நான்காவது ஸ்கந்தம் - இருபத்து மூன்றாவது அத்தியாயம்
(ப்ருதுவின் ஸந்ததியைக் கூறுதல்)
மைத்ரேயர் சொல்லுகிறார்:- ப்ருதுவின் புதல்வனான விஜிதாச்வன் ப்ருதுவுக்குப் பின்பு பூமண்டலத்தையெல்லாம் பாதுகாத்து வந்தான். அவன் பெரும்புகழன்; ப்ராதாக்களிடத்தில் (சகோதரர்களிடத்தில்) மிகுந்த ப்ரீதியுடையவன். அவன் ஹர்யக்ஷனுக்குக் கிழக்கு திக்கையும், தூம்ரகேசனுக்கு தெற்குத் திக்கையும், வ்ருகனுக்கு மேற்கு திக்கையும், த்ரவிணனுக்கு வடக்கு திக்கையுமாகத் திசைகளையெல்லாம் தம்பிகளுக்குப் பங்கிட்டுக்கொடுத்தான். இவன் இந்த்ரனுடைய அனுக்ரஹத்தினால் அந்தர்த்தான (மறையும்) சக்தியைப் பெற்றானாகையால் இவனுக்கு அந்தர்த்தானனென்று மற்றொரு பேரும் உண்டாயிற்று. இவன் சிகண்டினியென்னும் தன் மனைவியிடத்தில் மிகவும் புகழத்தகுந்த மூன்று பிள்ளைகளைப் பெற்றான். அவர்கள் பாவகன், பவமானன், சுசி என்னும் பேருடையவர்கள். கார்ஹபத்யம் முதலிய அக்னிகள் மூவரும் முன்பு வஸிஷ்டருடைய சாபத்தினால் மனுஷ்யஜன்மம் பெற்றார்கள். அவர்களே இந்தப் பாவகன் முதலியவர்கள். இவர்கள் யோகமஹிமையால் மீளவும் தமது கதியைப் பெற்றார்கள். அந்தர்த்தானன் (விஜிதாச்வன்) நபஸ்வதி என்கிற மற்றொரு மனைவியிடத்தில் ஹவிர்த்தானனென்னும் புதல்வனைப் பெற்றான். இந்த அந்தர்த்தான மன்னவன் தன் தகப்பனாருடைய யாகக்குதிரையை இந்த்ரன் பறித்துக்கொண்டு போகையில் அவனைத் தொடர்ந்து சென்று, இவன் குதிரையைப் பறித்தவனென்று தெரிந்தும் கொல்லாமலே விட்டான். ஆனதுபற்றியே அவ்விந்த்ரன் ஸந்தோஷம் அடைந்து இவனுக்கு அந்தர்த்தான சக்தியைக் கொடுத்தான், கப்பம் (சிற்றரசர்கள் செலுத்தும் காணிக்கை) வாங்குவது, தண்டிப்பது, சுங்கம் (வரி) வாங்குவது முதலியவற்றால் ராஜாக்களின் ஜீவனம் தாருணமாயிருப்பதைக் கண்டு அம்மன்னவன் தீர்க்கஸத்ரமென்னும் யாகத்தை நடத்தும் வ்யாஜத்தினால் அந்த ஜீவனத்தைத் துறந்தான். ஆத்மஸ்வரூபத்தை உள்ளபடி உணர்ந்த அம்மன்னவன் அந்த ஸத்ரத்தில் (ஒரு யாகம்) தன்னைப் பற்றினாருடைய வருத்தங்களைப் போக்கும் தன்மையனும் ஆத்மாக்களுக்கு அந்தராத்மாவாகையால் பரமாத்மாவுமாகிய பரமபுருஷனைத் தடைபடாத ஸமாதியினால் (தொடர் த்யானத்தினால்) ஆராதித்து அவனுடைய லோகத்தை அடைந்தான். ஹவிர்த்தானன் ஹவிர்த்தானி என்னும் தன் மனைவியிடத்தில் பர்ஹிஷதன், கயன், சுக்லன், க்ருஷ்ணன், ஸத்யன், ஜிதவ்ரதன் என்ற ஆறு பிள்ளைகளைப் பெற்றான். அவர்களில் பர்ஹிஷதன் மிகுந்த பாக்யமுடையவன். ஹவிர்த்தானனுக்குப் பின்பு அவன் ப்ரஜைகளைப் பாதுகாத்துவந்தான். அவன் யஞ்ஞாதி கர்மங்களை விதிக்கிற வேதபாகங்களிலும் அவற்றை விவரிக்கிற கல்பஸூத்ரம், ஸ்ம்ருதி, இதிஹாஸம், புராணம் முதலியவற்றிலும் யோகமார்க்கங்களிலும் மிக்க வல்லவனாயிருந்தான். அவன் ஓரிடத்தில் யாகம் செய்து முடித்து அதன் ஸமீபத்திலேயே மற்றொரு யாகம் செய்வதும் அதன் ஸமீபத்தில் மற்றொரு யாகம் செய்வதுமாகி இப்பூமண்டலத்தை எல்லாம் யாக பூமியாகக்கொண்டு கிழக்கு நுனியாகப் பரப்பின தர்ப்பங்களால் பூமி முழுவதும் நிறைத்து விட்டான். அதனால் அவன் ப்ராசீனபர்ஹி என்று பேர்பெற்றான். அவன் ப்ரஹ்மதேவனால் உரைக்கப்பெற்ற ஸமுத்ரராஜனது புதல்வியாகிய சதத்ருதி என்பவளை மணம்புரிந்தான். அவள் அங்கங்களெல்லாம் அழகாயிருக்கப் பெற்றவள். இளம்பருவமுடையவள். அவள் ஸமஸ்த ஆபரணங்களையும் அணிந்து விவாஹகாலத்தில் அக்னியை வலம் செய்யும்பொழுது அக்னிதேவன் முன்பு சுகியை விரும்பினாற்போல் அவளை விரும்பினான். புதுமணமடந்தையாகிய அவள் சிலம்புத் தண்டைகளை (கொலுசு) ஒலிப்பித்துக்கொண்டு திசைகளில் உலாவும்பொழுது தேவதைகளும், அஸுரர்களும், கந்தர்வர்களும், ஸித்தர்களும், உரகர்களும், முனிவர்களும் மற்ற மனிதர்களும் மோஹம் (ஆசை) கொண்டார்கள். ப்ராசீனபர்ஹி என்று பேர்பெற்ற பர்ஹிஷதனுக்கு இங்கனம் பேரழகியாகிய சதத்ருதியிடத்தில் பத்துப் பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களெல்லோரும் ப்ரசேதஸ்ஸுக்களென்று ஒரே பெயருடையவர்கள். எல்லோரும் ஒரே வ்ரதத்தை ஆசரித்துக் கொண்டிருந்தார்கள். தர்மத்தின் கரை அறிந்தவர்கள். அவர்கள் ப்ரஜைகளைப் படைக்கும்படி தந்தையினால் கட்டளையிடப்பெற்றுத் தவம் செய்யும் பொருட்டு ஆரண்யம் (காடு) சென்று பதினாயிரம் ஆண்டுகள் தவங்களுக்கு நாதனாகிய பகவானைத் தவத்தினால் ஆராதித்தார்கள். அவர்கள் தவம் செய்வதற்காக ஆரண்யத்திற்கு (காட்டிற்கு) போகும்பொழுது அவர் மேல் ருத்ரன் அருள்புரிந்து வழியில் வந்து தோன்றி ஒன்று உபதேசித்தான். அவர்கள் அதை ஜபித்து அதன் பொருளான பகவானை த்யானித்துக் கொண்டு மிக்க ஊக்கத்துடன் தவம் செய்து வந்தார்கள்.
விதுரர் கேட்கிறார்:- ப்ரசேதஸ்ஸுக்களுக்கு ஆரண்யம் போகும் வழியில் ருத்ரனோடு ஸமாகமம் (ஸந்திப்பு) நேர்ந்த விதத்தையும் அவன் அவர்களுக்கு உபதேசித்த பொருளடக்கமுடைய ரஹஸ்யத்தையும் எனக்கு விவரித்து மொழிவீராக. ப்ரஹ்மரிஷீ! ஸம்ஸாரத்தில் உழலும் ப்ராணிகளுக்கு ருத்ரனோடு ஸமாகமம் (ஸந்திப்பு) நேருவது ஸாதாரணமாய்க் கிடைக்கக் கூடியதன்றே; முனிவர்கள் பலரும் இந்த ருத்ரனைப் பெறவிரும்பி வேறு விஷயங்களில் மனப்பற்றின்றி நெடுங்காலமும் த்யானித்தார்களன்றி அவனைப் பெறவில்லையல்லவா? ருத்ரன் கோரனும் (பயங்கரமானவனும்) அமங்கலனுமாகையால் (சுபமற்றவனுமாகையால்) முனிவர்களுக்கு அவனைப்பற்றி என் என்று சிலர் நினைப்பார்கள். அவனை அங்கனம் பழிக்கலாகாது. அவன் ப்ராணிகளுடைய உத்பத்தி முதலியவற்றையெல்லாம் நன்றாக அறிந்தவன். அவன் ஆத்மானுபவத்தினால் த்ருப்தி அடைந்திருப்பவன். ஆகையால் அவனுக்கு லோகஸஞ்சாரத்தினால் (உலகத்தில் திரிவதால்) ஆகவேண்டிய ப்ரயோஜனம் ஒன்றுமே இல்லை. ஆயினும் ஸம்ஸாரத்தில் அழுந்தி மன இரக்கத்திற்கிடமான ஜனங்களை அனுக்ரஹிக்கும் பொருட்டு மனைவியுடன் கூடி கோரமான உருவத்துடன் உலாவிக்கொண்டிருக்கிறான் என்றார்.
மைத்ரேயர் சொல்லுகிறார்:- ஸாதுக்களாகிய ப்ரசேதஸ்ஸுக்கள் ப்ரஜைகளைப் படைக்கவேண்டுமென்ற தந்தையின் வசனத்தைச் சிரஸாவஹித்து (தலையால் ஏற்று) ப்ரஜைகளைப் படைக்கும் திறமை உண்டாவதற்காகத் தவம் செய்ய விரும்பி வடதிசையை நோக்கிச் சென்றார்கள். வழியில் ஸமுத்ரத்திற்கு அருகில் மற்றொரு ஸமுத்ரம் போன்றதும் பெரியோர்களின் மனம்போல் தெளிந்திருப்பதும் தெளிந்த ஜல ஜந்துக்களையுடையதும் மிகப்பெரியதுமான ஒர் தாமரையோடையைக் கண்டார்கள். அதில் கருநெய்தல்களும், செந்தாமரைகளும், வெண்டாமரைகளும், செங்கழுநீர்களும் நிறைந்திருந்தன. மற்றவைகளைக் காட்டிலும் கருநெய்தல்கள் அபாரமாயிருந்தன. ஹம்ஸம், ஸாரஸம், சக்ரவாகம், நீர்க்காகம் முதலிய ஜலபக்ஷிகள் (நீர் பறவைகள்) அதில் கூவிக் கொண்டிருந்தன. வண்டுகள் மலர்ந்த பூக்களின் தேனைப் பருகி மதித்துப்பாடுகிற குரல் இனிமையைக் கேட்டு ஸந்தோஷத்தினால் மரங்களும் செடிகொடிகளும் மயிர்க்கூச்சம் உண்டாகப் பெற்றிருந்தன. தாமரை மலர்களின் தூளைக்கிளப்பி இறைக்கின்ற காற்றினால் அவ்விடம் மஹோத்ஸவம் நடக்கப் பெற்றாற் போலிருந்தது. அந்தத் தாமரையோடையில் ம்ருதங்கம், உடுக்கை முதலிய வாத்யங்களுடன் திவ்யமான தேவதைகளால் மனத்திற்கு மிகவும் இனிதான ஓர் ஸங்கீதம் செவிப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த ராஜகுமாரர்கள் அதைக் கேட்டு வியப்புற்றார்கள். அப்பொழுதே தன் ப்ருத்யர்களோடு கூடித் தேவதைகளால் பாடப்பெற்ற தேவர்களின் தலைவனாகிய ருத்ரன் அவ்வோடையினின்று மேற்கிளம்பிவரக் கண்டார்கள். உருக்கி வார்த்த பசும்பொன்னின் நிறமுடையவனும் நீலகண்ட கழுத்தையுடையவனும், புடைபடர்ந்து செவ்வரியோடிய அம்முக்கண்ணதேவன் அழகிய முகத்துடன் புலப்படக் கண்டு அந்த ராஜகுமாரர்கள் குதூகலத்துடன் அவனை நமஸ்கரித்தார்கள். அவன் தன்னைப் பற்றினாருடைய வருத்தங்களைப் போக்கும் தன்மையன்; ஜ்ஞானம் முதலிய குணங்கள் நிறைந்தவன்; தர்மத்தில் மிக்க விருப்பமுடையவன். ஆகையால் அவன் தர்மத்தை உணந்தவர்களும் சீலம் நிறைந்தவர்களுமான அந்த ராஜகுமாரர்கள் தன்னைக் கண்டு ஸந்தோஷமுற்றிருப்பதை அறிந்து அவர்களை நோக்கி நீங்கள் ப்ராசீனபர்ஹியின் புதல்வர்களென்பதும் நீங்கள் நினைத்திருப்பதும் எனக்குத் தெரியும். நான் உங்களை அனுக்ரஹிக்கும் பொருட்டே நான் இவ்வாறு உங்களுக்கு தரிசனமளித்தேன். உங்களுக்கு க்ஷேமம் உண்டாகுக. சேதன அசேதனங்களைக் காட்டிலும் விலக்ஷணனும் (வேறுபட்டவனும்), ஷாட்குண்ய பூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) வாஸுதேவனைச் சரணம் அடைந்தவன் எனக்கு மிகவும் அன்பிற்கிடமானவன். ஒருவன் நூறு ஜன்மங்கள் வரையில் தனது வர்ணாச்ரம தர்மங்களைக் குறைவற நடத்திக்கொண்டு வருவானாயின், ப்ரஹ்மதேவனோடு ஸாலோக்யத்தையும் (ஒரே உலகத்தையும்), அதன் பிறகு என்னுடைய ஸாலோக்யத்தையும் பெறுவான். அப்பால் நிவ்ருத்தி தர்மத்தை அனுஷ்டித்துப் பகவானிடத்தில் சிறந்த பக்தி உண்டாகப் பெற்று, நானும் ப்ரஹ்மதேவனும் இந்த்ரன் முதலிய மற்ற தேவதைகளும் எங்கள் அதிகாரத்தின் முடிவில் மிகுந்த மஹிமை அமைந்த விஷ்ணுவின் ஸ்தானத்தை அடைவதுபோல் அடைவான். நீங்கள் பகவானிடத்தில் பக்தியுடையவர்களாய் இருக்கின்றீர்கள். ஆகையால் அந்தப் பகவானைப்போல் நீங்கள் எனக்கு ப்ரீதிக்கிடமாய் இருக்கின்றீர்கள். எனக்குப் பாகவதர்களைக் காட்டிலும் அன்பன் மற்றெவனுமே இல்லை. (பகவானிடத்திலுங்கூட எனக்கு அவ்வளவு ப்ரீதி கிடையாது.) ஆகையால் உங்களுக்கு ஒன்று உபதேசிக்கிறேன். நீங்கள் இதை தனிமையில் ஜபிக்கவேண்டும்.
மைத்ரேயர் கூறுகிறார்:- இந்த ரஹஸ்ய ஸ்தோத்ரம் ப்ரக்ருதி புருஷர்களைக் காட்டிலும் விலக்ஷணனான பரமாத்மாவின் ஸ்வரூபத்தை நன்றாக அறிவிக்கும்; பரிசுத்தமானது; மங்களங்களையெல்லாம் விளைக்கும்; மோக்ஷத்தையும் கைகூட்டுவிக்கும். ஆகையால் இது எல்லாவற்றிலும் மேன்மையுடையது. இதைச் சொல்லுகிறேன், கேட்பீர்களாக என்று மொழிந்து பகவானிடத்தில் மன ஊக்கமுடைய அச்சிவபெருமான் கருணாநிதியாகையால் கைகூப்பிக்கொண்டு நிற்கிற அந்த ராஜகுமாரர்களுக்கு ரஹஸ்யத்தை உபதேசித்தான்.
ருத்ரர் துதிக்கிறார்:- ஆத்ம ஸ்வரூபத்தை அறிந்து அவ்வாத்மாவை உன்னிடத்தில் ஸமர்ப்பித்து உன்னையே பாவித்துக் கொண்டிருக்கும் ஞானிகளின் பாரத்தையெல்லாம் தன்மேல் ஏற்றுக்கொண்டு அவர்களைப் பாதுகாக்கும் தன்மையனே! பரமபுருஷ! நீ அந்த ஞானிகளின் க்ஷேமத்திற்காகப் பல்லாண்டு பல்லாண்டு மேன்மையுற்றிருப்பாயாக. எனக்கு உன்னை அனுபவித்து வாழும் நன்மை உண்டாகுக. ஸித்தஸ்வரூபனான உன்னை அனுபவிப்பதால் உண்டாகும் ஆனந்தமானது ஸாதிக்கக் கூடியவைகளான மற்ற விஷயங்களை அனுபவிப்பதால் உண்டாகும் ஆனந்தம்போல் அநித்யமாகாமல் (அழியக்கூடியதாய் இல்லாமல்) ஸாஸ்வதமாயிருக்கும் (என்றும் நிலைத்திருக்கும்). இந்த ப்ரபஞ்சமெல்லாம் நீயே. நீ இதிலுள்ள வஸ்துக்களுக்கெல்லாம் அந்தராத்மாவாய் இருப்பவன். உனக்கு நமஸ்காரம். நீ தாமரையுந்தியன் (தாமரையைக் கையில் ஏந்தியவன்). பூதஸூக்ஷ்மங்களுக்கும், இந்த்ரியங்களுக்கும் ஆச்ரயமாயிருப்பவன். நீ எல்லாவற்றிலும் நிறைந்து எல்லாம் உன்னிடத்தில் நிலைநின்றிருக்கையால் வாஸுதேவனென்று பேர் பெற்றவர். நீ பசி, தாஹம் முதலியன தீண்டப் பெறாதவன்; விகாரமற்றவன் (மாறுதல்கள் அற்றவன்); ஸ்வயம்ப்ரகாசன் (வேறு எந்த வஸ்துவின் உதவியின்றி தானே தோன்றக்கூடியவன்). உனக்கு நமஸ்காரம். முகத்தினின்று அக்னியைக் கிளப்பி உலகங்களையெல்லாம் தஹித்து (எரித்து) ஸம்ஹரிப்பவன் (அழிப்பவன்) நீயே. நீ ஸூக்ஷ்ம சேதன அசேதனங்களைச் சரீரமாகவுடையவன்; அழிவில்லாதவன். ப்ரபஞ்சத்திற்கு முதலில் வேதத்தை உபதேசித்து நல்வழி தீயவழிகளைக் காட்டி உபகரித்தவன் நீயே. ப்ரத்யும்னனென்னும் வ்யூஹாவதாரம் செய்து உலகத்தை வாழ்வித்தவனும் நீயே. ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் அந்தராத்மாவாயிருந்து ஜகத்தைப் பாதுகாப்பவனும் நீயே. உனக்கு நமஸ்காரம். நீயே அநிருத்தனென்னும் வ்யூஹாவதாரம் செய்தவன். மனத்திற்கும் மற்ற இந்த்ரியங்களுக்கும் ப்ரபு. நீ கர்மஸம்பந்தமற்ற பரிசுத்தன். உன்னைப் பற்றினார்க்கும் நீ அத்தன்மையை விளைப்பவன். நீ எங்கும் நிறைந்தவன். ஆனந்தஸ்வரூபன். உனக்கு நமஸ்காரம். நீ ஸ்வர்க்க மோக்ஷங்களை நிறைவேற்றிக் கொடுப்பவன். பரிசுத்தமான யோகிகளின் மனத்தில் வாஸம் செய்பவன். அக்னிஸ்வரூபன், ருத்விக்குகளால் நடத்தப்படுகிற யஜ்ஞமும் நீயே. பித்ருக்களின் ஆஹாரமும் தேவதைகளின் ஆஹாரமும் நீயே. நீ வேதங்களைக் காப்பவன். யாகங்களால் விளையும் ஸ்வர்க்காதி பலன்களெல்லாம் நீயே. சப்தாதி விஷயங்களை அனுபவிப்பதால் உண்டாகும் ஸுகத்தைக் கொடுப்பவனும் நீயே. தித்திப்பு முதலிய ரஸங்களெல்லாம் நீயே. ஸ்தூல ரூபத்தையுடைய ப்ருதிவி முதலான பூதங்களும் நீயே. சேதன அசேதனங்களெல்லாம் உனது சரீரம். கார்யங்களில் முயற்சிகொள்ளும் திறமையாகிற இந்த்ரிய சக்தி, தேஜஸ்ஸு, தாரண ஸாமர்த்யமாகிற தேஹபலம் ஆகிய இவையெல்லாம் நீயே. இவைகளால் மூன்று லோகங்களையும் நீ பாதுகாக்கின்றாய். உனக்கு நமஸ்காரம். சப்தத்தை அடையாளமாகவுடைய ஆகாசமும் மற்ற வாயு முதலிய பூதங்களும் நீயே. நீ அவற்றில் உள்ளும் புறமும் நிறைந்திருப்பவன், யாகம் தானம் முதலிய புண்யகர்மங்களும் நீயே. அவற்றால் ஸாதிக்கப்படுகிற ஸ்வர்க்காதி பரலோகங்களும் நீயே. புண்ய கர்மங்களை ஆசரிக்கும் ஜனங்கள் வஸிக்கிற இவ்வுலகமும் நீயே. ஜ்ஞானஸ்வரூபரான ஜீவாத்மாக்களும் நீயே. உனக்கு நமஸ்காரம். ப்ரவ்ருத்திகர்மம் நிவ்ருத்திகர்மம் ஆகிய இருவகைக் கர்மங்களும் நீயே. ப்ரவ்ருத்தி கர்மங்களால் ஆராதிக்கப்படுகிற பித்ருதேவதை முதலியவர்களும் நிவ்ருத்தி கர்மத்தின் பலனும் நீயே. துக்கத்தை விளைக்கிற ம்ருத்யுவும் நீயே. உனக்கு நமஸ்காரம். தர்மாதி புருஷார்த்தங்களின் பலன்களை வெளியிடுகிறவன் நீயே. நாதா! நீ எல்லாமறிந்தவன். தர்மங்களெல்லாம் ப்ராணிகளால் ஸாதிக்கப்பட்டுப் பலன்களைக் கொடுக்கின்றன. நீ அவர்களுடைய செயலை எதிர்பாராமல் பலன் கொடுக்க ஸித்தமாயிருக்கின்றாய். ஆகையால் பெரியோர்கள் உன்னை ஸித்த தர்மமென்று கூறுகிறார்கள். பூமியின் க்ஷேமத்திற்காக நீ க்ருஷ்ணனென்னும் பேர் பூண்டு அவதாரம் செய்பவன். உன் ஸ்வரூபமும் குணங்களும் அளவிட முடியாதவை. நீ எக்காலத்திலும் எவ்விதத்திலும் தடைபடாத ஜ்ஞானமுடையவன். உனக்கு நமஸ்காரம். நீ புராணபுருஷன்; ஸாங்க்ய சாஸ்த்ரத்தை வெளியிட்ட கபிலரும் யோகசாஸ்த்ரத்தை வெளியிட்ட ஹிரண்யகர்ப்பனும் நீயே. ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரம் (படைத்தல், காத்தல், அழித்தல்) என்ற மூன்று சக்திகளும் உன்னைச் சேர்ந்தவைகளே. மழை பொழியும் பர்ஜன்யனும் அஹங்கார தத்வமும் மனஸ்தத்வமும் நீயே. மனத்தினாலும் வாயாலும் சரீரத்தினாலும் அனுபவிக்கத் தகுந்த வஸ்துக்களெல்லாம் நீயே. உனக்கு நமஸ்காரம்.
பாகவதர்களால் ஆராதிக்கப்படுவதும் அவர்களுக்கு மிகவும் அன்பிற்கிடமாயிருப்பதுமாகிய உன்னுருவத்தை நாங்கள் ஸமஸ்த இந்திரியங்களாலும் அனுபவிக்க விரும்புகிறோம். எங்களுக்கு உன் காட்சியைக் கொடுப்பாயாக. நீர்கொண்டு பளபளக்கிற வர்ஷாகாலத்து மேகம்போல் கறுத்து ஸமஸ்த ஸௌந்தர்யங்களும் நிறைந்து திரண்டுருண்டு நீண்டு அழகிய நான்கு புஜங்களும், மென்மைக்கிடமான அழகிய முகமும், தாமரையின் உள்ளிதழ்போன்ற கண்களும், அழகிய புருவங்களும் அத்தகைய மூக்கும், பற்களும் கபோலங்களும், ஏற்றக் குறைவின்றி ஆபரணம் போன்ற காதுகளும், ப்ரேமத்தினால் மலர்ந்த கடைக்கண்களும் அமைத்து முன்னெற்றி மயிர்களால் விளக்கமுற்று அழகிய தாமரைத்தாது போல் திகழ்கின்ற பட்டு வஸ்த்ரம் தரித்து ஜ்வலிக்கின்ற குண்டலங்களும், கிரீடம், கைவளை, முத்துமாலை, சிலம்புத்தண்டை, அரைநாண்மாலை, சங்கு, சக்கரம், கதை, தாமரை மலர், கௌஸ்துபமணி இவைகளும் அணிந்து விளங்குவதும், ஸிம்ஹத்தின் கழுத்துப்போன்று குண்டலம் முதலிய ஆபரணங்களின் காந்திகள் படிந்து கௌஸ்துப மணியோடு கூடின கழுத்துடையதும், ஸ்ரீமஹாலக்ஷ்மி வாஸம் செய்யப்பெற்ற மார்பின் சோபையால் பொன்னுரையோடு கூடின உரைகல்லைத் திரஸ்கரிப்பதும், மூச்சை உள்ளிழுக்கும்பொழுது மறைவதும் வெளிவிடும்பொழுது விளங்குவதுமான த்ரிவலிகளால் (மூன்று கோடுகளால்) அழகாகி அரச இலை போன்ற உதரமும், நீர்ச்சுழிபோலாழ்ந்து உலகங்களையெல்லாம் உள்ளடக்கிக் கொள்வதுபோன்ற நாபியும், கறுத்த நிதம்பத்தின் மேல் உடுத்த பொன்னிறமான பட்டு வஸ்த்ரத்தின்மேல் படிந்து விளங்கும் பொன்னரை நாண் மாலையும், ஒன்றோடொன்று ஸமமான பாதங்களும், கணைக்கால்களும், துடைகளும், அமுங்கின முழந்தாள்களும் அமைந்து அழகிய காட்சியுடையதுமான உன்னுருவத்தை நாங்கள் காண விரும்புகிறோம். சரத்காலத்தில் (இலையுதிர் காலத்தில்) மலர்ந்த தாமரையின் இதழ்போல் திகழ்வதும் நகவொளிகளால் (நகங்களின் ப்ரகாசத்தால்) எங்கள் மனமலங்களைப் போக்குவதுமாகிய பாதாரவிந்தங்களால் பக்தர்களின் பயத்தைப் போக்கும் தன்மையுள்ள உன்னுடைய உருவத்தை எங்களுக்குக் காட்டுவாயாக. நீ, அஜ்ஞர்களான (ஒன்றும் அறியாதவர்களான) ஸம்ஸாரிகளுக்கு ஆசார்யனை அடைந்து உஜ்ஜீவிக்குபடி வழிகாட்டும் தன்மையன். அஜ்ஞானமெல்லாம் தொலைந்து மனம் பரிசுத்தமாகவேண்டுமென்று விரும்புகிற நாங்கள் இப்படிப்பட்ட உன்னுருவத்தை எப்பொழுதும் த்யானிக்கும்படி அருள்புரிவாயாக. எவரேனும் உன்னுருவத்தை த்யானித்துக்கொண்டு தமது வர்ணாச்ரம தர்மங்களை அனுஷ்டித்து வருவார்களாயின், அவர்களுக்கு மோக்ஷத்தை விளைக்கும்படியான பக்தியோகம் தானே உண்டாகும்.
நீ எப்படிப்பட்டவர்களுக்கும் கிடைக்க அரிதானவன். ஆயினும் உன்னிடத்தில் சிறந்த பக்தியுடையோர்க்கு நீ எளிமையானவன். ஆத்ம ஸ்வரூபத்தை அறிந்து உன்னிடத்தில் பக்தியோகம் செய்யும் பெரியோர்களுக்கு ப்ராப்யனாய் உன்னைப் பெற்று அனுபவிக்கையால் உண்டாகும் ஆநந்தம் எல்லாவற்றிலும் சிறந்த கைவல்யமென்கிற ஆதமானுபவத்திலும் இனிதாயிருக்கும். மற்ற உபாயங்களால் ஆராதிக்கமுடியாத உன்னைப் பெரியோர்களுக்கும் அஸாத்யமான ஏகாந்த பக்தியினால் ஆராதித்து உன் பாதமூலத்தையொழிய மற்ற ஸ்வர்க்காதி பலன்களை எவன் விரும்புவான்? வீரத்தன்மையாலும் சூரத்தன்மையாலும் புருவங்களை நெரித்து உலகத்தையெல்லாம் த்வம்ஸம் செய்கின்ற யமன், உன் பாதாரவிந்தங்களைப் பணியும் பெரியோனை “இவன் எனக்குட்பட்டவன்” என்று நினைக்க மாட்டான். ஸ்வர்க்கத்தையாவது மோக்ஷத்தையாவது உன் பக்தர்களுடைய ஸஹவாஸத்தின் அரைக்ஷணத்திற்கும் ஈடாக நினைக்கமாட்டேன். பாபங்களைப் போக்கும் தன்மையுள்ள பாதாரவிந்தங்களையுடைய உனது கீர்த்தியிலும் உன் பாததீர்த்தமாகிய கங்கா நதியிலும் உள்ளும் புறமும் ஸ்நானம் செய்து பாபங்களை உதறி ப்ராணிகளிடத்தில் தயையும் ஸத்வம் நிறைந்த மனமும் நேர்மையும் அமைந்து பரிசுத்தரான பெரியோர்களோடு ஸஹவாஸம் சேரும்படி அருள்வாயாயின், இதுவே நீ எங்களுக்குச் செய்யும் அனுக்ரஹமாம். எவனேனும் உன் பக்தர்களோடு ஸஹவாஸம் செய்வானாயின், அவனுடைய மனம் அப்பெரியோர்களின் பக்தியோகத்தினால் வழிபட்டுச் சுத்தஸத்வம் நிறைந்து வேறு விஷயங்களில் பற்றின்றி அஜ்ஞானமாகிற குஹையில் நுழையாது. அவன் உன் திவ்யமங்கள விக்ரஹத்தை மனனம் செய்பவனாகி உன் ஸ்வரூபத்தை அனாயாஸமாக உணர்வான். இந்தப் ப்ரபஞ்சமெல்லாம் உன் ஸ்வரூபத்திலும், உன் ஸ்வரூபம் இந்த பிரபஞ்சத்திலும் ப்ரகாசிக்கின்றன. இத்தகைய உன் ஸ்வரூபமே பரப்ரஹ்மமென்று கூறப்படும் தத்வமாம். இது ஸூர்யன் முதலிய தேஜஸ்ஸு போலவும் ஆகாயம்போலவும் எங்கும் நிறைந்திருக்கும். இத்தகைய ஸ்வரூபத்தையுடைய நீ பலவாறாக மாறும் தன்மையுடைய உன் மாயையினால் இந்த ப்ரபஞ்சத்தையெல்லாம் படைப்பதும் காப்பதும் அழிப்பதும் செய்கின்றாய். ஆயினும் நீ நிர்விகாரன்.
உன் மாயையினால் ஜீவாத்மாக்கள் பலவகை துக்கங்களுக்கிடமான ஸம்ஸாரத்தை அனுபவிக்கின்றார்கள். பலவகை தேஹங்களாய்ப் பரிணமிக்கின்ற உன் மாயையின் ஸம்பந்தத்தினால் ஜீவாத்மாக்கள் தம்மை ஈச்வரனைக் காட்டிலும் வேறாகவும், ஸ்வதந்த்ரராகவும், தேஹத்தை ஆத்மாவாகவும் நினைக்கின்றார்கள். அந்நினைவு பொய்யாயினும் உன் மாயையின் மஹிமையால் அவர்களுக்கு உண்மைபோல் தோற்றுகிறது. நீ ஸ்வதந்த்ரன். நாங்கள் உன்னைச் சரணம் அடைவோமாக. அப்ராக்ருதமான திவ்யமங்கள விக்ரஹத்தையுடைய உன் ஸ்வரூபத்தை ச்ரத்தையுடன் தமது வர்ணாச்ரம தர்மங்களால் காமனையின்றி ஆராதிக்கிறவர்களே, யஜ்ஞாதி கர்மங்களை அறிவிக்கிற வேதத்தையும், ஆத்மஸ்வரூபத்தை அறிவிக்கிற ஸாங்க்ய சாஸ்த்ரத்தையும் உணர்ந்த அறிஞராவார்கள். இப்படிப்பட்ட ஸ்வரூப ரூப குண விபூதிகளையுடைய நீயே புராணபுருஷன். ஸ்ருஷ்டிக்கு முன்பு நீயொருவனே இருந்தாய். அப்பொழுது சேதனம் அசேதனம் முதலிய சக்திகளெல்லாம் உன்னிடத்தில் மறைந்திருந்தன. பிறகு நீ ஸ்ருஷ்டிக்க விரும்புகையில் ஸத்வ ரஜஸ் தமோகுணங்களையுடைய ப்ரக்ருதி தத்வம் பிரிந்தது. அதினின்று மஹத்தத்வமும், அதினின்று அஹங்கார தத்வமும், அதினின்று ஆகாயமும், அதினின்று வாயுவும், அதினின்று அக்னியும், அதினின்று அப்பும் (ஜலமும்), அதினின்று ப்ருதிவியும், ஆகாயம் முதலிய அப்பஞ்ச பூதங்களினின்று அண்டமும், அதில் ப்ரஹ்மாதி தேவதைகளும், மரீசி முதலிய ரிஷிகளும் மனுஷ்யர் முதலிய மற்ற ப்ராணி ஸமூஹங்களும் உண்டாயினர். இங்கனம் பல விசித்ரங்களடங்கின இந்த ப்ரபஞ்சத்திற்கெல்லாம் காரணன் நீயே. தேவர் திர்யக்கு மனுஷ்யர் ஸ்தாவரமென்று நான்கு வகைப்பட்ட சரீரங்களையும் தன் சக்தியால் படைத்துத் தனது அம்சமாகிய ஜீவன் மூலமாய் அவற்றில் ப்ரவேசித்திருக்கின்றாய். ஆகையால் உன்னைப் புருஷனென்று சொல்லுகிறார்கள். ஜீவன் தேவாதி சரீரங்களில் தன் கர்ம பரிபாகத்தினால் புகுந்து, தேனீக்கள் புஷ்பங்களினின்று ஆராய்ந்து வைத்திருக்கும் தேன்களை வண்டுகள் பருகுவதுபோல், இந்திரியங்களால் கொண்டு வரப்பட்ட சப்தாதி விஷயங்களை அனுபவிக்கின்றான். அவனுக்கு அந்தராத்மாவாயிருந்து அங்கனம் தூண்டுகிறவனும் நீயே. நீ காலத்தைச் சரீரமாகக்கொண்டு மிகவும் பயங்கரமான வேகமும், அறியமுடியாத உருவமும் உடையவனாக, காற்று மேகங்களைப் பறக்கடிப்பதுபோல், ப்ராணிகளைக் கொண்டே ப்ராணிகளை ஹிம்ஸித்து ஸம்ஹரிக்கின்றாய். உலகத்திலுள்ள ஜனங்கள், “இதை இங்கனம் செய்யவேண்டும். அதை அங்கனம் செய்யவேண்டும்” என்னும் பலவகைச் சிந்தையால் மதிமயங்கிக் கையில் கிடைத்த வஸ்துவிலும் பேராசை வளரப்பெற்றுச் சப்தாதி விஷயங்களில் மிகவும் விருப்பமுற்றுத் திரிகையில், காலஸ்வரூபனான நீ இம்மியும் மதிமயக்கமின்றி ஸர்ப்பம் பசியெடுத்து நாக்கினால் உதட்டை நக்கிக்கொண்டு எலியின்மேல் விழுவதுபோல், அந்தக ரூபனாய்த் (யமனாய்) தோன்றி அங்கனம் வீணாய்த் திரிகின்ற ஜனங்கள்மேல் வந்து விழுகின்றாய். ஜீவாத்மாக்கள் உன்னை அநாதரிக்கையால் ஜ்ஞானம் க்ஷீணிக்கப்பெற்று ஸம்ஸாரத்தில் விழுந்து வருந்திக் கொண்டிருப்பினும் தெய்வாதீனமாய்ச் சிறந்த மதி (அறிவு) நேரப்பெறுவார்களாயின், உனது பாதாரவிந்தங்களைத் துறக்கமுடியுமா? ஆனதுபற்றியே பதினான்கு மன்வந்தரங்கள் ஒரு நாளாகப்பெற்ற எங்கள் தந்தையாகிய ப்ரஹ்மதேவன் மனக்கலக்கமின்றி உன் பாதாரவிந்தங்களையே என்றும் ஆராதித்து வருகின்றான். பரமாத்மனே! பரப்ரஹ்மமே! இந்த ப்ரபஞ்சமெல்லாம் ருத்ர ஸ்வரூபியாகிய உன்னிடத்தில் பயந்து வருந்துகின்றது. ஜ்ஞானிகளான எங்களுக்கு நீ எவ்விதத்திலும் பயமில்லாத கதியாயிருக்கின்றாய்.
இங்கனம் சிவபெருமான் பரமாத்மாவைப் பற்றின ஸ்தோத்ரத்தை மொழிந்து மீளவும் அந்த ப்ரசேதஸர்களைப் பார்த்து “ராஜகுமாரர்களே! நீங்கள் பகவானிடத்தில் மனத்தை நிலைநிறுத்தி உங்கள் வர்ணாச்ரம தர்மங்களை அனுஷ்டித்துக் கொண்டு விச்வாஸத்துடன் இந்த ஸ்தோத்ரத்தை ஜபம் செய்வீர்களாக. இதனால் உங்களுக்கு மங்களம் உண்டாகும். நீங்கள் இந்த ஸ்தோத்ரத்தை ஜபித்துக்கொண்டு, ஸமஸ்த பூதங்களுக்கும் அந்தராத்மாவாகையால் உங்கள் ஹ்ருதயத்தில் வஸிக்கின்ற பரமாத்மாவை த்யானிப்பதும் துதிப்பதும் செய்து அடிக்கடி அவனையே பூஜிப்பீர்களாக. இந்த ஸ்தோத்ரம் யோகாதேசமென்னும் பேருடையது. நீங்களெல்லோரும் இதைப் படித்து மனத்தில் நிறுத்திக்கொண்டு மனவூக்கத்துடனும் மிகுந்த ஆவலுடனும் அப்யஸிப்பீர்களாக. ஸ்ருஷ்டி கர்த்தாக்களான மரீசி முதலியவர்களுக்கும் ப்ரபுவான ப்ரஹ்மதேவன் தன் புதல்வர்களான ப்ருகு முதலிய எங்களைக்கொண்டு உலகங்களைப் படைக்க விரும்பி, ஸ்ருஷ்டி ஸாமர்த்யத்தை விரும்புகிற எங்களுக்கு இந்த ஸ்தோத்ரத்தை முன்பு உபதேசித்தான். இதைப் பெற்ற ப்ரஜாபதிகளான நாங்கள் அனைவரும் ப்ரஹ்மதேவனால் ப்ரஜைகளைப் படைக்கும்படி தூண்டப்பெற்று இந்த ஸ்தோத்ரத்தினால் அஜ்ஞானத்தைப் போக்கிக்கொண்டு பற்பல ப்ரஜைகளைப் படைத்தோம். வாஸுதேவனையே முக்யமாகக்கொண்டு, இதைத் தினந்தோறும் நியமத்துடன் ஜபிக்கும் புருஷன் சீக்ரத்தில் தான் விரும்பும் நன்மையைப் பெறுவான். எல்லா நன்மைகளிலும் பகவானிடத்தில் விளையும் பக்தியே சிறந்த நன்மையாம். இந்த ஜ்ஞானமுடையவர் வேறு உபாயங்களால் கடக்க அரிதான துக்கஸாகரத்தை அனாயாஸமாகக் கடப்பார்கள். ஒருவன் நான் பாடின இப்பரமாத்ம ஸ்தோத்ரத்தை ச்ரத்தையுடன் ஓதுவானாயின், மற்ற உபாயங்களால் ஆராதிக்கமுடியாத பகவானிடத்தில் சிறந்த பக்தி உண்டாகப் பெறுவான். மற்றும், ஸமஸ்த புருஷார்த்தங்களையும் அளிக்கவல்ல தனி தெய்வமாகிய பரமபுருஷன், நான் பாடின இந்த ஸ்தோத்ரத்தினால் பாடப்பெற்று மிக்க மனக்களிப்புற்று அவன் விரும்புமவற்றையெல்லாம் சீக்ரத்தில் கொடுப்பான். விடியற்காலத்தில் எழுந்து கைகளைக்குவித்து ச்ரத்தையுடன் இந்த ஸ்தோத்ரத்தைக் கேட்பவர்களும் சொல்பவர்களும் புண்யபாப ரூப கர்மங்களினின்று விடுபடுவார்கள். ராஜ குமாரர்களே! நான் மொழிந்த இந்த பரமபுருஷ ஸ்தோத்ரத்தை மனவூக்கத்துடன் ஜபித்துக்கொண்டு தவம் செய்து வருவீர்களாயின், கடைசியில் விருப்பம் கைகூடப்பெறுவீர்கள்.
இருபத்து மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.