செவ்வாய், 21 ஜனவரி, 2020

மெச்சி நின்றாரை அருளும் கச்சி வரதன் - முனைவர் மா.சிதம்பரம்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற நூற்றி எட்டு திவ்யதேசங்களுள் குறிப்பிடத்தக்கது திருக்கச்சி வரதராசப் பெருமாள் கோயில். ஆழ்வார்களின் மங்களாசாசனம் பெற்ற திவ்ய தேசங்களில் இது மூன்றாவதாகக் கருதப்படுகிறது. முதலிடத்தில் திருவரங்கம் திருக்கோயிலும், இரண்டாவது இடத்தில் திருமலை - திருப்பதியும் இடம்பெற்றுள்ளன.


இத்திருத்தலம் கச்சியில் உள்ள வைணவத் தலங்களுள் எல்லாம் சிறப்புடையதாகவும் பல்லவர்களால் ஆளப்பெற்ற தொண்டை நாட்டின் வைணவத் திருத்தலங்களுக்கு எல்லாம் தலைமைத் தன்மை உடையதாகவும் திகழ்கிறது. 


தடம் சூழ்ந்து, அழகாய்க்கச்சி ஒளி 
மாடங்கள் சூழ்ந்து, அழகிய கச்சி மணி 
மாடங்கள் சூழ்ந்து, அழகாய்க் கல்லுயர்ந்த 
நெடுமதில்சூழ் கச்சி 


என்று ஆழ்வார்களால் சிறப்பிக்கப்பெற்ற இத்தலம் விஷ்ணு காஞ்சியென்றும், அத்திகிரியென்றும், திருக்கச்சி என்றும் அழைக்கப்படுகின்றது.


“உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன் 
மயர்வு அற மதி நலம் அருளினன் எவன்? அவன் 
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன் 
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே”


என்று நம்மாழ்வாரால் திருவாய் மொழியில் பாடப்பெற்ற பாசுரத்தில் ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்று சிறப்பிக்கப்படுபவர் இத்திருத்தலத்தில் அருட்பாலிக்கும் வரதன்தான் என்று வைணவச் சான்றோர்கள் குறிப்பிட்டுரைப்பர். அவர்கள்தம் கூற்றினை மெய்ப்பிப்பதுபோல் இத்தலத்து நம்மாழ்வார் தன் இதயத்தில் கை குவித்தவாறு அருட்பாலிக்கின்றார். இத்திருக்காட்சி வேறு திவ்ய தேசங்களில் காணக் கிடைக்காத கண்கொள்ளாக் காட்சியாகும். மேலும் இத்திவ்யதேசம் திருமங்கையாழ்வாரால் நான்கு பாசுரங்களிலும் பூதத்தாழ்வாரால் இரண்டு பாசுரங்களிலும் பேயாழ்வாரால் ஒரு பாசுரத்திலும் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. 


பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதிப் பாசுரம் பெருமானின் அழகிய திருக்கோலத்தினை நம் கண்முன் காட்சிப்படுத்துகிறது. இங்கு எழுந்தருளி ஆட்கொள்ளும் எம்பெருமான் பெரிய திருவடியாகிய கருடாழ்வாரைத் தன் வாகனமாகக் கொண்டு ஊர்ந்து வருபவர். ஆதிசேடனைத் தன் அணையாகக் கொண்டு அறிதுயில் கொள்பவர். மூன்று வகை அக்னியாய்த் தோற்றம் கொண்டவர். வேதங்களாய் நிற்பவர். 


தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தபோது துயரம் தாளாது வாசுகி என்னும் பாம்பால் உமிழப்பட்ட ஆலகால விடத்தினை உண்ட சிவனுக்கும் இறையானவர். இத்தகைய சிறப்புடையவரே இவ் அத்தியூரான். எங்கள் பிரானும் அவனேதான் என்றெல்லாம் பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதிப் பாசுரம் காட்சிப்படுத்தி நிற்கின்றது. இதனை,



“அத்தியூரான் புள்ளை யூர்வான் அணிமணியின்
துத்திசேர் நாகத்தின்மேல் துயில்வான் - மூத்தீ
மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் றனக்கும்
இறையாவான் எங்கள் பிரான்”
என்ற பாசுரத்தால் அறியலாம். 


“என்னெஞ்சம் மேயான் என் 
சென்னியான் தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணிவண்ணன் 
முன்னம்சேய் ஊழியான் 
ஊழிபெயர்த்தான் உலகேத்தும்
ஆழியான் அத்தியூரான்” 


என்பதும் பூதத்தாழ்வாரின் திருவாக்காம். 


இத்திவ்யதேசத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே திருவேங்கடத்திலும் எழுந்தருளி அருள்செய்கிறார் எனக் குறிப்பார் பேயாழ்வார். திருக்கச்சி, திருவேங்கடம் என்பனவற்றை ஒன்றுசேர உரைக்கும் பொழுது திருக்கச்சிக்கு முதலிடம் தந்துரைக்கும் இப்பாசுரம். இதனால் திருக்கச்சி வரதராஜப் பெருமானின் சிறப்பினை உய்த்துணர முடியும். அப்பாசுரம்,


“சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும் 
நிறைந்த சீர் நீள் கச்சியுள்ளும் உறைந்ததுவும் 
வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப்பாடியுமே 
தாம் கடவார் தண் துழாயார்” - என்பதாம்.


திருமங்கை ஆழ்வாரின் பாசுரம் இத்திருத்தல இறைவனை மனத்துள் கொண்டு துதிப்பவர்களே இவ் உலகத்தில் துன்பங்களில் இருந்து உய்தி பெறுவர். பிறர் இத்தகைய சிறப்பினைப் பெறார் என்று குறிப்பிடுகிறது. இத்தகைய செய்தியினை, உளுத்து அளம் பற்றிய சுவர்போலே பொடி உதிர்கின்ற மண்டையோட்டினைக் கையில் ஏந்தி பிறரின் மனையின்கண் பலி தேர்ந்து உண்டவர் சிவபெருமான். 


திரிபுரம் எரித்த சிவபெருமானின் கையில் ஒட்டியிருந்த மண்டையோடு நீங்கும்படி சிவனின் சாபத்தை நீக்கிய பெருமான் திருக்கண்டியூர், திருமெய்யம், திருக்கச்சி, திருப்பேர், திருக்கடல் மல்லை என்னும் தலங்களில் எழுந்தருளி அருள் செய்கின்றார். இத்தகைய திருப்பதிகளில் உறையும் பெருமானாகிய வரதனை மனதில் நினைத்தவர்களே உய்வர், பிறர் உய்யார் என்பதனால் அறியலாம். 


இதனை,


“பிண்டி ஆர் மண்டை ஏந்தி பிறர் மனை திரிதந்து உண்ணும் 
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவன் ஊர் உலகம் ஏத்தும் 
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று 
மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யல் ஆமே?” என்ற பாசுரம் விளக்கி நிற்கும்.


திருமங்கை ஆழ்வாரின் பிறிதோர் பாசுரம், 


“வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர் 
மல்லையாய்! மதிள் கச்சியூராய்! பேராய் 
கொங்கத் தார் வளங் கொன்றை அலங்கல் மார்வன் 
குலவரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான் 
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்! 
பனி வரையின் உச்சியாய்! பவள வண்ணா! 
எங்கு உற்றாய்? எம் பெருமான்! உன்னை நாடி 
ஏழையேன் இங்ஙனமே உழிதருகேனே” - என்பதாகும். 


இப்பாடலுக்கு உரை எழுதியதும் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார், பரவாசுதேவனாகிய ஒரு சிறந்த விலை உயர்ந்த ரத்தினத்தை அவனது வாத்ஸல்யமென்ற கப்பலானது திருக்கடல் மல்லை என்கிற ஒரு தீவிலே கொண்டு வந்து தள்ளிற்றாம். கானத்தின் கடல் மல்லை என்றபடி காட்டு நிலமாகிய அவ்விடத்திலே அந்த ரத்தினத்தைப் பேணுவார் இல்லாமையாலும் ரத்தினம் விலை போவது மாநகரங்களில் ஆகையாலும் அந்தக் கப்பலானது அந்த ரத்தினத்தை அங்கிருந்து கொணர்ந்து காஞ்சிபுரத்திலே திருவெஃகாத்துறையில் தள்ளிற்றாம். 


என்றிப்படி சமத்காரமாகச் சொல்லும் விசேஷார்த்தம் உணரத்தக்கது. ஆழ்வார் தாமும் இந்த அர்த்தத்தை திருவுள்ளம் பற்றியே பெரிய திருமொழியில் ‘கச்சி கிடந்தவனூர் கடன் மல்லைத் தலசயனம்’ என்றருளிச் செய்தது எனக் குறிப்பார். இதன் மூலம் வரதராசர் என்னும் ரத்தினத்தை ஏத்திப் போற்றிய சிறப்பினைக் கச்சி மாநகரம் பெற்றது என்பது தெரிய வருகிறது. இவ்வாறு அன்பர்களால் போற்றப் பெற்ற பரந்தாமனே கச்சியில் எழுந்தருளி அருட் பாலிக்கும் வரதன் ஆவான் என்பதும் தெரியவருகிறது. இத்தகைய சிறப்புடைய பாசுரம்.


“கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய 
களிறு என்றும் கடல் கிடந்த கனியே என்றும் 
அல்லியம் பூ மலர்ப் பொய்கைப் பழன வேலி 
அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும் 
சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கி 
தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு 
மெல் விரல்கள் சிவப்பு எய்தத் தடவி ஆங்கே 
மென் கிளிபோல் மிக மிழற்றும் என் பேதையே” - என்பதாகும்.


இத்தலம் பற்றிய செய்திகள் பத்ம புராணத்திலும் கூர்ம புராணத்திலும் காணப்படுகின்றன. ஒரு முறை மும்மூர்த்திகள் தம் தேவியர்களின் துணையில்லாமல் தனித்து வேள்வி செய்து வெற்றிபெற இயலாது என்ற விவாதம் தேவலோகத்தில் ஏற்பட்டது. அதனைக் கேள்வியுற்ற பிரம்மன் தான் செய்து வென்று காட்டுவதாய்ச் சூளுரைத்து உலக நன்மைக்காக ஒரு வேள்வியைத் தொடங்கினான். 


அதனை அறிந்த கலைமகள் அந்த வேள்வியைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டாள். பிரம்மனின் வேள்வியை அழிக்க அக்னி வடிவத்தில் அரக்கர்களை அனுப்பினாள். பிரம்மனுக்காக அந்த அக்னியை தன் கரங்களில் தீபமாய் ஏந்திப் பெருமான் காத்து நின்றார். இதனால் வெகுண்டெழுந்த கலைமகள் கொடூரமான யானைகளைப் படைத்து அனுப்பினாள். பெருமான் நரசிம்ம வடிவம் கொண்டு யானைகளை வென்றார். 


பின் அரக்கர்களை அனுப்ப, பெருமான் அவ் அரக்கர்களை கொன்றொழித்து நின்றார். அந்நிலையில் வேள்வியைக் களைத்தொழிக்க எட்டுக் கரங்களைக் கொண்ட காளியை அனுப்பினாள். பெருமான் எட்டுக் கரங்களைக் கொண்ட அட்டபுயக்கரத்தானாகத் தோன்றி காளியின் சீற்றத்தை அடக்கினார். இவ்வாறு தனது முயற்சிகள் அனைத்தும் தோல்வியுறுவதனைக் கண்ட கலைமகள் தானே ஒரு நதியாகி வேகவதி எனும் பெயரில் பிரளயம் போல் பொங்கி வந்தாள். பிரம்மன் அவ்வெள்ளப் பெருக்கினைத் தடுக்க வேண்டிப் பெருமானை நோக்கித் தவம் செய்ய, பெருமான் அந்த நதிக்கு எதிரே அணையாகப் படுத்துத் தடுத்தார். 


மேலும் அக்னி வடிவமாய் பிரம்மனுக்கு அருள்புரிந்தார். தன் முயற்சிகள் அனைத்தும் தோல்வியுறுவதனைக் கண்ட கலைமகளும் தன் முயற்சியினை தொடராது நிறுத்தினாள். பிரம்மன் வேள்வியைத் தொடர்ந்தான். வேள்வியில் கிடைக்கும் அவிர்பாகம் தமக்குரியது என தேவர்கள் வேண்ட, பிரம்மனோ அவர்களிடம் வீடுபேறு முதலான பலனைக் கோரி செய்யப்பெறும் வேள்விகளில்தான் அவிர்பாகம் உங்களுக்குரியது. 


அதில்தான் உங்களுக்கும் பங்குண்டு. இது உலக நன்மைக்காகச் செய்யும் வேள்வி. எனவே உலகத்தின் அனைத்து உயிர்களிலும் அந்தர்யாமியாக இருக்கும் திருமாலுக்கே அவிர்பாகம் உரியது. அவரே இதனை ஏற்றுக்கொள்வார் என்று கூறி வேள்வியைத் தொடர்ந்தார். 


வேள்வி முடியும் தருவாயில் பெருமான் தோன்றி அவிர்பாகத்தை ஏற்றுக் கொள்ள வேள்வி நிறைவு பெற்றது. பின் வேள்வியில் பங்குபெற்ற தேவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வேண்டிய வரங்களை எல்லாம் பெருமான் வழங்கினார். வரங்களை வழங்கிய இப்பெருமான் ‘வரதர்’ என்று 
அழைக்கப்பட்டார். 


இவ்வாறு பெருமான் எழுந்தருளி அருள்புரிந்த நாள் சித்திரை மாதத் திருவோண திருநாளே ஆகும். தேவர்களுக்காய் எழுந்தருளிய பெருமான் இத்திவ்யதேசத்தில் எழுந்தருளி உலக மக்களுக்கும் அருள்புரிய வேண்டும் என அனைவரும் வேண்ட பெருமானும் அதற்கிசைந்தார். உடன் தேவலோகத்தில் உள்ள ஐராவதம் என்ற யானையே மலைவடிவங்கொண்டு எம்பெருமானைத் தாங்கி நின்றது. 


அதனால் இதற்கு அத்திகிரி என்ற பெயர் ஏற்பட்டது. ஐராவதம் எனப்பெறும் யானை வெள்ளைநிறம் என்பதால் ஸ்வேதகிரி என்றழைக்கப்பட்டு அதுவே வேதகிரி என மருவியது. என்பது பிரம்மனையும் அஞ்சிரம் என்பது வழிபடல் என்னும் பொருளையும் தரும். இதுவே கஞ்சிரம் எனப்பெயர் பெற்று பின் கஞ்சிதபுரியாகி காலவளர்ச்சியில் காஞ்சிபுரம் ஆயிற்று. இத்தலத்தை கிரேதா யுகத்தில் பிரம்மனும் திரேதாயுகத்தில் கஜேந்திரனும் துவாபரயுகத்தில் பிருஹஸ்பதியும் கலியுகத்தில் அனந்தனும் வழிபட்டு உய்திபெற்றனர். 


சிருங்கிபேரர் என்ற முனிவருக்கு ஹேமன், சுக்லன் என்னும் இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்கள் கொங்கண நாட்டில் இருந்த கௌதம முனிவரிடம் கல்வி பயின்றனர். இவ்விருவரும் திருமால் வழிபாட்டிற்குப் பழம், பூ, தீர்த்தம் கொடுக்கும் தொண்டினை மேற்கொண்டிருந்தனர். ஒரு நாள் தீர்த்தத்தை மூடாமல் வைக்க அதில் ஒரு பல்லி விழுந்துவிட்டது. அதனை அறியாது அப்படியே கொணர்ந்து குருவிடம் கொடுக்க அதிலிருந்து பல்லி தாவியோடியது. அதனைக்கண்டு வெகுண்ட முனிவர் அவ்விருவரையும் பல்லிகளாகும்படிச் சபித்தார். 


தமது தவறுணர்ந்தவர்கள் மன்னிப்பு வேண்டினர். இந்திரன் கஜேந்திரன் என்னும் யானையின் வடிவமாகி வரதனை வழிபட வரும் நாளில்  சாபம் நீங்கும் என்று அருளினார். இருவரும் திருக்கச்சியின் பிராகாரத்தில் பல்லிகளாக வந்தமர்ந்தனர். பின்பு இந்திரன் இத்தலத்தில் நுழைந்த பொழுது இவர்கள் சாபம் நீங்கித் தங்கள் பழைய வடிவினைப் பெற்றனர். 


இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் தற்போது இத்தலத்தின் பிராகாரத்தில் இருபத்து நான்காவது படிக்கெதிரில் தங்கத்தினாலும், வெள்ளியினாலுமான இரண்டு பல்லிகள் செய்து அமைக்கப்பட்டுள்ளன. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பல்லிகளைத் தொட்டு வரதனைப் பணிந்தால் நோயினின்று நீங்குகின்றனர். 


வாரணகிரி, அத்திகிரி என்ற ஒரு சிறிய மாடி போன்ற மலைகளால் ஆனது இத்திவ்யதேசம். வாரணகிரி என்கிற முதல் தளத்தில் நரசிம்மப்பெருமான் சந்நதி உள்ளது. இரண்டாவது தளம் வரதராஜப் பெருமாள் சந்நதியான அத்திகிரியாகும். ஒரு முறை தேவலோகத்தில் முனிவர்கள் மற்றும் தேவர்களுக்கிடையே இல்லறம் உயர்ந்ததா? துறவறம் உயர்ந்ததா? என்கிற விவாதம் ஏற்பட்டது. அவர்கள் தமக்குள் வாதிட்டு இறுதியில் தமது குலகுருவான வியாழபகவானை அணுகினர்.


வியாழன் துறவறமே சிறந்ததென்று தீர்ப்பளித்தார். இல்லறமே சிறந்ததென்ற கருத்தினைக் கொண்டிருந்த இந்திரன் வியாழனின் தீர்ப்பைக் கேட்டு வெகுண்டு பசி, ஏழ்மை, இல்லறம் என்பதை என்னவென்று அறியாத வியாழன் ஓர் ஏழை அந்தணனாகப் பிறக்கக் கடவது என்று சபிக்க பல குழந்தைகட்குத் தந்தையாய் ஓர் ஏழை அந்தணனாகப் பிறந்து வாழ்ந்தார். 


ஒரு நாள் குழந்தைகளோடு உணவு உட்கொள்ளும் வேளையில் நாய் ஒன்று உள்ளே புகுந்தது. அதைக்கண்ட வியாழன் அதனை அடித்து விரட்டுமாறு தெரிவிக்க, நாய், நான் போன பிறவியில் என்னைச் சரணடைந்தவளைக் காக்கத் தவறியதால் நாயாக அலைகின்றேன். இன்று நான் உன்னைச் சரணடைய நீயும் காக்க தவறினாய். நீயும் நாயாவாய் என்று சபித்தது. 


வியாழன் பரிகாரம் தேடிப் பரத்வாஜரை அணுகினார். அவர் திருக்கச்சி சென்று வரதனைச் சேவித்தால் சாபம் நீங்கும் என்றார். குரு இல்லாமல் துயருற்ற தேவர்கள் இந்திரனிடம் முறையிட இந்திரன் பிரம்மனிடம் சென்றார். பிரம்மன், தான் சித்ரா பௌர்ணமியன்று வரதனை வழிபடச் செல்லும்போது நீயும் வந்து வரதனை வழிபடு என்று தெரிவிக்க மூவரும் ஒன்று சேர்ந்து திருக்கச்சி சென்றனர். முதிய அந்தணர் வடிவில் வந்த குரு ( வியாழன் ) வரதனை வழிபட வரதன் அருள்செய்தார். வியாழன் தன் சாபம் நீங்கப் பெற்றார்.


நன்றி - தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக