சனி, 2 மே, 2020

ஆழ்வாராசார்யர்கள் காட்டும் வாழ்க்கை நெறிகள் - 21 - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி

ஆழ்வார்கள் கண்ட வாமனன்

பகவானின் அவதாரங்களில் வாமன அவதாரம் சிறந்ததொரு அவதாரம் ஆகும். அவதாரம் என்றாலே மேலே இருந்து கீழே இறங்கி வருவது. அவதாரங்களின் நோக்கம் தர்மத்தை நிலைநாட்டுவதாகும். வாமன அவதாரமும் திருவிக்கிரம அவதாரமும் ஒரே அவதாரத்தின் ஆதி அந்தங்கள். வாமனன் விதை என்றால் திருவிக்கிரமன் விருட்சம். வாமனன் மூன்றடி மாணிக்குறளன் எனில் திருவிக்கிரமன் ஓங்கி உலகளந்த உன்னத வடிவினன். ஆழ்வார்கள் இரண்டு அவதாரங்களைத் தனித்தனியாகவும் சேர்த்தும் பாடிப் பரவியிருக்கிறார்கள். பீஷ்மாச்சாரியார் தமது விஷ்ணு சகஸ்ர நாமத்திலே "வாமன - திருவிக்கிரம" என்று இரண்டு திருநாமங்களையும் கொண்டாடுகின்றார். மிக முக்கியமான துவாதச (பன்னிரண்டு) நாமங்களிலே இரண்டு திருநாமங்களும் இடம் பெற்றிருப்பது ஒன்றே இந்த அவதாரத்தின் மேன்மையைப் புரிந்து கொள்ளப் போதுமானதாகும்.

பெரியாழ்வார் இந்த அவதாரத்தை வரிசையிட்டுச் சொல்ல வருகின்ற பொழுது "அன்னமும் மீன் உருவும் அரியும் குறளும் ஆமையும் ஆனவனே" என்று (பெரியாழ்வார் திருமொழி 1.7.11) பாடுகின்றார்.

சங்க இலக்கியத்திலேயே வாமனன் பெருமை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. வாமன அவதாரம் நிகழ்ந்தது ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில். இன்றும் இந்நன்னாள் கேரளத்தில் ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில் இது திருமாலின் திருநாள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.

“கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார் மாயோன் மேய ஓண நன் நாள்” -மதுரைக்காஞ்சி அடிகள் 590 முதல் 592 வரை. 

இனி வாமன அவதாரத்தின் பின்புலத்தைக் காண்போம்.


மகாபலிச் சக்கரவர்த்தி தீவிரமான விஷ்ணு பக்தனான பிரகலாதனின் பேரன். ஒருமுறை அவன் மிகப் பெரிய யாகம் ஒன்றை நடத்தினான். அந்த யாகம் தனக்கு ஆபத்தாக முடியும் என்று அஞ்சிய இந்திரன் மகா விஷ்ணுவிடம் முறையிட்டான். இந்திரனுக்காக விஷ்ணு கச்யபர் அதிதிக்கு மகனாகத் தோன்றினார். மகரிஷிகள் அவருக்கு வாமனன் என்று திருநாமமிட்டு உபநயனம் செய்து வைத்தார்கள். உபசாரமாக கதிரவன் அவருக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசித்தான். பிரகஸ்பதி பிரம்ம சூத்திரத்தை (பூணூல்) கொடுத்தார். சந்திரன் தண்டத்தை அளித்தார். பிரம்மா கமண்டலம் வழங்கினார். குபேரன் பிச்சை பாத்திரம் கொடுத்தான். உபேந்திரன் என்ற பெயரோடு குள்ளமான வாமன உருவத்துடன் யாகசாலைக்கு வந்தார்.

சியாமள மேனி. கையில் குடை. திருவடியில் பாதரட்சை. காதில் மகர குண்டலம். நெஞ்சிலே ஸ்ரீவத்சம். கைவளை. தோள்வளை. இடையிலே மேகலை. மஞ்சள் பட்டாடை. கழுத்திலே வண்டுசூழ் துளப மாலை கௌஸ்துப மணி. அவனை விட்டு என்றும் பிரியாத மகாலட்சுமித் தாயார் மார்பில் இருக்க அதனை மான் தோலால் மறைத்துக் கொண்டு யாக சாலைக்கு வந்தாராம். உடனே யாகசாலை ஒளிமயமானது. எங்கும் பிரகாசம். மகரிஷிகள் யாகம் செய்வதை நிறுத்தி விட்டு பகவானையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள்.

வாமன பகவான் மாவலியின் வேள்விச் சாலைக்கு எப்படி வந்தார் என்பதை,

"கண்டவர்தம் மனம்மகிழ மாவலி தன் வேள்விக்களவில் மிகு சிறு குறளாய்" - பெரிய திருமொழி 
என்று வர்ணிக்கிறார் திருமங்கையாழ்வார். 

பலிச்சக்கரவர்த்தி அவரை அன்புடன் வரவேற்றான். அர்க்கிய பாத்யாதிகளை தந்து பூஜித்து முறையாக ஆசனம் அளித்தான்.

மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டார். எப்படிக் கேட்டானாம்? பிட்சையாகக் கேட்டானாம்.

"மூவடி மண் என்று இரந்திட்டு" என்கிறார் திருமங்கையாழ்வார். மிகுந்த செருக்குடன் இருந்த மகாபலி அம்மண்ணை தரச் சம்மதம் தெரிவித்தான்.

உடனடியாக பகவான் விண்ணுக்கும் மண்ணுக்குமாய் திரிவிக்கிரம அவதாரம் எடுத்து ஒரு திருவடியால் மண்ணுலகையும், ஒரு திருவடியால் விண்ணுலகையும் அளந்து மூன்றாவது அடியை, மகாபலி தலையில் வைத்து, அவனுடைய அகந்தையை ஒழித்து. அவனை பாதாள உலகத்துக்கு அனுப்பினார்.

ஆண்டாள் இவரை “உத்தமன்” ( ஓங்கி உலகளந்த உத்தமன் - திருப்பாவை) என்று கொண்டாடுகிறாள். உலகத்தில் நான்கு விதமான மனிதர்கள் வாழ்கிறார்கள். பிறரையும் துன்புறுத்தி தானும் துன்பப்பட்டு கிடப்பவன் அதமா. தான் மட்டும் வாழ்பவன் அதமன். பிறரையும் வாழ வைத்து தானும் வாழ்பவன் மத்திமன். தன்னையே கொடுத்துப் பிறரை வாழ வைப்பவன் உத்தமன்.

இந்திரனுக்காக ஆயுதம் எடுக்காமல் சகல உலகங்களுக்கும் சகல செல்வங்களுக்கும் அதிபதியான பகவான் மாணிக்குறளனாய் (குள்ள உரு பிரமசாரி) தன் பெருமையை தாழ விட்டுக் கொண்டு வந்த தால், அவனை “உத்தமன்” என்று கொண்டாடி, அவனுடைய திருவடிகளுக்குப் பல்லாண்டு பாடுகிறாள் கோதை நாச்சியார்.

திருமங்கையாழ்வார் காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி திருத்தலத்துக்கு) வந்தவுடன், அவரை ஞான சம்பந்தர் ஒரு குறள் பாடுக என்று கேட்டவுடன், அதையே முதல் அடியாகக் கொண்டு, வாமன அவதாரத்தில் தொடங்கி திருவிக்கிரம அவதாரத்தில் முடிக்கிறார்.

"ஒரு குறளாய் இருநிலம் மூவடி மண் வேண்டி உலகனைத்தும் ஓரடியால் 
ஒடுக்கி ஒன்றும் தருகவெனா மாவலியை சிறையில் வைத்த தாடாளன்" 
என்று கொண்டாடுகின்றார்.

ஆண்டாள் தான் விரும்பிய திருவரங்கச் செல்வனை வாமனனாகவே காண்கின்றார்.
''மச்சணி மாட மதிளரங்கர் வாமனர்'' என்பது நாச்சியார் திருமொழி.

வாமனனைப் பார்த்தவுடன் இவன் சிறுவன்தானே இவனால் எந்த அளவுக்கு நிலத்தை அளந்து கொண்டு விட முடியும். நம்மிடம் ஏராளமான நிலம் இருக்கிறதே என்று நினைத்த மாவலியின் கொட்டம் அடங்க அனைத்து உலகங்களையும் தான் அளந்து கொண்டான். வந்தது ஒரு உருவம் (வாமனன்), கொண்டது வேறு ஒரு உருவம் (திருவிக்கிரமன்) என்பதினால் வாமன உருவத்தைப்பாடுகின்ற ஆண்டாள் செல்லமாகப் “பொல்லாக்குறள் உரு” என்று பாடுகின்றார்.

“பொல்லாக் குறள் உருவாய் பொய்கையில் நீரேற்று 
எல்லா உலகும் அளந்து கொண்ட எம் பெருமான்.”      - நாச்சியார் திருமொழி 

பொய்கை என்கிற பதத்தில் ஒரு சின்ன நயத்தையும் நாம் பார்க்கலாம். இந்த கை மெய்யான கையல்ல. பொய் கை. வாமனனின் சின்னஞ்சிறு கையல்ல. உண்மையில் அந்தக் கை இந்த உலகத்தையே அளக்கக் கூடிய மண்ணுக்கும் விண்ணுக்குமாக வளரக்கூடிய பெரும் கை.

ஆண்டாளைப் போலவே திருமங்கையாழ்வார் வாமனனைக் குறிப்பிடும் போதெல்லாம் கள்ளன் என்ற பதத்தையிடாமல் குறிப்பிடுவதில்லை.

"கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்த" - பெரிய திருமொழி 5.1.5. & 5.1.2

"கூற்றேர் உருவின் குறளாய் நில நீர் ஏற்றான்" (பெரிய திருமொழி 5.2.4) இவையெல்லாம் சில உதாரணங்கள். 

இன்னும் நிறைய உண்டு.

இந்த மண்ணை நமதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். நம் பேரில் பட்டா போட்டுக் கொள்கிறோம். பட்டா செய்து கொடுத்தவனும் உரிமையாளன் அல்ல. பட்டா பெற்றவனும் உரிமையாளன் அல்ல. உண்மையில் இந்த மண், இந்த உலகம், இந்த அண்டாதி அண்டங்கள் எல்லாம், பகவானின் உடைமைகள் அல்லவா. அவன் சொத்தை நாம் அபகரித்து நம்முடைய பெயரிலே சாசனப்படுத்திக் கொள்கிறோம். இது இயல்பாக நடக்கிறது.

நம்மாழ்வார் சுவையான, ஆனால், உண்மையான ஓர் கருத்தைச் சொல்கிறார். எல்லோரும் ஏதோ வாமனன் மாவலியை வஞ்சித்து மண் கவர்ந்ததாகச் சொல்கிறார்கள். இது சரியா... மாவலி உண்டாக்கிய உலகமா இது. பகவான் படைத்த அவனுக்குரிய நிலமல்லவா இது. தன் நிலத்தை தானே இரந்து பெற வேண்டிய நிலையை எண்ணி இரங்காது வஞ்சித்தான் என்பது எப்படி நியாயமாகும் என்று கேட்கிறார்.

இதைப் பெண் தன்மை ஏறிட்டு பராங்குச நாயகியாக நம்மாழ்வார் பாடுகிறார். 

“மண்ணை யிருந்து துழாவி வாமனன் மண்ணிது என்னும் 
விண்ணைத் தொழுது மேவு வைகுந்தம் என்று கைகாட்டும்”      திருவாய்மொழி 4.4.1 

மண் என்பது லீலா விபூதி. விண் என்பது நித்ய விபூதி. இரண்டும் அவனுடையது என்று நாயகி சொல்லும் நயத்தில் வாமனனின் சீர்மை வெளிப்படுகிறது.

முதல் மூன்று ஆழ்வார்களுக்குமே வாமன அவதாரத்தில் ஈடுபாடு அதிகம். பொய்கையாழ்வார் தமது முதல் திருவந்தாதியில் வாமன அவதாரத்தையும் நரசிம்ம அவதாரத்தையும் இணைத்து ஒரு அற்புதமான செய்தியைச் சொல்கிறார். பாசுரம் இது. 

“முரணை வலிதொலைதற்காமன்றே, முன்னம் தரணி தனதாகத் தானே 
இரணியனைப் புண்நிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால், நீ 
மண்ணிரந்து கொண்ட வகை?”   - முதல் திருவந்தாதி 36 

வாமன அவதாரத்திற்கு முற்பட்டதான நரசிம்ம அவதாரத்தில் பூமியை தன்னுடையதாக நினைந்து இருக்கக்கூடிய இரணியனை கூர்மையான நகங்களாலே கிழித்து உலகத்தை மீட்டவன் ஏன் மகாபலிக்கு தண்டனை தரவில்லை என்பது கேள்வி. இதற்கு என்ன பதில்? மகாபலியை விட்டு வைத்ததற்கு காரணம் இரணியனைப்போல அவனுக்கு பகவானிடத்திலே பகை இல்லை. பாகவத அபசாரம் இல்லை. வள்ளல்தன்மை உடையவனாகவும் இருந்தான் என்பதற்காக அவனிடம் சென்று பகவான் யாசித்தானாம்.

வாமனனின் பாதத்தை “மண்ணளந்த பாதம்” என்ற நான்முகன் திருவந்தாதியில் திருமழிசை ஆழ்வாரும் கூறுகின்றார். வாமனன் திருவடிகளைச் சேர்பவர்களுக்கு நிச்சயம் நரக வாசம் கிடையாது என்று இரண்டாம் திருவந்தாதியில் (இரண்டாம் திரு.21) பூதத்தாழ்வார் பாடுகின்றார். வாமனனைப் புகழ்வதுதான் இந்த வாய்க்கு உணவாகும் என்று பெரிய திருவந்தாதியில் (பாசுரம் 52) நம்மாழ்வார் போற்றுவதோடு வாமனனைப் புகழ்வதே பிறவிப் பிணி நீக்கும் மருந்து (மண்ணளந்தான் நங்கள் பிணிக்கு மருந்து) என்று பாடுகின்றார்.

இனி சில வாமன தலங்களைச் சிந்திப்போம். கேரளாவில், திருக்காட்கரைகாட்கரையப்பன் கோயில், மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து நிலத்தில் மகாபலியை அழுத்திய தலம் என்பர்.

திருவெள்ளியங்குடி: மாபலி தானம் தரும் போது, ஒரு வண்டாகித் தடுத்ததால் ஒரு கண்ணை இழந்த சுக்கிரன் தவமிருந்து மீண்டும் கண்ணைப் பெற்ற திருத்தலம். வெள்ளி என்ற சுக்கிரனின் பெயரோடு வழங்குகிறது. இத்தலம் கும்பகோணம் அருகில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதியுண்டு. மிக்க பெருபுகழ் மாவலி வேள்வியில், "தக்கது இது அன்று" என்று தானம் விலக்கிய "சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக் கையனே அச்சோ அச்சோ சங்கமிடந்தானே அச்சோ அச்சோ."
என்று இந்த வரலாற்றைப் பாடுகிறார், பெரியாழ்வார் (1:9:7).

சீர்காழி : மூலவர் திரிவிக்கிரமன். தாடாளன். தாள்+ஆளன்; தன் தாள்களால் உலகை அளந்த தாளாளன்; தாடாளன். மாபலி யாகம் செய்த இடத்தில், தானும் யாகம் செய்ய விசுவாமித்திரர் விரும்பினார். யாகம் முடியும் வரையில் இடையூறுகள் வாராமல் காக்க இராமலக்குவர்களைத் துணைக்கு அழைத்ததாக வான்மீகி கூறுவார்.

திருக்குறுங்குடி : திருநெல்வேலியிலிருந்து தென் மேற்காக நாற்பத்தேழு கி.மீ. தூரத்திலுள்ள வாமனத் திருத்தலம். ஆகவே இதற்குக் குறுங்குடி என்ற திருப்பெயர் அமைந்தது.

திருவரங்கம் : அரங்கநாதர் கோவிலில் வாமனனுக்குத் தனிச் சந்நிதி உள்ளது.

வாமனன் எங்கே வசிக்கிறார் என்று சொன்னால் நிச்சயமாக திருமலையிலே நின்று கொண்டு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார் என்பதை மூன்றாம் திருவந்தாதியில் காட்டுகிறார் பேயாழ்வார்.

“தெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி அளிந்த கடுவளையே நோக்கி 
விளங்கிய வெண்மதியம் தாவென்னும் வேங்கடமே மேலொரு
நாள் மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு”   - மூன்றாம் திருவந்தாதி 58 

அழகான கற்பாறையின் மீது அமர்ந்திருந்த பெண் குரங்கு (மந்தி) தனது துணையான ஆண் குரங்கைப் பார்த்து தனது கூர்ந்த மதியால் மாவலியிடம் இருந்து இவ்வுலகத்தை அளந்து பெற்றுக் கொண்டு மகிழ்ந்த வாமனன் திருத்தலமாகும் திருமலை என்று பாடுகின்றார் பேயாழ்வார்.

வெண்மதி என்பதற்கு தெளிந்த அறிவு அல்லது ஞானம் என்றும் பொருளுண்டு. அந்த அறிவைப் பெற வாமனனைப் போற்றுவோம். திருமலையை ஏற்றுவோம். உத்தம வாமனனின் திருவடிக்குப் பல்லாண்டு பாடுவோம்.

வாழ்க்கை நெறிகள் வளரும்.....

நன்றி - சப்தகிரி செப்டம்பர் 2019

நன்றி - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி, புவனகிரி +919443439963

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக