நான்காவது ஸ்கந்தம் – பதினொன்றாவது அத்தியாயம்
(த்ருவன் நாராயணாஸ்தரத்தினால் சத்ருக்களை வதித்தலும், அதனால் யக்ஷர்களெல்லோரும் பாழாவதைக் கண்டு ஸ்வாயம்புவமனு தானே நேரில் வந்து தத்வோபதேசம் செய்து [தத்வங்களை உபதேசித்து] அவனை ஸமாதானப்படுத்தலும்)
மைத்ரேயர் சொல்லுகிறார்:- இங்ஙனம் ரிஷிகள் சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டு த்ருவன் உடனே ஆசமனம் செய்து தன் தனுஸ்ஸில் (வில்லில்) நாராயண அஸ்த்ரத்தைத் தொடுத்தான். இந்த நாராயணாஸ்த்ரத்தை எடுத்து ப்ரயோகிக்கையில், வாராய் விதுரனே! யக்ஷர்கள் நிர்மித்த (உண்டாக்கின) மாயைகளெல்லாம், ஜ்ஞானோதயத்தில் ராகம் த்வேஷம் முதலிய க்லேசங்களெல்லாம் (துண்பங்களெல்லாம்) தொலைவதுபோல், உடனே நாசமடைந்தன. ரிஷிகளில் முதன்மையான நாராயணனிடத்தினின்று உண்டானதாகிய அந்த அஸ்த்ரத்தை த்ருவன் தனுஸ்ஸில் தொடுக்கையில், ஸ்வர்ணமயமான பிடிகளுடையவைகளும் கலஹம்ஸங்களின் (ஆண் அன்னங்களின்) இறகுகள் கட்டப் பெற்றவைகளுமான பாணங்கள் அந்த தனுஸ்ஸினின்று வெளிப்பட்டுச் சத்ருக்களின் ஸைன்யத்தின்மேல் பயங்கரமான கோஷத்துடன் ப்ரவேசித்தன. அவைகள் அந்த சத்ரு ஸைன்யத்தின்மேல் ப்ரவேசிப்பது கண்டால், மயில்கள் பயங்கரமாக ஒலித்துக்கொண்டு வனத்தில் புகுவது போலிருந்தது. கூரிய நுனியுடைய அந்த பாணங்களால் யுத்தத்தில் அடிக்கப்பட்ட அந்த யக்ஷர்கள் கோபாவேசமுற்று, ஸர்ப்பங்கள் கருடனை எதிர்ப்பதுபோல், ஆயுதங்களை மேல் தூக்கிக்கொண்டு நாற்புறங்களிலும் அந்த த்ருவன்மேல் எதிர்த்தோடினார்கள். அங்கனம் எதிர்த்து ஓடிவருகின்ற அந்த யக்ஷர்கள் எல்லோரையும் பாணங்களால் கைகளும் துடைகளும் கழுத்துக்களும் வயிறுகளும் அறுப்புண்டு விழும்படி அடித்துப் பரலோகத்திற்கு அனுப்பினான். அங்கனம் அடியுண்ட அந்த யக்ஷர்கள், ஸம்ஸாரத்தில் ஸமஸ்த (எல்லா) ஸங்கங்களையும் (பற்றுதலையும்) துறந்த ஸந்யாஸிகள் ஸுர்ய மண்டலத்தை பேதித்துக்கொண்டு போய்ச் சேரும்படியான பரலோகத்திற்குப் போனார்கள். அற்புதமான ரதமுடைய த்ருவன் இங்கனம் நிரபராதிகளான அந்த யக்ஷர்கள் எல்லோரையும் வெகுவாய் வகித்துக்கொண்டிருப்பது கண்டு த்ருவனுடைய பாட்டனாகிய ஸ்வாயம்புவமனு மன இரக்கம் உண்டாகப்பெற்று மஹர்ஷிகளுடன் அவனுக்கு அருகாமையில் வந்து அவனைப் பார்த்து இங்கனம் மொழிந்தான்.
மனு சொல்லுகிறான்:- வாராய் குழந்தையே! மயக்கமாகிற அஜ்ஞானத்திற்கு ஹேதுவாயிருப்பதும் அதன் மூலமாய் நரகத்தை விளைவிப்பதுமாகிய ரோஷத்தினால் (ஆத்திரத்தினால்) செய்தது போதும். இந்த ரோஷத்தினால் நிரபராதிகளான இந்த யக்ஷர்களையெல்லாம் நீ எதிர்த்து விட்டாய். அப்பனே! இக்கார்யம் பெரியேர்களால் நிந்திக்கத்தக்கதேயன்றி அவர்க்கு ஸம்மதமன்று. ஆகையால் இத்தகைய கார்யம் நமது வம்சத்திற்குத் தகுந்ததன்று. நீ நிரபராதிகளான யக்ஷர்களை வதிக்கத் தொடங்கினாய். இது தவறான கார்யமேயன்றி ஸரியன்று. ஆனால், நீ ப்ராதாவினிடத்தில் மிகுந்த ப்ரேமமுடையவன். அப்படிப்பட்ட உன் ப்ராதாவை வதித்தமைபற்றி நீ மனவருத்தமுற்று இவர்களை வதிக்கின்றாய். ஆயினும் இது யுக்தமன்று (ஸரியன்று). ஏனென்னில், இவர்களில் ஒருவனே உன் ப்ராதாவைக் கொன்றவன். அந்த ஒருவனுடைய அபராதத்திற்காக அவனோடு ஸம்பந்தமுடைய பலரையும் அடித்து முடித்தாய். ஒருவனுடைய அபராதத்திற்காகப் பலரையும் வதிப்பது யுக்தமன்று (ஸரியன்று). மனத்தை அடக்காமல், உபேக்ஷிக்கத் தக்கதாகிய (ஒதுக்கத்தக்கதாகிய) தேஹத்தையே (சரீரத்தையே) ஆத்மாவாக ப்ரமித்துப் பசுக்களைப் போல் ப்ராணிகளை ஹிம்ஸிக்கையென்பது, பகவானிடத்தில் பக்தியுடைய ஸாதுக்கள் ஆதரிக்கும் மார்க்கமன்று. “ஆமாம். இது பகவத் பக்தர்கள் ஆசரிக்கும் (பின்பற்றும்) மார்க்கமன்றென்பது (வழியன்று என்பது) வாஸ்தவம் (உண்மை). ஆயினும் அத்தகையனல்லாத நான் இவ்வழியில் போவது யுக்தமே” என்று நீ சொல்லலாகாது. ஸமஸ்த ப்ராணிகளிலும் நிறைந்து நிற்பவனும் அவனுக்கு உட்படாமல் ஸ்வதந்த்ரமான வஸ்துக்கள் உண்டென்று நினைக்கிற அஜ்ஞானிகளால் ஆராதிக்க முடியாதவனும் தன்னைப் பற்றினாருடைய பாபங்களைப் போக்கும் தன்மையனுமாகிய பகவானை நீ ஆராதித்து, இதற்கு மேற்பட்டது மற்றொன்றும் இல்லை என்னும்படி எல்லாவற்றிலும் சிறந்ததும் ப்ரஸித்தி பெற்றதுமாகிய விஷ்ணுவின் ஸ்தானத்தைப் பெற்றாய். உனக்கு அவன் அத்தகைய ஸ்தானத்தைக் கொடுத்தான். நீ இந்த தேஹாவஸனத்தில் (சரீர முடிவில்) ஸித்தமாக அந்த ஸ்தானத்தை அடையப் போகின்றாய். இப்படி நீ பகவானை நெடுநாள் ஆராதித்து அவனிடத்தில் பக்தியுடையவனாகையால், நீ இத்தகைய பாபிஷ்டமான கார்யத்தைச் செய்வது யுக்தமன்று (ஸரியன்று). நீ பகவானிடத்தில் பக்தியுடையவனாயிருப்பதைக் கண்டு, அந்த பகவத் பக்தரான பெரியோர்கள் உன்னைக் கொண்டாடுகின்றார்கள். நீ ஸாதுக்களால் பாகவதோத்மனென்று புகழப்பெற்றவன். இப்படிப்பட்ட நீ ஸாதுக்கள் ஆசரிக்கும் (பின்பற்றும்) நடத்தையை உலகத்திலுள்ளவர் அறிந்து தாமும் ஆசரிக்கும்படி (பின்பற்றும்படி) அவர்க்குக் கற்பிக்கவேண்டியவன். அங்கனமே இதுவரையில் நடந்து வருகின்றாய். இப்படிப்பட்ட நீ வாயால் சொல்லவும் தகாத பாபிஷ்ட கார்யத்தைச் செய்தாய். பகவத் பக்தனாகிய உனக்கு இது தகுதியன்று. “ப்ராணிகளுக்கு த்ரோஹம் செய்வதனால் பகவத் பக்திக்கு என்ன கெடுதி?” என்னில், சொல்லுகிறேன், கேட்பாயாக.
அபராதம் செய்தவரிடத்தில் பொறுமையும் துக்கிப்பவரிடத்தில் மன இரக்கமும் பற்பல வகைப்பட்ட தேஹங்களையுடைய (சரீரங்களையுடைய) ஸமஸ்த (எல்லா) ஜந்துக்களிடத்திலும் (பிராணிகளிடத்திலும்) ஸ்னேஹமும் (அன்பும், நட்பும்) “தேவமனுஷ்யாதி தேஹங்கள் (சரீரங்கள்) பேதித்திருப்பினும் (வேறுபட்டிருப்பினும்) அவற்றிலுள்ள ஜீவாத்மாக்கள் அனைவரும் ஒருவகைப்பட்டவர்களே. ஆகையால் அவர்களுக்கு பேதமே கிடையாது” என்று பாவித்து ஸமஸ்த ஜந்துக்களையும் தன்னோடு ஸமமாக பாவித்து அவைகளுக்கு ஹிதம் (நன்மை செய்கையும்) தேவாதி சரீரங்களெல்லாம் ப்ரக்ருதியின் பரிணாமங்களாகையால் ஒருபடிப்பட்டவையென்றும், ஜீவாத்மாக்கள் எல்லோரும் ஜ்ஞானமே வடிவமாயிருக்கப் பெற்றவராகையால் ஒருபடிப்பட்டவரென்றும் பரமாத்மா ஸமஸ்த வஸ்துக்களிலும் நிறைந்திருப்பவனென்றும் நினைத்து எல்லாவற்றையும் ஸமமாக பாவிக்கையுமாகிய இவைகளால், ஸமஸ்த வஸ்துக்களுக்கும் அந்தராத்மாவாகிய பகவான் அருள்புரிவான். ஈச்வரன் ஸமஸ்த வஸ்துக்களிலும் உட்புகுந்து நிறைந்து அவற்றின் ஸத்தை முதலியவற்றையெல்லாம் (இருப்பு, நீடிப்பு, அழிப்பு ஆகியவற்றையெல்லாம்) நிறைவேற்றிக்கொண்டு இவையெல்லாம் ஈச்வரனே என்னும்படி இருக்கிறானாகையால் எந்த ப்ராணிக்கு த்ரோஹம் செய்யினும் அது அவ்வஸ்துவில் நிறைந்து அதன் ஸத்தை முதலியவற்றையெல்லாம் நிர்வஹித்துக்கொண்டு அதுவே இவனென்னும்படியிருக்கிற ஈச்வரனுக்கு த்ரோஹம் செய்ததேயாம். ஆகையால் அந்த பகவானிடத்தில் பக்தியுடையவர் அவனுடைய சரீரங்களாகிய எந்த ப்ராணிகளுக்கும் த்ரோஹம் செய்ய நினைக்கமாட்டார்கள். ஒருவன் மற்றொருவனிடத்தில் ப்ரீதியோடிருப்பானாயின், அவன் மற்றவனுடைய சரீரத்தில் எவ்வகைக் கெடுதியையும் செய்ய நினைக்க மாட்டானல்லவா? அங்கனமே ஜகத்தெல்லாம் பரமபுருஷனுக்குச் சரீரமாகையால், அவனிடத்தில் பக்தியுடையவர் அவனது சரீரமாகிய ஜகத்திற்கு எவ்விதமான த்ரோஹத்தையும் செய்யலாகாது. ஸமஸ்த ஜந்துக்களும் பகவானுடைய சரீரமென்னும் புத்தியால் எதற்கும் த்ரோஹம் செய்யாதிருப்பானாயின், அவனிடத்தில் பகவான் சீக்ரத்தில் அனுக்ரஹம் செய்வான். “அவனுடைய அனுக்ரஹத்தினால் என்ன ப்ரயோஜனம்” என்னில், சொல்லுகிறேன், கேட்பாயாக.
ஸமஸ்த ப்ராணிகளிடத்திலும் பகவான் நிறைந்திருக்கிறானென்று தெரிந்து கொண்டு அத்தகைய பகவானை உபாஸிக்கின்ற புருஷன் தன் குணங்களைக் கண்டு ஸந்தோஷித்து பகவான் தன்னிடத்தில் நன்றாக அருள்புரியப்பெற்று, ஜீவித்திருக்கும் பொழுதே காமம் கோபம் முதலிய துர்குணங்களெல்லாம் (கெட்ட குணங்களெல்லாம்) தொலைந்து கடைசியில் ப்ரக்ருதியினின்று நன்றாக விடுபட்டு மஹாநந்தரூபமான பரப்ரஹ்மத்தை அடைவான். ஆகையால் பகவானுடைய அனுக்ரஹம் பெறுதற்காக அவனது சரீரமாகய ஸமஸ்த ப்ராணிகளிடத்திலும் நட்புடனிருக்கவேண்டுமேயன்றி அவற்றிற்கு த்ரோஹம் செய்யலாகாது. மற்றும், நீ உன் ப்ராதாவைக்கொன்றது பற்றியல்லவோ யக்ஷர்கள் மேல் கோபங்கொண்டு அவர்களை வதிக்கின்றாய். உன் ப்ராதாவைக் கொன்றதாக நீ நினைத்திருப்பதே சரியன்று. ப்ராதாவும் வதிக்கப்படவில்லை. யக்ஷர்களும் வதித்தவரல்லர். தெய்வமே காரணமன்றி யக்ஷர்மேல் என்ன அபராதம்? பிறத்தலும் சாதலுமாகிய இவை சரீரத்திற்கேயன்றி ஆத்மாவுக்கு அவை கிடையாது. ஆகையால் நீ நினைத்திருப்பது யுக்தமன்று (ஸரியன்று). அதைப் பற்றி நீ வருந்துவதும், அந்த வருத்தத்தினால் நிரபராதிகளான இந்த யக்ஷர்களை வதிப்பதும் சரியன்று. ஆணென்றும் பெண்ணென்றும் இரண்டுவிதமாகப் பிரிந்திருக்கின்ற ஜந்துக்களின் சரீரமெல்லாம் ப்ருதிவி அப்பு தேஜஸ்ஸு வாயு ஆகாசம் என்கிற பஞ்சபூதங்களால் எற்பட்டவை. அந்த ஸ்த்ரீ புருஷர்கள் ஒருவரோடொருவர் கலந்து ஸம்போகிப்பதால் ஆணென்றும் பெண்ணென்றும் இருவகைப்பட்ட ப்ரபஞ்சத்திலுள்ள ஜந்துக்களெல்லாம் மேன்மேலும் வளர்ந்து வருகின்றன. பஞ்சபூதங்களின் பரிணாமமும் ஆண் பெண்ணென்று இருவகைப்பட்டதுமாகிய இரண்டு சரீரங்களின் ஸம்பந்தத்தினால் உண்டாகின்ற ப்ராணி ஸமூஹமெல்லாம் பஞ்சபூத ஸ்வரூபமாயிருப்பதே அன்றி வேறன்று. வாராய் மன்னவனே! எப்படி ஸ்த்ரீ, புருஷஸ்வரூபமான (பெண், ஆண் என்ற) ஜந்துக்களெல்லாம் அந்த ஸ்த்ரீ புருஷர்கள் ஒருவரோடொருவர் கலந்து புணர்வதால் உண்டாகின்றனவோ, அங்கனமே பரமாத்மாவின் சரீரமாகிய மாயையின் குணங்களான ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்களின் தாரதம்யத்தினால் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்கள் மூன்றும் நடக்கின்றன. ஸத்வமும் தமஸ்ஸும் அடங்கி ரஜோகுணம் மாத்ரம் தலையெடுக்கையில் ஸ்ருஷ்டியும், ரஜஸ்ஸும் தமஸ்ஸும் அடங்கி ஸத்வம் மாத்ரம் தலையெடுக்கையில் ஸ்திதியும், ஸத்வமும் ரஜஸ்ஸும் அடங்கித் தமஸ்ஸு மாத்ரம் தலையெடுக்கையில் ஸம்ஹாரமும் உண்டாகின்றன. மூன்றும் ஸமமாயிருக்கையில் மூன்றும் உண்டாகிறதில்லை. அதுவே ப்ரளய தசை. “வாஸ்தவம் (உண்மை). ஸ்த்ரீபுருஷ சரீரங்களும் ஸத்வாதி குணங்களும் அசேதனங்களாகையால் அவற்றிற்கு ஸ்த்ரீபுருஷ சரீரங்களையும் ஸ்ருஷ்டி முதலிய கார்யங்களையும் நிறைவேற்றும்படியான ஸாமர்த்யம் எப்படி உண்டாகக் கூடும்? ஸாமர்த்யம் உண்டாயினும், தேவ மனுஷ்யாதி சரீரங்கள் ஒன்றைவிட ஒன்று விசித்ரமாயிருக்கையும் ஒருவன் ஸுகிக்கையும் ஒருவன் துக்கிக்கையும் ஆகிய இவை எங்கனம் பொருந்தும்?” என்னில் சொல்லுகிறேன், கேட்பாயாக.
ஸத்வாதி குணங்கள் மஹத்து முதலிய தத்வங்களாகப் பரிணமிக்கும் (மாறும்) விஷயத்திலும், அம்மஹத்து முதலிய தத்வங்கள் தேவ மனுஷ்யாகி தேஹங்களாய்ப் (சரீரங்களாய்) பரிணமிக்கும் விஷயத்திலும், தேவ மனுஷ்யாதி சரீரங்கள் ஒன்றோடொன்று வேறுபட்டு விசித்ரமாயிருப்பதிலும், அந்த தேவ மனுஷ்யாதி ஜந்துக்களுக்கு ஸுக துக்கங்கள் உண்டாகும் விஷயத்திலும், புருஷ ச்ரேஷ்டனாகிய ஈச்வரன் நிமித்த மாத்ரமேயன்றி, அவனே இவற்றையெல்லாம் இவ்வாறு செய்கிறானல்லன். அவன் ஸ்ருஷ்டிக்கு ஸங்கல்பித்த மாத்ரத்தில் ஜீவாத்மாக்களின் புண்ய பாபரூபமான கர்மத்தினால் அங்கனம் பலவாறு பரிணாமங்கள் உண்டாகின்றன. ஒருவன் ஸுகிப்பதற்கும் ஒருவன் துக்கிப்பதற்கும் அந்தந்த ஜீவனுடைய கர்மமே காரணம். அயஸ் காந்தத்தினருகில் இரும்பு சுழல்வதுபோல், ப்ரதானமெனப்படுகிற ப்ரக்ருதியும் அதன் கார்யமான மஹத்து முதலிய தத்வங்களும் பரமபுருஷன் நிமித்தமாயிருக்கையில் தாமே தமது கார்யங்களை நடத்துகின்றன. பரமபுருஷன் நிமித்த காரணமாயிருந்து ஸங்கல்பித்த மாத்ரத்தில், ஜீவாத்மாக்களின் கர்மத்திற்குத் தகுந்தபடி ப்ரக்ருதி மஹத்து முதலிய தத்வங்களாகவும், அந்த மஹத்து முதலிய தத்வங்கள் தேவ மனுஷ்யாதி ப்ராணிகள் அடங்கின இந்தப் ப்ரபஞ்சமாகவும் பரிணமிக்கின்றன. பகவானுடைய ஸங்கல்பமில்லாமல் ப்ரக்ருதிக்கும் மஹத்து முதலிய தத்வங்களுக்கும் ஸ்ருஷ்டி ஸாமர்த்யம் உண்டாகாது. பகவானே அவற்றிற்கு ஸ்ருஷ்டி ஸாமர்த்யத்தை விளைக்கின்றான். அங்கனம் ஸாமர்த்யம் கொடுக்கப்பெற்ற ப்ரக்ருதியும் மஹதாதி தத்வங்களும் தத்தமது கார்யங்களைப் படைக்கின்றன. தேவ மனுஷ்யாதி சரீரங்கள் ஒன்றைக் காட்டிலும் ஒன்று விசித்ரமாயிருப்பதற்கும் ஸுகதுக்கங்களுக்கும் ஜீவாத்மாக்களின் புண்ய பாபரூபமான கர்மமே காரணம். பரமபுருஷன் ஜீவாத்மாக்களைப் போல் ஸத்வாதி குணங்களுக்கு உட்பட்டவனல்லன். ஆகையால் அவனுக்கு ராகம் த்வேஷம் முதலிய துர்குணங்கள் எவையும் கிடையாது. ஆனதுபற்றி, அவன் ஒருவனைத் தேவனாகவும் ஒருவனை மனுஷ்யனாகவும் மற்றொருவனை மாடாகவும் மற்றவர்களை மற்றும் பலவாறாகவும் ஸ்ருஷ்டிக்கிறானல்லன். அவரவர் தத்தமது கர்மத்தின்படி அவ்வவ்வாறு பிறக்கிறார்கள். பக்ஷபாத முடையவனன்றோ (ஓரவஞ்சனை உடையவனன்றோ) இங்கனம் பேதம் பாராட்டுவான். மனத்தில் இரக்கமில்லாதவனே பிறர்க்கு துக்கத்தை விளைவிப்பான். ஈச்வரனுக்குப் பக்ஷபாதமாவது மன இரக்கமில்லாமையாவது சிறிதும் கிடையாது. ஆகையால் அவனே இங்கனம் படைக்கிறானென்று சொல்லலாகாது. அவரவர் ஜன்மாந்தரத்தில் அவரவர் செய்த புண்ய பாபரூபமான கர்மங்களின் பலனாக தேவ மனுஷ்யாதியாகப் பிறப்பதும் ஸுக துக்கங்களை அனுபவிப்பதுமாய் இருக்கின்றார்கள். இது ஈச்வரன் செய்கிறதன்று. அந்த ஸர்வேச்வரன் கெட்ட குணங்கள் எவையும் தீண்டப்பெறாமல் ஜ்ஞானாதி குணங்களாலும் நிறைந்திருப்பவன். அவன் காலமென்னும் தன்னுடைய சக்தியால் ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்களென்கிற ப்ரக்ருதியின் குணங்களை விகாரம் அடையச் செய்து அதனால் ப்ரபஞ்சத்தைப் படைக்கின்றான். அவன் தான் செய்யாதவனாகவேயிருந்து செய்கின்றான். தான் அடிக்காமலேயிருந்து அடிக்கின்றான். அவன் ஒருவனால் தூண்டப்பெற்று ஒன்றையும் செய்பவனன்றாகையால் செய்யாமலேயிருக்கிறானென்பதும், ப்ரபஞ்சத்தை அந்தந்தச் செயல்களில் அவனே தூண்டுகிறானாகையால், அவனே எல்லாவற்றையும் செய்கிறானென்பதும் பொருந்தும். செய்கையும் செய்யாமையுமாகிய இவ்விரண்டும் ஒரே வஸ்துவில் ஒரே ஸமயத்தில் கூடுமவையன்று. ஆயினும், அவனுடைய மஹிமையால் அவ்விரண்டும் ஒரே ஸமயத்தில் சேருகின்றன. அவனுடைய செயல் இத்தகையதென்று நிரூபிக்க முடியாதது. காலத்தைச் சரீரமாகவுடைய அந்தப் பரமாத்மாவானவன் தந்தை முதலிய ஜனங்களால் பிள்ளை முதலிய ஜனங்களைப் படைக்கின்றான். ஆகையால் அவன் ஆதிகர்த்தாவென்று கூறப்படுகிறான். அங்கனமே தன் ஸங்கல்பத்தினால் நாசமடைய முயன்ற ஜந்துக்களை ம்ருத்யுவைக்கொண்டு மரணம் அடையச் செய்கின்றான். அவன்தான் ஆதி (முதலும்) அந்தம் (முடிவும்) இல்லாதவன்; என்றும் நாசமில்லாதவன்; தான் முடிவில்லாதவனாகிப் பிறர்க்கு முடிவை விளைவிப்பவன்; தந்தை முதலியவர் மூலமாய் உற்பத்தியையும் ம்ருத்யு முதலியவர் மூலமாய் முடிவையும் நடத்துகிறானேயன்றித் தானே நேரில் நடத்துகிறானல்லன். எதையும் தான் நேரில் செய்யாமல் பிறர் மூலமாய்ச் செய்கிறானாகையால், அவனிடத்தில் செய்கையும் செய்யாமையுமாகிய இரண்டும் பொருந்துகின்றன. அவன் விசித்ரமான பலவகைச் சக்திகள் அமைந்தவனாகையால், அவனிடத்தில் கூடாதவைகளும் கூடுகின்றன. ஆனால் ஈச்வரனே ப்ரஞ்சத்திலுள்ள ப்ராணிகள் எல்லோரையும் அந்தந்தச் செயல்களில் தூண்டுகிறானாயின், சிலரைக் கெட்ட கார்யங்களிலும் சிலரை நற்கார்யங்களிலும் தூண்டுகிறானாகையால், அவனுக்குப் பக்ஷபாதமும் (ஓரவஞ்சனையும்) தயையில்லாமையும் ஏற்படுமே” என்று சங்கிக்க (ஸந்தேஹிக்க) வேண்டாம். ஏனென்னில், அதற்குக் காரணம் சொல்லுகிறேன், கேட்பாயாக.
ஜீவனைப்போல் ஸம்ஸாரத்திற்கு உட்படாதவனும் ம்ருத்யுவை சரீரமாகவுடையவனும் பக்ஷபாதமில்லாமல் அவரவர் செய்த கர்மங்களுக்குத் தகுந்தபடி அவரவர்களை நியமிக்கும் பொருட்டு அவர்க்குள் அந்தராத்மாவாய் ப்ரவேசிப்பவனுமாகிய பரமபுருஷனுக்கு ஸ்வபக்ஷனென்றும் (தன்னைச் சேர்ந்தவனென்றும்) விபக்ஷனென்றும் (தன்னைச் சேராதவனென்றும்) பேதபுத்தி (மாறுபட்ட புத்தி) கிடையாது. அவன் தன்னுடையவனென்றும் பிறனென்றும் பேதம் பாராட்டுந்தன்மையனல்லன். அவன் ப்ரபஞ்சத்திலுள்ள ஸமஸ்த ப்ராணிகளிடத்திலும் ஒருவாறாகவே உட்புகுந்திருக்கிறானன்றி, அதில் அவன் வைஷம்யம் (வேறுபாடு) செய்கிறதில்லை. ஆனால் எல்லோரையும் ஏன் நற்கார்யங்களில் தூண்டுகிறதில்லை என்னில், ப்ராணிகளை நற்கார்யத்திலாவது கெட்ட கார்யத்திலாவது அவன் தனது விருப்பத்தின்படி தூண்டுகிறானல்லன்; அவருடைய கர்மத்தின்படி நல்ல கார்யத்திலும் கெட்ட கார்யத்திலும் தூண்டுகிறான். காற்று வீசும்பொழுது தூசிகள் அதைத் தொடர்ந்து செல்வதுபோல், அவரவர் கர்மத்தின்படி (விதிப்படி) நியமனம் செய்கின்ற பரமாத்மாவை ப்ராணி ஸமூஹங்கள் தொடர்ந்து செல்கின்றன. ப்ராணிகள் எந்தக் கார்யத்திலும் தமக்குத் தாமே முயற்சி செய்யும் தன்மையரல்லர். கர்மத்தின்படி ஈச்வரனால் தூண்டப்பெற்றே முயல்கின்றனர். அனைத்திற்கும் அந்தராத்மாவான ஸர்வேச்வரன் கர்மத்திற்கு உட்பட்டிருப்பதும் அந்தக் கர்மத்தின் மூலமாய் விளையும் ஸுகதுக்கங்களை அனுபவிப்பதுமாகி இயற்கையிலேற்பட்ட நிலைமை தவிர்த்து வருந்துகின்ற ப்ராணியின் வாழ்நாளைக் குறைப்பதும் வளர்ப்பதும் செய்கின்றான். அவன் அந்த வளர்தலும் குறைதலுமாகிய இருவகை விகாரங்களும் சிறிதும் தீண்டப்பெறாதவன். ஆகையால் தனக்கு இயற்கையில் ஏற்பட்டதும் கெட்ட குணங்கள் எவையும் தீண்டப் பெறாததும் கல்யாண குணங்களெல்லாம் நிறைந்ததுமாகிய ஓர் நிலைமையில் என்றும் மாறாதிருப்பவன். இங்கனம், ஜீவாத்மாக்கள் விசித்ரமான தேவ மனுஷ்யாதி தேஹங்களைப் (சரீரங்களைப்) பெறுவதற்கும் ஸுக துக்கங்களை அனுபவிப்பதற்கும் அவரவருடைய புண்ய பாபரூபமான கர்மங்களே ஸாக்ஷாத்காரணம். ஈச்வரன் அந்தக் கர்மங்களைக் கொண்டு அங்கனம் நடத்துகிறானாகையால் (தூண்டுகிறவன்) ப்ரயோஜகனேயன்றி (நியமிப்பவனேயன்றி) முக்ய காரணமல்லன். இப்படி ஸர்வ பூதங்களுக்கும் அந்தராத்மாவாய் இருப்பவனும் தன்னுடைய ஸங்கல்ப மாத்ரத்தினால் ஜகத்தினுடைய ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களை நடத்துகின்றவனும் அந்த ஸ்ருஷ்டி முதலிய செயல்களும் ஒரு வருத்தமாகாதபடி லீலையாகவே இருக்கப்பெற்றவனும் ஸர்வஜ்ஞனும் ஸர்வசக்தியும் மற்றும் பல கல்யாண குணங்களுடையவனும் அவ்வவற்றின் கர்மங்களுக்குத் தகுந்தபடி ஜகத்தையெல்லாம் நியமித்துக் கொண்டிருப்பவனும் ஸர்வ பூதங்களுக்கும் நண்பனுமாகிய பரமாத்மாவை அறியாமல் சிலர், ஜீவாத்மாக்கள் மேன்மையும் தாழ்மையுமான தேவ மனுஷ்யாதி பற்பல சரீரங்களைப் பெறுதற்கும் ஸுக துக்கங்களை அனுபவிப்பதற்கும் காரணம் அவரவருடைய கர்மமேயென்று சொல்லுகிறார்கள். வாராய் மன்னவனே! வேறே சிலர் ப்ரக்ருதி புருஷர்களின் ஸ்வபாவத்தையே காரணமென்கிறார்கள். (ப்ரக்ருதிக்கு ஒன்று மற்றொன்றாக மாறுவது ஸ்வபாவம். புருஷனுக்கு ஒரு ஸ்வபாவத்தை விட்டு மற்றொரு ஸ்வபாவத்தைப் பெறுகை ஸ்வபாவமாயிருக்கின்றது. அங்கனம் ப்ரக்ருதிக்கும் புருஷனுக்கும் உள்ள ஸ்வபாவ பேதத்தினால் தேவமனுஷ்யாதி சரீரங்களின் பிரிவுகளும் ஸுகதுக்கங்களும் உண்டாகின்றன வென்கிறார்கள்). மற்றும் சிலர் தெய்வத்தையே காரணமென்கிறார்கள். வேறு சிலரோவென்றால், பரமபுருஷனுடைய ஸங்கல்பத்தையே காரணமாக மொழிகின்றார்கள். இந்த மதங்களில் கடைசியில் சொன்ன மதமே மேன்மையுடையது; பெரியோர்களுக்கு ஸம்மதமாயிருப்பது. “ஆனால் புண்ய பாப ரூபமான கர்மமே முக்ய காரணமென்று முன்பு மொழிந்தீரே. இப்பொழுது இந்த மதமே முக்யமென்று புகழ்கின்றீரே” என்னில் சொல்லுகிறேன் கேட்பாயாக. முன் சொன்னதற்கும் இந்த மதத்திற்கும் பேதமே இல்லை. இரண்டும் ஒன்றே. எப்படியென்னில், புண்யபாப ரூபமான கர்மமாவது பகவானுடைய நிக்ரஹானுக்ரஹங்களே (தண்டனையும், அருளுமே). பகவானுடைய அனுக்ரஹத்தையே (அருளையே) புண்யகர்மமென்றும், நிக்ரஹத்தையே (தண்டனையையே) பாபகர்மமென்றும் சொல்லுகிறார்கள். ஆகையால் கர்மமே முக்கிய காரணமென்று முன்பு மொழிந்ததற்கும் இதற்கும் பேதமில்லை. அந்தப் புண்ய பாப கர்மங்களால் விளையும் அத்ருஷ்டமே தெய்வமாம். அதுவும் அந்த பகவானுடைய ஸங்கல்பத்தைக் காட்டிலும் வேறுபட்டதன்று. காலமும் ப்ரக்ருதி புருஷர்களின் ஸ்வபாவமும் அந்தப் பரமபுருஷனுடைய ஸங்கல்பத்தைப் பின்தொடர்ந்தவைகளே. ஆகையால் பரமபுருஷனுடைய ஸங்கல்பமே காரணமென்னும் பக்ஷமே முக்யமானது. அப்பா! பரமபுருஷன் இந்திரியங்களால் அறியக்கூடியவனல்லன்; தேச கால வஸ்து பரிச்சேதமில்லாதவன் (வரையறுக்கப்படாதவன்); இந்திரியங்களால் அறியக்கூடிய வஸ்துவல்லவோ தேச கால வஸ்து பரிச்சேதமுடையதாயிருக்கும். இவன் இந்திரியங்களுக்கு விஷயமாகும் தன்மையனல்லன் ஆகையால் அந்தப் பரிச்சேதங்கள் எவையுமில்லாதவன். ஆகையால் ப்ரக்ருதி புருஷர்களைக் காட்டிலும் விலக்ஷணமாய் (வேறுபட்டவனாய்) இருப்பவன். ப்ரக்ருதி இந்திரியங்களால் அறியக் கூடியதாயிருக்கும். புருஷன் அணுஸ்வரூபன் (மிகச்சிறிய அளவுடையவன்). ஆகையால் பரமபுருஷன் அவ்விரண்டை விட விலக்ஷணனாயிருப்பவன் (வேறுபட்டிருப்பவன்). மற்றும், பலவகைச் சக்திகள் அமைந்தவன். இப்படிப்பட்ட பகவான் தன்மனத்தில் நினைத்திருக்கிற ஜகத்ஸ்ருஷ்டி முதலிய வ்யாபாரத்தை எவன் தான் உண்மையாக அறியவல்லனாவான். பகவானுடைய ஸ்வரூபத்தையே அறியமுடியாதென்னில், அவனுடைய ஸங்கல்பத்தை எங்கனம் அறியமுடியும்? குழந்தாய்! இந்தக் குபேரனுடைய ப்ருத்யர்களான யக்ஷர்கள் உன் ப்ராதாவைக் கொன்றவரல்லர். கர்மத்திற்கு உட்பட்டவனாகிய ஜீவனுடைய உத்பத்தி மரணங்களுக்கு ஈச்வரனே காரணம். “ஈச்வரனே உத்பத்தி முதலிய வ்யாபாரங்களுக்குக் காரணமாயிருப்பானாயின், ஜீவனைப்போல் அந்த ஈச்வரனும் ஸத்வாதி குணங்களோடு கூடியிருக்கையாலும் அந்த ஸத்வாதி குணங்கள் (ஸத்வம், ரஜஸ், தமஸ் என்கிற மூன்று குணங்கள்) மூலமாய் நடக்கும் ஸ்ருஷ்டி முதலிய ஜகத் வ்யாபாரங்களாகிற செயல்களுக்கு இடமாயிருக்கையாலும் அந்த ஸத்வாதி குணங்களாலும் ஸ்ருஷ்டி முதலிய கர்மங்களாலும் ஜீவனைப் போல் ஸம்ஸாரபந்தம் பெறவேண்டியதாய் வருமே” என்னில், சொல்லுகிறேன் கேட்பாயாக.
அந்த ஸர்வேச்வரனே உலகங்களைப் படைப்பதும் அவற்றைக் காப்பதும் அவற்றை அழிப்பதும் செய்கின்றான். ஆயினும் ஜீவனைப்போல் அவனுக்கு அஹங்காரமென்று கூறப்படுகிற தேஹாத்மாபிமானம் (இந்த சரீரமே ஆத்மா என்கிற தவறான எண்ணம்) இல்லாமையால், ஸத்வாதி குணங்களாலும் அவற்றின் மூலமாய் விளையும் கர்மங்களாலும் தீண்டப்படுகிறதில்லை. ஸத்வாதி குணங்களின் கார்யமான ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாராதி ரூபமான வ்யாபாரங்களை ஈச்வரனே நடத்துகின்றானாயினும் தன் சரீரமான ப்ரக்ருதி புருஷ ஸ்வரூபமான தேவ மனுஷ்யாதி வஸ்துக்களில் நானென்கிற அஹம் புத்தி இல்லாமையாலும் தன் ஸ்வபாவம் மாறப்பெறாதிருக்கையாலும் ஈச்வரன் அந்த ஸ்ருஷ்டி முதலிய வ்யாபாரங்களால் ஸம்ஸார பந்தம் உண்டாகப் பெறமாட்டான். அவன் ஜகத்தின் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைத் தன்னுடைய ஸங்கல்பத்தினாலேயே நடத்துகிறான். ஜீவனோவென்றால் கர்மத்தினால் ஜ்ஞானஸங்கோசம் (அறிவு குறைவு) அடைந்து தன்ஸ்வபாவம் மாறப் பெறுகின்றான்; தேவாதி சரீரங்களில் அஹம்புத்தியைச் செய்கின்றான் (நான் என்கிற தவறான எண்ணத்துடன் இருக்கிறான்). ஆகையால் அவன் கர்மங்களால் ஸம்ஸார பந்தத்தை அடைகின்றான். ஆகையால் ஜீவனைப் போல் பகவானும் கர்மங்களால் ஸம்ஸார பந்தத்தைப் பெறக்கூடுமோ என்று சங்கிக்கலாகாது (ஸந்தேஹப்படக்கூடாது). இந்த பகவான் தேவ மனுஷ்யாதியான ஸமஸ்த பூதங்களுக்கும் அந்தராத்மாவாயிருப்பவன்; அங்கனம் உள் புகுந்து ஸமஸ்த பூதங்களையும் அவரவர் கர்மத்தின்படி நியமிக்கும் தன்மையன். அந்த தேவ மனுஷ்யாதி பூதங்களைப் படைத்தவனும் அவனே. தன் சக்தி போல் தன்னை விட்டுப் பிரியாதிருக்கின்ற ப்ரக்ருதி புருஷர்களோடு கூடி அவன் தேவ மனுஷ்யாதி பூதங்களைப் படைப்பதும் பாதுகாப்பதும் அழிப்பதும் செய்கின்றான். ஆகையால் ஸ்வரூபம் மாறப் பெறுகையும் ஸ்வபாவம் மாறப் பெறுகையுமாகிய விகாரங்களெல்லாம் ப்ரக்ருதி புருஷர்களைப் பற்றினவைகளேயன்றி அவை ஈச்வரனிடத்தில் ஸம்பந்திக்கிறதில்லை (ஏற்படுவதில்லை). அவன் விகாரங்கள் (மாறுபாடுகள்) எவையுமின்றி நிர்மலனாயிருப்பவன் (அசுத்தமற்றிருப்பவன்). அவன் தன்னைப் பற்றாதவர்களுக்கு ஸம்ஸார பந்தத்தை விளைவிப்பவன். பற்றினவர்களை ஸம்ஸார பந்தத்தினின்று விடுவிப்பவன்; தன் தேஜஸ்ஸினால் ப்ரகாசித்துக் கொண்டிருப்பவன். ஸமஸ்த லோகங்களுக்கும் அவனே ப்ராப்யனும் (அடையப்படுபவனும்) ப்ராபகனும் (அடைவிக்கும் வழியும்) ஆதாரமுமாயிருப்பவன். அப்படிப்பட்ட ஸர்வேச்வரனை நீ எல்லாவிதத்திலும் சரணம் அடைவாயாக. “இவனே நமக்கு அடையத்தகுந்த வஸ்துவும் அவ்வஸ்துவை அடைவதற்குரிய உபாயமும்” என்று பாவித்து அவனைச் சரணம் அடைவாயாக. அங்கனம் சரணம் அடையத் தகுந்தவன் மற்றெவனும் இல்லை. ஜகத்ஸ்ருஷ்டி கர்த்தாக்களான ப்ரஹ்மதேவன், மரீசி முதலியவர்களும் இம்மஹானுபாவனைப் பூஜிக்கின்றார்கள். ஜகத்தையெல்லாம் படைக்கின்றவர்களாகிய ப்ரஹ்மாதிகளுக்கும் அவனே ஈச்வரன். ஆகையால் சரணம் அடையத்தகுந்த வஸ்து மற்றெதுவுமே இல்லை. எருதுகள் மூக்கில் கயிறு கோர்க்கப் பெற்றுப் புருஷனுக்கு வேலை செய்வது போல், ப்ரஹ்மதேவன் முதலிய மற்றவர் அனைவரும் அந்த ஸர்வேச்வரனுக்குப் பணி செய்பவரேயன்றி ஸ்வதந்த்ரர்களல்லர் (தாமே தம் விருப்பத்திற்கேற்ப செயல்படுபவரல்லர்). ஆகையால் அவன் ஜகத்தெல்லாம் தன் வசமாயிருக்கப்பெற்றவன். நாமெல்லோரும் அவனுக்கு உட்பட்டவர்களே. ஆகையால் நீ அவனையே சரணம் அடைவாயாக. மற்றும், நீ ஐந்து வயது பாலனாயிருக்கும் பொழுது உன் தாயின் சக்களத்தியாகிய (கணவனின் வேறு மனைவியாகிய) ஸுருசியின் துர்பாஷணங்களால் (கொடிய வார்த்தைகளால்) மனம் கலங்கப் பெற்றுத் தாயான ஸுநீதியைத் துறந்து வனத்திற்குச் சென்று இந்திரியங்கள் வேறு விஷயங்கள் எவற்றிலும் செல்லாதபடி அவற்றை அடக்கிக் கொண்டு எந்த பகவானை ஆராதித்து மூன்று லோகங்களுக்கும் மேலாயிருப்பதான ஓர் பதவியைப் பெற்றாயோ, அந்த பகவானையே பணிந்திருப்பாயாக. அவனுக்குச் சரீரமாகிய இந்த ஆத்மாவின் உண்மையை அறிந்து அவனையே தொடர்ந்து அவனது சரீரமாகிய மற்ற எந்த ப்ராணிகளுக்கும் த்ரோஹம் செய்யாதிருப்பாயாக. வாராய் த்ருவனே! தேவ மனுஷ்யாதி சரீரங்களெல்லாம் எப்பொழுதும் மாறிக் கொண்டேயிருக்கும் தன்மையுடையவை. இத்தகையதான தேவமனுஷ்யாதி உருவம் ஜீவனுக்கு இயற்கையில் ஏற்பட்டதன்று. தேவ மனுஷ்யாதி ரூபமான ப்ரபஞ்சம் ஜீவனிடத்தில் வாஸ்தவமாய் இருப்பதன்றேயாயினும் புண்ய பாப ரூபமான கர்மத்தினால் தோற்றுகின்றது. அந்த ஜீவாத்மா அணுவாயிருப்பவன்; அவயவங்கள் (உறுப்புக்கள்) எவையுமில்லாதவன். அந்த ஜீவனிடத்தில் பரமபுருஷன் உட்புகுந்திருக்கின்றான். அவன் கெட்ட குணங்கள் எவையும் தீண்டப் பெறாதவன்; தன்னோடு ஒத்தவர்களாவது தனக்கு மேற்பட்டவர்களாவது எவருமில்லாதவன்; எவ்வகை விகாரங்களும் (மாற்றங்களும்) தீண்டப் பெறாதவன்; பரக்ருதியினின்று என்றும் விடுபட்டவன்; ஜீவனைப் போல் ப்ரக்ருதி ஸம்பந்தம் ஒருக்காலும் உண்டாகப் பெறுமவனல்லன். நித்யமுக்தனென்று (எப்பொழுதும் பந்தங்களில்லாதவன் என்று) கூறப்படுபவன். அப்படிப்பட்ட பரமபுருஷனை அனுஸரித்திருப்பாயாக. “நான் பகவானை முன்னமே உபாஸித்தேன். இப்பொழுது உபாஸிக்கும்படி சொல்லுகிறதென்?” என்னில், சொல்லுகிறேன் கேட்பாயாக. முன்பு நீ அஹங்கார மமகாரங்கள் தீரப்பெறாமல் தர்ம அர்த்த காமங்களையே விரும்பி உபாஸித்தாய். ஆகையால் இந்த ப்ரக்ருதி மண்டலத்தில் அடங்கின ஓர் ஸ்தானத்தைப் பெற்றாய்; இப்பொழுது நீ ஒரு பலனையும் விரும்பாமல் அவனிடத்தில் பக்தி செய்வாயாயின், மோக்ஷம் பெறுவாய். அதன் வழியைச் சொல்லுகிறேன் கேட்பாயாக.
ஜீவாத்மாக்களுக்கு அந்தராத்மாவாகி அவர்களைச் சரீரமாக உடையவனும் ஜ்ஞான சக்தி பல ஐச்வர்ய வீர்ய தேஜஸ்ஸுக்களென்கிற ஆறு குணங்கள் நிறைந்தவனும் தேச கால வஸ்து பரிச்சேதங்களில்லாதவனும் (வரையறைகளில்லாதவனும்) கேவலாநந்த ஸ்வரூபனும் (ஆனந்தம் மட்டுமே தன் இயற்கை நிலையாயுடையவனும்) ஜ்ஞானம் பலம் க்ரியை முதலிய ஸமஸ்த (எல்லா) சக்திகளும் அமைந்தவனுமாகிய பரமபுருஷனிடத்தில் ஒரு காரணமுமின்றி மெல்ல மெல்ல மனத்தை அடக்கிக் கொண்டு பக்தியைச் செய்வாயாயின், அஹங்கார மமகாரங்களால் வேரூன்றியிருக்கிற அஜ்ஞானமென்னும் க்ரந்தி (முடுச்சு) நிர்மூலமாக (வேரோடு) அறப்பெறுவாய். நன்மைகளையெல்லாம் மிகவும் தடை செய்வதாகிய கோபத்தைத் துறப்பாயாக “அதை எங்கனம் துறக்கமுடியும்?” என்னில், பெரும்பாலும் ஜீவ பரமாத்ம தத்வங்களின் உண்மையைக் கேட்டு. மனனம் செய்யின், ஔஷதத்தினால் வ்யாதி நீங்குவதுபோல், அந்தக் கோபம் தானே நீங்கும். ஆகையால் “தத்வச்ரவணம் செய்து (உண்மை தத்வங்களைப் பற்றி பெரியோரிடம் கேட்டு) மருந்தினால் நோயைப் போக்குவது போல் கோபத்தைப் போக்குவாயாக, வாராய் மன்னவனே! அதனால் உனக்கு க்ஷேமம் உண்டாகும். கோபமுற்றவனைக் கண்டு லோகமெல்லாம் மிகவும் பயப்படுகின்றது. அதனால் அதர்மத்தை அடைகின்றான். அந்த அதர்மத்தினால் புருஷார்த்தம் கைசேரப் பெறுவதில்லை. ஆகையால் நன்மையை விரும்பும் பண்டிதன் அந்த ரோஷத்திற்கு (ஆத்திரத்திற்கு, கோபத்திற்கு) இடம் கொடுக்கலாகாது. மற்றும், நீ ருத்ரனுக்கு நண்பனாகிய குபேரனுக்கு அவமானம் செய்தாய். ஏனென்னில், ப்ராதாவைக் கொன்றார்களென்னும் நினைவினால், இயற்கையில் நிரபராதிகளான யக்ஷர்களைக் கோபத்தினால் வதித்தாயல்லவா? அந்த யக்ஷர்கள் குபேரனுடைய ப்ருத்யர்களாகையால் (சேவகர்களாகையால்) அவர்களைக் கொன்றது, குபேரனுக்கு அவமதி செய்ததேயாம். குழந்தாய்! ஆகையால் அந்தக் குபேரனை வணங்கி விநய (பணிவான) வார்த்தைகளால் அருள்புரியச் செய்வாயாக; ஆகட்டுமென்று காலதாமதம் செய்யவேண்டாம். பெரியோர்களின் தேஜஸ்ஸு நம் குலத்தைப் பாழ் செய்வதற்கு முன்னமே செய்ய வேண்டிய கார்யத்தைச் செய்வாயாக. குபேரன் முதலியவர் பெருமை அமைந்தவர். அத்தகையர் விஷயத்தில் அபராதப்படுவோமாயின், அவருடைய தேஜஸ்ஸு நம் குலத்தைப் பாழ் செய்துவிடும். ஆகையால் அங்கனம் கெடுதி நேருவதற்கு முன்னமே அந்தக் குபேரனை வணக்கத்தினாலும் விநய (பணிவான) வார்த்தைகளாலும் அருள்புரியச் செய்வாயாக.
மைத்ரேயர் சொல்லுகிறார்:- ஸ்வாயம்புவமனு தன் பேரனாகிய த்ருவனுக்கு இங்கனம் நற்புத்தி சொல்லி அவனால் நமஸ்காரம் செய்யப்பெற்று ரிஷிகளோடு கூடித் தன்னிடம் போய்ச் சேர்ந்தார்.
பதினொன்றாவது அத்தியாயம் முற்றிற்று.