அதிகப் பார்வை

மண்ணை இருந்து துழாவி (திருவாய்மொழி அமுதம்) - ஸ்ரீ.உ.வே. வ.ந.கோபால தேசிகாசார்யர் ஸ்வாமி, ஒப்பிலியப்பன் ஸந்நிதி

மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும்
விண்ணைத் தொழுது அவன் மேவு வைகுந்தம் என்று கை காட்டும்
கண்ணை உள்நீர் மல்க நின்று கடல் வண்ணன் என்னும் அன்னே என்
பெண்ணைப் பெருமயல் செய்தார்க்கு என் செய்கேன் பெய்வளையீரே
நம்மாழ்வார் - திருவாய்மொழி 4.4.1
பெய்வளையீர் - அழகிய வளைகளை அணிந்த பெண்களே
மண்ணை இருந்து துழாவி - (என் பெண்ணான பராங்குச நாயகி) பூமியில் உள்ள மண்ணைத் தன் கைகளால் துழாவி
இது வாமனன் மண் என்னும் - இந்த மண், எம்பெருமான் வாமனன் ஆக அவதாரம் செய்து, தானம் பெற்ற மண் என்கிறாள்.
விண்ணை - மேலே ஆகாயத்தை நோக்கி
தொழுது - கைகளைக் கூப்பிக்கொண்டு
அவன் மேவு - என் அப்பன் நித்யவாசம் செய்கின்ற
வைகுந்தம் என்று - ஸ்ரீவைகுண்டம் என்று சொல்லி
கை காட்டும் - மேலே கையைக் காட்டுகின்றாள்
உள்நீர் - உள்ளே இருக்கும் ஜலம்
கண்ணை மல்க நின்று - கண்களிலிருந்து வெளியே ததும்ப
கடல் வண்ணன் என்னும் - கடல் போன்ற கருமை நிறம் உடையவன் என்று சொல்கிறாள்
அன்னே - ஐயோ! (அம்மா!)
என் பெண்ணை - என்னுடைய இளம் பெண்ணை
பெருமயல் செய்தார்க்கு என் செய்கேன் - இப்படிக் காதல் பித்தேறும்படிப் பண்ணினான் பெருமான். அதற்கு நான் என்ன செய்வேன்?
இந்தப் பதிகத்தில் ஆழ்வார் பெண் தன்மையை ஏறிட்டுக் கொள்கிறார். அதாவது, தம்மை நாயகியாகவும், திருமாலை நாயகன் ஆகவும் மனதில் நினைத்துக் கொண்டு, இந்தப் பதிகத்தைப் பாடுகிறார். இதற்கு வடமொழியில் நாயகி பாவம் அல்லது நாயக நாயகி பாவம் என்று பெயர்.
ஆழ்வார் இப்படிப் பெண் தன்மையை ஏறிட்டு கொள்ளும்போது, வைணவர்கள் அவரை பராங்குச நாயகி என்று செல்லமாக அழைக்கின்றனர். ஆழ்வார் பெண் தன்மையில் இப்படிப் பாடும் பதிகங்களும் மூன்று வகைப்படும்.
1. ஆழ்வாரான பராங்குச நாயகி தானே பாடும் பதிகம்
2. பராங்குச நாயகியின் தாய், தன் மகளின் நிலைமையைச் சொல்வதாக அமைந்துள்ள பதிகம்
3. பாங்குச நாயகியின் தோழி அந்தப் பராங்குச நாயகியின் நிலைமையைச் சொல்வதற்காக அமைந்துள்ள பதிகம்.
இந்தப் பதிகம் பராங்குச நாயகியின் தாய், தன் மகளின் நிலைமையைச் சொல்வதாக அமைந்துள்ளது. சென்ற பதிகத்தில், ஆழ்வார் திருமாலுடன் சேர்ந்து கலந்ததால் உண்டான ஆனந்த அனுபவத்தில் திளைத்தார். நாம் நம் குழந்தைகளைச் சீண்டி விளையாடுகிறோம் அல்லவா? குழந்தை அழத் தொடங்கினால், அதற்கு வேண்டியதைக் கொடுத்து, குழந்தையைச் சமாதானப் படுத்துகிறோம்.
அதைப்போலவே, திருமாலுக்கும் தன் அடியார்களைச் சீண்டி விளையாடுவதில் ஆசை. அதனால் ஆழ்வாருடைய மானசீக அனுபவத்திலிருந்து விலகிவிட்டான். பெருமானுடைய அனுபவம் தொடர்ந்து கிடைக்காமல், விரக தாபத்தால் வேதனைப்பட்டார் ஆழ்வார். அந்த வேதனையை வெளிக் காட்டுவதாக அமைந்துள்ளது இந்தப் பதிகம்.
பராங்குச நாயகியின் வேதனையான இந்த நிலைமையை, அவளுடைய தாய் இந்தப் பதிகத்தில் விவரிக்கிறாள். ஒருவன் தான் சேமித்து வைத்த செல்வத்தை எல்லாம் மூட்டையாகக் கட்டி வைத்திருந்தான். ஒருநாள் அந்தப் பணமூட்டை தொலைந்து விட்டது. அழுது அரற்றினான் அந்தப் பேதை. பிறகு வீட்டில் உள்ள மூட்டைகளை எல்லாம் அவிழ்த்து, அவிழ்த்துப் பார்த்தான். ஒருக்கால் அதுதான் பணமூட்டையோ என்று.
அதுபோலவே பராங்குச நாயகியும் பெருமானைப் போலவே உள்ள வஸ்துக்களைப் பார்த்து, அவை பெருமாள் தானோ என்று பிரமிக்கிறாள். அதாவது பெருமானைப் போன்ற கருமை நிறம் உடையவையான ஆகாயத்தில் உள்ள மேகம் நீலக்கடல், நீல ரத்தினம், பச்சை மரங்களையும் காடுகளையும் கொண்ட பச்சை மாமலை அவனுடைய கண்களை நினைவூட்டும் தாமரைப் பூக்கள், சிவந்த வாயை நினைவூட்டும் கோவைக்கனி, வெண்மையான பற்களை நினைவூட்டும் முத்துக்கள் போன்றவை மறுபடியும் பெருமானோடு சம்பந்தப்பட்ட வஸ்துக்களைப் பார்த்து, அவற்றில் அவனை கண்டு பிரமிக்கிறாள்.
அதாவது, கண்ணபிரான் ஊதிய புல்லாங்குழல் அவன் சூடியிருந்த மயிற்பீலி, அவன் மேய்த்து பசுமாடுகள், அவன் திருடித்தின்ற வெண்ணெய் முதலியன. இவை எல்லாவற்றையும் கண்டு, தன் நாயகன் திருமால்தானோ என்று முதலில் பிரமிக்கிறாள் பராங்குச நாயகி. பிறகு அவல் அல்லன் என்று தெரிந்து மீண்டும் துக்கத்தில் ஆழ்கிறாள்.
சீதையைப் பிரிந்த ராமபிரான், பித்துப் பிடித்தவனாக ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கும், ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்கும், ஒரு நதியிலிருந்து மற்றொரு நதிக்கும் ஓடி அலைந்தார். கடம்பை மரம், வில்வமரம் மருதமரம், அசோகமரம், யானை, புலி, மான் எல்லாவற்றையும் சீதையைக் கண்டாயோ? என்று கேட்டு அழுதார். சுற்றிச் சுழன்று சீதை தென்படுகிறாளோ என்று பார்த்தார். மேலே வானத்தில் பார்த்தார். கீழே பூமியில் பார்த்தார். பித்துப் பிடித்தவர் ஆனார். (ஆரண்யகாண்டம் - 60)
அப்படி சீதையைப் பிரிந்து ராமன் பட்டபாட்டை, இப்போது திருமாலைப் பிரிந்த பராங்குசநாயகி படுகிறாள்.
இந்தப் பதிகம் முழுவதிலும் நம்மாழ்வாரான பராங்குச நாயகியின் தாயார், தன் மகளின் பித்தான நிலையைத் தோழிகளிடம் அங்கலாய்ப்புடன் கூறுகிறாள். தோழிகளே, நீங்கள் உள்ளமும் உடலும் பூரிப்புடன் கைகளில் அழகிய வளைகளை அணிந்து இருக்கிறீர்கள். ஆனால் என் மகளோ எம்பெருமான் மேல் பித்துப் பிடித்து, அவன் காட்சி தராததால் உடலும் உள்ளமும் மெலிந்து இருக்கிறாள். அவள் கைகளும் மெலிந்து, கை வளைகள் நழுவி விழுந்துவிட்டன.
எங்கும் மழை பெய்து, வெள்ளக் காடாக இருக்கும் நிலையில், பூமியில் நடக்கும் போது, கால்கள் நனையாமல் இருப்பவர்களும் உண்டோ? அதுபோல, இங்கே எல்லாரும் திருமாலை நினைந்து பித்தாக இருக்கின்றார்கள். ஆனால் நீங்களோ, திருமாலைப் பற்றிய நினைப்பு இல்லாமல், அவன் காட்சி தரவில்லையே என்ற வருத்தமும் இல்லாமல், இப்படிப் பூரிப்புடன் இருக்கிறீர்கள்.
திருமாலை நினைக்காமல் இருக்கும் இந்த வித்தையை நீங்கள் எங்கே கற்றீர்கள்? அந்த மாயத்தைச் சொல்லுங்கள். திருமால் மேல் பித்தாக இருக்கும் என் மகளையும் சரி செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்.
இப்போது என் மகள், மனம் ஒரு நிலையில் இல்லாமல், ஓர் இடத்தில் நிற்காமல், நடக்காமல், படுக்காமல் அலைந்து கொண்டே இருக்கிறாள். கீழே பூமியைக் கைகளால் அளைந்து கொண்டே இருக்கிறாள். பழங்காலத்தில் கிராமங்களில், வெய்யிலின் சூட்டைத் தணிப்பதற்கு, ஆண்களும், பெண்களும் சந்தனத்தைத் தங்கள் உடலில் பூசிக் கொள்வார்கள். அதுபோல, காதலன் அல்லது கணவன், தன்னை விட்டு வேறு ஊருக்குச் சென்ற போது, அவனைப் பிரிந்த தாபம் தாங்க முடியாமல், பெண்கள் தங்கள் மார்பில் வெப்பத்தைத் தணிக்கச் சந்தனம் பூசிக் கொள்வார்கள் என்று கவிகள் கூறுகின்றனர். இப்படிப் பிரிவாற்றாமையால் ஏற்படும் தாபத்துக்கு, வடமொழியில் விரக தாபம் என்று பெயர்.
அதுபோல, என் மகளுக்கு பூமியைப் பார்த்ததும், திருமாலின் ஞாபகம் வந்து விட்டது. அதனால் அவனுடன் சம்பந்தப் பட்ட பூமி என்று அந்த மண்ணை அடிக்கடிக் கைகளால் துழாவிக் கொண்டே இருக்கிறாள். விரக தாபத்துக்குச் சந்தனம் ஒரு மருந்து போல, இவளுக்கு இந்த மண்ணும் ஒரு மருந்தாக இருக்கிறது.
என் மகள் இந்த பூமி. என் திருமால் வாமனனாக அவதாரம் செய்து, மகாபலியிடம் தானமாகப் பெற்றது அல்லவா. என் அப்பனுடைய எளிமை தான் என்ன! தன்னைச் சரணம் அடைந்த தேவர்களுக்கு உதவுவதற்காக, தன்னையே தாழ்மைப் படுத்திக் கொண்டு, மகாபலியிடம் மூன்றடி மண்ணை தானமாக வேண்டி நின்றான்.
பிறகு த்ரிவிக்ரமனாகப் பேருருவம் எடுத்து வளர்ந்தான். தன் பாதங்களால் எல்லா உலகங்களையும், இந்த மண்ணையும் அளந்தான். இப்படி, அவனுடைய பாதம் படும்படியான பாக்யம் செய்தது இந்தப் பூமி, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து தத்துவங்களும் ஐம்பெரும் பூதங்கள் (பஞ்ச பூதங்கள்) என்று சொல்லப்படுகின்றன. இவற்றுள், பூமி அல்லது நிலத்திற்கு உண்டான தனிப்பெருமை மணம் அல்லது வாசனை ஆகும். இந்தக் குணம் மற்ற நான்கு பூதங்களுக்கும் கிடையாது. அதனால் தான் நாம் இன்றும் மண் வாசனை என்று சொல்லுகிறோம்.
மண்ணுக்கு இந்த வாசனை எப்படி வந்தது? திருமாலை நறுமணம் உடையவன், இனிமையானவன் என்று வேதம் புகழ்கிறது. (ஸர்வ கந்த: ஸர்வ ரஸ: சாந்தோக்ய உபநிஷத் -3-14-2), அந்த நறுமணமுடைய திருமாலின் பாதம் தன் மேல் பட்டதால் தான், பூமிக்கும் மணம் அல்லது வாசனை வந்தது.
விச்வாமித்ர முனிவரின் சொல்படி, ராமபிரான் தாடகையை வதம் செய்த பிறகு, அவர்கள் சித்தாச்ரமம் என்னும் புனிதத் தலத்திற்கு வந்தனர். அதன் மகிமையைப் பற்றி விச்வாமித்ரர் திருமால் தவம் செய்து சித்தி அடைந்த தலம் ஆதலால், இந்தப் புனித பூமி சித்தாச்ரமம் என்று அழைக்கப் படுகிறது. வாமன மூர்த்தியாக அவதாரம் செய்த போது, இங்குப் பெருமான் இருந்தான். அவன் பாதம் பட்ட இந்தப் பூமியை நான் முகர்ந்து கொண்டு கிடக்கிறேன் என்றார். (...வாமனஸ்ய உபபுஜ்யதே-ராமாயணம் பாலகாண்டம் -29-23).
விச்வாமித்ர முனிவர், வாமனன் பாதம் பட்ட சித்தாச்ரமத்து மண்ணை முகர்ந்து கொண்டு கிடந்ததைப் போல, என் மகள் பராங்குச நாயகியும், வாமனன் பாதம் பட்ட மண் என்று இந்தப் பூமியைத் துழாவிக் கொண்டிருக்கிறாள். பிறகு மேலே வானத்தைப் பார்க்கிறாள் என் மகள்.
வாமனனாக அவதாரம் செய்த காலம் முடிந்து விட்டது. அதனால் அவனை இப்போது தரிசிக்க இயலாது. ஆனால், எப்போதும் அவன் நித்ய வாசம் செய்யும் வைகுண்டம் அல்லவா இது என்று அந்த வானத்தை நோக்கிக் கை கூப்பித் தொழுகிறாள்.
ஆனால் மிகவும் நலிந்த நிலையில் என் மகளால் பேசக் கூட முடியவில்லை. ஆகவே வைகுண்டம் என்று, அந்த வானத்தை நோக்கிக் கையை மட்டும் காட்டுகிறாள். எல்லாமே பெருமானுடைய சொத்து. ஆனால், மகா ப்ரளயத்தின் போது, எல்லா உலகங்களுமே அழிந்து விடும். வைகுண்டம் மட்டும்தான் அழியாமல் இருக்கும். அதனால், வைகுண்டம் நித்ய விபூதி என்று அழைக்கப்படும். (நித்ய = அழியாதது, விபூதி = சொத்து). இந்த உலகங்கள் லீலா விபூதி என்று அழைக்கப்படும். (லீலா விபூதி = படைத்தல், அழித்தல் போன்ற பகவானுடைய லீலைகளால் ஏற்படுபவை).
முதலில் இந்தப் பூமியாகிற பகவானுடைய லீலா விபூதியைப் பார்த்த என் மகள், பிறகு நித்ய விபூதி ஆகிய வைகுண்டத்தைப் பார்க்கிறாள். அங்கே வைகுண்டத்தில், மோட்சத்தை அடைந்த முக்தர்களும், நித்ய சூரிகளும் எப்போதும் எம்பெருமானை தரிசித்துக் கொண்டே இருக்கிறார்களே; நமக்கு அந்த பாக்யம் இன்னும் கிட்டவில்லையே என்று மறுகுகிறாள் என் பெண். இதை நினைத்து நினைத்து, அவள் கண்களில் இருந்து கண்ணீர் வெள்ளமாகப் பெருகுகின்றது.
இப்படித் தன் கண்களில் இருந்து கண்ணீர் கடல் போலப் பெருகுவதைக் கண்டாள் என் பெண். உடனே கடல் போன்ற கருநீல நிறம் கொண்ட பெருமானுடைய நினைவு வந்து விட்டது. கடல் வண்ணனே என்று அழைக்கிறாள். முதலில் திருமாலுடன் சம்பந்தப் பட்ட பூமியையும், ஆகாயத்தையும் பார்த்து, அவனுடைய நினைவு என் மகளுக்கு வந்தது. இப்போது, அவனைப் போன்ற நிறத்தை உடைய கடலை (கண்ணீர்) வெள்ளம் பார்த்து, அவனுடைய நினைவு வருகிறது.
ஐயோ, என் பெண்ணை இப்படி மயக்கி, பித்தேறும்படிச் செய்து விட்டானே திருமால்.
இவள் துக்கப்படுவது பெருமானுக்குத் தெரியாமல் இருந்தால், அவனிடம் இதைச் சொல்லலாம். ஆனால் அவனோ எல்லாம் ஏறிந்தவன் என்று வேதங்கள் போற்றுகின்றன. (ஸர்வஜ்ஞ: ஸர்வவித் - முண்டக உபநிஷத் - 2-7) அதனால் இவள் துக்கத்தை அறியாதவனா அவன்? மேலும், இவள் துக்கத்துக்குக் காரணமே அவன் தானே. அவன் தரிசனம் தராததால் தானே, இவள் துக்கக் கடலில் ஆழ்ந்து கிடக்கிறாள். இப்போது நான் என்ன செய்வேன்?
திருமாலை இங்கு வரும்படிச் செய்வேனா? அது என்னால் எப்படி முடியும்?
இவளுக்கு மகளே பொறுத்திரு, காலம் கனிந்து வரும் என்று ஆறுதல் கூறுவேனா? அப்படிக் கூறினால், தேறியிருக்கும் நிலையிலா இருக்கிறாள்?
நடப்பது நடக்கட்டும் என்று நான் தான் பொறுத்திருப்பேனா? என் மகளின் துக்கத்தைக் கண்டு, என்னால் அது எப்படி முடியும்?
இப்படியெல்லாம் தோழிகளிடம் கூறி அலற்றுகிறாள் பராங்குசநாயகியின் தாய்.
நன்றி - ஶ்ரீ ந்ருஸிம்ஹப்ரியா அக்டோபர், நவம்பர் 2013

Post a Comment

புதியது பழையவை