விசிஷ்டாத்வைத ஸித்தாந்த ஸ்தாபகரானவரும், வைணவ ஜகதாசார்யராக விளங்குபவருமான
எம்பெருமானாருடைய மிக முக்யமான சீடரான கூரத்தாழ்வானைப் பற்றி குரு பரம்பரை நூல்கள் மிகப் பரக்கப் பேசுகின்றன. அத்தகைய குருபரம்பரை நூல்களிலும் அறிவிக்கப்படாத
அரும்பெருஞ் செய்திகள் பலவற்றை திவ்யப்ரபந்த வியாக்யானங்களில் காணப் பெறுகிறோம் என்கிற அமுதிலும் இனிய செய்தி நம்மை மேலும் உவகை கொள்ளச் செய்யும். எத்தனையோ விஷய ஈர்ப்புக்கள் அவற்றுள் இருந்தாலும், ‘கூரத்தாழ்வானைக் கண்டாயோ!’ என்ற மேலே குறிப்பிட்டுள்ள தலைப்பைப் பற்றிய வியத்தகு செய்தியையும், 'திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரஹஸ்யம்' என்ற க்ரந்தத்தில் ஆழ்வானைப் பற்றிக் கூறப்பட்டுள்ளதான 'அவன் வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே' என்ற வாக்யம் கூறும் பொருள் பற்றியும் இக்கட்டுரையில் ஆராய்வோம். விரிவுக்கஞ்சி
இவ்விரண்டைப் பற்றி மட்டும் அலசி, ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்ற பழமொழியின் ரீதியிலே, கூரத்தாழ்வானின் பெருமைகளை, ஆழ்வானின் அவதார தினமான தையில் அத்தத்தில் வையமறியப் பகர்வோம் வாய்ந்து.
இராமாநுசரின் புகழ்பாட திருவரங்கத்தமுதனாரால் அருளிச் செய்யப்பட்ட ‘இராமாநுச நூற்றந்தாதி’ தன்னில் தம் குருவான கூரத்தாழ்வானைப் பற்றி அமுதனார், ‘மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்சமுக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்’ என்று பெருமைபடப் பேசுகின்றார்.
முக்குறும்பு என்றால் மூன்று அகங்காரங்கள். கல்விச் செருக்கு, செல்வச் செருக்கு, குலச்செருக்கு என்கிற இந்த மூன்று கர்வங்களாகிற படுகுழியைக் கடந்து நிற்பவர் கூரத்தாழ்வான் என்று தன் குருவைப் போற்றுகிறார் அமுதனார்.
ஐதிஹ்யம் 1: 'வைணவ ஆசார்யர்களின் வாழ்வும் வாக்கும்' என்ற நூலிலிருந்து.
அந்நாளில் ராஜேந்திர சோழபுரத்தில் வாழ்ந்து வந்த அந்தணன் ஒருவனுடைய மகனுக்குப் பிற மதத்தவர்களோடு சிநேகம் ஏற்பட்டதன் விளைவாய்த் தலையை மொட்டை அடித்துக் கொண்டும் அத்தோடு கூட பூணூலையும் அறுத்துக் கொண்டும், வைணவத்துக்குப் புறம்பாக வசவு வார்த்தைகளையும், தகாத இழி சொற்களையும் பிதற்றிக் கொண்டும் திரிந்து கொண்டிருந்தானாம். அச்சமயத்தில் ஒரு நாள் கூரத்தாழ்வான் அவ்வூருக்கு எழுந்தருளியபோது அவருடைய திருக்கடைக்கண் பார்வை: அத்தகாத மனிதனின் மீதுபட்டுவிட, அக்கணமே அம்மனிதனுக்கு 'நல்ஞானம்' ஏற்பட்டு விட்டதாம். இராமபிரான் வனவாசத்தின் போது அவருடைய திருவடிகள் ஒரு
சாதாரண கல்லின் மீது பட, உடனே அக்கல்லும் வெகு காலத்தைய சாபம் நீங்கி, 'அகலிகை' என்ற ரிஷி பத்னியாக மாறினாள் என்ற புராண செய்தியை ஒப்பிட்ட செய்தியாகும்.
திருந்திய அந்தணன் மகன் மீண்டும் பூணூல் அணிந்து கொண்டு நெற்றியில் சின்னங்கள் அணிந்து தன் இல்லம் திரும்பிய போது, அவனுடைய தந்தை அவன் தன் பழைய நிலைக்குத் திரும்பியதைக் கண்டு அதி ஆச்சர்யத்துடன் அவனைப் பார்த்துக் கேட்கிறார், 'நீ கூரத்தாழ்வானைக் கண்டாயோ' என்று 'ஆம்' என்று அவன் பதிலிறுக்கிறான்.
‘எப்படிப்பட்ட தீயவர்களும் கூரத்தாழ்வானைக் கண்ட மாத்திரத்தில் திருந்தி விடுவார்கள்' என்பது இங்கு பெறப்பட்ட விசேஷ செய்தியாகும்.
பெண்பிள்ளை ரஹஸ்யம், ஆழ்வான் பற்றித் தெரிவிக்கும் நற்கருத்து (61-ம் வார்த்தை).
ஒரு சமயத்தில், இராமாநுசர், எம்பெருமானைச் சேவிப்பதற்காகத் திருக்கோளூர் நோக்கிச் செல்கிறார். அவ்வேளையில், எதிரே ஒரு பெண்மணி வந்து இராமாநுசரை வீழ்ந்து வணங்கி எழுந்தாள். இதனைக் கண்ணுற்ற எம்பெருமானார், அவளை நோக்கி, 'நீ எங்கிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்' என்று வினவ, 'நான் திருக்கோளூரிலிருந்து வருகிறேன். வேறு தேசம் நோக்கிப் போகிறேன்' என்றாள்.
உடனே இராமாநுஜர், 'இத்திருத்தலத்தே மிக்க காதல் கொண்ட நம்மாழ்வார், 'திண்ணம் என் இளமான் புகும் ஊர் திருக்கோளூரே' என்று ஆழ்வாரே சொல்கிறார். ஆழ்வார் புகும் ஊர் உனக்குப் புறப்படும் ஊர்ஆயிற்றே, இது ஏன்?' என்றார்.
அதற்குப் பதிலாக அப்பெண்பிள்ளை, தான் எங்கிருந்தாலும் ஒன்றுதான் எனவும் தன்னால் யாருக்கும் எந்த ஒரு பிரயோசனமும் இல்லையென்றும், மற்ற பெரிய மஹான்கள் போன்று, பகவானுக்குத் தொண்டு பட்டவர்களைப் போல இருப்பவர்களுக்குத் தகுதியில்லாத தன்னால் ஆவதில்லை எனக் கூறுகிறாள். அப்போது அம்மஹான்களாகக் குறிப்பிட்டுத் தான் அவர்களுக்கு ஒரு போதும் ஈடு ஆக மாட்டேன்' என்று கூறுகிறாள். அவள் கூறும் வார்த்தைகளில் ஒன்று தான். 'அவன் 'வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே' என்பதாம்.
அதன் பொருள்: சோழ அரசனின் உத்தரவுப்படி, "ராமாநுஜரைச் சேர்ந்தவர்கள் ஒருவரையும் திருவரங்கம் கோயிலுக்குள் அனுமதிக்கமாட்டோம்" என்று கூறிய சேவகனிடம், ஆழ்வான் “என்னுடைய ஆசார்யனின் திருவரங்கனைச் சேவிக்க அனுமதிக்கப்டாத வேளையில் என்னை, அனுமதித்து விட்டாலும் நான் போய் ரங்கநாதனைச் சேவியேன் என்று திருவரங்கத்தை விட்டே வெளியேறி விட்டார் ஆழ்வான். என்னே தன்னடக்கம்! என்னே ஆசார்ய பக்தி! ஆழ்வானுக்கு! என்று வியக்கிறோம், நாம் அனைவரும் எக்காலத்தும்.
நன்றி வைணவன் குரல் - பிப்ரவரி 2018

கருத்துரையிடுக