வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 96

நான்காவது ஸ்கந்தம் – பதினெட்டாவது அத்தியாயம்


(ப்ருது தன் யாகக் குதிரையைத் திருடின இந்த்ரனை வதிக்க முயன்றதும், ப்ரஹ்மதேவன் ஸமாதானம் செய்ததும்)


மைத்ரேயர் சொல்லுகிறார்:- பிறகு ராஜரிஷியாகிய ப்ருது, ஸ்வாயம்புவமனு வாஸம் செய்தமையாலும் ஸரஸ்வதி நதி கிழக்கு முகமாய்ப் பெருகி வருகின்றமையாலும் பரிசுத்தமாகிய ப்ரஹ்மாவர்த்தமென்னும் க்ஷேத்ரத்தில் நூறு அச்வமேத யாகங்கள் செய்யவேண்டுமென்று ஸங்கல்பித்துக் கொண்டு யாகம் நடத்தினான். சதக்ரதுவென்று பேர்பெற்ற மஹானுபாவனாகிய தேவேந்த்ரன் தன்னைக்காட்டிலும் அவன் செயலில் மேற்படுவதைக் கண்டு அவனது யஜ்ஞத்தைப் பொறாதிருந்தான். ஸர்வாந்தராத்மாவும், ஸமஸ்த லோகங்களுக்கும் ஹிதோபதேசம் செய்பவனும் (நன்மையை உபதேசிப்பவனும்), ஷாட்குண்யபூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), யஜ்ஞங்களால் ஆராதிக்கப்பெற்று அவற்றிற்குப் பலன் கொடுப்பவனும், ஸமர்த்தனும் (ஸாமர்த்யம் உடையவனும்), ஸர்வேச்வரனுமாகிய ஸ்ரீமஹாவிஷ்ணு ப்ரஹ்மதேவனோடும் ருத்ரனோடும் லோகபாலர்களோடும் அவரது ப்ருத்யர்களோடும் கூடி, கந்தர்வர்களாலும் அப்ஸர மடந்தையர் கூட்டங்களாலும் முனிவர்களாலும் பாடப்பெற்றுத் தானே நேரில் புலப்பட்டான் (தெரிந்தான்). அப்பொழுது ஸித்தர், வித்யாதரர், தைத்யர், யக்ஷர் முதலிய தேவஜாதிகளும், மனுஷ்யர்களும், ஸுநந்தன், நந்தன் முதலிய பகவானுடைய ப்ருத்யர்களும்., கபிலர், நாரதர் தத்தர் முதலிய முனிவர்களும், ஸனகாதி மஹாயோகிகளும், மற்றுமுள்ள அவனுடைய பக்தர்களும் அவனைப் பின்தொடர்ந்து வந்தார்கள். 


பரத வம்சாலங்காரனே! அந்த ப்ரஹ்மாவர்த்ததேசத்தில் பூமி தர்மானுஷ்டானத்திற்கு வேண்டிய கருவிகளையும் மற்றையெல்லா விருப்பங்களையும் கறக்கும் தன்மையதாகையால் யாகம் செய்கிற அம்மன்னவனுக்கு வேண்டியவற்றையெல்லாம் கறந்தது. ஆறுகள் எல்லா ரஸங்களையும் பால், தயிர், பானகம், நெய், மோர் முதலியவற்றையும் பெருக்கின. மரங்கள் அகன்ற உருவமுடையவையாகித் தேன்களைப் பெருக்கிக்கொண்டு பூ, காய், பழம் முதலியவற்றைக் கொடுத்தன. ஸமுத்ரங்கள் ரத்னங்களை ராசி ராசியாய்க் கொழித்தன. பர்வதங்கள் பக்ஷ்யம் (கடித்து உண்பவை), போஜ்யம் (மென்று உண்பது), சோஷ்யம் (உறிஞ்சிக் குடிப்பவை), லேஹ்யம் (நக்கிச் சாப்பிடுபவை) என்ற நான்குவகை அன்னங்களையும் கொடுத்தன. ஸகல ஜனங்களும் தமது ப்ரபுக்களுடன் பலவகை உபஹாரங்களைக் கொடுத்தார்கள். பகவானையே நாதனாகவுடைய ப்ருதுவின் கார்யம் இங்கனம் பெரிய சீர்மையுடன் நடப்பதைக் கண்டு தேவேந்திரன் பொறாமை கொண்டு ப்ருது தொண்ணூற்று ஒன்பது அஸ்வமேத யாகங்களையும் செய்து நூறாவது அஸ்வமேத யாகத்தினால் யஜுர்வேதத்தின் பொருளான பகவானை ஆராதித்துக் கொண்டிருக்கையில், மறைந்துவந்து யாகக் குதிரையைத் திருடிக்கொண்டு ஆகாயமார்க்கத்தில் விரைந்தோடினான். அதை மஹானுபாவராகிய அத்ரி முனிவர் கண்டார். அவன், உண்மையில் அதர்மமாயினும் மூடர்களுக்கு தர்மமென்று தோற்றுகிற பாஷண்ட வேஷமாகிற கவசத்தை அணிந்திருந்தான். மஹாவீரனாகிய ப்ருதுவின் புதல்வன் அத்ரி மஹர்ஷியால், “இந்த்ரன் குதிரையைக் கொண்டு போகிறான்” என்று அறிவிக்கப்பட்டுப் பெரும் கோபங்கொண்டு அவனைக் கொல்ல விரும்பிப் பின்தொடர்ந்து “நில் நில்” என்று மொழிந்தான். இந்த்ரன் ஜடை தரித்து உடம்பெல்லாம் சாம்பல் பூசிப் பாஷண்ட வேஷம் பூண்டிருந்தானாகையால் அவனைக் கண்ட ப்ருது குமாரன் “தர்மமே இப்படி ஒரு வடிவங் கொண்டு வந்தது” என்று நினைத்து அவன் மேல் பாணத்தை ப்ரயோகம் செய்யாமலே திரும்பினான். 


இந்த்ரனை வதிக்கப்போய்த் திரும்பிவிட்ட அம்மன்னவனது குமாரனைநோக்கி அத்ரி மஹர்ஷி “அப்பா! யஜ்ஞத்தைப் பாழ் செய்கின்ற தேவாதமனாகிய இவ்விந்த்ரனை வதிப்பாயாக. இவனது வேஷத்தைக் கண்டு ப்ரமிக்க வேண்டாம்” என்று மீளவும் தூண்டினார். அவனும் அதைக்கேட்டுக் கோபாவேசமுற்று, ஸிம்ஹம் யானையைப் பின்பற்றுவது போல், ஆகாசமார்க்கத்தில் விரைகின்ற அவ்விந்த்ரனைப் பின்தொடர்ந்து ஓடினான். ஸ்வதந்த்ரனாகிய அந்த இந்த்ரன் பயந்து குதிரையை விட்டுவிட்டு தான் ஏற்ற வேஷத்தையும் விட்டு மறைந்து நின்றான். வீரனான ப்ருது குமாரன் குதிரையைக் கைப்பற்றித் தந்தையின் யாகபூமிக்கு வந்தான். மஹர்ஷிகள் அவனுடைய அற்புதச் செயலைக்கண்டு அவனுக்கு விஜிதாச்வனென்று பெயர் கொடுத்தார்கள். வல்லமையுடைய தேவேந்திரன் பேரிருளை விளைவித்து அதில் மறைந்து வந்து யூபஸ்தம்பத்தில் பொன் சங்கிலியினால் கட்டுண்டிருக்கிற யாகக்குதிரையை மீளவும் திருடிக் கொண்டுபோனான். அத்ரி மஹர்ஷி ஆகாயத்தில் விரைந்தோடுகிற அவ்விந்த்ரனை மறுபடியும் விஜிதாச்வனுக்குக் காட்டினார். அவ்விந்த்ரன் மண்டை ஓடு, தோல், கோணத்தடியும் தரித்திருந்தானாகையால் விஜிதாச்வனுக்கு அவனைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவன் “இவனே இந்த்ரன்” என்று தெரிவித்து அவனை வதிக்கும்படி அத்ரி மஹர்ஷியால் மீளவும் தூண்டப்பெற்றுக் கோபத்துடன் அவன்மேல் பாணத்தினை ப்ரயோகம் செய்தான். அவ்விந்த்ரன் முன்போலவே குதிரையையும் பாஷண்ட வேஷத்தையும் துறந்து மறைந்தான். வீரனாகிய விஜிதாச்வன் குதிரையை ஓட்டிக்கொண்டு தந்தையின் யாக பூமிக்குத் திரும்பினான். அறிவில்லாத மூடர்கள், பின்பு இந்த்ரன் கொண்ட நிந்தைக்கிடமான அந்தப் பாஷண்ட வேஷத்தைக் கைக்கொண்டார்கள். இந்த்ரன் கொண்ட மாறுவேஷங்களெல்லாம் பாபத்தை அறிவிக்கும் அடையாளங்களாகையால் அவை பாஷண்டம் என்று பேர்பெற்றன. அனுகூலம்போல் தோற்றுபவைகளும், மிதம்போலும் உண்மைபோலும் பேசுந் தன்மை அமைந்தவைகளும், தர்மாபாஸங்களும், திகம்பரமாயிருக்கை, காவித்துணியுடுக்கை முதலியவைகளுமான பாஷண்ட வேஷங்களில் ஜனங்கள் தர்மமென்னும் ப்ரமத்தினால் விருப்பம் கொள்கின்றனர். 


மஹாபராக்ரமசாலியாகிய ப்ருது இந்த்ரன் தன் யாகத்திற்கு விக்னம் (இடையூறு) செய்ததை அறிந்து அவன் மேல் கோபித்து தனுஸ்ஸை நாணேற்றிட்டுப் (வில்லில் கயிற்றைக் கட்டி) பாணத்தை எடுத்தான். அம்மன்னவன் இந்த்ரனை வதிக்க விரும்பிக் கோபங்கொண்டு பொறுக்கமுடியாத பலவேகத்துடன் கண்கொண்டு காணக்கூடாதிருக்கையில், அத்ரி முதலிய ருத்விக்குகள் கண்டு “மிகுந்த மதியுடையவனே! யாகத்தில் தீக்ஷித்தவன் சாஸ்த்ரங்களால் விதிக்கப்பட்ட யாகபசுவைத் தவிர மற்றெதையும் வதிக்கலாகாது. உன் யாகத்தை அழித்தவனும் உன் புகழால் ஒளிமழுங்கினவனுமாகிய இந்த்ரனை நாங்கள் வீர்யமுள்ள ஆஹ்வான மந்த்ரங்களால் அழைத்து உனது சத்ருவாகிய (எதிரியான) அவனை மந்த்ரபலத்தினால் பசு (யாகத்தில் அக்னியில் ஹோமம் செய்யப்படும் மிருகம்), புரோடாசத்தைப் (யாகத்தில் அக்னியில் ஹோமம் செய்யப்படும் வெந்த மாவினால் ஆன பண்டம்) போல் அக்னியில் ஹோமம் செய்கிறோம்” என்று யாகதீக்ஷிதனான ப்ருதுவுக்கு விண்ணப்பம் செய்து ஸ்ருக்கென்னும் பாத்ரத்தைக் கொண்டு கோபத்துடன் ஹோமம் செய்கையில், ப்ரஹ்மதேவன் கண்டு அவ்விடம் வந்து அவர்களைத் தடுத்து “அந்தணர்களே! நீங்கள் இந்த்ரனை வதிக்கலாகாது. யாகம் பகவானுடைய சரீரம். தேவதைகளும் பகவானுக்கு இஷ்டமான சரீரங்கள். அந்த தேவர் தலைவனான இந்த்ரனை யாகத்தினால் நீங்கள் எப்படி வதிக்கலாம்? இந்த்ரன் இம்மன்னவனது யாகத்திற்கு விக்னம் (இடையூறு) செய்ய விரும்பி தர்மலோபத்திற்கிடமான பெரிய அநீதியைச் செய்தான். இதைக் கண்டீர்களா? ஆகையால் இந்த ப்ருது மன்னவன் தொண்ணூற்று ஒன்பது யாகங்களோடு நிற்பானாக. இவன் இயற்கையில் பெரும் புகழுடையவன். இவனுக்கு இதனால் ஆகவேண்டியதில்லை. ப்ருதூ! நீ யாகங்களை நன்றாக அனுஷ்டித்தாய். நீ இவ்வளவோடு நிற்பாயாக. நீ மோக்ஷ தர்மங்களை அறிந்தவனல்லவா? உனக்கு இது தகுதியன்று. நீ இந்த்ரன் மேல் கோபம் கொள்ளலாகாது. நீயும் இந்த்ரனும் பகவானுக்குச் சரீரமாயிருப்பவர்கள். உனக்கு க்ஷேமம் உண்டாகுக. மஹானுபாவனே! ஊக்கத்துடன் நான் சொல்வதைக் கேட்பாயாக. உன் யாகத்திற்கு விக்னம் (இடையூறு) நேர்ந்ததைப் பற்றி நீ சிந்திக்கவேண்டாம். தெய்வத்தினால் தடைபட்ட கார்யத்தைப் பற்றி ஒருவன் சிந்திப்பானாயின் அவன் மனம் கோபாவேசமுற்றுப் பெரிய மோஹாந்தகாரத்தில் (மயக்கம், அறியாமை என்னும் இருளில்) மூழ்கும். ஆகையால் உன் யாகம் நிற்குமாக. தேவதைகளுக்கு துராக்ரஹம் (பிடிவாதம்) இயற்கையில் ஏற்பட்டது. அவர்கள் சொன்ன வார்த்தையைக் கேட்க மாட்டார்கள். உன் யாகத்தினால் இந்த்ரன் பாஷண்ட வேஷங்களைக் கொள்ளவே தர்மலோபம் (தர்மத்தில் குறை) உண்டாயிற்று. இந்த்ரன் உனது யாகத்திற்கு விக்னம் (இடையூறு) செய்ய விரும்பி யாகக் குதிரையைத் திருடும் பொருட்டு ஏற்படுத்தின இந்தப் பாஷண்ட வேஷங்களால் ஜனங்கள் மதிமயங்கி அவற்றில் கால்தாழ்கின்றனர். உன் யாகத்தினால் நேரிட்ட கெடுதியைக் காண்பாயாக. வேனனுடைய அபநீதியால் தர்ம மர்யாதைகளெல்லாம் பாழாகையில் அவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு இவனது சரீரத்தினின்று நீ அவதரித்தாய். நீ மஹாவிஷ்ணுவின் அம்சாவதாரம் அத்தகைய நீ இந்த ஜகத்தின் உத்பத்தியை ஆலோசித்து இதைப் படைத்த ப்ரஜாபதிகளின் ஸங்கல்பத்தை நிறைவேற்றுவாயாக. வல்லனே! தர்மலோபத்திற்கிடமான (தர்மத்தின் குறைவிற்கு இடமான) பாஷண்ட மார்க்கமாகிற இந்த்ரனது மாயையைப் போக்குவாயாக” என்றான். 


ப்ரஹ்மதேவனால் இங்கனம் கட்டளையிடப்பெற்ற ப்ருது மன்னவன் இந்த்ரனை நண்பனாகப் பாவித்து அவனோடு ஸந்தித்தான். மிகப்பெரிய செயல்களையும் செய்து முடிக்கவல்ல அம்மன்னவன் அவ ப்ருதஸ்னானம் செய்து நிற்க, தேவதைகள் ஹவிர்ப்பாகங்களால் திருப்தி அடைந்து வரதர்களாகையால் அவனுக்கு வரங்களை அளித்தார்கள். உண்மையான ஆசீர்வாதங்களைச் செய்யவல்ல பராஹ்மணர்கள் தக்ஷிணைகளைப் பெற்று ஸந்தோஷம் அடைந்து ஸத்கரிக்கப்பெற்று (கெளரவிக்கப்பட்டு) அவனுக்கு ஆசீர்வாதங்களைச் செய்தார்கள். பித்ருக்களும், தேவதைகளும், ரிஷிகளும், மனுஷ்யர்களும், மற்றும் எவரெவர் வந்தார்களோ அவர்களும் அம்மன்னவனால் ப்ரீதியுடன் தான மானங்கள் செய்யப்பட்டு பூஜிக்கப்  பெற்றார்கள். 


பதினெட்டாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக