அதிகப் பார்வை

“இன்ன வண்ணம் என்று காட்டீர்” - கோமான் ஶ்ரீ பாலாஜி

 ஶ்ரீ:

ஶ்ரீமதே இராமாநுஜாய நம:


முன்னை வண்ணம் பாலின் வண்ணம், முழுதும் நிலைநின்ற*

பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம், வண்ணம் எண்ணுங்கால்*

பொன்னின் வண்ணம், மணியின் வண்ணம் புரையும் திருமேனி*

இன்ன வண்ணம் என்று காட்டீர், இந்தளூரீரே! 


சோழ நாட்டுத் திருப்பதிகளுள் முதன்மை பெற்று விளங்கும் திருவிந்தளூர், காவிரி நதி பாயும் பரப்பில் அமைந்துள்ள ஐந்து முக்கிய அரங்கத் தலங்களுள் (பஞ்சரங்க ஷேத்திரங்கள்) ஒன்றாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் மூலவர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர், பன்னிரண்டு அடி நீளமுள்ள பச்சை மாணிக்கக் கல்லால் ஆன சயனத் திருக்கோலத்தில், கங்கை மற்றும் காவிரி தேவியர் முறையே தலைமாட்டிலும் கால்மாட்டிலும் அமர்ந்து அடிவருட, கிழக்கு நோக்கி யோக நித்திரையில் ஆழ்ந்துள்ளார்.


இத்தலத்திற்கு மங்களாசாசனம் செய்ய எழுந்தருளிய திருமங்கையாழ்வார், சந்நிதியின் கதவுகள் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு மிகுந்த மனவருத்தமும் கோபமும் அடைந்தார். இந்த ஆன்மீக ஊடல், வைணவ மரபில் 'பிரணய கலகம்' (பக்தனுக்கும் பகவானுக்கும் இடையிலான காதற் சண்டை) என்று வர்ணிக்கப்படுகிறது. 


எம்பெருமான் தனது வடிவழகைக் காட்டாமல் கதவைத் தாளிட்டுக் கொண்டபோது, கோபமுற்ற ஆழ்வார் "நீர் உமது அழகை உமக்கே வைத்துக் கொண்டு வாழ்ந்து போம்!" என்று சற்றே சினத்துடன் பாடினார். 


இத்தகைய பக்திப் போராட்டத்தின் உச்சகட்ட வெளிப்பாடாக அமைந்ததே பெரிய திருமொழியின் நான்காம் பத்தில் இடம்பெற்றுள்ள எட்டாம் பாசுரமான "முன்னை வண்ணம் பாலின் வண்ணம்" என்பதாகும்.


இப்பாசுரத்தின் சொற்களை அப்படியே வரிசையாகப் படித்துப் பொருள் கொள்வதை விட, பூர்வாச்சார்யர்கள் காட்டிய அன்வய முறையின்படி (வார்த்தைகளைச் சீரமைத்துப் பொருள் கொள்ளுதல்) ஆராயும் போது இதன் தத்துவார்த்த ஆழம் இன்னும் வெளிப்படுகிறது.


முதலில் எம்பெருமான் யுகங்கள் தோறும் பக்தர்களின் விருப்பத்திற்கேற்ப எடுத்துக்கொண்ட வடிவங்களை அன்வயம் செய்து கொள்ள வேண்டும்.


முன்னை வண்ணம் பாலின் வண்ணம் – கிருதயுகத்தில் கொண்ட வெண்மை நிறம்.


பின்னை வண்ணம் பொன்னின் வண்ணம் – திரேதாயுகத்தில் கொண்ட பொன்னிறம்.


மணியின் வண்ணம் – துவாபரயுகத்தில் கொண்ட மணி நிறம்.


முழுதும் நிலைநின்ற கொண்டல் வண்ணம் புரையும் திருமேனி – எக்காலத்திலும் நிலைபெற்ற இயற்கையான கார்மேக வண்ணத் திருமேனி. இதனை மேலும் விரிவாக பார்ப்போம்.


கிருதயுகம் – பாலின் வண்ணம்

கிருதயுகத்தில் தர்மமும் சத்துவ குணமும் மிகுந்திருந்தன. அக்காலத்தில் எம்பெருமான் பாலின் வெண்மையை ஒத்த திருமேனியோடு காட்சி அளித்தான். அதனாலேயே ஆழ்வார் "முன்னை வண்ணம் பாலின் வண்ணம்" என்று கூறுகிறார்.


திரேதாயுகம் – பொன்னின் வண்ணம்

திரேதாயுகத்தில் எம்பெருமான் பொன்னிறத் திருமேனியோடு விளங்கினான். "பொன்னின் வண்ணம்" என்ற சொல், அந்த யுகத்தில் அவன் கொண்டிருந்த ஒளிமிக்க திவ்ய மங்கள விக்ரஹத்தை உணர்த்துகிறது.


துவாபரயுகம் – மணியின் வண்ணம்

துவாபரயுகத்தில் எம்பெருமான் மணியை ஒத்த அழகிய நிறத்தில் சேவை சாதித்தான். ஆச்சார்யர்கள் இதனை மரகதம் அல்லது நீலமணி போன்ற ஒளிவாய்ந்த திருமேனி நிறமாக விளக்குகின்றனர்.


கலியுகம் – கொண்டல் வண்ணம்

கலியுகத்தில் எம்பெருமான் தனது இயற்கையான கார்மேக சுந்தர திருமேனியோடு விளங்குகிறான். யுகந்தோறும் பல்வேறு வண்ணங்களை ஏற்றுக்கொண்டாலும், எப்போதும் நிலைபெற்றிருக்கும் அவனது சொந்த திருமேனி நிறம் கொண்டல் வண்ணமே என்று ஆழ்வார் உணர்த்துகிறார்.


அதனால்தான், "பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம்” என்று கூறி, எல்லா யுக வண்ணங்களுக்கும் அடிப்படையாக இருப்பது அவனது கார்மேக சுந்தர திருமேனியே என்பதை நிலைநிறுத்துகிறார்.


இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே! - திருவிந்தளூரில் எழுந்தருளியிருக்கும் பரிமள ரங்கநாதரே! யுகந்தோறும் நீர் எடுத்த வெள்ளை, பொன்னிறம், மணிநிறம் ஆகிய வடிவங்கள் எனக்கு வேண்டாம்; எப்போதும் உமது இயற்கையான வடிவமாய் நிலைநின்ற அந்தக் கரிய கார்மேக வண்ணத் திருமேனி "இதுதான்" என்று அடியேனுக்குக் காட்டியருள வேண்டும்.


எம்பெருமான் யுகங்கள் தோறும் உயிர்களின் நிலைக்கும், யுகதர்மத்திற்கும் ஏற்ப வெவ்வேறு வண்ணங்களில் சேவை சாதிக்கிறான் என்ற கருத்தை இப்பாசுரம் மிக அழகாக விளக்குகிறது.


யுகங்கள் தோறும் எம்பெருமான் கொள்ளும் பல்வேறு வண்ணங்களை விளக்கும் விதமாகப் பூர்வாச்சார்யர்கள் மற்றொரு பாசுரத்தையும் திருமழிசையாழ்வாரின் திருச்சந்த விருத்தத்திலிருந்து மேற்கோள் காட்டுகின்றனர்:

"பாலிநீர்மை செம்புநீர்மை பாசியின் பசும்புரம் போலு நீர்மை பொற்புடை தடத்து வண்டு வெண்டுலாம் நீல நீர்மை” இப்பாசுரமும் எம்பெருமானின் திருமேனி நிறங்கள் முறையே பால் போன்ற வெண்மை, செம்பு போன்ற சிவப்பு, பாசி போன்ற பச்சை, வண்டு மொய்க்கும் நீலம் அல்லது கருமை என்று விளங்குவதை எடுத்துரைக்கிறது. இவ்வாறு பல்வேறு வண்ணங்களில் சேவை சாதித்தாலும், அவற்றிற்கெல்லாம் ஆதாரமாக இருப்பது அவனது நித்யமான கார்மேக சுந்தர திருமேனியே ஆகும்.


ஸ்ரீ உத்தமூர் ஸ்வாமிகளின் வியாக்யானத்தின்படி, ஆழ்வாரின் பக்தி வேட்கைக்கு இணங்கிய எம்பெருமான் அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறான். “நீர் ஏற்கனவே என்னைக் 'காசின் ஒளியில் திகழும் வண்ணம்' என்று சற்று முன்னர் பாடி அனுபவித்த பிறகு, மீண்டும் 'உனது வடிவத்தைக் காட்டு' என்று கதவைத் தட்டக் காரணம் என்ன?” என்று எம்பெருமான் வினவுகிறான். 


அதற்கு ஆழ்வார், "முன்பு நான் அவ்வாறு பாடியது உமது சுயம்பிரகாசத் தன்மையையும் (ஸ்வயம் பிரகாசத்துவம்), தேவரீரோடு எப்போதும் பிரியாது உறையும் பிராட்டியின் சந்நிதானத்தை நிலைநிறுத்துவதற்காகவுமே ஆகும்" என்று பதிலளிக்கிறார்.


யுகங்கள் தோறும் எம்பெருமான் கொள்ளும் நிறங்கள் அவனது வ்யூஹாவதார நிலையை அடிப்படையாகக் கொண்டவை. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, உத்தமூர் ஸ்வாமிகள் தனது வியாக்யானத்தில் நான்முகன் திருவந்தாதியின் 24-வது பாசுர வரிகளான "நிகழ்ந்தாய் பால்போன்பசுப்புக்கார்வண்ணம்நான்கும்" என்பதை மேற்கோள் காட்டுகிறார்.


எம்பெருமான் ஏன் இயற்கையிலேயே கரிய கொண்டல் வண்ணனாகக் காட்சி அளிக்கிறான் என்பதற்குப் ஸ்வாமி வேதாந்த தேசிகர் பல கவித்துவமான விளக்கங்களை அருளியுள்ளார். மகாலக்ஷ்மி தாயாரின் கருந்தடங்கண் பார்வை, யமுனை நதியுடனான அவனது தொடர்பு, அவனைச் சூழ்ந்த வண்டுகளின் கருமை, ஆதிசேஷன் மீது அவன் வீசும் கருநிற ஒளி ஆகியவை அவற்றுள் சில. இவை அனைத்தும் எம்பெருமானின் கார்மேக சுந்தர வடிவத்தை இன்னும் அழகுபடுத்தும் பக்தி அனுபவங்களாகும்.


இத்தகைய ஒப்பற்ற வடிவழகைக் கொண்ட எம்பெருமானை, மனித முயற்சியால் மட்டும் கண்டுவிட முடியாது. உபநிடதங்கள் கூறும் "நாயமாத்மா பிரவசநேந லப்யோ..." என்ற கோட்பாட்டின்படி, எம்பெருமான் எவருக்கு அருள் புரியத் திருவுள்ளம் கொள்கிறானோ, அவனுக்கே தன் வடிவைக் காட்டியருளுவான். அதனாலேயே ஆழ்வார், தனது சுயமுயற்சியைக் கைவிட்டு, "இன்ன வண்ணம் என்று காட்டீர்" என்று அவனது அருளையே சரணடைகிறார்.


தமிழ் இலக்கியப் பரப்பில் 'வண்ணம்' என்ற சொல்லைப் பல்வேறு நயங்களுடன் கையாள்வதில் ஆழ்வார்களுக்கு நிகராக விளங்குபவர் கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஆவார். விசுவாமித்திர முனிவர், கல்லாகக் கிடந்த அகலிகை இராமனின் திருவடி தூசி பட்டுச் சாப விமோசனம் பெற்று எழுந்ததைக் கண்டு வியந்து பாடும் 'வண்ணப் பாடல்’ அதற்கு சான்று. 


திருமங்கையாழ்வார் வண்ணங்களை அடுக்கிச் சொல்லும் இந்தப் பாணியை நினைவூட்டும் வகையில் கம்பனும்,

"இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்; இனி, இந்த உலகுக்கு எல்லாம் 

உய்வண்ணம் இன்றி, மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ? 

மை வண்ணத்து அரக்கி போரில், மழை வண்ணத்து அண்ணலே! உன் 

கை வண்ணம் அங்குக் கண்டேன், கால் வண்ணம் இங்குக் கண்டேன்!”


மானுட இயல்பில், நாம் கோபத்தையோ வெறுப்பையோ உமிழும்போது காலால் உதைப்பதும், அன்போடு அணைத்து அரவணைக்கும்போது கைகளைப் பயன்படுத்துவதும் இயல்பான செயலாகும். ஆனால், இராம அவதாரத்தில் இத்தன்மை நேர்மாறாக நிகழ்கிறது. அதனை கம்பர் நயம்பட விளக்குகிறார்.


கை வண்ணம்: கொடுங்குணம் கொண்ட தாடகையை வதைக்கும்போது, கோபத்துடன் தனது வில்லாற்றலைக் காட்டக் கைகளைப் பயன்படுத்தினான் (மை வண்ணத்து அரக்கி போரில் கண்ட கை வண்ணம்).


கால் வண்ணம்: சாபத்தால் கல்லாய் சமைந்து கிடந்த அகலிகைக்கு அருள் புரிந்து அவளை மீட்டெடுக்கத் தனது மென்மையான திருவடிகளைப் பதிய வைத்தான் (கால் வண்ணம் இங்குக் கண்டேன்!).


இவ்வாறு, கோபத்திற்கு உரிய அரக்கியிடம் கையின் திறத்தையும், அன்பிற்கு உரிய அகலிகையிடம் காலின் அருளையும் காட்டிய இராமனின் இந்த முரண் நயப் போக்கினை விசுவாமித்திரர் வியந்து போற்றுகிறார். இந்த இலக்கிய நயம், திருமங்கையாழ்வார் எம்பெருமானின் பல்வேறு வண்ணங்களைக் கண்டு வியந்து பாடிய பாசுரத்தை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.


திருமங்கையாழ்வாரின் "முன்னை வண்ணம் பாலின் வண்ணம்" திருப்பாசுரம், வெறுமனே ஒரு கோயிலின் மூடிய கதவுகளுக்கு முன்னால் பாடப்பட்ட பாடல் அன்று. அது பரத்துவமும் எளிமையும் கொண்ட எம்பெருமானின் அனந்த கல்யாண குணங்களையும், யுகங்கள் தோறும் ஆன்மாக்களைக் காக்க அவன் கொள்ளும் வடிவங்களையும் விளக்கும் உன்னத தத்துவக் கருவூலமாகும். 


ஸ்ரீ உத்தமூர் ஸ்வாமிகளின் வியாக்யானங்கள் மற்றும் ஆச்சார்ய உபந்யாசங்களின் வழி எம்பெருமானுக்கும் ஆழ்வாருக்கும் இடையிலான பரஸ்பர அன்பு மற்றும் உரிமைப் போராட்டம் துலக்கமாகிறது. பாசுரத்தின் கம்பீரமான 'ண'கர ஒலியமைப்பும், கவிச்சக்கரவர்த்தி கம்பனின் இராமாயணச் சொல்லாட்சிக்கு அது இட்ட இலக்கிய வித்தும் இப்பாசுரத்தின் கலை நயத்திற்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன. 


இறுதியில், ஆழ்வாரின் பக்திக்கும் பிடிவாதத்திற்கும் கட்டுப்பட்டுப் பரிமள ரங்கநாதர் தனது திருக்கதவைத் திறந்து சேவை சாதித்தது போல, தூய பக்திக்கும் சரணாகதிக்கும் மட்டுமே எம்பெருமான் தன் உண்மையான வடிவைக் காட்டியருள்வான் என்ற பேருண்மையை இப்பாசுரம் நமக்கு உணர்த்துகிறது.


திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.

🙏🙏🙇‍♂️🙇‍♂️

அடியேன்,

கோமான் ஶ்ரீ பாலாஜி

Post a Comment

புதியது பழையவை