வியாழன், 30 ஏப்ரல், 2020

ஆழ்வாராசார்யர்கள் காட்டும் வாழ்க்கை நெறிகள் - 19 - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி

பெரியாழ்வாரும் பிள்ளைத்தமிழும்

எம்பெருமானுக்கு எத்தனையோ பேர் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். ஆனால், “ஐயோ! எம்பெருமானுக்கு என்னாகுமோ, இந்த இருள் தருமாஞாலத்திலே” என்று வயிறு பிடித்து, பரிவு விஞ்சப் பல்லாண்டு பாடியவர் பெரியாழ்வார்.

விஷ்ணுசித்தரான அவர் இந்தப் பொங்கும் பரிவாலே பெற்றார் “பெரியாழ்வார்” என்ற பெயர் என்பார் உபதேசரத்தின மாலையில் சுவாமி மணவாள மாமுனிகள்.

திருப்பல்லாண்டுக்கும், திருப்பாவைக்கும் வைணவ மரபிலே ஒரு தனி ஏற்றம் உண்டு. இரண்டுமில்லாது தினசரி வழிபாடு நிறைவு பெறாது.

பெரியாழ்வாருடைய திருநாமம் விஷ்ணு சித்தர். இதுவும் காரணப் பெயர்தான். விஷ்ணுவை சதா சர்வ காலமும் தன் சித்தத்தில் வைத்துப் போற்றுபவர் என்பதால் இந்தத் திருநாமம்.

பகவான் விஷ்ணுவின் சித்தத்தில் சதா இவர் இருப்பதால் விஷ்ணு சித்தர் என்று நயமுரைப்பாரும் உண்டு. காரணம் என்னையே நினைக்கும் பக்தன் என்னுடைய உயிருக்கு நிகரானவன் என்று கீதையில் பகவான் கண்ணன் கூறியிருக்கிறார்.

இப்படிப்பட்ட பல சிறப்புகளைப் பெற்ற பெரியாழ்வார் ஆனி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் கருடாத்மாவாகிய கருடனுடைய அம்சமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தார்.

இவர் பகவானுக்குச் செய்த தொண்டு இரண்டு பிரிவாக அமைந்தது. ஒன்று பாமாலை சூட்டினார். இரண்டாவது பூமாலை சூட்டினார்.

இதில் மகிழ்ந்த பூதேவி நாச்சியார் தனது வைகுந்த வான் போகத்தைத் துச்சமென எண்ணி பெரியாழ்வாரின் திருமகளாய் - ஆடிப்பூரத்தில் ஆண்டாளாக - இவர் நந்தவனத்தில் அவதரித்தார். 

கோதை என்ற பெயரால் வளர்த்து (கோதை என்பதற்கும் மாலை என்று பொருள் உண்டு) பூமாலையோடும் பாமாலையோடும் சேர்த்து கோதையையும் பகவானுக்குக் கொடுத்து பகவானுக்கே மாமனாரானார்.

பாண்டிய மன்னனின் சந்தேகங்களைத் தீர்க்க எண்ணி யார் பரதத்துவம் என்ற கேள்விக்கு வேத வேதாந்தங்களை எல்லாம் வடிகட்டிச் சாறு பிழிந்து நிர்ணயம் செய்து கொடுத்ததால் வேதபிரான் பட்டர் என்றே அழைக்கப்பட்டார்.

“வேண்டிய வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான் பாதங்கள் யாமுடைய பற்று” என்று இந்நிகழ்ச்சியை இவருடைய திருப்பல்லாண்டுத் தனியன் எடுத்துக் கூறும்.

இதில் “வேண்டிய வேதங்கள்” என்பதற்கு இரண்டு பொருள் உண்டு. “வேண்டிய” என்றால் “தேவைப்படுகின்ற” என்றும் ஒரு பொருள். பரமாத்ம நிரூபணத்திற்கு வேதத்தின் எந்தெந்த பாகங்கள் தேவைப்படுகிறதோ அந்தப் பகுதிகளை எல்லாம் எடுத்துரைத்து நிரூபித்துக் காட்டினார் என்று ஒரு பொருள்.

இன்னொரு அதிசயமான பொருளும் உண்டு. இதற்கு முன்பு இருந்தோர் வேதங்களுக்குத் தவறான பொருள் நிர்ணயித்து குழப்பவாதம் செய்து, வேதங்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியிருந்தனர். இதனால் வேதங்கள் வருந்தின. வருந்திப் பொலிவிழந்த வேதங்கள், பட்டர்பிரானான இவரிடம் சரியான பொருள் சொல்லி மீட்டெடுத்து உதவ வேண்டும் என வேண்டியதாம்.

அவ்வாறு வேண்டிய வேதங்களைச் சரியான அர்த்தத்தில் எடுத்துரைத்து பரதத்வ நிர்ணயம் செய்தார் பெரியாழ்வார் என்று ஒரு நயமான பொருளும் உண்டு.

இவர் இரண்டு பிரபந்தங்களைப் பாடினார். ஒன்று "திருப்பல்லாண்டு", ஓங்காரத்தின் அதாவது பிரணவத்தின் அர்த்தமாக இது விளங்குகிறது. இரண்டாவது “பெரியாழ்வார் திருமொழி”. அதில் முதல் பகுதி கண்ணன் மீது பாடிய பிள்ளைத்தமிழ்.

பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரண்டு பால்களிலும் பாடப்படுவதுண்டு.
மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையிலான குழந்தையின் வாழ்க்கைக் காலத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்துக் காண்பர். ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் வீதம் அமைத்துப் பாடப்படுவது வழக்கு. ஆண்பாற் பிள்ளைத்தமிழ் - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது. 

"சாற்றிய காப்புத்தால் செங்கீரை சப்பாணி
மாற்றாரிய முத்தமே வாரானை 
போற்றாரிய அம்புலியே யாய்த்த சிறுபறையே 
சிற்றிலேபம்புசிறு தேரோடும் பத்து" என்கிறது வெண்பாப் பாட்டியல் நூற்பா (பாடல் 7).

தமிழர் பண்பாட்டில் முதல் 2 திங்கள் குழந்தையை வெளியில் கொண்டு வர மாட்டார்கள். எனவே, பிள்ளைத்தமிழ், 3-ம் திங்கள் முதல் பாமாலைகளால் தொடுக்கப்படும். 3-ம் திங்கள் காப்பும், 5-ம் திங்களில் செங்கீரையும், 7-ம் திங்களில் தாலாட்டும், 9-ம் திங்களில் சப்பாணியும், 11-ம் திங்களில் சிற்றிலும், 19ம் திங்களில் சிறுபறையும், 21ம் திங்களில் சிறுதேரும் என்பன ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்குரியது.

இவ்வகைப் பிரபந்தத்தின் முன்னோடியாக பெரியாழ்வாரைக் கொள்வர்.

தொல்காப்பியத்துக்கு 1200 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய நூலாயினும் திருமாலைக் குழந்தையாக்கிக் கொண்டு பெரியாழ்வார் பாடும் பாடல்கள் இதற்கு இலக்கியமாகத் திகழ்கின்றன.
பிள்ளைத்தமிழ் பத்து பருவங்களில் தான் அமைய வேண்டும் என்பது வரையறை ஆகும். பெரும்பாலான பிள்ளைத்தமிழ் நூல்கள் இவ்வாறே பாடப்பட்டுள்ளன.

பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முதல் பருவம் காப்பு ஆகும். இதில் பெரியாழ்வார் புதுமையைச் செய்திருக்கிறார். இந்தக் காப்புப் பருவத்தின் சாரமான செய்திகளைத் திருப்பல்லாண்டில் காணலாம். 

காக்கும் கடவுளான திருமாலுக்கு “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வித் திருக்காப்பு” என்று மங்கல வாழ்த்துச் சொல்வதால் பெரியாழ்வார் ஆனார்.

பெரியாழ்வார் தமது பிள்ளைத் தமிழைத் தொடங்கும் பொழுது கண்ணனின் அவதார நாளைக் கொண்டாடுகிறார். பெரியாழ்வார் கிருஷ்ண ஜெயந்தியை எப்படிக் கொண்டாட வேண்டும் என்று இதில் வழி காட்டுகின்றார்.

“ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார் நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார்” என கண்ணன் எனும் தெய்வ மழலையைப் பார்க்கும் தமது பரவச உணர்வைத் தமிழ்ப் பாசுரங்களால் அற்புதமாக வெளிப்படுத்துகிறார். அடுத்து கண்ணனின் பாதாதிகேச வருணனையை மிக அற்புதமாக 20 பாசுரங்களில் வர்ணிக்கிறார். அடுத்து “மாணிக்கம் கட்டி வயிரமிடைக்கட்டி” என்று தாலாட்டுப் பாடுகிறார். இன்றும் திருக்கோயில்களில் அர்த்த ஜாமத்திற்குப் பின் பாலமுது நிவேதனம் செய்யும் போது இப்பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. 15ம் திங்களில் பாட வேண்டிய அம்புலிப் பருவத்தை அடுத்து பாடுகின்றார். அடுத்து ஐந்தாம் திங்களில் பாட வேண்டிய செங்கீரைப் பருவத்தையும், ஒன்பதாம் திங்களில் பாட வேண்டிய சப்பாணிப் பருவத்தையும் அடுத்தடுத்துப் பாடுகின்றார்.

பிள்ளைத்தமிழ் பருவங்கள் பெரியாழ்வார் பாடிய பிள்ளைத்தமிழில் மாறி இருப்பினும் அழகும் தமிழ்ச் சுவையும் மாறா அழகுடையனவாக இருக்கின்றன. கண்ணனின் பால லீலைகளை இத்தனை அழகுடனும் பாவங்களுடனும் பாடிய ஆழ்வார்களுள் பெரியாழ்வாரை மிஞ்ச எவரும் இல்லை.

மக்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாலாட்டு பாடவும், நிலாவைக் காட்டி சோறு ஊட்டவும் வேறு பாடல்களைத் தேட வேண்டாம். பெரியாழ்வார் பிள்ளைத் தமிழ் பாசுரங்கள் போதும். தமிழும் விஷ்ணு பக்தியும் சேர்ந்து பிள்ளைகளிடம் வளர இதுவே வழி. பெரியாழ்வாரின் திருவடிவாரங்களுக்கு பல்லாண்டு பாடுவோம்.

வாழ்க்கை நெறிகள் வளரும்.....

நன்றி - சப்தகிரி ஜூலை 2019

நன்றி - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி, புவனகிரி +919443439963

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக