வெள்ளி, 1 மே, 2020

ஆழ்வாராசார்யர்கள் காட்டும் வாழ்க்கை நெறிகள் - 20 - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி

ஆளவந்தார் நம்மை ஆள வந்தார்

சுவாமி நாதமுனிகள் வைணவத்தை மீட்டெடுத்தவர். அவர் இல்லாவிட்டால் அருளிச் செயல் நமக்கு கிடைத்திருக்காது. நாதமுனிகளின் புதல்வர் ஈஸ்வர முனி. ஈஸ்வர முனியின் புதல்வர் ஆளவந்தார்.

இவர் காட்டுமன்னார் கோயில் வீரநாராயணபுரத்தில் கி.பி. 916ஆம் ஆண்டு ஆடி மாதம் உத்திராட நட்சத்திரத்தில் அவதரித்தார். யமுனைத் துறைவன் என்று பெயர் சூட்டப்பட்டார். மணக்கால் நம்பிக்குப் பிறகு திருவரங்கத்தில் வைணவ சமயத் தலைமைப் பீடத்தில் அமர்ந்தார். உலக குருவாகிய இராமாநுஜருக்கு தோன்றாத் துணையாயிருந்து வைணவத்தினை வழி நடத்தினார்.

யமுனைத் துறைவனுக்கு ஆளவந்தார் என்று திருநாமம் எப்படி வந்தது?

சோழ அரசிக்கும் அரசனுக்கும் ஒரு பிரச்சினை. அதில் யமுனைத்துறைவர் வென்றால் அரசிக்கு வாழ்வு. இல்லையென்றால் சோழ அரசியும் அரசனும் சேர்ந்து வாழ முடியாது.

யமுனைத் துறைவர் போட்டியில் வென்றவுடன் என்னை ஆளவந்தீரே என ராணி அழைத்ததால் அன்று முதல் அரசன் கொடுத்த பாதி ராஜ்ஜியத்துடன் ஆளவந்தார் ஆனார். அரசியை கணவனோடு சேர்த்து வாழ்வளித்தார்.

இதில் அரசி என்ற ஸ்தானத்தில் அபலைகளாக நாம் இருக்கிறோம். கணவனாகிய எம்பெருமானுடன் சேர்த்து வைக்க வேண்டும். அப்படி நம்மை எம்பெருமானுடன் சேர்த்து வைக்க அவதரித்ததால் ஆளவந்தார்... என்ற திருநாமத்திற்கு உரியரானார்.

வைணவ சமயத்தில் சாத்திரத்திலும் தர்க்க வியாகரணத்திலும் வல்லவர் ஆளவந்தார். பேரறிஞர்.

இன்றும் திருமலையில் திருவேங்கடவனுக்கு பூமாலைகளை கட்டி சேர்த்து வைக்கும் இடம் இவருடைய பெயரால் “யமுனாதுறை” என்று அழைக்கப்பட்டு வருகின்றது. சதுஸ்லோகி என்கின்ற நான்கு சுலோகங்களால் பிராட்டியைப் போற்றிய இவர் பெருமாளைக் குறித்து 65 சுலோகங்களைச் செய்தார். அதில் உள்ள ஒவ்வொரு சுலோகமும் சொற்சுவையாலும் பொருட் சுவையாலும் ஈடு இணையற்ற ரத்தினங்கள் என்பதால் அச்சுலோகங்களின் தொகுப்புக்கு ஸ்தோத்திர ரத்னம் என்று பெயரிட்டனர்.

வைணவத்தில் மூன்று இரத்தினங்களைச் சொல்லுவார்கள். ஒன்று புராண ரத்தினம் (விஷ்ணு புராணம்). இன்னொன்று மந்திர ரத்தினம் (துவைய மந்திரம்). மூன்றாவதாக ஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்னம்.

எம்பெருமானைத் துதிக்கக்கூடிய எத்தனையோ ஆயிரம் சுலோகங்கள் இருந்தாலும் கூட ஆளவந்தாருடைய ஸ்தோத்திரத்திற்கு இணையான தோத்திர நூல் உலகத்தில் இல்லை என்று வைணவ ஆசாரியர்களால் இன்றளவும் உயர்வானதாகப் பேசப்பட்டு வருகிறது. வைணவத்தின் சாரமான தத்துவங்களையெல்லாம் விளக்குகின்ற மிக உயர்ந்த நூல் இது. 65 சுலோகங்களால் ஆனது. 65 சுலோகங்கள் ஏன் என்பதற்கு ஆசாரியர்கள் அருமையான விளக்கத்தை அருளியிருக்கிறார்கள்.

திருவெட்டெழுத்து மந்திரம் 8. துவைய மந்திரம் 25 எழுத்துக்கள். சரம சுலோகம் மந்திரங்களில் அடங்கியுள்ள 32 எழுத்துக்கள். இவை மூன்றையும் கூட்டினால் 65 எழுத்துக்கள் வரும். அதனால் 65 சுலோகங்கள். அப்படியானால் இச்சுலோகங்களின் அர்த்த விளக்கம் மந்திரத்திரையமான மூன்று மகா மந்திரங்களின் சாரமாகத்தானே இருக்கும்.

இனி ஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்தினங்களிலிருந்து சில முக்கியமான சுலோகங்களின் பொருளைக் காணலாம்.

முதல் சுலோகத்தில் தன்னுடைய தாத்தாவும் தன்னுடைய ஆசாரியருமான ஸ்ரீநாதமுனிகளின் பெருமையை விளக்குகிறார். சுவாமி நாதமுனிகள் அளவிட முடியாத அன்பின் கடலாக விளங்குகின்றார். கற்பனைக்கு அடங்காத மென்மை, இயற்கையான அறிவு மற்றும் வைராக்கியம் ஆகியவற்றின் பெட்டகமாக ஸ்ரீநாதமுனிகளை ஆளவந்தார் காண்கின்றார்.

“பூயோ நமோ அபரிமித அச்சுத பக்தி தத்வம்” என்று தொடங்கும் மூன்றாவது சுலோகத்தில் பகவானாகிய அச்சுதனின் மீது கொண்ட அன்பினால், பகவானை அடைவதற்கான வழிகளை மற்றவர்களுக்கு தேடிக் கண்டுபிடித்துச் சொன்ன உதவியின் மூலம் ஆசாரிய ஸ்தானத்தில் முதல்வராக நாதமுனிகள் விளங்குகிறார் என்று சொல்லி அதனாலேயே அவரைத் திரும்பத் திரும்ப வணங்கி அமைதி பெற முயல்கிறேன் என்கிறார்.

புராண ரத்னமாகிய விஷ்ணு புராணத்தை எழுதிய பராசர முனிவரை நான்காவது சுலோகத்தில் "தஸ்மை நமோ முனிவராய பராசராய" என்ற தொடரால் வணங்கி, அவர் விஷ்ணு புராணத்தின் மூலம் சித் அசித் ஈஸ்வரன் எனும் முப்பெரும் தத்துவத்தை (தத்வத்ரையம்) விளக்கிய பேருண்மைப் பண்புகளைப் பாராட்டுகிறார். விஷ்ணு புராணத்தை இச்சுலோகத்தில் ஆளவந்தார் புராண ரத்னம் என அழைக்கிறார் (சந்தர் சயந்துதிராமீர்த புராண ரத்னம்).

ஆளவந்தார் பராசரரையும் வியாசரையும் தனது இரண்டு கண்களாகக் கொண்டு இருந்தார். அவர்கள் இருவருக்கும் ஏதேனும் செய்தாக வேண்டும். அவர்களுக்குக் கடன்பட்டவனாக தான் விளங்குகிறேன் என்பதையே அவர் திருநாடு அலங்கரித்த போது மடங்கிய மூன்று விரல்களில் இரண்டு விரல்கள் காட்டின.

சுவாமி இராமாநுஜர் பராசரபட்டர், வேத வியாசர் என்கிற பெயர்களை கூரத்தாழ்வான் புதல்வர்களுக்கு வைத்தும், வியாசருடைய பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதியும், தன்னுடைய ஆசாரியரான ஆளவந்தாருடைய நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றி வைத்தார்.

ஐந்தாவது சுலோகத்தில் சுவாமி நம்மாழ்வாரை மிக அருமையான முறையில் வாழ்த்தி வணங்குகின்றார். இச்சுலோகம் நாம் அனைவரும் தினசரி திருவாராதனத்தில் சேவிக்கும் சுலோகம்.

“மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயா நாம் | 
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபி ராமம் ஸ்ரீமத் ததங்கரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||”

யாருடைய திருவடிகள் மகிழம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளதோ, யார் வைணவத்தின் குலபதியோ, அந்த பராங்குசமுனிதான் தமக்கு நிரந்தரமான தாய், தந்தை, மனைவி, மகன், சொத்து எல்லாம். எனவே, அவரின் தாமரைத் திருவடிகளை சிரம் தாழ்த்தி வணங்குவதாகச் சொல்லுகின்றார். அடுத்து தம்முடைய தகுதி இன்மையை மிக அழகாகச் சொல்லுகிறார்.

எந்தக் கடலின் சிறு துளியைக் கூட சிவபிரம்மாதிகளால் அறிய முடியாதோ, அப்படிப்பட்ட கடலைப் போன்ற எம்பெருமானுடைய புகழ் பாடுவதற்கு எந்த துணிச்சலில் தான் இறங்கினேன் என்பதைச் சொல்லி, இப்படி இறங்குவதற்கு எனக்கு கொஞ்சம் கூட நாணம் இல்லாமல் போய்விட்டதே என்கிறார். ஆனாலும் கூட, செய்பவனுக்குத் தகுதியில்லாவிட்டாலும் செய்யும் காரியம் தகுதியுடையதல்லவா... அந்த காரணத்துக்காகவே தன்னைத் தானே பாராட்டிக் கொள்கிறார்.

இது ஒரு அற்புதமான வாழ்வியல் செய்தி. நல்ல காரியத்திற்குப் பிறர் பாராட்டுவது பாராட்டாதது ஒரு புறம் இருக்கட்டும். அவர்கள் பாராட்டுக்காக நாம் ஏன் நல்ல காரியத்தைச் செய்ய வேண்டும். நல்ல காரியத்தை செய்யும் அறிவு அந்த பகவானால் அல்லவா நமக்கு வந்தது. அதற்கு நம்மை நாமே பாராட்டிக் கொள்ளலாமே.

திருமங்கையாழ்வார் போன்றோரும் அரட்டமுக்கி, அடையார் சீயம் என்றல்லவா பகவத் விஷயத்தில் ஈடுபட்ட தங்களைத்தாங்களே பாராட்டிக் கொண்டார்கள். அதைப்போல பெருமாளைப் பற்றி சுலோகங்கள் எழுதும் தம்மை பெருமையோடு சொல்லுகின்றார்.

எட்டாம் சுலோகத்திலே தான் தகுதியற்றவன் என்றாலும் கூட மற்றவர்களுக்கு மட்டும் என்ன தகுதி வந்து விட்டது என்பதைச் சமத்காரமாக விளக்குகின்றார். பெரிய பெரிய ஞானிகளும் பிரமன் முதலியோர்களும் கூட இறைவனுடைய குணங்களையும் புகழையும் முற்றிலுமாக கூற முடியாமல் தட்டுத்தடுமாறித் தானே நின்றனர். அவர்களுக்கு அந்த தடுமாற்றம் இருக்கும்பொழுது தனக்கும் அதே மாதிரியான தடுமாற்றம் வியப்பல்லவே என்கிறார்.

நீரில் முக்காலடி மூழ்கியவனும் மூன்றடி மூழ்கியவனும் ஒன்றென்பதுபோல இறைவனை பூர்ணமாக அறியும் தகுதிக் குறைவில் தானும் பிரமன் முதலியோரும் ஒன்றே என்கிறார். ஆனால் அவர்களுக்கு இல்லாத ஒரு சின்ன தகுதி தமக்கு இருப்பதாக ஒன்பதாம் சுலோகத்தில் சொல்லுகின்றார்.

காரணம் அவர்கள் இறைவனின் தூண்டுதலால் பகவானை அறியும் முயற்சியை செய்பவர்கள் அல்ல. ஆனால் என் உள்ளே அவன் தூண்டுகிறான். அதுவும் தவிர என்னுடைய ஆசாரியரின் (நாதமுனிகள்) அனுக்கிரகமும் உண்டு. இது பிரம்மாதிகளுக்கு இல்லை. பெரும்பாலும் ஆழ்வார் பாசுரங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த ஸ்தோத்திரத்தின் அனைத்துக் கருத்துக்களும் இருக்கின்றன.

உதாரணமாக பதினான்காம் சுலோகத்தில், "கஸ் யோதரே ஹரவிரிஞ்ச முக பிரபஞ்ச:" என்று யாருடைய வயிற்றில், சிவனும் பிரமனும் மற்ற ஜீவர்களும், அடங்கிய பிரபஞ்சமும், அடங்கியது? அப்போது அதைக் காப்பாற்றியது யார்? யாருடைய தொப்புளிலிருந்து அது மறுபடியும் வெளியே வந்தது? இப்படிப்பட்ட அசாதாரண காரியத்தைச் செய்ய உன்னை விட மேன்மை படைத்த அந்த ஆதிமூர்த்தி (ஸ்ரீமந் நாராயணன்) யார்? என்று கேள்விகளை அடுக்குகிறார்.

“பாலன் றனதுருவாய் ஏழுலகுண்டு, ஆலிலையின் 
மேலன்று நீவளர்ந்த மெய்யென்பர், 
ஆலன்று வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ? 
சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்லு.”    - முதல் திருவந்தாதி 69 

என்ற ஆழ்வாரின் அபிப்ராயத்தை அப்படியே பிரதிபலிக்கும் சுலோகம் இது.

இருபத்தி மூன்றாம் சுலோகத்திலே நான் திரும்பத் திரும்பச் செய்யாத பாவங்கள் ஒன்றுமில்லை. அவற்றுக்குத் தண்டனை கிடைக்கும் காலம் நெருங்கிவிட்டது. “பாவமே செய்து பாவியான” தான் இப்பொழுது எந்த உதவியும் இல்லாமல் தவிக்கிறேன். “ஆருளர் களைகண் அம்மா அரங்கமாநகருளானே” என்று அவனிடமே கதறி மன்னிக்கக் கோருகிறார். இப்படித் தொட்ட தொட்ட இடங்களெல்லாம் பொன்னாய், மணியாய், மாணிக்கமாய், கொட்டிக்கிடக்கும் ஆளவந்தாரின் இரத்தின முத்துக்களில் சிலவற்றை அனுபவித்தோம். முழுதும் நாம் அனுபவிக்க வேண்டும். பிறவிப் பிணி தீர்ந்து பெம்மானின் பேரருளைப் பெற ஆளவந்தாரின் திருவடிகளையும் அவர் அருளிய ஸ்தோத்திர ரத்தினத்தையும் விட்டால் வேறு வழி?

ஆளவந்தார் திருவடிகளே சரணம்.

வாழ்க்கை நெறிகள் வளரும்.....

நன்றி - சப்தகிரி ஆகஸ்ட் 2019

நன்றி - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி, புவனகிரி +919443439963

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக