ஶ்ரீமத் பாகவதம் - 102

நான்காவது ஸ்கந்தம் - இருபத்து நான்காவது அத்தியாயம்


புரஞ்சனோபாக்யானம் (புரஞ்ஜனனின் சரிதம்)


மைத்ரேயர் சொல்லுகிறார்:- மஹானுபாவனாகிய ருத்ரன் ப்ரசேதஸர்களுக்கு (பர்ஹிஷதனின் பத்துபிள்ளைகள்) ஸ்தோத்ரத்தை உபதேசித்து அவர்களால் பூஜிக்கப்பட்டு, அவர்கள் பார்த்துக் கொண்டேயிருக்கையில், அவ்விடத்திலேயே மறைந்தான். அப்பால் அவர்களெல்லோரும் ருத்ரன் மொழிந்த பரமாத்ம ஸ்தோத்ரத்தை ஜலத்தில் (தண்ணீரில்) நின்று ஜபித்துக் கொண்டு பதினாயிரமாண்டுகள் தவம் புரிந்தார்கள். இவர்கள் தந்தையாகிய ப்ராசீனபர்ஹி கேவலம் (ஆத்ம பரமாத்ம ஜ்ஞானமின்றி) யாகாதி கர்மங்களிலேயே மிக்க மனவூக்கமுற்றிருந்தான். பிறகு ஆத்மஸ்வரூபத்தை உணர்ந்த நாரதமுனிவர் அவன்மேல் மன இரக்கங்கொண்டு அவனுக்கு ஜ்ஞானோபதேசம் செய்யவிரும்பி அவனிடம் வந்து “மன்னவனே! நீ பலவாக யஜ்ஞாதி கர்மங்களை நடத்திக்கொண்டு வருகின்றாய். இதனால் நீ எந்த நன்மையைப் பெறவிரும்புகின்றாயோ? தெரியவில்லை. துக்கங்கள் கழியவேண்டுமென்றாவது ஸுகங்களைப் பெறவேண்டுமென்றாவது நீ விரும்புவாயாயின், இந்தக் கேவல கர்மத்தினால் (பரமாத்ம விஷயத்தில் ஜ்ஞானம், பக்தி இல்லாமல் செய்யும் யாகம் போன்ற கர்மங்களால்) அவ்விரண்டில் எதையும் ஸாதிக்கமுடியாது” என்றார். 


அரசன் கேட்கிறான்:- “மஹானுபாவரே! என் மனம் கேவல கர்மங்களிலேயே மூழ்கி மற்றவற்றிலிருந்து விலகி இருக்கிறது. ஆதலால் நான் மற்ற எந்த நன்மையையும் அறியேன். நான் கர்மங்களினின்று மீண்டு வருமாறு எனக்கு நீர் தத்வஜ்ஞானத்தை (ஆத்ம பரமாத்ம விஷய ஜானத்தை) உபதேசிப்பீராக. விடமுடியாத பலவகை ப்ரவ்ருத்தி தர்மங்கள் தொடரப்பெற்று மேன்மேலும் ஸம்ஸாரத்தை வளர்ப்பதான மனை வாழ்க்கையில் மமகாரத்தை (செருக்கினை) ஏற்றுக்கொண்டு பிள்ளை பெண்டிர் பணம் முதலியவற்றையே புருஷார்த்தமாக நினைத்து மதிகெட்டுத் திரிகிற (அறிவு கெட்டு அலைகிற) என்போன்ற மூடன் சிறந்த தன்மையைப் பெறமாட்டான்” என்றான். அதைக் கேட்டு நாரதர் மன்னவனை நோக்கி இங்கனம் மொழிந்தார்.


நாரதர் கூறுகிறார்:- ப்ரஜைகளுக்கெல்லாம் ப்ரபுவாகிய மன்னவனே! நீ யாகங்களில் பசுக்களென்று பேரிட்டு மன இரக்கமின்றி வதித்த ப்ராணிகள் பலவாயிரம் கூட்டங்களாயிருக்கின்றன. அவை, நீ அவற்றிற்குச் செய்த ஹிம்ஸையை (துன்பத்தை) நினைத்து “இவன் எப்பொழுது மரணம் அடையப்போகிறான்?” என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. நீ மரணம் அடைகையில், அவை கோபம் மேலெழப்பெற்று இரும்புபோல் உறுதியான தமது கொம்புகளால் உன்னைக் குத்தி ஹிம்ஸிக்க (துன்புறுத்தப்) போகின்றன. இவ்விஷயத்தில் புரஞ்ஜனோபாக்யானமென்னும் (புரஞ்சனனின் சரிதமென்னும்) பேருடைய ஓர் பழையதான இதிஹாஸம் சொல்லுகிறேன். அதைக் கேட்டுத் தெரிந்து கொள்வாயாக. புரஞ்ஜனனென்னும் பேருடைய ஓர் மன்னவன் இருந்தான். அவன் பெரும்புகழன். அவனுக்கு அவிஜ்ஞாதனென்ற ஓர் நண்பன் இருந்தான். அவனுடைய செயல் அனைவர்க்கும் ப்ரஸித்தமாயிருந்தது. அப்புரஞ்ஜன மன்னவன் சப்தாதி விஷயங்களை (சப்த, ஸ்பர்ச, ரூப, ரஸ, கந்த என்கிற உலகியல் விஷயங்களை) அனுபவிக்க விரும்பி அதற்குத் தகுந்த ஓர் வாஸஸ்தானத்தைத் (தங்குமிடத்தை) தேட முயன்று இந்த ப்ரபஞ்சம் (உலகம்) முழுவதும் திரிந்தும் இடம் அகப்படாமைபால் மனவருத்தமுற்றிருந்தான். அவன் பூமண்டலத்திலுள்ள பட்டணங்களையெல்லாம் பார்த்தும் அவற்றில் எதையும் தனக்கு உரியதாக நினைக்கவில்லை. பிறகு ஒரு காலத்தில் ஹிமவத்பர்வதத்தின் தென்புறத் தாழ்வரையில் ஒன்பது வாசல்களுடையதும் லக்ஷணங்களெல்லாம் அமைந்ததுமாகிய ஒரு பட்டணத்தைக் கண்டான். அதில் கோட்டைகளும் உத்யான வனங்களும் பெரிய மாடமாளிகைகளும் அகழிகளும் சாளரங்களும் கோபுர வாசல்களும் பொன், வெள்ளி, இரும்பு இவைகளால் இயற்றின சிகரங்களோடு கூடின க்ருஹங்களும் திகழ்வுற்றிருந்தன. இந்திரநீலம் ஸ்படிகம் வைடூர்யம் முத்து மரகதம் பத்மராகம் முதலிய ரத்னங்களால் இயற்றின உப்பரிகைகளையுடைய (மாடமாளிகைகளுடைய) அந்நகரம் – போகவதிபோல் (பாதாளத்திலுள்ள நாகராஜன் பட்டணம்) மிகுந்த சோபையுடன் (அழகுடன்) விளங்கிற்று. அந்நகரத்தில் ஸபைகளும் நாற்சந்தி வீதிகளும் ராஜமார்க்கங்களும் சூது சதுரங்கம் முதலியன ஆடுமிடங்களும் கடைத்தெருக்களும் ஜனங்கள் இளைப்பாறுமிடங்களும் த்வஜங்களும் பதாகைகளும் பவழத்திண்ணைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அப்பட்டணத்திற்கு வெளியில் அழகான வ்ருக்ஷங்களும் கொடி செடிகளும் நிறைந்த ஒர் உத்யான வனம் உண்டு. பறவைகளின் ஒலிகளாலும் வண்டுகளின் ஜங்காரங்களாலும் பெரிய கோலாஹலம் நிறைந்த ஜலாதாரங்கள் பலவும் அங்குண்டு, மற்றும், அந்த உத்யானத்தில் குளிர்ந்த அருவிகள் பலவும் பெருகிக்கொண்டிருக்கும். அவ்வருவிகளின் திவலைகளோடும் (நீர்த்துளிகளோடும்) பூக்களின் மணத்தோடும் கூடிக் காற்று மெல்லமெல்ல வீசிக் கொண்டிருக்கும். அங்கு தாமரையோடைகள் பலவும் திகழ்வுற்றிருக்கும். அவற்றின்கரையில் வ்ருக்ஷங்கள் பலவும் அடர்ந்திருக்கும். அவற்றின் தளிர்கள் காற்றினால் அசைந்து கொண்டு அழகாயிருக்கும். அங்கு பற்பலவகைக் காட்டு மிருகங்கள் கூட்டம் கூட்டமாய் உலாவிக்கொண்டிருக்கும். அவையெல்லாம் பிறர்க்கு ஹிம்ஸை (துன்பம்) செய்யும் தன்மையற்று முனிவர்கள் போல் மிகவும் சாந்தமாயிருக்கும். வழிப்போக்கர்கள் தம்மை அழைக்கின்றனவோவென்று நினைக்கும்படி அங்குக் குயிலினங்கள் மிகவும் இனிமையாய்க் கூவிக்கொண்டிருக்கும். அப்புரஞ்ஜன மன்னவன் அவ்வுத்யானவனத்தில் உலாவிக்கொண்டிருக்கையில் திடீரென்று ஒரு பெண்மணி வரக்கண்டான். அவளைப் பத்து ப்ருத்யர்கள் (சேவகர்கள்) சுற்றிக்கொண்டிருந்தார்கள். அவர்களில், ஒவ்வொருத்தனுக்கும் நூறு வேலைக்காரர்கள் ஸித்தமாயிருந்தார்கள். மற்றும், ஐந்து தலைப்பாம்பொன்று அவளை நாற்புறத்திலும் காத்துக்கொண்டிருந்தது. அவள் யௌவனப் பருவம் (இளமை) நிறைந்தவள். நினைத்த வடிவங்கொள்ள வல்லவள். அவள் தனக்குரிய கணவனைத்தேடிக்கொண்டு அவ்விடம் வந்தாள். அவளது மூக்கும் பற்களும் கபோலமும் முகமும் அழகாயிருந்தன. அவள் நாண் மடம் அச்சம் முதலிய குணங்களெல்லாம் அமைந்தவள். அவளுடைய காதுகள் ஒன்றோடொன்று நிகர்த்து மிகவும் அழகாயிருந்தன. அக்காதுகளில் அழகான குண்டலங்களை அணிந்து அவற்றின் சோபையால் அவள் நிரம்பவும் திகழ்வுற்றிருந்தாள். அவள் பொன்னிறமான பட்டுவஸ்த்ரம் தரித்து அழகிய நிதம்பம் (முதுகுக்கும் இடுப்புக்கும் கீழுள்ள பகுதி) அமைந்து பொன் அரைநாண் (தங்க  ஒட்டியாணம்) பூண்டு தண்டைகளால் ஒலிக்கின்ற பாதங்களால் இங்கு மங்கும் உலாவிக் கொண்டிருந்தாள். தேவ கன்னிகைபோல் யௌவனப் பருவத்தினிடையில் மாறாதிருக்கின்ற அப்பெண்மணி தன் பருவ நிலைமையை அறிவிப்பனவாகி ஒன்றோடொன்று ஸமமாகப் பருத்துருண்டு இடையில் இம்மியும் இடமின்றி இணைந்திருக்கின்ற தன் கொங்கைகளை ஆடையின் நுனியால் வெட்கித்தவள்போல் அடிக்கடி இழுத்து மூடிக்கொண்டு யானைப்பேடு (பெண் யானையை) போல் மிகவும் அழகாக நடையாடினாள். 


வெட்கம் வழிகின்ற புன்னகையினால் திகழ்கின்ற அம்மாதரார்மணி ப்ரீதியால் சுழல்கின்ற புருவங்களோடுகூடி ஸ்நேஹம் (அன்பு) நிறைந்த கண்ணோக்கமாகிற பாணத்தினால் அம்மன்னவனை ஸ்பர்சிக்க, அவனும் அவளைப் பார்த்து “தாமரையிதழ்போன்ற கண்களையுடையவளே! நீ யாவள்? யாருடையவள்? எங்கிருந்து வந்தாய்? நல்லியற்கையுடையவளே! நீ இந்தப் பட்டணத்தின் அருகாமையில் என்ன செய்ய விரும்பி உலாவுகின்றாய்? இதை எனக்குச் சொல்வாயாக. உன்னைத் தொடர்ந்து வருகிற இவ்வீரர்கள் பதினொருவரும் யாவர்? இவர்களில் ஒருவன் மஹா வீரனாயிருக்கின்றான். அழகிய புருவமுடையவளே! உன்னைத் தொடர்ந்திருக்கின்ற இப்பெண்மணிகள் யாவர்? உனக்கு முன்னே வருகின்ற இந்த ஸர்ப்பம் யாது? உன் கணவன் உனது பாதங்களில் விருப்பம் உண்டான மாத்ரத்தினால் தன் கருத்தெல்லாம் நிறைவேறப் பெற்றதாக யான் நினைக்கின்றேன். அத்தகையனான உன் கணவன் இவ்வனத்தில் எங்கேனும் ஏகாந்தமாக முனிவன்போல் மறைதிருக்கிறானாயென்ன? நீ, வராஹபகவானைத் தேடும் பூமிதேவியோ? அல்லது, ருத்ரனைத் தேடும் பார்வதியோ? அல்லது, ப்ரஹ்மதேவனைத்தேடும் ஸரஸ்வதியோ? அல்லது, ஸ்ரீமஹாவிஷ்ணுவைத் தேடும் மலர்மங்கையோ? ஆம். ஆயின், உன் கையினின்று தாமரைமலர் எங்கு நழுவிற்று? அழகிய துடைகளுடையவளே! நீ பூமங்கை முதலியவர்களில் ஒருத்தியுமல்லை. எனென்னில். நீ பூமியில் படிந்து நடக்கின்றய். அவர்கள் பூமியைப் பாதங்களால் ஸ்பர்சிக்க மாட்டார்கள். நான் அற்புதச் செயலுடையவன்; வீரர்களில் தலைவன். ஸ்ரீமஹாலக்ஷ்மி விஷ்ணுவுடன் வைகுண்ட லோகத்தை அலங்கரிப்பதுபோல், இப்படிப்பட்ட என்னுடன் நீ இப்பட்டணத்தை அலங்கரிப்பாயாக. அழகியவளே! மஹானுபாவனாகிய மன்மதன், வெட்கமும் ப்ரீதியும் புன்னகையும் சுழல்கின்ற புருவங்களும் அமைந்த உன்னால் தூண்டப்பட்டு, உன் கடைக்கண்ணோக்கத்தினால் கண்டிக்கப்பட்ட மனமுடைய என்னை மிகவும் வருத்துகிறான். என்மேல் அருள் புரிவாயாக. அழகிய புருவங்களும் கருவிழிகளும் அமைந்த கண்களுடையதும் தொங்குகின்ற கருத்த முன்னெற்றி மயிர்களால் சூழப்பட்டிருப்பதும் அழகான உரைகளை உரைப்பதும் பரிசுத்தமான புன்னகையுடையதுமாகிய உன் முகம் வெட்கத்தினால் என்னெதிரில் புலப்படாமல் அப்புறம் மாறுகின்றது. அதைத் திருப்பி எனக்குக் காட்டுவாயாக” என்று இனிதாக மொழிந்தான். இங்கனம் இந்திரியங்களை வெல்லமுடியாமல் வேண்டுகின்ற புரஞ்ஜனனைப் பார்த்து அப்பெண்மணியும் மதிமயங்கிப் புன்னகை செய்துகொண்டு அவ்வீரனைப் புகழ்ந்து சிரித்தவண்ணம் அவனது வேண்டுதலுக்கு மனமிசைந்தாள்.


நாரதர் கூறுகிறார்:- “புருஷ ச்ரேஷ்டனே! உன்னையும் என்னையும் படைத்து நாமத்தையும் கோத்ரத்தையும் ஏற்படுத்தின கர்த்தாவை நாங்கள் நன்றாக அறியோம். இப்பொழுது இந்தப் பட்டணத்தில் வாஸம் செய்கின்ற உன்னை மாத்ரமே அறிகின்றோமன்றி நமக்கு வாஸஸ்தானமாகிய இந்தப் பட்டணத்தை நிர்மித்தவனும் நம்மைக் காட்டிலும் வேறுபட்டவனுமாகிய மற்றொருவனை அறியோம். வெகுமதி அளிக்கும் தன்மையனே! இப்புருஷர்கள் பதினொருவரும் என்னுடைய நண்பர்கள். இப்பெண்கள் என் தோழிகள். இந்த ஸர்ப்பம் நான் உறங்கும் பொழுது விழித்துக்கொண்டிருந்து பட்டணத்தைப் பாதுகாக்கும். மற்றதெல்லாம் அப்படி இருக்கட்டும். நீ தெய்வாதீனமாய் இப்பட்டணம் வந்து சேர்ந்தாய். உனக்கு க்ஷேமம் உண்டாகுக. இந்த்ரியங்களுக்குரிய சப்தாதி விஷயங்களை இனி விரும்பியபடி அனுபவிப்பாய். 


சத்ருக்களை அழிப்பவனே! நான் என் பந்துக்களைக் கொண்டு உனக்கு அந்தச் சப்தாதி போகங்களை அமைத்துக் கொடுக்கின்றேன். ப்ரபூ! ஒன்பது வாசல்களையுடைய இப்பட்டணத்தில் நீ நூறாண்டுகள் வரையிலும் நான் ஸம்பாதித்துக் கொடுக்கிற காம போகங்களை அனுபவித்துக்கொண்டு ஸுகமாயிருப்பாயாக. ஸுரத ஸுகத்தை அறியாதவனும் ஸம்ஸாரத்தில் வெறுப்புற்று ப்ரவ்ருத்தி மார்க்கத்தில் (உலகியல் வாழ்க்கையில்) வல்லமையற்றவனும் ம்ருத்யுவையும் ப்ரியமான அதிதிபோல் எதிர்பார்க்கின்றவனும் காலாந்தரத்தில் விளையக்கூடிய ஸ்வர்க்காதி ஸுகத்தை நெஞ்சிலும் நினையாதவனும் கேவலம் பசுவைப்போல் ஒன்றுமறியாதவனுமாகிய மற்றொருவனை நான் எங்கனம் களிக்கச்செய்ய (இன்றபுச்செய்ய) வல்லளாவேன்? இந்த ப்ரவ்ருத்தி மார்க்கத்தில் ஸ்வர்க்காதி லோகங்களை விளைக்கவல்ல யாகாதி ரூபதர்மமும் அர்த்தகாமங்களும் ஸந்தான ஸௌக்யமும் (புத்ர சுகமும்) அழிவில்லாத புகழும் மோக்ஷமும் சோகத்திற்கிடமன்றி நிவ்ருத்திமார்க்கஷ்டர்களால் (உலகியல் வாழ்வைத் துறந்தவர்களால்) அறியப்படாத நிர்மலமான புண்யலோகங்களும் ஸித்திக்கின்றன. இந்த ஸம்ஸாரத்தில் புகழ்பெற்றதான க்ருஹஸ்தாச்ரமம் பித்ருக்களுக்கும் தேவதைகளுக்கும் ரிஷிகளுக்கும் மனுஷ்யர்களுக்கும் மற்றுமுள்ள ப்ராணிகளுக்கும் தனக்கும் க்ஷேமத்தை விளைவிக்குமிடமென்று சொல்லுகிறார்கள். புகழும் வள்ளல் தன்மையும் ப்ரீதிக்கிடமான காட்சியும் அமைந்த உன்னைப்போன்ற அன்புள்ள கணவன் தெய்வாதீனமாய் அகப்படின், என்னைப்போன்ற பெண்மணி எவள்தான் மேல்விழுந்து வரிக்கமாட்டாள்? நீண்ட புஜமுடையவனே! ஸர்ப்பத்தினுடல் போன்ற உனது புஜங்களில் எவளுடைய மனந்தான் தாழாது. நீ தயையினாலெழும் புன்னகையமைந்த கண்ணோக்கத்தினால் அநாத வர்க்கங்களின் மனவருத்தங்களைப் போக்க விரும்பி உலாவுகின்றாய்” என்றாள். 


நாரதர் கூறுகிறார்:- இங்கனம் புரஞ்ஜனனும் புரஞ்ஜனியுமாகிய அந்தத் தம்பதிகள் இருவரும் ஒருவர்க்கொருவர் ஸங்கேதம் பண்ணிக்கொண்டு (அலவலாவிக்கொண்டு) அப்பட்டணத்திற்குள் நுழைந்து நூறாண்டுகள் வரையிலும் மனக்களிப்புற்றிருந்தார்கள். அம்மன்னவன் பாடகர்களால் இனிதாகப் பாடப்பெற்று ஸ்த்ரீகளுடன் ஆங்காங்கு விளையாடிக் கொண்டிருந்து ஆடிமாதத்தில் ஜலக்ரீடைக்காகத் தாமரையோடையில் அமிழ்ந்தான். அப்பட்டணத்தரசன் வெளி தேசங்களுக்குத் தனித்தனியே ஸுகமாய்ப் போகும்படி அந்தப்பட்டணத்திற்கு மேல்பாகத்தில் ஏழுத்வாரங்களும் (ஏழு வாயில்களும்) கீழ்ப்பாகத்தில் இரண்டு த்வாரங்களும் (வாயில்களும்) ஏற்பட்டிருந்தன. அவ்வொன்பது த்வாரங்களில் (வாயில்களில்) ஐந்து கிழக்குமுகமாகவும், ஒன்று தெற்குமுகமாகவும், மற்றொன்று வடக்குமுகமாகவும், மற்ற இரண்டு வாயில்கள் மேற்குமுகமாகவும் இருந்தன. அவற்றின் பேர்களைச் சொல்லுகிறேன், கேள். கிழக்கு த்வாரங்களில் (வாயில்களில்) கத்யோதையென்றும் ஆவிர்முகியென்றும் இரண்டு த்வாரங்கள் (வாயில்கள்) ஓரிடத்தில் ஏற்பட்டிருந்தன. புரஞ்ஜனமன்னவன் த்யுமானென்னும் நண்பனுடன் அவ்விரண்டு த்வாரங்களாலும் பட்டணத்தினின்று புறப்பட்டு விப்ராஜிதமென்னும் தேசத்திற்குப் போவான். நளினியென்றும் நாளினியென்றும் மற்ற இரண்டு த்வாரங்கள் ஓரிடத்தில் விளங்கின. அம்மன்னவன் அவதூதனென்னும் நண்பனுடன் அந்த த்வாரங்களால் புறப்பட்டு ஸௌரபமென்னும் தேசத்திற்குப் போவான். மற்றொன்று முக்யையென்னும் பேருடையது. அவ்வரசன் ரஸஜ்ஞனென்றும் விபணமென்றும் இரண்டு நண்பர்களோடு அந்த த்வாரத்தினால் புறப்பட்டுப் பணமென்றும் பஹூதனமென்றும் வழங்கிவரும் தேசங்களுக்குப் போவான். அப்பட்டணத்தின் தெற்கு வாசற்படி பித்ருஹூவென்றும் வடக்கு வாசற்படி தேவஹூவென்றும் வழங்கும். அம்மன்னவன் ஸ்ருதிதரனென்னும் நண்பனுடன் பித்ருஹூவென்னும் தெற்குவாசல் வழியாய்த் தக்ஷிண பாஞ்சால தேசத்திற்கும், தேவஹூவென்னும் வடக்குவாசல் வழியாய் உத்தரபாஞ்சால தேசத்திற்கும் போவான். மேற்கு வாசல்களில் ஒன்று ஆஸுரியென்றும் மற்றொன்று நிர்ருதியென்றும் வழங்கிவரும். அம்மன்னவன் துர்மதனென்னும் நண்பனுடன் ஆஸுரியென்னும் வாசலால் க்ராம்யகமென்னும் தேசத்திற்குப் போவான். லுப்தகனென்னும் நண்பனுடன் நிர்ருதியென்னும் வாசலால் புறப்பட்டு வைசஸமென்னும் தேசத்திற்குப் போவான். இப்பட்டணத்திற்கு இந்த த்வாரங்கள் தவிர பாணியென்றும் பாதமென்றும் மற்றும் இரண்டு த்வாரங்கள் உண்டு. இவை, கூடுகட்டி அதன் வாயையும் மூடி அதற்குள் அகப்பட்டுக்கொண்டு வருந்தும் புழுக்களைப்போல் ஒன்றும் தெரியாதவை; சத்தில்லாதவை. அப்புரஞ்சனன் அவ்விரண்டில் பாதமென்னும் வாசல்வழியால் போவது வருவதாயிருப்பான். பாணியென்கிற மற்றொருவாசல் வழியாய்ச்சென்று செயல்களைச் செய்வான். அம்மன்னவன் விஷூசீனனென்னும் நண்பனுடன் கூடி அந்தப்புரத்திற்குள் சென்று, பெண்டிர் பிள்ளை பெண் முதலியவர்களின் ஸம்பந்தத்தினால் உண்டாகும் மோஹத்தையும் தெளிவையும் ஸந்தோஷத்தையும் பெறுவான். அப்புரஞ்சனன் உண்மை அறியாமல் காமத்தில் மனம் சென்று அதை நிறைவேற்றிக் கொடுப்பவைகளான செயல்களில் கால்தாழ்ந்தது பற்றி தெய்வத்தினால் வஞ்சிக்கப்பட்டுத் தன் பார்யை விரும்புமவற்றையே அனுஸரித்திருந்தான். அவள் மத்யபானம் செய்கையில் (கள் பருகும்போது), தானும் மதபரவசனாய் (மயங்கி) அவளோடு மத்யபானம் செய்வதும், அவள் போஜனம் செய்கையில் புஜிப்பதும் (சாப்பிடுவதும்), பக்ஷணங்களைப் பக்ஷிக்கையில் (உண்கையில்) தானும் அவற்றைப் பக்ஷிப்பதும் (உண்பதும்), அவள் பாட்டுப் பாடுகையில் தானும் அவளுடன் பாடுவதும், அவள் அழுகையில் அவளோடுகூடத் தானும் அழுவதும், அவள் சிரிக்கையில் சிரிப்பதும், பேசுகையில் பேசுவதும், அவள் ஒடிப்போகையில் அவளைப் பிரிந்திருக்க முடியாமல் அவளைத் தொடர்ந்தோடுவதும், நிற்கையில் நிற்பதும். படுக்கையில் படுப்பதும், உட்காருகையில் உட்காருவதும், ஏதேனுமொன்றைச் செவி கொடுத்துக் கேட்கையில் கேட்பதும், பார்க்கையில் பார்ப்பதும், முகருகையில் முகருவதும் தொடுகையில் தொடுவதும், வருந்துகையில் வருந்துவதும், ஸந்தோஷிக்கையில் ஸந்தோஷிப்பதும், ஆனந்திக்கையில் ஆனந்திப்பதுமாகிய தொழில்களைச் செய்து தனக்கு இயற்கையில் ஏற்பட்டிருந்த சாந்தி முதலிய குணங்களெல்லாம் மறைந்து, விளையாட்டிற்காக வளர்க்கப்பட்ட நாய்போல் ஒன்றுமறியாமல் தனக்கு இஷ்டம் இல்லாதிருப்பினும் மன உறுதியின்றி அவள் ஆடின ஆட்டங்களுக்கெல்லாம் உட்பட்டு அவளது செயல்களை அப்படியே பின்பற்றினான்.


இருபத்து நான்காவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை