வியாழன், 6 பிப்ரவரி, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 92

நான்காவது ஸ்கந்தம் – பதினான்காவது அத்தியாயம்

(ப்ராஹ்மணர்கள் ராஜ்யத்தில் வேனனை அபிஷேகம் செய்தலும் அவன் அதர்மிஷ்டனாயிருப்பதைக் கண்டு ரோஷத்தினால் அவர்களே அவனைத் தமது தேஜஸ்ஸினால் (ப்ரகாசத்தினால், தவமஹிமையால்) வதித்தலும்.) 

மைத்ரேயர் சொல்லுகிறார்:- லோகங்களின் க்ஷேமத்தையே நினைக்கும் தன்மையரான ப்ருகு முதலிய ரிஷிகள் இங்கனம் விண்ணப்பம் செய்யப்பெற்றவராகி மனிதர்களைப் பாதுகாக்கும் திறமையுடைய மன்னவன் இல்லாது போவானாயின் ஜகத்தெல்லாம் தர்மத்தை இழந்து பசுவைப் போன்றதாகுமென்பதை ஆலோசித்து, வேதங்களை ஓதியுணர்ந்த மஹானுபாவர்களான அம்மஹர்ஷிகள் வீரனாகிய வேனனுடைய மாதாவான ஸுநீதையை அழைத்து அவளுக்குத் தெரிவித்து மந்த்ரி முதலியவர்களுக்கு அஸம்மதமாயிருப்பினும் வேறு கதி இல்லாமையால் வேனனையே பூமண்டலத்திற்கெல்லாம் நாதனாக அபிஷேகம் செய்தார்கள். கொடுந்தண்டனை செய்யும் தன்மையனான வேனன் ராஜாஸனத்தில் ஏறினானென்று கேட்டவுடன் திருடர் முதலியவர், ஸர்ப்பங்களிடத்தில் பயந்த எலிகள் போல் எங்கும் புலப்படாமல் ஒளிந்து கொண்டார்கள். அவ்வேனன் ராஜாஸனத்தில் ஏறினவுடன் அஷ்ட திக் பாலகர்களின் ஐச்வர்யங்களாலும் அணிமா முதலிய அஷ்ட ஐச்வர்யங்களாலும் (அணிமா முதலிய எட்டு பலன்கள் - அவையாவன

அணிமா - சரீரத்தை சிறிதாக்கிக்கொள்ளுதல் 
மஹிமா - பெரிதாக்கிக்கொள்ளுதல் 
லகிமா - லேசாகச் செய்தல் 
கரிமா - கனமாக்கிக்கொள்ளுதல் 
வசித்வம் - எல்லாவற்றையும் தன் வசமாக்கிக்கொள்ளுதல் 
ஈசத்வம் - எல்லாவற்றிற்கும் தலைவனாயிருத்தல் 
ப்ராப்தி - நிணைத்த பொருளைப் பெறுதல் 
ப்ராகாம்யம் - நினைத்தவிடம் செல்லும் வல்லமை)

கர்வமுற்றவனாகிச் சிறிதும் விவேகமின்றித் தன்னைத் தானே மேன்மையுடையவனாக பாவிப்பவனாகி மிகுந்த மதியுடையவனாகவும் மஹாபாக்யமுடையவனாகவும் நினைத்துக் கொண்டான். இங்கனம் ஐச்வர்ய மதத்தினால் கண் தெரியாத (இது செய்யலாம், இது செய்யலாகாதென்கிற விவேகமில்லாத) அவ்வேனன், மாவெட்டியில்லாத யானைபோல் அடக்குவாரில்லாமல் வழிதப்பி நடக்கின்றவனாகி ரதத்தில் ஏறிக்கொண்டு ஆகாயத்தையும் பூமியையும் நடுங்கச் செய்பவன் போன்று முழுவதும் உலாவினான். அவன் ஆங்காங்குள்ள அந்தணர்களை அழைத்து “வாரீர் ப்ராஹ்மணர்களே! யாகம், தானம், ஹோமம் இவைகளைச் செய்யலாகாது. எக்காலத்திலும் எவ்விடத்திலும் இந்த வ்யாபாரங்களைச் செய்யலாகாது” என்று பேரி வாத்யத்தை முழக்கி அனைவருக்கும் தர்மங்களைச் செய்யலாகாதென்று கட்டளையிட்டுத் தடை செய்தான். பிறகு ப்ருகு முதலிய முனிவர்களும் யாகம் செய்விப்பவர்களான ருத்விக்குகளும் பாவத்தொழிலனாகிய அவ்வேனனுடைய நடத்தையைக் கண்டு லோகங்களுக்கெல்லாம் வ்யஸனம் (கேடு) நேரிட்டதையும் ஆலோசித்து இரக்கத்துடன் இங்கனம் மொழிந்துகொண்டார்கள். 
“அடியிலும் நுனியிலுமாக இரண்டு பக்கங்களிலும் நெருப்புப்பற்றி எரிகின்ற கட்டையினிடையிலிருக்கின்ற எறும்பு முதலிய ஜந்துக்களுக்கு ஒரு பக்கத்திலும் போகமுடியாமல் இரண்டு பக்கத்திலும் ஆபத்தாயிருப்பது போல், ப்ரஜைகளுக்குத் திருடர்களிடத்தினின்றும் ராஜனிடத்தினின்றும் ஆக இரண்டு விதமாகவும் துக்கம் நேரிட்டது.  ராஜ்ய பரிபாலனம் செய்வதற்கு உரியவனல்லாதிருப்பினும் அராஜகத்தினால் விளையும் பயத்தைத் தீர்க்கும் பொருட்டு இந்த வேனனை ராஜனாக ஏற்படுத்தினோம். இப்பொழுது அந்த ராஜாவிடமிருந்தே பயம் உண்டாயிற்று. ஆகையால் இப்பொழுது ப்ரஜைகளுக்கு எவ்வகையில் க்ஷேமம் உண்டாகும்? பாம்புக்குப் பால் வார்த்து வளர்த்தால், அது வளர்த்தவனுக்கே அனர்த்தத்தை (கெடுதியை, ஆபத்தை) விளைக்கும். அங்கனமே இந்த வேனனை ராஜ்யத்தில் நாமே அபிஷேகம் செய்தோம். இவன் இப்பொழுது நமக்கே கெடுதியைச் செய்கின்றான். ஸுநீதையின் கர்ப்பத்தில் பிறந்தவனான இவ்வேனன் இயற்கையாகவே துர்ப்புத்தியுடையவன். நாம் இவனை ப்ரஜாபாலனாக (மன்னவனாக) ஏற்படுத்தினோம். அவனே ப்ரஜைகளைக் கொல்ல விரும்புகின்றான். ஆயினும் நாம் இவனை நல்வார்த்தை சொல்லி ஸமாதானப்படுத்திப் பார்ப்போம். தர்மத்தைச் சிறிதும் நிஷேதிக்கலாகாதென்று (தடைசெய்யக்கூடாது என்று) உரிய காரணங்களை அவனுக்குச் சொல்லுவோம். நாம் சொன்னதையும் அவன் கேளாமல் மீறி நடப்பானாயின், அவனுடைய பாபம் நம்மைத் தீண்டாது. நாம் இவனுடைய துஷ்டஸ்வபாவம் (கொடிய இயல்பு) தெரிந்திருந்தும் கெட்ட நடத்தையுடைய இவ்வேனனை ராஜனாகச் செய்தோம். நாம் அங்கனம் செய்தமைபற்றி இவன் ப்ராணிகளுக்கெல்லாம் துரோஹம் செய்கின்றான். நாம் இவனை நல்வார்த்தைகளால் வேண்டுவோமாயின், அவன் ஒருக்கால் அந்தப் பாவச் செயலினின்று மீண்டாலும் மீளலாம். அப்படி மீளாது மீறி நடப்பானாயின், அவனுடைய பாபம் அவனை மன்னவனாக ஏற்படுத்திய நமக்கு நேராது. அதர்மஞ்செய்யும் தன்மையனான இவ்வேனன் நமது வேண்டுகோளை அங்கீகரிக்காது போவானாயின், லோகங்களின் நிந்தையால் (உலகத்தின் வசையால்) தஹிக்கப் பெற்ற இவ்வேனனை நமது தவமஹிமையால் தஹித்து விடுவோம்” என்று ஒருவர்க்கொருவர் மஹர்ஷிகள் ஆலோசித்துக்கொண்டார்கள். அவர்கள் இங்கனம் நிச்சயித்துக் கோபத்தை அடக்கிக்கொண்டு இவனிடம் வந்து நல்வார்த்தைகளால் இவனை ஸமாதானப்படுத்தி இங்கனம் மொழிந்தார்கள்.

ரிஷிகள் சொல்லுகிறார்கள்:- வாராய் மன்னவர் தலைவனே! நாங்கள் விண்ணப்பம் செய்வதைக் கேட்பாயாக. நாங்கள் சொல்லும் வார்த்தை உன்னுடைய ஆயுள், ஐச்வர்யம், பலம், கீர்த்தி இவைகளை வளரச் செய்யும். ப்ராணிகள், வாக்கு மனம் சரீரம் இவற்றின் வ்யாபாரங்களால் பகவானுடைய ஆராதன ரூபமான தர்மத்தை ஆசரிப்பார்களாயின் (நடத்துவார்களாயின்), அந்த தர்மம் அங்கனம் தன்னை அனுஷ்டிக்கின்ற அந்த ஜனங்களை என்றும் துக்கமற்றவர்களாகச் செய்யும். அவ்வியாபாரத்தின் பலனில் பற்றின்றி ஆசரிப்பார்களாயின், அந்த தர்மம் எல்லையில்லாத மோக்ஷ ஸுகத்தையும் கொடுக்கும். வாராய் மன்னவனே! அங்கனம் லோகங்களுக்கு ஸுகத்தையும் மோக்ஷத்தையும் கொடுப்பதாகிய தர்மம் பாழாகாதிருக்குமாக. அந்த தர்மம் பாழடைந்து போகுமாயின், மன்னன் ஐச்வர்யத்தினின்று நழுவப் பெறுவான். வாராய் ராஜனே! துஷ்டர்களான மந்திரிகளிடத்தினின்றும் திருடர் முதலிய துஷ்டர்களிடத்தினின்றும் மன்னவன் ப்ரஜைகளை விதிப்படி பாதுகாத்துக் கொண்டு அவர்கள் செய்யும் பூஜையை அங்கீகரித்து இஹலோகத்திலும் பரலோகத்திலும் ஸுகித்திருப்பான். எந்த ராஜாவினுடைய தேசத்திலும் பட்டணத்திலும் வசிக்கிற ஜனங்கள் தத்தமது வர்ணாச்ரம தர்மங்களில் நிலைநின்று யஜ்ஞங்களில் கொடுக்கிற ஹவிஸ்ஸுக்களை புஜிப்பவனாகிய பரமபுருஷனைப் பஞ்ச மஹா யஜ்ஞாதியான (ப்ரஹ்ம,தேவ, பித்ரு, பூத, நர யஜ்ஞங்கள் என்று தினமும் செய்ய வேண்டிய ஐந்து கர்மங்கள் பஞ்ச மஹா யஜ்ஞங்கள் எனப்படும்) தம் தமது தர்மங்களால் ஆராதிக்கின்றார்களோ, வாராய் மஹா பாக்யமுடையவனே! அந்த ராஜன் தனக்குச் சாஸ்த்ரங்களில் விதித்த ப்ரஜாபாலனம் முதலிய கர்மங்களில் நிலைநின்றிருப்பான். அவனிடத்தில் ஸகல ஜகத்காரண வஸ்துவான பகவான் மிகவும் ஸந்தோஷம் அடைவான். “அங்கனம் பகவான் ஸந்தோஷம் அடைவதால் என்ன ப்ரயோஜனம்?” என்னில் சொல்லுகிறோம், கேட்பாயாக. 

உலகங்களுக்கெல்லாம் ப்ரபுவான ப்ரஹ்மதேவன் முதலிய ஸமஸ்த தேவதைகளுக்கும் ப்ரபுவான பகவான் ஸந்தோஷம் அடைவானாயின், லோகபாலர்களோடு கூடின ஸமஸ்த லோகங்களும் மிக்க ஆதரவுடன் இம்மஹானுபாவனுக்கு உபஹாரங்களைக் கொண்டு பணிசெய்யும். ஸமஸ்த லோகங்களையும் அந்த லோகங்களுக்கு அதிபதிகளான தேவதைகளையும் அந்த தேவதைகளோடொத்து வாழுந்தன்மையைக் கொடுக்க வல்ல யாகங்களையும் படைத்து அவற்றிற்கு நியாமகனாயிருப்பவனும் (நியமிப்பவனாகவும்) வேதஸ்வரூபனும் (வேதமே பகவான்; வேதத்தால் அறியப்படுபவன் பகவான்) வேதங்களைத் தவிர மற்ற எந்த ப்ரமாணத்தினாலும் அறிய முடியாதவனும் வேதங்களில் பூர்வபாகத்தில் சொன்ன யஜ்ஞாதி கர்மங்களுக்கும் மேல்பாகத்தில் சொன்ன உபாஸனங்களுக்கும் விஷயமாயிருப்பவனுமாகிய பகவானை உன் தேசத்திலுள்ள ஜனங்கள் தம்முடைய ஸம்ஸாரம் நீங்கும் பொருட்டும் உன்னுடைய க்ஷேமத்தின் பொருட்டும் த்ரவ்யம் , தேவதை முதலியவைகளால் விசித்ரங்களான யஜ்ஞங்களைச் செய்து ஆராதிக்கின்றனர். மன்னவனே! நீ அவர்களை அனுஸரித்திருப்பாயாக. அவர்கள் செய்யும் தர்மங்களைத் தடுக்கவேண்டாம். உன்னுடைய தேசத்தில் வஸிக்கின்ற ஜனங்கள் தர்மம் செய்வார்களாயின், அதனால் நீ இவ்வுலகத்தில் க்ஷேமமாயிருந்து கடைசியில் மோக்ஷத்தையும் பெறுவாய். ஆகையால் அவர்கள் செய்யும் தர்மத்திற்கு நீ ஸஹாயம் (உதவி) செய்யாமற் போயினும் தர்மம் செய்ய வேண்டாமென்று தடை செய்யாதிருப்பாயாக. வாராய் மஹாராஜனே! உன் தேசத்தில் வஸிக்கின்ற ப்ராஹ்மணர்கள் அனுஷ்டிக்கிற யாகங்களால் ஸ்ரீஹரியின் சரீரமாகிய இந்த்ரன் முதலிய தேவதைகள் சாஸ்த்ரத்தின்படி ஆராதிக்கப் பெற்று மனக்களிப்புற்று உன் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றிக் கொடுப்பார்கள். மன்னவனே! யாகாதி தர்மங்களை அனுஷ்டிக்கிற உன் தேசத்து ஜனங்களை தர்மம் செய்யலாகாதென்று தடுப்பாயாயின், அது அந்த இந்த்ராதி தேவதைகளை அவமதித்ததேயாம். அதனால் உனக்குக் கெடுதி உண்டாகும். ஆகையால் நீ அங்கனம் செய்வது யுக்தமன்று.

வேனன் சொல்லுகிறான்:- ஆ! என்ன ஆச்சர்யம்! நீங்கள் எல்லாம் அறிந்தவர்களென்று நினைத்திருந்தேன். நீங்கள் ஒன்றும் தெரியாத மூடர்களாயிருக்கின்றீர்களே! நிச்சயம். ஏனெனில், நீங்கள் அதர்மத்தை தர்மமென்று நினைக்கின்றீர்களே. அன்னம் முதலியவைகளைக் கொடுத்து உங்களுக்கு ஜீவனத்தை நடத்துகின்ற ப்ரபுவைத் துறந்து யஜ்ஞ புருஷனென்று ஒருவனைச் சொல்லிக்கொண்டு ஒருவிதத்திலும் உபகரிக்காத (நன்மை, உதவி செய்யாத) அவனை உபாஸிக்கின்றீர்கள். இது கணவனைத் துறந்து கள்ள புருஷனைத் தொடர்கின்ற மாதர்களின் நடத்தைபோல் இருக்கின்றது. எவர் மதிமயங்கப் பெற்று, ராஜாவாய்ப் புலப்படுகின்ற ஈச்வரனை அவமதிக்கின்றார்களோ, அந்த ஜனங்கள் இவ்வுலகத்திலும் பர உலகத்திலும் க்ஷேமம் பெறமாட்டார்கள்; துக்கத்தையே பெறுவார்கள், பர்த்தாவினிடத்தில் ஸ்னேஹமென்பது சிறிதுமின்றி அதை வெகு தூரத்தில் துறந்திருக்கின்ற கெட்ட மடந்தையர் ஜாரனிடத்தில் (கள்ள புருஷனிடத்தில்) பக்தி செய்வது போல், நீங்கள் எவனிடத்தில் இங்கனம் பக்தி செய்கின்றீர்களோ, அப்படிப்பட்ட யஜ்ஞபுருஷனென்பவன் யாவன்? அவன்  ஒருவனுமல்லன். வரம் கொடுக்கவும் சாபம் அளிக்கவும் ஸமர்த்தர்களான விஷ்ணு, ப்ரஹ்மதேவன், ருத்ரன், இந்த்ரன், வாயு, யமன், ஸுர்யன், பர்ஜன்யன், குபேரன், சந்த்ரன், பூமி, அக்னி, வருணன் ஆகிய இவர்களும் மற்றுமுள்ள தேவதைகளும் மன்னவனுடைய தேஹத்தில் வஸிக்கின்றனர். ஆகையால் மன்னவன் ஸமஸ்த தேவஸ்வரூபன். அந்தணர்களே! வஸ்துவின் நிலைமை இங்கனமிருக்கையால், நீங்கள் த்வேஷமின்றி என்னையே யஜ்ஞாதி கர்மங்களால் ஆராதிப்பீர்களாக. பலியையும் எனக்கே அளிப்பீர்களாக. அனைவர்க்கும் முன்னே புஜிக்கத் தகுந்தவன் என்னைக் காட்டிலும் மற்றொருவன் எவன் இருக்கின்றனன்?

மைத்ரேயர் சொல்லுகிறார்:- இங்கனம் விபரீத புத்தியுடையவனும் மிகவும் பாபிஷ்டனும் துர்மார்க்கத்தில் (தவறான பாதையில்) நடப்பவனுமாகிய அவ்வேனன் வெகுதூரம் நல்வார்த்தை சொல்லி வேண்டிக்கொள்ளினும் அந்த ரிஷிகளின் வேண்டுகோளின்படி அவன் அங்கீகரிக்கவில்லை. அவன் க்ஷேமத்தினின்று நழுவி அமங்களங்களுக்கு (நன்மையற்றவைகளுக்கு) இடமாகும் காலம் அருகாமையில் நேரப் பெற்றிருந்தான். ஆகையால் அவன் அம்மஹரிஷிகள் சொன்ன வார்த்தையை ஏற்றுக்கொள்ளவில்லை.

வாராய் விதுரனே! இங்கனம் தன்னைத் தானே பண்டிதனாக (எல்லாம் அறிந்தவனாக) பாவித்துக்கொண்டிருக்கிற அந்த வேனனால் அவமதிக்கப்பெற்ற அம்முனிவர்கள் லோகங்களுக்கெல்லாம் நன்மையை விளைக்கும்படியான தமது ப்ரார்த்தனையை அவன் அங்கீகரிக்காமையால் அது வீணானமை கண்டு அவன்மேல் மிகுதியும் கோபமும் கொண்டார்கள். “இவன் இயற்கையாகவே உலகங்களுக்கு ஹிம்ஸை செய்யுந்தன்மையன்; ஆனது பற்றியே மிகுந்த பாபிஷ்டன். ஆகையால் இந்த வேனனைக் கொல்லத்தகும். இனி இவன் பிழைத்திருப்பானாயின், சீக்கிரத்தில் ஜகத்தையெல்லாம் பஸ்மம் செய்துவிடுவான். இது நிச்சயம். துர்நடத்தையுடையனாகிய (கெட்ட நடத்தை உடையவனாகிய) இவ்வேனன் இனி ராஜாஸனத்திற்கு உரியவனல்லன். இவன் சிறிதும் வெட்கமின்றி யஜ்ஞபதியான பகவானையே நிந்திக்கின்றான். அமங்கள நடத்தையுடைய (கெட்ட நடத்தையுடைய) இந்த வேனனொருவனைத் தவிர மற்ற எந்த மனிதன் தான் அந்த விஷ்ணுவை நிந்திப்பான்? எவனுடைய அனுக்ரஹத்தினால் இவன் இப்படிப்பட்ட ஐஸ்வர்யத்தை அடைந்தானோ, அப்படிப்பட்ட விஷ்ணுவை இந்த துர்புத்தி (கெட்ட புத்தியுடையவன்) நிந்திக்கின்றான். இவனைக்காட்டிலும் மற்றொரு க்ருதக்னன் (நன்றி கெட்டவன்) எவன் இருக்கின்றான்?” என்று அம்முனிவர்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள். இங்கனம் அவனை வதிக்கவேண்டுமென்று நிச்சயித்துக் கொண்டிருக்கிற அந்த ரிஷிகள் கோபம் வேரூன்றப் பெற்றவராகி, விஷ்ணுவை நிந்தித்தமையால் தானே அடியுண்டு பாழாவதற்கு உரியவனாயிருக்கின்ற அவ்வேனனை ஹுங்காரங்களால் (ஹும் என்று சப்தம் செய்து) வதித்தார்கள். இப்படி அவர்கள் ஹுங்காரத்தினாலேயே வேனனைக் கொன்று தமது ஆச்ரமங்களுக்குப் போகையில், ஸுநீதை புத்ரசோகத்தினால் வருந்தி அவனுடைய சரீரத்தைத் (உடலை) தனது மந்த்ர வித்யையின் மஹிமையால் பாதுகாத்துக் கொண்டிருந்தாள். அம்முனிவர்கள் ஒருக்கால் ஸரஸ்வதீ நதியின் ஜலத்தில் ஸ்னானம் செய்து விடியற்காலத்தில் செய்யவேண்டிய அக்னிகார்யங்களை முடித்துக்கொண்டு அந்த ஸரஸ்வதி நதியின் கரையில் உட்கார்ந்து பகவானுடைய கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது பெரும் பெரிய உத்பாதங்கள் (பின்வரும் ஆபத்தை முன்னமே குறிக்கும் நிகழ்வுகள்) உண்டாவதைக் கண்டு  “இவற்றால் உலகங்களுக்கு என்ன பயம் உண்டாகுமோ?” என்று பயந்து வருந்தினவர்களாகி, “இப்பொழுது நாதனற்றிருக்கின்ற (ராஜா இல்லமல் இருக்கின்ற) பூமிக்குத் திருடர் முதலிய துஷ்டர் மூலமாய் எவ்வித கெடுதியும் உண்டாகாதிருக்குமா?” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இங்கனம் ரிஷிகள் சொல்லிக் கொண்டிருக்கையில், எல்லா திசைகளிலும் ஓடித்திரிந்து நாற்புறத்திலும் பணம் முதலியவற்றைக் கொள்ளையிடுகின்ற திருடர்களின் ஸஞ்சாரத்தினால் பெருந்தூள் கிளம்பிற்று. மன்னவன் மரணம் அடைகையில் தண்டிப்பார் இல்லாமையால் பயமின்றித் திருடர்கள் பணங்களையும் மற்றுமுள்ள விலையுயர்ந்த வஸ்துக்களையும் கொள்ளையிடத் தொடங்கினார்கள். லோகத்திலுள்ள ஜனங்களெல்லோரும் ஒருவரையொருவர் வதிக்கத் தொடங்கினார்கள். தேசங்களெல்லாம் ராஜனற்றவையாகித் திருடர்களே நிறையப் பெற்றிருந்தன. ஜனங்களெல்லோரும் உத்ஸாஹமின்றி லஹீனர்களாயிருந்தார்கள். இவ்வாறு உலகங்களுக்கு உபத்ரவம் (தீங்கு) நேரிட்டிருப்பதையும் தேசங்களெல்லாம் பாழடைவதையும் கண்டு, வேனனைக் கொன்றாற்போல், ஹூங்காரத்தினாலேயே திருடர்களைக் கொல்ல வல்லவராயினும், அந்த ரிஷிகள் அதனால் தமக்குப் பாபம் நேரிடுமென்பதையும் “தம்மை அடிப்பவர்களையும் அடிக்காதிருக்கையே ப்ராஹ்மணர்களின் தன்மை” என்பதையும் ஆலோசித்து அத்திருடர்களைத் தடுக்காமல் வெறுமனே இருந்து விட்டார்கள். “ப்ராஹ்மணன் எல்லாம் பரப்ரஹ்மஸ்வரூபமேயென்று பார்க்கும் தன்மையனும் அதற்கு வேண்டிய சமம், தமம் முதலிய குணங்களோடு கூடினவனுமாயிருப்பினும், அநாதர்களான (காப்பாற்றுவாரில்லாத) தீனர்களை (ஏழை எளியவர்களை) உபேக்ஷிப்பானாயின் (பொருட்படுத்தாது இருப்பானாயின்), அவனுடைய தவம் நழுவிப்போகும். உடைந்த பாத்ரத்திலிருக்கும் ஜலம்போல், தீனர்கள் வருந்துவதைக் கண்டும் அவர்களைப் பாதுகாக்காமல் உபேக்ஷிக்கின்ற அந்தணனுடைய தவம் ஒழுகிப்போய் விடுமேயன்றி நிற்காது. ஆகையால் நாம் ஜகத்திற்குத் திருடர் மூலமாய் விளையும் பயத்தைப் போக்காமல் உபேக்ஷித்திருப்போமாயின், நமது தவம் சில்லிப்பானையில் ஜலம்போல் பாழாய்விடும். நாம் நேரே திருடர்களை வதிப்பதும் நம் தவத்திற்குக் கெடுதியே. ராஜரிஷியாகிய அங்கனுடைய இந்த வம்சம் இங்கனம் ஸந்ததியற்று முடிந்து போவதற்குரியதன்று. ஏனெனில், இந்த வம்சத்தில் பிறந்த ராஜாக்கள் ப்ரஹ்மருத்ராதி ஸகலதேவதைகளுக்கும் மேலான பகவானையே அவலம்பித்திருப்பவர்கள் (பற்றியிருப்பவர்கள்); ஆனதுபற்றியே வீணாகாத வீர்யமுடையவர். ஆகையால் இம்மன்னவனுடைய ஸந்ததி இவ்வளவோடு முடியாதிருக்குமாறு நாம் ப்ரயத்னம் செய்யவேண்டும். ஓர் மன்னவனை உண்டாக்கி அவன் மூலமாய் ஜகத்தையும் வாழ்வித்து அந்த வம்சத்தையும் அழிக்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” என்று அம்முனிவர்கள் ஆலோசித்தார்கள். அவர்கள் இங்கனம் ஆலோசித்து நிச்சயித்துக்கொண்டு மரணம் அடைந்த அவ்வேனனுடைய துடையை வலிவுடன் கடைந்தார்கள். அங்ஙனம் கடையப்பெற்ற துடையினின்று பாஹுகனென்று ஓர் மனிதன் உண்டானான். அவன் காக்கைபோல் கறுத்த உருவமுடையவனும், மிகவும் குள்ளமான அங்கங்களுடையவனும், குட்டையான கைகளும் நீண்ட கன்னங்களும், குட்டையான முகமும், அமுங்கின மூக்கின் நுனியும், சிவந்த கண்களும், சிவப்பு நிறமுடைய தலைமயிர்களும் அமைந்திருந்தான். அவன் மிகுதியும் மன இரக்கத்திற்கிடமாயிருந்தான். அவன் “நான் என்ன செய்யவேண்டும்?” என்று மொழிந்தான். அவனைக் கண்டு “இவன் ராஜ்யத்திற்குரியவனல்லன்” என்று நிச்சயித்துக் கொண்டு அவர்கள் அவனைப் பார்த்து “நிஷீத” (உட்கார்) என்று மொழிந்தார்கள். அப்பனே! அதன் பிறகு அம்மனிதன், ரிஷிகளால் “நிஷீத” என்று சொல்லப் பெற்றமையால் நிஷாதஜாதியனானான் (வேடஜாதியில் சேர்ந்தவனானான்). அந்த பாஹுகனுடைய வம்சத்தில் பிறந்தவர்களெல்லோரும் வேடர்களாகவே இருந்தார்கள். அவர்கள் மலையிலும், காடுகளிலும் திரிந்து கொண்டிருந்தார்களன்றிப் பட்டணத்திற்குள் நுழைந்தவரல்லர். ஏனெனில், பாஹுகன் பிறந்தவுடனே அவ்வேனனுடைய மஹத்தான பாபத்தையெல்லாம் தான் ஏற்றுக்கொண்டான் ஆகையால் அவனுடைய வம்சத்தில் பிறந்தவர்கள் அனைவரும் அவனுடைய பாப ஸம்பந்தத்தினால் அத்தகையராயிருந்தார்கள். அப்பால் ஸந்ததியற்ற அம்மன்னவனுடைய புஜங்களை ரிஷிகள் கடைந்தார்கள். அவற்றினின்று ஓர் ஆணும் ஓர் பெண்ணும் உண்டாயினர். ப்ரஹ்மவாதிகளான (வேதங்களை ஓதியுணர்ந்த) அந்த ரிஷிகள் அங்கனம் தோற்றின ஆண், பெண்களைக் கண்டு பகவானுடைய அம்சமென்று தெரிந்துகொண்டு மிகுந்த ஸந்தோஷத்துடன் இங்கனம் மொழிந்து கொண்டார்கள்.

ரிஷிகள் செல்லுகிறார்கள்:- இவன் பகவானுடைய அம்சமே. ஸ்ரீமஹாவிஷ்ணு ஜ்ஞானம் முதலிய குணங்கள் எல்லாம் நிறைந்தவனாகையால் நமது வருத்தங்களை அறிந்து உலகங்களைப் பாதுகாக்கும் பொருட்டுத் தன்னுடைய அம்சத்தினால் இங்கனம் அவதரித்தான். இந்தப் பெண்மணியும் அம்மஹாபுருஷனை விட்டுப் பிரிபவளல்லாத ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அம்சமே. இந்த ஆண்பிள்ளை அரசர்களில் முக்கியமானவனாயிருப்பான். இவன் தன் புகழ் பூமியெல்லாம் நிரம்பும்படி பெரிய க்ஷேமகார்யங்களைச் செய்வான். அதனால் பெரும் புகழுடையவனாவான்; ப்ருதுவென்னும் “பேருடைய மஹாராஜனாயிருக்கப் போகின்றான்”. இப்பெண்மணி அழகிய பற்களுடையவள். இவளுடைய மற்றைய அங்கங்களும் மிக்க அழகாயிருக்கின்றன; ஸ்த்ரீகளில் மேன்மையுடைய இவள் தேவதையே; மனுஷ்ய ஸ்திரீயன்று. இவள் குணங்களுக்கும் ஆபரணங்களுக்கும் ஒளி கொடுப்பவளாகி அர்ச்சிஸ்ஸென்னும் பேர் பெறுவாள். இவள் இந்த ப்ருது மஹாராஜனையே மணம் புரிந்து இவனையே அனுஸரித்திருப்பாள். ஸ்ரீமஹாவிஷ்ணுவே உலகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு தனது அம்சத்தினால் இந்த ப்ருது சக்ரவர்த்தியாகப் பிறந்தான். அந்த ஸ்ரீமஹாவிஷ்ணுவைத் தவிர மற்ற எவர்க்கும் உரியவளல்லாதவளும், அவனிடத்தில் மிக்க மன ஆக்கமுடையவளும், என்றும் அவனை விட்டுப் பிரியாதவளுமாகிய ஸ்ரீமஹாலக்ஷ்மியே இப்பெண்மணியாகப் பிறந்தாள். ஆகையால் இவள் இம்மஹாபுருஷனையே மணம்புரிந்து இவனையே அனுஸரித்திருப்பாள்.

மைத்ரேயர் சொல்லுகிறார்:- இங்கனம் அவ்வந்தணர் நிச்சயித்துத் தெரிந்து விஷ்ணுவின் அம்சமாகிய அந்த ப்ருதுவைப் புகழ்ந்தார்கள். கந்தர்வர்களில் சிறந்தவர் கானம் செய்தார்கள். ஸித்தர்கள் ஆகாயத்தினின்று புஷ்பங்களை தாரை தாரையாகப் பெய்தார்கள். ஸ்வர்க்கலோகத்து மடந்தையர் நர்த்தனம் செய்தார்கள். ஆகாயத்தில் சங்கம், ம்ருதங்கம் முதலிய வாத்யங்களும் பேரி வாத்யங்களும் மற்றும் பல வாத்யங்களும் முழங்கின. தேவதைகளும், ரிஷிகளும், பித்ருக்களும் கூட்டம் கூட்டமாய் அவ்விடம் வந்து சேர்ந்தார்கள். ஜகத்திற்கெல்லாம் ஹிதம் உபதேசிப்பவனாகிய ப்ரஹ்மதேவன் தேவதைகளோடும் தேவச்ரேஷ்டர்களான இந்த்ராதி லோகபாலர்களோடும் கூடி, அவ்விடம் வந்து வேனனுடைய புதல்வனாகிய ப்ருதுவின் வலக்கையில் பகவானுடைய அடையாளமாகிய சக்ரரேகையையும் பாதங்களில் பத்மரேகையையும் கண்டு “இவன் பகவானுடைய அம்சமே” என்று நினைத்தான். வேறு ரேகைகளோடு ஸம்பந்தப்படாமல் தனியே விளங்குகின்ற சக்ரரேகையை அடையாளமாக உடையவனும், பரமபுருஷனுடைய அம்சமுமாகிய அந்த ப்ருதுவுக்கு ப்ராஹ்மணர்கள் ப்ரஹ்மதேவனை முன்னிட்டுக் கொண்டு அபிஷேகம் செய்யத் தொடங்கினார்கள். ஜனங்கள் அபிஷேகத்திற்கு வேண்டிய ஸம்பாரங்களையெல்லாம் (பொருட்களையெல்லாம்) ஸமஸ்த திசைகளினின்றும் இந்த ப்ருதுவுக்காகக் கொண்டு வந்தார்கள். நதிகளும், ஸமுத்ரங்களும், பர்வதங்களும், ஸர்ப்பங்களும், பசுக்களும், பக்ஷிகளும், ஆகாயமும், பூமியும் ஆகிய ஸமஸ்த பூதங்களும் அபிஷேக மஹோத்ஸவத்தில் உபஹாரங்களைக் கொண்டு வந்தன. அந்த ப்ருது மஹாராஜன் அங்கனம் அந்தணர்களால் அபிஷேகம் செய்யப்பெற்று வெண்பட்டு முதலிய மேலான வஸ்த்ரங்களை உடுத்தி வைஜயந்தியென்னும் பூமாலையும் அணிந்து கிரீடம் முதலிய ஆபரணங்களும் பூண்டு அங்கனமே ஸமஸ்த அலங்காரங்களும் அணிந்த அர்ச்சிஸ்ஸென்னும் பார்யையுடன் (மனைவியுடன்), ஜ்வாலையோடு கூடின மற்றொரு அக்னிபோல் ப்ரகாசித்தான். வாராய்! வீரனாகிய விதுரனே! அந்த ப்ருதுவுக்குக் குபேரன் ஸ்வர்ணமயமாயிருப்பதும் சிறப்புடையதுமான ஓர் ஸிம்ஹாஸனத்தைக் கொடுத்தான். வருணன் ஜலம் பெருகப் பெற்றதும் சந்த்ரனோடொத்த ஒளியுடையதுமாகிய ஓர் குடையைக் கொடுத்தான். வாயு இரண்டு சாமரங்களையும், தர்மன் புகழை விளைவிப்பதான ஓர் மாலையையும், இந்திரன் சிறந்ததொரு கிரீடத்தையும், யமன் பாபம் செய்தவர்களை தண்டித்து நல்வழியில் மூட்டுவதான ஓர் தண்டத்தையும், நான்முகன் வேதஸ்வரூபமான ஓர் கவசத்தையும், ஸரஸ்வதி விலையுயர்ந்த ஓர் ஹாரத்தையும், ஸ்ரீஹரி ஸுதர்சன சக்ரத்தையும், அவனுடைய பத்னியாகிய ஸ்ரீமஹாலக்ஷ்மியானவள் அழிவில்லாத ஐச்வர்யத்தையும், ருத்ரன் சந்திரனுடைய உருவம் போன்ற உருவமுடைய பத்து அடையாளங்கள் அமைந்த ஓர் கேடயத்தையும், சந்திரன் அம்ருதம் பெருக்கும் தன்மையுடைய குதிரைகளையும், த்வஷ்டா (தேவதைகளின் தச்சன்) அழகியதான ஒரு ரதத்தையும், அக்னிதேவன் ஆடு, பசு இவற்றின் கொம்புகளால் செய்த ஓர் தனுஸ்ஸையும், ஸுர்யன் தன் கிரணங்களால் ஏற்பட்டவைகளும் கிரணம்போல் எல்லா இடங்களிலும் தடையின்றி நுழையும் தன்மையுடையவைகளுமான பாணங்களையும், பூமி யோகமயமான பாதுகைகளையும், ஆகாயம் தினந்தோறும் பூஜைக்குரிய புஷ்பத்தையும், ஸித்த, ஸாத்ய கந்தர்வாதிகள் நாட்டியத்தையும், அழகான ஸங்கீதத்தையும், வாத்யத்தையும் அந்தர்த்தான (மறையும்) சக்தியையும், ரிஷிகள் அவ்வப்படியே பலிக்கும்படியான ஆசீர்வாதங்களையும், ஸமுத்ரம் தன்னிடத்திலுண்டான மேலான சங்கத்தையும், நதங்களும், பர்வதங்களும், நதிகளும் தம்மில் தடையின்றி அவனுடைய ரதம் போகும்படியான மார்க்கத்தையும், மஹானுபாவனாகிய அந்த ப்ருது சக்ரவர்த்திக்குக் கொடுத்தார்கள். அப்பால் ஸுதர்களும் (புராணம் சொல்பவர்கள்) மாகதர்களும் (வம்சாவளி சொல்பவர்கள்) வந்திகளும் (மங்களம் சொல்பவர்கள்) அம்மன்னவனை ஸ்தோத்ரம் செய்யத் தொடங்கினார்கள், வேனனுடைய புதல்வனும் மிகுந்த ப்ரதாபமுடையவனுமாகிய அந்த ப்ருது மஹாராஜன், அங்கனம் தன்னைத் துதிசெய்ய முயன்ற ஸூத மாகத வந்திகளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே மேகத்தின் கர்ஜனம்போன்ற கம்பீரமான உரையுடன் மேல்வருமாறு கூறினான்.

ப்ருது சொல்லுகிறான்:- வாரீர், ஸூத மாகத வந்திகளே! நான் இப்பொழுதே இவ்வுலகத்திற்கு ராஜனானேன். என் குணங்கள் எவையும் இப்பொழுது வெளியாகவில்லை. அப்படியிருக்க, நீங்கள் எதைப்பற்றி என்னை ஸ்தோத்ரம் செய்யப்போகிறீர்கள்? நீங்கள் செய்யும் துதி என்னிடத்தில் எப்படி அமையும்? உலகத்தில் ப்ரஸித்தமான குணங்களன்றோ ஸ்தோத்ரத்திற்கிடமாகும். ஒரு குணமும் வெளியாகப் பெறாத என்னைக் குறித்து நீங்கள் செய்யும் துதி வீணேயாய் விடும். ஸ்தோத்ரத்திற்கு உரியவைகளான உங்களது வசனங்கள் என்னிடத்தில் பாய்ந்து வீணாக வேண்டாம். ஆகையால் காலாந்தரத்தில் (பிற்காலத்தில்) குணங்கள் வெளியான பின்பு என்னுடைய புகழ்களைப்பற்றி நன்றாக ஸ்தோத்ரம் செய்வீர்களாக. இனிய உரையுடைய ஸுதமாகத வந்திகளே! உத்தம ச்லோகனான பகவானுடைய குணங்களைத் துதிசெய்ய வேண்டியிருக்க, அத்தகையனல்லாத என்னைப் போன்றவனைப் பெரியோர்கள் துதிசெய்யப் பொறுக்க மாட்டார்கள். “குணங்கள் இப்பொழுது வெளியாகாமல் போயினும், வெளியாகப்போகிற குணங்களைப் பற்றித் துதி செய்வித்துக்கொள்ளலாமல்லவா?” என்னில், சொல்லுகிறேன், கேட்பீர்களாக. இப்பொழுது தன்னிடத்தில் இல்லாதவைகளான பெரியோர்களுடைய குணங்களைத் தன்னிடத்தில் காலக்ரமத்தில் ஸம்பாதித்துக் கொள்ள வல்லவனாயினும் ஸ்துதி பாடகர்களைக் கொண்டு அந்த குணங்களை எவன் ஸ்தோத்ரம் செய்வித்துக் கொள்வான்? எவனேனும் ஒருவன் தன்னிடத்தில் சில குணங்கள் க்ரமத்தில் நேரக்கூடுமென்று தெரிந்து அந்த குணங்களைப் பற்றித் தன்னை ஸ்தோத்ரம் செய்வித்துக் கொள்வானாயின், அவன் துர்ப்புத்தியனேயன்றி (கெட்ட புத்தி உடையவனேயன்றி) ஸத்புத்தியனன்று (நல்ல புத்தியுடையவனன்று). மற்றும், அவன் நிந்தைக்கிடமானவன் (வசைக்கு, பழிக்கு இடமானவன்). அவன் தனக்கு ஜனங்களால் நேரும் பரிஹாஸத்தை அறியாதவன். எல்லையில்லாத ஔதார்யம் முதலிய குணங்களையுடைய பெரியோர்கள் தம்மிடத்தில் மேன்மேலும் நற்குணங்களை விளைவித்துக்கொள்ள வல்லவராயினும் பெரும்புகழ் பெற்றவராயினும் தம்மைத் துதி செய்வித்துக்கொள்ள வெட்கமுற்றவராகி அற்பமான தமது பௌருஷத்தையும் அதைப்பற்றின ஸ்தோத்ரத்தையும் நிந்திப்பார்களன்றி ஒப்புக்கொள்ள மாட்டார்கள். 

வாரீர் ஸ்துதி பாடகர்களே! நான் இப்பொழுதே மன்னவனாக ஏற்பட்டேன். உலகத்தில் ஒருவர்க்கும் தெரிந்தவனல்லேன். புகழுக்கிடமான எவ்வித செயல்களையும் செய்தவனல்லேன். ஆகையால் நான் அறியாதவன்போல் என்னிடத்தில் இல்லாத குணங்களை ஏறிட்டுக்கொண்டு எங்கனம் ஸ்தோத்ரம் செய்வித்துக்கொள்வேன்? ஆகையால் நீங்கள் என்னைத் துதி செய்வது யுக்தமன்று (ஸரியன்று).

பதினான்காவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக