ஞாயிறு, 1 மார்ச், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 98


நான்காவது ஸ்கந்தம் – இருபதாவது அத்தியாயம்

(ப்ருது மன்னவன் ப்ரஜைகளுக்கு ஹிதம் (நன்மையை) உபதேசித்தல்)

மைத்ரேயர் சொல்லுகிறார்:- பட்டணத்து ஜனங்கள் மன்னவன் வருகிறானென்று தெரிந்து முத்துமாலைகளாலும் விடுதிப்பூக்களாலும் பூமாலைகளாலும் வெண்பட்டுக்களாலும் ஸ்வர்ணதோரணங்களாலும் மிக்க பரிமணமுள்ள தூபங்களாலும் ஆங்காங்கு அலங்காரம் செய்து ராஜமார்க்கங்களிலும் நாற்சந்திகளிலும் வீதிகளிலும் சந்தனம் அகில் முதலிய வாஸனைத் தண்ணீர்களைத் தெளித்து, புஷ்பம், அக்ஷதை, பழம், யவமுளை, பொரிதீபம் முதலிய மங்கள வஸ்துக்களை அமைத்துக் குலைகளோடு கூடின வாழை மரங்களையும் பாக்கு மரங்களையும் கட்டித் தளிர்த்தோரணங்களால் முழுவதும் அலங்கரித்து வைத்தார்கள். இன்னும் அவர்கள் தீபங்களையும் பூஜைக்கு வேண்டிய வஸ்துக்களையும் தயிர் முதலிய ஸமஸ்த மங்கள த்ரவ்யங்களையும் எடுத்துக்கொண்டு சிறந்த காதணிகளை அணிந்து மற்றுமுள்ள அலங்காரங்களால் திகழ்கின்ற கன்னிகைகளை முன்னிட்டு மன்னவனை எதிர்கொண்டு சென்றார்கள். வீரனாகிய ப்ருதுமன்னவன் வந்திகளால் (துதி பாடகர்கள்) துதி செய்யப்பெற்றும் கர்வமின்றி, சங்கு, துந்துபி முதலிய வாத்யகோஷத்தோடும் அந்தணர்களின் வேத கோஷத்தோடும் பட்டணத்திற்குள் நுழையும்பொழுது அப்பெரும்புகழன் ஆங்காங்குப் பட்டணத்து ஜனங்களாலும் காட்டு ஜனங்களாலும் பூஜிக்கப்பட்டுத் தானும் அவர்களை வெகுமதித்துக் களிப்புற்று அவரவர்க்கு வேண்டிய வரங்களையும் கொடுத்துக்கொண்டே சென்று தன் க்ருஹத்திற்குள் ப்ரவேசித்தான். அம்மன்னவன் மஹாகுணசாலி, பெரியோர்களால் பூஜிக்கத் தகுந்தவன். அவனது சரித்ரங்கள் நிந்தைக்கிடமின்றிப் பரிசுத்தமாயிருக்கும். அவன் பூமியைக் கறந்தமை முதலிய இத்தகைய பெரும்பெரிய செயல்களை நடத்திக்கொண்டே பூமண்டலத்தையெல்லாம் நெடுநாள் பாதுகாத்து வந்து இவ்வுலகில் பெரும்புகழை நாட்டி வைகுண்டலோகம் போய்ச்சேர்ந்தான்.

இங்கனம் பலகுணங்கள் நிறைந்ததும் குணசாலிகளால் கொண்டாடப் பெற்றதுமாகிய ப்ருதுவின் புகழை மைத்ரேயர் சொல்லக்கேட்ட விதுரர் பகவானிடத்தில் மிகுந்த பக்தியுடையவராகையால் இச்சரித்ரம் மொழிந்த மைத்ரேயரைப் பூஜித்து மீளவும் அம்முனிவரைப்பார்த்து “மஹர்ஷி! ப்ருதுமன்னவன் ப்ராஹ்மணர்களால் அபிஷேகம் செய்யப்பெற்றதையும், அவன் ஸமஸ்ததேவதைகளாலும் பூஜிக்கப் பெற்றதையும், அவன் தன் புஜங்களில் விஷ்ணுவின் தேஜஸ்ஸு நிலைநிற்கப் பெற்று அவற்றால் பூமியைக்கறந்ததையும் மொழிந்தீர். அவன் அதற்குமேல் நடத்தின வ்ருத்தாந்தத்தையும் எனக்கு மொழிவீராக. தெரிந்தவன் எவன்தான் இந்த ப்ருதுவின் கீர்த்தியைக் கேட்கமாட்டான்? இம்மன்னவன் தன் பராக்ரமத்தினால் ஸம்பாதித்து அனுபவிக்காத போகங்கள் எவையுமே இல்லை. இப்பொழுதுள்ள ராஜாக்களும் இந்திரன் முதலிய லோகபாலர்களும் அவற்றில் சிந்தினவற்றையே அனுபவித்து வருகின்றார்கள். அம்மஹானுபாவனுடைய பரிசுத்தமான சரித்ரத்தை எனக்கு மொழிவீராக” என்று வினவினார். மைத்ரேயரும் அதைக் கேட்டு மேல்வருமாறு கூறினார். 

“அந்த ப்ருதுமன்னவன் கங்கா யமுனைகளின் மத்யத்திலுள்ள ப்ரஹ்மாவர்த்தமென்னும் க்ஷேத்ரத்தில் வாஸம் செய்துகொண்டு புண்யத்தைக் கழிக்க விரும்பி முன் செய்த கர்மங்களுக்குப் பலனாக ஏற்பட்ட போகங்களை அனுபவித்து வந்தான். அவன் கட்டளை எவ்விடத்திலும் தடைபடவில்லை. ஏழு தீவுகளிலும் அவனொருவனே அதிகாரம் செலுத்தி வந்தான். அவன் ப்ராஹ்மணர்களையும் பகவானிடத்தில் பக்தியுடையவர்களையும் தன் அதிகாரத்திற்கு உட்படுத்தாமல் அவர்களை ப்ரீதியுடன் பாராட்டி வந்தான். ஒருகால் அவன் மஹாஸத்ரமென்னும் யாகம் செய்யத் தீக்ஷித்துக் கொண்டான் (வ்ரதம் எடுத்துக்கொண்டான்). அந்த யாகத்தில் தேவதைகளும் ப்ரஹ்மரிஷிகளும் தேவரிஷிகளும் ஸபை கூடினார்கள். அந்த ஸபையில் மேன்மைக்கிடமான பெரியோர்கள் அனைவரும் அவரவர்க்குரியபடி பூஜிக்கப்பெற்று உட்கார்ந்திருக்கையில், நக்ஷத்ரங்களின் நடுவில் சந்த்ரன்போல், அம்மன்னவன் ஜனங்களினிடையில் எழுந்துநின்றான். அவன் உயர்ந்தவன். அவனது புஜங்கள் பருத்து உருண்டு நீண்டிருக்கும். அவன் வடிவு பொன்னிறமுடையது. கண்கள் தாமரையிதழ் போல் சிவந்திருக்கும். மூக்கும் முகமும் அழகாயிருக்கும். அவன் சந்த்ரன்போல் தெளிந்திருப்பான்; பருத்தழகிய தோள்களுடையவன்; அழகிய பற்களும் புன்னகையும் அமைந்தவன்; அகன்ற மார்பினன்; பருத்த நிதம்பம் (இடுப்பு) உடையவன். அவனது உதரம் அரச இலைபோன்று த்ரிவலியினால் (மூன்று மடிப்புடன்) அழகாயிருக்கும்; கொப்பூழ் நீர்ச்சுழிபோல் ஆழ்ந்திருக்கும். அவன் மஹாதேஜஸ்வி. பொன்னிறமுள்ள துடைகளும் உயர்ந்த பாதங்களும் கறுத்துச் சுருண்டு நுண்ணிய தலைமயிர்களும் சங்குபோன்ற கழுத்தும் உடையவன். அவன் விலையுயர்ந்த சிறந்த ஒரு வெண்பட்டை அரையில் உடுத்து மற்றொன்றை உத்தரீயமாகத் தரித்து யாக தீக்ஷையைப் பற்றி ஆபரணங்கள் அணியாமையால் வடிவழகெல்லாம் வ்யக்தமாய் விளங்கப் பெற்றிருந்தான். க்ருஷ்ணாஜினம் (மான் தோல்) தரித்துக் கையில் பவித்ரம் அணிந்து காலைக்கடன்களை முடித்து நிர்மலனாகிய (அப்பழுக்கற்ற) அம்மன்னவன் குளிர்ந்து நிகுநிகுத்த (ப்ரகாசிக்கும்) கருவிழிகள் அமைந்த கண்களால் நாற்புறமும் சுற்றிப் பார்த்து எல்லோரையும் களிப்புறச் செய்துகொண்டு செவிக்கினியதும் அழகிய பதங்களும் தெளிந்த பொருளும் ஆழ்ந்த கருத்தும் அமைந்து இலக்கணப் பிழையற்றதுமாகிய வாக்யத்தை இங்கனம் மொழிந்தான்.

ப்ருது சொல்லுகிறான்:- இந்த ஸபையில் வந்திருக்கும் ஸாதுக்களே! நீங்கள் எல்லாரும் நான் சொல்லுவதைக் கேட்பீர்களாக. உங்களுக்கு நன்மை உண்டாகுக. தர்மத்தை அறிய விரும்புவோர் தமது நெஞ்சில் பட்டதைப் பெரியோர்களிடம் விண்ணப்பம் செய்து அவர் மூலமாய் அதைத் தெளிவித்துக் கொள்ளவேண்டும். நான் ப்ரஜைகளுக்கு தண்டனை விதிக்கவும் அவர்களுக்கு ஜீவனம் கற்பித்துக் கொடுக்கவும் தத்தமது வர்ணாச்ரமங்களுக்குரிய தர்ம மர்யாதைகளில் தவறாது நடத்தவும் பகவானால் ஏற்படுத்தப்பட்டேன். தர்மநெறி தவறாமல் ப்ரஜைகளைப் பாதுகாக்கும் மன்னவன் விஷயத்தில் கர்மஸாக்ஷியாகிய ஸர்வேச்வரன் ஸந்தோஷம் அடைந்து மோக்ஷத்தையும் கொடுப்பான். ஆனபின்பு வேதவாதிகளான பெரியோர்கள் அத்தகைய மன்னவனுக்கு விருப்பங்களையெல்லாம் விளைக்கவல்ல எந்தெந்தப் புண்ய லோகங்கள் உண்டாகுமென்று சொல்லுகிறார்களோ அவையெல்லாம் உண்டாகுமென்பதில் ஸந்தேஹமில்லை. எவன் ப்ரஜைகளை தர்மத்தில் நடத்தப் பாராமல் அவர்களிடத்தினின்று கப்பத்தை மாத்ரம் வாங்கிக் கொள்ளுகிறானோ, அவன் ப்ரஜைகளின் பாபத்தைப் பெறுவது மாத்ரமேயன்றித் தன் ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்யாதிகளையும் இழப்பான். ஆகையால், என் ப்ரஜைகளே உங்களைப் பாதுகாக்கும் ப்ரபுவாகிய என்னுடைய பரலோக ஹிதத்தின் பொருட்டு, உங்கள் ப்ரயோஜனத்தைக் கைகூடுவிப்பதாகிய வர்ணாச்ரம தர்மத்தைப் பொறாமையின்றிப் பகவானுடைய ஆராதனமென்னும் புத்தியுடன் அனுஷ்டிப்பீர்களாக. அதுவே நீங்கள் எனக்குச் செய்யும் அனுக்ரஹமாம். 

பித்ருக்களே! தேவதைகளே! ரிஷிகளே! நிர்மலரான நீங்கள் என் கட்டளையை அனுமோதனம் செய்வீர்களாக (மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வீர்களாக). தர்மகார்யத்தைச் செய்கிறவனுக்கும் தூண்டுகிறவனுக்கும் அனுமதி செய்பவனுக்கும் பரலோகத்தில் பலன் துல்யமே (ஸமமே). நல்லியற்கையுடையவர்களே! ஈச்வரனே இல்லையாகையால் புண்யபாபங்களும் பரலோக சிந்தையும் முதலே இல்லையென்று நாஸ்திகர்கள் சொல்லுவார்கள். ஆயினும் அது பொருளல்ல. யஜ்ஞங்களால் ஆராதிக்கப்படுகின்றவனும் அவற்றிற்குப் பலன் கொடுப்பவனுமாகிய ஸர்வேச்வரனென்பவன் ஒருவன் உளனென்று ஆஸ்திகர்கள் ஒப்புக்கொள்கின்றார்கள். இவ்வுலகத்திலும் பரலோகத்திலும் சில விடங்களில் வெளிச்சம் நிறைந்த விசித்ரமான போகபூமிகளும் விசித்ரமான சரீரமுடைய அவற்றை அனுபவிக்கும் புருஷர்களும் புலப்படுகின்றார்கள். இது ஈச்வரனையொழியப் பொருந்தாது. மனு, உத்தானபாதன், த்ருவன், ப்ரியவ்ரதன், என் பாட்டனாகிய அங்கராஜன், ப்ரஹ்மதேவன், ருத்ரன், ப்ரஹ்லாதன், பலிசக்ரவர்த்தி ஆகிய இவர்களும் இவர்களைப் போன்ற மற்றும் பலரும் ஈச்வரன் உளனென்று ஒப்புக் கொண்டவர்கள். இவர்கள் அந்தப் பகவானால் பலன்களையும் பெற்றிருக்கிறார்கள். தர்ம அர்த்த காமங்களையும் தர்மத்தின் பலனான ஸ்வர்க்காதி லோகங்களையும் மோக்ஷத்தையும் கொடுப்பவன் ஈச்வரன் ஒருவனே என்று ச்ருதிகளும் ஸ்ம்ருதிகளும் பெரும்பாலும் சொல்லுகையாலும் மனு முதலியவர் ஈச்வரனை ஒப்புக் கொண்டார்கள். தர்ம ஸ்வரூபத்தை அறியாதவர்களும் சோகிக்கத் தகுந்தவர்களும் ம்ருத்யுவுக்குப் பேரன் போன்றவருமான வேனன் முதலிய பாபிஷ்டர்களைத் தவிர மற்றவர் அனைவரும் ஈச்வரனை ஒப்புக்கொண்டவர்களே. ஸம்ஸார தாபங்களால் வருந்துமவர்க்குப் பகவானுடைய பாதாரவிந்தங்களில் பக்தி நாள்தோறும் வளர்ந்து வருமாயின், அது அவன் கால் கட்டை விரலில் உண்டான கங்கைபோல், பல ஜன்மங்களில் ஏற்பட்ட அவர்களது மனமலங்களையெல்லாம் உடனே போக்கிவிடும். அங்கனம் மனமலங்களெல்லாம் தீரப்பெற்ற புருஷன் ஸம்ஸாரத்தில் விரக்தியும் ஆத்ம ஜ்ஞானமுமாகிற வீர்யமுடையவனாகிப் பகவானுடைய பாதமூலத்தில் மிக்க மன ஊக்கம் பெற்று கர்ப்ப ஜன்ம ஜராமரணாதி வருத்தங்களுக்கிடமான ஸம்ஸாரத்தை மீளவும் அடையமாட்டான். ஆகையால் உங்கள் வர்ணாச்ரமங்களுக்கு ஏற்பட்ட பஞ்சமஹாயஜ்ஞாதி கர்மங்களை அனுஷ்டித்துக் கொண்டு சமம் தமம் முதலிய குணங்களும் அமையப் பெற்று மனத்தினால் சிந்தித்து வாயினால் புகழ்ந்து சரீரத்தினால் பணிந்து மனக் கபடமின்றி நமது விருப்பத்தின்படி பலன் கைகூடுமென்று மனவுறுதியுடையவர்களாகி வேண்டினவற்றையெல்லாம் கறக்கவல்ல பாதாரவிந்தங்களையுடைய அந்தப் பகவானையே பஜிப்பீர்களாக. சுத்த ஜ்ஞான ஸ்வரூபனும், கெட்ட குணங்கள் எவையும் தீண்டப் பெறாதவனும், கல்யாண குணங்களெல்லாம் நிறைந்தவனுமாகிய அந்தப் பகவான் பற்பல வகைப்பட்ட வஸ்துக்களும், குணங்களும், க்ரியைகளும், மந்திரங்களும் தனக்குச் சரீரமாயிருக்கப் பெற்றவனாகையால் தானே யாகஸ்வரூபனாகி அந்த யாகத்தினால் ஸாதிக்கப்படுகிற ஸ்வர்க்காதி பலன்களும் அவற்றைக் கொடுக்கிற அக்னி இந்த்ராதி தேவதாரூபமான சரீரங்களும் அவற்றிற்கு வாசகமான அக்னி இந்த்ராதி நாமங்களும் தானேயாகிறான். விபுவாகிய இந்தப் பகவான், ப்ரக்ருதி காலம் வாஸனை கர்மம் இவற்றால் உண்டாகிற சரீரத்தில் ஜீவன் மூலமாய் சப்தாதி விஷயங்களை அனுபவிக்கும் ஜ்ஞானத்தைப் பெற்று யாகாதி கர்மங்களால் உண்டாகும் ஸ்வர்க்காதி பலனாயிருக்கிறானென்று பெரியோர்கள் நிச்சயிக்கின்றார்கள். அக்னி கட்டைகளில் பற்றி அவற்றின் குணமுடையதுபோல் தோன்றினும் இயற்கையில் அவற்றின் குணம் தீண்டப் பெறாதிருப்பதுபோல், ஈச்வரன் சேதன அசேதனங்களில் வ்யாபித்து அவையெல்லாம் தானேயென்னும்படி இருப்பினும் அவற்றின் குணம் தீண்டப்பெறாதவனே. இந்தப் பூமியில் என் தேசத்தில் வஸிக்கின்ற இந்த மனிதர்கள் யாகங்களில் கொடுக்கப்படும் ஹவிஸ்ஸுக்களைப் புசிக்கிற இந்த்ராதி தேவதைகளுக்கு அந்தராத்மாவாய் இருப்பவனும் ஹிதோபதேசம் செய்பவனும் தன்னைப் பற்றினாருடைய பாபங்களைப் போக்கும் தன்மையனுமாகிய பகவானை மனவுறுதியுடன் தமது வர்ணாச்ரம தர்மங்களால் என்றும் பஜிக்கின்றார்களாகையால் என்மீது அருள் புரிகின்றார்கள். பலவகை ஸம்ருத்திகளும் நிறைந்திருக்கிற மன்னவர்கள் மதிமயங்கி, ஐச்வர்யமில்லாமற் போயினும் பொறுமையாலும் தவத்தினாலும் அதிதிகளை ஆராதிக்கையில் ஊக்கமுற்றிருக்கையாலும் சமம் தமம் முதலிய மற்ற குணங்களாலும் அக்னிபோல் ஜ்வலித்துக் கொண்டிருப்பவரும் பகவானையே தேவதையாக உடையவருமாகிய ப்ராஹ்மணர் விஷயத்தில் அபராதப்பட்டு அழியாதிருப்பார்களாக; ப்ராஹ்மணர்களும் ஐச்வர்ய மதத்தினால் மதிமயங்கின க்ஷத்ரியர் விஷயத்தில் கோபங்கொள்ளாமல் அருள்புரிந்து வருவார்களாக. ப்ராஹ்மணர்களைப் பணியும் தன்மையரான மனு முதலியவர்களுக்கும் தேவனும் புராணபுருஷனுமாகிய ஸர்வேச்வரன் இந்த ப்ராஹ்மணர்களின் பாதாரவிந்தங்களைப் பணிகையால் என்றும் தன்னைவிட்டுப் பிரியாத ஸ்ரீமஹாலக்ஷ்மியையும் ஜகத்தையெல்லாம் பாவனமாக்கும் புகழையும் பெற்று மேன்மையுள்ள பெரியோர்களுக்குத் தலைவனுமாயிருக்கிறான். 

ஸமஸ்த ப்ராணிகளின் ஹ்ருதய குஹையிலும் வாஸம் செய்பவனும் கர்மத்திற்குட்படாத ஸ்வதந்த்ரனும் ப்ராஹ்மணர்களுக்கு அன்பனுமாகிய ஈச்வரன் இந்த ப்ராஹ்மணர்களைப் பணிவோரிடத்தில் மிகுதியும் ஸந்தோஷமும் அடைகின்றானாகையால், அந்த பகவானுடைய முகமலர்த்தியையே எதிர்பார்த்திருக்கையாகிற பரமதர்மத்தில் மனவூக்கமுடையவர் அனைவரும் வணக்கத்துடன் மனோ வாக்காயங்கள் (மனது, சொல், உடல்) என்கிற மூன்றையும்  அடக்கிக்கொண்டு அந்த ப்ராஹ்மண குலத்தையே பணிந்து வருவது யுக்தமாம். ப்ராஹ்மணர்களை என்றும் மாறாமல் பணிந்து வருவானாயின், தானொரு ப்ரயத்னம் செய்யாமலே சீக்ரத்தில் மனம் தெளியப்பெற்றுச் சாந்தியைப் பெறுவான். சாந்தியுடையவனுக்கு எதுதான் அஸாத்யம்? யாகங்களில் ஹவிஸ்ஸைப் புசிக்கிற இந்த்ராதி தேவதைகளுக்கும் ப்ராஹ்மணர்களே முகமாகையால் அவர்களைப் பணிவது அந்த இந்த்ராதி தேவதைகளையும் பணிந்ததாம். உண்மையை உணர்ந்த பெரியோர்கள் இந்த்ராதி தேவதைகளின் நாமங்களைச் சொல்லி ப்ராஹ்மணர்களின் முகத்தில் ஹோமம் செய்கிற ஹவிஸ்ஸைப் பகவான் புஜிப்பதுபோல் அசேதனமான அக்னியில் ஹோமம் செய்த ஹவிஸ்ஸைப் புஜிக்கிறதில்லை. பகவான் ஜ்ஞான நிஷ்டையில் நின்றிருக்கும் தன்மையரான அந்தணர்களை என்றும் விட்டுப் பிரியாதவனாகையால் அவர்கள் வாய் மூலமாய்ப் புஜிப்பது அவனுக்கு மிகவும் ப்ரியமாயிருக்கும். ப்ராஹ்மணர்கள் யஜ்ஞாதி ஸ்ரூபத்தையும் உபாஸனையின் ஸ்வரூபத்தையும் அறிந்து அவ்வழியில் பரப்ரஹ்மத்தை ஸாக்ஷாத்கரிக்க விரும்பி நித்யமாயிருப்பதும் ராகாதி தோஷங்களும் ப்ரமம் (மயக்கம்), ப்ரமாதம் (கவனக்குறைவு) முதலிய தோஷங்களுமின்றிப் பரப்ரஹ்ம ஸ்வரூபத்தையும் இந்த ஜகத்ஸ்வரூபத்தையும் கண்ணாடிபோல் தெளிவாய்க் காட்டக் கூடியதும் அனாதியுமாகிய வேதத்தை ச்ரத்தை, தவம், நல்லொழுக்கம், மௌனம், இந்த்ரிய நிக்ரஹம் (புலனடக்கம்), த்யானம் ஆகிய இவைகளால் இவ்வுலகத்தில் மறக்காமல் தரித்துக்கொண்டு வருகின்றார்கள். ஆகையால் நல்லியற்கையுடையவர்களே! நான் அந்த ப்ராஹ்மணர்களின் பாதாரவிந்தங்களில் படிந்த ரேணுவை (தூளியை) எனது வாழ்நாள் முழுவதும் என் கிரீடத்தில் தரிப்பேனாக. இதை என்றும் தரிக்கும் புருஷனுடைய பாபங்களெல்லாம் சீக்ரத்தில் பறந்துபோகும். ஸமஸ்த கல்யாண குணங்களும் இவனைத் தேடிக்கொண்டு வந்து பணிகின்றன. இங்கனம் ப்ராஹ்மணர்களின் பாததூளி படுதலால் நற்குணங்களுக்கு இருப்பிடமானவனும் சீலத்தையே தனமாக உடையவனும் பிறர்செய்த நன்றியை மறவாதவனும் ஜ்ஞானவ்ருத்தர்களைப் பணியும் தன்மையனுமாகிய அம்மனிதனுக்கு ஸமஸ்த ஸம்பத்துக்களும் உண்டாகின்றன. அத்தகைய ப்ராஹ்மணர்களும் பசுக்களும் பகவானும் மற்றுமுள்ள அவனுடைய பக்தர்களும் எனக்கு அருள் புரிவார்களாக.

மைத்ரேயர் சொல்லுகிறார்:- இங்கனம் மொழிகின்ற அம்மன்னவனது வசனத்தைக் கேட்டுப் பித்ருக்களும் தேவர்களும் ப்ராஹ்மணர்களும் நல்லியற்கையுடைய மற்றவர்களும் மனக்களிப்புற்று நல்லது நல்லதென்று புகழ்ந்து தந்தை பிள்ளையினால் உலகங்களை ஸாதிப்பானென்னும் பழமொழி உண்மையே. ப்ராஹ்மண சாபத்தினால் பாழடைந்த பாபிஷ்டனான வேனனும் அவன் பிள்ளையாகிய உன்னால் நரகத்தைக் கடந்தான். ஹிரண்யகசிபு பகவானைப் பழித்தமையால் நரகத்தை அடைய வேண்டியவனாயிருந்தும் தன் புதல்வனாகிய ப்ரஹ்லாதனுடைய மஹிமையால் நரகத்தைக் கடந்தான். வீரர்களில் தலைவனே! பூமண்டலத்திற்கெல்லாம் பர்த்தாவாகிய நீ பல ஆண்டுகள் வாழ்ந்திருப்பாயாக. உனக்கு ஸர்வலோக ரக்ஷகனாகிய பகவானிடத்தில் இப்படிப்பட்ட பக்தி உண்டாயிருக்கிறதல்லவா? நீ நெடுநாள் மன்னவனாயிருப்பின், உனது ஸம்பந்தத்தினால் ப்ரஜைகளெல்லாம் பகவானிடத்தில் பக்தி உண்டாகப் பெற்றுக் கடைத்தேறுவார்கள். பவித்ரகீர்த்தி! ப்ராஹ்மணர்களைப் பாதுகாக்கும் தேவனும் உத்தமச்லோகர்களில் சிறந்தவனுமாகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவின் கதைகளை வெளியிடுகிற உன்னை நாதனாகப் பெற்று நாங்கள் இப்பொழுது உன் ஸம்பந்தத்தினால் மோக்ஷப்ரதனான அந்தப் பகவானுக்குத் தொண்டு பூண்டு அவனையே நாதனாகப் பெற்றோம். நாதா! நீ உன் ப்ருத்யர்களான (சேவகர்களான) எங்களுக்கு நல்வழியில் நடக்கும்படி கற்பிப்பது ஓர் ஆச்சர்யமன்று. மன இரக்கமே இயற்கையாகப் பெற்ற பெரியோர்களுக்கு ப்ரஜைகளிடத்தில் ப்ரீதி உண்டாவது ஸ்வாபாவிகமே. ப்ரபு! ஞானமென்னும் கண்ணை இழந்து கர்மங்களால் ஸம்ஸாரத்தில் உழல்கின்ற எங்களை நரகத்தினின்று கரையேற்றினாய். ப்ராஹ்மண குலத்தில் ஆவேசித்து க்ஷத்ரிய குலத்தையும், க்ஷத்ரிய குலத்தில் ஆவேசித்து ப்ராஹ்மண குலத்தையும், அவ்விரண்டிலும் ஆவேசித்து இவ்வுலகத்தையும் பாதுகாப்பவனும் ரஜஸ் தமஸ்ஸுக்கள் தீண்டாத சுத்தஸத்வமே வடிவாயிருக்கப் பெற்றவனும் பரமபுருஷ ஸ்வரூபனுமாகிய உனக்கு நமஸ்காரம்” என்று மொழிந்தார்கள். 

இருபதாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக