நான்காவது ஸ்கந்தம் – இருபத்து இரண்டாவது அத்தியாயம்
(ப்ருது மன்னவன் விமானத்திலேறி வைகுண்டமேகுதல்)
மைத்ரேயர் சொல்லுகிறார்:- ஸ்வர்க்காதி போகங்களெல்லாம் நிலையற்றவையென்றும் அற்பங்களென்றும் நிச்சயித்திருக்கிற அந்த ப்ருது மன்னவன் தன் தேசத்திலுள்ள ப்ரஜைகளையெல்லாம் (மக்களையெல்லாம்) நெடுநாள் பாதுகாத்துவந்து ஒருநாள் தான் வயது முதிர்ந்திருத்தலைக் கண்டான். அம்மன்னவன் ஜங்கம (அசையும்) ஸ்தாவர (அசையாத) ரூபமான ஜகத்திற்கெல்லாம் ஜீவனம் (பிழைப்பைக்) கற்பித்து ஸத்புருஷர்களின் தர்மத்தை அழியாமல் பாதுகாத்து வந்து பகவானுடைய ஆஞ்ஜையை நிறைவேற்றித் தான் எதற்காக அவதரித்தானோ அதையெல்லாம் முடித்து, தன்னைவிட்டுப் பிரியமுடியாமல் வருந்தி ரோதனம் செய்வது (அழுவது) போன்ற தன் புதல்வியாகிய பூமியைத் தன் புதல்வரிடம் ஒப்புவித்து, ப்ரஜைகளெல்லாம் தன்னைப் பிரிந்திருக்க முடியாமல் வருந்திக் கொண்டிருக்கையில் பார்யையுடன் (மனைவியுடன்) தானொருவனே தபோவனத்திற்குச் சென்றான். அவ்விடத்திலும் அவன் சமதமாதி நியமங்களை அங்கீகரித்து முன்பு பூமண்டலத்தை ஜயிக்கும்பொழுது முயற்சி கொண்டாற்போலவே வானப்ரஸ்தர்கள் ஆசரிக்கும்படியான கொடிய தவத்தில் முயற்சி கொண்டான். அவன் சிலநாள் காய் கிழங்கு வேர்களையும், சிலநாள் உலர்ந்த இலைகளையும், சிலபஷம் வரையில் ஜலத்தையும் ஆஹாரமாக உட்கொண்டிருந்து, அப்பால் வாயுவைப் பக்ஷித்துத் தவம் செய்து வந்தான்.
க்ரீஷ்ம ருதுவில் (வெயிற் காலத்தில்) பஞ்சாக்னி (ஐந்து நெருப்புகளுக்கு) மத்யத்திலும், வர்ஷ ருதுவில் (மழைக்காலத்தில்) விடாமடையினிடையிலும் (தொடர்ந்து ஓடும் நீரிலும்), சிசிர ருதுவில் (குளிர் காலத்தில்) கழுத்தளவு ஜலத்திலும் இருந்து பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை த்யானிப்பதும் வெறுந்தரையிலேயே படுப்பதுமாயிருந்தான். குளிர் வெயில் முதலியவற்றைப் பொறுத்துக்கொண்டு மௌனவ்ரதம் தரித்து இந்திரியங்களை வென்று ஸ்த்ரீ ஸம்போகமின்றிச் சாந்தனாகி ப்ராணவாயுவை அடக்கி, பகவானை ஆராதிக்கவிரும்பி இங்கனம் கொடிய தவம் செய்து வந்தான். அம்மன்னவன் இவ்வாறு நாளுக்கு நாள் தவத்தை வளர்த்து அதனால் கர்மங்களெல்லாம் த்வம்ஸமாகப்பெற்று (ஒழியப்பெற்று) ப்ராணாயாமங்களால் தூயமனத்தனாகி இந்த்ரியங்களையெல்லாம் அடக்கி வ்யஸனங்களையெல்லாம் (கவலைகளையெல்லாம்) வேரோடறுத்து ஸனத்குமாரர் உபதேசித்த மேலான ஆத்மயோகத்தின்படி பரமபுருஷனை ஆராதித்தான். நிவ்ருத்தி தர்மத்தில் (உலக வழக்குகளை விட்டு) ச்ரத்தையுடன் இவ்வாறு யத்னம் (முயற்சி) செய்கின்ற அம்மன்னவனுக்கு ஷாட்குண்யம் நிறைந்த (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) பரப்ரஹமத்தினிடத்தில் மாறாத பக்தி உண்டாயிற்று. பகவானுக்குச் செய்த பணிவிடையால் சுத்தஸத்வம் (ரஜஸ், தமஸ் கலப்பில்லாத ஸத்வ குணம்) நிறைந்த மனமுடைய ப்ருதுவுக்கு அந்தப் பக்தியின் நிறைவினால் ஜ்ஞானமும் விரக்தியும் (பற்றற்ற நிலையும்) உண்டாயின. அவன் அந்த ஜ்ஞானத்தினால் ஸம்சயத்திற்கிடமான (ஸந்தேஹத்திற்கு இடமான) ப்ரக்ருதி ஸம்பந்தத்தை வேருடன் அறுத்துக்கொண்டான். அம்மன்னவன் தேஹாத்மப்ரமத்தைக் (இந்த உடலே ஆத்மா என்கிற மயக்கத்தைக்) கடந்து, ஆத்மஸ்வரூபத்தின் உண்மையை உணர்ந்து செயலற்றுத் தான் ப்ரக்ருதி ஸம்பந்தத்தை அறுத்துக்கொண்டதற்குக் காரணமான தேஹ ஜ்ஞானத்தையும் கடந்து, பரமாத்மாவுக்குட்பட்ட ஆத்மஸ்வரூபத்தையே அனுபவித்து வந்தான். யோகம் செய்பவன் பகவானுடைய கதைகளை ப்ரீதியுடன் கேளாதிருப்பானாயின், யோகமார்க்கத்தில் மனவூக்கம் தவறுவான். இவன் பகவத் கதைகளில் மிக்கவூக்கமுடையவனாகையால் யோகமார்க்கத்தில் இம்மியும் தவறாதிருந்தான். அம்மஹாவீரன் ஆத்மாவைப் பரமாத்மாவினிடத்தில் ஸமர்ப்பித்துப் பாபமற்றிருக்கை முதலிய எட்டுக்குணங்களும் (பாபமற்றிருக்கை - கர்மத்திற்கு வசப்படாதிருக்கை, கிழப்பருவமில்லாமை, சாவில்லாமை, சோகமில்லாமை, பசியில்லாமை, தாகமில்லாமை, போகத்திற்குரிய அழிவற்ற வஸ்துக்களை உடைமை, நினைத்ததை முடிக்க வல்லமை) தோன்றப்பெற்றமையால் பரப்ரஹ்மஸாரூப்யத்தை (பகவானுக்கு ஸமமான உருவத்தை) அடைந்து ப்ராரப்த கர்மம் முடியும்படியான காலம் சேர்ந்தமையால் தன் சரீரத்தைத் துறந்தான். அவன் சரீரத்தை விட்ட விவரம் சொல்லுகிறேன் கேள்.
அம்மன்னவன் குதிகால்களால் ஆஸனத்தை அமுக்கிக்கொண்டு மூலாதாரத்தினின்று வாயுவை மெல்லமெல்ல மேலுக்குக் கிளப்பி நாபிசக்ரத்தில் நிறுத்தி, பிறகு ஹ்ருதயம் மார்பு கண்டம் புருவங்களினிடை ஆகிய இவ்விடங்களில் க்ரமமாகக்கொண்டு வந்து நிறுத்தி, அப்பால் அவ்வாயுவை ப்ரஹ்ம ரந்த்ரத்தில் (ப்ரஹ்ம நாடியில் - சுஷும்னா நாடியில்) செலுத்தி, அக்காலத்தில் விளையக்கூடிய அணிமாதி ஸித்திகளில் (அணிமா முதலிய எட்டு பலன்கள் - அவையாவன -
- அணிமா - சரீரத்தை சிறிதாக்கிக்கொள்ளுதல்
- மஹிமா - பெரிதாக்கிக்கொள்ளுதல்
- லகிமா - லேசாகச் செய்தல்
- கரிமா - கனமாக்கிக்கொள்ளுதல்
- வசித்வம் - எல்லாவற்றையும் தன் வசமாக்கிக்கொள்ளுதல்
- ஈசத்வம் - எல்லாவற்றிற்கும் தலைவனாயிருத்தல்
- ப்ராப்தி - நினைத்த பொருளைப் பெறுதல்
- ப்ராகாம்யம் - நினைத்தவிடம் செல்லும் வல்லமை)
விருப்பின்றித் தன் தேஹத்திலுள்ள வாயு மஹாவாயுவிலும், தேஹத்திலுள்ள பூமி மஹாபூமியிலும், தேஜஸ்ஸு மஹாதேஜஸ்ஸிலும், கண் காது முதலிய இந்திரியங்களுக்கு அதிஷ்டானமான ரந்த்ரங்கள் மஹாகாசத்திலும், ஜலம் மஹாஜலத்திலுமாகத் தன் தேஹத்திலுள்ள கார்யமான பஞ்ச பூதங்களும் அவற்றிற்குக் காரணமான மஹாபூதங்களில் மறைந்தனவாக அனுஸந்தித்தான். பிறகு மஹாபூமி மஹாஜலத்திலும், அது மஹாதேஜஸ்ஸிலும், அது மஹாவாயுவிலும், அது மஹாகாசத்திலும் மறைந்ததாகப் பாவித்தான். மனஸ்ஸு இந்த்ரியங்களிலும், அவை தன்மாத்ரைகளிலும், அவை அஹங்கார தத்வத்திலும், அது மஹத் தத்வத்திலும் அது ப்ரதானமென்கிற ப்ரக்ருதியிலும் மறைந்ததாகப் பாவித்தான். பெரும்பாலும் கர்மங்களை அனுபவித்துச் சிறிது மாத்திரம் மிகுந்திருக்கப்பெற்ற இந்த ப்ருது, ப்ரக்ருதி ஸம்பந்தமற்ற ஆத்மஸ்வரூபத்தை அனுஸந்தித்து அனுபவித்து மிகுந்த சிறிது கர்மத்தையும் ஜ்ஞான வைராக்யங்களின் மஹிமையால் துறந்தான். அப்பால் கர்மத்திற்குட்பட்டிருக்கை நீங்கப்பெற்று முக்தி அடைந்தான். அம்மஹாராஜனது பத்தினியாகிய அர்ச்சிஸ்ஸென்பவள் வனவாஸத்தினால் விளையும் வருத்தங்களுக்குத் தகாதவளாயினும், அம்மன்னவனோடு கூடவே வனத்திற்கு வந்திருந்தாள். அவள் மிகவும் மென்மைக்கிடமான அங்கங்களுடையவள்; பாதங்களால் பூமியைத் தொட்டு நடக்கத் தகுந்தவளல்லள். ப்ருது அனுஷ்டித்த வ்ரதங்களையெல்லாம் அவள் தானும் ஊக்கத்துடன் அனுஷ்டித்துக்கொண்டு வந்தாள். பர்த்தாவுக்கு (கனவனுக்கு) வேண்டிய சுச்ரூஷைகளையெல்லாம் (பனிவிடைகளை) தவறாமல் நடத்திக் கொண்டிருந்தாள். ரிஷிகளைப்போல் காய் கிழங்குகளையே உட்கொண்டு தேஹயாத்ரையை நடத்தி வந்தாள். ஆதலால் அவள் மிகவும் இளைத்திருந்தாள். ஆயினும் அன்பிற்கிடமான கணவனுடைய கைதீண்டல் முதலிய ஸம்மானங்களால் ஸந்தோஷமுற்றுச் சிறிதும் வருத்தமுறாதிருந்தாள். பூமண்டலத்திற்கும் தனக்கும் நாதனாகிய அந்த ப்ருதுவின் சரீரம் ஜ்ஞானேந்திரியங்களும் ப்ராணன்களும் தொலைந்து கேவலம் கட்டையாயிருப்பதைக் கண்டு, சோகத்தினால் சிறிது புலம்பி பதிவ்ரதையாகையால் பர்வதத்தின் தாழ்வரையில் சிதை (பிணத்தை எரிக்கும் நெருப்பை) ஏற்படுத்தி அதில் தன் கணவனது சரீரத்தை ஏற்றினாள். பிறகு அங்குள்ள ஓர் தாமரையோடையின் ஜலத்தில் ஸ்னானம் செய்து அக்காலத்திற்குரிய செயல்களையும் முடித்து மஹானுபாவனான தன் கணவனுக்குத் தர்ப்பணம் செய்து ஆகாயத்திலுள்ள தேவதைகளை வணங்கித் தன் கணவனுடைய பாதங்களை த்யானித்துக்கொண்டே சிதையை மூன்று தரம் வலம் செய்து அவ்வக்னியில் ப்ரவேசித்தாள்.
வரங்கொடுக்க வல்லவர்களான தேவ பத்னிகள் வீரச்ரேஷ்டனான கணவனைத் தொடர்ந்து போகின்ற அம்மாதரசைக் கண்டு தேவதைகளுடன் பலவாறு புகழ்ந்தார்கள். அவர்கள் அம்மந்தர பர்வதத்தின் தாழ்வரையில் புஷ்பங்களை விடாமழையாகப் பொழிந்து பற்பல தேவ வாத்யங்கள் முழங்க ஒருவர்க்கொருவர் இப்பெண்மணி மிகுந்த பாக்யமுடையவள். என்ன ஆச்சர்யம்! பரமபுருஷனை ஸ்ரீமஹாலக்ஷ்மி மணம் புரிந்தாற்போல், இவள் ப்ருது மஹாராஜனை மணம்புரிந்தாள். இவள் அம்மஹானுபாவனை எல்லாவிதத்திலும் அனுஸரித்து வந்தாள். இவள் செய்த புண்யத்தின் பெருமையை நம்மால் சிந்திக்கமுடியாது. ஆகையால் இவள் நாமெல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கையில், நம்மைக் கடந்து, தன் கணவனைத் தொடர்ந்து, ஊர்த்வ (மேல்) லோகத்திற்குப் போகின்றாள். இது நிச்சயம். ஆயுள் மின்னலைப் போல் நிலையற்றதென்பதை அறிந்து அற்பமான புருஷார்த்தங்களை விரும்பாமல் பரமபுருஷனைப் பெறுதற்கு ஸுதனமாகிய (நல்ல நிதியான) நிவ்ருத்தி தர்மத்தை ஆசரிக்கின்ற மானிடர்களுக்கு ஸ்வர்க்கம் முதலிய மற்றவைகளில் எதுதான் கிடைப்பது அரிது? மோக்ஷத்தை ஸாதித்துக் கொடுக்கவல்ல மனுஷ்ய ஜன்மத்தைப் பெரிய புண்யகர்மத்தினால் பெற்றும், சப்தாதி விஷயங்களில் மனப்பற்று கொள்வானாயின், அவன் தெய்வத்தினால் வஞ்சிக்கப்பட்டவனேயாவான். அவனே ஆத்மத்ரோஹியாவான் (ஆத்மாவிற்கு தீங்கு இழைத்தவனாவான்). இதற்கு மேற்பட்ட மதிகேடு மற்றொன்றும் இல்லை” என்று புகழ்ந்து சொன்னார்கள்.
இங்கனம் தேவபத்னிகள் ஸ்தோத்ரம் செய்துகொண்டிருக்கையில், அம்மடந்தையர்மணி ஆத்ம ஜ்ஞானிகளில் சிறந்தவனும் பகவத் பக்தனுமாகிய ப்ருது மன்னவன் பெற்ற லோகத்தை அடைந்தாள். ப்ருதுமன்னவன் இப்படிப்பட்ட வைபவமுடையவன்; பகவானிடத்தில் மிகுந்த பக்தியுடையவன். இவனது சரித்ரம் மிகுந்த மஹிமையுடையது. இதை உனக்கு மொழிந்தேன். மஹத்தான இப்புண்ய சரித்ரத்தை ச்ரத்தையோடு படிக்கிறவனும், சொல்லுகிறவனும், கேட்கிறவனும் ப்ருதுசக்ரவர்த்தியின் பதவியைப் பெறுவார்கள். இதை ப்ராஹ்மணன் படிப்பானாயின் ப்ரஹ்மதேஜஸ்ஸையும், க்ஷத்ரியன் பூமண்டலத்திற்கெல்லாம் ப்ரபுவாயிருக்கும் பெருமையையும், வைச்யனும் சூத்ரனும் தம்மினத்தில் தலைமையையும் பெறுவார்கள். புருஷனாவது ஸ்த்ரீயாவது இதை ப்ரீதியுடன் மூன்று தரம் கேட்பார்களாயின், பிள்ளையில்லாதவர் பிள்ளையையும், பணமில்லாதவர் பணத்தையும். புகழில்லாதவர் பெரும்புகழையும் பெறுவார்கள். ஒன்றும் தெரியாத மூடனும் பண்டிதனாவான். இச்சரித்ரம் ப்ராணிகளின் அமங்கலத்தைப் போக்கி மங்கலத்தைக் கொடுக்கும். பணம், புகழ், வாழ்நாள் ஆகிய இஹலோக (இவ்வுலக) பலன்களையும் ஸ்வர்க்கம் முதலிய பரலோக (வேறு உலக) பலன்களையும் கொடுக்கும்; கலிதோஷங்களையெல்லாம் போக்கும்; தர்ம, அர்த்த, காம, மோக்ஷங்கள் நன்றாகக் கைகூடவேண்டுமென்று விரும்புவோர் இதை ச்ரத்தையுடன் கேட்கவேண்டும். இது தான் அந்நான்கு புருஷார்த்தங்களையும் நிறைவேற்றிக் கொடுப்பதற்கு மேலான காரணம். யுத்தத்தில் ஜயம்பெற விரும்புவோன் இச்சரித்ரத்தை ஒருதரம் கேட்டு யுத்த யாத்ரை செய்வானாயின், அவனால் எதிர்க்கப்பட்டவர், ப்ருதுவுக்கு மற்ற ராஜாக்கள் அனைவரும் கப்பம் கட்டினாற்போல் அவனுக்குக் கப்பம் கட்டுவார்கள். இங்கனம் பலவகைப் பலன்களையும் கொடுக்குமாயினும், வேறு விஷயங்களில் மனம் செலுத்தாமல் பகவானிடத்தில் மாறாத பக்தியுடன் இப்புண்ய சரித்ரத்தைக் கேட்பதும் கேட்பிப்பதும் படிப்பதும் செய்வானாயின், அவன் பகவானிடத்தில் மதி ஊன்றப்பெற்று ப்ருதுமன்னவன் பெற்ற கதியைப் பெறுவான். இச்சரித்ரம் வீரர்களால் புகழப்படும் பெருமையுடையது. பகவானுடைய மஹிமையை வெளியிடுந்தன்மையது. ஒருபலனையும் விரும்பாமல் இந்த ப்ருதுவின் சரித்ரத்தைத் தினந்தோறும் ப்ரீதியுடன் கேட்பதும் பிறர்க்குக் கூறுவதுமாயிருப்பவன் ஸம்ஸாரமாகிற ஸமுத்ரத்திற்கு ஓடம் போன்ற பாதங்களையுடைய பகவானிடத்தில் சிறந்த பக்தி உண்டாகப் பெறுவான்.
இருபத்து இரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.