புதன், 12 பிப்ரவரி, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 93

நான்காவது ஸ்கந்தம் – பதினைந்தாவது அத்யாயம்

(ஸ்துதி பாடகர் முனிவர்களால் தூண்டப்பெற்று ப்ருது சக்ரவர்த்தியை ஸ்தோத்ரம் செய்தல்)

மைத்ரேயர் சொல்லுகிறார்:- வைதாளிகர்களும் (கவி, பாடகர்) வம்சாவளி படிப்பவர்களும் ஸ்துதிபாடகர்களும் அந்த ப்ருது சக்ரவர்த்தியின் வாக்காகிற அம்ருதத்தினுடைய பானத்தினால் மனக்களிப்புற்றவராகி, பகவானுடைய அம்சமான அந்த ப்ருதுவின் கல்யாண குணங்களை அறிந்த முனிவர்களால் தூண்டப்பெற்று அம்மன்னவன் இங்கனம் சொல்லிக்கொண்டிருப்பினும் அவனை ஸ்தோத்ரம் செய்தார்கள்.

ஸ்துதி பாடகர்கள் சொல்லுகிறார்கள்:- வாராய் மஹானுபாவனே! நாங்கள் உன்னுடைய மஹிமையை வர்ணிக்க வல்லரல்லோம். ஏனென்னில், நற்குணங்களால் விளங்கும் தன்மையரான ப்ரஹ்மதேவன் முதலிய தேவதைகளுக்கும் நீ தேவனாயிருப்பவன். கல்யாண குணங்களால் அவர்களைக் காட்டிலும் மேலாக ப்ரகாசிக்கும் தன்மையன். நீ உன்னுடைய ஸங்கல்ப ரூப ஜ்ஞானத்தினால் இங்கனம் அவதரித்தாய். நீ ஸமஸ்த கல்யாண குணங்களும் நிறைந்த பகவானேயன்றி வேறன்று. ஆகையால் உன்னுடைய மஹிமையை நாங்கள் எங்கனம் வர்ணிக்க வல்லராவோம்? “நீங்கள் சொல்லுவது யுக்தமே (ஸரியே). பகவானுடைய குணங்கள் எல்லையில்லாதவை ஆகையால் அவற்றை வர்ணிக்க வல்லரல்லீர். நான் மானிடனாகையால் என் குணங்களை ஏன் வர்ணிக்கவல்லரல்லீர்?” என்னில், சொல்லுகிறோம், கேட்பாயாக. நீ வேனனுடைய அங்கத்தினின்று உண்டானவனாயினும், எல்லையில்லாத கல்யாண குணங்கள் நிறைந்த பகவானுடைய அம்சமே. அத்தகையனான உன் பௌருஷங்கள் இவ்வகைப்பட்டவையென்று நினைக்கமுடியாதவை. அவற்றில் ப்ரஹ்மாதிகளுடைய புத்திகளும் ப்ரமிக்கின்றன. இனி, நாங்கள் அவற்றை வர்ணிக்க வல்லரல்லோமென்பதைப் பற்றிச் சொல்லவேண்டுமோ? நாங்கள் உன் மஹிமையை வர்ணிக்க வல்லரல்லோமாயினும், மிகுந்த புகழுடையவனும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அம்சாவதாரமுமாகிய உன்னுடைய கதையாகிற அம்ருதத்தைப் பானம் செய்வதில் ஆவலுடையவர்களாகிய நாங்கள் முனிவர்களால் உபதேசமாகத் தூண்டப்பெற்றவராகி ஸ்லாகிக்கத்(புகழத்) தகுந்தவைகளும் தோஷமற்றவைகளுமான உன் சரித்ரங்களை விரித்துச் சொல்லுகிறோம். 


இந்த ப்ருது சக்ரவர்த்தி வர்ணாச்ரமங்களைப் பற்றின தர்மங்களை அனுஷ்டிப்பவர்களில் சிறந்தவன். இவன் தான் எல்லாம் அறிந்தவனாயினும் தெரியாத லோகங்களை நல்வழியில் நடத்தும் பொருட்டுத் தன்னுடைய வர்ணாச்ரமங்களுக்கு ஏற்பட்ட தர்மங்களைச் சிறிதும் தவறாமல் அனுஷ்டித்து வருகின்றான். இவனுக்கு வர்ணாச்ரம தர்மங்களை அனுஷ்டிப்பதனால் ஆகவேண்டியது ஒன்றுமே இல்லை. ஆயினும், “நாம் தர்மங்களை அனுஷ்டிக்காதிருப்போமாயின், நம்மைப் பார்த்து ஒன்றும் தெரியாத ஜனங்களும் “நாமும் இவனைப்போலவே இருக்கவேண்டும். எல்லாம் தெரிந்த இவனே இங்கனம் செய்யாமலிருக்கின்றானே. நாம் ஏதுக்காகச் செய்யவேண்டும்? என்று நம்மைப் பார்த்து அழிந்து போவார்கள். ஆகையால் நாம் தர்மங்களை அனுஷ்டித்து ஜனங்களை அனுஷ்டிக்கச் செய்யவேண்டும்” என்னும் அபிப்ராயத்தினால் அவற்றைச் சிறிதும் தவறாமல் ஆசரித்து (செய்து)  வருகின்றானன்றி மற்றொரு காரணமும் இல்லை. இங்கனம் தன்னுடைய அனுஷ்டானத்தினாலும் தன் கட்டளையினாலும் ஜனங்களெல்லாரும் தம்தமது வர்ணாச்ரமங்களைத் தவறாமல் அனுஷ்டிக்கும்படி செய்கின்றான்; தர்மத்தை அனுஷ்டிக்கும் தன்மையுள்ள ஸாதுக்களைப் பாதுகாப்பவன்: தர்ம மர்யாதைகளை அழியாமல் நிலைநிறுத்தும் திறமையுடையவன்; அந்த தர்மத்திற்கு விரோதிகளான அஸாதுக்களை (கொடியவர்களை) தண்டிக்கும் தன்மையன்; இந்த ப்ருது தானொருவனே ஸுர்ய இந்த்ராதி லோக பாலர்களுக்கு அஸாதாரணமான குணங்களையெல்லாம் தன் தேஹத்தில் பாகம் பாகமாகப் பிரித்து இரண்டு லோகங்களுக்கும் ஹிதமாயிருக்கும்படி தரிக்கின்றான். இந்த லோகத்திலுள்ள ஜனங்களுக்குப் பாலன (காப்பாற்றுதல்) போஷணங்களாலும் (வளர்த்தல் என்றவற்றாலும்) பரலோகத்திலுள்ள தேவதைகளுக்கு யஜ்ஞாதி கர்மங்களாலும் ஹிதம் (நல்லது) செய்கின்றான். ஸுர்யன் எட்டு மாதங்கள் வரையில் வெயில் காய்ந்து பூமியினின்று ஜலத்தை இழுப்பதுபோல், இவன் கப்பம் வாங்கும் காலத்தில் ப்ரஜைகளிடத்தினின்று பணத்தை வாங்கிக் கொள்கின்றான். மழைகாலங்களில் ஸூர்யன் ஜலத்தைப் பெய்வது போல், துர்ப்பிக்ஷகாலத்தில் (பஞ்சம், மழையின்மை போன்ற காலங்களில்) ப்ரஜைகளின் க்ஷேமத்தின் பொருட்டுப் பணத்தைச் செலவிடுகின்றான். ஆதலால் இவன் ஸமஸ்த பூதங்களிடத்திலும் ஸமமாயிருப்பவன். மற்றும், இவன், மன இரக்கத்திற்கிடமான ஜந்துக்கள் தன் தலைமேல் காலை வைத்து மிதிக்கினும் அவற்றின் அதிக்ரமத்தைப் (எல்லை மீறுதலை) பொறுத்துக் கருணையே செய்வானாகையால் பூமியின் குணமுடையவன். பர்ஜன்யன் மழை பொழியாதிருக்கையில், இந்த்ரன்போல் மழைபொழியச் செய்து, ப்ராணன்களை இழக்கும்படியான ஆபத்தில் அழுந்தின ப்ரஜைகளைக் காப்பான். இவன் மன்னவனாய்த் தோன்றின மஹாவிஷ்ணுவே. இவன் ப்ரீதி அமைந்த கண்ணோக்கத்தோடு நிர்மலமான புன்னகையினால் அழகாயிருப்பதாகிய தன் முகமாகிற சந்த்ரனால் உலகத்தையெல்லாம் களிப்புறச் செய்வான். இவன் பிறர்க்கு அறியமுடியாத வழியும் செயலும் கருத்துமுடையவன்; பணத்தை அழிக்காமல் காத்துவைத்திருப்பவன் ; எல்லையில்லாத மஹிமைகள் அமைந்தவன்; குணங்களுக்கெல்லாம் முக்யமான இருப்பிடம்; ஜலதுர்க்காதிகளால் (அகழி, கோட்டை முதலியவற்றால்) தன்னை மறைத்துக் கொண்டிருப்பவன் ; ஆகையால் வருணன் போன்றவன். இவன் ப்ரதாபத்தினால் பிறர்க்கு அணுகமுடியாதவன்; அருகிலிருப்பினும் வெகுதூரத்திலிருப்பவன்போல் பொறுக்க முடியாதிருப்பவன்; வேனனாகிற அரணிக் கட்டையினின்று கடையப்பட்டவன்; ஆதலால் அக்னியைப் போன்றவன். இவன் சாரர்கள் (ஒற்றர்கள்) மூலமாய் ப்ராணிகளின் உள்ளும் புறமும் உள்ள செயல்களை அறிபவன்; அவர்களுக்குத் தேஹதாரணத்தை விளைப்பவனாயினும் (சரீரத்தைக் காப்பவனாயினும்) உதாஸீனன் (எதையும் பொருட்படுத்தாதவன்) போலிருப்பவன்; ஆதலால் வாயுவைப்போன்றவன். சத்ருவின் பிள்ளையாயினும் தண்டிக்கத் தகாதவனாயிருப்பின், அவனைத் தண்டிக்கமாட்டான். தன் பிள்ளையாயினும், அபராதம் செய்யின் அவனைத் தண்டித்தே தீருவான்; ஆதலால் யமனைப்போலப் பக்ஷபாதமின்றித் தர்மமார்க்கம் தவறாதிருப்பான். ஸுர்யன் தன் கிரணங்களால் விளங்கச் செய்கின்ற மானஸபர்வதம் வரையில் இவனுடைய ஆஜ்ஞையும் ரதமும் தடைபடாமல் நடக்கின்றன. இவன் மனத்திற்கினியவைகளான தனது நடத்தைகளால் உலகத்தையெல்லாம் களிக்கச் செய்வானாகையால் ப்ரஜைகள் இவனை ராஜனென்று சொல்லுவார்கள். இவன் நினைத்ததை அப்படியே நிறைவேற்றுவான். இவன் நினைப்பதெல்லாம் நல்லதாகவேயிருக்கும். இவன் ப்ராஹ்மணர்களுக்கு நன்மை செய்வான்; ஜ்ஞான வ்ருத்தர்களைப் பணிவான்; ஸமஸ்த ப்ராணிகளையும் பாதுகாத்து அவற்றிற்கு ஸம்மானம் செய்பவன்; தீனவத்ஸலன் (ஏழை எளியவர்களிடத்தில் பரிவு உடையவன்); பரஸ்த்ரீகளை மாதாவைப் போலவும், பத்னியைத் தன் சரீரத்தின் பாதிபாகத்தைப் போலவும் ப்ரஜைகளைத் தந்தையைப் போலவும் பார்ப்பான். வேதவாதிகளான பெரியோர்களுக்கு ப்ருத்யன் (சேவகன்)  போலிருப்பான், ப்ராணிகள் இவனிடத்தில் மிகுந்த ப்ரீதியுடையனவாயிருக்கும். இவன் காண்பவர்களுக்கு ஆனந்தத்தை வளர்ப்பான்; பற்றற்றவர்களிடத்தில் மிக்க பற்றுடையவன்; அஸத்துக்கள் விஷயத்தில் யமன் போலிருப்பவன். இவன் மஹாவீரனாகையால் தன் பலத்தினால் பூமியினின்று ஓஷதிகளைக் கறக்கப்போகிறான்; இந்த பூமியைத் தன் தனுஸ்ஸின் நுனியால் ஸமமாக்கப் போகிறான். ஆயிரம் சொல்லியென்ன? ஷாட்குண்யபூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்) விகாரமற்றவனும் மூன்று லோகங்களுக்கும் ப்ரபுவும் பரமாத்மாவுமாகிய ஸாக்ஷாத் பரமபுருஷனே தனது அம்சமாகிய ஜீவன் மூலமாய் இங்கனம் அவதரித்தான். பரமபுருஷனிடத்தில் தேவமனுஷ்யாதி பேதம் தோற்றினும், அது நமது அஜ்ஞானத்தினால் ஏறிடப்பட்டதேயன்றி வாஸ்தவமன்று; ஜீவனுக்கு தேஹ ஸம்பந்தத்தினால் விளையும் பால்ய யௌவனாதிகள் எங்கனம் ஸம்பந்திக்கிறதில்லையோ, அங்கனமே பரமபுருஷன் ஜீவன் மூலமாய் அவதரிக்கினும் அந்த ஜீவனுடைய தோஷங்களாவது சரீரதோஷங்களாவது அவனிடத்தில் ஸம்பந்திக்கிறதில்லை. ஆகையால் நிர்விகாரனான பரமபுருஷன் இம்மன்னவன் மூலமாய் அவதரித்தானென்பது எங்கனம் பொருந்துமென்று சங்கிக்கலாகாது. பரமபுருஷ ஸ்வரூபியும் மஹாவீரனுமாகிய இம்மன்னவர் தலைவன், உதயபர்வதம் வரையிலுள்ள பூமண்டலத்தையெல்லாம் காக்கப்போகிறான். இவன் ஜயத்தைக் கொடுக்கும்படியான ரதத்தில் ஏறித் தனுஸ்ஸைக் கையில் ஏந்தி ஸுர்யன்போல் பூமண்டலத்தையெல்லாம் வலம் செய்யப்போகிறான். அப்பொழுது இந்திரன் முதலிய லோகபாலர்களும் மன்னவர்களும் ஆங்காங்கு இவனுக்கு உபஹாரங்களைக் கொண்டு வந்து கொடுக்கப் போகிறார்கள். அவர்களுடைய பத்னிகள் இவனைச் சக்ராயுதம் தரித்த பரமபுருஷனாகவே நினைத்து இவனுடைய புகழைப் பாடப்போகிறார்கள். “இந்த ப்ருது மஹாராஜன் ப்ரஜைகளைப் பாதுகாக்க முயன்று அவர்களுக்கு ஜீவனோபாயம் கற்பிக்கும் பொருட்டுப் பசுவின் உருவம் தரித்த பூமியைக் கறந்தான். இவன் தனுஸ்ஸின் நுனியால் இந்த்ரன் போல் பர்வதங்களையெல்லாம் அவலீலையாகப் (விளையாட்டாகப்) பிளந்து பூமியை ஸமமாக்கினான். ஸிம்ஹம் வாலைத் தூக்கிக்கொண்டு திரிவதுபோல், இவன் ஆஜகவமென்கிற தன் தனுஸ்ஸை நாணேற்றி ஒலிப்பித்துக்கொண்டு சத்ருக்களால் பொறுக்க முடியாத பராக்ரமமுடையவனாகிப் பூமண்டலத்தில் திரியும் பொழுது அஸத்துக்கள் இவனிடத்தில் பயந்து திசைகள் தோறும் மறைந்து கொண்டார்கள். இவன், ஸரஸ்வதி நதிக்கு உற்பத்தி ஸ்தானமாகிய ப்ரஹ்மாவர்த்தமென்னும் தேசத்தில் நூறு அச்வமேத யாகங்கள் செய்ய வேண்டுமென்று ஸங்கல்பித்துக் கொண்டு தொண்ணூற்றொன்பது யாகங்களை முடித்து நூறாவது யாகத்தை நடத்துகையில், இந்த்ரன் குதிரையைப் பறித்துக்கொண்டு போனான். இவன் தன் க்ருஹத்திற்கு ஸமீபத்திலிருக்கிற ஓர் வனத்தில் சென்று அங்குத் தனியே எழுந்தருளியிருக்கிற ஸனத்குமார பகவானைப் பக்தியுடன் ஆராதித்து நிர்மலமான பரப்ரஹ்ம ஜ்ஞானத்தைப் பெற்றான்” என்று திக்பாலகர்களுடைய பத்னிகளும் ராஜாக்களுடைய பத்னிகளும் இம்மன்னவனைப் புகழப்போகிறார்கள். இவன் எங்கும் ப்ரஸித்தமான புகழுடையவன். மஹா பராக்ரமசாலி. இங்கனம் இவன் ஆங்காங்குத் தன்னைப் பற்றின பாசுரங்களைக் கேட்கப்போகிறான். உலகங்களுக்கு உபத்ரவம் (தொந்தரவு) செய்யும் துஷ்டர்களை (கொடியவர்களை) வேரோடு நாசம் செய்யப் போகிறான். இவனுடைய ஆஜ்ஞை (கட்டளை) எங்கும் தடையின்றி நடக்கப் போகின்றது. திசைகளையெல்லாம் ஜயிக்கப் போகின்றான். இவனுடைய வைபவம் மஹத்தானது. இதைத் தேவ ச்ரேஷ்டர்களும் அஸுர ச்ரேஷ்டர்களும் புகழ்ந்து பாடப் போகிறார்கள். இவன் பூமண்டலத்திற்கெல்லாம் ப்ரபுவாயிருக்கப் போகின்றான். 

பதினைந்தாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக