செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 91

நான்காவது ஸ்கந்தம் – பதிமூன்றாவது அத்யாயம்


ப்ருது சக்ரவர்த்தியின் சரித்ரம்


ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இங்கனம் மைத்ரேயர், த்ருவன் வைகுண்டலோகம் ஏறின வ்ருத்தாந்தத்தை மொழியக் கேட்டு, மேலும் பகவானிடத்தில் பக்தி வளரப்பெற்ற விதுரர் அந்த மைத்ரேயரைப் பார்த்து மேல்வருமாறு வினவத் தொடங்கினார்.


விதுரர் சொல்லுகிறார்:- பகவானுடைய சரித்ரங்களைத் தவிர மற்றெதையும் நெஞ்சிலும் நினைக்கலாகாதென்கிற வ்ரதம் மாறாதிருக்கப் பெற்றவரே! மைத்ரேய மஹர்ஷீ! ப்ரசேதஸ்ஸுக்களின் ப்ரஹ்மஸத்ரத்தில் (ப்ரசேதஸ் போன்ற ரிஷிகள் செய்யும் ப்ரஹ்மஸத்ரம் என்ற பல நாள் செய்யும் யாகத்தில்) நாரத முனிவர் த்ருவனுடைய மஹிமையைப் பாடினாரென்று நீர் சொல்லக் கேட்டேன். அந்த ப்ரசேதஸ்ஸ மக்கள் என்பவர் யாவர்? அவர் யாருடைய புதல்வர்? யாருடைய வம்சத்தில் பிறந்தவராகப் புகழ் பெற்றவர்? அவர்கள் எவ்விடத்தில் ப்ரஹ்மஸத்ரம் நடத்தினார்கள்? நாரதர் பாகவதர்களில் (பகவானிடத்தில் பக்தியுடையவர்களில்) சிறந்தவரென்று நினைக்கிறேன். தத்வோபதேசத்தினால் பகவானுடைய ஸாக்ஷாத்காரத்திற்கு உபாயமாயிருக்கின்றாரல்லவா? சேதன அசேதன தத்வங்களின் உண்மையையும் அவற்றிற்கு நிர்வாஹகனான (நியமிப்பவனான) ஈச்வரனுடைய உண்மையையும் அறிவித்து உலகமெல்லாம் பரமபுருஷனை ஸாக்ஷாத்கரிக்கும்படி செய்கின்றாரல்லவா? இவர் பஞ்சராத்ரம் (ஆகம சாஸ்த்ரம்) முதலிய சாஸ்த்ரங்களின் மூலமாய் பகவானை ஆராதிக்க வேண்டிய விதமாகிற க்ரியாயோகத்தை உலகங்களுக்கு உபதேசித்தாரல்லவா? அந்த நாரதர் பகவானிடத்தில் மிகுந்த பக்தியுடையவர். உலகத்திலுள்ளவர் அனைவரும் தத்தமது வர்ணாச்ரமங்களுக்கு உரியவைகளும் பகவானுடைய ஆராதன ரூபங்களுமான பஞ்ச மஹாயஜ்ஞாதி கர்மங்களை (ப்ரஹ்ம,தேவ, பித்ரு, பூத, நர யஜ்ஞங்கள் என்று தினமும் செய்ய வேண்டிய ஐந்து கர்மங்கள் பஞ்ச மஹா யஜ்ஞங்கள் எனப்படும்)  அனுஷ்டித்துக்கொண்டு யஜ்ஞங்களில் கொடுக்கிற ஹவிர்ப்பாகங்களைப் புசிப்பவனும் யஜ்ஞங்களுக்கு ப்ரபுவுமாகிய (யஜமானன், அதிகாரி) பகவானை ஆராதிக்க வேண்டுமென்று உலகங்களின் க்ஷேமத்திற்காக மொழிந்தார். (ஸமஸ்த யஜ்ஞங்களாலும் ஆராதிக்கப்படுமவனாகிய பகவானுடைய ஆராதனங்களே இவையென்னும் நினைவுடன் அனைவரும் தத்தமது வர்ணாச்ரமங்களுக்குரிய தர்மங்களை அனுஷ்டிக்க வேண்டுமென்று முறையிடுகிற பஞ்சராத்ரம் முதலிய க்ரந்தங்களை உலகத்திலுள்ளவர் அனைவரும் அறிந்து உஜ்ஜீவிக்கும்படி வெளியிட்டார். இப்படி மஹோபகாரம் செய்த அந்நாரத பகவானுடைய மேன்மையை என்னென்று சொல்லலாம்.) தேவ ரிஷியாகிய அந்த நாரத பகவான் ப்ரசேதஸ்ஸுக்களின் ப்ரஹமஸத்ரத்தில் எந்தெந்த பகவத் கதைகளை மொழிந்தாரோ, அவற்றையெல்லாம் கேட்க வேண்டுமென்று எனக்கு மிகவும் விருப்பமாயிருக்கின்றது. ஓ ப்ராஹ்மணோத்தமரே! அவற்றை எனக்கு மொழிவீராக.


மைத்ரேயர் சொல்லுகிறார்:- த்ருவனுடைய புதல்வன் உத்கலனென்பவன். அவன் தன் தந்தையாகிய த்ருவன் வனத்திற்குப் போகும் பொழுது பூமண்டலத்திற்கெல்லாம் ப்ரபுவாயிருக்கையாகிற பெரிய ஐச்வர்யத்தையும், ராஜ ஸிம்ஹாஸனத்தையும் விரும்பாமலே இருந்தான். அங்கனம் அவன் விரும்பாமைக்குக் காரணம் என்னென்னில், சொல்லுகிறேன் கேட்பாயாக. அந்த உத்கலன் பிறந்தது முதல் ராகாதி தோஷங்களால் (விருப்பு, வெறுப்பு முதலிய குறைகளால்) கலங்காத மனமுடையவனும் ஒன்றிலும் பற்றில்லாதவனும் (ஆசையில்லாதவனும்) எல்லாவற்றையும் ஸமமாகப்பார்க்கும் தன்மையனுமாகி, சரீரங்கள் தோறும் ஆத்மா உளனென்றும், அவன் அணுஸ்வரூபனென்றும் (மிகச்சிறிய உருவமுடையவன் என்றும்), ஆயினும் அவன் ஜ்ஞானத்தினால் அந்தச் சரீரங்களில் கால் முதல் தலைவரையில் வ்யாபித்திருப்பவனென்றும், சரீரங்களெல்லாம் அந்த ஆத்மாவால் தரிக்கப்பட்டவையென்றும் அறிந்து சரீரங்களில் ஆத்மாவையும், ஆத்மாவில் சரீரத்தையும் கண்டான். ஸ்வரூபத்தினால் அணுவாயிருப்பவனும் தர்மபூத ஜ்ஞானத்தினால் பெருமை உடையவனாகையால் ப்ரஹ்மமென்று கூறப்படுகின்றவனும் ஆனந்தஸ்வரூபனும் இயற்கையில் தேஹத்தினின்று விடுபட்டவனும் (தேஹஸம்பந்தமற்றவனும்) ஜ்ஞானமே முக்கிய ஸ்வரூபமாய் இருக்கப்பெற்றவனும் ஜ்ஞானமில்லாத பாகம் சிறிதுமில்லாதவனும் நித்ய ப்ரகாசனும் (எப்பொழுதும் ப்ரகாசித்துக்கொண்டிருப்பவனும்) ஆனந்த குணமுடையவனும் எவ்வகை விகாரங்களுமின்றி என்றும் அழியாதவனுமாகிய ஆத்மாவின் ஸ்வரூபத்தை அனுஸந்தித்துக்கொண்டு, என்றும் மாறாமல் தொடர்ந்து வருகின்ற அந்த ஆத்ம ஜ்ஞானயோகமாகிற அக்னியினால் புண்ணிய பாபரூபமான கர்மமாகிற அழுக்கெல்லாம் பஸ்மமாகப் பெற்று நிர்மலமான மனமுடைய அவ்வுத்கலன் ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டிலும் வேறுபட்டதும் புருஷார்த்தம் ஆகாததுமாகிய தேஹத்தையும் அதைத் தொடர்ந்த பிள்ளை பெண்டிர் முதலியவற்றையும் நினைக்காமலே இருந்தான். மூடன் குருடன் செவிடன் பித்தம்பிடித்தவன் ஊமை இவர்களோடொத்த வேஷமுடையவனும் புத்தியில் அவர்களோடு ஒவ்வாதவனுமாகி, ஜ்வாலைகள் (தீக்கொழுந்துகள்) ஓய்ந்து நீறு பூத்திருக்கின்ற நெருப்பு போன்று, பாலர்கள் இருக்கும் வழியில் நிலைநின்று புலப்பட்டுக் கொண்டிருந்தான். (அவன்தான் ஆத்மஸ்வரூபத்தை அறிந்து அதைத் தவிர்ந்த மற்ற எதிலும் மனப்பற்றின்றி அந்த ஜ்ஞானயோக மஹிமையால் பாபங்களெல்லாம் தீர்ந்து பரிசுத்தனாயிருந்தும், தான் அத்தன்மையனாயிருப்பதைப் பிறர்க்கு வெளியிடாமல் பாலர்கள் தமது பெருமையை வெளியிடத் தெரியாதிருப்பதுபோல் இருந்தான்.) அவன் அங்கனம் இருக்கையில், த்ருவனுடைய வம்சத்திலுள்ள வயது சென்ற க்ஷத்ரியர்கள் மந்திரிகளுடன் கலந்து ஆலோசித்து, அந்த உத்கலனை மூடனென்றும் பைத்யம் பிடித்தவனென்றும் நிச்சயித்து அவனைத் துறந்து ப்ரமி என்பவனுடைய புதல்வர்களில் இளையவனாகிய வத்ஸரன் என்பவனை மன்னவனாக ஏற்படுத்தினார்கள். அந்த வத்ஸரனுடைய பார்யை (மனைவி) ஸத்வ்ருத்தி என்னும் பேருடையவள். அவள் சீலாதி (நல்லொழுக்கம் முதலிய) குணங்களால் அந்த வத்ஸரனுக்கு மிகவும் அன்பிற்கிடமாயிருந்தாள். அவள் புஷ்பார்ணன், திக்மகேது, இஷன், ஊர்ஜன், வஸு, ஜயன் என்று ஆறு பிள்ளைகளைப் பெற்றாள். அந்த ஆறு பேர்களில் மூத்தவனாகிய புஷ்பார்ணனுக்கு ப்ரபையென்றும் தோஷையென்னும் இரண்டு பார்யைகள் (மனைவிகள்) இருந்தார்கள். அவ்விருவர்களில் ஒருத்தியாகிய ப்ரபைக்கு ப்ராதரென்றும், மத்யந்தினமென்றும், ஸாயமென்றும் மூன்று பிள்ளைகள் உண்டானார்கள். மற்றொருத்தியாகிய தோஷைக்கு ப்ரதோஷமென்றும், நிசீதமென்றும், வயுஷ்டியென்றும் மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். தோஷையின் புதல்வர் மூவரில் வ்யுஷ்டி என்பவன் புஷ்கரிணியென்னும் தன் பார்யையிடத்தில் ஸர்வதேஜஸனென்னும் பிள்ளையைப் பெற்றான். அந்த ஸர்வதேஜஸன் ஆகூதியென்னும் பத்னியிடத்தில் சக்ஷுஸ்ஸென்னும் பேருடைய ஓர் புதல்வனைப் பெற்றான். அவன் மனுவென்று மற்றொரு நாமதேயமும் பெற்றான். சக்ஷுஸ்ஸென்று ப்ரஸித்தனாகிய அந்த மனுவின் பார்யையாகிய நட்வலையென்பவள், புரு, குத்ஸன், த்ரிதன், த்யும்னன், ஸத்யவான், ருதன், வ்ரதன், அக்னிஷ்டோமன், அதிராத்ரன், ப்ரத்யும்னன், சிபி, உல்முகன் என்று பன்னிரண்டு புதல்வர்களைப் பெற்றான். அவர்கள் அனைவரும் பரிசுத்தர்களாயிருந்தார்கள். அவர்களில் உல்முகன் புஷ்கரிணியென்னும் தன் பார்யையிடத்தில் அங்கன், ஸுமனஸ், ஸுஸ்வாதி, க்ரது அங்கிரஸ்ஸு, கயன் என்று ச்ரேஷ்டர்களான ஆறு பிள்ளைகளைப் பெற்றான். அவர்களில் அங்கனுடைய பார்யை ஸுநீதையென்பவள். அவள் வேனன் என்கிற ஓர் புதல்வனைப் பெற்றாள். அவன் கொடிய துர்ப்புத்தியனாயிருந்தான் (கெட்ட புத்தி உடையவனாயிருந்தான்). அந்த வேனனுடைய துஷ்ட ஸ்வபாவத்தைப் (கொடிய இயல்பை) பொறுக்க முடியாமல், அவனுடைய தகப்பனும் ராஜ ரிஷியுமாகிய அங்கன் மிகவும் வருத்தமுற்றுப் பட்டணத்தினின்று புறப்பட்டுப்போனான். வாராய் விதுரனே! முனிவர்கள் அவனுடைய துர்நடத்தையைக் (கொடிய நடத்தையை) கண்டு பொறுக்க முடியாமல் கோபங்கொண்டு, வாக்கையே வஜ்ராயுதமாகவுடைய அவர்கள் அந்த வேனனைச் சபித்தார்களாம். அவன் அந்தச் சாபத்தினால் ப்ராணன்களை இழந்த பின்பு, அவனது வலது கையை அம்முனிவர்கள் மீளவும் கடைந்தார்கள். அதற்குக் காரணம் சொல்லுகிறேன் கேட்பாயாக. அங்கனம் முனிவரது சாபத்தினால் வேனன் ப்ராணன்களை இழக்கையில், உலகமெல்லாம் அராஜகமாயிற்று (அரசனில்லாமல் ஆயிற்று). ஆகையால் ப்ரஜைகள் எல்லோரும் பாதுகாப்பவன் இல்லாமையால் திருடர்களால் பீடிக்கப்பெற்று, வருந்தினார்கள். அப்பொழுது ப்ருதுவென்னும் மன்னவன் உண்டானான். அவன் அரசர்களில் முதன்மையானவன்; ஸ்ரீமந்நாராயணனின் அம்சம். அவனே இந்த பூமியில் பட்டணங்கள் க்ராமங்கள் முதலியவற்றையெல்லாம் ஏற்படுத்தினான்.


விதுரர் சொல்லுகிறார்:- அந்த அங்கனென்றும் ராஜரிஷி சீலநிதியென்றும் (நன்னடத்தைக்கு நிதிபோன்றவனென்றும்) ப்ராஹ்மணர்களைப் பணிவதில் மிக்க மனவூக்கமுடையவனென்றும், பரப்ரஹ்மத்தினிடத்தில் நிலைநின்றவனென்றும், ஸர்வஜகத் ஸ்வரூபமான பரப்ரஹ்மத்தை உபாஸிப்பதில் ஸ்வாதீனமான மனமுடையவனென்றும், மஹானுபாவனென்றும், பிறர் கார்யத்தை நிறைவேற்றும் தன்மையனென்றும் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அவன் தனது புதல்வனுடைய துர்நடத்தையைக் (மகனுடைய கொடிய நடத்தையைக்) கண்டு பொறுக்கமுடியாமல் மனவருத்தத்தினால் பட்டணத்தினின்று புறப்பட்டுப் போனானென்றீர். தர்மிஷ்டனாகிய (தர்மப்படி செயல்படுபவனான) அவ்வரசனுக்கு துஷ்டனான புதல்வன் எந்தக் காரணத்தினால் பிறந்தான்? துஷ்டர்களை தண்டிக்கையே வ்ரதமாகப் பெற்ற வேன ராஜனிடத்தில் தர்மம் தெரிந்தவரான முனிவர்கள் எந்த அபராதத்தைக் கண்டு அவனைச் சபித்தார்கள்? முனிவர்கள் தர்மஸூக்ஷ்மத்தை நன்றாக உணர்ந்தவரல்லவா? அவர்கள் ப்ரஜைகளைப் பாதுகாக்கையாகிற தர்மத்தில் நிலைநின்ற மன்னவனைச் சபித்தது எங்கனம் தர்மமாகும். ப்ரஜைகளைப் பாதுகாக்கும் தன்மையனான மன்னவன் அபராதம் செய்திருப்பினும், ப்ரஜைகள் அவன்மேல் கெடுதி நினைக்கலாகாது. ஏனென்னில், இம்மன்னவன் லோகபாலர்களின் தேஜஸ்ஸை தரிக்கின்றான். ஆகையால் இவன் மிகுந்த ஒளியுடன் விளங்குகின்றான். ஆகையால் அத்தகைய மன்னவனாயிருந்த வேனனை, ரிஷிகள் சபித்ததற்குக் காரணம் என்ன? வாரீர் அந்தணர் தலைவரே! மைத்ரேய மஹரிஷி! ஸுநீதையின் புதல்வனாகிய இந்த வேனனுடைய நடத்தையை எனக்கு மொழிவீராக. கேட்கவேண்டுமென்று விரைகின்றவனும் பக்தனுமாகிய எனக்கு இந்த வேனனின் வ்ருத்தாந்தத்தை உரைப்பீராக. நீர் பரமாத்ம ஸ்வரூபத்தையும் அவனுக்கு உட்பட்ட ப்ரக்ருதி புருஷர்களின் ஸ்வரூபத்தையும் அறிந்தவர்களில் மேன்மையுற்றவர். உமக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. ஆகையால் நீர் நான் வினவினதை மொழிய வல்லவரே. அதை மொழிவீராக.


மைத்ரேயர் சொல்லுகிறார்:- ராஜர்ஷியாகிய அங்கன் யாகங்களில் சிறந்ததாகிய அச்வமேத யாகத்தைச் செய்தான். அந்த அச்வமேத யாகத்தில் வேதங்களை ஓதி உணர்ந்தவர்களான ருத்விக்குகள் விதிப்படி மந்த்ரங்களைச் சொல்லி தேவதைகளை அழைக்கையில், அவர்கள் வரவில்லை. அப்பனே ! அப்பொழுது ருத்விக்குகள் தேவதைகளை அழைத்தும் அவர்கள் வராமையால் வியப்புற்று யஜமானனாகிய (யாகம் செய்பவனாகிய) அங்கராஜனைப் பார்த்து இங்கனம் மொழிந்தார்கள்.


ருத்விக்குகள் சொல்லுகிறார்கள்:- வாராய் மன்னவனே! நீ தேவதைகளை உத்தேசித்துக் கொடுத்த ஹவிஸ்ஸுக்களை (அக்னியில் ஹோமம் செய்யப்படும் பொருள்) நாங்கள் விதிப்படி மந்த்ரங்களைச் சொல்லி ஹோமம் செய்கின்றோம். அவை எவ்வகைக் கெடுதியுமின்றி ஸாரமுடையவைகளாகவே இருக்கின்றன. ஆயினும், அந்தப் புரோடாசம் (வெந்த மாவினால் ஆன பண்டம்) முதலிய ஹவிஸ்ஸுக்களை தேவதைகள் அங்கீகரிக்கவில்லை. வாராய் மன்னவனே! ஹவிஸ்ஸுக்கள் ஒரு தோஷமின்றிப் பரிசுத்தங்களும் உன்னால் ச்ரத்தையுடன் ஸம்பாதிக்கப்பட்டவைகளுமாய் இருக்கின்றன. மற்றும், யாகத்தில் உச்சரிக்கவேண்டிய மந்த்ரங்களும் ஸ்வரம் வர்ணம் முதலிய எவ்வகையிலும் கெடுதியின்றி வீர்யமுடையவைகளாகவே இருக்கின்றன. ஸ்வரத்திலும் எழுத்திலும் எவ்வகைப் பிழையுமின்றி மந்த்ரங்களை உச்சரிக்கையாகிற வ்ரதத்தில் திடமாக ஊன்றியிருப்பவர்களான ருத்விக்குகள் மந்திரங்களை முறையாக உச்சரிக்கின்றார்கள். தேவதைகள் நாம் செய்யும் கர்மங்களை நேரே பார்க்கும் திறமையுடையவர். அவர்கள் வராமைக்குக் காரணமான ஒருவித பிழையும் இந்த யாகத்தில் எங்களுக்குப் புலப்படவில்லை. ஆயினும் அந்த தேவதைகள் வரக் கண்டிலோம். அவர்கள் வராமைக்குக் காரணமான பிழை ஏதேனும் ஒன்று இருக்கவேண்டும். ஆனால் அது நமக்குத் தெரியவில்லை.


மைத்ரேயர் சொல்லுகிறார்:- அப்பால் யஜமானனாகிய அவ்வங்கராஜன் அங்கனம் ப்ராஹ்மணர்கள் மொழிந்த வசனத்தைக் கேட்டு மிகுதியும் மனவருத்தமுற்றவனாகி யாகத்தில் மௌனவாதத்தை ஏற்றுக்கொண்டிருப்பிலும், ஸபையிலுள்ளவர்களைப் பார்த்து அவரது அனுமதியால் மௌன வ்ரதத்தைத் துறந்து, அந்த தேவதைகள் வாராமையின் காரணத்தை வினவத்தொடங்கி இங்கனம் மொழிந்தான்.


மன்னவன் சொல்லுகிறான்:- இந்த யாகத்தில் தேவதைகள் அழைக்கப்பெற்றவராகியும் வரவில்லை. ஸோமரஸம் (ஸோமம் என்ற கொடியிலிருந்து எடுத்த சாறு) வைத்திருக்கின்ற பாத்ரங்களையும் அங்கீகரிக்கவில்லை. வாரீர் ஸபையிலுள்ள பெரியோர்களே! நான் என்ன அபராதம் செய்தேன்? அதை நீங்கள் மொழிவீர்களாக.


ஸபையிலுள்ளவர் சொல்லுகிறார்கள்:- வாராய் மன்னவனே! இங்கனம் ப்ரஹ்மவித்தாகிய உனக்கு இந்த ஜன்மத்தில் சிறிது பிழையாயினும் கிடையாது. ஆனால், போன ஜன்மத்தில் உனக்கு ஓர் பாபம் உண்டு. அந்தப் பாபத்தினால் தான் நீ இந்த ஜன்மத்தில் இவ்வளவு நற்குணங்கள் அமைந்திருந்தும் குழந்தை இல்லாமல் இருக்கின்றாய். ஆகையால் தேவதைகள் நேரேவந்து ஹவிர்ப்பாகங்களை வாங்கும்படி வரவில்லை. நீ ஸந்ததி உடையவனாய் ஆவாயாக. உனக்கு க்ஷேமம் உண்டாகுக. அதெப்படியென்னில், சொல்லுகிறோம். மன்னவனே! யஜ்ஞபோக்தாவான (யஜ்ஞங்களில் கொடுக்கிற ஹவிஸ்ஸுக்களையெல்லாம் இந்த்ராதி தேவதைகளுக்கு அந்தர்யாமியாயிருந்தும் தானே நேராகவும் புஜிப்பவனாகிய) பகவானை நீ பிள்ளை வேண்டுமென்னும் விருப்பத்துடன் ஆராதிப்பாயாயின், அவன் உனக்குப் புதல்வனைக் கொடுப்பான். அப்படியாயின் தேவதைகள் நேரில் வந்து தந்தமது பாகங்களை வாங்கிக் கொள்வார்கள். யஜ்ஞங்களால் ஆராதிக்கப்படும் மஹானுபாவனாகிய பரமபுருஷனைப் பிள்ளை வேண்டுமென்னும் விருப்பத்தினால் சரணம் அடைவாயாயின், அதைப் பற்றி அந்த பகவானுடன் தேவதைகள் அனைவரும் தாமே வருவார்கள். “பகவானிடத்தில் மிகவும் அற்பமான விருப்பங்களை நாம் எப்படி வேண்டலாம்? அவன்தான் இந்த அற்ப புருஷார்த்தங்களை எப்படி கொடுப்பான்?” என்று சங்கிக்கவேண்டாம். (ஸந்ததி இல்லாத மனுஷ்யன் மனுஷ்யனேயல்லன். அவன் எவ்வளவு ஸம்பத்துடையவனாயினும் (செல்வம் உடையவனாகினும்) பூர்த்தியை அடைய மாட்டான். ஆகையால் ஸந்ததியை அற்ப புருஷார்த்தமென்று உபேக்ஷிக்கலாகாது). எவனெவன் எந்தெந்த விருப்பங்களை வேண்டுகிறானோ, அவ்வவற்றையெல்லாம் பரமபுருஷன் கொடுக்க ஸித்தமாயிருக்கின்றான். ஜனங்கள் பகவானை எங்கனம் ஆராதிக்கின்றார்களோ, அங்கனமே அவர்களுக்குப் பலனும் உண்டாகும். ஆகையால் புதல்வனைப் பெறவிரும்பி பரமபுருஷனை ஆராதிப்பாயாக.


மைத்ரேயர் சொல்லுகிறார்:- ருத்விக்குகள் இங்கனம் நிச்சயித்துக் கொண்டு அவ்வங்கராஜனுக்கு ஸந்ததி உண்டாகும் பொருட்டு, சிபிவிஷ்டனென்று கூறப்படுகிற (மஹாதேஜஸ்வியாய் ப்ரகாசித்துக் கொண்டிருப்பவனாகிய) விஷ்ணுவின் பொருட்டுப் புரோடாசமென்னும்ஹவிஸ்ஸை அக்கினியில் இட்டு ஹோமம் செய்தார்கள். அந்த அக்னியினின்று ஸ்வர்ணமயமான ஆடைகளை உடுத்த ஓர் திவ்வியபுருஷன் நன்கு பக்வமான பாயஸான்னத்தை ஸ்வர்ண பாத்ரத்தில் எடுத்துக்கொண்டு கிளம்பினான். புத்தியில் சிறந்தவனாகிய அம்மன்னவன் ப்ராஹ்மணர்களால் அனுமதிசெய்யப் பெற்றவனாகிக் கைகளில் அந்தப் பாயஸான்னத்தை வாங்கிக்கொண்டு தான் மோந்துபார்த்து ஸந்தோஷமுற்று அதைத் தன் மனைவியின் கையில் கொடுத்தான். அவ்வரசனது பத்னியாகிய ஸுநீதையும் பிள்ளையைப் பிறப்பிக்கும் திறமையுடையதாகிய அந்தப் பாயஸான்னத்தைப் புசித்து பர்த்தாவிடத்தினின்று (கணவனிடத்திலிருந்து) கர்ப்பம் தரித்தாள். ஸந்ததியில்லாத அம்மாதரசி க்ரமத்தில் பிரசவகாலம் வருகையில் புதல்வனைப் பெற்றாள். அப்புதல்வன் பால்யம் முதற்கொண்டே, அதர்மத்தின் அம்சமும் தனது மாதாமஹனும் (தாயைப்பெற்ற பாட்டனும்) ஆகிய ம்ருத்யு என்பவனை அனுஸரித்திருந்தான். (ஸுநீதையென்பவள் ம்ருத்யுவின் புதல்வியென்று முன்னமே மொழித்தோமல்லவா. அந்த மருத்யு என்பவன் அதர்மத்தின் அம்சமாகப் பிறந்தவன். ஆகையால் அவன் அதர்மத்தையே செய்பவனாயிருந்தான்). அவனுடைய பெண் வயிற்றுப் பேரனாகிய இந்த பாலனும் அவனையே தொடர்ந்து அதர்மிஷ்டனாயிருந்தான். அந்த அங்கராஜனது புதல்வன் தனுஸ்ஸை எடுத்துக்கொண்டு அதில் பாணத்தைத் தொடுத்து வேட்டையாடத் தொடங்கிக் காடுகளில் திரிபவனாகி, துஷ்ட ஸ்வபாவனாகையால் எவ்வகை அபராதமும் செய்யாமல் மன இரக்கத்திற்கிடமான ம்ருகங்களை ஹிம்ஸித்துக் கொண்டிருந்தான். இங்கனம் துஷ்டஸ்வபாவனாயிருக்கையால் அவனைக் கண்டவுடனே ஸமஸ்த ஜனங்களும் “இதோ வேனன் வருகின்றான்” என்று பயந்து இறைச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். கொடுந்தனமையனாகிய அந்த அங்கராஜன் மகன், உத்யானம் (தோட்டம்) முதலிய விளையாடுமிடங்களில் விளையாடிக் கொண்டிருக்கின்ற இளைஞர்களையும் யௌவனப் பருவமுடையவர்களையும் சிறிதும் மன இரக்கமின்றி கொல்வதும் பசுக்களை ஹிம்ஸித்துக் கொண்டுமிருந்தான். அந்த அங்கமன்னவன் துர்ப்புத்தியாகிய தன் புதல்வனைப் பலவாறு (ஸாமம் முதலிய உபாயங்களால்) எவ்வளவு திருத்தப் பார்க்கினும் அவன் திருந்தாமையால் “இவனை நம்மால் திருத்த முடியாது” என்று தெரிந்துகொண்டு அவன் மிகவும் மனவருத்தமுற்றான். அவ்வரசன் தன் மனத்தில் இங்கனம் வெறுப்புடன் சிந்தித்தான். “எவர்கள் க்ருஹஸ்தாச்ரமத்தில் இருந்துகொண்டு பிள்ளையில்லாமல் ஸந்ததியற்றிருக்கின்றார்களோ, எவர் பிள்ளைகளைப் பெற்றும் துஷ்ட ஸ்வபாவமுடைய பிள்ளைகளால் விளைகின்ற பொறுக்க முடியாத பெரும் துயரத்தை அடையாமல் நல்ல பிள்ளைகளைப் பெற்று வாழ்கின்றார்களோ, அவர்கள் ஜன்மாந்தரத்தில் பெரும்பாலும் பகவானை நன்றாக ஆராதித்திருக்கவேண்டும். இல்லையாயின் அங்கனம் நேராது. துஷ்டஸ்வபாவரான புதல்வர்களைப் பெறுவதைக் காட்டிலும் பிள்ளையில்லாமையே மிகவும் மேன்மையாம். நல்ல பிள்ளைகளைப் பெறுவார்களாயின் அது ஜன்மாந்தர (முன் ஜன்மங்களின்) புண்யத்தின் பலனே. ஏனென்னில். துஷ்ட ஸ்வபாவமுடைய புதல்வர்களால் மனுஷ்யர்களுக்குப் பாபிஷ்டமான அபகீர்த்தியும் (களங்கமும்) மஹத்தான அதர்மமும் உண்டாகும். அஸத்தான (நல்லொழுக்கமில்லாத) பிள்ளையினால் எல்லாரோடும் விரோதமும் எல்லையில்லாத மனோ வியாதியும் விளைகின்றன. அங்கனம் அஸத்தான பிள்ளைக்குப் பிள்ளையென்று பேர் மாத்ரமேயன்றி வாஸ்தவத்தில் அவன் பிள்ளையேயல்லன்: தேஹாத்ம ப்ரமத்தினால் விளையும் ஸம்ஸார பந்தமென்றே அவனைச் சொல்லவேண்டும். அத்தகைய புத்ரனைப் பண்டிதனாயிருப்பவன் எவன்தான் பிள்ளையென்று புகழ்ந்து கொள்வான்? இந்தப் புதல்வனைப் பற்றியல்லவோ பல வகை வருத்தங்களுக்கிடமான க்ருஹம் முதலியவற்றை ஏற்றுக்கொள்கின்றான். ஆகையால் இங்கனம் ஸம்ஸார பந்தத்தை வளர்க்கும்படியான பாபிஷ்ட புத்ரனை மதியுடையவன் எவனும் வெகுமதிக்கமாட்டான். ஆனால் ஒருவிதத்தில் அஸத்தான புத்ரனையும் புகழலாம். எப்படியென்னில், நல்ல பிள்ளையைப் பெறுவானாயின் மேன்மேலும் க்ருஹம் முதலியவற்றில் மனவிருப்பம் வளர்ந்து வரும். “இவன் நல்ல குணமுடையவனாய் இருக்கின்றான். சொன்னபடி நடக்கின்றான். இவனுடைய க்ஷேமத்தை நாம் தேட வேண்டும். இவனுக்கு வீடு, வாசல், நிலம், நீர் முதலியவை சாஸ்வதமாயிருக்குமாறு நாம் ப்ரயத்னம் செய்யவேண்டும். இவனுக்கு நற்குலத்தில் பெண்ணைத் தேடி மணம் செய்விக்கவேண்டும். இவன் சரீரத்தில் நோய் நொடியொன்றுமின்றித் திடமாயிருக்கப் பார்க்கவேண்டும். இவனுக்கு நல்ல பிள்ளை பிறக்கவேண்டும்” என்று மேன்மேலும் ஸம்ஸாரத்தில் கால் தாழப்பெறுவான் (ஊன்றியிருப்பான்). அந்த நற்புதல்வனைக் காட்டிலும் தீயபுதல்வனே மேலென்னலாம். பிள்ளை துஷ்ட ஸ்வபாவனாயிருப்பானாயின், “ஐயோ நாம் என்ன பாபம் செய்தோமோ இனி நமக்கு இந்த ஸம்ஸாரமே வேண்டியதில்லை. நிலம் நீர் வேண்டியதில்லை. வீடு வாசல் வேண்டியதில்லை” என்று ஸம்ஸாரத்தில் நிர்வேதம் (வெறுப்பு) உண்டாகப் பெறுவான். பிள்ளை துஷ்டனாயிருப்பானாயின் க்ருஹம் முதலியவையெல்லாம் துக்கத்திற்கே இடமாயிருக்கும். அதனால் ஸம்ஸாரத்தில் வைராக்யம் உண்டாகும். ஆகையால் ஸத்புத்ரனைக் காட்டிலும் அஸத்புத்ரனே மேலேன்பதில் ஸந்தேஹமில்லை” என்று அம்மன்னவன் தன் மனத்தில் பலவாறு சிந்தித்தான். இங்ஙனம் மனவெறுப்புற்ற அம்மன்னவன் பெருப் பெரிய ஐச்வர்யங்கள் எல்லாம் ஸம்ருத்தமாயிருக்கப் பெற்ற (நிறைந்திருக்கப்பெற்ற)  தன் க்ருஹத்தினின்று அர்த்தராத்ரியில் எழுந்து தூக்கத்தைத் துறந்து, உறங்கிக் கொண்டிருக்கின்ற வேனன் தாயையும் (தன் மனைவியுமான ஸுநீதையையும்) விட்டு ஒருவர்க்கும் புலப்படாமலே வனத்திற்குச் சென்றான். மந்திரிகள் முதலிய ப்ரஜைகள் அனைவரும், மன்னவன் மனவெறுப்புற்று வனம் போனதை அறிந்து மிகவும் வருத்தமுற்று “இனி நம்மைக் காப்பவன் எவனும் இல்லையே. நாம் எங்கனம் க்ஷேமம் பெறுவோம்?” என்று! பயந்து அம்மன்னவனைப் பூமியெல்லாம் தேடினார்கள் ஹ்ருதயத்திலிருந்தும் தெரியாமல் மறைந்திருக்கின்ற பரமபுருஷனைக் குத்ஸிதயோகிகள் (அவமதிக்கத்தக்க, இழிவான யோகிகள்) எவ்வளவு தேடியும் எங்கனம் காணமாட்டர்களோ, அங்கனமே அம்மன்னவன் அருகாமையில் இருந்தும் அவனை அவர்கள் காணப் பெற்றிலர். வாராய் விதுரனே! புரோஹிதன் முதலியவர் அங்கனம் மன்னவன் போனவழி தெரியாமல் தாம் செய்த ப்ரயத்னம் (முயற்சி) வீணாகப்பெற்றுப் பட்டணத்திற்குத் திரும்பிவந்து கண்ணும் கண்ணீருமாய் நின்று அங்குக் கூட்டமாயிருக்கின்ற ரிஷிகளைக் கண்டு தண்டனிட்டுத் தமது மன்னவன் காணாது போனதை அவர்களுக்கு விண்ணப்பம் செய்தார்கள். 


பதிமூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக