வெள்ளி, 24 ஜனவரி, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 88


நான்காவது ஸ்கந்தம் – பத்தாவது அத்தியாயம்

(உத்தமன் வேட்டைக்குச் சென்று மரணம் அடைதலும், த்ருவன் அவனைக் கொன்ற யக்ஷர்களோடு யுத்தஞ் செய்து அவர்களை வதித்தலும்)

த்ருவன், சிம்சுமாரனென்கிற ப்ரஜாபதியின் புதல்வியாகிய ப்ரமி என்பவளை மணம் புரிந்தான். அந்த த்ருவனுக்கு ப்ரமியிடத்தில் கல்பனென்றும் வத்ஸரனென்றும் இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். வாயுவின் புதல்வியான இடை என்பவளையும் அவன் மணம் புரிந்திருந்தான். அவளிடத்தில் உத்கலனென்னும் புதல்வனையும் மடந்தையர்களில் சிறந்த ஓர் புதல்வியையும் பெற்றான். அந்த த்ருவனுடைய ப்ராதாவான உத்தமன் விவாஹம் (திருமணம்) ஆகாமலே இருந்து ஒருநாள் வேட்டைக்குப் போகையில், அங்கு ஹிமவத் பர்வதத்தில் மஹாபலனான ஓர் யக்ஷனால் அடியுண்டு மாண்டான். அவனுடைய மாதாவான ஸுருசி அவன் வரக்காணாமையால் அவன் போன வழியே போய் அவன் கதியை அடைந்தாள் (மரணம் அடைந்தாள்). த்ருவன் ப்ராதாவான உத்தமனுடைய மரணத்தைக் கேட்டு, கோபம், பொறாமை, சோகம் இவைகளால் மனம் நிரம்பப்பெற்று, ஜயசீலமான ரதத்தில் ஏறிக்கொண்டு யக்ஷர்களின் வாஸஸ்தானமான லங்காபுரிக்குப் போனான். அவன் வடதிசையில் சென்று ஹிமவத் பர்வதத்தின் தாழ்வரையில் ருத்ரனுடைய ப்ருத்யர்களால் (சேவகர்களால்) சூழப்பட்டதும் யக்ஷர்கள் நிரம்பப்பெற்றதுமாகிய லங்காபுரியைக் கண்டான். நீண்ட புஜதண்டங்களையுடைய அந்த த்ருவன் ஆகாசத்தையும் திசைகளையும் ஒலிக்கச் செய்துகொண்டு சங்கத்தை எடுத்து ஊதினான். வாராய் விதுரனே! அந்த சங்கத்வனியைக் (சங்கின் ஒலியைக்) கேட்டு யக்ஷரது மடந்தையர் பயத்தினால் நடுநடுங்கின கண்களுடையவராகி மிகுதியும் பயந்தார்கள். அப்பால், மஹாவீரர்களும் பலிஷ்டர்களுமான (பலசாலிகளுமான) அந்த யக்ஷர்கள் த்ருவன் செய்த சங்கத்வனியைக் கேட்டு அதைப் பொறுக்க முடியாமல் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு அந்த அலகாபுரியினின்று யுத்தத்திற்குப் புறப்பட்டு அவனை எதிர்கொண்டார்கள். பயங்கரமான தனுஸ்ஸை (வில்) உடையவனும் மஹாரதனும் வீரனுமாகிய அந்த த்ருவன் அங்கனம் தன்னை எதிர்த்து வருகின்ற யக்ஷர்களில் ஒவ்வொருவனையும் மும்மூன்று பாணங்களால் ஒரே காலத்தில் அடித்தான். அந்த யக்ஷர்கள் அனைவரும் அவன் ப்ரயோகித்த பாணங்கள் நெற்றியில் பொத்துக் கொள்ளப்பட்டு அவ்வளவில் தாங்கள் தோற்றதாக நினைத்து அவனுடைய அந்தச் செயலைப் புகழ்ந்தார்கள்.

ஸர்ப்பங்கள் காலால் மிதிப்பதைப் பொறுக்க மாட்டாமல் சீறிப்பாய்வதுபோல், அந்த யக்ஷர்களும் அந்த த்ருவன் தங்களை மும்மூன்று பாணங்களால் அடித்ததற்குப் பொறாமல் அவனைத் தாங்கள் ஒவ்வொருவரும் அவனை அவ்வாறு பாணங்களால் அடித்து அவன் செய்ததற்கு இருமடங்காகச் செய்ய விரும்பி ஒரே காலத்தில் அடித்தார்கள். அப்பால், இரும்புத்தடி கத்தி ஈட்டி சூலம் கண்டக்கோடாலி சக்தி அஷ்டி முஸுண்டி இவ்வாயுதங்களால் அவனை அடித்தார்கள். மற்றும் பதின்மூன்று பத்தாயிரம் கணக்குடையரான (லக்ஷத்து முப்பதினாயிரம் கணக்குடையரான) அந்த யக்ஷர்கள் மிகவும் கோபித்து அவனுக்கு பதில் செய்ய விசித்ரமான இறகுகளையுடைய பாணங்களை மழை பெய்தாற்போல் பெய்து அவனையும் அவன் ரதத்தையும் அவனது ஸாரதியையும் (தேரோட்டியையும்) அடித்தார்கள். அப்பொழுது அந்த உத்தானபாதனது குமாரனாகிய த்ருவன் பெருமழை போன்ற பாணவர்ஷத்தினால் (அம்பு மழையால்) மறைக்கப்பட்டு, விடாத மழையில் மறைந்த பர்வதம்போல் கண்ணுக்குப் புலப்படாமலே இருந்தான். அப்பொழுது ஆகாயத்தில் அந்த யுத்தத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிற ஸித்தர்கள் பயந்து ஹாஹாகாரம் (ஹா ஹா என்று சப்தம்) செய்தார்கள். “ஸ்வாயம்புவமனு வம்சத்திற்குப் பிறந்த இந்த த்ருவனாகிற ஸூர்யன் யக்ஷர்களாகிற ஸமுத்ரத்தில் மூழ்கினானே. ஆ! இதென்ன வருத்தம்” என்று முறையிட்டார்கள். அப்பால் ராக்ஷஸர்கள் யுத்தத்தில் “நாங்கள் ஜயித்தோம் நாங்கள் ஜயித்தோம்” என்று அறையிட்டுக்கொண்டிருக்கையில், பனியினின்று ஸுர்யன் கிளம்புவதுபோல், ரதத்தில் இருந்துகொண்டே மேற்கிளம்பினான். (புலப்பட்டான்). பின்னர் பயங்கரமான தன்னுடைய தனுஸ்ஸின் (வில்லின்) நாணை இழுத்து ஒலிப்பித்துக்கொண்டு சத்ருக்களான ராக்ஷஸர்களுக்கு மணல் காற்று மேகங்களைப் பாழ் செய்வது போல் வருத்தம் விளைவிப்பவனாகி, தனது பாணங்களால் அவர் ப்ரயோகித்த பாணஸமூஹங்களை எல்லாம் சூரணம் (பொடி) செய்தான். அவனுடைய தனுஸ்ஸினின்று (வில்லிலிருந்து) கிளம்பின பாணங்கள் மிகவும் கூராயிருக்கையால், வஜ்ராயுதங்கள் பர்வதங்களைப் பிளப்பது போல். அந்த ராக்ஷஸர்களின் கவசங்களைப் பிளந்து அவருடைய சரீரங்களில் நாற்புறத்திலும் ப்ரவேசித்தன.

த்ருவனுடைய பல பாணங்களால், அழகிய குண்டலங்களை அணிந்த அந்த ராக்ஷஸர்களின் தலைகளும் ஸ்வர்ணமயமான பனைமரங்கள் போன்ற துடைகளும் வளைகளை அணிந்து அழகியவைகளான புஜங்களும் ஹாரங்களும் தோள்வளைகளும் கிரீடங்களும் விலையுயர்ந்த தலைப்பாகைகளும் அறுப்புண்டு விழுந்தன. அவைகளால் சூழப்பட்ட அந்த யுத்தப்ரதேசங்கள் வீரர்களுடைய மனத்திற்கு ஸந்தோஷம் விளைப்பவைகளாகி ப்ரகாசித்தன. அடிப்பட்டு மிகுந்த ராக்ஷஸக்கூட்டங்களெல்லாம் க்ஷத்ரிய ச்ரேஷ்டனாகிய த்ருவனுடைய பாணங்களால் பெரும்பாலும் அவயவங்கள் (உடல் உறுப்புக்கள்) அறுப்புண்டவையாகி, ஸிம்ஹத்தின் விலாஸத்தைக் கண்ட யானைகள் போல் யுத்த பூமியினின்று மூலைக்கு ஒருவராக பயந்து ஓடிப்போயின. அப்பொழுது மனுகுலத்தவர்களில் சிறப்புற்றவனாகிய அந்த த்ருவன் மஹத்தான யுத்தத்தில் கையில் ஆயுதம் பிடித்துத் தன்னை எதிர்ப்பவன் எவனையும் காணாமல், பட்டணத்தைப் (நகரத்தைப்) பார்க்கப்போக விருப்பமுற்றவனாயினும் “ராக்ஷஸர்கள் மாயாவிகள், அவர்களுடைய நடத்தையை நம்பலாகாது. ஓய்ந்தாற் போலிருந்து ஏதேனும் மாயை செய்யினும் செய்யக்கூடும். அவர்கள் என்ன செய்ய நினைத்திருக்கிறார்களோ” என்று ஆலோசித்துப் பட்டணத்திற்குத் திரும்பிப் போகாமல் அவர்களையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். 

அற்புதமான பதத்தையுடைய அந்த த்ருவன் தன் ஸாரதியைக் (தேரோட்டியைக்) குறித்து “மாயாவிகளின் செயலை இத்தகையதென்று எவனும் நிச்சயித்தறிய முடியாது. ஆகையால், அவர்கள் ஓடிப்போய்விட்டார்களென்று நாம் நம்பலாகாது. இருந்தாற்போலிருந்து என்ன செய்வார்களோ? ஜாக்ரதையாய் இருக்கவேண்டும்” என்று தான் ஆலோசித்ததையே மொழிந்துகொண்டு, சத்ருக்கள் தான் செய்ததற்கு என்ன ப்ரதி செய்வார்களோவென்று சங்கித்து (ஸந்தேஹப்பட்டு) அதற்குத் தகுந்த ப்ரயத்னத்துடனிருக்கையில், மேக கர்ஜனம் போன்ற ஓர் சப்தம் உண்டாகக் கேட்டான். உடனே, பெருங்காற்றோடு கூட அனைத்து திசைகளிலும் தூள் புலப்பட்டது. பளபளவென்று ஜ்வலிக்கின்ற மின்னல்களுடையதும் அனைவரும் பயமுறும்படியான பேரிடிகளோடு கூடினதும் பெருங் கர்ஜனைகள் செய்வதுமாகிய மேகக் கூட்டத்தினால் ஆகாயம் முழுவதும் ஒரு க்ஷணத்திற்குள் நிரம்பிற்று. வாராய் பயமற்ற விதுரனே! இந்த த்ருவனுடைய எதிரில் ரக்தப்ரவாஹங்களும் கோழை சீவிஷ்டை மூத்ரம் மாம்ஸம் மேதஸு இவைகளும் தலையில்லாத முண்டங்களும் விழுந்தன. அப்பால் ஆகாயத்தில் பர்வதம் புலப்பட்டது. அனைத்து திசைகளிலும் கல்மழையோடுகூட கதைகளும் இரும்புத் தடிகளும் கத்திகளும் உலக்கைகளும் விழுந்தன. இடிபோன்ற மூச்சுக் காற்றுடைய ஸர்ப்பங்களும் கோபமுற்றுக் கண்களால் அக்னியைக் கக்குகின்ற யானைகளும் ஸிம்ஹங்களும் புலிகளும் கூட்டம் கூட்டமாய் அந்த த்ருவன் மேல் எதிர்த்தோடிவந்தன. பெரிய பெரிய அலைகளால் பயங்கரமாயிருக்கின்ற ஸமுத்ரமானது நாற்புறங்களிலும் பூமியை மறைத்துக்கொண்டு ப்ரளயகாலத்தைப்போல் பெரும் கோஷத்துடன் மிகவும் பயங்கரமாகி அவனுக்கு அருகாமையில் வந்தது. கொடிய செயலுடையவர்களான அவ்வஸுரர்கள் மாயையினால் இங்கனம் சொன்னவைகளும் இவை போன்ற மற்றும் பலவகைப்பட்டவைகளும் மனஉறுதியில்லாத அஜ்ஞர்களுக்கு பயத்தை விளைவிப்பவைகளுமான பற்பலவற்றையும் ஸ்ருஷ்டித்தார்கள். அஸுரர்கள் த்ருவன்மேல் ப்ரயோகித்தவைகளும் எத்தகையர்க்கும் கடக்க முடியாதவைகளுமான அம்மாயைகளைக் கண்டு யுத்தம்பார்க்க வந்த முனிவர்கள் அனைவரும் அந்த த்ருவனுக்கு மங்களம் உண்டாகவேண்டுமென்று ப்ரார்த்தித்தார்கள். “வாராய் த்ருவனே! நீ உத்தானபாதனுடைய புதல்வனல்லவா? அவன் பரம தர்மிஷ்டனல்லவா? உனக்கு இப்படி சேருவது யுக்தமன்றே (ஸரியன்றே). ஆகையால் தன்னைப் பணிந்தவர்களின் துக்கத்தைப் போக்கும் தன்மையனும் சார்ங்கமென்னும் வில்லைக் கையில் ஏந்தினவனும் தேவனுமாகிய பகவான் உன் சத்ருக்களைப் பாழ்செய்வானாக. இந்த பகவானுடைய நாமத்தைச் சொன்னாலும் பிறர்சொல்லும் பொழுது கேட்டாலும் எப்படிப்பட்ட பாபிஷ்ட ஜந்துக்களும் சீக்ரத்தில் ஸுகமாகவே எப்படிப்பட்டவர்க்கும் தாண்டமுடியாத ம்ருத்யுவையும் தாண்டுவார்கள். அப்படிப்பட்ட மஹிமையுடைய அம்மஹானுபாவனுக்கு இந்த அற்ப சத்ருக்களை அழிப்பது ஒரு பொருளோ? பொருளன்று. ஆகையால் அந்த பகவான் உன் சத்ருக்களை அழிப்பானாக” என்று அந்த த்ருவனுக்கு மங்களம் உண்டாகும்படி ப்ரார்த்தித்தார்கள். 

பத்தாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக