவன். தேஹங்களில் ஆத்மாவென்னும் ப்ரமமும் (பொய்யான எண்ணமும்), தேஹத்தைப் பற்றினவைகளான போதல் வருதல் முதலிய செயல்களில் ஆத்மாவைச் சேர்ந்தவையென்னும் ப்ரமமும், “நான் செய்கிறேன்” என்னும் கர்த்ருத்வப்ரமமும் அவற்றைத் தொடர்ந்த பசி தாஹம் முதலிய ஊர்மிகளும் உனக்குக் கிடையாது. ஸ்ருஷ்டிகர்த்தாவாகிய உன்னால் நான் ப்ராணிகளுக்கு ஆதாரமாகப் படைக்கப்பட்டேன். தேவ மனுஷ்யாதி ப்ரபஞ்சமெல்லாம் என்னிடத்தில் வஸிக்கின்றது. அப்படிப்பட்ட நீயே என்னைக் கையில் ஆயுதத்தைக்கொண்டு வதிக்கமுயன்றாய். நீ ஸ்வதந்த்ரன். இனி நான் யாரைச் சரணம் அடைவேன் ? உன்னை ஆதாரமாகவுடையதும் இத்தகையதென்று சிந்திக்கமுடியாததுமாகிய உன் மாயையினால் சேதன அசேதன ரூபமான இந்த ப்ரபஞ்சத்தையெல்லாம் நீயே படைத்தாய். அப்படிப்பட்ட நீயே அவற்றைக் காக்க முயன்றிருக்கின்றாய். ப்ரஜைகளைப் பாதுகாக்கையாகிற தர்மத்தில் நிலைநின்றிருக்கிற நீ என்னை ஏன் கொல்ல விரும்புகின்றாய்? மனத்தை அடக்கி உன்னைப் பணியாதவர்களுக்கு உன் மாயையை வெல்லமுடியாது. ஈச்வரனாகிய நீ அத்தகைய மாயையைக்கொண்டு செய்ய நினைப்பதை ஒருவரும் அறியவல்லரல்லர். நீ இயற்கையில் ஒருவனேயாயினும் ப்ரஹ்ம ருத்ராதி ஜீவாத்மாக்களைச் சரீரமாகவுடையவனாகி அந்தச் சரீரபேதத்தினால் பலவாறாயிருக்கின்றன. மஹத் தத்வம் முதல் ப்ருதிவி வரையிலுமுள்ள ஸமஷ்டி ஸ்ருஷ்டியை (படைப்பை) நடத்தி ப்ரஹ்மதேவனையும் மரீசி முதலிய ப்ரஜாபதிகளையும் கொண்டு தேவமனுஷ்யாதி வ்யஷ்டி ஸ்ருஷ்டியையும் நடத்தின ஸர்வேச்வரன் நீயே. ப்ரக்ருதி, கர்மம், காலம், ஜீவன் என்கிற உன் சக்திகளைக் கொண்டு நீ ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களை நடத்துகின்றாய். நீ நினைத்த கார்யத்தை நடத்தக் கூடிய பற்பல விசித்ர சக்திகளுடையவன்; பரமபுருஷன்; ஜகத்காரணன். அப்படிப்பட்ட உனக்கு நமஸ்காரம். ப்ரபு! உன்னால் படைக்கப்பட்டதும் பூதங்கள் இந்திரியங்கள் மனம் இவை அடங்கினதுமாகிய ஜகத்தை நிலை நிறுத்தும் பொருட்டு, நீ பிறவியற்றவனாயினும் வராஹ உருவங்கொண்டு ஜலத்திற்குள் மூழ்கியிருந்த என்னைப் பாதாளத்தினின்று மேலுக்கெடுத்தாய். அங்கனம் ஆதிவராஹ உருவம் கொண்ட நீயே இப்பொழுது மஹா ஜலத்தின்மேல் ஓடம் போல் மிதந்துகொண்டிருக்கிற என்னிடத்தில் உள்ள ப்ரஜைகளைப் பாதுகாக்கும் பொருட்டு இவ்வாறு தோற்றினாய். அப்படிப்பட்ட நீ இப்பொழுது கோபத்தினால் உக்ரஸ்வரூபனாகிக் கூரான பாணத்தை ஏந்திக்கொண்டு என்னை வதிக்க விரும்புகின்றாய். வீரர்களான பற்பல துஷ்டர்களும் வராஹாதி உருவங்களைக் கொள்கின்ற உன்னால் ஸம்ஹரிக்கப்பட்டுப் பெரும்புகழ் பெறுகின்றார்கள். உன் மாயையால் மதிமயங்கப் பெற்ற என்னைப் போன்ற ஜனங்கள் அத்தகைய உன் கருத்தை அறியமாட்டார்கள். அப்படிப்பட்ட உன் அவதாரங்களுக்கு நமஸ்காரம்” என்றாள்.
பதினாறாவது அத்தியாயம் முற்றிற்று.