ஶ்ரீமத் பாகவதம் - 90

நான்காவது ஸ்கந்தம் – பன்னிரண்டாவது அத்தியாயம்

(த்ருவன் குபேரனால் அபிநந்தனம் செய்யப்பெற்றுத் (பாராட்டப்பட்டு) தன் பட்டணம் சேர்ந்து பல யாகங்கள் செய்து ஸ்ரீவிஷ்ணுவின் ஸ்தானத்தை அடைதல்)

த்ருவன் ஸ்வாயம்புவ மனுவின் உபதேசத்தினால் கோபம் தீர்ந்து யக்ஷர்களை வதிப்பதினின்று திரும்பியிருப்பதை அறிந்து மஹானுபாவனாகிய குபேரன் அவ்விடம் வந்து சாரணர் யக்ஷர் கின்னரர் இவர்களால் துதி செய்யப்பெற்ற அந்த குபேரன், கை கூப்பிக்கொண்டு நிற்கிற அந்த த்ருவனைப் பார்த்து இங்கனம் மொழிந்தான்.

குபேரன் சொல்லுகிறான்:- வாராய் க்ஷத்ரிய குமாரனே! நீ யக்ஷர்களை வதித்தமையால் உண்டான பாபம் தீரப் பெற்றாய். நான் உன் விஷயத்தில் மிகுதியும் ஸந்தோஷம் அடைந்தேன். அதற்குக் காரணம் என்னெனில், நீ உன் பாட்டனாராகிய (தாத்தாவாகிய) ஸ்வாயம்புவ மனுவின் உபதேசத்தினால் துறக்கமுடியாத வைரத்தையும் (விரோதத்தையும்) துறந்தாயல்லவா? அதுவே காரணம். “நான் யக்ஷர்களை வதித்தமையால் உண்டான பாபத்தின் ஸம்பந்தம் உடையவனாயிருக்க எப்படி நான் பாபமற்றவனாவேன்?” என்னில், சொல்லுகிறேன், கேட்பாயாக. நீ யக்ஷர்களை வதித்தவனல்லை. யக்ஷர்களும் உன் ப்ராதாவை (ஸஹோதரனை) வதிக்கவில்லை. ஏனென்னில், ப்ராணிகளின் மரணத்திற்கும் உத்பத்திக்கும் காலஸ்வரூபனான ஈச்வரனே ஸமர்த்தனன்றி, மற்றவர்க்கு அந்த ஸாமர்த்யம் இல்லை. “ஒருவரையொருவர் வதித்தமையும் அதனாலுண்டான வேர்வை இளைப்பு முதலியதும் எனக்கும் யக்ஷர்களுக்கும் ப்ரத்யக்ஷமாயிருக்க, அதை நீ செய்யவில்லை. ஈச்வரனே அதைச் செய்தானென்பது எங்கனம் பொருத்தும்” என்னில், சொல்லுகிறேன். ப்ராணிகள் தேஹத்தைக் (உடலைக்) காட்டிலும் விலக்ஷணமான (வேறான) ஆத்மாவின் உண்மையை அறியாமல் அந்த தேஹத்தையே ஆத்மாவாக ப்ரமித்து (தவறாக, பொய்யாக நினைத்து) “நான் கொன்றேன். நீ கொன்றாய்” என்று நினைக்கின்றார்கள். “நான், நீ” என்கிற அறிவில் தோற்றுகிற ஆத்ம ஸ்வரூபத்தை அவர்கள் அறிந்தவரல்லர். நானென்று தோற்றுகிற ஆத்மாவைக் காட்டிலும் வேறுபட்ட தேஹத்தையே ஆத்மாவாக நினைக்கின்றார்களாகையால் அவர்கள் விபரீத ஜ்ஞானமுடையவர். விபரீத ஜ்ஞானமாவது ஒரு வஸ்துவை மற்றொரு வஸ்துவாக நினைக்கை. முத்துச்சிப்பியைப் பார்த்து இது வெள்ளியென்று நினைக்கை விபரீதஜ்ஞானம். ஒரு வஸ்துவுக்கு ஒரு குணம் இயற்கையில் ஏற்பட்டிருக்க, அதைவிட்டு அதிலில்லாத மற்றொரு குணத்தை அதிலிருப்பதாக நினைக்கை அன்யதா ஜ்ஞானமென்று கூறப்படும். சங்கம் வெளுத்திருக்க, அதைப் பொன்னிறமுடையதாக நினைக்கை அன்யதாஜ்ஞானமாம். இவர்கள், பிறரைக் கொல்லும் தன்மையனல்லாத ஆத்மாவிடத்தில் கொல்லும் தன்மையை ஏறிடுகிறார்களாகையால், அன்யதாஜ்ஞானமும் உடையவர்களே. ஜீவாத்மா கொல்லும் தன்மையனுமல்லன். ஆத்மாவுக்கு உத்பத்தியாவது தேஹஸம்பந்தம் (உடலின் சேர்க்கை) உண்டாகப் பெறுகையே. மரணமாவது தேஹவியோகம் பெறுகையே (உடலின் தொடர்பின்மையே). உடலுக்கே உத்பத்தியும் மரணமும் உள்ளவை. உடலுக்கு உத்பத்தியாவது ஒரு அவஸ்தையைப் (நிலையைப்) பெறுகையே. மரணமாவது முன்னிருந்த அவஸ்தையை விடுகையே. இந்த உத்பத்தி மரணங்கள் தேஹத்திற்கு என்றும் உள்ளவைகளே. ஆகையால் பரிஹரிக்க (தவிர்க்க) முடியாமல் நித்யமாயிருக்கின்ற உத்பத்தி மரணங்களைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. 


தேஹத்திற்கும் ஆத்மாவுக்கும் கொல்லப்படுகை, கொல்லுகை ஆகிய இவையிரண்டும் இல்லாதவைகளே. அவ்விரண்டுக்கும் அவையிரண்டும் உண்டென்று நினைப்பது அஜ்ஞான கார்யமே. உத்பத்தியாவது இல்லாத வஸ்து புதிதாக உண்டாகையென்றும், மரணமாவது உள்ள வஸ்து முதலே இல்லாமல் பாழாகையென்றும் அஜ்ஞானிகள் (அறிவிலிகள்) நினைக்கின்றார்கள். தேஹத்திற்காவது ஆத்மாவுக்காவது அத்தகைய உத்பத்தி மரணங்கள் கிடையாது. உடலிற்கும் உற்பத்தி மரணங்களாவன, இல்லாத வஸ்து உண்டாகையும் உள்ள வஸ்து முதலே இல்லாமற்போகையும் அல்ல. ஓர் அவஸ்தையை (நிலையை) விட்டு மற்றொரு அவஸ்தையைப் பெறுகையே உத்பத்தியும் மரணமுமாம். இல்லாத வஸ்து எங்கிருந்து உண்டாகும்? இருந்த வஸ்துவும் முதலே இல்லாமல் எப்படி போகும். ஆகையால் அவர்கள் நினைக்கும் நினைவு ஸ்வப்ன (கனவு) அனுபவம்போன்றது. கனவில் காண்கிற யானை குதிரை தேர் மனை மனைவி பிள்ளை முதலியவையெல்லாம் எப்படி உண்டாகின்றனவென்னில், ஈச்வரன் அந்த கனவு காண்கிறவன் மட்டும் அந்த கனவு நேரம் வரையிலுமே அனுபவிக்கும்படி அவரவர் புண்ய பாபங்களுக்குத் தகுந்தபடி அந்த வஸ்துக்களைப் படைத்து அனுபவிக்கச் செய்கின்றான். அந்த கனவு தீர்ந்தவுடனே அவற்றை மறைத்து விடுகின்றான். ஆகையால் கனவு காண்கிறவன் கண் விழித்துக்கொண்டு அந்த வஸ்துக்களைக் காண்கிறதில்லை. ஆகையால் கனவில் காணும் வஸ்துக்கள் உண்மையே. பிறகு புலப்படுகிறதில்லை என்பதால் அவற்றைப் பொய் என்கிறார்களன்றி வாஸ்தவத்தில் (உண்மையில்) அவை பொய்யன்று. கனவில் புலப்படும் வஸ்துக்கள் அக்காலத்தில் ஸுக துக்கங்களை விளைப்பது மாத்ரமேயன்றி மேன்மேலும் ஜன்ம ஜரா மரணாதி துக்கங்களுக்கிடமான ஸம்ஸாரத்தை விளைத்து மஹத்தான கெடுதியை மாறாமல் நடத்திக்கொண்டிருக்கும். அதனால் ஜீவாத்மாக்கள் தமக்கு இயற்கையில் ஏற்பட்ட அபஹதபாப்மத்வம் (பாபமற்றிருக்கை) முதலிய குணங்கள் மறையப் பெற்று வருந்துகிறார்கள். நீ யக்ஷர்களை வதித்ததும், உன் ப்ராதாவை (ஸஹோதரனை) யக்ஷர்கள் வதித்ததும் உனக்கு ப்ரத்யக்ஷமாகவே தெரிகின்றன. அங்கனம் வதித்தமையால் உண்டான வேர்வை, இளைப்பு முதலியவைகளும் ப்ரத்யக்ஷமாயிருக்கின்றன. ஆயினும் உடலுக்கும் ஆத்மாவுக்கும் கொல்லப்படுகை கொல்லுகை ஆகிய இவ்விரண்டு தர்மங்களும் உண்டென்று நினைக்கை அஜ்ஞானத்தினால் (அறிவின்மையால்) விளையுமவையென்றும், காலத்தைச் சரீரமாகவுடைய ஈச்வரனே கொல்லுகிறவனென்றும், வேர்வை ச்ரமம் முதலியவையெல்லாம் சரீரமாகிய ப்ரக்ருதி புருஷர் மூலமாய் ஈச்வரனுக்கே பொருந்துமென்றும் சாஸ்த்ரங்களும் அவற்றை உணர்ந்த பெரியோர்களும் நிரூபித்துச் சொல்லுகிறார்களாகையால், நாம் நினைப்பது ப்ரமமேயன்றி (மனக்கலக்கமேயன்றி) உண்மையன்று. ஆகையால் ஈச்வரனே காலத்தைச் சரீரமாகவுடையவனாகி அந்தந்தச் செயல்களை ஜீவன் மூலமாய் நடத்துகிறான். ஆகையால் ப்ருதிவி முதலிய பூதங்களையும் ஜீவாத்மாக்களையும் சரீரமாகவுடையவனும்,  இந்த்ரியங்களால் விளையும் ஜ்ஞானங்களுக்கு விஷயமாகாதவனுமாகிய அந்த ஸர்வேச்வரனையே மோக்ஷத்தின்பொருட்டுப் பணிவாயாக. 

வாராய் த்ருவனே! உனக்கு மங்களம் உண்டாகும். ஈச்வரன் ஸமஸ்த(எல்லா) சேதனா சேதனங்களையும் (ஜீவர்களையும் ஜடப்பொருள்களையும்) சரீரமாகவுடையவனாகையால் இந்த யக்ஷர்களும் அவ்வீச்வரனுடைய சரீரங்களே. ஆகையால் அவனுடைய சரீரங்களாகிய இந்த யக்ஷர்களை நீ வதிப்பது அவ்வீச்வரனுக்கு த்ரோஹம் செய்ததேயாகும். நீ இந்த முயற்சியினின்று மீண்டாயாகையால் உனக்கு க்ஷேமம் உண்டாகும். நீ புறப்பட்டு உன் க்ருஹத்திற்குப் (இல்லத்திற்குப்) போவாயாக. அந்த ஸர்வேச்வரன் இந்த்ரியங்களுக்குத் தோற்றும் தன்மையனல்லன். அப்படியானால், அவனை எங்கனம் பணிய முடியும்? என்னில், அவன் இந்த்ரியங்களுக்கு விஷயமாகாதவனாயினும், யோகாப்யாஸத்தினால் (யோகப் பயிற்சியினால்) பரிசுத்தமான மனமுடையவர்க்கு அத்தகைய மனத்தினால் பணியத் தகுந்த பாதாரவிந்தங்களுடையவன். அவன் நம்மைப் போல் ஸம்ஸாரியாயிராமை மாத்ரமேயன்றித் தன்னைப் பணிகிறவர்களின் ஸம்ஸார பந்தத்தையும் போக்கடிக்கும் திறமையுடையவன். “ப்ரக்ருதி ஸம்பந்தமும் அதன் கார்யமுமன்றோ ஸம்ஸாரமாவது. அது ஜீவனைப் போல் பரமாத்மாவுக்கும் உள்ளதே. எப்படியென்னில், அவன் ப்ருதிவி முதலிய ஸமஸ்த பூதங்களிலும் உட்புகுந்து அவற்றைச் சரீரமாக உடையவனென்கையால், அவனுக்கு ப்ரக்ருதி ஸம்பந்தமுண்டென்று ஸ்பஷ்டமாய்த் தெரிய வருகின்றது. ஆகையால் அவனும் நம்மைப் போல் ஒரு ஸம்ஸாரியேயாகையால், அவன் எப்படி தம்முடைய ஸம்ஸார பந்தத்தைப் போக்க வல்லனாவான்?” என்னில், சொல்லுகிறேன், கேட்பாயாக. 

ஸத்வாதிகுண ஸ்வரூபமாகிய மாயையென்னும் ப்ரக்ருதியானது அவனுக்குச் சரீரமாகி அவனிட்ட வழக்காயிருக்கும் தன்மையது. அந்த ப்ரக்ருதியை அவன் தன்னிஷ்டப்படி அடக்கி நடத்தும் திறமை உடையவனேயன்றி அவன் அதற்கு உட்பட்டவனன்று. ஜீவனோவென்றால் அந்த ப்ரக்ருதிக்கு உட்பட்டு அதன் ஸம்பந்தத்தினால் ஜ்ஞானஸங்கோசம் (அறிவு குறைவு) பெற்று தேஹாத்மப்ரமாதிகளுக்கு (இவ்வுடலே ஆத்மா என்றும், நாம் பகவானுக்கு உட்பட்டவர்களன்று; நாமே நம் இஷ்டப்படி செயல்படுபவர்கள் என்றும் மனக்கலக்கங்களுக்கு) இடமாகி ஸம்ஸாரபந்தம் (உலகியல் வாழ்க்கை என்கிற கட்டு) மாறப்பெறாது வருந்துகிறான். ஈச்வரன் அத்தகையனன்று; ஆகையால் ஜீவனைப் போல் அவனும் ஒரு ஸம்ஸாரியாக மாட்டான். ஆகையால் அவன் தன்னைப் பணிகின்ற நம்முடைய ஸம்ஸார பந்தத்தைப் போக்கும் திறமையுடையவனே. வாராய் உத்தான பாதனுடைய புதல்வனாகிய மன்னவனே! தர்ம அர்த்த காமங்கள் மூன்றில் நீ எதை மனத்தினால் விரும்புகின்றாயோ, அதை என்னிடம் வேண்டுவாயாக. நான் அதை உனக்கு நிறைவேற்றிக் கொடுக்கின்றேன். வாராய் த்ருவனே! ப்ரஹ்மாதிகளான தேவதைகளால் பூஜிக்கத் தகுந்தவனும் ஜ்ஞானாதி குணங்கள் நிறைந்தவனுமாகிய பத்மநாபனுடைய பாதாரவிந்தங்களில் நீ இடைவீடின்றி மிகுந்த மனவிருப்பமுடையவனென்று நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆகையால் உன்னிடத்தில் நான் ஸந்தோஷமுற்றிருக்கிறேன். ஆகையால் நீ விரும்பும் வரத்தை நான் கொடுக்க ஸித்தமாயிருக்கின்றேன். வரம் வேண்டுவாயாக; ஆனால் மோக்ஷத்தையொழிய மற்ற தர்ம அர்த்த காமங்களில் எதையேனும் வேண்டுவயாக.

மைத்ரேயர் சொல்லுகிறார்:- அந்த த்ருவன் பகவானிடத்தில் பக்தியுடையவன்; மிகுந்த மதியுடையவன்; சேதன அசேதன ஈச்வர தத்வங்களின் உண்மையை உள்ளபடி அறிந்தவன். பாகவதர்கள் தர்ம அர்த்த காமங்களை நரகம்போல் நினைப்பார்கள். அவர்களில் மேன்மையுற்ற அந்த த்ருவன் அத்தகைய தர்மார்த்த காமங்களை விரும்பமாட்டான் என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? அவன் இங்கனம் குபேரனால் வரம் வேண்டும்படி தூண்டப் பெற்றவனாகி பகவானிடத்தில் நினைவு மாறாதிருக்கும்படி வேண்டினான். பகவானிடத்தில் நினைவு மாறாதிருக்கப் பெறுவானாயின், எத்தகையர்க்கும் கடக்கமுடியாத தேஹாத்ம ப்ரமத்தையும் (இவ்வுடலே ஆத்மா என்ற மனக்கலக்கத்தையும்) அதன் மூலமாய் விளையும் ஸம்ஸார பந்தத்தையும் அனாயாஸமாகக் கடப்பான். ஆகையால் அவன் அதையே வேண்டினான். குபேரன் அவனுடைய வசனத்தைக் கேட்டு மிகவும் மனக்களிப்புற்று (மகிழ்ந்து) அவன் விரும்பினபடியே அவனுக்கு பகவானிடத்தில் நினைவு மாறாதிருக்கும்படி அருள்செய்து, அவன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே மறைந்தான். அந்த த்ருவனும், அங்கனம் வரம்பெற்றுத் தன் பட்டணத்திற்குப் போனான். அப்பால் அம்மன்னவன் புரோடாசம் முதலிய த்ரவ்யங்களும் ருத்விக்குக்களின் வ்யாபாரங்களும் இந்த்ரன் முதலிய தேவதைகளும் கணக்கில்லாத தக்ஷிணைகளும் அமைந்த பல யாகங்களால் பகவானை ஆராதித்தான். அந்த பகவானே யாகம் போன்ற கர்மங்களால் ஆராதிக்கப்படுபவன்; மற்றும், அந்த யாகாதி கர்மங்களின் பலனைக் கொடுப்பவன். அன்றியும், அவன் பாட்டன் முதலியவர் உபதேசித்தபடி ஸமஸ்த (எல்லா) வஸ்துக்களுக்கும் அந்தராத்மாவாயிருப்பவனும் ஸமஸ்த சப்தங்களுக்கும் பொருளாயிருப்பவனும் சுத்தஸத்வமயமான திவ்யமங்கள விக்ரஹம் (திருமேனி) உடையவனும்  ஸத்வாதி குணங்கள் தீண்டப் பெறாதவனும் தன்னைப் பற்றினவர்களைக் கைவிடாமல் பாதுகாப்பதையே பெரிய வ்ரதமாகவுடையவனும் ஜ்ஞானாதி குணங்கள் நிறைந்தவனுமாகிய பரமபுருஷனிடத்தில் இடைவீடின்றி எவ்விதத்திலும் தடைபடாத பக்தியின் பெருக்குடையவனாகத் தன்னிடத்திலும் ஸமஸ்த பூதங்களிலும் அந்த பகவானையே ஸாக்ஷாத்கரித்தான் (பார்த்தான்). நல்லியற்கை நன்னடத்தை முதலிய குணங்கள் நிறைந்தவனும் ப்ராஹ்மணர்களைப் பணிவதில் உறக்கமுடையவனும் தீனர்களிடத்தில் (எழை எளியவரிடத்தில்) வாத்ஸல்யம் (தாய் குழந்தையிடம் காட்டும் பரிவு) அமைந்தவனும் (தீனர்களின் தோஷங்களைப் பாராமல் அவர்களைப் பாதுகாப்பவனும்) தர்ம மர்யாதைகளை நிலைநிறுத்துபவனுமாகிய அந்த த்ருவனையே ப்ரஜைகளெல்லோரும் தந்தையாக நினைத்தார்கள். அவன் ஸுகானுபவங்களால் புண்யத்தையும் துக்கானுபவங்களால் பாபத்தையும் கழித்து (பரமபுருஷனைப் பெறுதற்கு விரோதியான புண்யபாபங்களையெல்லாம் அனுபவத்தினால் உதறி, இருபத்தாறாயிரம் வர்ஷங்கள் வரையிலும் பூமண்டலத்தைப் பாதுகாத்து வந்தான். இங்கனம் பல ஆண்டுகள் நிறைந்ததும் பல யாகங்களைச்செய்து தர்ம அர்த்த காமங்களைப் பெறக்கூடியதுமான நெடுங்காலம் ஜீவித்திருப்பினும் ஒருக்காலும் தத்தமது வலிமை மாறப்பெறாமல் திடமான இந்திரியங்களுடையவனாயினும் அவற்றை பகவானையொழிந்த வேறு விஷயங்களில் செல்லவொட்டாமல் தடுத்து ஜிதேந்த்ரியனாகவே அக்காலத்தையெல்லாம் கடத்திக் கடைசியில் ராஜ ஸிம்ஹாஸனத்தைத் தன் புதல்வனுக்குக் கொடுத்தான். அவன் தேவ மனுஷ்யாதி ரூபமான இந்த ப்ரபஞ்சமெல்லாம் ஜீவனிடத்தில் ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால் ஏற்பட்டதென்றும், அந்த ப்ரபஞ்சமெல்லாம் ப்ரக்ருதியின் பரிணாமமாகி (மாற்றமாகி) ஸ்வப்னத்தில் புலப்படுகிற கந்தர்வ நகரம் போல் நச்வரமென்றும்(அழியக்கூடியதென்றும்), ஜீவன் ஜ்ஞானஸ்வரூபனாகி என்றும் மாறாமல் அழியாதிருப்பவன் என்றும் நன்கு நினைத்திருந்தான். மற்றும் அவன் தேஹம், பெண்டிர், புதல்வர், நண்பர் இவைகளும் ஸம்ருத்தமான சதுரங்க ஸைன்யமும் அத்தகையதான கருவூலமும் அழகிய உத்யானவனம் முதலிய விளையாடுமிடங்களும் ஸமுத்ரங்களை அரைநூல் மாலையாகவுடைய பூமண்டலமும் காலத்திற்கு உட்பட்டு நிலையற்றிருப்பவையென்று நன்றாக ஆலோசித்துத் தெரிந்துகொண்டு ஸம்ஸாரத்தைத் துறந்து பதரிகாச்ரமத்திற்குப் போனான். அவன் அந்த பதரிகாச்ரமத்தில் மங்களமான ஜலத்தில் ஸ்னானம் செய்து இந்திரியங்களையெல்லாம் வேறு விஷயங்கள் எவற்றிலும் போகவொட்டாமல் தடுத்துப் பரிசுத்தனாகி ஸ்வஸ்திகம் முதலிய ஆஸனங்களில் இருந்து ப்ராணவாயுவை வென்று மனதினால் காது முதலிய இந்த்ரியங்களை அடக்கிக் கொண்டு ஸ்தூலமான பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தில் (திருமேனியில்) மனத்தை நிலைநிறுத்தி வேறு விஷயங்களில் மனம் செல்லப்பெறாதவனாகி அந்த திவ்யமங்கள விக்ரஹத்தையே த்யானித்துக் கொண்டிருந்து, அது மனத்தில் நிலைநின்ற பின்பு அதைவிட்டு அந்த பகவானுடைய திவ்யாத்ம ஸ்வரூபத்தை த்யானித்தான். இங்கனம் இடைவீடின்றி எப்பொழுதும் பகவானிடத்தில் மிகுந்த பக்தியை வளர்த்துக் கொண்டு வருகின்ற அந்த த்ருவன் தேஹாத்மாபிமானம் (இவ்வுடலே அத்மா என்ற தவறான எண்ணம்) தொலையப் பெற்று ஆனந்த நீர்களால் அடிக்கடி வருத்தமுற்றவனும் மனஉருக்கமுடையவனும் உடம்பு முழுவதும் மயிர்க் கூச்சலுடையவனுமாகி, தான் மனுஷ்யனென்றும் க்ஷத்ரியனென்றும் உத்தானபாதனுக்கு ஸுநீதியிடத்தில் பிறந்தவனென்றும் த்ருவனென்னும் பேருடையவனென்றும் இவை முதலிய வெளி ஆகாரங்கள் எவற்றையும் நினையாமல் தன்னை மறந்திருந்தான். அந்த த்ருவன் இப்படி இருக்கையில் ஒருக்கால், ஆகாயத்தில் உதிக்கின்ற பூர்ணசந்த்ரன்போல் பத்துத் திசைகளையும் ப்ரகாசிக்கச் செய்வதும் ஆகாயத்தினின்று இறங்குவதுமாகிய ஓர் மேலான விமானத்தைக் கண்டான். அப்பால் அந்த விமானத்தின் நுனியில் இரண்டு திவ்ய புருஷர்களைக் கண்டான். அவ்விருவரும் யௌவனப்பருவம் தொடங்கப்பெற்றவரும், நான்கு புஜங்களுடையவரும், கருத்த நிறத்தவரும், கதையை ஏந்திக் கொண்டிருப்பவரும், கிரீடம் ஹாரம் தோள்வளை இவை அணிந்தவரும், அழகிய குண்டலங்களுடையவருமாய் இருந்தார்கள். அந்த த்ருவன் அவர்கள் புண்யச்லோகனான பகவானுடைய கிங்கரர்களென்று (சேவகர்களென்று) தெரிந்துகொண்டு மது கைடபர்களைக் கொன்ற மஹானுபாவனான அந்த பகவானுடைய ஸபையில் முதன்மையுடையவரென்றும் கௌரவத்தினால் பரபரப்புற்று அவர்களுக்குச் செய்ய வேண்டிய பூஜையை மறந்து பகவானுடைய நாமங்களையே மொழிந்துகொண்டு அஞ்சலிஹஸ்தனாய் (கூப்பிய கையுடையவனாய்) நமஸ்காரம் செய்தான். அவன் பகவானுடைய பாதாரவிந்தங்களில் மிகுந்த ப்ரீதியுடன் நிலைநின்ற மனமுடையவனும் வணக்கத்தினால் தலை கவிழ்ந்தவனுமாயிருந்தான். அத்தகையனான அந்த த்ருவனைக் குறித்து பகவானுடைய கிங்கரர்களான ஸுநந்த நந்தர்களென்கிற அந்த திவ்யபுருஷர்கள் ப்ரீதியுடன் இங்கனம் மொழிந்தார்கள்.

ஸ்ரீவிஷ்ணு கிங்கரர்கள் சொல்லுகிறார்கள்:- வாராய் மன்னவனே! உனக்கு க்ஷேமம் உண்டாகுக. நாங்கள் சொல்லுவதை மனவூக்கத்துடன் கேட்பாயாக. நீ ஐந்து வயது பாலனாயிருக்கும் பொழுதே தவம் செய்து மஹானுபாவனான பகவானை மிகவும் திருப்தி அடையச் செய்தாய். ஸமஸ்த (எல்லா) லோகங்களையும் படைக்கும் திறமையுடையவனும், உலகத்தில் மேன்மை உடையவர்களென்று ப்ரஸித்தர்களான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் மேலாயிருப்பவனும் (ஸர்வேச்வரேச்வரனும்), சார்ங்கமென்னும் வில்லேந்தின மஹானுபாவனுமாகிய பகவானுடைய கிங்கரர்கள் (சேவகர்கள்) நாங்கள். உன்னை பகவானுடைய ஸ்தானத்திற்கு அழைத்துக் கொண்டு போவதற்காக நாங்கள் இவ்விடம் வந்தோம். அந்த ஸ்தானம் உன்னைத் தவிர மற்றவர்களால் எவ்வளவு வருந்தியும் ஸாதிக்க முடியாதது. அப்படிப்பட்ட பதவியை நீ வென்றாய். எல்லோர்க்கும் மேல் இருக்கின்ற ஸப்த ரிஷிகள் முதலிய மஹானுபாவர்களும் அந்த ஸ்தானத்தை அடைய முடியாமல் அதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். மற்றும் இந்த ஸ்தானத்தைச் சந்த்ரன் முதலிய க்ரஹங்கள் ப்ரதக்ஷிணமாகச் சுற்றுகின்றன. அத்தகையதான ஸ்தானத்திற்கு நீ வருவாயாக. அன்றியும், இந்த ஸ்தானம் ஸ்வாம்புவமனு முதலிய உன் தந்தை பாட்டன்மார்களாலும் மற்றவர்களாலும் அடையப்படாதது. அவர்கள் இந்த ஸ்தானத்தை எப்பொழுதும் அணுகினவரன்று. வாராய் த்ருவனே! இந்த ஸ்தானம் ஸமஸ்த லோகங்களாலும் பூஜிக்கத்தகுந்த மேன்மையுடையது. எல்லா பதவிகளிலும் மேலாயிருப்பது ஸ்ரீமஹாவிஷ்ணுவினுடையது. இப்படிப்பட்டதாகிய இந்தப் பதவியை நீ உன் தவ மஹிமையால் வென்றாய். இந்த ஸ்தானத்தை நீ அடைவாயாக. வாராய் வளர்ந்த வாழ்நாளுடையவனே! உத்தம ச்லோகர்களில் (மிகுந்த புகழுடையவர்களில்) சிறந்த பகவான் மேன்மையுடையதான இவ்விமானத்தை உனக்காக அனுப்பியிருக்கிறான். இந்த திவ்யவிமானத்தின் மேல் ஏறிக்கொள்வாயாக.

மைத்ரேயர் சொல்லுகிறார்:- ஸ்ரீவைகுண்டநாதனுடைய கிங்கரர்களில் முதன்மையுடையவரான அந்த ஸுநந்த நந்தர்கள் மொழிந்ததும் தேன்பெருக்கு போல் மிக்க இனியதுமான அந்த வசனத்தைக் கேட்டு பகவானிடத்தில் மிகுந்த ப்ரேமம் உடையவனாகிய த்ருவன் மங்களஸ்னானம் செய்து நித்யகர்மங்களை முடித்து மங்கள அலங்காரங்களைச் செய்துகொண்டு முனிவர்களை நமஸ்கரித்து அவர்களால் ஆசீர்வாதம் செய்யப்பெற்றான். அப்பால் அந்த விமானராஜனை ப்ரதக்ஷிணம்செய்து நமஸ்கரித்து முன்னிருந்த உருவமே மிகுந்த ஒளிப்பெருக்குடன் கூடி விளங்கப்பெற்று அந்த விமானராஜன்மேல் ஏறவிரும்பினான். அப்பொழுது துந்துபி வாத்யங்களும் ம்ருதங்கம் உடுக்கை முதலிய மற்றுமுள்ள பற்பல வாத்யங்களும் முழங்கின. மேன்மையுடையரான கந்தர்வர்கள் மிகவும் அற்புதமாக கானம் செய்தார்கள். பூமழைகள் பொழிந்தன. அந்த த்ருவன் தீனையான தாயைத் துறந்து நான் பிறர்க்குப் பெறமுடியாத ஸ்வர்க்கலோகம் போகின்றேனே. இனி நான் அவளை எப்பொழுது காணப்பெறுவேன்? அவள் வேறுகதியின்றி என்னையும் இழந்து எங்கனம் இருக்கப்போகிறாள்? என்று மாதாவை நினைத்துக் கொண்டான். இங்கனம் சிந்திக்கின்ற அந்த த்ருவனுடைய அபிப்ராயத்தை அறிந்து தேவச்ரேஷ்டர்களான ஸுநந்த நந்தர்கள், தேவதைகளில் தலைமையுள்ளவரால் கொண்டுவரப்பெற்ற திவ்ய விமானத்தின்மேல் ஏறிக்கொண்டு போகின்ற ஸுநீதிதேவியை அவனுக்குக் காண்பித்தார்கள். அவன் அங்கனம் விமானத்தின்மேல் வீற்றிருந்து போகின்ற மாதாவைக் கண்டு மனம் குளிரப்பெற்று, மற்றும் ஆங்காங்கு வழியில் விமானத்தின் மேல் ஏறிக்கொண்டு உலாவுகின்ற தேவதைகளால் புகழ்ந்து புஷ்பவர்ஷம் இறைக்கப்பெற்று ஸுர்யன் முதலிய க்ரஹங்களின் ஸ்தானங்களை க்ரமமாகக் கண்டான். அந்த த்ருவன் ஸுநந்த நந்தர்களென்கிற தேவச்ரேஷ்டர்கள் கொண்டு வந்த திவ்ய விமானத்தின்மேல் ஏறிக்கொண்டு மூன்று லோகங்களையும் ஸப்தரிஷிகளையும் தாண்டி அனைத்திற்கும் மேலாயிருப்பதும் கல்பம் வரையில் அழியாதிருப்பதுமாகிய விஷ்ணுவின் ஸ்தானத்தை அடைந்தான். அந்த ஸ்தானம் மற்றொன்றை எதிர்பாராமல் தனக்குத் தானே ப்ரகாசித்துக்கொண்டிருக்கும் தன்மையது. அதனுடைய தேஜஸ்ஸினால் இம்மூன்று லோகங்களும் ப்ரகாசிக்கின்றன. ஜந்துக்களிடத்தில் மனமிரக்கம் இல்லாதவர்கள் அந்த ஸ்தானத்தை அடையமாட்டார்கள். எவர்கள் ஸமஸ்த ஜந்துக்களிடத்திலும் க்ஷேமங்களையே செய்கின்றார்களோ, அவர்கள் அந்த ஸ்தானத்தை அடைவார்கள். (ஸத்யலோகம் சென்றவர்கள் மீண்டுவராமல் கல்பாவஸானம் (கல்பம் முடியும் காலம்)  வரையில் அங்கேயே இருந்து ப்ரஹ்மாவுடன் பரமபதம் போவது போல் த்ருவனுடைய ஸ்தானத்திற்குப் போகிறவர்களும் அங்கனமே கல்பம் முடிகிறவரையில் அவ்விடம் இருந்து அப்படியே பரமபதம் பெறுவார்கள்) மற்றும், தன்னைப் பற்றினவர்களைக் கைவிடாத மஹானுபாவனாகிய பகவானிடத்தில் மிகுந்த ப்ரேமமுடைய பாகவதர்களையே பந்துவாகப் பெற்றவரும் சமம் தமம் முதலிய குணங்கள் அமைந்தவரும் ஸமபுத்திகளும் (தேஹங்களெல்லாம் ப்ரக்ருதியின் பரிணாமங்களாகையால் ஒருபடிப்பட்டவையென்றும், ஜீவாத்மாக்கள் அனைவரும் ஜ்ஞானமே வடிவமாகப் பெற்றவராகையால் ஒருபடிப்பட்டவரென்றும், ஈச்வரன் ஸமஸ்த வஸ்துக்களுக்கும் அந்தர்யாமியாயிருக்கை முதலிய குணங்கள் அமைந்து ஒருவாறாயிருப்பவனென்றும் கண்டறிந்து பற்பலவகையான தேஹங்களையும் அவற்றிற்குள்ளிருக்கும் ஜீவாத்மாக்களையும் அவர்களுக்கு அந்தராத்மாவான ஈச்வரனையும் ஸமமாகப் பார்க்கும் தன்மையரும்) ஸமஸ்த பூதங்களையும் ஸந்தோஷப்படுத்துகின்றவரும் பெரும்பாலும் ஸித்தி பெற்றவருமாகிய பெரியோர்கள் எந்த ஸ்தானத்தை ஸுகமாக அடைவார்களோ, அப்படிப்பட்ட லோகத்திற்கு அவன் போனான். சமதமாதி (சம- மனதை அடக்குதல், தம- இந்த்ரியங்களை அடக்குதல்) குணங்களாலும் ஸமஸ்த பூதங்களிடத்திலும் நட்புசெய்கை முதலிய குணங்களாலும் நிறைந்தவரான சில புருஷர்கள் பரப்ஹ்மோபாஸனத்தில் (பரப்ரஹ்மத்தை த்யானம் செய்வதில்) நிலைநின்றிருப்பினும், ப்ராரப்த கர்மத்தின் (எந்த பயன் தர முன்வந்துள்ள கர்மத்தினால் தற்போதுள்ள சரீரம் ஏற்பட்டுள்ளதோ அந்த கர்ம ப்ராரப்த கர்ம எனப்படும்) மிகுதியாலும் போகேச்சையாலும் (உலக ஸுகத்தை அனுபவிக்க ஆசையாலும்) இடையூறுகளால் ப்ரஹ்மோபாஸனம் (பரப்ரஹ்மத்தை த்யானம் செய்வது) ஈடேறப் பெறாமல் (முழுமை அடையாமல்) ஸத்யலோகம் பெறுவதுபோல், த்ருவலோகம் சென்று அங்கு போகங்களை அனுபவித்த பின்பு பக்தியோகம் நிறைவேறப் பெற்றவராகி மோக்ஷம் பெறுகின்றார்கள். அப்படிப்பட்ட லோகத்தை அந்த த்ருவன் பெற்றான். பகவானையே ப்ராப்யமாகவும் (அடையப்படும் வஸ்துவாகவும்) ப்ராபகமாகவும் (அடைவதற்கு வழியாகவும்) பற்றியிருக்கிற அந்த த்ருவன் இங்கனம் மூன்று லோகங்களுக்கும் மேல்சென்று நிர்மலமான ஓர் சூடாமணிபோல் ப்ரகாசித்தான். வாராய் விதுரனே! மிகுந்த வேகமுடைய எருதுகளின் கூட்டம் புனையில் (வைக்கோல் போர் அடிக்க எருதைக் கட்டும் தூணில்) கட்டுண்டிருப்பதுபோல் ஸுர்யன் சந்திரன் முதலிய க்ரஹங்களும் அச்வினி முதலிய முக்கிய நக்ஷத்ரங்களும் மற்றுமுள்ள ஸாதாரண நக்ஷத்ரங்களும் ஆகிய ஆகாயத்திலுள்ள ஜ்யோதிஸ்ஸுக்களின் கூட்டமெல்லாம் இந்த த்ருவனிடத்தில் தொடுக்கப்பெற்று அவனையே எப்பொழுதும் சுற்றிக் கொண்டிருக்கின்றது. இத்தகையனான இந்த த்ருவனுடைய மஹிமையைப் பார்த்து மஹானுபாவரான நாரத மஹர்ஷி வீணை வாசித்துக்கொண்டே ப்ரசேதஸ்ஸுக்களின் ப்ரஹ்மஸத்ரத்தில் (ப்ரசேதஸ் போன்ற ரிஷிகள் செய்யும் ப்ரஹ்மஸத்ரம் என்ற பல நாள் செய்யும் யாகத்தில்) பகவானுடைய மஹிமையைப்பற்றி ப்ரஸங்கம் வரில் (ஸந்தர்ப்பம் வரும்போது) பகவானுடைய அனுக்ரஹித்தினால் பதவியைப்பெற்ற த்ருவனுடைய மஹிமையை இங்கனம் பாடினார்.

நாரதர் சொல்லுகிறார்:- பர்த்தாவையே (கணவனையே) தேவதையாகவுடைய ஸுநீதியின் புதல்வனாகிய த்ருவனுடைய தவத்தின் ப்ரபாவத்திற்கு நேர்ந்த பலனான பதவியையும் பகவானுடைய ஆராதனரூபமான அதன் உபாயங்களையும் கண்டு, வேதத்தை ஓதி உணர்ந்த மஹர்ஷிகளும் அவ்வுபாயங்களை ஆசரித்து (செய்து) அந்தகதியைத் தாம் பெறுதற்கு வல்லமையற்றிருக்கின்றார்கள். இனி மன்னவர்கள் அந்த கதியைப்பெற வல்லரல்லர் என்பது பற்றிச் சொல்லவேண்டுமோ? இந்த த்ருவன் தன்னுடைய தாயின் சக்களத்தியாகிய (கணவனின் மற்றொரு மனைவியான) ஸுருசியின் வார்த்தைகளாகிற பாணங்களால் பிளக்கப்பெற்று வருந்துகின்ற மனத்துடன் ஐந்து வயது பாலனாயிருக்கும் பொழுதே வனத்திற்குச் சென்று அங்கு என்னுடைய கட்டளையின்படி இருந்து ஒருவராலும் வெல்லமுடியாத பகவானை, அவனிடத்தில் பக்தியுள்ளவர் ஆசரிக்கிற நற்குணங்களால் ஸ்வாதீனப்படுத்திக்கொண்டான். பூமியிலுள்ள மற்றொரு க்ஷத்திரியன் பலவாயிரமாண்டுகள் பிரயத்னம் (முயற்சி) செய்யினும் அந்த த்ருவன் பெற்ற பதவியைப் பெறுதற்கு நெஞ்சால் விரும்பவும் வல்லனன்று. அந்த த்ருவன் ஐந்து வயது பாலனாயிருக்கும் பொழுதே சில நாட்களிலே பரமபுருஷனை அருள்புரியச் செய்து கொண்டு அப்படிப்பட்ட பதவியைப் பெற்றான்.

மைத்ரேயர் சொல்லுகிறார்:- வாராய் விதுரனே! நீ என்னை எதைப் பற்றி வினவினையோ, அதையெல்லாம் உனக்கு மொழிந்தேன். த்ருவன் மேலான புகழுடையவன். அவனுடைய சரித்ரம் ஸ்ரீவிஷ்ணு பக்தர்களுக்கு மிகவும் ஸம்மதமாயிருக்கும். இந்த த்ருவசரித்ரம் பணம் வேண்டுமென்னும் விருப்பத்தினால் கேட்கிறவர்களுக்கும் கேட்பிக்கிறவர்களுக்கும் பணத்தை ஸம்பாதித்துக்கொடுக்கும்; அங்கனமே யசஸ்ஸை (புகழை) விரும்புகிறவர்களுக்கு அதையும், ஆயுளை விரும்புகிறவர்களுக்கு அதையும் விளைக்கும். மற்றும் மங்களத்தைக் கொடுக்கும்; ஸ்வர்க்கத்தையும் கொடுக்கும்; த்ருவனுடைய ஸ்தானத்தையும் விளைக்கும்; மனவருத்தங்களை எல்லாம் போக்கும்; மேன்மையை விளைக்கும். (இதைக் கேட்கிறவர்களும் கேட்பிக்கிறவர்களும் அனைவரிலும் சிறப்புடையவர் ஆவார்கள்.) பாபங்களையெல்லாம் தொலைக்கும். தன்னைப் பற்றினவர்களைக் கைவிடாத பகவானிடத்தில் மிகுந்த ப்ரீதியுடையவனாகிய த்ருவனுடைய சரித்ரத்தை எவன் அடிக்கடி ச்ரத்தையுடன் கேட்கின்றானோ, அவனுக்கு பகவானிடத்தில் பக்தி உண்டாகும். பகவானிடத்தில் பக்தி உண்டாகுமாயின், அதனால் ஆத்யாத்மிகம் (உலகில் மனிதர்களுக்கு வரும் துன்பங்கள் மூன்று வகைப்படும். அவை 

1. ஆத்யாத்மிகம் - சரீரத்தைப் பற்றி வரும் தலை வலி, ஜலதோஷம் முதலிய நோய்களும், மனதைப் பற்றி வரும் காமம், கோபம், பயம் முதலியவையும்; 

2.ஆதிபெளதிகம் – மிருகம், பறவை, மனிதன் முதலியவற்றால் வருவன; 

3. ஆதிதைவிகம் – குளிர், வெப்பம், காற்று, மழை முதலியவற்றால் தெய்வீகமாக வருவன; 

முதலிய ஸம்ஸார தாபங்களெல்லாம் (துன்பங்களெல்லாம்) தொலையும். இந்த த்ருவசரித்ரம், எல்லோரிலும் மேன்மையுற்றிருக்க வேண்டுமென்று விரும்புகிறவர்களுக்கு அத்தகைய மேன்மையை விளைக்கும். இந்தச் சரித்ரத்தைக் கேட்கிறவர்களுக்கு சீலம் (நல்லொழுக்கம்) முதலிய குணங்கள் உண்டாகும். இந்த த்ருவ சரித்ரத்தைக் கேட்பதனால், தேஜஸ்ஸை விரும்புகிறவன் அதைப் பெறுவான்; பகவானிடத்தில் ஆழ்ந்த மனமுடையராயிருக்கும் தன்மையை விரும்புகிறவர்களுக்கு அத்தன்மை உண்டாகும். காலை மாலை இரண்டு வேளைகளிலும் மனவூக்கமுடையவனாகி ப்ராஹ்மணர்களின் ஸபையில், புண்யச்லோகனாகிய (பரிசுத்தமான புகழுடையவனும், பரிசுத்தர்களால் புகழத் தகுந்தவனுமாகிய) இந்த த்ருவனுடையதான பெரிய சரித்ரத்தைப் பாராயணம் செய்வானாயின், அவனுடைய விருப்பங்களையெல்லாம் இது நிறைவேற்றிக் கொடுக்கும். பௌர்ணமி, அமாவாஸ்யை, ச்ரவண (திருவோண) நக்ஷத்ரத்துடன் கூடின தினம், ஞாயிற்றுக்கிழமை, ஸப்தமி திதி இவைகளில் இந்த த்ருவ சரித்ரத்தைப் பாராயணம் செய்வானாயின், விருப்பங்களெல்லாம் கைகூடப் பெறுவான். இந்த த்ருவ சரித்ரம் எவன் எதை விரும்பினும் அதையெல்லாம் நிறைவேற்றிக் கொடுக்குக் தன்மையது. கங்கையென்னும் புண்ய தீர்த்தத்திற்கு உத்பத்தி ஸ்தானமாகிய பாதாரவிந்தத்தையுடைய பகவானுடைய பாதாரவிந்தங்களைப் பற்றியிருக்கும் பாகவதன் எதையும் விரும்பாமல் கேட்கவேண்டுமென்னும் ச்ரத்தை உடையவர்களுக்கு இந்த த்ருவசரித்ரத்தை மொழிவானாயின், அவனிடத்தில் பகவான் ஸந்தோஷம் அடைந்து அவனுக்கு மோக்ஷஸித்தியைக் கொடுப்பான். சித்து, அசித்து, ஈச்வரன் என்கிற மூன்று தத்வங்களின் உண்மையை அறியாத ஒருவனுக்கு, பெரியோர்கள் கொண்டாடுவதும் அழிவில்லாததும் பகவானுடைய பதவியை அறிவிப்பதுமான தத்வஜ்ஞானத்தை உட்கொண்டதாகிய இந்த த்ருவ சரித்ரத்தை மொழிவானாயின், அவன் தயாளுவென்றும் தீனர்களுக்கு (புகலற்றவர்களுக்கு) நாதனென்றும் புகழப்படுவான். மற்றும், அத்தகையனான அவனுக்கு தேவதைகள் அனைவரும் அனுக்ரஹம் செய்வார்கள். வாராய் கௌரவ குலாலங்காரனே! இந்த த்ருவசரித்ரம் ப்ரஸித்தமானது: கேட்பவர்களின் பாபங்களையெல்லாம் போக்கும்படியான தூய்மையுடையது. அப்படிப்பட்ட த்ருவசரித்ரத்தை உனக்கு மொழிந்தேன். இந்த த்ருவன் குழந்தையாயிருக்கும் பொழுதே மாதாவினுடைய ஸந்நிதானத்தையும் விளையாட்டுக் கருவிகளான பூம்புட்டில் முதலியவைகளையும் துறந்து ஸ்ரீமஹாவிஷ்ணுவைச் சரணமடைந்தான். அவனுடைய மன உறுதியை என்னென்று சொல்லுவேன்? அப்படிப்பட்ட அந்த த்ருவனுடைய சரித்ரத்தையெல்லாம் உனக்கு மொழிந்தேன். 

பன்னிரண்டாவது அத்தியாயம் முற்றிற்று

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை