நான்காவது ஸ்கந்தம் – பத்தொன்பதாவது அத்தியாயம்
(ப்ருதுவுக்கு ஸ்ரீமஹாவிஷ்ணு அனுக்ரஹம் செய்து ஹிதம் (நன்மையை) உபதேசித்தல்)
மைத்ரேயர் சொல்லுகிறார்:- ஷாட்குண்ய பூர்ணனும் யஜ்ஞங்களைப் பாதுகாப்பவனும் அவற்றில் கொடுக்கிற ஹவிஸ்ஸுக்களை புஜிக்கின்றவனுமாகிய வைகுந்தன் ப்ருதுவின் யஜ்ஞங்களால் நன்கு ஆராதிக்கப்பெற்று இந்த்ரனுடன் அவனைப் பார்த்து “மன்னவனே! இவ்விந்த்ரன் நூறு அஸ்வமேத யாகங்கள் செய்ய வேண்டுமென்கிற உன் ஸங்கல்பத்திற்கு விக்னம் (இடையூறு) செய்தானாகையால், அந்த அபராதத்தைப் பொறுக்கும்படி வேண்டுகிறான். இவன் விஷயத்தில் பொறுக்கவேண்டும். உலகத்தில் மதியுடைய மன்னவர் பிறர்க்கு உபகாரம் செய்யும் தன்மையராகி எத்தகைய பூதங்களுக்கும் த்ரோஹம் (கெடுதி) செய்யமாட்டார்கள். தேஹம் ஆத்மாவைக் காட்டிலும் வேறுபட்டதல்லவா? அவர்கள் அதற்காகப் பிறர்மேல் த்ரோஹ சிந்தை கொள்ள மாட்டார்கள். உன்னைப்போன்ற பண்டிதர்களும் ஈச்வரனது மாயையால் மதிமயங்குவார்களாயின், அவர்கள் நெடுநாள் பெரியோர்களைப் பணிந்ததெல்லாம் பயனற்றதேயாகும். ஆகையால் பண்டிதனாயிருப்பவன் இச்சரீரமானது அவித்யை, காமம், கர்மம் இவைகளால் ஏற்பட்டதென்பதை அறிந்து அதில் மனப்பற்று செய்யலாகாது. ஆத்மா என்றும் ஒருவாறாயிருப்பவன்; நிர்மலன் (அழுக்கற்றவன்); ஸ்வயம்ப்ரகாசன் (வேறு எதனுடைய உதவியின்றி தானே தோன்றுபவன்); ராகம் (விருப்பு), த்வேஷம் (வெறுப்பு) முதலிய துர்க்குணமற்றவன்; ஜ்ஞானானந்தாதி (ஜ்ஞானம், ஆனந்தம் முதலிய) குணங்களுக்கிடம்; அணு ஸ்வரூபனாயினும் (அணு அளவினன் - மிகவும் சிறியவன் என்றாலும்) ஜ்ஞானத்தினால் எங்கும் நிறைந்தவன்; மறைவில்லாதவன்; தேஹாதிகளை (சரீரம் போன்றவற்றை) ஸாக்ஷாத்கரிப்பவன்; தேஹத்திற்குள் (உடலில்) புகுந்து அதைத் தரிப்பவன் (தாக்குபவன்); தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணமாயிருப்பவன் (வேறாயிருப்பவன்); தேஹ தர்மங்களான பசி தாஹம் முதலியவை ஆத்மாவுக்குக் கிடையாது; அவனுக்கு தேவ மனுஷ்யாதி பேதங்கள் (வேறுபாடுகள்) எவையும் கிடையாது. இதற்கு ஸுஷுப்தியே (ஆழ்ந்த உறக்கமே) த்ருஷ்டாந்தம் (உதாரணம்). அப்பொழுது நானென்பது மாத்ரம் தோற்றுமேயன்றி மற்ற பேதங்கள் எவையும் தோற்றாது. இத்தகைய ஆத்மஸ்வரூபத்தையும் அவ்வாத்மா பரமாத்மாவான எனக்கு உட்பட்டவன் என்பதையும் அறிந்து என்னை உபாஸிப்பானாயின், அவன் ப்ரக்ருதியோடிருப்பினும் அதன் குணங்களால் தீண்டப்பெறமாட்டான். பலனை விரும்பாமல் வர்ணாச்ரம தர்மத்தினால் என்றும் என்னை ச்ரத்தையுடன் ஆராதிப்பானாயின், அவன் மனம் மெல்ல மெல்லத் தெளிவு பெறும். ராகம் த்வேஷம் முதலிய தோஷங்களையெல்லாம் துறந்து தூயமனத்தனாகி ஆத்ம பரமாத்ம ஸ்வரூபங்களை நன்றாக உணர்ந்து பசி தாஹம் முதலிய ஊர்மிகள் தீண்டப்பெறாததும் எனக்குச் சரீரமும் குணப்பெருமையுடையதும் ப்ரக்ருதி ஸம்பந்தமற்றதுமாகிய ஆத்மஸ்வரூபத்தைப் பெறுவான். “ஆத்மா இயற்கையில் நிர்விகாரன் (மாறுதல்கள் அடையாதவன்); பஞ்சபூதங்கள், ஜ்ஞானேந்திரிய, கர்மேந்த்ரியங்கள், மனம் ஆகிய இவற்றின் ஸமுதாயமான தேஹத்திற்கு ப்ரபு; இயற்கையில் எவ்வகை விகாரங்களும் இல்லாதவன். இவனுக்கு வரும் விகாரங்களெல்லாம் ப்ரக்ருதி ஸம்பந்தத்தைப் பற்றினவை” என்று எவன் அறிகிறானோ, அவன் ப்ரக்ருதியோடிருக்கும் பொழுதே க்ஷேமத்தைப் பெறுவான். ஸத்வ ரஜஸ் தமோ குணங்களால் விளையும் விகாரங்களெல்லாம் சரீரத்தைச் சேர்ந்தவைகளேயாயினும் அச்சரீர ஸம்பந்தத்தினால் ஆத்மா ஜ்ஞான ஸங்கோசம் (அறிவு குறைவு) உண்டாகப் பெற்று அதனால் ஸுக துக்கங்களை அனுபவிக்கின்றான். தேஹாத்ம விவேகமுடைய பண்டிதர்கள் என்னிடத்தில் மிகுந்த ப்ரீதியுடையவராகி அங்கனம் தேஹத்தைப் பற்றி விளைகிற ஸம்பத்துக்களிலும் விபத்துக்களிலும் ஸுகதுக்கங்களால் கலங்க மாட்டார்கள், ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்த அறிஞனாகையால் இந்திரியங்களை வென்று ஸுகதுக்கங்களை ஸமமாகப் பாவித்து மேன்மையுள்ள தேவாதிகளிடத்திலும் தாழ்மைக்கிடமான பசு, பக்ஷி முதலியவற்றிலும் நடுத்தரமான மனுஷ்யரிடத்திலும் பேதம் (வேற்றுமை) பாராட்டாமல், நான் ஏற்படுத்தின மந்த்ரி முதலிய ஸமஸ்த ஜனங்களோடும்கூடி உலகங்களையெல்லாம் பாதுகாத்து வருவாயாக.
அரசனுக்கு ப்ரஜைகளைப் பாதுகாக்கையே பெரிய நன்மையாம். அவன், ப்ரஜைகளை நல்வழி தவறாதிருக்குமாறு பரிபாலித்து வருவானாயின், அவர்கள் செய்யும் புண்யத்தில் ஆறில் ஒரு பாகத்தைப் பெறுவான். அதுவின்றி அவர்களை வருத்திக் கப்பத்தை (அரசனுக்கு சிற்றரசர்கள் மற்றும் மக்கள் செலுத்தும் தொகை) மாத்ரம் வாங்கிக் கொள்வானாயின், தன் புண்யம் அவரிடம் சென்று தான் அவருடைய பாபத்தைப் பெறுவான். ஆகையால், ப்ராஹ்மண ச்ரேஷ்டர்களால் அனுமதி செய்யப்பெற்று அவர்களைப் பின்சென்று தர்மத்தையே முக்யமாகக்கொண்டு தன்னை ப்ரபுவாக நினைக்காமல் ப்ரஜைகளில் ஒருவனாகவே பாவித்து உலகமெல்லாம் தன்னிடத்தில் ப்ரீதியோடிருக்குமாறு அதைப் பாதுகாத்து வருவாயாயின், சீக்ரத்திலேயே ஸித்தர்களான ஸனகாதி முனிவர்கள் உன் க்ருஹத்திற்கு வரக்கண்டு அவர்களால் தத்வோபதேசம் பெற்று மோக்ஷத்தைப் பெறுவாய்.
மன்னவனே! நீ என்னிடத்தில் ஏதேனும் ஒரு வரம் வேண்டிக்கொள்வாயாக. நான் உன் சமாதி குணங்களாலும் சீலத்தினாலும் உனக்கு உட்பட்டிருக்கிறேன். குணசீலமில்லாதவர்கள் யாகங்களாலும் தவங்களாலும் யோகத்தினாலும் என்னை எவ்வளவு ஆராதிப்பினும், நான் அவர்களுக்கு ஸுகமாய்க் கிடைக்கமாட்டேன். நான், உலகத்தையெல்லாம் ஸமமாக நினைக்கும் மனமுடையவரிடத்தில் கலந்திருக்கும் தன்மையனேயன்றி மற்றவரிடம் கலந்திருக்கமாட்டேன்” என்றான். ஜயசீலனாகிய அம்மன்னவன் ஜகத்திற்கெல்லாம் தந்தைபோல் ஹிதம் (நன்மையை) உபதேசிக்கும் தன்மையுள்ள பகவானுடைய கட்டளையைச் சிரஸாவஹித்து (தலையால் ஏற்று), தன் பாதங்களில் விழுந்து தான்செய்த பாபகார்யத்தினால் வெட்கித்திருக்கின்ற இந்த்ரனை ப்ரேமத்துடன் வாரியெடுத்து அணைத்து த்வேஷத்தைத் துறந்தான். ஆ! இப்படியும் ஒருவனுக்கு மனம் ஸ்வாதீனமாயிருப்பதுண்டோ? பிறகு ஜகத்ஸ்வரூபியாகிய பகவான் ப்ருது மன்னவனால் மேன்மேலும் வளர்ந்து வருகின்ற பக்தியுடன் பூஜை செய்து தன் பாதாரவிந்தங்களைப் பிடிக்கப்பெற்று ஸத்புருஷர்களுக்கு நண்பனாகிய அம்மஹானுபாவன் புறப்பட்டுப் போக முயன்றவனாயினும் அம்மன்னவனிடம் ப்ரீதியால் விலம்பித்துத் (தாமதித்துத்) தனது தாமரைக் கண்களால் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான் அன்றிப் போகவில்லை.
மன்னவர் தலைவனாகிய அந்த ப்ருது கைகூப்பிக்கொண்டு ஆனந்த நீர்களால் கண்கள் நிரம்பப் பெற்று பகவானைப் பார்க்கமுடியாது இருந்தான்; மற்றும் கண்ணீர்களால் தழதழத்து ஒன்றும் பேசாதிருந்தான். ஆனால், இந்தப் பகவானை மனத்தினால் அணைத்து அம்மனத்திலேயே தரித்துக்கொண்டிருந்தான். பிறகு அம்மன்னவன் கண்ணீர்களைத் துடைத்துக் கொண்டு, எத்தனை பொழுது காணிலும் கண்களுக்குச் சிறிதும் திருப்தி உண்டாகாதபடி மிகவும் அழகாயிருப்பவனும் பாதங்கள் பூமியில் படும்படி நிற்கின்றவனும் பக்கத்திலிருக்கின்ற கருத்மானுடைய (கருடனுடைய) தோள்மேல் கை நுனியை வைத்துக்கொண்டிருப்பவனுமாகிய அந்தப் பரமபுருஷனைக் கண்குளிரக் கண்டு “நீ வரங்களைக் கொடுக்கவல்ல ப்ரஹ்மாதிகளுக்கும் ப்ரபு. ஆயினும் ஸத்வாதி குணங்ளால் கலங்கின மனமுடையவரும் காகம்போல் பலவகை துக்கங்களுக்கிடமான ஸம்ஸாரத்தில் உழல்கின்றவருமான மூடர்கள் விரும்புகிற அற்ப (தாழ்ந்த) வரங்களைப் பண்டிதன் எப்படி விரும்புவான்? மோக்ஷம் கொடுக்கவல்லவனே! அத்தகைய வரங்களை நான் உன்னிடத்தில் விரும்பமாட்டேன். நாதனே! பெரியோர்களின் ஹ்ருதயத்தினின்று வாய் வழியால் வெளிப்பட்டு வருகிற அம்ருதம் போன்ற உன் பாதாரவிந்தங்களின் குணங்களைக் கேட்க நேராதாயின், எனக்கு மோக்ஷங்கூட வேண்டியதில்லை. உன் குணங்கள் எல்லையில்லாதவை. அவற்றைக் கேட்க எனக்கு அனேகமாயிரம் காதுகளைக் கொடுப்பாயாக. இதுவே எனக்கு இஷ்டமான வரம். பெரியோர்களின் வாய் வழியாய் நழுவி வருகிற உன் பாதாரவிந்தங்களின் அம்ருதத் திவலையில் (துளியில்) படிந்த காற்று வெகு தூரத்தினின்றாயினும் சிறிது வீசப்பெறுவோமாயின், தத்வமார்க்கத்தை (வேதத்தில் சொல்லப்பட்ட தத்வ வழியை) மறந்து மனம்போன வழியெல்லாம் திரிகின்ற குத்ஸித யோகிகளான (இழிவான யோகிகளான) நாங்களும் உன் விஷயமான அறிவைப் பெறுவோம். ஆகையால் எனக்கு மற்ற வரங்களால் ஆகவேண்டியது ஒன்றுமே இல்லை.
நல்ல புகழுடையவனே! ஸத்புருஷர்களோடு ஸஹவாஸம் (சேர்ந்து இருத்தல்) நேருமாயின், எப்பொழுதாயினும் நான் ப்ரயத்னம் செய்யாமலே மங்களமான உன் புகழைக் கேட்பேன். பசுவைத் (விலங்கைத்) தவிர, ஸாரஜ்ஞனாகிய (ஸாரத்தை Essence-ஐ அறிந்த) மற்ற எவன்தான் உன் குணங்களைக் கேட்க நேரினும் அதினின்று மீண்டு போவான்? நாத! ஸ்ரீமஹாலக்ஷ்மியும் உன் குணங்களை அனுபவிக்கவேண்டுமென்னும் விருப்பத்தினாலல்லவோ உன்னை மணம் புரிந்தாள்? புருஷர்களில் எல்லாரிலும் சிறந்து, குணங்களுக்கெல்லாம் நிதியுமாகிய உன்னை நான் ஸ்ரீமஹாலக்ஷ்மியைப்போல் மிக்க ஆவலுடன் பணிந்தேன்; நாங்களிருவரும் உன்னை ஒருவனையே பர்த்தாவாக விரும்பிப் பணியினும், உனது பாதாரவிந்தங்களில் மனவூக்கமுடைய எங்களுக்குச் சக்களத்திச் சண்டை (ஒருவனின் இரண்டு மனைவிகளுக்குள் ஏற்படும் சண்டை) உண்டாகாது. ஜகத்திற்கெல்லாம் தாயாகிய அந்த ஸ்ரீமஹாலக்ஷ்மியோடு விரோதம் உண்டாயினும் உண்டாகட்டும். அவளைப் போல் நானும் உன்னைப் பணிவேனன்றி, அதற்காக அதினின்று மீள மாட்டேன். நீ அற்ப வஸ்துவையும் ப்ரீதியினால் பெரிதாகக் கொள்ளும் தன்மையன், தீனவத்ஸலன் (ஏழை, எளியவரிடத்தில் பரிவு உள்ளவன்). ஆகையால் எனக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் விரோதம் வரின், நீ என்னிடத்தில் ப்ரீதி செய்வாய். மற்றும், ஆனந்தமயமான உன் ஸ்வரூபத்தை அனுபவிப்பதில் ஆழ்ந்திருக்கிற உனக்கு ஸ்ரீமஹாலக்ஷ்மியால் ஆகவேண்டிய ப்ரயோஜனம் என்னிருக்கிறது? நீ இப்படி ஸ்ரீமஹாலக்ஷ்மியையும் உபேக்ஷித்து (பொருட்படுத்தாது) உன் பக்தர்களைப் பாராட்டும் தன்மையனாயிருப்பதைப் பற்றியே, பெரியோர்கள் ப்ரக்ருதியின் குணங்களான ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்களும் அவற்றின் கார்யமான தேஹாத்மப்ரமாதிகளும் (இந்த சரீரமே ஆத்மா போன்ற மனக்கலக்கங்களும்) தீண்டப்பெறாமல் திகழ்கின்றவனும் தன்னைப் பற்றினார்க்கும் அவை தீண்டாதபடி அருள்புரிகின்றவனுமாகிய உன்னைப் பணிகின்றார்கள்.
ஜகதீசனே! நாங்கள் ப்ரக்ருதி வாஸனையால் மதிமயங்கி ஸம்ஸார பலன்களை விரும்பி அவற்றிற்காக யஜ்ஞாதி கர்மங்களைச் செய்யினும், நீ எங்கள் மதிகேடைக் கண்டு மனம் இரங்கி அந்த யஜ்ஞாதி கர்மங்களையும் உனது ஆராதனமாகக் கொண்டு எங்களுக்குப் பக்தியை விளைவித்து மோக்ஷத்தையே கொடுக்கும் தன்மையன். பெரியோர்கள் ஸாம்ஸாரிக பலன்களெல்லாம் துச்சமென்றறிந்து அவற்றில் விருப்பின்றி ஜ்ஞானாநந்த ஸ்வரூபனான ஆத்மாவின் ஸ்வரூபத்தை அறிந்து அவ்வளவோடு நிற்காமல் அவ்வாத்மாவுக்கும் அந்தராத்மாவாகிய உன்னையே பணிகின்றார்கள். அவர்கள் உன் பாதாரவிந்தங்களை த்யானிப்பதையொழிய மற்றைய எந்தப் பலனையும் விரும்பமாட்டார்கள். நான் உன்னை ப்ரீதியுடன் பணிந்து வருகையில், என்னைப் பார்த்து “வரம் வேண்டிக் கொள்வாய்” என்று மொழிந்தாயே, அது உலகங்களை வஞ்சிப்பதற்காக மொழிந்த வார்த்தையேயென்று எனக்குத் தோற்றுகின்றது. உன் கட்டளையாகிற வேதம் பசு, புத்ராதி (பசுக்கள், புத்ரர்கள் முதலிய) ஐஹிக (இவ்வுலகில் அனுபவிக்கும்) பலன்களையும், ஸ்வர்காதி (ஸ்வர்கம் போன்ற) ஆமுஷ்மிக (வேறு உலகினில் அனுபவிக்கும்) பலன்களையும் ஸாதித்துக் கொடுப்பவைகளான யாகாதி கர்மங்களை விதித்து, ஜனங்களுக்கு அவற்றில் விருப்பத்தை விளைத்துக் கயிறுபோல் பந்திக்கின்றது (கட்டுகின்றது). அவர்கள் மதிமயங்கி யஜ்ஞாதி கர்மங்களை அனுஷ்டிக்கின்றார்கள். இல்லையாயின் அம்முயற்சியேயின்றி மோக்ஷத்தில் விருப்பம் உண்டாகப் பெறுவார்கள்.
ஈசனே! உன் மாயையால் மதிமயங்கி ஆத்ம பரமாத்மாக்களின் உண்மையை அறியப் பெறாத ஜனங்களில் எவனேனும் ஒருவன் தெய்வாதீனமாய் உன்னைப் பணிந்தும், ஸத்யஸ்வரூபனாகிய உன்னிடத்தினின்று மோக்ஷத்தைத் தவிர மற்றதை விரும்புவானாயின், உன்னை விட்டு வெகுதூரம் ஒதுங்கிப்போனவனேயாவான். அப்பொழுது உன்னுடைய ஈச்வரத்வமே கழன்றுபோகும். ஆகையால், தந்தை புதல்வனுக்கு ஹிதத்தைச் செய்வதுபோல், நாங்கள் வேண்டாமல் போயினும் நீ எங்களுக்கு ஹிதத்தையே (நன்மையையே) செய்யவேண்டும்” என்றான்.
அதைக்கேட்டு பகவான்:- “ராஜனே! நீ நன்றாக மொழிந்தாய். நீ ஸம்ஸாரிகள் விரும்பும் பலன்கள் எவற்றையும் விரும்பாதிருக்கின்றாய். இது ஸரியே. என்னிடத்தில் மிக்க மனவூக்கமுடையவன் ஸ்வர்க்கத்தையும், ஆத்மானுபவமாகிற கைவல்யத்தையும், நரகத்தையும் துல்யமாகவே நினைப்பான். மஹாராஜ! நான் உன் விஷயத்தில் மிகவும் களிப்புற்றேன். நீ என் கட்டளையை ச்ரத்தையுடன் அங்கீகரித்துத் துறக்கமுடியாத கோபத்தையும் துறந்தாய். அதுவே எனக்கு மேலான ஆராதனம். ராஜனே! உனக்கு என்னிடத்தில் மேன்மேலும் பக்தி வளர்ந்துவருமாக. உனக்குத் தெய்வாதீனமாய் என்னிடத்தில் இப்படிப்பட்ட பக்தி உண்டாயிற்று. நீ இந்த பக்தியின் மஹிமையால், தாண்டமுடியாத என் மாயையையும் தாண்டினாய். (ராஜனே! நான் சொன்னபடி மனவூக்கக் தவறுதலின்றி ப்ரஜைகளைப் பாதுகாத்து வருவாயாக. என் கட்டளைப்படி கடப்பவன் எல்லாவிதத்திலும் க்ஷேமத்தைப் பெறுவான்)” என்று ஸாரமுள்ளதான ப்ருதுவின் வசனத்தைப் புகழ்ந்து அவனால் பூஜிக்கப்பட்டு அவனை அனுக்ரஹித்துத் தான் புறப்பட்டுப்போக முயன்றான். அப்பொழுது தேவதைகளும், ரிஷிகளும், பித்ருக்களும், கந்தர்வர்களும், ஸித்தர்களும், சாரணர்களும், பன்னகர்களும், கின்னரர்களும், அப்ஸரஸ்த்ரீகளும், மனிதர்களும், பக்ஷிகளும், பற்பல பூதங்களும், எல்லாம் பகவத் ஸ்வரூபமேயென்னும் புத்தியுடைய மன்னவனால் உரை, மனம், அஞ்சலி, பக்தி இவற்றால் உரியபடி வெகுமதிக்கப் பெற்று வைகுந்தனைப் பின் சென்றார்கள். ப்ருது மன்னவன் உபாத்யாயர்களோடு கூடப் பார்த்துக் கொண்டிருக்கையில், பகவான் அவன் மனத்தைப் பறிப்பவன் போல் தனது லோகத்திற்குச் சென்றான். அம்மன்னவன் ப்ரஹ்மாதி தேவர்களுக்கும் தேவனாகிய அவ்வாஸுதேவன் கண்ணுக்குப் புலப்படும் வரையில் அவனையே பார்த்துக் கொண்டிருந்து, மறைந்த பின்பு திக்கு நோக்கி தண்டன் ஸமர்ப்பித்துத் (விழுந்து நமஸ்கரித்து) தன் பட்டணம் போய்ச்சேர்ந்தான்.
பத்தொன்பதாவது அத்தியாயம் முற்றிற்று.