கண்ணபிரான் பகவத் கீதையில், “மாதங்களில் நான் மார்கழி” என்று அருளிச் செய்கிறார். அதேவேளை, புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் திருவேங்கடமுடையானை நினைத்து விரதம் இருந்து வழிபடுவதற்கு உகந்த நாட்களாகப் பல குடும்பங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் வழிபடும் குடும்பங்களில் ‘தளு’ அதாவது ‘தளிகை’ போட்டு வழிபடும் மரபு தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ‘தளிகை’ என்பது இறைவனுக்காக உணவைத் தயாரித்து, அதனை நைவேத்தியமாகச் சமர்ப்பிப்பதைக் குறிக்கும்.
ஒவ்வொரு குடும்ப மரபுக்கு ஏற்ப நைவேத்தியப் பொருட்கள் மாறுபட்டாலும், பெரும்பான்மையான வீடுகளில் தேங்காய் சாதம், தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை போன்ற பலவகை சாதங்களுடன் உளுந்து வடை, சுண்டல், பானகம் போன்றவையும் தளிகையில் இடம்பெறும்.
சில வீடுகளில் வாழை இலையில் பலவகை சாதங்களை அழகாக அமைத்து, வெங்கடாஜலபதியின் திருவுருவத்தை நினைவூட்டும் வகையில் அலங்கரித்து, தீப-தூப ஆராதனை செய்து, “கோவிந்தா! கோவிந்தா!” என்று திருநாமம் சொல்லி வழிபடுகின்றனர்.
தயிர் சாதம் நைவேத்தியங்களில் முக்கியமான ஒன்றாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. பெருமாளுக்கு உகந்ததல்லவா!.
சில வைணவக் குடும்பங்களில் புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கு ஏற்றும் வழக்கமும் சிறப்பாக நடைபெறுகிறது.
மாவிளக்கைப் பற்றிய பல்வேறு ஐதீகங்கள் குடும்பம் மற்றும் அந்தந்த இடங்களின் மரபுகளுக்கு ஏற்ப கூறப்படுகின்றன. அவற்றில், அரிசி மாவால் உருவாக்கப்படும் சிறிய மலை வடிவம் திருமலை மலையை நினைவூட்டுவதாகவும், அதன் உச்சியில் மாவிளக்கை வைத்து அதில் ஏற்றப்படும் தீபம் நம் உள்ளத்தில் இருக்கும் அறியாமை இருளை அகற்றி ஞான ஒளியை ஏற்றுவதாகவும் கருதப்படுகிறது.
மாவிளக்கைத் தயாரிப்பதும் எளிமையானதுதான்.
பச்சரிசியை நன்றாக ஊறவைத்து, பின்னர் நிழலில் உலர்த்தியோ அல்லது பச்சரிசியை நேரடியாக இடித்தோ மாவாக்கிக் கொள்ள வேண்டும். அதனுடன் தூய நாட்டு சர்க்கரை அல்லது தூள் வெல்லம், ஏலக்காய், சிறிதளவு பச்சைக் கற்பூரம் ஆகியவற்றைச் சேர்த்து, நெய்யுடன் நன்கு கலந்து, சிறிய மலைபோல் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர், சிறிதளவு அரிசி மாவை எடுத்து, பசும்பாலைத் துளித்துளியாகச் சேர்த்து, நடுவில் சிறிய குழியுடன் விளக்கு வடிவில் செய்து கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் ஒரு சிறிய வாழை இலை அல்லது தாம்பாளத்தின் மீது ஏற்கனவே செய்து வைத்துள்ள மாவு மலையின் உச்சியில் இந்த மாவிளக்கை வைத்து, அதன் நடுவில் உள்ள குழியில் தூய பசு நெய் ஊற்றி, பருத்தித் திரி அல்லது மரபுப்படி பயன்படுத்தப்படும் திரியை வைத்து தீபம் ஏற்றலாம்.
தீபம் ஏற்றிய பின்னர், துளசி இலைகளால் பெருமாளை அர்ச்சித்து, கற்பூர ஆரத்தி காட்டி, “கோவிந்தா! கோவிந்தா!” என்று திருநாமம் சொல்லி வழிபடுவது வழக்கம். திருநாமங்களில் ‘கோவிந்தா’ நாமத்திற்கு தனிச்சிறப்பு உண்டல்லவா!
தீபம் மலையேறியப் பின்னர், மாவிளக்கின் மாவை பிரசாதமாகக் குடும்பத்தினருக்கு வழங்குவது பல வீடுகளில் கடைப்பிடிக்கப்படும் மரபாகும்.
மாவிளக்கின் வெளிப்புறச் சடங்கைக் கடந்து அதன் உள்ளார்ந்த பொருளைப் பார்க்கும்போது, அது ஒரு அழகான ஆன்மிகச் செய்தியை நமக்கு எடுத்துச் சொல்கிறது.
விளக்கின் ஒளி – ஞானத்தின் ஒளி.
நீங்கும் இருள் – அறியாமையின் இருள்.
நம் வாழ்க்கையில் அறியாமை, பயம், கவலை, குழப்பம் போன்ற இருள்கள் சூழும்போது, பெருமாளின் திருவருள் நம் உள்ளத்தில் நல்ல சிந்தனையையும் தெளிவையும் பக்தியையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த வழிபாட்டின் ஆன்மிகப் பொருளாகக் கொள்ளலாம்.
மாவிளக்கில் ஏற்றப்படும் சிறிய தீபம், நம் உள்ளத்தில் ஏற்ற வேண்டிய பக்தி என்னும் பெரும் ஒளியை நினைவூட்டுகிறது.
பெருமாள் திருமலையில் திருவேங்கடமலையின் மீது நின்று உலக உயிர்கள் அனைத்திற்கும் அருள்பாலிப்பது போல, நம் இல்லங்களிலும் அவனுடைய திருநாமம் என்றும் ஒலிக்கட்டும்.
புரட்டாசி சனிக்கிழமையின் விரதமும், ‘தளு’ எனும் ‘தளிகை’யும், ‘மாவிளக்கு’ம் நமக்கு ஒரு விஷயத்தை நினைவூட்டுகின்றன, இறைவனுக்குச் சமர்ப்பிப்பது உணவு மட்டுமல்ல; நம் எண்ணங்களையும், செயல்களையும், வாழ்வையும் அவன் திருவடிகளில் சமர்ப்பிப்பதே உண்மையான பக்தி.
“கோவிந்தா! கோவிந்தா!”
“ஸ்ரீ வேங்கடேசாய நம:”
“ஓம் நமோ நாராயணாய!”
என்று திருநாமம் சொல்லி, இந்தப் புரட்டாசி மாதத்தை திருவேங்கடமுடையானின் திருவடிகளுக்கு அர்ப்பணிப்போம்.
ஸ்ரீநிவாசப் பெருமாளின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
கோவிந்தா! கோவிந்தா!
அடியேன்,
கோமான் ஶ்ரீ பாலாஜி


கருத்துரையிடுக