வியாழன், 30 ஏப்ரல், 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 22 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்


ஸ்லோகம் – 12 – பகுதி - 2 

பெரிய திருமலை நம்பிகளுக்கு இரண்டு மருமகன்கள். அதில் ஒருவர் ராமானுஜர். மற்றொருவர் கோவிந்தப் பெருமாள் என்ற எம்பார். ராமானுஜர் எம்பாரைக் கூப்பிட்டு விசாரித்தார். வாஸ்தவம்தான் நீர் சொல்வது. சொல்றபடி கேட்டுப்பார்க்கிறேன், நடக்குமா என்று தெரியாது. என்று சொல்லிவிட்டுப் போனார். அன்று இரவு கழிந்தது. கணவனும் மனைவியும் பகவத் விஷயத்தை ராத்திரி முழுக்கப் பேசினார்கள். திரும்ப வந்த கோவிந்த பெருமாளிடம் என்ன என்று ராமானுஜர் கேட்டார். காம ஶுகத்தை அநுபவிக்க நான் ஒன்றே ஒன்றை எதிர்பார்த்தேன். அது தான் இருட்டு. ராத்திரி முழுக்க இருளைத் தேடினேன், தேடினேன். இருளே கிடைக்கவில்லை. உள்ளும் புறமும் பகவான் பிரகாசமாய் வியாபித்து இருக்கையால் இருளே எனக்குக் கிடைக்கவில்லை. லோகம் முழுக்க எனக்கு வெளிச்சம்தான் கண்ணில் படுகிறது. எங்கே காமஸுகம் அனுபவிக்க? என்றார். ஸ்ரீ ராமானுஜர் “இனி உமக்கு இல்லறம் ஆகாது. நீர் சந்யாசம் ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி த்ரிதண்டத்தையும், காஷாயத்தையும் கொடுத்து சந்யாசம் வழங்கிவிட்டார். எம்பார் என்ற தாஸ்ய நாமம் வழங்கிவிட்டார். உள்ளும் புறமும் பகவான் வியாபிக்கிறார் என்றால் இருட்டு எங்கிருந்து வரும்? 

“பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில் மிகக்கண்டேன்” முதலாழ்வார் பாசுரம். நாரணனைக் கண்டால்தான் பகலையே நாங்கள் கண்போம். பகவான் ரொம்ப பிரகாசமாய் இருக்கிறார். 

குருகைக் காவலப்பன் என்று ஒரு ஆசார்யர். அவர் நாதமுனிகளின் சத் சிஷ்யர். கங்கைகொண்ட சோழபுரம் என்ற ஊர். ரொம்ப ஆச்சர்யமான ஸன்னதி. குருகைக் காவலப்பன் பெரிய யோகி. அவரிடம் போய் ஒரு சிஷ்யர் “எங்களுக்கு பகவானை எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது என்றே தெரியவில்லை. உமக்கு ஏதானும் ரஹஸ்யம் தெரிந்தால் சொல்லிக்கொடுமே? நீர் யோகத்தில் நித்யம் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர். எங்களால் முடியவில்லை” என்று கேட்டார். அந்த ஸ்வாமி பதில் கேள்வி கேட்டார், “அவரை மறப்பதற்கு ஏதாவது வழி இருந்தால் நீங்கள் சொல்லிக்கொடுங்கள், ஞாபகம் வைப்பதற்கு வழி நான் அப்புறம் சொல்லிக் கொடுக்கிறேன்” என்றார். எல்லா இடத்திலும் ஜனங்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களை பார்ப்பதற்கு எனக்கு வழி சொல்லிக் கொடுங்கள் என்றால் எப்படிச் சொல்வது. பகவான் உள்ளேயும் புறமும் இருக்கும்போது தெரியாவிட்டால் நம் குற்றம். தெரிந்துதான் தீரவேண்டும்.

ஆனால் நான் என்ன பண்ணினேன். கண்தெரியாதவனுக்கு எதிரே உள்ளவன் தெரியாததுபோலே பகவான் உள்ளும் புறமும் வியாபித்து இருந்தாலும் பார்க்க சக்தியில்லாதவனாயிருக்கிறேன். 

அந்த: புர:ஸ்திதம் இவ அவீக்ஷமாண: ஸந் – அந்த பகவான் என் கண்ணிலே படாமலே அடியேன் துன்பப்பட்டேன். கண் மயங்கிப் போயிருந்ததாலே, கண்ணில் புரை நோய் வந்திருந்ததென்றால், கண்ணாடி அழுக்குப் படிந்து இருந்ததென்றால் எதிரே இருப்பவர் தெரியவில்லை. ஆனால் எனக்கும் கண் இருக்கிறது. காமத்துக்கு வசப்பட்டு மயங்கிக் கிடக்கிறது. குடிக்கக்கூடாததை ஒருவர் குடித்துவிட்டார். கண் தெளிவாகவா தெரியும்? வசப்பட்டுவிட்டோம் என்றால், ஒரு நசையில் இருந்தால் கண் தெரியாதே. காமதசையில் தவித்தேன். அதனால்தான் மோஹித்துப் போனேன். கண்ணை மறைத்து விட்டது. அதனால் தான் பகவானைத் தெரியவில்லை

(அதனால்) கந்தர்ப்பவஸ்ய ஹ்ருதய: ஸததம் பவாமி – மன்மதனுக்கு (ஆசைக்கு) வஸப்பட்ட மனத்தையுடையவனாக, எப்போதும் இருக்கிறேன். 

அந்த: என்றால் தத்துவ ஞானம் இல்லாதவன் என்று அர்த்தம். சித்தும் அசித்தும் ஈஸ்வரனுக்கு அடிமைகள். அவனுடைய சொத்து என்ற தத்துவ ஞானம் இருந்திருக்க வேண்டும். அந்த ஞானம் இல்லாமல் போனதால் தான் (கமநஸ்ய (அஹம்) ந அர்ஹ: ஹந்த) இரண்டு ஆபத்துக்கள் வந்து விட்டது. உம்மிடம் இருக்க வேண்டிய பக்தி ஏற்படவில்லை. எந்த இடத்தில் ஆசை ஏற்படக்கூடாதோ அதில் ஏற்பட்டுவிட்டது. 

விஷயாந்தரத்தில் ப்ராவண்யமும் ஏற்பட்டுவிட்டது. விஷயத்தில் ஈடுபாடு வரவில்லை. விஷயம் என்றால் பகவான். விஷயாந்தரம் என்றால் பகவானைக் காட்டிலும் வேறுபட்டது என்று பொருள். விஷயாந்தரத்தில் வைராக்யம் ஏற்படணும். விஷயத்தில் விருப்பம், ராகம் ஏற்படணும். எனக்கு நேர் எதிராக ஏற்பட்டிருக்கிறது. விஷயத்தில் வைராக்யமும், விஷயாந்தரத்தில் ராகமும் ஏற்பட்டுள்ளது. எது பகவானைத் தவிர இதர விஷயங்களோ, கண்டு, கேட்டு, உண்டு, உற்று, மோந்து உழலும் தெரிவரிய அளவில்லா சிற்றின்பம் ஒழிந்தேன் என்று ஆழ்வார் ஸாதிக்கிறார். பார்ப்பதோ, உண்பதோ, கேட்பதோ ஆகியன வேண்டாம் என்று சொல்லவில்லை. வாழ்க்கை வாழ்வதற்கு வேண்டிய அளவு உபயோகிப்பதை விட்டு விட்டு, அந்த இன்பமேதான் வாழ்க்கை என்று மாற்றிவிட்டோமானால் இது விஷயாந்தர ப்ராவண்யம். 

இதைத்தான் மணவாள மாமுனிகள் போக்கு, போக்கு என்று சொல்லிக் கொண்டு வருகிறார். நாம் மோக்ஷம் போவதற்கு இந்த விஷயாந்தரப் பிராவண்யம் பெரிய தடங்கல். இன்ன யோகம் பண்ணணும். பிரபத்தி பண்ணணும் என்று சொல்கிறோம். அது ரொம்ப சுலபமான வேலை. தேவரீர் தான் அடியேனை ரக்ஷிக்கணும் என்று பிரார்த்திக்கப் போகிறோம். அதற்கு அவர் காத்துக் கொண்டுதான் இருக்கிறார். ரொம்ப நாளா பகவானும் இதற்குத் தான் காத்துக் கொண்டிருக்கிறார். நாம் விருப்பப் பட்டால் கண்டிப்பாகக் கொடுத்துவிடுவார். 

அவர் காத்துக்கொண்டிருக்கிறார் என்றால் எப்ப போகலாம். இன்னிக்கே போகலாமா? பத்து நாளில் போகலாமா? ஒன்று நடக்கணும் என்று எதிர்பார்ப்பார். சரீரம் விழுந்துவிட்டால் போகலாம் என்று நாம் நினைக்கிறோம். ஒரு ஆயுள் கொடுக்கப்பட்டுள்ளது. 60, 70, 80 தோ தெரியாது. ஆயுள் முடிந்தவுடன் மோக்ஷம் கிடைத்துவிடும் என்று நினைக்கிறோம். ஆனால் பகவான் ஶரீரம் கீழே விழுவதை முக்கியமாக நினைப்பதே இல்லை. விழட்டும், விழாமல் போகட்டும். எனக்கு வேணுமென்றால் இந்த ஶரீரத்தோடு கூடவே அவரை மோக்ஷத்திற்கு அழைத்துப் போவேன். அந்த அளவுக்கு பகவானுக்கு அளக்க முடியாத ஸ்வாதந்த்ரியம் இருக்கிறது.

நம்மாழ்வாரோடே போட்டிக்கே வந்துவிட்டார். உம்மோட திருமேனியோடதான் வைகுண்டத்துக்குக் கூட்டிப் போகிறது. இந்த ஶரீரத்தை இங்கு விடுவதாயில்லை என்கிறார் பகவான். ஆழ்வாரோ மன்றாடி இந்த ஶரீரத்தை இங்கு விட்டுவிட்டுப் போனார் என்று அவர் சரித்திரத்திலும் இருக்கிறது. பாசுரத்திலும் இருக்கிறது. அதனால் அவரிடம் போய் இந்த போராட்டமெல்லாம் வைத்துக் கொள்ள முடியாது. 

சரீரத்தோடும் கூட்டிப் போவார், இல்லாமலும் கூட்டிப்போவார். ஆனால் ஒன்றே ஒன்றை எதிர்பார்ப்பார். மற்ற விஷயத்தில் இருக்கிற ராகம் மொத்தமா கழிந்துவிடவேண்டும். பகவானிடம் விருப்பம் ஓஹோன்னு வளார்ந்திருக்க வேண்டும். இது நடக்கிறதா, நடக்கிறதா என்று பார்க்கிறார். மற்ற விஷயங்களிலிருந்து விடுபட்டு அவரிடம் மனதை வைக்கிறானா என்ற ஒன்றைத்தான் அவர் எதிர்பார்க்கிறார்.

இப்ப வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையையே கடைசிவரை வாழ்ந்துவிட்டு, யாரை வைதுகொண்டு இருக்கிறோமோ அவரை வைதுகொண்டும், யாரை அடிக்கணுமோ அடித்துக் கொண்டும், தேவை இல்லாத வம்புகள் என்ன என்ன உண்டோ பேசிக்கொண்டும், அனுஷ்டானம் என்று எதுவுமே செய்யாமல் இருந்துகொண்டு, ரொம்ப சுகமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு அப்படியே கடைசி நிமிடம் கிளம்பிப் போய்விடவேண்டும் என்பது நம்முடைய ஆசை, விபரீத ஆசை. இந்த ஆசை ஒரு நாளும் நிறைவேறாது. 

பகவான் எதிர்பார்க்கிறதோ வேற. சுகம் என்பது உலக சுகம் அல்ல. அவர்தான் நமக்கு சுகம் என்று நினைத்தாயானால் அப்பதான் நமக்குத் தகுதி வருகிறது. ஆனால் நாமோ தகுதி என்பதை உயர்ந்த குலத்தில் பிறந்திருப்பது, படித்திருக்கிறது, பணக்காரனா இருக்கிறதெல்லாம் தகுதி என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம். அதெல்லாம் பகவானைப் பொறுத்தவரையில் தகுதியே இல்லை. அதெல்லாம் இல்லாவிடில்கூட அவர் மோக்ஷம் கொடுத்துவிடுவார். அவரால் கொடுக்கமுடியாதது எது தெரியுமா? “விஷயாந்தரங்களில் இருக்கும் ருசி நீங்கணும், பகவத் விஷயத்தில் ருசி அதிகரிக்கணும்” அடுத்து ஒரு கேள்வி வரும். அந்த ருசியும் அவரே கொடுத்துவிட்டால் என்ன? ருசி மட்டும் நாமதான் ஏற்படுத்திக் கோள்ள வேண்டும். அதை அவர் தரமாட்டார். அவர் தந்தால் என்னாகும் தெரியுமா. உலகத்தில் எல்லோருமே இன்னிக்கே மோக்ஷம் போய்விடலாமே! ருசியை நாம்தான் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். கர்ம பக்தி ஞான அளவுக்கு நாம் போகவேண்டாம். அதை அவர் பார்த்துக் கொள்வார்.

அதனால்தான் ராமானுஜர் தன் கடைசி காலத்தில் பரமபதத்துக்கு கிளம்பும் போது அவரது சிஷ்யர்கள் கேட்கின்றனர். இப்ப ஸ்வாமியினுடைய உபதேசம் என்ன? “நீங்கள் உபாயம் எது? உபாயம் எது என்று தேடாதீர்கள். ஸர்வ ஸித்தோபாயன் பகவான். கண்டிப்பா உங்களுக்குக் கொடுத்துவிடுவார். நீங்கள் தேடவேண்டியது என்ன தெரியுமா? விஷயாந்தரத்தில் ருசியைக் குறைத்துக் கொண்டு பகவானது கைங்கர்யத்தில் ருசியை வளார்த்துக் கொள்ளுங்கள். அதுதான் என் பக்தர்களாகிய நீங்கள் பண்ணவேண்டியது என்று ஸ்வாமி சொன்னார் என்றால் அந்த ஒரு வார்த்தையை உயிரான வார்த்தையாக நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். 

எது வழி? எது ஸாதனம் என்று நாம் நன்றாகத் தேடுவோம். ஆனால் உலக விஷயத்தில் ருசியை எப்படிக் குறைத்துக் கொள்ள வேண்டும், கைங்கர்யத்தில் எப்படி ருசியை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதை சுலபத்தில் நம் புத்தி தேடாமலே போய்விடுகிறது அல்லவா? 

அதனால்தான் ஸ்வாமி மணவாள மாமுனி ஸாதிக்கிறார். பகவான் உள்ளேயும் வியாபித்து இருக்கிறார். வெளியேயும் வியாபித்து இருக்கிறார். எப்ப உள்ளே வியாபித்து இருக்கிறாரோ, அப்ப உள்ளே இருக்கிற மனது முழுக்க அவரது சிந்தனையாக இருக்கவேண்டும். மனதை வேற இடத்தில் போகவிடாது நான் தடுத்திருக்க வேண்டும். எப்ப வெளியேயும் வியாபித்து இருக்கிறாரோ அப்ப கண், காது, மூக்கு எல்லாம் அவரது விஷயமாகவே இருக்கவேண்டும். வெளி விஷயங்களில் மனம் அலையக்கூடாது என்று நான் முடிவுக்கு வந்திருக்க வேண்டும். உள்ளே இருக்கிறதாலே மனது அடங்கியிருக்கணும். வெளியிலும் இருப்பதாலே கண் முதலாகிய புலன்கள் அவரிடமே ஈடுபட்டு இருக்கவேண்டும். 

ஆச்சர்யம்பார்த்தீர்களா? அவர் உள்ளேயும் இருக்கிறார். வெளியேயும் இருக்கிறார். ஆனால் கண்ணும் அடங்கவில்லை. மனமும் அடங்கவில்லை. அத்தனையையும் காமதேவனுக்குக் கொடுத்துவிட்டேன் இல்லையோ? யாரிடத்து விட்டிருக்கோமோ அவ்வளவுதானே நடக்கவே போகிறது. 

கந்தர்பவஷ்யஹ்ருதயஸ்ஸததம் பவாமி 
ஹந்த த்வதக்ரகமநஸ்ய யதீந்த்ர! நார்ஹ

ஹந்த – ஹந்த என்றால் ஐயோ! நடக்கிற காலமெல்லாம் பகவத் விஷயத்தில் கழிக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன். பாப சிந்தனை நிறைய வந்திருக்கிறது, காரணம். வெளிய இருக்கிறார், உள்ளேயும் இருக்கிறார். புரிந்து கொள்ளவில்லை. இப்படியே பாபம் பண்ணிக் கொண்டிருந்தால் தண்டிப்பார் என்றாவது தெரிந்து இருக்க வேண்டும். யார் என்ன குற்றம் செய்தாலும் தண்டிக்கக் கூடிய சக்தி கொண்டவர் பகவான். நமக்கும் தெரிகிறது. நன்னா அப்பப்ப குட்டுகிறார் என்று தெரியவில்லையா? அப்பப்ப வியாதி வருகிறதே. அதெல்லாம் குட்டுத்தான். அது நமக்குப் புரிவது இல்லை. பகவான் உள்ளேயும் வியாபித்து, வெளியேயும் வியாபித்து இருக்கிறார். எனக்கும் அது தெரிகிறது. ஆனால் நான் காமவசப்பட்டுவிட்டதால் நல்வழிபோக முடியவில்லை. காமம் இருந்தால் கண்ணைமூடிவிடும் அல்லாவா? இப்படி கண்மூடித்தனமாக மோகத்துக்கு வசப்பட்டுத்தான் இழந்தே போனேன்.

அந்தர்பஹிஸ்ஸகலவஸ்துஷு ஸந்தமீஸம்
அந்த:புரஸ்ஸ்திதமிவாஹமவீக்ஷமாந: |
கந்தர்பவஷ்யஹ்ருதயஸ்ஸததம் பவாமி
த்வதக்ரகமநஸ்ய யதீந்த்ர! நார்ஹ: || (12)

இதனால் தேவரீர் முன்பு வந்து நிற்பதற்குத் தகுதியே இல்லை. 
12 வது ஸ்லோகம் முற்றிற்று.

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772 

நன்றிகள் ஸ்வாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக