அதிகப் பார்வை

நினைத்தது நடந்தது - திருமதி V. பிரேமா வரதன்


கிருதயுகம். ஒருநாள் பரமபதநாதன் விச்ராந்தியாக சயனித்துக் கொண்டிருக்கிறார். அடுத்துச் செய்ய வேண்டிய காரியங்களுக்காக, முன்பே எடுத்துக் கொள்ளும் ஓய்வு அது. பச்சைமாமலை போன்ற திருமேனியனா அமைதி கொள்பவன்? அப்படியொரு பாவனை! பிரகிருதிகளைப் பார்த்துக்கொண்டும், அண்டசராசரங்களின் இயக்கங்களைக் கவனித்துக் கொண்டும், ஈ, எறும்பு எண்ணாதி ஜாதிகளின் சுக துக்கங்களையும் கவனித்தபடி, அதனால் செவ்வரியோடிய செங்கண் உடையவன் சயனித்துக் கொண்டிருந்தான்.


அழகிய வாயில் அமுத ஊரல் எடுத்தவன் தன் கொவ்வைக்கனி இதழைப்பிரித்துப் புன்னகைத்துச் சுழித்துக் கொண்டான். அவனுள்ளே ஒரு சிரிப்பு! அச்சிரிப்பிற்கு என்ன உள்ளர்த்தமோ? அடுத்த அவதாரத்திற்குச் செய்து கொள்ளும் சங்கல்பச் சின்னமோ அது? அரைச்சிவந்த ஆடை யோனின் சிந்தை மயக்கும் சிரிப்பு அது.


அமரர்கள் ஏறோன் நீண்ட அப்பெரியவாய கண்களைச் சற்றே மூடினான். அந்த அழகு எப்படியிருந்தது? அது வாசாமகோசரம்! அப்படிப்பட்டவன், தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன் அமைதியாகக் கண்ணயர்ந்து இருக்கும்போது செவிகளை மட்டும் கூர்மையாக்கியபடி பாம்பணையில் பள்ளிகொண்டிருந்தான். பகவானின் ஆபரணங்களும் கிரீடமும் ஓய்வு எடுத்துக்கொண்ட தகுணம் தான் அது. முக்கியமான ஒரு சில ஆபரணங்கள் மட்டும் விழிந்திருந்து வம்பு பேச முனைந்தது. செங்கணானின் திருவடிகளைப் பற்றிப் பரிணமித்திருந்த "பாதுகை" சற்று ஒதுக்கமாய் பகவானின் உத்தரவிற்குக் காத்திருந்தது. இதைப்பார்த்த மற்ற ஆபரணங்கள் கேலியாகச் சிரித்தனவாம். பரமபத நாதனின் அருகாமையிலேயே ஒரு கேலியா? எளிய புன்னகையுடன் பரமன் கவனிக்கத் தலைப்பட்டான். திருமுடியில் வீற்றிருந்த கிரீடம் கூறியது. "அந்தப் பாதுகையைப் பாருங்களேன், பாவமாக இருக்கிறது."


உடனே, சங்கமும், ஆழியும், "ஆமாம், ஆமாம் பகவானின் காலடியில் தேய்ந்து மிக மெலிந்து சிறியதாக இருக்கிறது. அது தெரியாமல் தன்னை என்னவோ மகா பாக்கிய சாலியாக எண்ணிக் கொண்டு, மதிப்பில் உயர்ந்தாக நினைத்து, மதர்ப்பாக இருக்கிறது. பார்த்தீர்களா?” என்று பரிகாசம் செய்தது.


"இப்படியொரு கீழான நிலையில் இருக்கும் போதே இதற்கு இப்படியொரு தலைகனமா?” என்று கிரீடம் ஏளனம் செய்தது. பாதுகை பவ்யமாகக் கேட்டுத் துன்பப்பட்டுச் சிரித்தது. என்ன இருந்தாலும் அது பகவானுக்குத் தொண்டு செய்யும் தொண்டனல்லவா? ஒருகாலில் சங்கு ஒருகாலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த இருகாலும் கொண்டு அங்கங்கு எழுதினாற்போல் இலச்சினை பட நடந்து செல்லும் கடல் வண்ணனைத் தாங்குகின்றவனாயிற்றே! எனவே, பதறாமல் பொறுத்திருந்தான்! உண்மையான பக்தனுக்குரிய தெய்வீக பக்தியிலே எம்பெருமானை எண்ணி உருகி நின்றான்! பகவான் கடாக்ஷம் திரும்பியது. 'ஆகா! உங்களுக்கு இவ்வளவு கர்வமா? எம்பிரான் தன் இதழோரம் ஒரு சிரிப்பை நெளிய விட்டான். அவன் மனத்தில் ஒரு தீர்மானம்! உடனே கண் விழித்தான்! சங்கும் சக்கரமும் அமைதியாகியது. கிரீடம் தன்னைச் சமாளித்துக் கொண்டது. பங்கயநீள் நயனத்தஞ்சன மேனியான், “எந்தப் பாதுகையை நீங்கள் பரிகசித்தீர்களோ, அந்தப் பாதுகைக்குச் சிம்மாசனம் அமரும் யோகமும், சங்கமும் சக்கரமும், சாமரம் வீசி அருகில் நின்று பணிவிடை செய்யவும், தாங்க முடியாத கர்வத்தில் திளைத்த கிரீடம் பதினான்காண்டுகள் சிறை வாசம் செய்யவும் வேண்டும்" என்று சத்ய சங்கல்பம் மனத்திற்கும் செய்து கொண்டான்! இது அவன் திருவுள்ளத்திற்கு அன்றி வேறு வெளியில் எப்படித் தெரியும்?


கால ஓட்டத்தில் திரேதாயுகம் பிறந்து நடந்து கொண்டிருந்தது. இறைவன் இராமாவதாரம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சக்ரவர்த்தித் திருமகனாகப் பிறந்து இருதய மகிழ்வுடன் வனவாசம் செய்யும் காலத்தில் கிரீடம் காராக்ஹ வாசம் செய்தது! பாதுகை சிம்மாசனத்தில் பட்டாபிஷேகம் செய்யப்பட்டு இருந்தாலும் எம்பெருமானைப் பிரிய நேர்ந்து விட்டதே என்ற வேதனையுடன் வீற்றிருந்தது! சங்கமும் சக்ரமும் பரத-சத்ருக்னர்களாகச் சாமர கைங்கரியம் செய்து கொண்டிருந்தனர்! அன்று அவன் திருவுள்ளத்தில் நினைத்தது, இன்று நடந்தது!


நன்றி - கீதாசார்யன் அக்டோபர் 1980


Post a Comment

புதியது பழையவை