சனி, 2 மே, 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 23 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் – 13

கைங்கர்யத்திற்காகவே ஶரீரம்:

அதெல்லாம் சரி. பாபத்துக்குக் காரணம் இந்த ஶரீரம்தானே. அதை விட்டுவிடவேண்டியது தானே என்று எம்பெருமானாருக்குத் திருவுள்ளமாக, ஶரீரம் இருக்கவேதானே காமம் மற்ற விவகாரங்கள் எல்லாம். ஆகவே ஶரீரத்தைப் போக்கிக் கொள்ளலாமே என்று கேட்பது போல நினைத்து, போக்கிகொள்ளலாம். ஆனால் உமக்குக் கைங்கர்யம் பண்ணமுடியாதே. தியானம் பண்ணனும் என்றாலும் முடியாது. இந்த ஶரீரத்தில் இப்படியும் இல்லாத, அப்படியும் இல்லாத ஒரு நிலை பாருங்கள். இதை வைத்துக் கொண்டுதான் கைங்கர்யம் செய்யவேண்டும். ஆனால் இது இருக்கவேதான் கைங்கர்யம் பண்ண விடமாட்டேன் என்கிறது. 

கோவிலுக்குப் போய் தர்ஶனம் பண்ண கண் வேண்டும். தியானம் பண்ண மனஸ் வேண்டும். சரி கண்ணும், மனஸ்ஸும் இருக்கிறதே, அதுதான் வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டு தியானிக்கவோ, சேவிக்கவோ விடமாட்டேன் என்கிறது. சரி. வேணுமா? வேண்டாமா? அதான் தெரியவில்லை. வேணும். அதில் உள்ள நல்லதெல்லாம் வேணும். 

வலைதளங்கள் தேவையா? 

வலைத்தளங்கள் இருக்கிறது வேணுமா என்றால் அதில் கெட்டவைகளும் நிறைந்திருக்கின்றதே. அதை விட்டுவிட்டு நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது போல உடலை நல்லதற்கு மட்டும் பயன்படுத்த வைத்துக்கொள்ள வேண்டும். தீமையும், நன்மையும் கலந்துதான் எல்லாம் இருக்கும். ஆகவே தீமையை விலக்கிவிட்டு நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும். தீமை கலப்பில்லாத ஒரே இடம் வைகுண்டம் மட்டுந்தான்.

சாப்பாட்டில் மோகம் 84 வயதிலும்:

அதைத்தான் பெரிய ஜீயர் சொல்லிக்கொண்டிருக்கிறார். பாபக் குவியலாலே என்னுடைய ஶரீரத்தை விட்டுவிடவேண்டும் என்பதில் அபேக்ஷை பிறக்கிறதில்லை. ஶரீரத்தை தொலைக்கத் தோன்றாததற்கும் எனக்கு இருக்கும் காம அனுபவம்தானே. 84 வயதானவர் இன்னும் ஒரு ஆறு மாதம் இருந்தால் பரவாயில்லை என்கிறார். என்ன விஷயம் என்று கேட்டால் இன்னும் இரண்டு மாதத்தில் ஒரு கல்யாணம் வருகிறது. அதில் சாப்பாடு நன்றாக இருக்கும் என்கிறார். சாப்பாட்டில் அவ்வளவு காமம் அல்லது பிரியம். அந்தக் குழந்தைகளை ஆசீர்வதிக்கணும் என்று சொன்னால்கூட தேவலை. ஆனால் சாப்பாட்டுப் பிரியமே தலைதூக்கி நிற்கிறது. அனுபவிக்கனும் என்ற ஆசை இருக்கிறவரை ஶரீரத்தில் எப்படி விருப்பத்தை விடமுடியும். 

ஆகவே ஒன்று செய்யுங்கள். தேவரீரே அந்த ஆசையையும், ஶரீரத்தையும் போக்கிவிடும். கர்மங்களையும் நீரே தொலைத்துவிடும். ஈசன் திருவடிகளையும் நீரே பெற்றுக் கொடும். இதிலே அடியேன் பண்ணுவதற்கு எதுவுமே இருக்கிறதா தெரியலை என்ற பிரார்த்தனை இப்போது 13 வது ஸ்லோகத்தில்:


तापत्रयीजनितदुःखनिपातिनोSपि देहस्थितौ मम् रुचिस्तु न तन्निव्रुत्तौ ।
एतस्य कारणमहो मम पापमेव नाथ! त्व्मेव हर तध्यतिराज! शीघ्रम् ॥ (13)

தாபத்ரயீஜநித து:க நிபாதிநோSபி
தேஹஸ்திதௌ மம ருசிஸ்து ந தந்நிவ்ருத்தௌ |
ஏதஸ்ய காரணம் அஹோ மம பாபமேவ
நாத! த்வமேவ ஹர தத் யதிராஜ! ஸீக்ரம் || (13)

ஹே யதிராஜ நாத!, த்வம் ஏவ தத் ஸீக்ரம் ஹர – யதிகட்கு இறைவரே, ஸ்வாமீ!, தேவரீரே அப்பாபத்தைப் போக்கியருளும். 

ஸ்வாமி கேட்கிறார்: நான் ஏன் போக்கியருளணும். அதற்குத்தான் ம்ருத்யு தேவதை, கால தேவதை எல்லாம் இருக்கிறார்களே. என்னைப்போய் ஸம்ஹாரக் கடவுளாக்கி விட்டீர். என் வேலை அதுவல்ல. நம் வேலை ஞானத்தைக் கொடுப்பது என்றார்.

ஞானத்தைக் கொடும்

அதுக்காகச் சொல்லவில்லை. எனக்கு சரியான ஞானத்தைக் கொடுத்து விட்டால் இந்த ஶரீரம் (த்யாஜ்யம்) விடத்தக்கது. பெருமாள் திருவடியே (ஊத்தேஶ்யம்) ஆஶ்ரயிக்கத் தக்கது என்று புரிந்துகொண்டு விடுவேன். இப்பொழுது அந்த மோஹத்தில் தவித்துக் கொண்டிருக்கின்றேன். நீர் பளிச்சென்று சூரியனாட்டம் அந்த மோஹத்தைப் போக்கிவிடும். காலையில் 5.45 மணி. இன்னும் சூரியன் உதிக்கவில்லை. வெளிச்சம் அவ்வளவாக இல்லை. மச மச என்று இருக்கிறது. சூரியன் உதித்துவிட்டால் அந்த மசமசப்பு போய் நன்கு ஒளி வந்து விடுமல்லாவா? அது போல நானும் மச மச என்று இருக்கின்றேன். தேவரீருடைய உபதேசம்தான் ஞானத்தைக் கொடுக்க வேண்டும். நீர் ராமானுஜர் என்னும் மெய்மதிக் கடல். (ஞானக் கடல்). உமக்குத் தெரியாத விஷயமா? எனக்கு எதைச் சொன்னா காமத்திலிருந்து விடுபடுவேன் என்று பாரும். அதைச் சொல்லும். “நான் எதுக்காக பண்ணவெண்டும்.” நீர் என் ஸ்வாமி. ஆகவே செய்யவேண்டும். நீர் நாதனாகவும் நான் தாஸனாகவும் இருக்கிறதனாலே நீரே அனுக்ரஹிக்கவேண்டும். “மெதுவா பண்ணுவோம்” என்றார் ராமானுஜர். 

ஹர ஸீக்ரம் – மெதுவாக என்றால் இந்த ஆத்மா தங்கணுமே. அதனால் சீக்கரமாக பண்ணும். இதே விஷயத்தை விபீஷணன் சுக்ரீவனிடம் பிரார்த்திக்கிறான் “நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணம் உபஸ்திதம், ஸர்வலோக ஶர்ண்யாய ராகவாய மஹாத்மனே” நான் வந்திருக்கின்றேன் என்று ராமனிடத்திலே சீக்கிரம் போய்ச்சொல்லுங்கள். மெதுவாச் சொல்லுகிறேன் என்றான் சுக்ரீவன். மெதுவாச் சொல்றவரை நான் தரிக்கணுமே, இன்று நல்லெண்ணம் வந்திருக்கிறது. அவரைப் பற்றவேண்டும் என்று. நாளைக்கு அது இருக்கும் என்று தெரியாதே. ஆகவே சீக்கிரம் சொல்லுங்கள்” என்றார் விபீஷணன்.

இன்றே இப்போதே ஶரணாகதி செய்: 

நல்லெண்ணம் இருக்கும்போதே ஶரணம் என்று சொல்லி விடவேண்டும். இதனால்தான் நாளைக்கு என்று வைக்காதே.. இன்றே செய்க. இப்போதே செய்க. அதனால் ராமானுஜரே ஹர ஸீக்ரம். சீக்கிரமாக போக்குவீராக. நான் எப்போதும் நல்லவனாய் இருப்பேன் என்று தெரியாது. இப்போது இசைந்து வந்திருக்கிறேன். இந்த சமயத்தில் போக்கிவிடும். 

யதிராஜர் என்கிறதில்: யதி என்றால் புலன்களை அடக்கியவர். யதிராஜர் என்றால் புலன்களை அடக்கியவர்களுக்குள் தலைவர். எப்ப நீர் அடக்கியிருக்கிறீரோ அப்ப எனக்கும் நீர் அடக்கிவைப்பது கஷ்டமா? சன்னியாஸ குல சக்கரவர்த்தியே! நமக்கும் அந்த நல்லதை ஏற்படுத்தும். ஆபத்தைத் தொலைத்துவிடும். உடனே ஶரீரத்தில் இருக்கும் ஆசை போய்விடும். அந்த ஆசை போய்விட்டாலே காமத்திலிருக்கும் ஆசை போய்விடும். அந்த ஆசை போய்விட்டால் நான் உம்முன்னால் வந்து நின்றுவிடுவேன். உம் முன்னால் வந்துவிட்டால் நீர் உபதேசித்துக் கூட்டிக் கொண்டு போய்விடுவீர். நோய் நாடி நோய் முதல் நாடி என்பது போல உம்மிடம் வராததற்குக் காரணம் கண்டாயிற்று. அதற்கு உரியதை நீர் செய்யவேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.

சுகங்களையும் நான் அனுபவிக்கனும் – எண்ணம் கூடாது:

ஶரீரத்தைப் போக்கிக் கொள்வதற்கு நமக்கு யோக்யதை கிடையாது. அதைச் சொல்லவில்லை. ஶரீரத்தில் இருக்கிறோம். நன்றாக சுகத்தை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை போய்விட்டால் காமத்தில் இருக்கும் பற்றும் போய்விடும். சுகம் என்பது சாப்பாட்டு சுகமாகவோ, காம சுகமாகவோ, கண், காது முதலான புலன்களுக்கான சுகமாக இருக்கலாம். சௌக்யமாக எல்லாவித சுகங்களையும் நான் அனுபவிக்கணும் என்ற விருப்பம் போய்விட வேணும். ஏதோ ஒரு தீய பழக்கம் இருக்கிறது. அந்தப் பழக்கத்தினால் நமக்கு சந்தோஷம் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம். 

ஒருவருக்குபுத்தி ஸ்வாதீனத்தில் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் தானே தன்னை அடித்துக் கொள்வார். தானாகவே ஏதாவது முணகுவார். இப்படியா மனிதன் பன்னுவார் என்று கேட்டால் அவருக்கு தான் பன்னிக்கிறதெல்லாம் நல்லதாகப் படுகிறது. தன்னை அடித்துக் கொள்ளும்போது வரும் வலி கூட ஏதோ சுகத்தைக் கொடுக்கிறது என்று அவர் நினைத்துக் கொண்டு இருக்கிறார். அவர் மட்டும் இல்லை, நாம் அத்தனைபேரும் புத்தி ஸ்வாதீனம் இல்லாதவர்கள்தான் என்று ஸ்வாமி சொல்கிறார். அவனுக்கு ஒரு விஷயத்தில் புத்தி ஸ்வாதீனமில்லை. ஆனால் உனக்கு எதில் இருக்கனுமோ அதிலேயே இல்லையே.

நான் பிறந்திருக்கிறது பகவானாலே. இந்த இந்த்ரியங்கள் எல்லாம் அவருக்கு சமர்ப்பிக்கப் படவேண்டும் என்று ஏற்படுத்தியுள்ளார். ஆனால் நானோ இந்த்ரியங்களை வேறு எதுக்கோ உபயோகப் படுத்துகிறேன். தீய பழக்கங்களுக்கும் ஆளாகிவிட்டேன். அந்த பித்து பிடித்தவனுக்கு தான் செய்வது தீமை என்று தெரியவில்லை. எனக்கும் பகவானைவிட்டு மற்ற விஷயத்தில் ஈடுபடுவது தீமை என்று தெரியவில்லை. இரண்டு பேரும் ஒன்று தானே. மோஹத்தாலே கலங்கிக் கிடக்கிறோம். இதுக்கு அடிப்படைக் காரணம் அனாதிகால கர்மா. அதைத் தொலைத்துத்தான் ஆகணும். அது தொலைந்தால் ஶரீரத்திலிருக்கும் ருசிபோய்விடும். 

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772 

நன்றிகள் ஸ்வாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக