அதிகப் பார்வை

ஆண்டாள் - பூமிகா


தாத்தா: குழந்தைகளே! இன்று நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். எல்லோரும் வாருங்கள்.

கண்ணன்: நீங்கள் என்ன கதை சொல்லப் போகிறீர்கள் என்பதை நான் சொல்லட்டுமா தாத்தா?
தாத்தா: ம்! சொல்லு பார்க்கலாம்.
கண்ணன்: இது ஆடி மாதமில்லையா? அதனால் ஆடிப் பூரத்தன்று அவதரித்த ஆண்டாளின் கதையைத் தானே கூறப்போகிறீர்கள்.
தாத்தா: சரியாகச் சொன்னாய் கண்ணா. முன்பே ஒரு முறை நான் உங்களுக்கு ஆண்டாள் கதையைச் சொல்லியிருந்தாலும், இப்போது மேலும் பல விவரங்களைச் சேர்த்துச் சொல்லப் போகிறேன். உங்களுக்கு ஆண்டாளைத் தெரியுமில்லையா? கோதையைத் தெரியுமோ?
ஸ்ரீதேவி: ஆண்டாள் தானே கோதை தாத்தா.
தாத்தா: ஊகூம்! கோதைதான் ஆண்டாள்.
நாராயணன்: என்ன தாத்தா சொல்கிறீர்கள்?
தாத்தா: பெரியாழ்வார் கண்டெடுத்த பெண் கோதைதான். அவளுக்கு ஆண்டாள் என்ற பெயர் எப்படி வந்தது என்று கூறுகிறேன் கேளுங்கள்.
கண்ணன்: சொல்லுங்கள் தாத்தா! எங்களுக்கு கேட்க ஆசையாக உள்ளது.
தாத்தா: ஒரு நாள் விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார் திருத்துழாய்ச் செடி நடுவதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூரில் தம் நந்தவனத்தைக் கொத்தும் போது, அந்த இடத்தில் ஒரு பெண் குழந்தையைக் கண்டார்.
நாராயணன் : அந்தக் குழந்தை ஆண்டாள் தானே தாத்தா.
தாத்தா: ஆம். பெரியாழ்வாருக்கோ குழந்தையில்லை. அதனால் இந்தக் குழந்தையைத் தாம் எடுத்து வளர்த்ததோடு, கோதை என்ற பெயரும் இட்டார்.
ஸ்ரீதேவி: அப்புறம் எனக்குத் தெரியும் தாத்தா, நான் சொல்லட்டுமா.
தாத்தா: எங்கே சொல்லு பார்க்கலாம்.
ஸ்ரீதேவி: பெரியாழ்வார் கோதைக்கு எல்லாவித கல்விகளையும் கற்பித்தார். கோதையும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வந்தாள். தினமும் பெரியாழ்வார் வட பெருங்கோயிலுடையானுக்கு அணிவிப்பதற்காகப் பூக்களைத் தாமே பறித்து, மாலை தொடுத்து வைப்பார். அதனை அவர் இல்லாத சமயம் பார்த்து தன் கழுத்தில் அணிந்து, கண்ணாடி முன் நின்று கொண்டு நான் எம்பெருமானுக்கு ஏற்றவளா? என்று அழகு பார்த்து விட்டு, அதனை நலுங்காமல் அப்படியே வைத்து விடுவாள்.
நாராயணன்: மீதியை நான் சொல்கிறேன் தாத்தா!
தாத்தா: பரவாயில்லையே உங்களுக்குக் கூட ஆண்டாளின் கதை தெரிந்திருக்கிதே.
நாராயணன்: ஒரு நாள் அவ்வாறு செய்து கொண்டிருக்கும் போது உள்ளே வந்த பெரியாழ்வார், அதைப் பார்த்து அவளைக் கோபித்து "ஐயோ,! கோதாய், என்ன காரியம் அம்மா செய்து விட்டாய்! எம்பெருமானுக்கு வைத்திருந்த மாலையை நீ அணிந்து விட்டாயே! அவன் அணிந்த மாலையை நாம் அணியலாமே தவிர நாமணிந்த மாலையை அவன் அணிவதா? இன்று வேறு மாலையும் இல்லையே" என்று அழுது விட்டார்.
கண்ணன்: அப்படியானால் அன்று பெருமாளுக்கு மாலை சாத்தவில்லையா?
தாத்தா: ஆம்! அன்று எம்பெருமானுக்கு மாலை சாத்தவில்லை. ஆனால் அன்றிரவே திருமால், பெரியாழ்வார் கனவில் தோன்றி "இன்று ஏன் எனக்கு மாலை சாத்தவில்லை?'' எனக் கேட்க, பெரியாழ்வார் தம் மகள் செய்த செய்கையைக் கூற, திருமாலும் “அவள் அணிந்த மாலை தான் மிக்க மணமுடனும், பொலிவுடனும் உள்ளது. ஆகையால் இனிமேல் அவள் சூடிக்களைந்த மாலைகளையே கொண்டு வாரும்” என்று கூறினார்.
ஸ்ரீதேவி: தாத்தா ஒரு சந்தேகம். சிறியவர்கள் அணிந்த மாலையைப் பெரியவர்கள் அணிந்து கொண்டால். அவர்களுக்கு ஆயுசு குறையும் என்பார்கள் இல்லையா? அப்படியிருக்க ஆண்டாள் அணிந்த மாலையைத் திருமால் அணிந்து கொண்டால் அது தப்பில்லையா?
தாத்தா: நன்றாகக் கேட்டாய். உன் சந்தேகத்தை நான் தீர்த்து வைக்கிறேன். திருமால் எல்லாவற்றையும் அறியும் வல்லமை படைத்தவனல்லவா! எம்பெருமானுக்கு ஆண்டாள் தன் தர்ம பத்தினியாக வரப்போகிறாள் என்பது தெரியும். அது இருக்கட்டும். நீங்கள் திருமணங்களுக்குச் சென்றிருக்கும் போது, அங்கே கல்யாணப் பெண்ணும் பிள்ளையும் மாலை மாற்றிக் கொள்வதைப் பார்த்திருக்கிறீர்களா?
கண்ணன்: ஓ! பார்த்து இருக்கிறோம் தாத்தா.
தாத்தா: அந்தப் பழக்கமே இந்த ஆண்டாளினால் தான் ஏற்பட்டது. அதாவது கணவனை விட மனைவி சிறியவளாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதிலே இருவருடைய மனமும் சமமாக இருப்பதால், கணவனும் மனைவியும் மாலை மாற்றிக் கொள்கிறார்கள். அதனால் ஆண்டாள் அணிந்த மாலையை, திருமால் அணிந்து கொண்டதில் தவறேதும் இல்லையே!
நாராயணன்: இப்போது எங்களுக்கு நன்றாகப் புரிகிறது தாத்தா. ஆனால் கோதைக்கு ஆண்டாள் என்ற பெயர் எப்படி வந்தது என்று கூறவில்லையே!
தாத்தா: அவள் பருவ வயது வந்ததும் பெரியாழ்வார் அவளுக்குத் திருமணம் செய்ய எண்ணினார். ஆனால் ஆண்டாளோ கண்ணன் மீது ஆறாத காதல் கொண்டு, அவனையே கணவனாக அடையத் தீர்மானித்தாள். அனைத்துலகுக்கும் அன்னையாய் ஆண்டு வருகிற பூமிதேவியின் அவதாரமாகையாலே ஆண்டாள் என்று பெயர் பெற்றாள் என்பர் சிலர். எம்பெருமானிடத்து மிகுந்த பக்தி கொண்டு ஆழ்ந்தாள் என்பதால் ஆண்டாள் எனப்பட்டாள் என்றும் சிலர் கூறுவர். இவ்வாறு ஆண்டாள் பகவானையே கணவனாக அடைய விசேஷ நோன்பும் நோற்றாள்.
கண்ணன்: அது திருப்பாவை நோன்பு தானே தாத்தா.
தாத்தா: ஆம். ஸ்ரீ வைஷ்ணவன் என்பதற்கு அடையாளமாக நீங்களும் திருப்பாவையைத் தினமும் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்ல இயலாதவன் 'சிற்றஞ் சிறுகாலே என்ற ஒரு பாசுரமாவது சொல்ல வேண்டும். அந்த ஒரு பாசுரமே திருப்பாவை முழுதும் சொன்னதின் பலனைக் கொடுக்கும்' என்று பெரியவர்கள் பெரியவர்கள் சொல்லுவார்கள்.
குழந்: சரி தாத்தா! நீங்கள் சொன்னபடியே. இனிமேல் நாங்கள் தினமும் திருப்பாவை சொல்கிறோம்.
தாத்தா: நான் உங்களுக்கு ஓர் அதிசயத்தைக் கூறப் போகிறேன். அதாவது ஆண்டாளுக்கு ஒரு அண்ணன் உண்டு தெரியுமோ?
ஸ்ரீதேவி: என்ன தாத்தா சொல்கிறீர்கள், நீங்கள் சொல்லுவது புதுமையாய் இருக்கிறதே. ஆண்டாள் பெரியாழ்வாருக்கு ஒரே பெண் தானே.
தாத்தா: நான் கூறுவதைக் கேளுங்கள். திருமாலிரும்சோலையில் எழுந்தருளியுள்ள அழகருக்கு, ஆண்டாள் நூறு தடா வெண்ணெயும், நூறு தடா அக்கார வடிசிலையும் வாயாலே சொல்லி, அதனை எம்பெருமான் ஏற்றுக் கொள்வானா? என்று நாச்சியார் திருமொழியில் 'நாறு நறும் பொழில்' என்ற பாட்டில் கூறியிருக்கிறாள்.
ஸ்ரீதேவி : என்ன தாத்தா நீங்கள்? ஆண்டாளின் அண்ணனைப் பற்றிக் கூறாமல் ஏதேதோ சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்.
தாத்தா: இரு அவசரப்படாதே, அவள் அந்த மாதிரி சொன்னதை நிறைவேற்ற எண்ணி வெகு காலத்திற்குப் பிறகு எம்பெருமானார் நூறு தடா வெண்ணெயும், நூறு தடா அக்கார வடிசிலையும் திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளியுள்ள அழகருக்கு, ஸமர்ப்பித்து விட்டு, திரும்பி வரும் வழியில் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று ஆண்டாளைச் சேவிக்கச் சென்ற போது, ஆண்டாள் அர்ச்சா சமாதியைக் கடந்து, ஓடி வந்து எம்பெருமானாரைக் கட்டிக் கொண்டு "எம் அண்ணரே" என்று உகப்புடன் கூறினாள்.
நாரா: அப்படியானால் எம்பெருமானார்தான் ஆண்டாளுக்கு அண்ணனா?
தாத்தா: ஆம்! தங்கையின் ஆசையைப் பூர்த்தி செய்பவனே அண்ணன். ஆண்டாள் வாயால் சொல்லி வைத்ததை, உடையவர் பூர்த்தி செய்ததால் அவர் ஆண்டாளுக்கு அண்ணன் தானே? அதனால் தான் ஆண்டாளின் வாழி திருநாமத்தில் 'பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே' என்று வாழ்த்தப் படுகிறாள். இப்போது புரிந்ததா?
நாராயணன்: நல்லது தாத்தா. நீங்கள் எங்களது சந்தேகத்தைப் போக்கினீர்கள். ஆனால் ஆண்டாளது கல்யாணத்தைப் பற்றி கூறவேயில்லையே.
தாத்தா: இப்போது அதைத்தான் கூறப் போகிறேன், பெரியாழ்வார் 'நீ யாரை மணக்க விரும்புகிறாய்? என்று ஆண்டாளைக் கேட்க, அதற்கு அவள் 'மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்' என்று கூறுகிறாள்.
ஸ்ரீதேவி: எங்களுக்கு அர்த்தமே புரியவில்லை தாத்தா.
தாத்தா: அதாவது அந்த புருஷோத்தமனைத் (திருமாலை) தவிர வேறு யாராவது ஒருத்தருக்கு (மனுஷ்யர்) என்னைத் தாரை வார்த்துக் கொடுக்கலாம் என்ற பேச்சை, யாராவது ஒருத்தர் சொன்னால் கூட, அந்த நிமிஷமே உயிரை விட்டு விடுவேன் என்று கூறுகிறாள்.
நாராயணன்: அப்புறம்?
தாத்தா: பெரியாழ்வாரே 'இது எப்படி நடக்கும்?' எனக் கவலைப் பட்டுக் கொண்டிருக்க, எம்பெருமான் அவர் கனவில் தோன்றி நீர் உம் மகளை அழைத்துக் கொண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வாரும்; அவளை நானே கல்யாணம் செய்து கொள்கிறேன்' எனக் கூற, பெரியாழ்வாரும் கவலையை விடுத்து, தம் பெண்ணான ஆண்டாளை முத்துப் பல்லக்கிலே, கோவிலுக்கு அழைத்துச் செல்ல, திருமாலும். 'வாரணமாயிரம்' என்ற பதிகத்தில் ஆண்டாள் விரும்பியது போலவே மனம் செய்து கொண்டு, அவள் கண்ட கனவை நனவாக்கினார்.
குழந்: ஆண்டாள் கதையை இவ்வளவு அழகாகச் சொன்ன உங்களுக்கு நன்றி தாத்தா.
தாத்தா: இருங்கள் முக்கியமானதைக் கேட்காமல் நன்றி சொல்லி விட்டீர்களே? ஆண்டாள் தானும் புகழடைந்ததோடு, தன் தந்தையையும் புகழடையச் செய்தாள். அது போலவே நீங்களும் நல்ல புகழோடும், பெருமையுடனும் விளங்குவதோடு மட்டுமல்லாமல் உங்களைப் பெற்றவருக்கும் புகழைத் தேடித் தரவேண்டும். உங்களுக்கு எனது நல் ஆசிகள்.
நன்றி - கீதாசார்யன் ஜூலை 1981

Post a Comment

புதியது பழையவை