மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 21 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 21 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் – 12


ஸ்ரீ ஸ்வாமி மணவாள மாமுனிகளால் ராமானுஜர் விஷயமாக அருளிச்செய்தது யதிராஜ விம்ஶதி. அதிலே எம்பருமானாருடைய திருவடிகளே பரம ப்ராபகம். அதுவே நமக்கு மோக்ஷத்தைப் பெற்றுக் கொடுக்க வல்லது. நம்மிடம் கர்ம, ஞான, பக்தி யோகங்கள் அற்றுப்போனதாலே உய்வதற்கு ஒரே வழி அவருடைய திருவடிகளைப் பற்றுவதே என்று சொல்லிக்கொண்டு வருகிறார். அதிலே ராமானுஜருக்கு ஏற்பட்ட வைபவங்கள், அவருடைய சிஷ்யர்களுடைய அருமை பெருமைகள் இவற்றை எல்லாம் கூறி வந்தவர், அவருடைய திருவடிகளைப் பற்றுவதற்கு நமக்கு ஒருவிதத்திலும் தகுதியில்லை

அனைத்துக் குற்றங்களுக்கும் இருப்பிடமாக உள்ளேன். ஒரு நன்மைகூட இல்லை. இதை எல்லாவற்றையும் ஸ்வாமியிடத்திலேயே விண்ணப்பித்து, அவருடைய நிர்ஹேதுகமான க்ருபை ஒன்றுதான் அடியேன் கடைத்தேறுவதற்கு வழியாகும் என்று கூறிக்கொண்டு வருகிறார். 

பகவானும் அநுக்ரஹிக்கிறார். ஆசார்யனும் அநுக்ரஹிக்கிறார். இருவரும் ஒரு காரணத்தாலே அனுக்கிரஹிக்கிறதில்லை. ஆனால் பகவானிடத்தில் ஸ்வாதந்த்ரியம் நிரம்பியிருக்கிறபடியாலே நமக்கு சந்தேகமும் வரும், பயமும் விலகாது. ஆசார்யர் பரதந்திரராக இருக்கிறபடியால் அவர் நம்மை ஸம்சாரத்தில் வைக்க மாட்டார். முக்தியை அளிப்பார் என்ற நம்பிக்கை உறுதிப்படுகிறது. இதனால்தான் பகவானைப் பற்றுவது ப்ரதம பர்வ நிஷ்டை என்றும், ஆசார்யரைப் பற்றுவது சரமபர்வ நிஷ்டை என்றும் கொண்டாடப்படுகிறது. ப்ரதம பர்வ என்றால் முதல்படி. சரமபர்வ என்றால் கடைசிப்படி. கூரத்தாழ்வான், முதலியாண்டான் போன்றோர் எல்லாம் திருவரங்கம் கோயிலுக்குள் சென்று பகவானையும் தரிசிப்பார்கள். ராமானுஜரிடம் அதிக பக்தியோடு இருப்பார்கள். 

இப்படி இவர்கள் பகவானையும் ஆசார்யனையும் ஆஶ்ரயிப்பதை பார்த்த வடுக நம்பிகள் சிரித்துக் கூறுவராம் இது என்ன இருகரையைப் பற்றி இருக்கிறீர்கள். உங்களிடம் ஒரு கரையைப் பற்றினால் மோக்ஷம் கிடையாது என்று பகவான் சொன்னாரா? எம்பெருமானையும் பற்றி எம்பெருமானாரையுமா பற்ற வேண்டும்? ஒருவரைப் பற்றியிருந்தால் போதாதோ என்கிற அளவுக்கு வடுகநம்பியினுடைய நிஷ்டை. ஆனால் அது புரிவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் ஆசார்யனிடத்தில் பக்தியில்லாது போய்விட்டால் பகவான் மோக்ஷம் கொடுக்க வேண்டிய தேவையே இல்லை. அதனால்தான் 


ஆசர்யன் செய்த உபகாரமானவது*
தூய்தாக நெஞ்சுதன்னில்தோன்றுமேல்* தேசாந்
தரத்திலிருக்க மனந்தான் பொருந்தமாட்டாது*
இருத்தலினி யேதறியோம் யாம்.

ஆசார்யன் செய்த உபாகாரமாவது கட்டந்தரையாயிருந்த நெஞ்சில் பகவானைப்பற்றிய ஞானத்தை ஓரளவுக்குக் கொடுத்தால், ஞானம் வந்துவிட்டது என்பதற்காக விட்டுவிடவில்லை. சொன்னதைப் போல நடந்தும் காட்டினார். அதோடு நில்லாமல் நாம் எங்கெல்லாம் தப்புப் பண்ணுகிறோமோ அங்கெல்லாம் கோபித்துக் கொள்ளாமல் திருத்தினார். நம்முடன் கூடவே இருந்து பகவானை அடைவதற்கு வழி செய்தார். கடைசியாக நம் பாபங்களை போக்குவதற்கு பகவானிடம் ப்ரார்த்தித்து மோக்ஷத்தைப் பெற்றுக் கொடுத்தார். இத்தனை நன்மைகளையும் ஆசார்யன் பண்ணுகிறதாலே அவரது திருவடிகளே உத்தாரகம் அவரே பரம ப்ராபகம். அவரது திருவடிகளில் கைங்கர்யமே பரமப்ராப்யம். இப்படி இருக்கணும் என்கிறதுதான் இந்த ஸம்பிரதாயத்தின் சீரிய கருத்து. அதைத்தான் ஸ்வாமி மணவாள மாமுனிகள் கூறிக்கொண்டு வருகிறார். 

இதுவரை பார்த்தது பதினோராவது ஸ்லோகம். ஒவ்வொரு ஸ்லோகமாய் தனக்குள்ள குற்றங்களை ஆவிஷ்காரம் பண்ணி எம்பெருமானாரிடம் கூறிக்கொண்டு வருகிறார். ராமானுஜரிடத்தில் கூறுகிறார். பாபமே செய்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். பாபம் செய்துவிட்டால் அப்படியே ஒன்றும் அழிந்துபோய் விடப்போவதில்லை. பாபம் செய்வது ஸம்சாரத்தில் நடக்கக்கூடியது. ஆனால் பாபம் செய்துவிட்டபின் அதைக் குறித்து பயம், அநுதாபம், லஜ்ஜை ஏற்படவேண்டும். பண்ணிவிட்டோமே என்ற பயம். பாபம் பண்ணிவிட்டோமே, இனி பண்ணக்கூடாது என்கிற அநுதாபம். பாபம் பண்ணியதால் பெரியோர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற வெட்கம் ஏற்படவேண்டும். 

இந்த மூன்றில் எது ஏற்பட்டாலும் மீண்டும் பாபம் செய்வதற்கு முனையமாட்டார்கள். எனக்கு இது எதுவும் ஏற்படவில்லையே. உலக இன்பத்தில் மயங்கிக் கிடக்கிறபடியால் எனக்கு இவை எதுவும் ஏற்படவில்லை. ஒன்றை மற்றொன்றாக மாற்றி நினைத்துக் கொண்டிருக்கின்றேன். அதனால் பண்ணிய தப்பைச் சரி என்று நினைத்துக் கொள்கிறேனே தவிர தப்பு தப்புத்தான் என்ற பயம் துளிகூட ஏற்படவில்லை. 

அதனால் யதிராஜரே மீண்டும், மீண்டும் பாபம் செய்துகொண்டே இருக்கின்றேன். செய்த பின்பாவது அதிலிருந்து மீள்வதற்கு வழி என்ன? என்ன பிராயச்சித்தம் செய்யலாம் என்றெல்லாம் சிந்திக்கவேண்டும். பிராயச்சித்தம் செய்ய வேண்டும். மீண்டும் பாபம் செய்யமாட்டோம் என்ற உறுதி கொள்ளவேண்டும். பயம், அநுதாபம், லஜ்ஜை, இனி செய்யமாட்டேன் என்ற உறுதி இந்த நான்கும் ஏற்படவில்லையெனில் பாபம் பண்ணிக் கொண்டேதான் இருப்போம். பாபம் நிமிஷப் பொழுதில் மன்னிக்கப்படும். 

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை கோவிலுக்குப் போவதே அந்தந்த வாரம் செய்த பாபத்துக்கு மன்னிப்பு கேட்கத்தான் என்று சொல்ல முடியுமா? எப்பொழுதும் செய்துகொண்டிருக்கும் பாபம் தொடரும்போது பிராயச்சித்தம் தேடிப் பிரயோஜனமே கிடையாது. தப்பை நிறுத்திவிட்டு பிராயச்சித்தம் செய்தால்தான் பயன். நமக்கு உடம்புக்கு வந்துவிட்டது. ஏதோ சாப்பிடக்கூடாத வஸ்துவைச் சாப்பிட்டுவிட்டோம். வைத்தியரிடம் போனோம். மருந்து தருகிறேன், ஆனால் நீ அதைச் சாப்பிடக்கூடாது என்கிறார். மீண்டும் சாபிட்டோமானால் மீண்டும் நோய் வராதா என்ன? நான் சாப்பிடத்தான் செய்வேன். நீர் மருந்துகொடும். சரியாப் போகும் என்றால் அவர் கேட்பாரா? உடல் வியாதிக்கே இப்படியென்றால் ஆத்ம வியாதிக்கு எவ்வளவு ஜாக்கிரதை வேண்டும்?

இனி 12 வது ஸ்லோகம்.,

இந்த ஸ்லோகத்தில் இத்தனை நாளா ஏன் நான் உம் திருவடிக்கீழ் வரவில்லை. இப்பவும் நான் எதற்கு வசப்பட்டிருக்கின்றேன். காமனாருக்கு வசப்பட்டிருக்கின்றேன். ஏதோ இந்த ஶரீர ஶுகம் என்று எண்ணிக்கொண்டு, சிற்றின்பத்தில் ஆசைப்பட்டு உமது அநுபவத்திலும், பகவத் அநுபவத்தையும் இழந்து நிற்கின்றேன். அந்தக் காமத்திலிருக்கும் விருப்பத்தையும் நீர்தான் போக்கியருளவேண்டும். 


अन्तर्बहिस्सकलवस्तुषु सन्तमीशम् अन्धः पुरस्स्थितमिवाहमवीक्षमाणः ।
कन्दर्पवश्यह्रुदयस्सततं भवामि हन्त त्वदग्रगमनस्य यतीन्द्र नार्हः ॥ (12)


அந்தர்பஹிஸ்ஸகலவஸ்துஷு ஸந்தமீஸம்
அந்த:புரஸ்ஸ்திதமிவாஹமவீக்ஷமாந: |
கந்தர்பவஷ்யஹ்ருதயஸ்ஸததம் பவாமி
ஹந்த த்வதக்ரகமநஸ்ய யதீந்த்ர! நார்ஹ: || (12)


யதீந்த்ர – யதிராஜரே, 


த்வத் அக்ர கமநஸ்ய (அஹம்) ந அர்ஹ: ஹந்த – தேவரீர் திருமுன்பே வருவதற்கு அடியேன் தகுந்தவனாக இல்லை, ஐயோ கஷ்டம். உம் முன் வருவதற்கு அருகதை இல்லாதவனாக இருக்கின்றேன். ஏன் என்று சொல்கின்றேன். பகவான் எப்படி இருக்கின்றார். 


ஸகல வஸ்துஷு அந்த: பஹி: ச ஸந்தம் ஈஸம் - எல்லாப்பொருள்களிலும் உள்ளும் புறமும் பரந்திருந்து, எல்லாவற்றையும் அடக்கியாளுகிற ஸ்ரீமந் நாராயணனை, “அந்தர் பஹிஸ்ச ஸர்வம் வியாப்ய நாரயண ஸ்தித:” என்று உபநிஷத் சொல்கிறது. எப்போதும் உள்ளேயும், வெளியேயும் வியாபிக்கிறார். ஏதோ குறிப்பிட்ட பொருள்களில் மட்டும் இல்லை ஸர்வ வஸ்துக்களிலும் வியாபித்துள்ளார். ஆனால் அவரை நான் எப்படிப் புரிந்துகொண்டேன்? 


அஹம் அந்த: இவ புர:ஸ்திதம் – அடியேன், முன்னே நிற்கும் மனிதனை, குருடன் போல் பாராதவனாய், கண் தெரியாதவனுக்கு முன் நிற்பவன் தெரியாது. ஆனால் கண் தெரிந்தவரோ, முன்னாடியே நிற்கிறேனே, தெரியவில்லையா என்று கேட்பார் இல்லையா? நாம் அத்தனை பேருமே கண் பார்வை இழந்தவர்கள் தாம். உள்ளும் புறமும் பகவான் வியாபித்து இருக்கும்போது நமக்குத் தெரிகிறதா? தெரியவில்லையே. கண் இழந்தவனுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு. 


அவீக்ஷமாண: ஸந் – கண்தெரியாதவன் முன்னாடி நிற்பவனைக் காணாதது போலே நானும் பகவானைக் காணவேயில்லை. 


ஒரு சின்ன சரித்திரம்: எம்பெருமானாருடைய சீடர் எம்பார். திருமணமானவர். கிரஹஸ்தர். ஆனால் அவருக்கு மனைவியிடம் நாட்டமில்லை. இல்லற ஶுகத்தில் நாட்டமில்லை. அதனால் அவருடைய திருத்தாயார் ராமானுஜரிடம்போய் புகார் செய்தார். ஒன்று, இவர் ஸந்யாசி ஆகணும்., இல்லை கிரஹஸ்தராய் இருந்தால் அந்த ஆஸ்ரமத்துக்குத் தகுந்தாற்போல நடக்கவேண்டும் சாஸ்திர விரோதம் இல்லையா எனத் தாயார் கேட்டார். நான் விசாரிக்கிறேன் என்றார் யதிராசர்.


ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772 


நன்றிகள் ஸ்வாமி.
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை