ஶ்ரீமத் பாகவதம் - 99

நான்காவது ஸ்கந்தம் – இருபத்தொன்றாவது அத்தியாயம்

(ஸனத்குமாரர் ப்ருதுவுக்கு ஜ்ஞானோபதேசம் செய்தல்)

மைத்ரேயர் சொல்லுகிறார்:- மஹாபராக்ரமசாலியான அந்த ப்ருது மன்னவனைக் குறித்து இங்கனம் ஜனங்கள் சொல்லிக் கொண்டிருக்கையில், ஸூர்யனோடொத்த ஒளியுடைய நான்கு முனிவர்கள் அவ்விடம் வந்தார்கள். உலகங்களையெல்லாம் பாவனமாக்குகின்ற (தூய்மையாக்குகிற) ஒளியினாலேயே இவர்கள் ஸனகாதிகளென்று அறியக்கூடிய ஸித்தேச்வரர்களான (ஸித்தர்களில் உயர்ந்தவர்களான) அம்முனிவர்கள் ஆகாயத்தினின்று இழிந்து வரும்பொழுதே அம்மன்னவன் அவர்களைக் கண்டமாத்ரத்தில் மேற்கிளம்பின ப்ராணன்களை (மேலே கிளம்பும் ப்ராண வாயுவை) நிலைநிறுத்த விரும்பி, ஜீவன் சப்தாதி விஷயங்களை எதிர்கொள்வதுபோல் மிக்க மனவிருப்பத்துடன், ஸபையிலுள்ளவர்களோடும் தன் ப்ருத்யர்களோடும் எழுந்து நின்றான். கௌரவத்தினால் மெய்மறந்து உடனே தலைவணங்கப் பெற்று அவர்களுக்கு அர்க்யமும் ஆஸனமும் (இருக்கையும்) கொடுத்து அவர்களை விதிப்படி பூஜித்தான். அவன் பெரியோர்களின் ஆசாரத்தை வெகுமதிக்க முயன்று அம்முனிவர்களின் பாதங்களை விளக்கி (கழுவி) அந்த ஜலத்தைத் தன் சிரஸ்ஸில் (தலையில்) ப்ரோக்ஷித்துக் (தெளித்துக்) கொண்டான். யாக வேதிகையில் அக்னிகள் ஜ்வலிப்பதுபோல் அம்முனிவர்கள் ஸ்வர்ணமயமான ஆஸனத்தில் உட்கார்ந்திருக்கையில், ச்ரத்தையோடும் மனவூக்கத்தோடும் அவர்களை நோக்கி :- “மங்களஸ்வபாவர்களே ! ஆ! நான் என்ன புண்யம் செய்தேனோ? யோகிகளாலும் வருந்தியும் காண முடியாத உங்களுடைய காட்சி எனக்குக் கிடைத்ததல்லவா? உங்களைப்போன்ற அந்தணர்களும் மங்கள ஸ்வரூபனான ஸ்ரீமஹாவிஷ்ணுவும் அவனுடைய பக்தர்களான மற்றவரும் எவனுக்கு அருள் புரிகின்றார்களோ, அவனுக்குப் பரலோகத்திலாவது இவ்வுலகத்திலாவது எதுதான் கிடைக்க அரிதாயிருக்கும்? எங்கும் நிறைந்த ஸர்வஜ்ஞனான பரமாத்மாவை ப்ரஹ்மாதிகளான ப்ராணிகள் அனைவரும் காணமுடியாதிருப்பதுபோல், நீங்கள் இவ்வுலகம் முழுவதும் திரிந்து கொண்டிருப்பினும் உலகத்திலுள்ளவர் ஒருவரும் உங்களைக் காண்கிறதில்லை. க்ருஹஸ்தர்கள் (இல்லறத்தில் இருப்பவர்கள்) பணமற்றவராயினும் ஸாதுக்களாயிருப்பார்களாயின், பணமுடையவர்களே. அவருடைய வீட்டிலுள்ள ஜலம், புல், பூமி வீட்டிற்குடையவன், மற்ற ப்ருத்யர் (சேவகர்கள்) முதலிய அனைத்தும் உங்களைப் போன்ற பெரியோர்களால் அங்கீகரிக்கப்படுகிறதல்லவா? எவருடைய க்ருஹங்கள் உங்களைப் போன்ற பாகவதர்களின் ஸ்ரீபாத தீர்த்தம் படும்படியான பாக்யமற்றவைகளோ, அவை ஸமஸ்த ஸம்பத்துக்களும் அமைந்தவையாயினும், ஸர்ப்பங்களுக்கிடமான சந்தனமரம் போன்றவைகளே. உங்களுக்கு நல்வரவேயல்லவா? நீங்கள் பால்யம் (இளமை) தொடங்கி மோக்ஷத்தில் விருப்பமுடையவர்களாகி இந்திரியங்களை வென்று பெரிய விரதங்களை அனுஷ்டித்துக் கொண்டு வருகின்றீர்கள். சப்தாதி விஷயங்களையே (உலகத்திலுள்ள பொருள்களையே) புருஷார்த்தமாக (அடையப்படவேண்டியவை என்று) ப்ரமித்து (மயங்கி) வ்யஸனங்களுக்கு (கவலைகளுக்கு) விளைநிலமாகிய ஸம்ஸாரத்தில் கர்மங்களால் விழுந்து உழல்கின்ற எங்களுக்கு க்ஷேமம் உண்டாகுமா? பரமாத்மஸ்வரூபனான ஆத்மாவின் ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரித்து அதை அனுபவிப்பதிலேயே மிக்க மனவூக்கமுடையவர்களாகிய உங்கள் விஷயத்தில் க்ஷேமம் விசாரிக்கவேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு நன்மை தீமைகளைப் பற்றின எண்ணங்களே கிடையாது. ஆகையால் நான் உங்களிடத்தில் நம்பிக்கையுடையவனாகி, ஸம்ஸார தாபங்களால் வருந்துகின்ற என் போன்றவர்களுக்கு நண்பர்களான உங்களை வினவுகின்றேன். இந்த ஸம்ஸாரத்தில் உழல்கின்ற ஜீவனுக்கு எந்தக்காரணத்தினால் அனாயாஸமாக க்ஷேமம் உண்டாகும்? ஜ்ஞானிகளுக்கு மிகவும் ப்ரியனும் ஸம்ஸாரிகளான ஜீவாத்மாக்களுக்கு ஜ்ஞானப்ரதானம் செய்து கடைத்தேற்றுந் தன்மையனும் பிறவியற்றவனுமாகிய பகவான் உங்களைப் போன்ற ஜ்ஞானிகளாய் அவதரித்துத் தன் பக்தர்களை அனுக்ரஹிக்கும் பொருட்டு இப்பூமண்டலம் முழுவதும் திரிகின்றான். ஆகையால் பகவானுடைய அம்சமான உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை” என்றான். அந்த ப்ருதுமன்னவன் மொழிந்த வார்த்தை ஸாரமும் (essenceம்) பொருளடக்கமுடையதும் மிதமும் இனியதுமாயிருந்தது. அதைக் கேட்ட ஸனத்குமாரர் ப்ரீதியினால் புன்னகையுடன் இங்கனம் மொழிந்தார்.


ஸனத்குமாரர் கூறுகிறார்:- “மஹாராஜனே! நீ எல்லாமறிந்தவனாயினும் ஸமஸ்த ப்ராணிகளுக்கும் ஹிதத்தைச் செய்ய விரும்பி நன்றாக வினவினாய். ஸாதுக்களின் நடத்தை இத்தகையதே. ஸாதுக்களுடைய ஸஹவாஸம் (உயர்ந்த பெரியவர்களுடன் சேர்ந்து இருப்பது) போகமோக்ஷங்களை விரும்புவோர் இருவர்க்கும் அவரவர் விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுக்குமென்று பெரியோர்கள் புகழ்கின்றார்கள். ஸாதுக்களோடு ஸஹவாஸம் சேர்ந்தால் அவர்களோடு ஸம்பாஷணம் செய்ய (வார்த்தை சொல்ல) நேரும். அப்பால் தமது விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் உபாயங்களைப் பற்றி வினவ நேரும். பிறகு ஸ்வர்க்காதி போகங்களுக்கு உபாயமான யாகாதிகளின் ஸ்வருபத்தையும் மோக்ஷ ஸாதனமான உபாஸனாதி (த்யானத்தின்) ஸ்வருபத்தையும் அவர்களால் உபதேசிக்கப் பெறுவார்கள். அதனால் அனைவரும் ஸுகத்தை அடைவார்கள். மன்னவனே! உனக்குப் பகவானுடைய பாதாரவிந்தங்களின் குணங்களைக் கேட்பதில் மாறாத ப்ரீதி ஸ்வயமாகவே உண்டாயிருக்கின்றது. இது மன மலமான கர்மத்தையெல்லாம் அடியோடு அழித்து விடும். மனிதர்களுக்கு மோக்ஷம் உண்டாகும் வழியை விவரித்துச் சொல்லுகிற சாஸ்த்ரங்களில், ஸத்வாதி குணங்கள் தீண்டப் பெறாதவனும் அளவிட முடியாத ஸ்வரூப ஸ்வபாவங்களுடையவனுமாகிய பரமாத்மாவினிடத்தில் மாறாதபக்தியும் மற்றவைகளில் மனப்பற்றின்மையும் ஆகிய இவ்வளவே மோக்ஷத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் உபாயமென்று நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது. அவையிரண்டும் உண்டாகும் விதத்தைக் கேள். 

பாகவதர்களைப் பணிதலும், பகவானுடைய புண்ய கதைகளைக் கேட்டலும், அர்த்தத்தையும் (பொருளையும்) காமத்தையுமே (இன்பத்தையுமே) பெரிய புருஷார்த்தமாக நினைக்கும் ஸம்ஸாரிகளுடைய கோஷ்டியில் விருப்பின்மையும், அவர்கள் விரும்புகிற அர்த்த காமங்களில் மனம் தாழாமையும், தத்வத்தை அறியவேண்டுமென்னும் விருப்பமும், ஆசார்யனைப் பற்றுதலும், ஆசார்யன் உபதேசித்த ஆத்மயோகத்தை மனனம் செய்தலும் (மீண்டும் மீண்டும் மனதில் அசை போடுதலும்), அதை அனுஷ்டிக்க வேண்டுமென்கிற ச்ரத்தையும், பகவதாராதன ரூபமான பஞ்சமஹாயஜ்ஞாதி நித்ய நைமித்திக கர்மங்களை அனுஷ்டிக்கையும், ஆத்மஸ்வரூபத்தின் உண்மையை அனுஸந்திக்கையாகிற பரமஹம்ஸர்களின் நடத்தையும், பரிசுத்தமான ஆஹாரத்தில் ப்ரீதியும், ஆத்மஸ்வரூபானுஸந்தானமும் (ஆத்மாவின் இயற்கை நிலையை ஆழ்ந்து விசாரிப்பதும்), அம்ருதம் போன்ற பகவானுடைய குணங்களை அனுஸந்திக்கையும் தவிர மற்ற எதனாலும் ஸந்தோஷமுறாமையும், ப்ராணிகளை ஹிம்சிக்காமையும், போஜனம் முதலிய காலங்களிலும் பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை த்யானிக்கையும், பகவானுடைய சரித்ரங்களாகிற மேலான மதுவை (தேனை) பானம் செய்கையும் (பருகுதலும்), கண், காது முதலியவற்றையும் மனத்தையும் வேறு விஷயங்களில் போகவொட்டாமல் தடுத்து பகவானிடத்திலேயே நிலைநிறுத்துகையும், மற்ற புருஷார்த்தங்களையும் அவற்றின் உபாயங்களையும் எடுத்துக் கழிக்கவுங்கூட நெஞ்சில் நினையாமையும், தேஹதாரணத்திற்கு (இந்த உடல் இருப்பதற்கு) வேண்டிய செயல் தவிர மற்ற எவ்வகைச் செயல்களிலும் மனம் செல்லாமையும், சீதோஷ்ணாதிகளைப் (குளிர்ச்சி, சூடு போன்ற இரட்டைகளைப்) பொறுக்கையும், கேட்பதற்கு இன்பமான பகவானுடைய குணங்களையும் பாகவதர்களின் குணங்களையும் மனதால் நினைந்து வாயாரமொழிந்து மேன்மேலும் பக்தி வளரப்பெறுகையும் ஆகிய இவைகளால் பகவானிடத்தில் பரமபக்தியும் மற்ற விஷயங்களில் மனப்பற்றின்மையுமாகிற இவ்விரண்டும் உண்டாகும். பிறகு ஆசார்யர் அனுக்ரஹத்திற்கு இலக்கான புருஷன் வைராக்யத்தோடு கூடின பக்தி ரூப ஜ்ஞானத்தின் வேகத்தினால் பஞ்ச பூதங்களின் பரிணாமமான சரீரத்தை மீளவும் வேரூன்றவொட்டாமல், அக்னி அரணிக் கட்டையைத் தஹிப்பது (எரிப்பது) போல் தஹித்து விடுவான். இங்கனம் பகவத் பக்தியால் சரீர ஸம்பந்தம் உண்டாகாதபடி அதன் வேரான புண்யபாப கர்மங்களும் அச்சரீரத்தின் குணங்களான ராகாதிகளும் (விருப்பு, வெறுப்புகளும்) பஸ்மமாகப்பெற்று (சாம்பலாகப் பெற்று) ஜீவாத்ம பரமாத்மாக்களுக்குள்ள ஸம்பந்தத்தை ஸம்ஸார தசையில் மறைத்துக் கொண்டிருந்த சரீரத்தையும் அதன் கார்யங்களான ராகாதி தோஷங்களையும் ஸ்வப்னத்தில் போல் காணமாட்டான். கரணகளேபராதிகளில் (இந்த்ரியங்கள், சரீரம் முதலியவற்றில்) மனவிருப்பமாகிற வாஸனை மாறாதிருக்கும் வரையில்தான் தேஹத்தையும், சப்தாதி விஷயங்களையும் மற்றவைகளையும் காண்பான். அவற்றில் வாசனை தீரும்பொழுது எதையும் காணமாட்டான். சரீர ஸம்பந்தம் உள்ளவரையில் ஜீவன் தனக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள ஸம்பந்தத்தை அறியமாட்டான். பேதத்தையே நினைத்துக் கொண்டிருப்பான். சரீரம் நீங்குகையில் பரமாத்ம ஸாயுஜ்யத்தை (பரமபதத்தில் பகவானுடன் சேர்ந்து ப்ரஹ்மானந்தத்தை அனுபவிப்பது ஸாயுஜ்யம்) அடைந்து வைஷம்யத்தையே (வேறுபாட்டையே) பார்க்கமாட்டான். 

சப்தாதி விஷயங்களை நினைப்பார்களாயின், அவை இந்திரியங்களையும், அவ்விந்தரியங்கள் மனத்தையும் இழுத்துக்கொண்டு போய்விடும். ஏரிக்கரையில் முளைத்திருக்கும் புல், செடி முதலியவற்றின் தாள் வேருடன் பிடுங்கப்பெற்றுக் கரையை உறுதியற்றதாக்கி ஜலம் வெளியில் ஊரிப் பாய்வதற்கிடமாவதுபோல், சப்தாதி விஷயங்களில் சென்ற மனம் வலிவற்று நிச்சய (உறுதியான) ஜ்ஞானம் மாறி அழிந்து போவதற்கிடமாகும். நிச்சய ஜ்ஞானம் மாறுகையில் பரமாத்மோபாஸனம் (எம்பெருமானை த்யானித்தல்) நழுவும். அதனால் மற்ற காலங்களில் பரமாத்மாவின் உருவத்தைச் சிந்திக்கையும் அழியும். உபாஸனம் தடைபடுகையில் ஆத்மஸ்வரூபத்தின் உண்மையைப் பற்றின அறிவும் தொலையும். தன்னைத்தானே மறைத்துக்கொள்கை இதுவேயென்று பண்டிதர்கள் சொல்லுகிறார்கள். ஜீவன் ப்ரீதிக்கிடமான ஆத்மஸ்வரூபத்தை அறியாமல் சப்தாதி விஷயங்களையே ப்ரியமாக நினைப்பானாயின், புருஷார்த்தம் கைசோரப் பெறுகையென்பது இதைக்காட்டிலும் மற்றொன்றும் இல்லை. இந்திரியங்கள் இயற்கையாகவே சப்தாதி விஷயங்களில் இழியும்  தன்மையுள்ளவை. அவற்றை அடக்காமல் தாமே சப்தாதி விஷயங்களை ஆவலுடன் சிந்திப்பார்களாயின் அம்மனிதர்களுக்கு எத்தகைய நன்மையும் கைகூடாது. மற்றும், அவர் ஜ்ஞானத்தை இழந்து ஸ்தாவர ஜன்மத்தைப் பெறுவார்கள். அனர்த்தங்களுக்கெல்லாம் இடமான அஜ்ஞானத்தைக் கடக்க இச்சிப்பவன் (விரும்புபவன்) சப்தாதி விஷயங்களில் எவ்விதத்திலும் மனப்பற்று செய்யலாகாது. அது தர்ம, அர்த்த, காம, மோக்ஷங்களில் எதையும் கைகூட வொட்டாமல் அடியோடு பாழ்செய்துவிடும். அந்நான்கில் மோக்ஷமே அழியாத புருஷார்த்தமென்று அதையே விவேகிகள் விரும்புகிறார்கள். மற்ற மூன்றும் காலத்தினால் பயம் நேரக்கூடியவையாகையால் அநித்யங்கள் (எப்பொழுதும் நிலைத்து இருப்பவை அல்ல). ப்ரஹ்மதேவன் முதல் பூச்சிப் புழு வரையிலுமுள்ள மேன்மையும் தாழ்மையுமான வஸ்துக்களெல்லாம் பகவானுடைய ஸ்ருஷ்டிக்கு உட்பட்டவைகளே; ப்ரளயத்தில் இருப்பவையல்ல. காலஸ்வரூபனான பகவானால் மேன்மைகளெல்லாம் த்வம்ஸமாகப் பெற்ற (அழிக்கப்பட்ட) அவற்றிற்கு க்ஷேமம் கிடையாது.

மன்னவனே! ஆகையால் தேஹம், இந்த்ரியம், மனம் இவற்றால் மறைக்கப்பட்டு ஜங்கம (அசையும்) ஸ்தாவர (அசையாத) ரூபமான ஸமஸ்த ப்ராணிகளுக்கும் அந்தராத்மாவாகி அவரது ஹ்ருதயத்தில் நிலைநின்றிருப்பவனும் ஸ்வயம்ப்ரகாசனும் (வேறு எந்த வஸ்துவின் உதவியின்றி தானே தோன்றுபவனும்) எங்கும் நிறைந்தவனும் ஷாட்குண்ய பூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) பகவானுக்கு உன்னைச் சரீரமாகவும், அவனை உனக்கு அந்தராத்மாவாகவும் நன்றாக உணர்ந்து “நான் அந்தப் பரப்ரஹ்மமே” என்று பாவிப்பாயாக. கயிற்றில் ஸர்ப்பமென்னும் புத்தி உண்டாவது போல், ஜீவாத்மாவினிடத்தில் தேவ மனுஷ்யாதியான பலவகை உருவங்களும் தோன்றுகின்றன. அவை ஆத்மாவுக்குள்ள விவேகத்தைப் போக்கும் கார்யகாரண ரூபமாய் இருப்பவை. ஆத்மாக்கள் இயற்கையில் ப்ரக்ருதி ஸம்பந்தமற்றவர்கள். ஆகையால் அவர்களுக்கு இந்தத் தேவமனுஷ்யாதி உருவங்கள் எவையும் உண்மையல்ல. ஆத்மாக்கள் ஸ்வயம் ப்ரகாசர்கள் (வேறு எந்த வஸ்துவின் உதவியின்றி தானே தோன்றுபவை); கர்ம ஸம்பந்தமற்றவர்கள். ஆயினும் அவர்கள் அனாதியான (ஆரம்பம் இல்லாத) கர்மத்தினால் ப்ரக்ருதி ஸம்பந்தம் மாறாதிருக்கின்றார்கள். அத்தகைய ஜீவாத்மாக்கள் அனைவர்க்கும் அந்தராத்மாவாகி அவர்களெல்லாரும் தானேயென்னும்படி விளங்குகின்ற அப்பரமபுருஷனைச் சரணம் அடைகின்றேன். எல்லாம் பரப்ரஹ்ம ஸ்வரூபமேயென்னும் நினைவு நிறைந்த மதியுடையவர்களும் இந்த்ரிய வர்க்கத்தை அடக்கி ஆள்பவர்களுமாகிய பெரியோர்கள் இந்த பகவானுடைய பாதாரவிந்தங்களின் இதழ்கள் போன்ற விரல்களின் அழகை ப்ரீதியுடன் பாவித்துத் தமது மனத்தில் அழுந்தியிருக்கின்ற கர்ம வாஸனையாகிற முடிச்சை அறுக்கின்றார்கள். ஆகையால் நீயும் அந்தப் பகவானையே சரணம் அடைவாயாக. ஸர்வேஸ்வரனாகிற ஓடத்தைக் கொள்ளாமல் காமம் க்ரோதம் (ஆசை, கோபம், பேராசை, மயக்கம், கர்வம், பொறாமை) முதலிய அரிஷட்வர்க்கமாகிற (ஆறு எதிரிகளாகிற) ஸமுத்ரத்தை வேறு உபாயங்களால் வருந்திக்கடக்க விரும்புவார்களாயின், அந்த முயற்சியில்  பெருவருத்தமே மிகுமன்றிக் கரையேறமாட்டார்கள். ஆகையால் அனைவராலும் ஸுகமாய்ப் பஜிக்கக்கூடிய பகவானுடைய பாதங்களையே ஓடமாகக்கொண்டு கடக்கமுடியாத ஸம்ஸாரமாகிற ஸமுத்ரத்தைக் கடப்பாயாக” என்றார். பரப்ரஹ்மத்தை உணர்ந்தவரும் ப்ரஹ்மாவின் புதல்வருமாகிய ஸனத்குமாரரால் ஆத்மஸ்வரூபத்தைப்பற்றி நன்றாக உபதேசிக்கப்பெற்ற ப்ருதுமன்னவன் அவரைப்புகழ்ந்து மொழிந்தான்:

ப்ருது மன்னர் சொல்லுகிறார்:- “ஸம்ஸாரதாபங்களால் வருந்தும் ப்ராணிகளிடத்தில் மன இரக்கமுடைய பகவான் என்மேல் முன்னமே இங்கனம் அருள்புரிந்தான். அதை நிறைவேற்றுவதற்கு நீங்கள் இவ்விடம் வந்தீர்கள். என்மேல் கருணைகூர்ந்து என் விருப்பத்தையெல்லாம் நிறைவேற்றினீர்கள். என்னுடைய தேஹமும் மற்றுமுள்ள வஸ்துக்களும் பெருமை பொருந்திய உங்கள் அனுக்ரஹத்தினால் எனக்குக் கிடைத்தவை. இவற்றில் எதை என்னுடையதென்று நினைத்து நான் உங்களுக்குக் கொடுப்பேன்? ஆயினும், ப்ருத்யன் ராஜனது பணத்தை அவனுக்குக் கொடுப்பதுபோல், ப்ராணன், தனம், பிள்ளை, க்ருஹம், ராஜ்யம் ஸைன்யம் (படை), பூமி, பொக்கிஷம் (நிதி) ஆகிய இவற்றையெல்லாம் உங்களுக்கு அர்ப்பணம் செய்தேன். இவையெல்லாம் எமக்குத் தகுமோ என என்னவேண்டாம். ஸேனைகளுக்குத் தலைவனாயிருக்கை, ராஜ்யத்தை ஆளுகை, தண்டாதிகாரத்தை (தண்டனை கொடுக்கும் அதிகாரத்தை) நிறைவேற்றுகை, உலகங்களுக்கெல்லாம் ப்ரபுவாயிருக்கை, இவையெல்லாம் வேதசாஸ்த்ரத்தை அறிந்த ப்ராஹ்மணனுக்குத் தகுந்தவைகளே.

ப்ராஹ்மணன் புசிக்கும் அன்னமும் உடுக்கும் வஸ்த்ரமும் கொடுக்கும் த்ரவ்யமும் பிறரிடத்தில் யாசித்துப் பெற்றவையாயினும் அவனுடையவைகளே. க்ஷத்ரியன் முதலிய மற்ற மூன்று வர்ணத்தவர்களும் ப்ராஹ்மணனுடைய அனுக்ரஹத்தினால் கிடைத்த அன்னாதிகளையே அனுபவிக்கின்றார்கள். வேதங்களை ஆராய்ந்து ஆத்மவஸ்ரூபத்தை உண்மையாக உணர்ந்த நீங்கள் துக்கமயமான ஸம்ஸார ஸாகரத்தைக் கடத்தும் உபாயத்தை இங்கனம் எனக்கு உபதேசித்தீர்கள். பெருங்கருணையராகிய நீங்கள் உங்களுடைய கார்யத்தினாலேயே ஸந்தோஷிக்க வேண்டுமேயன்றி, அதற்கு நான் ப்ரத்யுபகாரம் (கைம்மாறு, பதிலுதவி) செய்யவல்லேனோ? ஜலத்தைக் கொடுத்து அஞ்சலித்து நிற்கையொழிய எவன்தான் ப்ரஹ்மவித்யா உபதேசத்திற்கு ப்ரத்யுபகாரம் செய்யவல்லனாவான்?” என்றான். 

ஆத்மயோகத்தைப் பாதுகாப்பவர்களான அந்த ஸனகாதி முனிவர்கள் ப்ருது மஹாராஜனால் பூஜிக்கப்பட்டு அங்குள்ள மனிதர்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் அம்மன்னவனுடைய சீலத்தைப் (நற்குணத்தைப்) புகழ்ந்துகொண்டே ஆகாயத்திற்கு கிளம்பிச்சென்றார்கள். பிறகு ஸமர்த்தனாகிய ப்ருதுமன்னவன் ஸனகாதிகளால் ப்ரஹ்ம ஜ்ஞானோபதேசம்பெற்று அந்தப் பரமாத்மாவினிடத்தில் நிலைநின்று தன் விருப்பங்களெல்லாம் கைகூடினதாக நினைத்து, தேசகாலங்களையும் தேஹபல (உடல் வலிமை), மனோபலங்களையும், தனத்தையும் (செல்வத்தையும்), மற்றவைகளையும் அனுஸரித்து ப்ரஹ்மோபாஸனத்திற்கு (பரமாத்மாவை த்யானம் செய்வதற்கு) அங்கமாகத் தனது வர்ணாச்ரமங்களுக்குரிய கர்மங்களையெல்லாம் ப்ரஹ்மார்ப்பணமாக அனுஷ்டித்து வந்தான். பலன்களெல்லாம் பரமபுருஷனுடைய அனுக்ரஹத்தினாலன்றி நமது செயல்களால் உண்டாகக் கூடியவையன்று என்றும், நான் செய்கிறேனென்றும், என்னுடையதென்றும் விளைகிற அபிமானங்களெல்லாம் ப்ரக்ருதி ஸம்பந்தத்தைப் பற்றினவைகளேயென்றும் ஆத்மா ப்ரக்ருதியைக் காட்டிலும் விலக்ஷணனென்றும் நினைத்துப் பற்றின்றிக் கர்மங்களை நடத்தினான். அவன் கர்ம போகங்களுக்கிடமான இல்லற வாழ்க்கையிலிருந்தும், மஹாராஜனாகையால் ஸமஸ்த ஸம்பத்துக்களும் அமைந்தவனாயினும் தேஹாத்ம ப்ரமமின்றி (இந்த உடலே ஆத்மா என்கிற கலக்கம் இன்றி) ஸூர்யன் சேறு முதலிய இடங்களில் கிரணங்களால் நிறைந்திருப்பினும் அவற்றின் தோஷம் தீண்டப்பெறாதிருப்பதுபோல், சப்தாதி விஷயங்களில் மனப்பற்று செய்யாமலேயிருந்தான். அவன் பக்தியோகத்தை நிறைவேற்ற விரும்பி தேசகாலங்களை அனுஸரித்து வர்ணாச்ரம தர்மங்களை ஆசரித்துக்கொண்டே அர்ச்சிஸ்ஸென்கிற தன் பார்யையிடத்தில் (மனைவியிடத்தில்) விஜிதாய்வன், தன்வகேசன், ஹர்யக்ஷன், த்ரவிணன், வ்ருகன் என்கிற ஐந்து புதல்வர்களைப் பெற்றான். அவர்களெல்லோரும் அம்மன்னவனைப் போல் அவனுக்கு அனுகூலர்களாயிருந்தார்கள். பகவத் பக்தனான அவ்வரசன் பரமபுருஷனால் படைக்கப்பட்ட உலகங்களைப் பாதுகாப்பதற்காக இந்த்ராதி லோகபாலர்களின் குணங்களையெல்லாம் அந்தந்த ஸமயத்திற்குத் தகுந்தபடி தன்னிடத்தில் ஏற்றுக்கொண்டான். அவன் மனோவாக்காயங்களாலும் (மனது, சொல், உடல் ஆகியவற்றால்) இனிய குணங்களாலும் ப்ரஜைகளை ஆனந்தப்படுத்திக்கொண்டு, மற்றொரு சந்த்ரன்போல் ராஜனென்று பேர்பெற்றான். ஸுர்யன் பூமியினின்று ஜலத்தை இழுப்பதும் விடுவதுமாயிருப்பது போல், அவன் ப்ரஜைகளிடத்தினின்று கப்பம் (வரிப்பணம்) வாங்குவதும் அதை அவர்களுக்கே உபயோகப்படுத்துவதுமாய் இருந்தான். அவன் ப்ரஜைகளை நல்வழியில் செலுத்தும் அதிகாரத்தில் நின்று அக்னியைப்போல் தேஜஸ்ஸினால் அவமதிக்க முடியாமலும், மஹேந்த்ரனைப்போல் பிறர்க்கு வெல்லமுடியாமலும் ப்ரகாசித்தான். பொறுமையில் பூமியையும், அபீஷ்டங்களைக் (விரும்பியவற்றைக்) கொடுப்பதில் ஸ்வர்க்கத்தையும் நிகர்த்திருந்தான். பர்ஜன்யன்போல் ப்ரஜைகளுக்கு அவரவர்கள் விருப்பத்தின்படி திருப்தியை விளைவித்துக் கொண்டிருந்தான். ஸமுத்ரம்போல் அளவிடக்கூடாதிருந்தான். ஸத்யத்தில் மேருவைப்போலவும், ப்ரஜைகளைச் சிக்ஷிப்பதில் யமன் போலவும், ஐச்வர்யத்தில் ஹிமவத் பர்வதம்போலவும் திகழ்ந்தான். குபேரன்போல் நிறைந்த கருவூலமுடையவனும், வருணன்போல் ஆலோசனையை வெளியிடாதவனும், வாயுவைப்போல் எங்கும் நிறைந்து தேஹபலம் இந்த்ரிய பலம் தேஹகாந்தி (ஒளிரும் உடல்) முதலியவைகளை உடையவனும், ருத்ரனைப்போல் பிறர்க்குப் பொறுக்கமுடியாதவனும், மன்மதனைப்போல் திவ்யஸுந்தரனும், ஸிம்ஹம்போல் தடையில்லாமல் ஸஞ்சரிப்பவனும், மனுவைப்போல் ப்ரஜைகளிடத்தில் மிகுந்த வாத்ஸல்யமுடையவனும், ப்ரஹ்மதேவனைப்போல் உலகங்களுக்கெல்லாம் ப்ரபுவும், ப்ருஹஸ்பதியைப்போல் வேதங்களுக்குப் பொருள் கூறும் திறமையுடையவனும், ஸ்ரீமஹாவிஷ்ணுவைப்போல் ஸ்வதந்த்ரமுடையவனுமாயிருந்தான். பசுக்களிடத்திலும், குருக்களிடத்திலும், ப்ராஹ்மணர்களிடத்திலும், பகவானிடத்தில் பக்தியுடைய பெரியோர்களிடத்திலும் பக்தி வெட்கம் வணக்கம் ஒழுக்கம் இவையுடையவனும் பரோபகாரத்தில் (பிறர்க்கு உதவுவதில்) தனக்கு நிகரில்லாதவனுமாயிருந்தான். மூன்று லோகங்களிலும் ஆங்காங்குள்ளவர்கள் அனைவரும் அவன் புகழை உரத்துப் பாடிக்கொண்டிருந்தார்கள். ராமன் ஸத்புருஷர்களின் செவிகளில் நுழைந்திருப்பது போல், அம்மன்னவன் ஒன்றுமறியாத மாதர்கள் செவிகளிலும் நுழைந்திருந்தான்.

இருபத்து ஒன்றாவது அத்தியாயம் முற்றிற்று.
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை