“செங்கண் மால் தான் கொண்டு போனான்” - கோமான் ஶ்ரீ பாலாஜி

 ஶ்ரீ:

ஶ்ரீமதே இராமாநுஜாய நம:


ஒரு மகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால்*

திருமகள் போல வளர்த்தேன்; செங்கண் மால் தான் கொண்டு போனான்*

பெருமகளாய்க் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற அசோதை*

மருமகளைக் கண்டு உகந்து மணாட்டுப் புறம் செய்யுங் கொல்லோ? 


பெரியாழ்வார் திருமொழியின் மூன்றாம் பத்தில் எட்டாம் திருமொழியாக விளங்குவது 'நல்லதோர் தாமரை' என்னும் பதிகமாகும். இப்பதிகம் எம்பெருமானின் மேல் உன்னதமான காதல் கொண்டு அவனுடனேயே சென்ற தன் மகளைக் குறித்து ஒரு தாய் படும் வேதனை, கவலை மற்றும் அவளது வருங்கால இல்லற வாழ்வு குறித்த எதிர்பார்ப்புகளை மிக அழகாகச் சித்தரிக்கிறது. 


இதில் நான்காவது பாசுரமாக அமைந்த 'ஒரு மகள் தன்னை உடையேன்' என்ற பாசுரம், தமிழ் பக்தி இலக்கிய வரலாற்றிலும் வைணவக் கோட்பாடுகளிலும் மிக உன்னதமான இடத்தைப் பெற்றுள்ளது. 


ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தர், நந்தவனத்தில் துளசிச் செடியின் அடியில் ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுத்து, அவளுக்குக் 'கோதை' என்று பெயரிட்டுத் தன் சொந்த மகளாக வளர்த்தார். பாண்டிய மன்னனின் அவையிலே பரதத்துவ நிர்ணயம் செய்து கிழியறுத்த பெரியாழ்வாருக்குத் திருமகள் போன்ற கோதை மகளாகக் கிடைத்தது எம்பெருமானின் பேரருளாகும். வைணவ ஆசாரியர்கள் கோதையைத் தனித்தொருவராக மட்டும் பார்க்காமல், பத்து ஆழ்வார்களுக்கும் கிடைத்த ஒரே அரிய பெண் செல்வமாகவே கருதிப் போற்றினர். 


மணவாளமாமுனிகள் தம் உபதேச ரத்தின மாலையில் இவளைப் "பிஞ்சில் பழுத்தவள்" என்று போற்றுவதற்குக் காரணம், பல்லாண்டுகள் யோகிகள் தவம் செய்து பெற முடியாத மாசற்ற பகவத் ஞானத்தை இவள் தன் இளம்பிராயத்திலேயே இயல்பாகப் பெற்றிருந்ததே ஆகும். இப்பாசுரம் தாயின் கூற்றாக அமைந்திருந்தாலும், அதில் மகளை வளர்த்த தந்தையின் ஆழமான பாசமும், அவளது தெய்வீகத் திருமணம் குறித்த பெருமிதமும் வெளிப்படுவதைக் காண முடியும்.


ஒருமகள் தன்னை உடையேன் - எனக்கு ஒரே ஒரு மகள் இருக்கிறாள். இது பெரியாழ்வாரின் கூற்று, ஆனால் பூர்வாச்சார்யர்கள் ஆண்டாளை, அனைத்து ஆழ்வார்களுக்கும் பொதுவான திருமகளாகப் போற்றுகின்றனர்.


உலகம் நிறைந்த புகழால் - உலகமெங்கும் பரவிய பெரும் புகழோடு.


திருமகள் போல வளர்த்தேன் - துளசி வனத்தில் கண்டெடுத்த தெய்வீகக் குழந்தையைத் திருமகளாகவே பாவித்து வளர்த்த விதம்.


செங்கண்மால் தான் கொண்டு போனான் - எம்பெருமான் தன் அழகிய திருக்கண்களால் அவளை வசியப்படுத்தித் தன்னுடன் இணைத்துக் கொண்டான்.


பெருமகளாய்க் குடிவாழ்ந்து - ஆயர் குலத்திற்குப் பெருமை சேர்க்கும் தலைவியாக வாழ்ந்து. இது யசோதை பிராட்டியின் குலப் பெருமையும் அவளது மாசற்ற இல்லற மேன்மையும் குறிக்கப்படுகிறது.


பெரும்பிள்ளை பெற்ற அசோதை - பெரும் புகழுடைய கண்ணபிரானைப் பிள்ளையாகப் பெற்ற யசோதை.


மருமகளைக் கண்டு உகந்து - தன் மருமகளான என் கோதையை ஆவலோடு பார்த்து மகிழ்ந்து.


மணாட்டுப்புறம் செய்யுங் கொலோ - மருமகளாக ஏற்று இல்லறத்தில் அமர்த்தி உபசரிப்பாளோ? புதிய இல்லத்தில் மருமகள் அச்சமின்றி வாழ வழிவகை செய்து, குடித்தனம் வைப்பாளோ என்ற ஒரு தாயின் ஏக்கமும் ஆவலும்.


உத்தமூர் ஸ்வாமிகள் இப்பாசுரத்தின் உட்பொருளை விளக்கும் போது ஆழ்வாரின் உள்ளக்கிடக்கையை மிக அழகாக வெளிப்படுத்துகிறார்.


“எனக்கு ஒரே ஒரு மகள் என்பதால் அவளிடத்தில் எனக்கு எல்லையற்ற அன்பும் அபிமானமும் இருந்தது. அவள் உலகத்தாரால் போற்றப்படும் பெருமைகளைக் கொண்டவள் என்பதால், அவளைச் சாதாரணப் பெண்ணாக எண்ணாமல், சாட்சாத் பெரிய பிராட்டியின் (ஸ்ரீமகாலட்சுமியின்) அவதாரமாகவே பாவித்து, மிகுந்த மகிழ்ச்சியோடு உலகம் வியக்கும்படி வளர்த்தேன். இந்த விஷயம் அவளது மாமியாரான யசோதைக்கும் தெரிந்தே இருக்கும்.


திருமகளுக்கு உரியவன் திருமாலே; அதுபோல என் மகளையும் அந்தப் புண்டரீகாக்ஷனான (செங்கண்மால்) எம்பெருமான், எங்கள் பிரார்த்தனையின் எல்லையைக் கண்டு, அவளை வேறு எவரும் நெருங்க முடியாதபடி தானே நேரில் வந்து தன் வசமாக்கிக் கொண்டுபோனான்.


கண்ணனைப் பெற்ற யசோதை ஒன்றும் சாதாரணமானவள் அல்லள்; அவள் ஒரு குடும்பத்தை எப்படி வழிநடத்த வேண்டும் என்று தெரிந்த பெருமைமிக்க தலைவி. அவளது மகனும் எளியவன் அல்லன்; அவன் 'வேதாந்த விழுப்பொருள்' என்று வேதங்களால் போற்றப்படும் பரம்பொருள். அப்படிப்பட்ட பெருமைமிகு இல்லத்திற்கு மருமகளாகச் செல்லும் என் மகளுக்கு, யசோதை பிராட்டி தகுந்த மரியாதையும் நற்கதிப் பதவியும் அளித்து, அவளைக் கண்டு உகந்து வரவேற்க வேண்டும்.


மகளை வளர்த்த தானே அங்கு இல்லாத காரணத்தால், அவளது இல்லறக் கல்யாண வைபவங்களை முன்னின்று நடத்த ஆள் இல்லையே என்ற கவலையும், புதிய இடத்தில் அவர்கள் அவளைப் புறக்கணித்து விடுவார்களோ அல்லது முறைப்படி செய்ய வேண்டிய சீர்மைகளைச் செய்யாமல் விட்டுவிடுவார்களோ என்ற ஐயமும் ஒரு தாயாக ஆழ்வாரின் நெஞ்சை உலுக்குகிறது. இந்த ஏக்கமே "மணாட்டுப்புறம் செய்யுங்கோலோ" என்ற சொல்லில் வெளிப்படுகிறது” என்று உத்தமூர் ஸ்வாமிகள் விளக்குகிறார்.


ஆண்டாள் நாச்சியார் எம்பெருமானை அடைவதற்காகக் காமனை வழிபட்டதாக நாச்சியார் திருமொழியில் வரும் பகுதிகள் வைணவ வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக அமைந்தன. எம்பெருமானைத் தவிர வேறு எவரையும் வணங்காத "மறந்தும் புறம் தொழா" நெறியைக் கொண்ட வைணவ மரபில் இது எங்ஙனம் பொருந்தும் என்ற கேள்விக்கு வியாக்யானச் சக்கரவர்த்தியான பெரியவாச்சான் பிள்ளை மிக உன்னதமான விளக்கங்களை அளித்துள்ளார்.


அயோத்தியில் வாழ்ந்த குடிமக்கள் அனைவரும் ராமபிரானின் நலனுக்காகவும் அவனது நல்வாழ்விற்காகவும் பல தெய்வங்களையும் வழிபடவில்லையா என்ற வினாவை அவர் எழுப்புகிறார். அதுமட்டுமன்றி, அனுமன் கடலைக் கடக்கும் தருணத்தில் "நமோஸ்து வாசஸ்பதயே" என்று கூறி வாசஸ்பதியை வணங்கியதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இறுதியாக, வைணவக் குலத்தின் தலைவரான நம்மாழ்வாரே திருவாய்மொழியில் ஆற்றாமை எல்லையைக் கடக்கும் போது "தெய்வங்காள்" என்று தேவதைகளை முன்னிலைப்படுத்தியதைப் போல, எம்பெருமானின் பிரிவைத் தாங்க முடியாத துயரத்திலும் கலக்கத்திலும் இருந்த கோதையும் காமனைத் தொழுதாள் என்று பெரியவாச்சான் பிள்ளை விளக்குகிறார்.


பகவானை அடைவதற்காக ஏற்படும் இத்தகைய கலக்கமும் ஆற்றாமையும் ஜீவாத்மாவின் இயல்பான பக்தி நிலையின் வெளிப்பாடேயாகும். அதேபோல் இப்பாசுரத்தில், தன் ஒரே ஒரு மகளைப் பிரிந்த ஆழ்வார், அவளது எதிர்கால நல்வாழ்விற்காக ஏங்கும் தாயுள்ளத்தை மிக நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார்.


"மணாட்டுப்புறம் செய்யுங்கோலோ" என்ற சொல்வழக்கு இப்பாசுரத்தின் மிக முக்கியமான மையப்புள்ளியாகும். "மணாட்டுப்புறம்" என்பது ஒரு மணப்பெண்ணைத் தன் இல்லத்திற்குள் வரவேற்று, அவளுக்குத் தேவையான வசதிகளையும் தனி உரிமைகளையும் அளித்துக் குடித்தனம் வைப்பதைக் குறிக்கும். தன் மகளைத் தன்வசப்படுத்திய கண்ணனின் தாயான யசோதையை போற்றிப் பெரியாழ்வார் பாடும்போது அவளை "பெருமகளாய்க் குடிவாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற அசோதை" என்று சிறப்பிக்கிறார். கண்ணனைப் பெற்றவளை விட வளர்த்தவளுக்கே பாசம் அதிகம் என்பதால், யசோதையைப் பிரித்துப் பார்க்க முடியாது.


புதிய வீட்டின் வாசலில் அச்சத்தோடும் மிரட்சியோடும் தலைகுனிந்து நிற்கும் தன் மகள் கோதையை, மாமனாரான நந்தகோபாலன், "அச்சம் தவிர், நிமிர்ந்து நில் (செம்மாந்திரு); இது உன்னுடைய இல்லமே" என்று கூறி தேற்ற வேண்டும் என்று ஆழ்வார் அடுத்த பாசுரத்தில் விரும்புகிறார். மேலும், சம்பந்தி மீதான பயமும் மரியாதையும் கலந்த உணர்வோடு, யசோதை பிராட்டி தன் மருமகளை உகந்து ஏற்று நல்வாழ்வு தருவாளா என்ற ஏக்கம் இப்பாசுரத்தில் தாயுள்ளத்தோடு மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஏன் அவ்வாறு ஒரு எண்ணம் உருவானது என்றால், தன் மகளை அரங்கனுக்குக் கொடுக்கும்போது ஆழ்வார் சந்தோஷமாக முன்னின்று கொடுக்கவில்லை. “ஒரே மகள் தன்னை உடையேன்” என்று அவரே பாசுரத்தில் கூறியுள்ளார், அதனை தாய் யசோதா மனதில் வைத்து தன் மகளுக்குண்டான சீர்மைகளை செய்யாமல் விட்டுவிடுவாளோ என்ற எண்ணம் தான் காரணம்.


இவ்வாறு ஒரு தாய்க்கே உரிய அச்சமும் அபிமானமும் கலந்து தோன்றிய எண்ணமே 'மணாட்டுப்புறம் செய்யுங்கொலோ' என்ற ஏக்கமாக வெளிப்படுகிறது.


தமிழின் சங்க இலக்கிய மரபில் உள்ள 'உடன்போக்கு' மற்றும் 'நற்றாய் இரங்கல்' துறைகளுடன் இப்பாசுரம் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. நற்றிணையின் 184வது பாடலான "ஒரு மகள் உடையேன் மன்னே..." என்று தொடங்கும் பாடலில், தன் மகள் கூர் வேல் காளையோடு பாலைவனத்தில் சென்றதைக் குறித்துத் தாய் கதறுகிறாள். ஆனால் வைணவ இலக்கியத்தில் இப்பிரிவு துயரமாக அமையாமல், பரமாத்மாவோடு ஜீவாத்மா இணையும் பேரின்பமாக மாறுகிறது.


பெரியாழ்வார் திருமொழியின் 3-8-4 பாசுரமானது, நற்றாயின் கவலையை அப்படியே தெய்வீகப் பின்னணியில் பொருத்திப் பாடிய ஒரு காவியப் படைப்பாகும். தன் ஒரே மகளைத் திருமகள் போல வளர்த்து, அவளைச் செங்கண்மாலுக்குத் தாரை வார்த்துக் கொடுத்த திருப்தியும், அதே சமயம் அவளது புகுந்த வீட்டு வாழ்வு சிறக்க வேண்டுமே என்ற நற்றாயின் நிலையில் பெரியாழ்வாரின் கவலையும் இதில் இழையோடுகின்றன. 


ஜீவாத்மா பரமாத்மாவோடு இணையும் உன்னதப் பயணத்திற்கு, ஆசாரியனாகிய பெரியாழ்வார் வழிகாட்டியாக அமைந்து, அவளைப் பரமாத்மாவின் திருக்குடும்பத்தினர் மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளும் காட்சியை இப்பாசுரம் வியாக்யான நயங்களுடன் நமக்குக் காட்டுகிறது. இப்பாசுரம் வைணவச் சரணாகதித் தத்துவத்தின் எளிய, ஆனால் ஆழமான கலைவடிவமாகத் திகழ்கிறது.


பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

🙏🙏🙇‍♂️🙇‍♂️

அடியேன்,

கோமான் ஶ்ரீ பாலாஜி


Post a Comment

புதியது பழையவை